குண்டாஞ்சட்டி மனைவிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 5,523 
 

(இதற்கு முந்தைய ‘கருப்பட்டிச் சிப்பம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

அடுத்த திருப்பதி உண்டியல் கோழிக்கோட்டில் வைக்கலாம் என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்திப் பார்த்துவிட்டு, வேணுகோபால் திம்மராஜபுரம் வந்து இறங்கினார்.

மூன்றாவது மகளுக்கு எந்த டாக்டருக்குப் படித்த பையனைப் பார்த்து மடக்கலாம் என்பதற்கும் அவர் கருத்துக் கணிப்பை மனதிற்குள் நடத்திப் பார்த்திருந்தார். அவரின் கருத்துக் கணிப்பில் மிக அதிகமான வாக்குகள் பெற்று மிகப்பெரிய உயரத்தில் இருந்தது, என் கமலா சித்தியின் மகன் ராஜாராமன்தான்…

வேணுகோபால் திம்மராஜபுரத்திலேயே இருக்கும் அவரின் தாயாதிக்காரரான சிவந்தி மாரியப்பனையும் துணைக்கு கூட்டிக்கொண்டு கமலா சித்தியின் வீட்டுக் கதவை வந்து தட்டினார். அப்போது சித்தியின் வீட்டில் அவளைத் தவிர வேறு யாரும் கிடையாது.

வெறும் தரையில் படுத்து கோழித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்த சித்தி, “இந்தா வந்திட்டேன்” என்று குரல்கொடுத்தவாறு எழுந்து நின்று தலை மயிரை வாரி முடிந்துகொண்டு, முக்கி முனகிக்கொண்டே போய் கதவைத் திறந்தாள். கமலா சித்திக்கு சிவந்தி மாரியப்பனைத் தெரியும்.

அவர் கூட நின்று கொண்டிருந்த வேணுகோபாலை நேரில் ஒருதடவை கூடப் பார்த்திராததால் அவரை சுத்தமாகத் தெரியவில்லை. சிவந்தி மாரியப்பன் அவரை அறிமுகம் செய்து வைத்ததும் சித்தி திக்கு முக்காடிப் போனாள். கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. கமலா சித்திக்கு ஒரு நிமிடம் வெட்கக் கேடாகப் போய்விட்டது. வேணுகோபாலும், சிவந்தி மாரியப்பனும் வீட்டிற்குள் நுழைந்து மிகவும் சுவாதீனமாக உட்கார்ந்து விட்டார்கள்.

அடுத்த நிமிடம் வந்த விஷயம் சிவந்தி மாரியப்பன் வாயால் வெளியாகியது. கமலா சித்திக்கு எல்லாமே சினிமாவின் கனவுக் காட்சியாக இருந்தது. அவளால் நம்பவே முடியவில்லை.

அவளுக்கு எர்ணாகுளம் வேணுகோபாலைப் பற்றிய சமாச்சாரங்கள் அத்தனையும் நன்றாகத் தெரியும்தான். அவரின் பெண்களை டாக்டர் மாப்பிள்ளைகளுக்குத்தான் கல்யாணம் பண்ணிக் கொடுப்பார் என்பதும் கமலா சித்திக்கு தெரிந்த விஷயம்தான். அந்தத் தெரிந்த விஷயம் இப்படித் திடீரென்று வந்து வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டு நிற்கும் என்பது அவளுக்குத் தெரியவே தெரியாத விஷயம்! தெரிந்தபோது சித்தியின் உடம்பெல்லாம் புல்லரித்துப் போய்விட்டது. வாயை அடைத்துவிட்டது சித்திக்கு…

வேணுகோபால் அவளுடைய கண்களுக்கு வேணுகோபாலாகத் தெரியவில்லை; சாட்சாத் சபரிமலை ஐயப்பனாகத் தெரிந்தார்! அப்படித் தெரிந்தது தப்பும் கிடையாது. வேணுகோபால் வீட்டுச் சம்பந்தம் அந்த மாதிரி. சகல ஐஸ்வர்யத்தையும் ஒரேநாளில் கூரையைக் கிழித்தபடி கொட்டிவிடும் குபேர சமாச்சாரம் அது.

அதனால் கமலா சித்திக்கு யோசனை பண்ணுவதற்கு என்று ஒன்றுமே கிடையாது. உடனே ‘சரி’ என்று சொல்லிவிட்டாள். ஆனால் சித்தியின் மகன் ராஜாராமன் உடனே சரி என்று சொல்லவில்லை. யோசித்துதான் சொல்ல முடியும் என்று ஒரு மாதிரியான தடித்த குரலில் சொல்லிவிட்டு இறுக்கமாக இருந்தான்.

மூன்று நான்கு நாட்களாகியும் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருந்தான். மகனின் மெளனம் கமலா சித்தியை பதட்டப்பட வைத்து விட்டது. வலிய வரும் இந்தச் சம்பந்தத்தை வேண்டாம் என்று சொல்லி விடுவானோ என்று அவளை நடுங்க வைத்துவிட்டது.

நீண்ட யோசனைக்குப் பிறகு, மகன் ராஜாராமன், வேணுகோபாலின் மகளை கல்யாணம் செய்து கொள்வதில் தனக்கு இஷ்டமில்லை என்றான். நிஜமாகவே கமலா சித்திக்குத் தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது. சித்தி காத்துக் கிடந்து கொண்டிருந்தது பெரிய மலையாளத்து மழை பெய்யப் போகிறதென்று…

ராஜாராமனுக்கோ, தனக்கு மனைவியாக வரப் போகிறவள் பெரிய அழகியாக இல்லை என்றாலும் கவலை இல்லை; ஆனால் வேணுகோபாலனின் மகள்கள் மாதிரி கறுப்பாக, குண்டாக, அசிங்கமாக இருக்கக் கூடாது.

அவன் எத்தனையோ டாக்டர்களின் மனைவிகளை நேரில் பார்த்திருக்கிறான். ஆனால் எந்த டாக்டருக்குப் படித்த பையனும் அசிங்கமாகக் கறுப்பான பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பதாக எங்கேயும் அவன் பார்த்ததில்லை! அது மட்டும் இல்லை; சில அழகான சினிமா நடிகைகள் டாக்டர் மாப்பிள்ளைகளை விரும்பி கல்யாணம் செய்து கொண்டிருந்தார்கள்!

அதற்காக ராஜாராமனுக்கும் யாராவது ஒரு அழகான நடிகையை கல்யாணம் செய்து கொள்ளும் ஆசை மனசுக்குள் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை… யதார்த்தம் அந்த மாதிரி இருக்கிறது என்று என் சித்தியிடம் சுட்டிக் காட்டினான் ராஜாராமன். மேலும் அவனுடைய கருத்தைத் தெளிவாக சித்தியிடம் எடுத்துச் சொன்னான்….

பொதுவாக டாக்டர்கள் சமூகத்தில் மரியாதைக்கும் அந்தஸ்திற்கும் உரியவர்கள். அவர்கள் எங்கே போனாலும் நான்கு பேரால் நல்ல விதமாக நடத்தப்படுபவர்கள். அப்படி நான்கு இடங்களுக்குப் போகும்போது ஒரு லட்சணமான சிகப்பான மனைவியுடன் போனால் மரியாதை அவர்களுக்குக் கூடுமே தவிர, குறையாது! அப்படி இருக்கும்போது வேணுகோபாலின் மகளைக் கூட்டிக்கொண்டு போய் நின்றால் எப்படி இருக்கும்?

நிச்சயம் நான்குபேர் வாயைப் பொத்தியபடி நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். அதற்கு அவன் கவலைப் படாவிடினும், அவனுடைய கல்யாணத்திற்கு கண்டிப்பாக திருநெல்வேலி மெடிகல் காலேஜில் இருந்து ஆசிரியர்களே நிறையப் பேர் வருவார்கள். அது தவிர அவர்களுடன் மாணவர்களும் மாணவிகளும் பெரிய படை மாதிரி வருவார்கள். அதற்கும் மேல், சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல டாக்டர்களும் தங்கள் குடும்பத்தோடு வருவார்கள்.

அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் கறுப்பு குண்டாஞ்சட்டி மாதிரி இருக்கும் வேணுகோபாலின் மகளைப் பக்கத்தில் உட்கார வைத்துத் தாலி கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் திருநெல்வேலி மெடிகல் காலேஜே ராஜாராமனின் மேல் பரிதாபப்படும்! போயும் போயும் பணத்துக்காக இப்படிப் போய் ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள்கிறான் பார் என்று வருத்தப் பட்டாலும் படும்; அல்லது அவனைக் கிண்டல் பண்ணினாலும் பண்ணும்!

ராஜாராமனுக்கு பணத்தைவிட கெளரவம்தான் பெரியதாய்த் தெரிந்தது. அதனால் வேணுகோபாலின் மகளைக் கல்யாணம் செய்து கொள்வதில் தனக்கு கிஞ்சித்தும் ஆர்வம் இல்லை என்பதை மனம் திறந்து என் கமலா சித்தியிடம் சொல்லிவிட்டான். அவனுடைய அபிப்பிராயத்தை ஏற்றுக்கொள்ள அவளால் முடியவில்லை என்பதை சித்தியும் ராஜாராமனிடம் மனம் விட்டுத் தெரிவித்து விட்டாள். வேணுகோபாலின் முதல் இரண்டு மகள்களையும் இரண்டு டாக்டர் மாப்பிள்ளைகள்தான் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வாழ்க்கையில் எல்லா கெளரவத்தோடும், அந்தஸ்தோடும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை எந்த விதத்திலும் கெட்டு விடவில்லை; இத்தனைக்கும் அவர்களுடைய பெண்டாட்டிகளும் அழகில்லா அசிங்கமான கறுப்பு குண்டாஞ்சட்டி மாதிரி இருப்பவர்கள்தான். அது எந்த விதத்திலும் இரண்டு டாக்டர் மாப்பிள்ளைகளின் சந்தோஷத்தைக் கெடுத்து விடவில்லை. அவர்கள் மகிழ்ச்சியோடுதான் இப்போதும் இருக்கிறார்கள்…

என் சித்தியின் வாதம் இந்த மாதிரி போய்க் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *