வீடென்று எதனைச் சொல்வீர், அது இல்லை எனது வீடு, ஜன்னல் போல் வாசல் உண்டு. எட்டடிச் சதுரம் உள்ளே. பொங்கிட மூலை ஒன்று, புணர்வது மற்றொன்றில். நண்பர்கள் வந்தால் நடுவிலே குந்திக் கொள்வர். தலைமேலே கொடிகள் ஆடும் ; கால்புறம் பாண்டம் முட்டும். கவி எழுதிவிட்டுச் செல்ல, கால்சட்டை மடிந்து வைக்க வாய் பிளந்து வயிற்றை எக்கிச் சுவரோரம் சாய்ந்த பீரோ.
சட்டென்று இவன் மனத்தில் ஓடிய புதுக் கவிதை ஒரு செமி – கோலனில் நின்றது. ‘ இது என்ன காலங்கார்த்தாலே புதுக்கவிதை. ’ தலையை உலுக்கிக் கொண்டான். ‘ கவிதையில் விடியும் என் காலைகள். – ‘ காஷ்புக் ’ கில் முடியும் சோகங்கள். ‘ பரபரவென்று உள்ளங்கையைச் சூடேற்றிக் கண்ணைக் குளிர்வித்தான். அந்த அறைக்குப் புதியவன்போல் சுற்றும் முற்றும் பார்த்தான். புதுக்கவிதை சொல்லும் அறை ; பாடல் பெற்ற ஸ்தலம்.
தரையில் வெவ்வேறு விதங்களில் மனைவி, குழந்தை, தம்பி எனச் சிதறியிருந்த பந்தப் பூக்கள். கிழட்டு ஜமக்காளத்தில் தம்பி. சாக்கு விரிப்பில் மனைவி. பழம் புடைவையிலிருந்து வெறும் தரைக்கு குழந்தைகள். உள்ளோட்டமாக ரிஷபத்தில் சஞ்சாரம் செய்துகொண்டு வந்து குழந்தையின் தொடையில் பூவில் தேன் குடிக்கிற தேனீ போல், கொசு உட்கார்ந்தது. ‘ மனிதப் பூவில் ரத்தத் தேன் குடிக்கும் மாம்பலக் கொசுக்கள். ’
தற்செயலாக கால இயந்திரத்தைப் பார்த்தான். தூக்கி வாரிப் போட்டது. மனத்தில் மொய்த்த கவிதையை கொசுவாய்த் துரத்தினான். ‘ கவிஞனில்லை நீ ; கணக்குப் பிள்ளை. அணிச்சைச் செயலாக மனத்திற்குள் இருந்த மற்றொரு சுவிட்ச் ‘ ஆன் ’ ஆயிற்று. உடம்பு எந்திரமாயிற்று. முகத்தில் மீந்த துக்கத்தை, பானையில் மீந்த தண்ணீர் கழுவிற்று. வேட்டியை உதறி, சுவரைப் பார்த்துத் திரும்பிக் கட்டிக் கொண்டான். இன்னும் ஒரு மணி நேரத்தில் ஸ்டேஷனில் இருக்க வேண்டும். இந்திய ரயில்வேயின் இரண்டாம் வகுப்பு அழுக்குகளோடும், சமூகத்தின் நடுத்தர வகுப்புக் கனவுகளோடும், நம்பிக்கைகளோடும் அம்மா கூட்டத்தில் உதிர்வான்.
அம்மாவின் நம்பிக்கைகளை நினைத்த கணத்தில் மனத்தில் ஒரு சின்ன இறுக்கம். தங்கையின் கல்யாணத்திற்காக இரண்டாயிரம் ரூபாய் கேட்டிருக்கிறாள். இந்த இரண்டாயிரம்தான் தங்கைக்குக் கிழக்கு. இதில் அவள் வாழ்க்கை விடிந்துவிடும். இரண்டாயிரம் ரூபாய்க்கு எத்தனை ஸ்தானங்கள் என்பதைத் தவிர இவனுக்கு எதுவும் தெரியாது. மாதம் நூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் இரண்டாயிரம் சட்டென்று கையில் எட்டாத எல்லை. கண்ணில் தெரிகிற வானம்.
கண்ணெதிரே, கைவழியே, லட்சங்கள் புரண்டும் தனக்கேதும் பயன் தராத காகிதங்கள். குங்குமம் சுமக்கும் கோவேறு கழுதை.
தன்னை நினைக்க நினைக்கக் கசப்பாக இருந்தது.
வாழ்க்கைப் பந்தயத்தில் தன்னை முடமாக்கிப் போட்ட சுமைகளின் மீது கோபமாக இருந்தது. தன்னுடைய ஊனத்தை, குறையை எண்ணி எண்ணிக் குமைந்தது மனசு.
ஸ்டேஷன், விடிகாலைப் பனியில் ஜில்லிட்டது. இரயிலின் இரண்டுமணி நேரத் தாமதத்திற்குச் சட்டாம் பிள்ளைகளிடம் அரசாங்கம் திட்டு வாங்கியது. பிளாட் பாரத்தில் அங்கங்கே நீலச் சட்டையில் மனிதத் தீவுகள். சுவற்றில் போஸ்டர்கள். எப்போதோ வந்து போய்விட்ட இந்திப் படங்களின் கற்பிழக்காத போஸ்டர்கள். இந்தியாவை, இந்தியா என்று இந்தியர்களுக்கே அறிமுகப்படுத்துகிற சுற்றுலா போஸ்டர்கள், இவன் எதிரில் ஒன்று.
அதில் பார்வையை முட்டுகிற மாதிரி காப்பும் கடகமுமாகக் கைகளில் அணிந்து குனிந்த ஒரு ராஜஸ்தானிய முகம். பின்னால் இடைவெளி, இடைவெளி முழுக்க மணல். காற்று செதுக்கி செதில் செதிலாகப் படிந்து கிடக்கிற மணல். அடிவானத்தின் கோட்டில் சாரியாக நகர்கிற ஒட்டகங்கள். அந்த ஒட்டகக் காலில், காற்று செதுக்கின மணலில், அந்த நாணம் தோய்ந்த சிரிப்பில், உபரியாய் ஒரு செய்தி இருந்தது. ‘ காற்று மட்டும் கவிதை சொல்லும் ; காலைச் சுடும் பாலைவனம். ’
காலியாய் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தான். அவனுக்கு முன், அதில் மார்கழி மாதம் உட்கார்ந்திருந்தது. ஜில்லென்றது. பின்னால் திட்டுத் திட்டாய், நீலச் சட்டைக் காரர்கள். எல்லோருக்கும் ஒரு சின்னச் சின்ன மரப்பெட்டி, சிம்மாசனம் கொடுத்தது மாதிரி அதில் உட்கார்ந்திருந்த அவர்களின் இருக்கை. தட்டையும் குழிவும் நீளக் கைப்பிடியுமாய் அருகில் ஸ்பேடுகள். தண்டவாளங்களைச் சீர் செய்கிற ரயில்வேயின் இரும்பு மனிதர்கள்.
“ பிள்ளை உடம்பு எப்படிக் கீது ? ”
“ அப்படியே தான் கீது. ”
“ தர்மாஸ்பத்ரி போவக் கூடாது … ”
“ அ அங். என்னத்தைப் போறது…” பொய்து விடிக்காலம் அங்கனே போய்க் குந்திக்கினு இருந்தா பொய்க்கத் தாவலை … ”
“ இன்னவோ, அசால்டா இருந்திராத நயினா … போன தபா என் பொட்டைப்புள்ளை இப்படித்தான் குளிர் சுரம் கண்டு பூடிச்சி. பேமானியோ, நிமோனியாவோ, இன்னவோ எயவு பேர் சொன்னாதுங்க. எதிலே போனா என்ன, பூட்டுது … ”
“ அட. அத்து உடம்புக்கு ஒண்ணுமில்லப்பா. குளுரு தான் பொறுக்க முடிலே … பனிதான் இப்படிக் காயுதே… அ ஆங். கம்பளிச் சொக்கா போட்டு வைச்சுக்கோனு, தமிள் டாக்டரு சொல்லிப்பிட்டாரு… கம்பிளித் துணிக்கு எங்க போவறது… ”
“ சேட்டு கையில துட்டு கேக்குறது தானே … ”
“ எத்தினி வாட்டி கேக்குறது … வாங்கினதைக் கொடுக்கத் தாவலை. இப்பவே சம்பளப்பணம் பூராவும் வட்டிக்குப் பூடுது. ”
மனம் இம்சைப்படத் திரும்பிப் பார்த்தான். கல்லாய் கனக்கும் வாழ்க்கையைச் சுமந்திருப்பது மாதிரியான அலுப்பான முகங்கள். கண்டுக் கண்டாய்க் கையும் காலும் உழைப்பின் கனிகள். கன்னக் குழிவும், காலை எலும்புத் துருத்தலுமாய் வறுமையின் மாடர்ன் ஓவியம். உழைப்பும் வறுமையும் ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும் இந்த தேசத்தின் போட்டோ. இந்தியாவை இந்தியா என்று இந்தியர்களுக்கே அறிமுகப்படுத்தத் தவறிய சமூக போஸ்டர்.
முதுகுத் தண்டைச் சொடுக்கிற்று. சிமெண்ட் தரையின் மார்கழிப் பனியை மிஞ்சிய சிலிர்ப்பாய் உட்காரமுடியாமல் துரத்திற்று.
எழுந்து வாசற் பக்கம் நடந்தான். சுற்றுலா போஸ்டருக்குக் கீழ் ஒரு ரெடிமேட் எம்போரிய விளம்பரக் கண்ணாடிப் பெட்டி. தன் குழந்தைக்கு எது சேரும் என்று பார்த்தான். ஆகாச வர்ணத்தில் ஒரு கௌன். அழகாக ஆனால் பெரிதாக இருந்தது. பக்கத்தில் இரண்டு மூன்று பனியன்கள், பையன்களுக்கு. பனியன்களுக்குப் பார்க்கும் போதே, அவனுக்கு மானசீகமாக ஒரு பையன் பிறந்து, பனியனுக்குள் புகுந்து, புகையைப்போல் ஸ்லோமோஷனில் கண்ணாடியை ஊடுருவி …
ஒரு சிவப்புச் சட்டைப் போர்ட்டர், இவன் பக்கத்தில் நின்று, ரெடிமேட் கடைக்காரன் வைத்திருந்த கண்ணாடித் தடுப்பில் நிழல் பார்த்துத் தலை வாரிக் கொண்டான்.
இவன் இந்தச் சட்டைகளைப் பார்த்திருப்பானா ? தன்னைப் போல் ஒரு கவிதை நிமிஷத்தில் குழந்தை பெற்றிருப்பானா ? இந்த ப்ளாட்பாரங்களில் – அந்த சட்டையில்லாத குழந்தைகள், இந்தக் குளிரில் படுத்துக் கிடக்கின்றன. அவைகளின் அப்பன்கள் யாரும் இதனை இரவோடு இரவாக உடைத்து எடுத்துக்கொண்டு விடவில்லை, ஏன் ? சட்டத்திற்குப் பயமா ? மனசாட்சிக்கா ? ஏன் ? ஏன் ?
சிலாம்பு உறுத்தலாய் மனத்தில் கேள்வி தங்க, பழைய சிமெண்ட் பெஞ்சிற்குத் திரும்பினான். இவனுடைய இடத்தில் ஒரு பாட்டி, அவளின் மகள், ஒரு பன்னிரண்டு – பதினைந்து வயதுப் பையன் உட்கார்ந்து இருந்தார்கள். அவர்களின் முகத்தில் ஜாதி தெரிந்தது. ஊர் கூட இரண்டு வார்த்தை பேசி பழகினவன் சொல்லிவிட முடியும் போலிருந்தது. பையன் வெடவெடவென்று இருந்தான். நீளமான கை, கால்கள், சுத்தமான காலுறைகளுடன், மிகச் சுத்தமான லெதர் ஷுக்கள் அணிந்திருந்தான். இவன் ஷுக்களை ஸ்பரிசித்தது தன் கல்யாணத்தை ஒட்டித்தான். இன்டர்வியூக்களுக்குக் கூட ஷு அணிந்து போகிற வசதி இல்லை. கல்லூரிப் படிப்போ, என்.சி.சி. வாழ்க்கையோகூட வாய்த்ததில்லை.
இந்தப் பையனுக்கு அதிர்ஷ்டமா ? பணம் கொடுக்கிற மெருகா ? பன்னிரண்டு வயதிலேயே ஷுக்கள் அணிந்து வேளியே கிளம்புகிற வசதி இந்தப் பையனுக்கு வாய்த்திருக்கிறது. இந்த விடிகாலை நேரத்திலும் கூட ஷு அணிந்து வெளியே கிளம்புகிற வளப்பம். அது மட்டுமல்ல. அந்த ஷுக்களைப் பளபளவென்று மின்ன வைத்து அணிய அவனுக்குத் தெரிந்திருந்தது.
இன்னமும் அந்த நீலச்சட்டைக்காரர்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உட்கார்ந்திருந்தார்கள். கரிக்கட்டியால் முக்கோணம் கிழித்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தார்கள். கூச்சலும் சிரிப்புமாய் ஆடிக் கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி, கரியடுப்பில், பெரிய பால் சொம்பு சைஸில் ஒரு பாத்திரம் கொதித்துக் கொண்டிருந்தது. காபியாக இருக்கலாம். பளபளவென்று குளித்துத் திருநீறு பூசிக் கொண்டிருந்தது. அதைச் சுமந்து வந்த பையனும் குளித்துத் திருநீறு இட்டிருந்தான். தொழிலைப் பெரிய கும்பிடாகத், தலைக்குமேல் உயர்த்தித் தொழுகிற சுத்தம்.
காலணிகள் அணிந்த பையன், “ வடையும், காபியும் வாங்கிண்டு வரவா ? ” என்று கேட்டான். இவன் திரும்பிப் பார்க்கையில் ஸ்டால் பக்கம் நடந்து போய்க்கொண்டிருந்தான். நடக்கும்போது அவன் தோள்பட்டை வலதுபுறம் இறங்கி ஏறியது. உள்ளத்தைத் தொடுகிற ஊனமுற்ற கால்கள். அவன் இந்த அதிகாலையிலும் ஷுக்கள் அணிந்திருப்பதின் அவசியம் தெரிந்தது. ஆனாலும் அந்த பாலீஷ் ! குறையைப் பற்றிக் கவலைப்படுகிற மனசுக்கு இப்படி பாலீஷ் போட முடியாது.
பளிச்சென்று, சட்டையில்லாக் குழந்தைகளின் அப்பன்கள், ரெடிமேட் கண்ணாடிப் பெட்டியை உடைத்துத் திருடாததன் காரணம் புரிந்தது. இந்தப் பையன் போல் தானோ அவர்களும் ? குறையைப் பெரிதாக நினைக்காமல், மிஞ்சியிருக்கிற வாழ்க்கையை மெருகு போட்டுப் பார்த்துச் சந்தோஷிக்கிற மனங்களா இவை ! எல்லோருக்கும் ஏதோ ஒன்றில் ஊனம் உண்டு. ஊனத்தை எண்ணிப் புழுங்கிப் புழுங்கி, உள்ளதையும் நரகமாக்கிக் கொள்ளாமல் மினுங்க வைத்துக் குதூகலிக்கிற மனங்களா இவை !
இத்தனை இலக்கியத்திற்கு அப்புறமும், இத்தனை படிப்புக்கு அப்புறமும், இந்த மனம் தனக்கு வாய்க்காது போனதை எண்ணியபோது மனம் நொறுங்கிற்று. கூசிச் சிலிர்த்தது.
தூரத்தில் பார்த்தான். வரிசையாய்த் தண்டவாளங்களுக்கு உள்ளும் வெளியிலும், முண்டு முண்டாய்ச் சரளைக் கல் பரப்பியிருந்தது. அருகில் எஞ்ஜினுக்குத் தண்ணீர் வார்க்கிற ரப்பர் துதிக்கையின் கண்ணுக்குத் தெரியாத துளையிலிருந்து பூந்தூறல் விழுந்து கொண்டிருந்தது. இந்தத் தண்டவாளம் நெடுகக் கற்களுக்கு மத்தியில் இப்படி ஒவ்வொரு வாகனுக்கும் தண்ணீர் நிரப்ப ஒரு துதிக்கை. அந்தக் குழாய்க் கம்பங்களைச் சுற்றிலும் சின்னப் பூக்கள். சிரிப்பும் கும்மாளமுமாய் ஆடுபுலி ஆடிக் கொண்டிருக்கிற நீலச் சட்டைகளைப் போல, தொழிலைக் கும்பிடுகிற காப்பி அடுப்புக்காரன் போல, குறையைப் பெரிதாய் நினைத்துப் புழுங்கி அழுந்திவிடாத அந்தப் பையன் போல, இந்தப் பூக்களும் விடாமல் சிரித்துக் கொண்டிருக்கும்.
தூரத்தில் ரயில் வந்து கொண்டிருக்க இவன் எழுந்தான்.