கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்!

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 4,928 
 

(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

அத்தியாயம்-9

அம்பிகா கண்களையும், காதுகளையும் மூடி இதயத்தை இரும்பாக்கிக் கொண்டாள். புஷ்பாவிற்கு சுசீலாவை மிகவும் பிடித்திருந்தது. துருதுருவென்று அழகாக இருந்தாள். அதனால் அவளையே தத்தெடுக்க விரும்பினாள். கோபாலனுக்கும் சுசீலாவை பிடித்திருந்தது.

”எந்த சந்தர்ப்பத்திலும் அவளுக்கு பாதகம் வராமல் என் மகளாய் பாதுகாப்பேன்” என்றும் குறிப்பிட்டு எழுதி கொடுத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து சுசீலாவை சட்டபூர்வமாய் தன் மகளாக்கிக் கொண்டார் கோபாலன்.

பணம் கைமாறியது.

சுசீலா கைமாறினாள்.

அம்பிகா அதையெல்லாம் காணத் தெம்பின்றி உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டாள். ஏகாம்பரத்திற்கு நெஞ்சடைத்தது. சுசீலாவை வாரியணைத்து முத்தமிட்டார்.

“வாம்மா” என்று கைப்பற்றி அழைத்த புஷ்பாவை விநோதமாய் பார்த்தாள் சுசிலா.

சுசீலாவை அழைத்துக் கொண்டு வெளியேறினர்.

”விடுங்க!” பற்றியிருந்த கையை விடுவித்துக் கொள்ள முயன்றாள் சுசீலா.

புஷ்பா இன்னும் இறுக்கமாகப் பற்ற…

பயம் பிடித்துக் கொண்டது சுசீலாவிற்கு, அலறினாள்.

“விடுங்க… நான் வரலே… நான் வரலே. அப்பா… அம்மா… பாருப்பா… அப்பா.. அண்ணா!”

தினேஷ் பாய்ந்து சென்று தங்கையை அவர்களிடமிருந்து பறிக்க முயன்றான்.

“என் தங்கச்சிய விடுங்க!”

“தினேஷ்…. அவங்களை விடுப்பா!” ஏகாம்பரம் மகனை இழுத்தார்.

”அப்பா.. நம்ம சுசியை கூட்டிட்டுப் போறாங்கப்பா! பார்த்துக்கிட்டு நிக்கறீங்களே.. என் தங்கச்சிய கூட்டிட்டுப் போக இவங்க யாரு?”

“இனிமே அவளுக்கு அம்மா, அப்பா எல்லாமே இவங்கதான்… நீ வாப்பா!” சமாதானப்படுத்தினார்.

“அப்ப நீங்க யாருப்பா?”

ஏகாம்பரம் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

நான் யார்?

அப்பாவா?

வியாபாரியா?

கோபாலன் சசீலாவை வலுக்கட்டாயமாய் காரில் ஏற்றினார். கார் புறப்பட்டது.

சுசீலா முகம் முழுக்க கண்ணீருடன் கைகளிரண்டையும் வெளியே நீட்டி “அண்ணா!” என்றலறினாள்.

தினேஷ் காரின் பின்னேயே ஓடினான்.

“சுசீ…”

“அண்ணா…”

“சுசிக்குட்டி… வெளியே குதிச்சிடு!”

“அண்ணா…”

கார்வேகம் பிடித்தது. சுசீலாவின் குரல் தேய்ந்து மறைந்தது.

அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் இயலாமையும், கோபமுமாய் கல் எடுத்து கார் சென்ற பாதையில் வீசி எறிந்து அங்கே விழுந்து மண்ணில் புரண்டு அழுதான்.


கிட்டத்தட்ட ஆறுமாதம் சுசீலா அழுது அடம் பிடித்தாள்.

புஷ்பாவிற்கு அந்த குழந்தையின் ஆதங்கம் புரிந்தது. பொறுமையை கையாண்டாள்.

வீடு நிறைய அவள் விளையாட பொம்மைகள் வாங்கிப் போட்டாள்.

செங்கல்பட்டில் மிகப்பெரிய வீடு கோபாலனுக்கு. கிட்டத்தட்ட கல்லிடைக்குறிச்சியில் இருந்த தங்கள் வீடு போலவே இருந்ததால், சுலோவிற்கு வீட்டு நினைப்பு அதிகமாய் எழவில்லை. மூன்று வயது தான் என்பதால்… அந்த பிஞ்சு மனசில் இருந்த நினைவுகளை எளிதாக அழித்து தங்களைப் பெற்றோராய் பதித்துக் கொள்ள பெரும் சிரமம் ஒன்றும்படவில்லை அவர்கள். சுசீலா என்றழைத்தால்.. பழைய நினைவுகள் வரும் என்று அஞ்சி.. அவளுக்கு ரேகா என்று பெயர் சூட்டினர். ரேகா அவர்களுடன் ஒன்றிப் போனாள். வருடங்கள் உருண்டன. ரேகாவின் மனதில்… ஞாபகப்பெட்டகத்தில் பழையவைகள் முற்றிலும் மறைந்துப் போயின. அப்பா கோபாலன். அம்மா புஷ்பா இந்த இரண்டுப் பெயர்களும் அவளுள் ஆழமாய் பதிந்துப் போயின.

ரேகாவை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைத்தனர். கற்பூரபுத்தி அவளுக்கு. சிறப்பாய் படித்தாள். அவள் நன்றாக படிக்க ஊக்கப்படுத்தி ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் சைக்கிள், பியானோ என்று வாங்கிக் கொடுத்தனர்.

ஐந்து வருடங்கள் காணாமல் போனது. ரேகாவிற்கு எட்டு வயதான போது தான் ‘எப்போது… அந்த நாள்… எல்லாப் பெண்களையும் தாய் என்கிற பதவியைக் கொடுத்து பெண்ணை முழுமையாக்குகிற அந்த இனிய நாள் எப்போது வரும்’ என்று காத்திருந்த புஷ்பாவிற்கு.. அப்படிப்பட்ட நாளொன்றை கடவுள் அவளுக்கும் காண்பித்தார்.

திருமணமாகி பதினைந்து வருடங்கள் கழித்து புஷ்பாவின் கர்ப்பக் கதவு திறந்தது. நெடுநாள் கழித்து தந்ததாலோ என்னவோ கடவுள் அவளுக்கு இரட்டை சந்தோஷத்தை அளித்திருந்தார்.

ஆம்… புஷ்பாவிற்கு இரட்டைக் குழந்தைகள்.. பெண் குழந்தைகள் பிறந்தது. ஊரே கூடி வாழ்த்தியது. சொந்த பந்தங்கள் வாய் ஓயாமல் ஆச்சர்யப்பட்டனர். கோபாலனும் புஷ்பாவும் சந்தோஷத்தின் விளிம்பிற்கே சென்றனர்.

தன் ஜீன், தன் ரத்தம் என்கிற பந்தத்திற்கு இவ்வளவு பெரிய சக்தியா?

இருவரும் மாறி மாறி இரண்டு குழந்தைகளை கவனிக்கவே நேரம் சரியாய் இருந்ததால்.. ரேகாவை கவனிக்க மறந்துப் போயினர்.

‘தரையில் கால்படாமல் உள்ளங்கையில் வைத்து தாங்கியவர்கள்… புதிதாய் குட்டிப் பாப்பாக்கள் வந்ததும் எனக்கு சாப்பிட கொடுக்கக் கூட நினைவின்றி கொஞ்சி கொண்டிருக்கிறார்களே! எல்லாம் இதுங்களால் தான்!’

ரேகாவின் கோபம் குழந்தைகளின் மீது பாய்த்ந்து. நாள் ஆக.. ஆக.. வெறுப்பாய் மாறியது. புஷ்பாவும் மாறிப் போனாள். கிடைக்காத வரை பெரும் ஆறுதலாய் இருந்த ரேகா.. தானும் தாயாகும் பாக்கியம் கிடைத்த பிறகு, புஷ்பாவுக்கு உறுத்தலாய் தெரிந்தாள். அவள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை கூட பெரிதாக்கி கை நீட்டி அடிக்க ஆரம்பித்தாள்.

ரேகாவிற்கு பத்து வயதானது. அப்போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. கோபாலனின் வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம். இரட்டை குழந்தைகள் அடிக்கடி நோயில் படுத்தன.

ஒருநாள்!

கொதிக்க கொதிக்க பாலை வைத்து விட்டு உள்ளே வேலையாக சென்றிருந்தாள் புஷ்பா! ரேகா படித்துக் கொண்டிருந்தாள். புத்தகம் எடுக்க கையை நீட்டிய ரேகா தவறி சூடாய் இருந்த பாலை தட்டிவிட.. அடுத்த நொடி… இரண்டு குழந்தைகளும் வீலென்று கத்தின.

உள்ளிருந்து ஓடிவந்த புஷ்பா அலறினாள். கொதிக்கும் பால் பட்டு குழந்தைகளுக்கு கொப்புளித்து போயிருந்தன.

ரேகாவிற்கு செமையாய் அடிவிழுந்தது. “இதோப் பாருங்க! நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இவ இனிமே இங்கே இருக்கக் கூடாது. நானும் பார்த்துக்கிட்டு தான் வர்றேன். நம்ம குழந்தைகளை பார்த்தாலே இவளுக்கு ஆகறதில்லே. நான் இல்லாதப்ப அடிக்கறதும், கிள்ளறதுமா இருக்கா. இதோ. இப்ப கொதிக்கிற பாலை வேணும்னே மேல ஊத்திட்டா. இப்படியே விட்டா… ஒரு நாள் நம்ம குழந்தைங்களை சாகடிக்கத் தான் போகிறா… பாருங்க!”

”என்னை என்ன பண்ண சொல்றே?”

“இவளை கொண்டு போய் பெத்தவங்ககிட்டேயே விட்டுட்டு வந்திடுங்க!”

“எந்த சூழ்நிலையிலேயும் இவளை கை விடமாட்டேன்னு எழுதி கொடுத்திட்டு எப்படி கொண்டு போய் விடமுடியும்? சட்டப்படி அது குற்றம். தவிர, அவங்க அப்பவே ஊரைவிட்டே போய்ட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்.”

“நீங்க என்ன பண்ணுவிங்களோ, ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. இனி இவ இங்கே ருக்கக் கூடாது. நமக்கும் வியாபாரம் சரியில்லே! கண்ணுமுடி ண்ணு திறக்கறதுக்குள்ளே இவ வளர்த்துடுவா! கல்யாணம் காய்ச்சின்னு செலவு பண்ணனும். நமக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அதை ஞாபகம் வச்சுக்குங்க. இவளை கொண்டு போய் எங்கேயாவது அனாதை ஆஸ்ரமத்துவ சேர்த்து விட்டுட்டு வாங்! அவ்வளவு தான் நான் சொல்வேன்!” என்றாள் புஷ்பா தீர்மானமாய்.

கோபாலனும் மறுபேச்சு பேசவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள், மனைவியின் கூற்றில் நியாயமிருப்பதாய் நினைத்த வைத்தது.

ரேகா வாயடைத்துப் போயிருந்தாள்.

பத்து வயது எல்லாம் புரிகிற வயது!

தான் யாரென்று புரிந்தது. இதயம் நொறுங்கிப் போனது. தன் பெற்றோர் இவர்களில்லை. அவர்கள் யாரோ? என்னை பணத்துக்காக இவர்களிடம் விற்றிருக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்னை அவர்களுக்கும் பிடிக்கவில்லை. இவர்களுக்கும் பிடிக்கவில்லை.

இனி… நான் யார்?

அனாதையா?

ரேகா… உதடுகள் மடங்க… தனிமையில் கேவிக் கேவி அழுதாள். மறுபேச்சு பேசாமல் கோபாலனுடன் சென்றாள். அன்னை தெரசா காப்பகத்தில் விட்டார்.

பாதர் சாலமனிடம் பச்சை பொய் சொன்னார். ‘ரோட்டில் அனாதையாய் கிடந்தவளை எடுத்து இது நாள்வரை என் மகளாய் பாசமாய், நல்ல கல்வி கொடுத்து வளர்த்தேன். ஆனால் என்னமோ தெரியவில்லை. கொஞ்ச நாட்களாய் இவன் நடவடிக்கையே சரியில்லை. என் இரண்டு பெண் குழந்தைகளை கொல்ல முயற்சிக்கிறாள். என்னால் மேற்கொண்டு இவளை பாதுகாக்க முடியவில்லை.இவள் கொடிய குற்றவாளியாக மாறுமுன், உங்களிடம் ஒப்படைக்கிறேன். அனாதைகளுக்கு கருணை காட்டும் நீங்கள் இந்த அனாதைப் பெண்ணையும் காத்து ரட்சிக்க வேண்டும்’ என்று இனிமையாய் பேசி ஒப்படைத்து விட்டு வந்து விட்டார். அன்று முதல் ரேகாவின் தாய்வீடு அன்னை தெரசா மகளீர் காப்பகம் தான் என்றானது.

மகளை தத்து கொடுத்து அதன் மூலம் கிடைத்த ல்ட்ச ரூபாய் பணத்தோடு குடும்பத்துடன் சென்னை வந்தார் ஏகாம்பரம்.

அம்பிகா கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணமாகவே வாழ்ந்தான். மகளை உயிரோடு பறிகொடுத்த ரணம் அவள் மனதை விட்டு மறையவில்லை. கணவனிடம் அதிகம் பேசுவதில்லை. ஏகாம்பரத்திற்கும் புரியாமலில்லை. தன் அருமை மகளை தத்து கொடுக்க யாரால்தான் மனமுவந்து சம்மதிக்க முடியும்?

பணம் அவருக்கு அவசரத்தேவையாக இருந்தது. அதன் மூலம் கிடைக்கப் போகும் கவுரவம்… இழந்த அத்தஸ்தை, மானத்தை எப்படியாவது மீட்டாக வேண்டிய வெறி.. மற்ற அன்பு, பாசம் எல்லாவற்றையும் இரண்டாம் பட்சமாகி விட்டது.

சில சமயங்களில் தன்னை நினைத்தே வேதனைப் பட்டார்,

“எவ்வளவு மோசமான மனிதன் நான்? எந்த தகப்பனும் செய்யத் துணியாத செயலை செய்து விட்டேனே! மனிதனுக்கு கவுரவமும், மனைவி குழந்தைகளும் தானே நிரந்தர சொத்து? ஒன்றை பெற.. ஒன்றை இழந்து விட்டேனே? மகளே… சுசீலா. என் கண்ணே… என்னை மன்னிச்சிடு என் தங்கமேர்! மானசீகமாய் தினசரி பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டுதானிருந்தார்.

ஏகாம்பரமே எதிர்பார்க்கவில்லை. தனலஷ்மியின் கடாட்சம் தன் பக்கம் உடனடியாக திரும்புமென்று. நண்பர் கொடுத்த ஆலோசனைப்படி பணத்தை கிரானைட் பிஸினஸில் இன்வெஸ்ட் பண்ணினார். லாபம் வஞ்சனையின்றி கொட்டியது. ஏழே வருடத்தில் நகரத்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக ஏகாம்பரம் உயர்ந்தார். பணம் சேர சேர சுசீலாவின் நினைவு அந்த வீட்டாரை மட்டுமல்ல, ஏகாம்பரத்தை வெகுவாய் கொன்றது.

எந்தப் பணத்துக்காக மகளை விற்றாரோ. அந்த பணம் இன்று அளவுக்கு மீறி கொட்டி கிடக்கிறது. ஆனால் கைமாறிப் போன மகள்?

அம்பிகாவிற்குள்ளும் இதே எண்ணம் தான் ஓடியது. இதற்கு மேலும் இந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாது என்று இருவருக்கும் தோன்றியது. மகளை மறுபடி மீட்டு வர பெட்டியில் இருபது லட்சம் பணத்துடன் எப்படியோ கோபாலன் வீட்டை தேடி கண்டு பிடித்தார்.

கோபாலன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் மகள் இன்று அனாதை ஆஸ்ரமத்தில் இருக்கிறாள் என்ற உண்மையை சொன்னால்… இப்போது ஏகாம்பரம் இருக்கும் செல்வாக்கிற்கு தன்னை உயிரோடு விட்டு வைக்கமாட்டார் என்று தோன்றியதால்… மனசாட்சியை அடக்கி வைத்து அப்பட்டமாய் ஒரு பொய்யை சொன்னார்.

‘சுசிலா…இங்கு வந்த ஒரு வருடத்திலேயே காலரா நோயால் இறந்து விட்டாள்’ என்று.

ஏகாம்பரம் துடிதுடித்துப் போனார்.

அம்பிகா மயங்கி விழுந்தாள்.

அந்த வேதனையை அவர்களால் இன்று வரை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. பழைய நினைவுகளிலிருந்து மீண்டாலும் சோகத்திலிருந்து அவர்களால் மீள முடியவில்லை.

அத்தியாயம்-10

தலை கனத்தது. காய்ச்சல் வருவதுப் போல் உடம்பெல்லாம் வலித்தது. படுக்கையை விட்டு எழவே மனசில்லை அர்விந்துக்கு.

ஜன்னல் வழியே… திரைச்சீலை அகன்று வழிவிட்டபோதெல்லாம்… சூரிய வெளிச்சம் குபுக்கென உள்ளே பாய்ந்தது.

வேலைக்காரன் காபியுடன் உள்ளே நுழைந்தான்.

“சார்!”

“அப்படி வச்சிட்டுப் போ!”

கண்ணாடி டீப்பாய் மீது வைத்து விட்டு போனான். நேரம் கடந்தது. படுக்கையை விட்டு எழ பிடிக்காமல் அப்படியே படுத்துக் கிடந்தான்.

‘சுபி… ஏன் அப்படி நடந்துக் கொண்டாள்? என்னைப் பற்றி முழுக்க தெரிந்து கொள்ளாமல் காதலிக்கிறேன் என்கிறாள். நானும் அவளை காதலிப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறாள். அவள் மனதில் அப்படியொரு எண்ணம் பதியுமளவிற்கு நான் என்றைக்கு நடந்துக் கொண்டிருக்கிறேன்? அவளை தோழியாக அல்லவா நினைத்துப் அழகினேன்ற அதைத் தாண்டி அவளை ஒரு காதலியாக என்னால் நினைத்தே பார்க்க முடியாத ஒன்று!

என்னைப் பெற்றவர்களும், சுபியை என் மனைவியாக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுபி… என் மனைவியா? மைகாட்! என்னால் அது முடியாத காரியம். இவர்களாக எதையோ தவறாக அர்த்தம் பண்ணிக் கொண்டு முடிவெடுக்கிறார்கள். நீங்கள் நினைப்பதுப் போல் எதுவுமில்லை என்று சொல்லி விட வேண்டும். அதுவும் உடனே!’ முடிவு செய்தவன் கட்டிலை விட்டு இறங்குவதற்கும்… அவன் தாயார் உள்ளே வருவதற்கும் சரியாய் இருந்தது.

“என்ன அர்விந்த்…இப்பதான் எந்திரிச்சியா? காபி ஆறிப்போய் கிடக்கு. குடிக்கலியா?”

“ஆமாம்மா”

“அட… சொல்ல வந்ததை மறந்திட்டேன் பார்! சுபத்ரா வைன்ல இருக்கா…பேசு!” ஹார்ட்லஸ் போனை மகனிடம் நீட்டினாள் வடிவுக்கரசி.

‘சே… இதுவேற தொந்தரவு!’ சலித்தபடி வாங்கினான்.

“ஹலோ…!”

“ஹாய் அர்விந்த் குட்மார்னிங்!”

”மார்னிங்…! என்ன விஷயம்?”

“உங்ககிட்டே பேசக்கூட எனக்கு காரணம் தேவையா?”

“சுபி…நான் கொஞ்சம் பிஸியாயிருக்கேன். நானே மறுபடி பேசறேன் ஓக்கே?” பட்டென்று அணைத்தான்.

“என்ன அர்விந்த்… முஞ்சியிலே அடிக்கிற மாதிரி வச்சுட்டே!” வடிவுக்கரசி அங்கலாய்ப்புடன் கேட்டாள்.

“நீயே பேசி வச்சிடறதை விட்டு… ஏம்மா என்கிட்டே தூக்கிட்டு வர்றே?”

”அர்விந்த்!” என்றாள் அதிர்ச்சியுடன்.

“எனக்கு பிடிக்கலேம்மா!”

“அர்விந்த்!”

“நீங்களும் அப்பாவும் சுபியை என் மனைவியாக்க நடத்தற நடவடிக்கைகள் எதுவும் பிடிக்கலேம்மா!”

“ஏம்ப்பா?”

”சொல்லத் தெரியலே. பட், சுபி… சுபியை என்னால ஒரு மனைவியா… ஒஹ்… நோ…. ஐ கான்ட்… என்னால முடியாதும்மா”

“அர்விந்தா… கல்யாண ஏற்பாடுகள் ரெண்டு வீட்லேயும் நடந்துக்கிட்டிருக்கு. இந்த நேரத்திலே இப்படியொரு குண்டை தூக்கிப் போடறியேப்பா! நீயும் சுபத்ராவை விரும்பறேன்னு சொன்னாங்களே…?”

“நான் சொன்னேனா?”

”சரி.. எப்படியோ இருந்துட்டு போகட்டும். சுபத்ராவுக்கு என்னப்பா குறைச்சல்? அழகில்லையா, பணமில்லையா?”

”எல்லாம் இருக்கலாம். ஆனா, அவ என் மனசுலே ஒட்டலையேம்மா!”

“அர்விந்த்…. அந்த காலத்துல தாலி எல்லாம் கட்டிக்கிட்ட பிறகுதான் புருஷன் முகத்தையே பார்ப்போம். நாங்கள்லாம் சந்தோஷமா குடும்பம் நடத்தலியா என்ன? ஏகாம்பரம் உங்கப்பாவோட நண்பர். உன்னால அவங்க நட்புக்கு பங்கம் வந்துடக் கூடாதுப்பா!” கெஞ்சினாள்.

“நானும் சுபியை ஒரு ஃப்ரன்டாதான் நினைச்சுப் பழகினேன். அவ விரும்பிட்டாங்கறதுக்காக… அந்த விருப்பத்துக்கு நான் அடிபணிய முடியாதும்மா”

“அர்விந்த்… சுபத்ரா உன்னை விரும்பிட்டாங்கறதுக்காக மட்டுமே இந்த கல்யாண ஏற்பாடை பண்ணலே! உனக்கும் சுபத்ராவுக்கும் விவரம் புரியற வயசு வர்றதுக்கு முன்னாடியே உங்கப்பாவும், அவர் நண்பரும் முடிவு பண்ணின விஷயம் இது? புரிஞ்சுக்கப்பா…!”

”அம்மா… நாம இருக்கறது ட்வென்ட்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி. பெரியவங்க பேசி முடிச்ச ஒரே காரணத்துக்காக… இணைய முடியாத ரெண்டு மனசை ஒட்டப்பார்க்கிற தப்பை… தொடர்ந்து பண்ணிட்டிருக்காதீங்க! என்னால சுபியை கல்யாணம் பண்ணிக்க முடியாது!…”

“பிடிக்காததுக்கு என்ன காரணம்னு சொல்லு! சுபத்ராகிட்டே என்ன குறை இருக்குன்னு சொல்லு.. அதுக்குப்பிறகு… பார்ப்போம்!” என்றாள் வீம்பாக.

“சுபத்ரா எனக்கு தோழி மட்டுமே!”

“தோழியை கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்று சட்டமிருக்கா என்ன? உன்னை நல்ல புரிஞ்சுக்கிட்ட பொண்ணோட வாழ்க்கை நடத்தினாதான் உனக்கு நல்லது. அர்விந்த் உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன். தயவு செய்து…ஏடாகூடமாய் எதையாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடாதேப்பா” கையெடுத்து கும்பிட்டு விட்டு… அறையை விட்டு வெளியேறினாள் வடிவுக்கரசி.

அர்விந்த் கற்சிலையாய் நின்று விட்டான்.


டி.ஆர். உட்லண்ட்ஸ்!

மெல்லிய இசையும், கண்களை உறுத்தாத ஒளியும் மனதை… மெல்ல தடவிக் கொடுத்தது. அவினாஷ். எதிரே அமர்ந்திருந்த அர்விந்தையே பார்த்துக் கொண்டிருந்தான். இரு கைகளாலும் முடியை கோதிவிட்டுக் கொண்டு பெருமூச்சுவிட்டான் அர்விந்த்.

மெல்ல புன்னகைத்த அவினாஷ் அர்விந்தின் கல்லூரித் தோழன், இவனைப் போலவே தனியே பிஸினஸ் நடத்திக் கொண்டிருப்பவன்.

“என்னடா…ஏன் ஒரு மாதிரியாயிருக்கே? எனிதிங் ப்ராப்ளம்?”

“நத்திங்”

“உன் முகத்தைப் பார்த்தா அப்படித் தெரியலியே! உடனே கிளம்பி இங்கே வான்னு போன் பண்ணினே! வந்தேன். எதையோ சொல்லணும்னு கூப்பிட்டிருக்கேன்னு புரியுது. அப்புறம் ஏன் தயங்கறே? கமான்…சொல்லுடா… என்ன பிரச்சினை?”

“அவினாஷ்!”

“ம்…”

”எவ்ரீதிங்… ஐ’ம் ஹாவிங் பட்…”

“ம்… சொல்லு”

“நிம்மதியில்லே அவினாஷ்… பீஸ் ஆப் மைன்ட் இல்லே”

“எதனால?”

“வீட்லே கல்யாண ஏற்பாடு பண்றாங்க!”

“நல்ல விஷயம் தானே?”

‘விளையாடாதே அவினாஷ். இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பமில்லே!”

“வொய்?”

“டு யூ நோ சுபத்ரா?”

“யெஸ்… ஐ நோ தினேஷாட சிஸ்டர்!”

“யா… அவனே தான்! அவளுக்கும் எனக்கும் முடிச்சிப் போட பார்க்கிறாங்கடா”

“ஸோ வாட்? சுபத்ராவுக்கு என்னடா ஓட்டை? மிஸ் இன்டியாவுல கலந்துக்கற அளவுக்கு தகுதியுள்ள பொண்ணு! அவளை குருடன் கூட வேண்டாம்னு சொல்ல மாட்டான்!”

“பட், என்னால… அவளை மனைவியா நினைக்க முடியாது அவினாஷ்!”

அவினாஷ் அவனை உற்றுப் பார்த்தான்.

“நீ…. யாரையாவது காதலிக்கிறியா அர்விந்த்?”.

அந்த கேள்விக்கு திடுக்கிட்டு நிமிர்ந்தான். ‘இல்லை’ என்று சொல்லவும் முடியவில்லை. ‘ஆமாம்’ என்று சொல்லவும் முடியவில்லை. அவனாலேயே அவனை புரிந்துக் கொள்ள முடியவில்லை.

”கம் அவுட் அர்விந்த்! நீ யாரையோ காதலிக்கறே.. யாரது?”

“நானா?” என்றவனுக்கு சட்டென காரில் மோதி விபத்துக்குள்ளான அந்த பெண்ணி முகம் நினைவிற்கு வந்தது.

“நீ என்கிட்டே மறைக்கிறே. எல்லா தகுதியும் உள்ள பொண்னை வேண்டாம்னு சொல்றேன்னா…அப்ப உன் மனசுக்குள்ளே வேறொருத்தி இருக்கான்னுதானே அர்த்தம்? சொல்லு யாரது?”

“நீ சொல்ற மாதிரி காதல், கீதல் எதுவுமில்லே.. ஆனா, நீ சொன்னப்பிறகுதான் தெரியுது.. அவ என் மனசுக்குள் இருக்கிறாள்னு.”

அவினாஷ் ஆச்சர்யத்துடன் பார்த்தான்.. “என்னடா சொல்றே? யாரந்த பொண்ணு?”

“தெரியாது.. அவ யாரு? எங்கிருக்கா? என்ன பண்றா. என்ன பேருன்னுக்கூட தெரியாது. “

“அர்..வி..ந்..த்” இன்னும் அதிர்ந்தான்.

அர்விந்த் எல்லாவற்றையும் சொன்னான்.

அவன் சொல்ல சொல்ல, அவினாஷின் முகம் மாறியது.

“அர்வித்த ஆர் யூ மேட்?”

“அவினாஷ்…”

“பின்னே என்னடா? இவன் கார்ல விழுந்தாளாம். ஹால்பிடல்ல சேர்த்தானாம், அவனுக்குத் தெரியாம சொல்லாம கொள்ளாம ஓடிப் போய்ட்டாளாம், மறுபடி பார்த்தானாம், ஊரைக் கூட சொல்லாம போய்ட்டாளாம். இவளை இவரு காதலிக்கிறாராம். என்னடா காதல் இது? அவ மிஸ்ஸா மிஸஸ்ஸான்னு கூட தெரியாம, பேரு தெரியாம, ஒரு மண்ணும் தெரியாம எப்படிடா வரும் காதல்?”

“அவளைப் பார்த்தா கல்யாணமானவளா தெரியலியே?”

“இந்த காலத்துல ரெண்டு குழந்தை பெத்தவக்கூட கல்யாணமாகாத பொண்ணு மாதிரிதான் இருக்கிறா? அப்படியே… அவ என்னும் மிஸ்ஸாகவே இருந்துட்டுப் போக்கட்டுமே. அவளுக்குத்தான் உன்மேல அப்படிப்பட்ட அபிப்ராயம் எதுவுமில்லேன்னு முடிவாகிப்போச்சே… பிறகென்ன? இதோ பார் அரவிந்த்.. எத்தனையோ பேர் சொல்லி அலுத்துப்போன அதே டயலாக்கை இப்ப நான் சொல்றேன். நீ விரும்பற பொண்ணை விட உன்னை விரும்பற பொண்ணுதான்டா.. தாம்பத்ய வாழ்க்கைக்கு அவசியம். அதை தெரிஞ்சுக்கிட்டு நடந்துக்க. பெத்தவங்க மனசை கஷ்டப்படுத்தாம பேசாம சுபத்ராவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாய் இரு” என்றான் அழுத்தமான குரலில்.

அர்விந்த் அதைக் கேட்டு மவுனமானான்.


“கெட்டிமேளம்… கெட்டிமேளம்”

ஐயர் குரல் கொடுக்க.. மேளம் முழங்க.. அட்சதைப் பூக்கள் சுற்றிலுமிருந்து இவர்கள் மேல் வந்து விழ.. அர்விந்த்தின் கதகதப்பான கரம் இவள் கழுத்தில் சிலிர்ப்பேற்படுத்த… மூன்று முடிச்சை போட்டு விட்டு அடிக்கண்களால் நோக்க… வெட்கத்துடன் தலை குனிந்துக் கொண்டாள் ரேகா.

திடுக்கிட்டு கண் விழித்த ரேகா உடம்பெங்கும் வியர்வை வெள்ளம்.

கனவு.. அத்தனையும் கனவு. என்ன கனவிது? ஆழ்மனதில் அமிழ்ந்து போயிருக்கும். ஆசைகள்தான் கனவாக வருமென்று சொல்வார்கள். இப்படியோர் ஆசை எனக்குள் இருக்கிறதா என்ன? வரலாமா எனக்கு இப்படியோர் ஆசை? குப்பையில் கிடக்கும் எச்சில் இலை, கோபுர கலசத்தை தொட ஆசைப்படவாமா? கனவு காணக்கூட தகுதியில்லாத அனாதை நான்.’

நினைக்கும்போதே கண் கலங்கியது ரேகாவுக்கு..

‘எனக்கும் அம்மா அப்பா இருந்திருந்தால் காலா காலத்தில் கல்யாணம் பண்ணி பார்த்திருப்பார்கள்’.

‘அடிப்பைத்தியக்காரி. நீ செலவு வைத்து விடப் போகிறாயோ என்ற அச்சத்தில் தானே உன்னையே பணத்திற்கு விற்றார்கள்? அவர்களாவது உனக்கு கல்யாணம் செய்து வைப்பதாவது?’ சிரித்துக் கொண்டாள்.

‘மூன்று வேளை சாப்பாடும் தங்க ஒரு கூரையும் கிடைத்திருக்கிறதே என்று சந்தோஷப்படு. அதை விட்டு காதல், கல்யாணம் என்று கனவு காணும் வேலையெல்லாம் வச்சுக்காதே.’

தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டாள் ரேகா.


“செல்போனை வீட்லேயே வச்சிட்டு வந்துட்டேன். ரேகாவிடம் கொடுத்தனுப்பிடு அம்பிகா” என்று கூறிவிட்டு போனை வைத்த ஏகாம்பரம், எதிரே அமர்ந்திருந்த அர்விந்தை புன்னகையுடன் ஏறிட்டார்.

“என்ன சாப்பிடறே அர்விந்த், முதமுதலா என் ஆபீசுக்கு வந்திருக்கே..”

“நோ தாங்க்ஸ் அங்கிள். வரும்போதுதாள் சாப்பிட்டு வந்தேன்”.

“நோ.. நோ… சாப்பிடாம அனுப்பினா.. சுபத்ரா என்னை சும்மாவிட மாட்டா” என்றவர் இன்டர்காமில் கூல்ட்ரிங்ஸ் கொண்டு வரச் சொன்னார்.

அர்விந்த சிரிக்க முயன்றான்.

”அர்விந்த்,, எனக்கிருக்கிறதோ ஒரே பொண்ணு. என்னுடைய சொத்துக்கு தினேஷும், சுபியும்தான் வாரிசு. உனக்கு என்ன வேணும்ங்கறதை கூச்சப்படாம் கேட்கணும்னுதான் இங்கே வரச்சொன்னேன். அடையாறுல அம்பது லட்சத்துக்கு ஒரு பங்களா வாங்கியிருக்கிறேன். அதை உன் பேருக்கு.. ஸாரி… என் மாப்பிள்ளையை நீ வா போன்னு பேசறேனேன்னு பார்க்காதே. திடீர்னு மாத்திக்க முடியல.. என்ன சொன்னேன்? அ.. அடையாறு பங்களா…. அதை உன் பேருக்கு நிஜிஸ்டர் பண்ணனும். நாளைக்கு என்னோட வர்றியாப்பா? சில பார்மாலிட்டிஸ் இருக்கு. அதை முடிச்சிட்டு வந்துடலாம். “

இடையில் வந்த கூவ்ட்ரிங்ஸை குடித்து முடித்தவன், “ஸாரி அங்கிள்.. எனக்கு இதெல்லாம் பிடிக்கலே. அப்பாவே எனக்கு நிறைய சேர்த்து வச்சிருக்கார். நானும் நிறைய சம்பாதிக்கிறேன். அதுவே போதும். ஒரு பார்ட்டியை மீட் பண்ணனும். அப்ப நான் கிளம்பறேன் அங்கிள்” எழுந்தான்.

“ஓகே. உன் பேருக்கு மாத்த முடியலேன்னா சுபியோட பேருக்கு மாத்திட்டுப் போறேன். எல்லாம் ஒண்ணுதானே? புறப்படு அர்விந்த்” விடை கொடுத்தார் ஏகாம்பரம்.

அர்விந்த் உற்சாகம் குறைந்தவனாய் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

பஸ்ஸை விட்டிறங்கி அலுவலகம் நோக்கி ரோடில் வத்து கொண்டிருந்த ரேகாவை பார்த்த அர்விந்தின் செல்கள் பரபரத்தது.

கார் தன்னாலே நின்றது. எதிரே வந்த ரேகாவும் இவனைப் பார்த்து விட்டாள்.

கால்கள் நடக்க சிரமப்பட்டு பின்னிக் கொண்டன.

அர்விந்திற்கு அவளிடம் ஏதேதோ பேச வேண்டும் போலிருந்தது. கஷ்டப்பட்டு அடக்கினான். அருகில் வந்த ரேகா கணம். ஒரே ஒரு கணம் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு விறுவிறுவென நடந்து விட்டாள். ஏமாந்துப் போன மனசை அடக்க சிரமப்பட்ட அர்விந்த் திரும்பிப் பார்த்தான்.

அதே நேரம் ரேகாவும் திரும்பிப் பார்க்க…

அவனிடமிருந்த அவனும்…

இவளிடமிருந்த இவளும்…

அவர்களுக்கேத் தெரியாமல் காணாமல் போனார்கள். பொங்கி வந்த அழுகை கட்டுப்படுத்திக் கொண்டு விரைந்து நடந்தாள். அவன் கண்களை விட்டு காணாமல் போனால் ரேகா.

– தொடரும்…

– தேவியின் பெண்மணி, பிப்ரவரி 2001

Print Friendly, PDF & Email

1 thought on “கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *