கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2023
பார்வையிட்டோர்: 5,477 
 
 

(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13

அத்தியாயம்-11

“சிஸ்டர்.. நான் செங்கல்பட்டில் இருந்து வர்றேன். என் பேர் கோபாலன். நான் பாதர் சாலமனைப் பார்க்கணும்”

நோட்டில் கணக்கு வழக்குகளை எழுதிக் கொண்டிருந்த சிஸ்டர் மரியா. அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.

“என்ன விஷயமாய் பார்க்கணும்னு சொன்னா நல்லது”

“தப்பா நினைச்சுக்காதீங்க சிஸ்டர். அதை நான் பாதரிடம் மட்டுமே பேச நினைக்கிறேன்”

“ஸாரி.. திஸ் இஸ் மை டியூட்டி. விஷயம் தெரியாம பாதரை சந்திக்க பர்மிஷன் தர எனக்கு உரிமையில்லை.”

“ப்ளீஸ் சிஸ்டர்” என்றார் கெஞ்சலாக கோபாலன்.

அவர் இந்த பத்து வருடத்தில் ரொம்பு மாறி விட்டிருந்தார். உடல் தளர்ந்து, முதுமை ஆக்கிரமித்து, கண்களில் நிரந்தர சோகம் குடியமர்ந்து.. அடிபட்ட வலி குரலில் வெளிப்பட.. கோபாலன் வெகுவாகவே மாறி விட்டிருந்தார்.

“என் விருப்பத்துக்கோ உங்கள் விருப்பத்துக்கோ நடைமுறைகளை மாத்த முடியாது சார். பாதர் பிரேயர் மீட்டிங்கில் இருக்கிறார். என்ன காரணத்துக்கு பார்க்கணும்னு சொன்னா நல்லது.”

“என் மகளைப் பார்க்கணும் சிஸ்டர்”

“மகளா?” சிஸ்டர் கண்கள் விரிய பார்த்தாள்.

“ஆமாம். பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் மகளை இங்கே விட்டுட்டுப் போனேன். அவளை கூட்டிக்கிட்டு போக வந்திருக்கேன்”.

அவரையே ஆச்சர்யமாய் பார்த்தபடி இன்டர்காமில் யாரிடமோ, “பாதர் பிரேயர் முடிஞ்சு வந்துட்டாரா?” என்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.

புஷ்பா.. காந்திருப்பாள். “என் ரேகாவை அழைத்து வாருங்கள். நான் செய்த பாவத்திற்கு என் குழந்தையின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டால்தான் போகிற இடத்தில் புண்ணியமாவது கிடைக்கும்” என்று வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

கோபாலனைப் போன்று புஷ்பாவும் மாறிவிட்டிருந்தாள்.

தனக்கென்று குழந்தைகள் பிறந்ததும் ரேகா மீது வெறுப்பை வாரியிறைத்து, அனாதை ஆஸ்ரமத்தில் சேர்த்த பிறகுதான் புஷ்பாவிற்கு நல்ல உறக்கமே வந்தது. தன் இரட்டை குழந்தைகளை ஊரே மெச்சும்படி சிறப்பாகவே பளர்த்தாள். ஆனால், அவர்களுக்கு ஒன்பது வயதான போது ஊரில் தாக்கிய காலரா நோய் குழந்தைகளையும் தாக்கியது. இரண்டே நாளில் ஒருவர் பின் ஒருவராக இரட்டையர் இறந்துப் போயினர்.இடிந்துப் போயினர் பெற்றவர்கள்.

‘ஒன்பது வருடம் வரை வைத்து விளையாடவா ஆண்டவன் பதினைந்து வருடமாய் காக்க வைத்தான்? கொடுப்பது போல் கொடுத்து பிடுங்கிக் கொள்வதற்கு பெறாமலேயே இருந்திருக்கலாமே. அழுதழுது தவிர்த்தாலும் ரணம் ஆறவில்லை.

அதுநாள் வரை சிந்தையைத் தொடாத ரேரகாவின் நினைவு அதிகமாய் வாட்டிற்று. அவளைப் பெற்றவர்கள் வந்து கேட்டபோது மனுஷத்தன்மையே இல்லாமல் குழந்தையை பெற்றவரிடம் சேர்க்காமல், சுயநலத்துக்காக அவள் காலராவில் இறந்து விட்டாள்’ என்று கூசாமல் பொய் சொன்னோமே. அதற்காக எப்படி தண்டித்து விட்டாயா கடவுளே.

ரேகாவை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்க எப்படி மனசு வந்தது? பெற்றோர் வசதியாக வாழ, அவள் எங்கோ அனாதையாக வளர.. எல்லாவற்றிற்கும் நான்தானே காரணம்?

“எனக்கு ரேகா வேண்டும். என் மகள் வேண்டும். என் ரேகா எனக்கு சொந்தமானவள் அவளை எப்படியாவது அழைத்துக் கொண்டு வாருங்கள். இல்லாவிட்டால் என்னை உயிரோடயே பார்க்க முடியாது.” முடிவாய் கூறிவிட்டாள் புஷ்பா.

“சார்.. பாதர் உங்களை வரச் சொல்றார்” ரிஸீவரை வைத்த மரியா சிஸ்டர் அவரிடம் சொன்னாள்.

“தாங்க்ஸ் சிஸ்டர்.”

“ரிசப்ஷனுக்கு அடுத்து நாலாவது அறை.போய்ப் பாருங்க.”

தளர்ந்த நடையுடன் பாதர் சாலமன் எதிரே போய் நின்றார் கோபாலன்.

“வணக்கம் பாதர். “

“வணக்கம். உட்காருங்கள். “

“சார் என் பேர் கோபாலன். உங்களை பத்து வருடத்திற்கு முன்பு சந்தித்திருக்கிறேன்.”

”அப்படியாக நினைவில்லையே…?” கூர்ந்து பார்த்தார்.

“ரேகா என்கிற பத்து வயதுப் பெண்ணை விட்டுச் சென்றேனே.”

“ஓ…. ரோட்டில் கிடந்த குழந்தையை எடுத்து வளர்த்தவர்?”.

கோபாலன் உடைந்து போனார்.

“நான் பொய் சொல்லி விட்டேன் பாதர், ரேகா ரோடில் கிடந்த குழந்தையல்ல. சட்டபூர்வமாய் தத்து எடுத்து வளர்த்தக் குழந்தை”. நடந்தவைகளை… இரட்டை குழந்தைகள் இறந்தது வரை எல்லாவற்றையும் சொன்னார்.

சாலமல் வாயடைத்துப் போனார்.

“எவ்வளவு பெரிய தவறினை இழைத்து விட்டீர்கள் கோபாலன்? இங்குள்ள ஆயிரம் இதயங்களிலும் தாம் அனாதைகள் என்கிற வேதனையும், அம்மா அப்பாவால் தூக்கி எறியப்பட்டோமே என்கிற துயரமுமாகத்தான் துயர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உங்கள் கடமையிலிருந்து தவறியிருந்தாலும், பெற்றவர் வந்து குழந்தையை கேட்டபோது உண்மையைக் கூறியிருக்கலாமே. ரேகா அனாதை என்ற அடைமொழியிலிருந்து விடுபட்டு வளர்ந்திருப்பாளே.”

“ஐயா.. நான் பாவியாகி விட்டேன். எங்கள் பாவங்கள் கரைய வேண்டும். ரேகா வராவிட்டால் என் மனைவியை உயிரோடு காண முடியாது. என் மகள் வேண்டும். அவளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் செய்து அவளை சிறப்பாய் வாழவைக்க ஆசைப்படுகிறோம். ரேகாவை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்.. ப்ளீஸ்” கண்ணீர் விட்டு கதறினார்.

பாதர் பெருமூச்சு விட்டார். “நீங்களோ நானோ நினைத்தால் கூட ரேகாவை உங்களுடன் அனுப்ப முடியாது.”

“ஏன் பாதர்?” தீயைத் தொட்டாற்போல் திடுக்கிட்டார். சாலமன் சுருக்கமாய் சொன்னார்.

“அப்படியானால்..ரேகா இங்கில்லையா?” குரலில் ஏமாற்றம்.

“இல்லை”

“அவளை வேலைக்கு சேர்த்த தொழிலதிபரின் அட்ரஸாவது கிடைக்குமா பாதர்?”

“நிச்சயமாக” என்றபடி ஏகாம்பரத்தின் முகவரியை டைரியிலிருந்து எழுதிக் கொடுத்தார்.

“ரொம்ப நன்றி பாதர்” என்றார். நிம்மதியுடன் கோபாலன்.


அர்விந்த் சுபத்ராவின் திருமணத்தையொட்டி வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் அத்தனை பேருக்கும் புத்தாடை வழங்கப்பட்டன.

ரேகாவிற்கு ஸ்பெஷலாய் பட்டுப் புடவை வாங்கி இருந்தாள் அம்பிகா.

“ரேகா!”

“சொல்லுங்கம்மா”

“இப்படி வா”

வந்தாள்.

அட்டைப் பெட்டியுடன் பட்டுப் புடவையை நீட்டினாள்.

“அம்மா.. இது..” பிரம்மிப்புடன் கேட்டாள்.

“உனக்குதான்.. பிடி.”

மகிழ்ச்சியில் நெஞ்சம் விம்ம வாங்கிக் கொண்டாள். கண்கள் கலங்கியது.

“அடடா.. என்ன ரேகா இது? இந்த வீட்டைப் பொறுத்தவரை சுபத்ராவைப் போல் நியும் என் மகள் போலதான்” என்றார் ஏகாம்பரம்.

“உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி சார்.”

“மேரேஜ் இன்விடேஷன் எல்லாம் வந்து விட்டது. சுபியை தான் கூப்பிட்டேன்னு சொல்லும்மா.”

“சரி சார்” என்று கூறிவிட்டு மாடிப்படி ஏறினாள் ரேகா.

அர்விந்தின் போட்டோவையே பார்த்தபடி இதயத்தில் நிரப்பிக் கொண்டிருந்த சுபத்ரா கதவு தட்டும் சப்தம் கேட்டு எரிச்சலுடன் நிமிர்ந்தாள்.

ரேகா!

“என்ன?”

“சார்… உங்களை கூப்பிடறார்!”

“வர்றேன்னு சொல்லு”

“….”

“என்ன நின்னுக்கிட்டேயிருக்கே, வர்ரேன்னு சொல்லு போ!”

“இல்லே… இப்ப உங்க முகத்துல தனி அழகு தெரியுது!”

“ஏன் இவ்வளவு நாளா அந்த அழகு தெரியலியா? ஐஸ் வைக்கறியா?”

“சேச்சே! கல்யாணம்னதும்… அது மனகக்கு பிடிச்சவரோட கல்யாணம்னதும் தனிக் களை வந்துடாதா? அதைத சொன்னேன்”

“இதுக்கு முன்னாடி எத்தனை கல்யான பண்ணியிருக்கே? அனுபவம் போசுதா?”

கிண்டலாய் கேட்டாள் சுபத்ரா என்றாலும் அவள் மேல் கோபமோ வருத்தமோ ஏற்படவில்லை ரேகாவிற்கு.

“உங்க முகத்தை கண்ணாடியில் பார்த்தா உண்மை உங்களுக்கே புரியும். வருங்கால கணவர் இங்கே பலமுறை வந்து ஒருமுறைக்கூட நான் பார்த்ததில்லை. பார்க்கணும்னு ஆவலாயிருக்கு. போட்டோ இருந்தா காட்டுங்களேன்!”

“இதோ இதுக்கூட அவரோட போட்டோ தான். ஆனா, உனக்கு காட்ட இஷ்டமில்லை கல்யாணத்தன்னைக்கு பார்த்துக்க. இப்படியெல்லாம் பேசி என்னை மயக்கிடலாம்னு பார்க்கறியா? அதெல்லாம் என்கிட்டே நடக்காது.”

ரேகாவிற்கு அந்த வார்த்தைகள் ஊசியாய் மனதை துளைத்தாலும் சிரித்தபடி கீழிறங்கி வந்தாள்.

சற்று நேரங்கழித்து சுபத்ரா கீழிறங்கி வந்தாள்.

”வாம்மா… கல்யாணப் பொண்ணு?” கிண்டல் செய்தாள்.

“போங்கண்ணி!”

“ஏம்மா என் பொண்ணை எப்ப பார்த்தாலும். கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்கே?” செல்லமாய் கோபித்தாள் அம்பிகா.

“எத்தனை நாளைக்கு பண்ணப் போகிறேன் அத்தை! இன்னும் பத்துநாள்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமியார் வீட்டுக்குப் போகப்போறா!”

சுபத்ரா வெட்கத்துடன் தலை கவிழ்ந்தாள்.

“என் பொண்ணு வெட்கப்பட்டு இப்பதான் முதல் முதலா பார்க்கிறேன்!” என்றார் ஏகாம்பரம்.

“ஆளாளுக்கு ஏங்க என் பொண்ணை கிண்டல் பண்றீங்க? இன்விடேஷனை அவகிட்டே காட்டுங்க… பிடிச்சிருக்கான்னு சொல்லட்டும்”

“இந்தாம்மா..இதிலே எந்த மாடல் பிடிச்சிருக்குன்னு சொல்லு! நாம செலக்ட் பண்ற மாடல் சம்மந்தி வீட்லேயும் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு இன்னைக்கே பிரஸ்லே தெரியப்படுத்திடலாம்!”

அப்பா கொடுத்த இன்விடேஷன் மாடல்களையும், இவள் கல்யாணத்துக்காக ஏற்கனவே அச்சடிக்கப்பட்டிருந்த மாதிரிகளையும் பார்த்து….இரண்டு மாடல்களை செலக்ட் பண்ணிக் கொடுத்தாள்.

“இது தான் எனக்கும் பிடிச்சிருந்தது. அதையே தான் நீயும் செலக்ட் பண்ணிருக்கே! அப்புறம், அம்பிகா இந்த இன்விடேஷனை சம்மந்தி வீட்லே காட்டி, ஏதாவது பேரு விடுபட்டு போயிருக்கான்னு கேக்கணுமே! கடைசி நேரத்திலே தாய்மாமன் பேரைப் போடலே, பாட்டனார் பேரைப் போடலேன்னு சம்மந்தி சண்டை வந்துடக் கூடாதுப் பாரு! இதை நீ சம்மந்தி வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போய் காட்டிட்டு வந்திடேன்!”

“அடிக்கடி நாம சம்மந்தி வீட்டுக்குப் போறது.. சரியா வராது! தவிர, நானும், கனகாவும், தினேஷும் பட்டுப்புடவை எடுக்க காஞ்சிபுரம் போகப் போகிறோம். நீங்களும் போக முடியாது. பேசாம்.. ரேகாகிட்டே கொடுத்தனுப்பினா என்ன?” என்றாள் அம்பிகா.

“அதுவும் சரிதான். ரேகா கிட்டேயே கொடுத்தனுப்பு, நம்ம கார்லேயே அனுப்பு”

அடுத்த ஐந்தாவது நிமிடம் ரேகா இன்விடேஷனோடு புறப்பட்டாள். அப்போது தான் அந்த மாதிரி இன்விடேஷனைப் பார்த்தாள்.

மணமகள் சுபத்ரா, மணமகள் அர்விந்த் என்றிருந்தது.

‘அவன் பெயரும் அர்விந்து தானே!’

‘அர்விந்த்!’ அவள் உதடு முணுமுணுத்தது.

‘எட்டாத நிலவுக்கு கொட்டாவி விடாதே ரேகா! உன் நிலையை அடிக்கடி மறந்துடறே! உன் வேலை என்னவோ அதை மட்டும் செய்!’ மனசாட்சி இடித்துரைத்தது.

ரேகா… மனதிற்குள் பிரேயர் பண்ண ஆரம்பித்தாள்.

மனம் அமைதியடைந்தது!

கார்… அர்விந்தின் வீட்டு வாசலின் முன் நின்றது. சப்தம் கேட்டு வெளியே வந்தாள் வடிவுக்கரசி.

“அம்மா.. என் பேரு ரேகா! நான் ஏகாம்பரம் சார் வீட்லே வேலை செய்யறேன்! சார் இந்த இன்விடேஷன் எல்லாம் கொடுத்தனுப்பினாங்க”

”தெரியும்! நீ இங்கே வரப்போறதை சம்மந்தியம்மா போன் பண்ணி சொல்லிட்டாங்க! எப்படியிருக்கா என் மருமகப் பொண்ணு?” இன்விடேஷனை பார்த்தபடி கேட்டாள்.

“ரொம்ப நல்வாயிருக்காங்கம்மா”

”உக்காரும்மா ரேகா… காமாட்சி ஒரு காபி கொண்டு வா” என்றவள் இன்டர்காமில் மாடியிலிருந்த மகனை தொடர்பு கொண்டான்.

“அர்விந்த்… கொஞ்சம் கீழே வாயேன்!”

“ஏம்மா?”

“சுபி வீட்லேர்ந்து இன்விடேஷன் வந்திருக்கு. உனக்கு பிடிச்சிருக்கான்னு வந்து பாரு!”

“அதெல்லாம் நீ பார்த்து முடிவுப் பண்ணுங்கம்மா!”

“ம்ஹும்…நீ தான் முடிவு பண்ணனும். சீக்கிரம் கீழே வா!” ரிசீவரை வைத்து விட்டாள்.

காமாட்சி தந்த காபியை வாங்கி குடித்துக் கொண்டிருந்தவள்…படிகளில் இறங்கி கொண்டிருந்த அர்விந்தைப் பார்த்து அதிர்ச்சியுடன் இருக்கையை விட்டு எழுந்தாள் ரேகா!

அத்தியாயம்-12

அர்விந்தும் இவளைப் பார்த்து விட்டான்.

தன் வீட்டிலேயே அவனை எதிர்பார்க்காத அர்விந்த் பரபரப்புடன் அவள் எதிரில் வந்து நின்றான்.

“என்ன அர்விந்த்… அப்படிப் பார்க்கறே? இந்தப் பொண்ணு பேரு ரேகா! சுபியோட வீட்லே வேலை செய்யறா! இன்விடேஷன் கொடுத்தனுப்பி இருக்காங்க. இந்தாப்பா”

அர்விந்த் ரேகாவின் முகத்திலிருந்து கண்களை எடுக்கவேயில்லை.

“ரேகா.. சுபி சொன்ன ரேகா நீதானா? கைக்கெட்டும் தூரத்தில் வச்சுக்கிட்டே உன்னை ஊரெல்லாம் தேடினேனே! ரேகா என்ன கொடுமையிது? இப்படிப்பட்ட சூழ்நிலையிலா உன்னை நான் சந்திக்கணும்? என் மனசுல நீயிருக்கறது உனக்கு நல்லாவேத் தெரியும். உன் மனசுல நான் இருக்கிறேன்னு எனக்கும் நல்லாவே தெரியும்”

“அர்விந்த்…என்னடா..என்னென்னவோ பேசறே?” வடிவு பயந்தாள்.

அவன் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. ரேகாவே எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அவள் கைகளைப் பற்றி கொண்டான்.

“ரேகா… எனக்கு நீ வேணும்! என் மனசுக்குள்ளே நீ தான் நிறைஞ்சிருக்கே! சுபி மேல எனக்கு கொஞ்சமும் காதல் இல்லே! பெரியவங்க பிடிவாதமா நடத்தப்போகிற கல்யாணம் இது! நீ ஒரு வார்த்தை சொல்லு! இப்பவே நம்ம கல்யாணம் நடக்கும்.”

“விடுங்க… கையை விடுங்க!” பதறினாலும் ரேகா… அவன் அன்பில் கரைந்தாள்.

‘இவனுக்கு என் மீது இவ்வளவு காதலா?’

வடிவுக்கரசி கோபத்தில் எரிமலையானாள். ரேகாவைப் பிடித்து இழுத்து தள்ளிவிட்டாள்.

“அர்விந்த் உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?”

“அம்மா… எனக்கு ரேகா வேணும்மா”

“அவ ஒரு அனாதைடா! சுபி வீட்டில் வேலை செய்யறவ! பத்துநாள் கல்யாணத்தை வச்சுக்கிட்டு.. கிறுக்கு பிடிச்சவன் மாதிரி உளராதே!”

“எனக்கு எதைப்பத்தியும் அக்கறையில்லே. போலித்தனமா என்னால சுபியோட வாழ்க்கை நடத்த முடியாதும்மா. எனக்கு ரேகா வேணும். இந்த கல்யாணத்தை நிறுத்துங்க! நீங்க என்ன நிறுத்தறது? நானே நிறுத்தறேன்!” ஆத்திர அவசரத்தில் என்ன பேசுவது, செய்வது என்று புரியாமல் சுபத்ரா வீட்டிற்கு போன் செய்தான்.

சுபத்ராதான் போனை எடுத்தாள். அவள் ஹலோ சொல்லுமுன் இவனே பேசி விட்டான்.

“ஹலோ…நான் அர்விந்த் பேசறேன். இந்த கல்யாணத்திலே எனக்கு இஷ்டமில்லை. கல்யாணத்தை நிறுத்திட சொல்லுங்க!” பட்டென்று போனை வைத்து விட்டான்.

அது அர்விந்தின் குரல்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சுபத்ராவுக்கு தலை கிறுகிறுத்தது.

”அர்விந்த்… என்ன காரியம் பண்றே! அடிப்பாவி… எல்லாம் உன்னால தான். எங்கேர்ந்து வந்து தொலைஞ்சே? குடியை கெடுக்கறதுக்குன்னே வந்தியா? போடி வெளியே!” இரைந்தாள் வடிவுக்கரசி.

அடுத்தடுத்து நடந்த சம்பவங்களாக ஸ்ரம்பித்துப் போயிருந்த ரேகா, உடல் நடுங்க அங்கிருந்து ஓடினாள்.

“ரேகா…ரேகா…போகாதே நில்லு!” கத்தினான் அர்விந்த். பின்னே ஓடமுயன்றான்.

“அர்விந்த்… இதுக்குமேலே ஓரடி எடுத்த வைசாக் கூட என்னை உயிரோட பார்க்க மாட்டே!”

“அம்மா!

“போடா உள்ளே!”

துவண்டுப்போய் மாடியேறினான். போன் அலறியது. எடுத்தாள்.

“ஹலோ”

”ஹலோ… என்னாச்சு அங்கே?” குரல் ஒங்க கேட்டாள் அம்பிகா.

“ரேகான்னு ஒரு அனாதைய அனுப்பிசிங்களே.. அவளால எல்லாமே நாசமாச்சு!” என்றபடி நடந்தவைகளை சொல்ல ஆரம்பித்தாள்.

கேட்டுக் கொண்டிருந்த அம்பிகாவின் மனம் கொதித்தது.


“அடிப்பாவி… என்னக் காரியம் பண்ண துணிஞ்சிட்டே!”

பேனில் தூக்குமாட்டிக் கொள்ள முயன்ற சுபத்ராவை கனகா பார்த்து விட்டு அவற… தினேஷ் ஓடிப்போய் தங்கையை தாங்கிக் கொண்டான். இன்னும் ஓரிரு விநாடிகள் தாமதித்திருந்தாலும் சுபத்ராவை உயிரோடு பார்த்திருக்க முடியாது.

அம்பிகா மகளை கட்டிக் கொண்டு அழுதாள்.

“ஏம்மா… ஏற்கனவே ஒரு மகளை பிரிந்தேன்! நீயும் என்னை விட்டு போகணும்னு முடிவுப் பண்ணிட்டியாம்மா?”

“என்னால… என்னால்… அர்விந்த் இல்லாம வாழ முடியாதும்மா! கேவலம் ஒரு வேலைக்காரியிடம், நான் தோத்துட்டேனேம்மா” அம்மாவின் மடியில் முகம் புதைந்து கதறினாள்.

“நான் அப்பவே சொன்னேன்… கேட்டீங்களா? அவ சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிறவா! நமக்கேத் தெரியாம அர்விந்தை வளைச்சு போட்டுட்டா! ஆசப்படறதுக்கும் ஒரு அளவிருக்கு அத்தை! அதிலும் நீங்க அவளுக்கு அதிகமாகவே இடம் கொடுத்திட்டீங்க!”

அம்பிகா இறுகிப்போனாள்.

தினேஷ் விக்கித்துப் போனான்.

விஷயம் கேள்விப்பட்டு ஓடோடி வந்த ஏகாம்பரம் பதறிப்போனார்.

இம்மூவரின் கோபமும் ஒருசேர ரேகாவின் மீது பாய்ந்தது.

அதே நேரம்..

ரேகா வந்து சேர்ந்தாள்! நடந்து விட்ட எதிர்பாராத சம்பவங்களால் உடம்பெங்கும் நடுக்கம் பரவியிருந்தது.

‘நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த விதத்திலும் சம்மந்தமில்லை’ என்பதை வலியுறுத்தி சொல்லிவிடும் அவசரத்தோடு வந்தவளை, அம்பிகாவின் குரல் தடுத்தது.

“அங்கேயே நில்லூ”

“அ..ம். மா”

“சீ…உன் வாயால என்னை அம்மான்னு சொல்லாதே? அதுக்கு தான் பெரிசா நாமம் போட்டுட்டியே…என் பொண்ணோட வாழ்க்கையிலேயே விளையாடிட்டியே சண்டாளி! உன்னை மகளா நினைச்சு பாசம் காட்டினேனே… வேஷம் போட்டு நடிச்சிட்டியே. எங்க வீட்டு உப்பு எங்க கன்னத்திலேயே அறைஞ்சிருச்சே?”

“அப்படியெல்லாம் பேசாதீங்கம்மா… உங்க வாயால என்னை திட்டாதீங்கம்மா… தாங்கிக்க முடியலேம்மா” துடித்தாள் ரேகா.

“அனாதை இல்லங்களுக்கு வாரி வாரி கொடுக்கறவன் நான்! ஏன் தெரியுமா? அந்தப் புண்ணியம் என் பிள்ளைங்களுக்கு போய் சேரனும்னு தான், பாதர் சொன்ன ஒரே காரணத்துக்காக… உனக்கு என் வீட்டில் வேலையும் கொடுத்து, இடமும் கொடுத்தேன். உன் மூலமா ஒரு பெரிய பாவத்தை வரவைச்சிட்டேன். புத்தியை காண்பிச்சிட்டியே! எத்தனை தான் குளிப்பாட்டி, சீராக்கினாலும் நாய் நாய் தான்னு… நிரூபிச்சிட்டியே! உன் உடம்புல ஓடறது நல்ல ரத்தமாயிருந்திருந்தா…உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சிருக்க மாட்டே! அன்னமிட்ட வீட்லே கன்னம் வச்சிருக்கமாட்டே! உன்னை நம்பி உள்ளே சேர்த்தது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்ப புரிஞ்சு போச்சு போடி…வெளியே!” ஏகாம்பரத்தின் உடல் ஆத்திரத்தில் நடுங்கியது.

”சார்.. அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டாதீங்க! நீங்க நினைக்கறமாதிரி நானில்லே! நடந்தது என்னங்கறதை சொல்றதுக்கு எனக்கொரு சந்தர்ப்பம் கொடுங்க… ப்ளீஸ்” கைகூப்பி கதறினாள்.

“நடந்தது என்னங்கறது தான் தெரியுமே! அதை உன் வாயால வேற தெரிஞ்சுக்கணுமா? உன்னைப் பத்தி என் பொண்டாட்டி சொல்லும் போதெல்லாம் நம்பவே! உனக்காக அவகிட்டே சண்டை போட்டேன்! ஏன் தெரியுமா? சுபத்ரா மாதிரி உன்னையும் என் தங்கச்சியா நினைச்சேன். அதனால தான் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையை தட்டிப்பறிச்சிட்டியா? எங்க சுபத்ரா உனக்கென்ன துரோகம் பண்ணினா? அவ அர்விந்த் மேல் எந்தளவு உயிரை வச்சிருக்கான்னுத் தெரியுமா? எல்லாம் தெரிஞ்சிருந்தும் ஒண்ணும் தெரியாத பூனைமாதிரி நடிச்சிட்டியே! நீ பண்ணின துரோகத்தால் சுபத்ரா தூக்குல தொங்கிட்டா! நல்லவேளை..கடைசி நேரத்தில காப்பாத்திட்டோம்! இதுக்கெல்லாம் காரணம் யார்? நீ!” தினேஷ் சுட்டு விரல் நீட்டி காட்டினான்.

“இல்லே…. இல்வே… நானில்லை!” கத்தினாள்… கதறினாள். தனக்கு பேச ஒரு நிமிடம் தரமாட்டார்களா என்று தவித்தாள். தன்னை திட்டியதுக்கூட பாதிக்கவில்லை. சுபத்ரா தற்கொவைக்கு முயன்றாள் என்ற செய்தியும். அதற்கு தான் தான் காரணம் என்று அவர்கள் உறுதியாய் நம்பிவிட்டதும் தான்… அவள் உயிரை பிடித்து உலுக்கியது. ‘நான் நம்பிக்கை துரோகியல்ல… நன்றி கெட்டவள் அல்ல… கேடு கெட்ட நாயுமல்ல. இதை எல்லாம் சொல்ல ஒரே ஒரு நிமிடம் அவகாசம் தர மாட்டார்களா?’

“தினேஷ்… இன்னும் இவகிட்டே என்ன பேச்சு இவளை முதல்ல வெளியே அனுப்பிட்டு.. இந்த வீட்டை டெட்டால் ஊத்தி அலம்ப சொல்லு” என்றார் ஏகாம்பரம் கோபமாக.

“மாமா… டென்ஷனாகாதீங்க… உங்க உடம்புக்கு ஆகாது!” கனகா கவலைப்பட்டாள்.

“அம்மா… அவளை வெளியேப் போக சொல்லும்மா! என் கண்ணு முன்னால நிக்க வேணாம்னு சொல்லும்மா” கவலையும், களைப்புமாய் முனகினாள் சுபத்ரா.

“தினேஷ்.. அவள முதல்ல வெளியே அனுப்பு!”

“ஏய்… வெளியே போ”

“நான் சொல்றத கொஞ்சம்…”

“யாரும் கேக்க தயாராயில்லே! மரியாதை வெளியேப்போ!”

“இல்லே….பழிகாரியா நான் இங்கிருந்து போக மாட்டேன்… என்னை பேச விடுங்களேன்!” கண்ணீருடன் கெஞ்சினாள் ரேகா.

“என்னை கொலைகாரனாக்காதே! போய்டு!” இரைந்தான் தினேஷ்.

“இல்லே.. நான் போகமாட்டேன்!’ அடுத்த கணம் திளேஷ் அவள் கையை பிடித்து தரதரவென வெளியில் இழுத்து விட்டு விட்டு…

“வாட்ச்மேன்… கேட்டை லாக் பண்ணு !”என்றான்.

இப்படியோர் அவமானத்தை எதிர்பார்க்காத ரேகா உறைந்துப் போனாள். கேட் சார்த்தப்பட்டு பூட்டப்பட்டது. ரேகா நடுத்தெருவில் நின்றபடி கண்ணீருடன் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். தளர்ந்த நடையுடன் அங்கிருந்து சென்றாள்.


அர்விந்தின் கார் வந்து நின்றது. அரக்கப்பரக்க அதிலிருந்து இறங்கினான்.

“ரேகா… ரேகா!” சத்தமாய் அழைத்துக் கொண்டே ஏகாம்பரத்தின் வீட்டிற்கு சென்றான்.

அவனைப் பார்த்ததும் அங்கிருந்த அத்தனைபேரும் முகத்தை கசப்புடன் திருப்பிக் கொண்டனர்.

“என்னப்பா… சுபத்ரா உயிரோட இருக்காளா, இல்லையான்னு பார்க்க வந்தியா?” என்று கேட்டாள் அம்பிகா.

“ஆன்ட்டி….”

“அதுக்கெதுக்குப்பா…சுபத்ராவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சே? அந்த அனாதை ரேகாவையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே?”

“ஆன்ட்டி… உண்மை என்னன்னு உங்களுக்குத் தெரியாது. அவபேரு ரேகான்னு எனக்கே இப்பதான் தெரியும். இத்தனை நாளா அவ இந்த வீட்லே இருந்ததுக்கூட இப்பதான் தெரியும்”

“அர்விந்த்… என்ன சொல்றே நீ?” வியப்புடன் கேட்டான் தினேஷ்.

“ஆமாம் தினேஷ்! ரேகாவை மானசீகமாய் நான் காதலித்தது நிஜம். ஆனா, இன்னைக்குதான் என் மனசை அவளிடம் வெளிப்படுத்தினேன். நடந்தது என்னன்னா…?”

அர்விந்த் அவளை முதன் முதலாய் சந்தித்தது முதல் இன்று நடந்தது வரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.

அனைவர் முகத்திலும் அதிர்ச்சி!

”ரேகா…ரொம்ப பயந்து விட்டிருக்கிறாள். நான் கொஞ்சம் யோசிச்சு.. நிதானமாய் நடந்திருந்திருக்கலாம். என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க. நான் ரேகாவை பாக்கணும்!”

சுபத்ராவிற்கு அவன் மனதில் தானில்லை என்கிற நிஜம் அழுகையை உற்பத்தி செய்தது.

“ரேகா எங்கே?” மறுபடி கேட்டான்.

“அவ இப்ப இங்கே இல்லே!” என்றான் தினேஷ்.

“எங்கே போயிருக்கா?”

“தெரியாது!”

“வாட்?”

“அவ இனிமே இங்கே வரமாட்டா”

“தினேஷ்…என்ன சொல்றே நீ?”

“சுபத்ராவோட கண்ணீருக்கு காரணமான அவளை எங்க வீட்டுக்குள்ளே வச்சிருக்க.. எங்களுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?”

“டேய்!” கோபத்துடன் அவன் சட்டையைப் பற்றினான். “என் ரேகாவை என்னடா பண்ணீங்க?”

“யார் மேல கையை வைக்கறே? எடுடா கையை. அந்த அனாதை நாய் எந்த தெருவிலே பொறுக்கிக்கிட்டு இருக்குதோ.. போய்ப் பாரு!”

”யாரைப் போய் நாய்ங்கறோ” அடிக்க கையை ஓங்கினான் அர்விந்த், ஓங்கிய கையை தடுத்துப் பிடித்தார் ஏகாம்பரம்.

அவர் பேச வாயெடுக்கவும்… “சார்” என்ற குரல் ஒலிக்கவும்… அனைவரும் வாசல்பக்கம் திரும்பினர்.

வாசலில் கோபாலன் நின்றிருந்தார்.

– தொடரும்…

– தேவியின் பெண்மணி, பிப்ரவரி 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *