ஒரு வார்த்தை பேச முயல்வதற்குள் சரிகாவுக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஐம்பது வயதைத்தொட்டிருந்தவள் சிறு குழந்தையைப்போல் தேம்பி, தேம்பி தன்னை இதுவரை யாரென்றே தெரியாதவர் முன் அழுதாள்.
“அழுகாதீங்க. எதா இருந்தாலும் பார்த்துக்கலாம். மனசோட வலியைப்போக்கறதுக்கு மார்க்கமான வழி கிடைக்காமயா போகப்போகுது? இந்த பூமில பிறந்தவங்களுக்கு இம்பமும், தும்பமும் கலந்து தான் வரும். எப்படிப்பட்ட காலத்துலயும் வாழ்ந்து போடுலாம். கால சூழ்நிலைக்கேத்தமாதர வாழப்பழகிட்டம்னா அந்த நெலையத்தாண்டி நல்ல நெலைக்கு போயிக்கலாம். காலத்தை எதுத்து வெல்ல முடியாது. வண்டி நல்லா இருந்தாலும் ரோடு மோசமா இருந்தா வேகம் கொறைச்சு, பாரம் கொறைச்சு போனம்னா அந்த ரோட்ட ஈசியா கடந்து போடலாம். நல்லா வெளைற நெலமா இருந்தாலும், நல்ல வெதையா இருந்தாலும் மண்ணுல ஈரமில்லாத போது வெதச்சம்னா மொளச்சு பயிர் வராதுன்னு தெரியாம வெயில் காலத்துல வெதைச்சுட்டு விதை வீணாப்போச்சுன்னு ஒரு வெவசாயி அழுதார்னா வெவசாயோட அறியாமைன்னு தான் சொல்லோனும்” என ஜோதிடர் நல்லசாமி கூறியதைக்கேட்டு தனக்கான சரியான நல்ல ஆலோசனை கிடைத்தது, கிடைக்கப்போகிறது என புரிந்தவளாய் கண்களில் வடிந்த கண்ணீரைத்துடைத்துக்கொண்டாள்.
“ஓரே அறிவுள்ள எலியுங்கூட அது வசிக்கிற வலைல பொடத்தாய்னு ஒரு மாற்று வழிய வலை தோண்டுற போதே வலையோட கடைசில ஈசியா உடனே வெளில தொறந்து போற மாதிர வெச்சிருக்கும். வலைல தண்ணி கிண்ணி போயிட்டாலோ, பாம்பு கீம்பு நொழைஞ்சிட்டாலோ அது வெரைக்கும் வெளில ஆருக்கும் தெரியாத அந்த வழிப்பக்கம் பொத்துட்டு வெளில போயிடும்னு வெச்சுக்கவே. எறும்புகளுங்கூட மழை பேயப்போறத முன்னாலயே தெரிஞ்சு போட்டு, தானியங்கள தோண்டுன குழிக்குள்ள ஒத்துமையா கொண்டு போயி சேமிச்சு வெச்சுப்போட்டு வழிய அடைச்சுப்போடும். மழைகாலத்துக்கப்புறம் குழியத்தொறந்து வெளிப்பக்கம் எறை தேடறதுக்கு வரிசையா வரும். ஆறறிவுள்ள நம்ம மனுசங்க நாளைக்கு என்ன வேணும்னு யோசிக்காம, பிரச்சினை வந்தா அத சரி செய்ய முடியாம, கெடைச்சத ஆடம்பரமா செலவு பண்ணிப்போட்டு, இல்லாத போது கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கறோம். இப்ப உங்களுக்கு கிரக நெலை சாதகமில்ல. அஷ்டமச்சனி வந்து ஆறு மாசத்துலயே அழ வெச்சுப்போடுச்சு. அஷ்டமச்சனில அரசனும் அழுவான்னு அந்தக்காலத்துலயே சோசிய புத்தகத்துல எழுதி வெச்சிருக்கறாங்க. கடவுளே மனுசனாப்பொறந்தாலும் நல்லதும், கெட்டதும் மாறி, மாறித்தான் வரும். நீங்க இருட்ட வெளிச்சமாக்கோணும்னு வேண்டிட்டு கோயிலுக்குப்போனாலும்மு கடவுள் இருட்ட வெளிச்சகாலம் வர்றதுக்கு முன்னால பகலாக்க மாட்டாரு. இருட்டுக்கு வெளக்கு மாதர ஒன்னொரு மனுசங்க மூலமா ஒதவிடுவாரு. சில சமயம் மோசமான காலத்துல எதுவுமே செய்யாம சும்மா இருந்தோம்னா இது வரைக்கும் சம்பாதிச்சதையாவது எழக்காம காப்பாத்துலாம். எப்பவுமே லாபமே வேணும்னு போறவங்க எழப்பத்தான் சந்திப்பாங்க. நீங்க அடுத்த சனிப்பெயர்ச்சில அஷ்டமச்சனி முடியற வரைக்கும் பேச்சு வார்த்தை, போக்கு வரத்து, கொடுக்கல் வாங்கல்லனு எல்லாத்துலயும் கவனமா இருக்கோணும். இல்லீன்னா தேவையில்லாம பண்ணாத தப்புக்கு கோர்ட்டு, கேசுன்னு அலையோணும். பரிகாரத்துலயே பெரிய பரிகாரம் பொறுமையா காலத்தக்கடத்தறது தான்” என தன் தந்தை வயதுள்ள ஜோதிடர் தனது ஜாதகத்தைக்கணித்து உறுதியாக பலன் சொல்வதைக்கேட்ட பின்பே சரிகா சாந்தமானாள்.
‘ஜோதிடம் என்பது ஒரு சரியான வழிகாட்டி. கிரக மாற்றங்கள் மனித வாழ்வில் மாற்றங்களை அக்காலத்திலும் ஏற்படுத்தியிருக்கும். இல்லையென்றால் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதர்கள் நம்பும் ஒன்றாக இக்காலம் வரை இந்தக்கலை நம்மிடம் இருந்திருக்காது’ என நினைத்தவள் மேலும் பல விசயங்கள், அதனால் ஏற்படும் விசனங்களுக்கான தீர்வை அறிய மேலும் பல கேள்விகளைக்கேட்டு அதற்கான பதில்களைப்பெற்றுக்கொண்டாள்.
முன்பெல்லாம் அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, உறவுகள், நட்புகளிடமும் சரி நல்ல பெயர் வாங்கியவள் தற்போது நாலாபுறமும் ஏச்சான பேச்சுக்களும், ஏளனச்சிரிப்புகளும், எகத்தாளமான சாடைகளும் மனதை மிகவும் வருத்தமடையச்செய்தன. முப்பது வருட நட்பு கூட தற்போது கசந்தது. சமையலறையில் கூட உப்பு போட மறப்பது, காரம் அதிகமாக போட்டு விடுவது என மறதி வருவதால் கணவன் ‘பசியில்லை’ எனக்கூறி சாப்பிடாமல் உணவை அப்படியே வைத்து விட்டு ஹோட்டலில் போய் சாப்பிடுவதையும், மகன் சமைத்தது பிடிக்காமல் உணவுத்தட்டை தூக்கி வீசியதையும் நினைத்து வேதனை கொண்டாள்.
அலுவலகத்தில் எப்போதும் கணக்கில் தவறே வராத நிலையில் இன்று தான் செய்த தவறால் நிறுவனத்துக்கு பெரிய இழப்பென முதலாளி கண்டபடி திட்ட, வேலையே வேண்டாமென ராஜினாமா செய்ய, வருமானமும் இல்லாமல் போனது.
மீன் தொட்டியில் ஆசையாக வாங்கி வளர்த்த மீன்களும் செத்து மிதந்தன. ஆசையாக வளர்த்த நாய் நோயால் இறந்தது. வயதான அம்மாவிற்கு அறுவை சிகிச்சை நடந்ததால் ஒரு வாரம் வீட்டை விட்டு மருத்துவ மனையில் இருக்கும் சூழ்நிலை, மாமனாரின் இழப்பு, இப்படி சோதனை மேல் சோதனை வர துவண்டு போய் விட்டாள் சரிகா.
பிரச்சினைகள் எதனால் வருகின்றன? எப்போது தீரும்? அதற்கு தீர்வு என்ன? என்பதை யாரிடமும் கேட்டு பதில் பெற முடியாத நிலையில் ஜோதிடர் மட்டுமே ஞாபகத்துக்கு வந்தார். தனது ஜாதகத்தைக்கொடுத்து அவர் முன் அமர்ந்த போது அவர் கணித்துச்சொன்ன பலன்கள் தொன்னூறு சதவீதம் சரியாக இருந்ததால் ஜோதிடத்தின் மீது இது வரை இருந்த நம்பிக்கை தற்போது அதிகமானதோடு, இது போன்ற காலத்தை எவ்வாறு கடப்பது? என புரிய வைத்ததால், இனி மேல் வரும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது? என்பதை தனக்குள் உறுதிப்படுத்திக்கொண்டு, அவருக்கான தட்சணையை வைத்துக்கொடுத்த போது, அவர் தினமும் அவசியம் படிக்க வேண்டிய தெய்வ மந்திரங்கள் அடங்கிய புத்தகத்தை தனக்குக்கொடுத்ததை வாங்கிக்கொண்டு குழப்பத்துடன் உள்ளே வந்தவள், தெளிவுடன் வெளியேறினாள்.