தேடி வந்த நன்றி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2022
பார்வையிட்டோர்: 3,648 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புகைந்து புகைந்து அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.

வீடு முழுக்கப் புகையின் பரவல்.

நொர நொர சத்தத்தில் வெந்து கொண்டிருந்த சோற்றைக் கரண்டியால் கிளறி விட்டாள் ஆண்டாள்.

கிழிந்து போன கோரைப் பாயில் பாலன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் எழுதிக் கொண்டிருந்த வீட்டுப் பகூம் பாதியில் நின்று விடப், பாட ஏடு விரிந்து கிடந்தது. அதன் மேல் எழுதுகோல் படுத்திருந்தது.

இலாந்தர் விளக்கு வெளிச்சத்தில் கத்தரிக்காயை அரிந்து கொண்டே பாலனைப் பார்த்தாள் ஆண்டாள். வெயிலில் கிடந்த பூவைப் போல அவன் முகம் வாடியிருந்தது.

ஆர்வத்தால் அவன் கேட்ட கேள்விக்கு ஆண்டாள் சற்றுமுன் அவன் மீது எரிந்து விழுந்தாள். “சனியனே” என்று திட்டி விட்டாள். அதை நினைத்து இப்போது அவள் வேதனைப்பட்டாள். அவன் உரிமையோடு எதையும் கேட்பதற்கு அவளைத் தவிர யாரும் இல்லையே. அதை நினைத்து வருந்தினாள்

பசியோடு தூங்குகிறான். பள்ளிக் கூடத்தில் சத்துணவுக் கூடம் அவனுடைய நண்பகல் பசிக்குச் சோறு போட்டு விடுகிறது.

இரவுச் சாப்பாடு தான் நேரமாகும். வேலைக்குப் போன இடத்தில் ஆண்டாள் கூலிப் பணம் வாங்கும்போது இருட்டாகி விடும்.

அந்தக் கூபிப் பணம்தான் மளிகைக் கடையில் புகுந்து அரிசி, பருப்பு, உப்பு, புளியாக மாறி இராத்திரிச் சாப்பாடு தயாராகும், அதன் மிச்சம், சொச்சம்தான் காலை உணவு.

மறு படியும் இராத்திரிக்குத் தான் அடுப்பு எரியும். சோற்றுப் பிரச்சினைக்கே தடங்கல். இந்த இலட்சணத்தில் தீபாவளி வேறு வருகிறது.

அதைப்பற்றித்தான் பாலன் கேட்டு ஆண்டாள் அவன்மீது எரிந்து விழுந்தாள்.

அவள் வாங்குகின்ற கூளிப் பணம் வயிற்றுப் பாட்டுக்கே பற்றாக் குறை. பாலனின் ஆசையை எப்படி அவள் நிறைவு செய்ய முடியும்? கொதிக்கின்ற சோற்றை அலுமினியத் தட்டில் போட்டு ஆவி பறக்கின்ற கத்தரிக்காய்ப் புளிக் குழம்பை ஊற்றி விட்டுப் பாலனை எழுப்பினாள். சொள்ளு வழிந்த வாயைப் புறங் கையால் துடைத்துக் கொண்டே சோம்பலோடு எழுந்து உட்கார்ந்தான். அவன். சூட்டைத் தாங்கிக்கொண்டு ஆண்டாள் சோற்றைப் பிசைந்து வைத்தாள்.

“அம்மா”

“என்னடா? கண்ணு!?”,

“தீபாவளி எப்பம்மா?”

பாடம் எழுத்த் தொடங்கிய போது கேட்டு அவன் அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை மறந்து மறுபடியும் அதையே கேட்டான்.

“அதுக்கெல்லாம் இன்னமும் நாள் கெடக்கு, சாப்பிடு” இந்த முறை எரிந்து விழாமல் சிறிது சாந்தமாகச் சொன்னாள் அவள்.

“எவ்ளோ நாள்… சொல்லும்மா”

“இன்னும் ஒரு மாசம் கெடக்கு”

“பொய் சொல்றே”

“இல்லடா கண்ணு”

“எனக்குப் புதுச்சட்டை, பட்டாசு எல்லாம் வாங்கித் தரணும்.”

அவன் சொல்லச் சொல்ல ஆண்டாளுக்குக் கண்கள் கலங்கின. ஒரு பூ ஆசைப்படுகிறது. ஒரு காய் அவலம்படுகிறது.

“அம்மா அடுத்த வாரம் தீபாவளியாம். பள்ளிக் கூடத்துல சொன்னாங்க.”

“அப்படியா சொன்னாங்க?”

“ஆமம்மா”

“சரி, சோத்தைத் தின்னு” சூடு குறைந்த சோற்றை அள்ளியள்ளிச் சாப்பிட்டான்.

அவன் புதுச் சட்டைக்கும், பட்டாசுக்கும் நச்சரிப்பானே என்று அடுத்த வாரம் வரும் தீபாவளியை அவள் ஒரு மாதத்திற்குத் தள்ளிப் போட்டாள். நடு இரவு நேரம், அவளுக்குத் தூக்கம் வரவில்லை.

மங்கலாக எரிந்த இலாந்தர் விளக்தைத் தூண்டினாள். “பளிச்” சென வெளிச்சம் பரவியது.

எழுந்து தூசு படிந்திருந்த தகரப் பெட்டியைத் திறந்தாள், துணிகளை விலக்கி ஒரு புகைப் படத்தை எடுத்தாள். அது ஆண்டாளும், அவள் கணவன், கண்ணனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம்.

பக்கத்து நகரத்துக்குப் போய் அரிசி ஆலையில் வேலை பார்த்தவன் கண்ணன்.

ஒரு நாள் இரவு நேரத்தில் வேலை முடிந்து மிதி வண்டியில் திரும்ப வீடு வந்தபோது எந்த வாகனமோ மோதி அவனைச் சாகடித்துவிட்டது.

அவன் செத்த பிறகு குடும்ப வண்டியை ஆண்டாள் இழுக்கிறாள்

கணவனின் அன்பு முகத்தை, அவனோடு வாழ்ந்த வசந்த காலத்தை அந்தப் படத்தில் பார்க்கிறாள்.

ஏழாம் வகுப்பில் படிக்கின்ற பாலனுக்கு அப்பாவைப் பற்றிய ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. அவனை முடிந்த மகிழ்ச்சிப் படுத்தி வருகிறாள் ஆண்டாள். அவள் உயிர் வாழ்வதே அந்தப் பூவுக்காகத்தான்.

சிறிது பணம் சேர்த்து அவனுக்குப் புதிய சட்டை, கால்சராய் எடுக்கக் கடந்த நாலு மாதமாக முயற்சி செய்து பார்க்கிறாள். பணம் சேர மாட்டேன் என்கிறது.

தீபாவளியும் வரப்போகிறது. புதுச்சட்டை, கால்சராய், பட்டாசு இவைகளை நினைத்து ஆசையுடன் இருக்கிறான் பாலன். யாரிடம் பணம் கேட்பது? வேலை செய்த இடத்தில் கூளி வாங்கிய போது கடனாகச் சிறிது பணம் கேட்டுப் பார்த்தாள். கிடைக்கவில்லை.

அவளோ தினக்கூலி. அவளுக்கு யார் கடன் தருவார் ? வாங்கவும் ஒரு தகுதி வேண்டுமே. அது அவளுக்குத் தெரியாது.

பருத்திக் காட்டில்ஓர்ஆள் பூச்சி மருந்து மருந்து கலக்க ஆண்டாள் தண்ணீர்க் குடத்துடன் கிணற்று மேட்டுக்கும், காட்டுக்குமாக அலைந்து கொண்டிருந்தாள்.

அவளுடைய நினைவெல்லாம் வரப் போகும் தீபாவளியைச் கற்றிச் கற்றி வந்தது.

பாலனுக்கு நல்ல துணிகள் இல்லை. அணிந்திருக்கின்ற சட்டை, கால் சராய், ஊசி நூல் தையல் போட்டுக் கிழிசல்கள் மறைக்கப் பட்டிருக்கின்றன.

வீட்டுக்கு ஒரே செல்லப் பிள்ளை அவன். “ஆண்டாள்! தண்ணியை ஊத்து” மருந்து அடித்தவன் சொன்னான்.

யோசனை கலைந்து வாளியில் தண்ணீர் ஊற்றினாள் ஆண்டாள்.

தீபாவளியும் நெருங்கி விட்டது. பாலன் நம்பிக்கையோடு இருக்கிறான்.

ஆண்டாளுக்குப் பயமும், கவலையும் பின்னிப் பிணைந்து சடுகுடு விளையாட்டுக் காட்டின.

வீட்டில் பாலன் நச்சரித்து அழத் தொடங்கி விட்டான். அவனோடு படிக்கின்ற மற்ற பையன்கள் புதுச்சட்டை, பட்டாசு எல்லாம் வாங்கி விட்டார்களாம்.

பாவம், ஆண்டாள், ஓர் உள் ஆடை கூட வாங்க முடியவில்லை, இல்லாமை அவளைச் சித்திரவதை செய்தது.

பாலனிடம் பணப் பற்றாக்குறையைச் சொன்னாள். அதையெல்லாம் சிந்திக்கின்ற வயசில்லையே அவனுக்கு. புதுச் சட்டைக்காக அழுதான் அவன்.

தெருவெல்லாம் தீபாவளிக்களை, முகங்களில் சிரிப்புத் தரும் களிப்பு

ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்ட துணிகளை மற்றவர்களிடம் காட்டிப் பெருமை பேசிக் கொண்டார்கள்.

அந்தக் கலகலப்பு ஆண்டாள் வீட்டில் இல்லை. அங்கே துயரம் வந்து குடியிருந்தது.

தட்டில் பேடட சோற்றைக் கூடச் சாப்பிடாமல் அழுத முகத்துடன் வெறும் கரையில் படுக்க பாலன் தூங்கிவிட்டான்.

ஆண்டாளும் சாப்பிடவில்லை. அவன் பக்கத்தில் படுத்திருந்தாள். அவளும் அழுது ஓய்ந்திருந்தாள். கன்னக் கதுப்பில் கண்ணீர் கட்டியிருந்தது.

அப்பா, அம்மா இல்லாத அவளுக்கு வெளியூரில் அண்ணனும், அக்காளும் இருக்கிறார்கள். நல்ல வசதியுடன் வாழ்கிறார்கள். ஆண்டாள் கணவனோடு இருந்தபோது, வந்து சொந்தம் கொண்டாடினார்கள். இப்போது யாரும் கண்டு கொள்வதே இல்லை. இதையெல்லாம் நினைத்து அழுது கலங்கிப்போய்க் கிடந்தாள் அவள்.

“பாலா” யாரோ கூப்பிடு கின்ற சத்தம். ஆண்டாள் கதவைத் திறந்து பார்த்தாள்.

தெரு விளக்கின் வெளிச்சத்தில் வாசலில் நின்றிருந்தவரின் முகம் நன்றாகவே தெரிந்தது.

ஆண்டாளுக்கு ஒரே ஆச்சரியம், சிரித்த முகமாக அப்துல் காதர் நின்றிருந்தார். இரண்டு கையிலும் பைகள்.

“அண்ணா, வாங்க”

அப்துல்காதர் வீட்டுக்குள் போனார். “இந்தாம்மா, இதை வாங்கி வை” அப்துல் காதர் சொல்லிக் கொண்டே பைகளை ஆண்டாளிடம் நீட்டினார்.

“என்னண்ணா, இதெல்லாம்…”

“ஒண்ணும் இல்லேம்மா, உனக்குச் சேலை, பாலனுக்குப் புதுச் சட்டை, கால் சராய்”

பைகளில் இருந்ததை யெல்லாம் ஆண்டாள் எடுத்துப் பார்த்தாள். புதுத் துணிகளுடன் பட்டாக, மத்தாப்பு, இனிப்புகள் எனப் பல வகைகள். விடே நிறைந்து விட்ட உணர்வு ஆண்டாளுக்கு.

அவள் கண்கள் கலங்கிவிட்டன. “ஆண்டாளு, என்னம்மா இது? எதுக்குக் கண் கலங்கறே”.

“இல்லேண்ணா, நீங்க ஒருத்தர்தான் எங்கக் குடும்பத்து மேல பாசம் வச்சிருக்கீங்க. எங்கச் சொந்த, பந்தம் யாருமே எங்களை நினைக்கிறதில்லே. கூடப் பிறந்த அண்ணனும், அக்காளும் எங்களை மறந்திட்டாங்க.”

“மறந்துட்டுப் போனாப் போறாங்க, போம்மா. நாங்க இருக்கோம், கவலைப் படாதேம்மா” “இவ்வளவு துணிக எதுக்கண்ணா”

“அம்மா, ஆண்டாளு, உன் கணவன் கண்ணனும், நானும் உயிருக்கு உயிராப் பழகினவங்க அது உனக்கே தெரியும் என் குடும்பத்துல வியாபாரம் இழந்து எனக்கு வருமானம் இல்லாத சமயத்தில் ரம்சான் பண்டிகைக்குக் கண்ணன்தான் எங்கக் குடும்பத்துக்கே புதுசாத் துணி மணி எல்லாம் எடுத்துக்கிட்டு வந்து வீடு தேடிக் கொடுத்து விட்டுப் போனான். பாவம்! அகால மரணம் அவனை அள்ளிட்டுப் போயிட்டுது. இப்ப எனக்கு வியாபாரத்துல நல்ல வருமானம் இருக்கம்மா. உனக்கும், பாலனுக்கும் தீபாவளிக்குப் புதுத் துணிகள் கொடுக்கச் சொல்லிப் ஃபாத்திமா இரண்டு மாசத்துக்கு முன்னமேயே சொல்லிட்டா”

“அண்ணா, ஃபாத்திமா அக்கா, பையன் இரஹீம் எல்லாரும் நல்லா இருக்காங்களா ?” “எல்லாரும் நல்லா இருக்கோம் பாலன் ‘நேரமே தூங்கிட்டானா ? வெறும் தரையில் படுத்துட்டான்.”

“ஆமண்ணா, இதோ, எழுப்பறேன். டேய் பாலா… பாலா…” ஆண்டாள் குதூகலத்துடன் அவனைத் தட்டி எழுப்பினாள்.

பாலன் கண்விழித்தான். அப்துல் காதர் அவனைப் பார்த்துச் சிரித்தார்.

“மாமா, எப்ப வந்தீங்க” என்றான் தூக்கக் கலக்கத்தோடு.

“இப்பத் தாண்டா, நல்ல தூக்கமா ?”

“பாலா இங்க பாரு ! மாமா உனக்கு வாங்கியாந்திருக்காருன்னு”

பாலன் பார்த்தான். ஆச்சரியப் பட்டான். அவனது முகத்தில் மகிழ்ச்சிச் சிரிப்பு.

“டேய் பாலா, நீயும், ‘அம்மாவும் மகிழ்ச்சியாகத் தீபாவளி கொண்டாடுங்க” என்று சொன்ன அப்துல் காதர் ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்துப் பாலனுக்குக் கொடுத்துவிட்டு ஆண்டாளைப் பார்த்து “நான் புறப்படுறேன்” என்றார்.

“இருங்கண்ணா, போகலாம்” என்று சொன்னவன் அவசர அவசரமாகக் காபி போட்டாள். காப்பிப் பொடி டப்பியை எடுத்தாள். அதில் ஒட்டிக் கொண்டிருந்த தூளைத் தட்டிப் போட்டாள். டப்பியில இருந்த ஒரு கரண்டி சர்க்கரையையும் சேர்த்துக் கலக்கினாள். பால் இல்லாத காபி.

அப்துல் காதர் அதைக் குடித்தார். காபி “சப்”பென்று இருந்தது. வீட்டு நிலைமை அவருக்குத் தெரியும். “காபி நல்லா இருக்கும்மா” மனம் அறியப் பொய் சொன்னார்.

படி இறங்கித் தெருவில் நடந்தார். ஆண்டாளும், பாலனும் அவரையே பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

தெரு விளக்கின் வெளிச்சத்தில் அவர் உருவம் விட்டுவிட்டுத் தெரிந்தது.

பாலனுக்கு அவசரம் புதுத் துணிகளைப் போட்டுப் பார்த்தான். பிறகு, கழற்றி மடித்து வைத்துக் கொண்டான்.

அவனுடைய மகிழ்ச்சி ஆண்டாளின் கவலையை விரட்டிவிட்டது. அவள் மனத்திலும் தீபாவளி கொண்டாட்டம் போட்டது.

– மனங்கவர் மலர்கள் , முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *