தண்ணீர்… தண்ணீர்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2015
பார்வையிட்டோர்: 11,619 
 

புலர்ந்தும், புலராத வைகறைப் பொழுதில் வழக்கம் போல எழுந்து, குளித்து, முதல் நாளே வேலைக்காரப் பெண் தொடுத்து வைத்த குண்டுமல்லிச் சரத்தை, மனைவி வேதாவின் படத்திற்கு மாலையாக இட்டு, இரு கரம் கூப்பி வணங்கினார் சிவராமன்.

பூஜையறையில் இருந்து அவர் ஹாலுக்கு வந்ததைப் பார்த்த சமையல்காரர் ஏழுமலை, டம்ளரில் நீராகரத்தோடு வர, “”நன்றி ஏழுமலை” என்று புன்னகையோடு கூறிக் கொண்டே வெளி வாசலுக்கு வந்தவர் கண்ணில், செடி முழுக்கப் பூத்திருந்த குண்டு மல்லிப் பூக்கள் பட்டதும் அவருடைய நினைவு முழுவதும் பழைய நினைவுகள் ஆக்ரமிக்கத் தொடங்கின.

அரசு அலுவலகத்தில் கிளார்க்காகப் பணியாற்றத் தொடங்கிய போதே சிவராமனுக்கும், வேதாவுக்கும் திருமணமாகிவிட்டது. அதன் பின்னர் பல பதவி உயர்வுகள் பெற்று அரசு அதிகாரியாக சிவராமன் ஓய்வு பெறும் வரையிலும் அவர் மனைவி வேதா வாயைத் திறந்து தனக்காக எதுவும் கேட்டதில்லை. இரட்டைப் பிள்ளைகளாக ஹரீஷ் – ஹரிதா பிறந்து, வளர்ந்து, இன்ஜினீயரிங் முடிக்கும் போதுதான் சிவராமன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றார்.

இன்ஜினீயரிங் முடித்த கையோடு, நல்ல வரன் வரவே ஹரிதாவுக்குத் திருமணத்தை முடித்து விட்டார். கண் நிறைந்த கணவனோடு லண்டனில் சந்தோஷமாகக் குடும்பம் நடத்த, ஹரீஷ்க்கும் பெங்களூரில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்துடன் வேலை கிடைத்தது.

அது வரையிலும் வாயைத் திறந்து எதுவும் கேட்காத வேதா, ஒரு நாள் காலை, சிவராமனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “”என்னங்க, நான் ஒரு விஷயம் சொல்றேன், முடியும்னா, செய்யுங்க, இல்லேன்னா கோபப்படாதீங்க” என்றாள். அட, இதென்ன! புதுசா இருக்கே. என்று ஆச்சரியப்பட்ட சிவராமன், “”சொல்லும்மா… என்ன வேணும்? நகையா? புடவையா? ” என்று கேட்டார் பரிவாக.

“”இல்லங்க… இத்தனை நாள்தான் உங்க வேலை, பிள்ளைங்க படிப்பு, கல்யாணம்னு இந்த நகரத்துச் சந்தடியில காலம் தள்ளிட்டோம். இனிமேலாவது அமைதியா, இயற்கைச் சூழலோட இருக்கிற இடத்தில் வாழ்க்கை நடத்தணும், நமக்காக நாம் வாழணும்… அதுக்கு…” என்று நிறுத்திவிட்டு சிவராமன் முகத்தைப் பார்க்க, “”ம்… சொல்லு… என்ன பண்ணலாம்? என்று சிவராமன் தூண்டிவிட,

“”நம்ம பக்கத்து வீட்ல இருக்கிறவங்களுக்கு ஏதோ அவசர பணத்தேவையாம். ஊருக்கு வெளியே இருக்கிற அவங்க தென்னந்தோப்புல, மெயின் ரோட்டுக்குப் பக்கமா இருக்கிற ஒரு ஏக்கரை மட்டும் பிரிச்சு விக்கிறாங்களாம். பெரிய கிணறும் இருக்குதாம்… நமக்காகன்னா கொஞ்சம் விலையும் குறைச்சுக்கிறேன்னு சொல்றாங்க” என்று சொல்லிவிட்டு அடுப்படிக்குப் போய்விட்டாள்.

வேதா விஷயத்தை ஆரம்பித்த நேரம்… தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட நேரமாக இருந்திருக்கும் போல. இவர்கள் கேட்ட விலைக்கே பேரம் படிய, வேதாவின் நகைகளை விற்ற பணம், டவுனில் அவர்கள் குடியிருந்த வீட்டை விற்ற பணம் எல்லாம் சேர்த்து, தோப்பை வாங்கி, அதில் முன்பிருந்த வீட்டை இடித்து இவர்கள் தேவைக்கு வசதியாகக் கட்டி ஒரு நல்ல நாளில் பண்ணை வீட்டுக்கு குடி போனார்கள்.

அங்கு போனதும் வேதாவுக்கு தலை, கால் புரியவில்லை. வீட்டுக்கு முன்புறம் பூச்செடிகள் கண்ணைப் பறிக்க பின்புறம் காய்கறி, கீரைப் பாத்திகள் பச்சைப் பசேலென்று மனதை அள்ளியது. அதிலும் செடி கொள்ளாமல் பூக்கும் குண்டு மல்லிப் பூக்கள் கண்களைக் கட்டிப்போடும். அந்தப் பூச்செடி மேல்தான் வேதாவுக்குக் கொள்ளைப் பிரியம்.

நாட்கள், ஆண்டுகளாக உருண்டோட ஹரீஷ்க்கு அவனுடைய அத்தை மகள் ஜனனியை மணம் முடித்தனர். கனடாவில் ஹரீஷ்க்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க, மனைவியோடு பறந்துவிட்டான். அப்புறமென்ன… தான் விரும்பியபடி வாழ்க்கையை அனுபவித்து விட்டோம் என்ற திருப்தியோ… இல்லை, கடமைகள் முடிந்துவிட்டன, இனி எதற்காக இருக்க வேண்டும் என்று நினைத்தோ… ஒரு நாள் மாலை குண்டு மல்லிப் பூக்களைப் பறித்து வந்து தொடுத்துக் கொண்டிருக்கையில் மயங்கிச் சாய்ந்தவள் தான்… பின்னர் வேதா எழுந்து கொள்ளவே இல்லை.

தாயின் சாவுக்கு வந்த மகன், மகள் இருவரும் அரும்பாடுபட்டு அழைத்தும் அவர்களோடு செல்ல மறுத்துவிட்டார் சிவராமன். “” உங்கம்மா ஆசைப்பட்டு வாங்கிய இந்த இடம்தான் எனக்கு சொர்க்கம். உங்களால முடிஞ்சப்போ என்னை வந்து பாருங்க… வாரம் ஒரு முறை போன் பண்ணுங்க. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்” என்று அவர்களை வாழ்த்தி வழியனுப்பிவிட்டு, சமையலுக்கு ஏழுமலையை ஏற்பாடு பண்ணிக் கொண்டார்.

நகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே போக, சிவராமனின் தோப்பைச் சுற்றி இருந்த விளைநிலங்களைப் போட்டி போட்டுக் கொண்டு ப்ரமோட்டர்கள் வாங்கி வீட்டு மனைகளாக்கிக் கொண்டிருந்தனர். நடுவே பச்சைப் பசேலென்று சிவராமனின் தோப்பு ஜொலிக்க… சுற்றிலும் கான்க்ரீட் மரங்களாகக் கட்டிடங்கள் முளைத்தன. சிவராமனின் நிலத்திற்கும் அதிக விலை கொடுப்பதாக ஆசை காட்டி, கெஞ்சி, மிரட்டிப் பணிய வைக்க பலர் முயற்சித்தும் சிவராமன் அசைந்து கொடுக்கவில்லை. இறுதியில் கனடாவில் இருக்கும் ஹரீஷின் மொபைல் எண்ணை எப்படியோ கண்டுபிடித்து அவனுக்கும் ஆசை வலை விரித்தார்கள் ப்ரோமோட்டர்களும், புரோக்கர்களும்.

“”அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன்” என்று அவர்களுக்குச் சுருக்கமாய்ப் பதிலளித்துவிட்டு, சிவராமனிடம் விரிவாகப் பேசினான் ஹரீஷ். “” தோப்பை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, அந்தத் தொகையில் கனடாவில் வீடு வாங்கிக் கொள்ளலாம். நீங்களூம் எங்களுடன் வந்து இருந்து கொள்ளுங்கள்” என்று எத்தனையோ கூறியும்…

“”நமக்காக நாம் வாழணும்னு ரொம்பவே ஆசைப்பட்டா உங்கம்மா… ஆனா அவளால ரொம்ப நாள் அந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியல… நான் என்னோட மிச்ச வாழ்க்கையை மத்தவங்களுக்காக வாழ விரும்பறேன். அதுல குறுக்கிட உனக்கு எந்த உரிமையும் இல்லை. எனக்குப் பிறகு இந்த தோப்பை நீ என்னவேணா பண்ணிக்கோ… இது விஷயமா இனிமேல் என்னைத் தொந்தரவு பண்ணாதே” என்று முடிவாகச் சொல்லி விட்டார்.

அந்த வருடம் கோடை காலத்தில் வெயில் வெளுத்து வாங்க, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, மக்கள் குடி தண்ணீருக்கு ஆலாய்ப் பறக்க… சிவராமனின் தோப்பைச் சுற்றி இருந்த அபார்ட்மெண்ட்களில் வசித்தவர்கள் குடிக்கவும், மற்ற தேவைகளுக்கும் லாரி மூலம் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் வசதியானவர்கள், பணம் கொடுத்து எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் ஏழை ஜனங்கள் குடிக்கக் கூடத் தண்ணீர் இல்லாமல் அவஸ்தைப்படுவதைக் கண்ட சிவராமன், ஏழுமலையை அழைத்து, “” ஏழுமலை, நம்ம கிணத்து தண்ணி இளநீர் மாதிரி சுவையான தண்ணீர். தினமும் ஆளுக்கு இரண்டு குடம் தண்ணீர் இலவசமாகத் தரப்படும்னு போர்டு எழுதி வாசலில் மாட்டிவை” என்று உத்தரவிட்டார். போர்டு எழுதி மாட்டியதும் குவிந்தது மக்கள் கூட்டம், தலைச்சுமையாகவும், சைக்கிளிலும் சாரி, சாரியாக மக்கள் குடங்களுடன் வந்து போக, ஒரே கோலாகலம்தான். அப்போதுதான், “”அப்பாவிடம் நேரடியா போய் ரெண்டுல ஒண்ணு கேட்டுட்டு வரேன்” என்று ஜனனி எவ்வளவு தடுத்தும் கேளாமல் குபீரென புறப்பட்டு வந்த ஹரீஷ், தோப்பில் கூடி இருந்த ஜனங்களைப் பார்த்து திகைத்துப் போனான். அவனைக் கண்ட மக்கள் “”சின்ன ஐயா, உங்கப்பா எங்க தவிச்ச வாய்க்குத் தண்ணி தந்த மகராசன்… அந்த புண்ணியம் உங்களைத் தலைமுறை, தலைமுறையா நல்லா வாழவைக்கும், நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருப்பீங்க” என்று வாழ்த்தியதைக் கேட்டு, அப்பாவுக்கு முன்னால் தலைகுனிந்து நின்றான் மகன். “”இருக்கும் வரை, பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும்” என்ற அப்பாவின் வார்த்தைகள் நினைவுக்கு வர, “”என்னை மன்னிச்சிடுங்க அப்பா… கூடிய சீக்கிரம் நானும் இந்தியாவுக்கு வந்து உங்களுக்குத் துணையாய் இருப்பேன்” என்றான்.

மகனை மார்போடு அணைத்துக் கொண்டார் சிவராமன்

– எஸ்.கே.விஜி (January 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *