கஜேந்திர கன பாடிகள்.!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 5,359 
 
 

நான் நாராயணன்..! நாணா.! வசிப்பது நாக்பூரில் .! அப்பாவுக்கு நாக்பூரில் உத்யோகம்.! பேரு தர்மராஜ்..! இந்திப் பள்ளிக்கூட வாத்தியார் .! அம்மா ஞானம் .! அப்பா அம்மாவின் ஒரே புள்ளையாண்டான் நான்.! அப்ப உத்யோகமா இருந்த பள்ளிக்கூடத்தில்தான் நானும் படிச்சேன்.! ஆனா சொந்த ஊரு மேலக்கோட்டைன்னு ஒரு கிராமம்..! தஞ்சாவூர் பக்கத்துல…. “மேப்புல தேடாதீங்க.. கிடைக்காது..” அவ்வளவு சி்ன்ன கிராமமா இருந்தாலும்.. கிராமம்னு சொன்னா உங்க கற்பனையில உதிக்கிற மாதிரி ஆறு, வாய்க்கா, தோப்பு,தொரவு ..ஒரு குட்டி ரயில்வே ஸ்டேஷன் அதில நிக்கிற ரெண்டு பாசஞ்சர்னு எல்லாமே இருக்கும்..! தஞ்சாவூர் டூ நாகப்பட்டிணம் மெய்ன் ரோட்டுக்கு சித்த உள்ளடங்கி இருக்கர்தால வாகனப் போக்குவரத்து அதிகம்.. கடை கண்ணியும் அதிகம்…!

கிராமத்துல இருந்தது என்னோட ரிட்டயர்டு ரயில்வே க்ளார்க்கு தாத்தாவும் .. முதுகு வளைஞ்ச பாட்டியும்..பாவம்..! குனிஞ்சு குனிஞ்சு குமுட்டி அடுப்ப விசிறி உட்டே.. முதுகு கொஞ்சம் குனிஞ்சு போய்ட்டா..! நல்லா சமைப்பா..வெண்டக்கா வெத்தக் கொழம்பும் ,நெய்விட்ட பருப்பு சாதமும் , உருளில செய்யர மைசூர் ரசமும் இன்னும் என் மூக்குல கம கம ன்னு மணத்துகிட்டிருக்கு…! பாட்டியோட கைமணம்தான் அம்மாவுக்கும்.. ஆனா உருளி போய் எவர்சில்வர் பாத்திரம் வந்ததால ரசத்துல கொஞ்சம் மணம் கம்மிதான்..!

தாத்தா அப்படியில்ல.. ஜம்முனு இருப்பார்.. ருத்ரமும், விஷ்ணு சஹஸ்ரநாமமும் சதா ஜெபிக்கிற வாராச்சே..! ஆரோக்ய தேஹம்..! ரயில்வே ல ரிட்டயர் ஆனப்புறமும் சும்மா இல்லாம வைதீஹத்துக்கு போவார்.! பக்கத்துல இருக்கிற காமாட்சியம்மன் கோயிலுக்கு சம்பளமில்லாம குருக்களுக்கு ஒத்தாசையா டெய்லி சாயந்திரம் போவார்.. கோயிலுக்கு பக்கத்திலயே வீடுங்கரதால நாலே எட்டுதான்..! கோயில்தான் அவருக்கு தினமும் நாலு பேருடன் அரட்டை அடிக்கிற காஸ்மோபாலிட்டன் க்ளப்பும் கூட..! என்னையும் டெய்லி கூடவே கூட்டிண்டு போரது அவருக்கு வாடிக்கை..!

வருஷத்துக்கு ஒரு தடவை ஆன்யுவல் லீவுக்கு நாங்க தவறாம ஊருக்கு வர்ரது வழக்கம்…தாத்தா ஒரு பத்து நாள் முன்னாடியே நாக்பூர் வந்திடுவார்.. திரும்ப போகும் போது என்னையும் அம்மாவையும் பாஸ்ல ரயில்ல கூட்டிண்டு வந்திடுவார்..! ஒரு மாசத்துக்கு நானும் அம்மாவும் இங்கதான் இருப்போம்! அப்பா தனி ஜாகை நாக்பூர்ல.. நடுவில முடிஞ்சா ஒரு தடவ வந்துட்டுபோவார்..!

அம்மாவுக்கு நெஞ்சு சளி தொந்திரவு இருக்கு.. இளைப்பு மாதிரி வரும்.. அதான் தாத்தா தனக்கு தெரிஞ்ச ஒரு ஆயுர்வேத மருத்துவர்கிட்ட வருஷா வருஷம் கூட்டிண்டு வந்து காடடுவார்.! கிராமத்து காத்துக்கும்.. தண்ணிக்குமே அம்மா அந்த ஒரு மாசம் ஜம்முனு இருப்பா..!போகும்போது நெறைய பாட்டில் பாட்டிலா மருந்து வாங்கி அனுப்புவார் தாத்தா.!

கிராமத்துல இருந்த ஒரு மாசமும் தாத்தாவோட ஆத்துல தான் குளிப்பேன்..! அம்மாவும் கூடவே வருவா.. துணிலாம் தோய்க்க..!தாத்தாவிற்கு நீச்சல் நன்றாகத் தெரியும்..! ” நாணா.! வரயாடா.. நீச்சல் சொல்லித்தர்ரேன்”னு கூப்பிடுவார்.!

” நன்னா இருக்கு போங்கோ.! நாலாவது படிக்கிற புள்ளைக்கு நீச்சல்தான் முக்கியமா ?” ம்பா அம்மா.!அவ பயம் அவளுக்கு.!

ஆனா தாத்தா கேக்க மாட்டார்.. அப்ப அப்ப கையில என்ன ஏந்திட்டு ஆழமில்லாத எடத்துல கையையும் காலையும் அடிக்க விட்டு பயத்தோடு என்னை ரசிக்க விடுவார்..!

தாத்தா கடை கண்ணிக்கு போனா தனி மரியாதை.! இருக்காதா பின்ன.! ரயில்வே ஆபீசராச்சே..? கோயில் வேற.! பூஜை புனஸ்காரம்னு அஷ்டாவதானியாச்சே.. மரியாதைக்கா பஞ்சம்..? காய்கறிலாம் தானாவே வீட்டுக்கு வந்திடும்..!

கோயில்ல நான் ரசிக்கிற ஒரு ஆள் இருக்காங்க.! சொல்லப்போனா அவங்கள பாக்கத்தான் நான் ஊருக்கு வர்ரதே..!

ஜமுனா..!

ஜம்முனு நெத்தி நிறைய பொட்டோட …. முகமெல்லாம் ரோஸ் ரோஸா தோல் கலர் மாறி இருக்கும்..!கை அலம்பர குழாயடிப்பக்கம் நிப்பாங்க… உயரமா ஏழு , எட்டு அடி உயரம் இருப்பாங்க. கால்ல பெரிய சங்கிலி போட்டு கட்டியிருப்பாங்க. ரொம்ப யோசிக்காதீங்க.. ஜமுனாதான் அந்த காமாட்சியம்மன் கோயில் யானை.! என்னடா இவ்வளவு சின்ன ஊர்ல இருக்கிற கோயிலுக்கு யானையான்னு கேக்காதீங்க..! பெரியவா ஒரு தடவ இந்த கோயிலுக்கு வந்தப்ப தானமா தந்த யானையாம் இது.!

நான்லாம் ஜமுனாவை பாக்கவே கோயிலுக்கு போவேன்.. தாத்தா ஃப்ரெணட் ஸ் களோாட அரட்டை அடிக்கும் போதும், பூஜை செய்ய உள்ள போய்ட்டாலும் நான் நிக்கிற இடமென்னவோ குழாயடிதான்.! கேசவன் தான் ஜமுனாவைப் பாத்துக்கர மாமா! பக்கத்திலயே நிப்பார்.. ஜமுனா முன்னாடி நிறைய எலை தழையெல்லாம் போட்டு வெச்சிருப்பாங்க..பெரிய சலங்க சத்தத்தோட சலங்.. சலங் குனு அந்த எலயெல்லாம் துதிக்கையால எடுத்து கால்ல ஒரு அடி அடிச்சு உதறிட்டு , வாய்ல போடர அழகே அழகு.. நானே வாயப் பொளந்து கி்ட்டு பார்ப்பேன்..! அந்த பெரிய வாய்க்குள்ள விழுந்திட்டா நேரா ஜமுனாவோட வயித்துக்குள்ள போரத பயத்தோட கற்பனை செஞ்சு பார்ப்பேன் .!

கோயிலுக்கு வர்ரவங்க நெறைய பேர், குழாயடில கை காலை அலம்பிட்டு, ஜமுனா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுத்தான் உள்ள போவாங்க.!

கையில வாழப் பழமோ.. நாலணா.. காலணாவோ எது இருக்கோ அத ஜமுனா கிட்ட நீட்டுவாங்க.! அதை வாங்க துதிக்கையை ஜமுனா நீட்டினா பயப்படாத ஆளே கிடையாது.. ஒன்னு கை நடுங்கி காசு கீழ போட்ருவாஙக.. இல்லன்னா ஆளே ஓடிப் போய்டுவாங்க.!

அப்படி ஜமுனா மேல நம்பிக்கை இல்லாம ஏன் பக்கத்துல வரணும்.? அவங்க ஆசீரவாதம் வாங்க..?நான்லாம் பயப்பட மாட்டேன்.!

ஆரம்பத்துல என்னை ஜமுனா பககத்துல சேர்க்கல..!” யாரரா இவன் பொடிப்பையன்? புதுசா இருக்கானே”ன்னு நெனைச்சிருக்கலாம்! ஆனா பூஜைல கிடைக்கிற வாழைப்பழம் தேங்காயெல்லாம் நானே ஓடிப்போய் தாத்தா கிட்ட இருந்து புடிங்கிட்டு வருவேன்..அர்ச்சனை தட்டோட போரவங்ககிட்ட யானைக்கு கேட்டு வாங்கிடுவேன்..! நேரா ஜமுனா கிட்ட வந்து நீட்டுவேன்!

ஆனா கேசவன் மாமா பயப்படுவார்.. “வேணான்டா நாணா யான பக்கத்துல வராதடா.. ஒரு வேள மாதிரி இருக்காதடா”ன்னு பொலம்புவாரு.. அவருக்கு தாத்தாவ நெனச்சு பயம்!

ஆனா நான் பயப்பட மாட்டேன்.. ஆரம்பத்துல கொஞ்சம் பட படன்னுதான் இருந்தது..கேசவன் மாமா என்ன புடிச்சிப்பாரு..! நான் கையில வாழப்பழத்த வெச்சுகிடடு நீட்டுனா , ஜமுனா என்ன அலட்சியமா உத்து பாக்கும்..”இவனே ஒரு பொடிப்பய.. இவன் கையில வேற இவன மாதிரியே பொடியா ஒரு பழம்பாத்தியா”ன்னு நெனைக்கும் போல..! ஆனா நான் ஜமுனா பழத்த வாங்காம விட மட்டேன்.. கேசவன் மாமா ஜமுனா கிட்ட ஏதோ சொல்லுவார்.. “தா… தோ..” னு அதோட பாஷை போல்ருக்கு.. கடைசில ஜமுனா பழத்த ஒரு தடவ மூந்து பாத்துட்டு வாங்கிடும்..! துதிக்கை என் பக்கத்தல வரும் போது புஸ்ஸூ புஸ்ஸூனு மூச்சு உடரது பயமா இருககும் லைட்டா கையெல்லாம் தண்ணியாய்டும்..! ட்ராயர்ல தொடைச்சிப்பேன்.!

ஆனா போகப் போக ஒரு மாசத்தல ஜமுனா என் கூட நல்லா பழகிடுச்சு. ! நான் வந்தாலே கொஞ்சம் காலெல்லாம் ஆட்டம் அதிகமா இருக்கும்.. நான் சோளத் தட்ட..தென்ன இலையெல்லாம் பின்னாடி தோட்டத்துல இருந்து.. கொண்டுவந்து போடுவேன்.. அதாவது கேசவன் மாமா கொண்டு வரும் போது நானும் கூடவே அணில் பாலம் கட்டின கதையா கொஞ்சம் கொண்டு வருவேன்..!

போகப் போக ஜமுனா கிட்ட போய் தொட்டா கூட எனக்கு பயமேயில்ல.. ஆனா தாத்தாவும் கேசவன் மாமாவும்தான் பயப்படுவாங்க..!

ஜமுனா சாணி போடும்போது மூச்சா போகும்போது தாத்தா அதுல போய் நிப்பார்..என்னையும் நில்லுடாம்பார்.. சூடா நல்லா இருக்கும் காலுக்கு..!

தாத்தாவும் ஜமுனா வும் நல்ல ப்ரெண்டு ! தாத்தா ஜமுனா கிட்ட நிண்டுன்டு ஏதோ ஸ்லோகம்லாம் சொல்லுவார்..காத விரிச்சிண்டு அதுவும் கேட்கும்..!

தினம் ஜமுனா வ குளிப்பாட்ரதே தாத்தாவும்கேசவன் மாமாவும்தான்..! நானும் அந்த கைங்கர்யததுல சேர்ந்துண்டுட்டேன்.. பச்ச ஹோஸ் ல நான்தான் தண்ணி அடிப்பேன் ஜமுனா மேல.! நலலா தொப்பைய காட்டிண்டு நிக்கும்.. காதுகிட்ட அடிச்சா . “ப்ரீரீ”ன்னு கத்தும்.. கண்ல தெறிக்கும்போல.!? சில சமயம் வாய்க்காலலயும் போய் குளிப்போம் .. ஆனா கேவன் மாமாதான் ஜமுனா வ குளிப்பாட்டுவார்.. வாய்க்கால் நிறைய தண்ணி ஓடும்கரதால நான் கரையில உக்காந்து வேடிக்கை பார்ப்பேன்..! கேசவன் மாமா ஜம்முனு ஜமுனா மேல உக்காந்து வருவார். ஆனா தாத்தா என்ன யான மேல ஏற விடல. ஸ்கூட்டர்லதான் வாய்க்காலுக்கு போவோம்..! என்ன பயமோ தெரீல..?!

அந்த மாசம் ஏதாவது விசேஷம்னா நல்ல விபூதி குங்குமம்லாம் பளபளக்கும் ஜமுனா மேல .. நிறைய பேர் பழம் தருவாங்க.. அதாவது நான் நிறைய பேரிடம் இருந்து பழத்த பிடுங்கி ஜமுனாகிட்ட தருவேன்.!

லீவு முடிஞ்சு ஊருக்கு வரும்போது அம்மா ஜமுனா முன்னாடி தரையில விழுந்து நமஸ்காரம் பண்ணுவா.. நானும் நமஸ்காரம் பண்ணுவேன். போய்ட்டு வர்ரேன்னு சொல்லுவேன்.!? என்னமோ புரிஞ்சா மாதிரி அம்மாவையும் என்னையும் தலையில ஆசீர்வாதம் செஞ்சிடடு” ப்ப்ரீரீ” னு ஒரு தடவ சின்னதா கத்தும் ஜமுனா.!

அந்த வருஷம் ஊருக்கு வர முடியல.! தா்தா ஏனோ வந்து கூட்டிண்டு வரல..! ஆனா அதுக்கு அடுத்த வருஷம்தான் கிராமத்துக்கு வந்தோம்.. ஆனா இந்த தடவ நெறைய மூட்ட முடிச்சோட வந்தோம்… அம்மா நெறைய இருமினா..உடம்புக்கு ரொம்ப முடியல போல்ருக்கு.. அதான் தாத்தா அப்பாகிட்ட சொல்லி “இங்கயே ஒரு ரெண்டு வருஷம் இருக்கட்டும், உடம்ப சரி பண்ணி அனுப்பரேன்”னு அப்பாகிட்ட தாத்தா சொல்லிட்டார்.. அப்பாவும் ” முடிஞ்சா நானும் வீட்ட வாடகைக்கு விட்டுட்டு ஊருக்கே மாத்தல் வாங்கிண்டு வர்ரேன்”னு சொன்னார் !

ஊருக்கு வந்த உடனே .. நான் ஓடிப்போய் நின்ன இடம்… அதான் உங்களுக்கே தெரியுமே..?! கோயில் குழாயடிதான்..! ஜமுனாவுக்கு என்ன நன்னா அடையாளம் தெரிஞ்சிடுச்சு.. வழக்கம் போல” ப்ப்ரீரீ” ன்னு ஒரு சத்தம்…துதிக்கையால ஒரு முகர்நது பார்த்தல்… என்டா வாங்கிண்டு வந்த எனக்குனு ஒரு விசாரிப்பு..நான் பாட்டி பூஜ ரூம்ல வெச்சிருந்த விளாம்பழத்த எடுத்து ஜமுனாகிட்ட நீட்டினேன்..!

கேசவன் மாமாவக் காணும்..! வந்தார் அஞ்சு நிமிஷத்துல கூடவே வந்தவனப் பாத்துதான் எனக்கு ஆச்சர்யம்.!

குட்டியா தலைய ஆட்டிண்டு வந்தவன் தான் ஜம்பு ..! பாத்தியாடா இவன்தான் ஜம்பு .. ஜமுனாவோட குட்டி இப்பதான் கொஞச மாசம் முன்னாடி பொறந்தான் என எனக்கு ஜம்புவை அறிமுகம் செஞ்சு வெச்சார் கேசவன் மாமா..! ஜமுனாவும் சந்தாஷமா… “பாத்தியாடா குட்டிப்பையா என் பையன ? எப்படி இருக்கான் சொல்லு”ன்னு கேட்ட மாதிரி இருந்தது!

என்னப் பாத்த உடனே ஜம்பு அம்மா கிட்ட ஓடிட்டான்..! காலுக்கு நடுவில போய்ட்டான்.. நான் வேற இருந்த ஒரு விளாம்பழத்தையும் ஜமுனாகிட்ட குடுத்துட்டேன்..!

எனக்கு ஜம்புவ பாக்க பாக்க ஒரே ஆச்சர்யம்.. குட்டி குட்டியா கண்ணு சின்னதா தும்பிக்கை.. கம்பி கம்பியா மண்டைல நீட்டிண்டு முடி.. படு தமாஷா இருந்தான் ஜம்பு..!

ஜமுனா கிட்ட கேட்டேன்..”பாத்துண்டு நிக்கிறியே..? என்ன பத்தி சொல்லேன்.! என்ன ஃப்ரெண்டு பண்ணி விடேன்”னு கேட்டேன் ஜமுனாகிட்ட.. !

உடனே உள்ள ஓடிப்போய் குருக்கள் மாமாகிட்ட ஒரு வாழப்பழத்த வாங்கிண்டு நேரா ஜம்பு கிட்டதான் ஓடினேன் ! இனிமே என் டார்கெட்டு ஜம்புதான்.. ஜமுனா இல்ல !

நேரா போய் வாழப் பழத்த நீட்டினாலும் ஜம்பு வாங்கிக்கல.. சின்னப் பையன்தானே.? பயந்திருப்பான்…” ஏன்டாப்பா உங்கம்மாவப் பாத்து ஊர் பயப்படாததையாடா என்னப் பாத்து நீ பயப்டர?” ன்னு நெனைச்சுண்டேன்..!

இதையெல்லாம் கேசவன் மாமா வும்.. ஜமுனா வும் பாத்துண்டுதான் இருந்தாங்க.. ஆனா யாரும் எனக்கு ரெகமண்ட் பண்ல..! இருக்கட்டும் நானே பாத்துக்கறேன்..!

மறு நாள் ஞாயத்துக்கிழமை காலைல நேரா கோவிலுக்கு தான் போனேன்.. கேசவன் மாமா வாங்க ஜம்புவ இப்பவே குளிப்பாட்டலாம்னு ஹோஸ் பைப்ப வெச்சுண்டு நின்னேன்..!

மாமா என்ன திட்டினாரு.. நேத்துதான்டா குளிச்சுது.. சின்னக் குழந்தை டா டெய்லி குளிப்பாட்ட வேணாம்னார்.. நான் கேக்கவேயில்ல..! சடார்னு குழாயத் தொறந்து தண்ணிய ஜம்பு மேல அடிச்சேன்… மூச்சு தெணறின்டு அவன் சந்தோஷமா காதையும் காலையும் ஆட்டிண்டு நல்லா உடம்ப காட்ட ஆரம்பிச்சிட்டான்.. வழி்க்கு வர்ராம் பாத்தீங்களா..! நல்லா தேங்கா நாறை வெச்சு லைப்பாய் சோப்ப போட்டு தேய்ச்சு தேய்ச்சு விட்டேன்.. கையில குத்தினது தேங்கா நாறில்ல.. ஜம்புவோட கம்பி கம்பியா முடிதான்..!

ஜமுனா வுக்கும் ரொம்ப சந்தோஷம்.. பையனுக்கு விளையாட தோஸ்த் கிடைச்ச மகிழ்ச்சிதான்..!

அதுல இருந்து ரெண்டு வருஷமும் எனக்கு ஜம்புதான் தோஸ்த்.. பொங்கல் சீசன்ல கட்டு கட்டா கரும்பு வெட்டி போடரது.. நெத்தில படம் வரைஞ்சு விடரது.. விபூதி இட்டு விடரது ன்னு எலலாமே நான்தான்.. கேசவன் மாமா வ ஜம்பு கிட்ட அண்ட விட மாட்டேன்.. ஸ்கூல் ..ஹோம் ஒர்க் போக மத்த சமயம் பூரா நான் கோயில் குழாயடிலதான் ஜாகை..! ஜம்பு வாய்க்காலுக்கு கூட்டிண்டு போகும் போதெல்லாம் …அடியேன் பெரிய ராஜராஜ சோழன் கணக்கா ஜம்பு மேல உக்காந்து போறது வழக்கம்..! கேசவன் மாமா கிட்ட இருந்து நெறைய யான பாஷை லாம் கூட நான் கத்துண்டுட்டேன்…. ! தாத்தா சந்தோஷமா சிரிப்பார்..! “ஏன்டா நீயென்ன ..! காத்தவராயனா.. டார்ஜானா.. யான கூட இவ்ளோ நெருக்கமா இருக்கியே” ம்பார்.!

அம்மாவுக்கும் இப்பெல்லாம் உடம்பு மெலிய ஆரம்பிச்சிடுச்சு..நெஞ்ச எலும்பெல்லாம் தெரிய.. சதா சர்வ காலமும் இருமிண்டே இருப்பா..! ஜமுனாவுக்கும்தான் வயசாய்டுச்சுன்னு கேசவன் மாமா.. தாத்தாலாம் சொன்னாங்க..! நல்லா ஜம்முனு வளர்ந்துண்டு வந்தது நானும்.. ஜம்புவும்தான்.! நானும் தெனமும் இல தழையில இருந்து பாட்டி செய்யர வெண்டக்கா வெத்தக் கொழம்பு வரைக்கும் ஜம்புவுக்கு தருவேன்.. வெத்தக் கொழம்பு ரசம் சாதம்னு நான் உருட்டி உருட்டி குடுத்தா நன்னா வாயப் பொளந்துட்டு திம்பான்..! குருக்கள் மாமா “மைசூர் ரசத்த நன்னா சப்பு கொட்டிண்டு திங்கரத பாரு” ன்னு ஜம்புவ கிண்டல் செய்வார்..!

இப்படியே போச்சு வாழ்க்கை.. அப்பாவும் அடிக்கடி வந்து பாத்துண்டு போவார்.. ஆனா அவர் நெனைச்ச மாதிரி ட்ரான்ஸ்பர் கிடைக்கல.. தாத்தாவும் அம்மாவுக்கு தவறாம வைத்தியர்ட்ட கூட்டிண்டு போவார்..இப்பெல்லாம் அரசாங்க ஆஸ்பத்திரிக்கும் அடிக்கடி போறோம்..!

நான் பத்தாவது முடிச்ச உடனே இன்ட்டர் பண்ணனும் னு அப்பா என்னையும் அம்மாவையும் நாக்பூருக்கே கூட்டிண்டு போரேன்னுட்டார்..! இங்க நல்ல காலேஜ் வசதியில்ல. திருச்சி ல போய் தங்கி படிக்கர்துக்கு பதில் எங்கூடவே இருக்கட்டும்.. ஞானத்தையும் நானே பாத்துக்கரேன்னுட்டார்…. தாத்தா பாட்டிக்கும் ரொம்ப வயசாரதே.. எத்தன நாளைக்கு அம்மாவ பாத்துக்க முடியும்..? பாவம்.!

ஊரு்கே போகும் போது நான் அழுத அழுகை யப் பாத்து பாட்டியே கண் கலங்கிட்டா.. பேராண்டி தன்ன விட்டு போக இப்படி கலங்கரானேன்னு..! “கவலப்படாதடா பாட்டி அடிக்கடி வந்து பாத்துக்கரேன்”னு ஆறுதல் சொன்னா.. அதுக்கு தாத்தா.. “அடிப்போடி இவளே.. அவன் அழரது நம்மள நிசை்சு இல்ல… ஜம்புவ நினைச்சு”ன்னு சொன்னதும் அம்மாவுக்கு அந்த இருமல்லயும் சிரிப்பா வந்தது…!

“வாடா கோயிலுக்கு போய்ட்டு வரலாம்..” னு அம்மா கூப்டா..!

நான் குடு குடுன்னு சமையலறைக்கு போய் பாட்டி ரயிலுக்கு செஞ்சு வெச்சிருந்த வெத்தக் கொழம்பு சாத டப்பாவ கையில எடுத்துண்டு அம்மா கூட இல்ல அம்மா வுக்கு முன்னாடி கோயிலுக்கு ஓடிப்போனேன்..!

நேரா குழாயடிக்கு போனதும்.. அம்மாவும் புள்ளயும் வால ஆட்டினாங்க.. ஜம்பு உடனே எம்பக்கமா வந்தான்… கையில வெச்சிருந்த வெத்தக் கொழம்பு சாதத்த பிசைஞ்சு உருண்ட பண்ணி கொடுக்க ஆரம்பிச்சேன்.. முக்கா வாசி தின்னது ஜம்புதான்…!

அம்மா வழக்கம் போல ஜமுனா வுக்கு நமஸ்காரம் பண்ணினா. நானும் விழுந்து நமஸ்காரம் செஞ்சேன்..!

கேசவன் மாமா கிட்ட போய்ட்டு வர்ரேன்னு சொல்லிட்டு.. ஜம்புவ திரும்பி பாக்கும்போது எனக்கு அழுகை அழுகையா வந்தது..! அம்மாவ மட்டும் ஊருக்கு அனுப்பிடலாமான்னு ஒரு கணம் யோசிச்சேன்.. ஆனா எனக்கு காலஜ் போகணும். அப்பா கூட இருக்கணும்னு யோசன வந்ததும் ஊருக்கே போய்டலாம்னு தோணித்து..!

ஜம்புவ ஆசையா தடவிக் குடுத்துட்டு நெத்தில ஒரு முத்தம் குடுத்துட்டு “போய்ட்டு வரண்டா..சீக்கிரமா வந்துர்ரேன்.. கோச்சுக்காத”ன்னு சொல்லிட்டு கௌம்பினோம்..!

அவ்ளதான்.. நாக் பூர் வந்ததும் வாழ்க்கை மாறிப் போச்சு…! நான் இன்ட்டர் காலேஜ் முடிச்சு நேரம் பாட்டி தவறிட்டா..அதுக்கு ஒரு தடவ ஊருக்கு போனோம் ஆனா ரெண்டே நாள்தான்.கோயிலுக்குள்ள போகக் கூடாதுன்னுட்டாங்க..வெளில இருந்தே ஜம்புவ எட்டி பாத்துட்டு வந்தேன்..! காலேஜூம் முடிச்சு நான் ஸிஏ முடிச்சு.. அதற்குள்ள தாத்தாவும் உடம்பு முடியாம நாக்பூருக்கே வந்து எங்ககூட தங்கி.. பின்னாடி தாத்தாவும் தவறிப்போய்..காலம் வேகமா ஓடிடுச்சு…! ஊருக்கு போக வேண்டிய அவசியமே ஏற்படல..!

எனக்கும் கல்யாணம் ஆய்டுச்சு நாக்பூர்லயே ஆடிடடர் உத்யோகம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.. அம்மாவுக்கும் நோய் முத்திப்போய் இறந்துட்டா.. பின்னாலயே கொஞ்ச நாள்ல அப்பாவும் தவறிட்டார்..!

இப்ப எனக்குன்னு ஒரு குடும்பமாகி அதுவும் வளந்து நிக்கர்து .. ! பையன் சேஷாத்ரியும் பெரியவனா வளர்ந்து ஆய்ட்டான்..! பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிச்சுட்டு நியூஸிலாந்துல இருக்கான்.. கல்யாணம் ஆகி ஒரு கைக் குழந்தை.. பேரன்.. இருக்கான்.!

மெல்ல மெல்ல வருஷம் ஓட ஓட… நானும் இப்ப எங்க தாத்தா மாதிரியே வயசானவனா ஆய்ட்டேன்.! தாத்தா மாதிரியே ருத்ரம்…விஷ்ணு சஹஸ்ரநாம்.. பூஜை புனஸ்காரம்.. ஸ்லோகம்னு ஒன்னு விட நானும்…! வருமானத்துக்கு ஆடிட்டிங் உத்யோகம்னா..வாழ்க்கைக்கு இந்த பூஜை புனஸ்காரம்லாந்தான் எனக்கு மன நிறைவைத் தர்ர விஷயமா ஆய்டுத்து…! சின்ன வயசுல ஸ்கூல் லீவுல தாத்தா எனக்கு சொல்லிக் குடுத்தது நீச்சல் மட்டும் இல்லயே…! வாழர முறையையும் தானே..?!

என்னோட ஆத்துக்காரி ஜானகிக்கும் இப்பெல்லாம் உடம்பு முடியர்தில்ல..அம்மா மாதிரியே ஏதாவது இருமல் சளி… முட்டிக் குடைச்சல் கால்சியம் குறைபாடுன்னு ஏதாவது மாத்தி மாத்தி படுத்திண்டே இருக்கும்..!

அப்பதான் ஒரு நாள் சேஷா கூப்டான்.. அப்பா நீயும் அம்மாவும் இங்க எங்க கூட வந்திருங்கோ னு கூப்டான்.. எனக்கும் அது சரின்னு பட்டுது.. காலம் போற காலத்துல மகன் மருமக பேரன் னு காலத்த ஓட்லாமேன்னு நினைச்சு “சரிடா சீக்கிரமே இந்த வீட்ட வாடகைக்கு விட்டுட்டு உங்கூட வந்துர்ரேன்”னு சொன்னேன்..!

அப்பதான் என் மனைவி சொன்னா.. “ஏன்னா! ஊர்லகூட கிரமத்துல தாத்தாவோட வீடு அப்படியே இருக்கே .? அதுல கீழ் போர்ஷன்தான வாடகைக்கு விட்ருக்கோம்.. போய் கொஞ்சநாள் தங்கி இருந்து அதை வித்துட்டா வசதியா இருக்குமே”ன்னா.. எனக்கும் அது நல்ல ஐடியாவா பட்டது.. அப்படியே இவளுக்கும் தாத்தா பாணில ஆயர்வேத வைத்தியம் ஏதாவது பார்க்கலாம்னு நெனச்சுகிட்டேன்.!

ஊருக்கு வந்தோம் .. கிராமத்துக்கு..ரொம்ப நாள் கழிச்சு.. இல்ல ரொம்ப காலம் கழிச்சு..அதே ரயில்வே ஸ்டேஷன்தான், ஆனா நெறைய ரயில் நிக்கரதாம் இப்பல்லாம்..! பைபாஸ் ரோடு ஊர் வழியா போறதால ஊரே தன்னோட பழைய கிராமத்து அடையாளம் மறஞ்சு போய் ஒரு குட்டி பட்டணமா ஆய்டுத்து. கிராமத்து விவசாயி மகன் நகரத்துல ஐடி கம்பனி ஜாய்ன் பண்ணின மாதிரி ஊரே படு கலர்ஃபுல்லா இருந்தது .. !

ஆனா தாத்தா வீடும் வாய்க்காலும் மாறவே யில்ல.. ஆனா ஆத்துல தண்ணி எப்ப திறந்து விடராங்களோ அப்பதான் வாய்க்கால்ல தண்ணிய பாக்க முடியும்.!

நான் வீட்டுக்கு வந்த உடனே..மூட்ட முடிச்ச வெச்சுட்டு துள்ளலா ஓடிப்போய் நின்ன இடம்………! உங்களுக்கு தெரிஞ்ச இடம்தானே…? வழக்கமான கோயில் குழாயடிதான்.!

கோயில் ரொம்ப மாறிடுத்து.. குருக்கள் மாமா இற்து போய் அவரோட பையன் வளர்ந்து நிக்கரான் அடுத்த குருக்களா…இப்பல்லாம் காமாட்சி அம்மன் மட்டுமல்ல.. பிள்ளையார் முருகன் சிவன் ஆஞ்சநேயர் நவக்கிரகம்னு எல்லா கடவுள்களும் வந்தாச்சாம்.! மனுஷா மனசுல கலி தன் வேலய காட்ட காட்ட கடவுள்களின் தேவையும் அதிகமாய்ண்டேதான இருக்கு..?!

போய் குழாயடில நின்னேன்..அங்க நான் பார்த்தது ஒரே யானை தான்..உயரமா ஆண் யானை.! பெரிய கொம்போட… ஜமுனா வும் இறந்திடுத்தாம்.. ! வயசாய்டுச்சில்ல.?

போய் நின்னு உத்து அந்த யானையவே பார்த்தேன்.. வேற யாரு என்னோட ஜம்புதான்..! எப்படி வளந்திருக்கான் பாத்தீங்களா?

அம்மாவ கட்டி போட்டிருந்த அதே சங்கிலியில , இப்ப ஜம்புவ கட்டி போட்டிருந்தாங்க… மெல்லமா சலங்க சத்தம் செஞ்சு கிட்டே முன்னாடி கிடந்த இலை தழைய தின்னுகிட்டு இருந்தான் என் ஜம்பு.! என்ன கவனிக்கல போல.!

பக்கத்துல போக முயற்சி செஞ்சேன்.!

“யாருங்க அது யான பக்கத்துல போகாதீங்க..பொல்லாதது அது” ..னு ஒரு குரல் கேட்டது.!

தலைய திருப்பிப் பார்த்தேன்.. ஒரு ஆள் நின்னுகிட்டு இருந்தார்..

” நீங்க யார் சார் .? ” னு கேட்டேன்!

அவர்தான் ஜம்புவ பாத்துக்கிறவராம்.! பககத்துல போனேன்.. கொஞ்சம் பிராந்தி வாசன அடிச்சது.. கண்ணெல்லாம் லைட்டா சிவந்து முகம் வீங்கிப் போய்.. இப்பதான் தூக்கம் கலைஞ்சு வரார் போல..!

பகல்ல .. அதுவும் கோயிலுக்குள்ளயே பிராந்தி வாசத்தோட ஒருத்தர்..?!

பேஷ்.. பேஷ்..!

கேசவன் மாமா எப்பவோ கேரளாவுக்கே போய்ட்டாராம்..!

இவர் கூட ரொம்ப அலுத்துண்டார்.. ஜம்பு சொன்ன பேச்ச கேக்கரதில்லயாம்! ரொம்ப முரடாம்.! இவர் கூட இந்த வேலய விட்டுட்டு ஊருக்கே போய்டலாம்னு நினைக்கறாராம்..!

அடப்பாவமே.. ஜம்பு கூட இருக்கர்து வேலையில்லடா.. வாழ்க்கைனு பளார்னு அறைஞ்சு சொல்லணும் போல தோணித்து.. பேசாம இருந்துட்டேன்.!

யோசிச்சு பார்த்தேன்.. அம்மா ஜமுனாவும் இல்லாம .. விளையாட நானும் இல்லாம.. தாத்தாவும் இல்லாம .. கேசவன் மாமாவும் இல்லாம ஜம்புவோட தனிமை எனக்கு புரிஞ்சுது..!

கிட்டத்தட்ட நானும் அதே நெலமைதானே..?!

விடு விடுன்னு வீட்டுக்கு போனேன்.! ஜானு கிட்ட சொல்லி சமைக்க சொன்னேன்.. ஒரு டப்பால போட்டுட்டு நேரா குழாயடிக்கு போய் நி்ன்னேன்..!

ஜம்பு வேற பக்கமா பாத்துண்டு நின்னுண்டிருந்தான்..! கிட்ட போனேன்.!

” சார் பக்கத்துல போகாதீங்க.!”

கையைக் காண்பித்து செத்த நேரம் அமைதியா இருங்கோன்னு சைகை காண்பிச்சுட்டு..!

மெல்லமா அவனக் கூப்பிட்டேன்..! ”

“ஜம்பு.” !

மெள்ள தலையத் திருப்பிப் பார்த்தான்..! என்ன பார்த்தான்..!! ஒரு நிமிஷம் உத்துப்பார்த்தான்..

நானும் அவனையே பார்த்தேன்..!

அவனுக்கு புரிஞ்சிடுச்சு..வந்திருக்கர்து யார்னு..!

“நாந்தான்டா நாணா வந்திருக்கேன்” னு சொன்னேன்..! எங் கண்ல ஜலமா வந்தது..!

பின்னாடியே வந்த என் மனைவி கேட்டாள்.. !

“ஏன்னா அழரேள் ?!” ஒன்னுமில்லடி..ஒன்னுமில்ல” னு சமாளிச்சேன்..!

எங்கிட்ட வந்தான் ஜம்பு.. துதிக்கைய ஓங்கி என் தல மேல போட்டான்..உடம்பு பூரா என்ன மூந்து பார்த்தான் ..!

முழுசா யார்னு தெரிஞ்ச உடனே.. சங்கிலிய விட்டு எங்கிட்ட வர அவன் முயற்சி செய்ய ஆரம்பிச்சாம் பாருங்கோ.. .. ? ! “ப்ப்ரீரீ.. ப்ப்ரீரீ “னு ஒரே யடியா கத்த ஆரம்பிச்சிட்டான்..!

அங்க இருந்தவால்லாம் பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க..!

புது பாகனும் “நான் சொன்னல்ல சார்.. அது ரொம்ப முரடு சார்.. நாலு வெச்சாத்தான் சரிப்படுவான்” னு குச்சிய தூக்கிண்டு வேகமா வந்தார்..!

“கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா.” ன்னு அதட்டினேன்..

என் மனைவியும் பயந்துட்டா.. “கிட்ட போகாதீங்கோ”ன்னா அட்வைஸ் பண்ணினா.!.

“பத்து வயசிலயே பயப்படாம வாழப்பழத்த தூக்கிண்டு நின்னவண்டி நானு “ன்னு நெனைச்சிண்டேன்…!

ஜம்பு வோட சந்தோஷம் புரியல யாருக்கும்.. புரியாது.. ஏன்னா அவன் கூட வாழந்தவன் நான் மட்டும்தானே..?!

கிட்ட போனேன்.. ஜம்பு வோட மகிழ்ச்சி துள்ளல் எனக்கு புரிஞ்சுது.. தும்பிக்கைய மெல்ல தடவிக் குடுத்தேன்..

“நீயாடா நாணா.??. இது நீதானாடா??.. நாணாவாடா நீ?!.. தலையெல்லம் வெளுத்துப் போய்..ஏனாடா சொல்லாமகொள்ளாம என்ன விட்டுட்டுபோய்ட்ட? ” னு கேட்டுண்டே அப்படியே என்னை இழுத்து தன்னோட சேர்த்துண்டான் ஜம்பு.. காலுக்கடீல..!

வால வாலக் குழைச்சிண்டு ஒரு நாய்க்குடடி மாதிரி அவ்வளவு பெரிய உருவம் என்ன உரசி உரசிண்டு ….. பார்க்கவே ஆனந்தமான காட்சி அது….!!

“இத்தன நாளும் எங்கடா போய்ட்ட பாவி என்ன விட்டுட்டு..? அம்மா செத்து போய்ட்டாடா.. நானும் தனியா இங்கயே நின்னுண்டு .. நீயுமில்லாம நான் என்னடா பண்ணுவேன்”னு அவன் சொன்னது எனக்கு மட்டும்தான் கேட்டது..!

“நான் என்ன பணரது ஜம்பு..என்ன ஊருக்கு கூட்டிண்டு போய்ட்டாங்க..! எங்கம்மாவும் செத்து போய்ட்டா.. ! நானும் இப்ப உன்ன மாதிரி தான்டா..! தனியா நிக்கரேன்” னு அழுதேன்..!

ஜம்பு தொடர்ந்து பலமா கத்தினான் பலதடவ… “வந்துட்டாண்டா என் நண்பன் வந்துட்டாண்டா”ன்னு தனக்குத் தானே சொல்லிண்ட மாதிரி தோணித்து..!

ஜம்பு மேல ஒரே வாடை..! தரையெல்லாம் சாணியும் மூச்சாவும் போய் ஒழுங்கா க்ளீண் பண்ணவயேில்லை அந்த பாகன்.! சங்கிலி கட்டிண இடத்துல தழும்ப தழும்பா. .. சின்ன சின்ன காயங்கள் வேற…!

பார்க்கவே மனசு வலிச்சுது..”டேய் என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க இவன…? இவன யாருமே புரிஞ்சிக்கலயாடா.? டேய் இவன் என்னிக்கும் அதே குழந்ததான்டா.. ஏன்டா இவன இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க.”ன்னு மனசுக்குள்ள அழுதேன்..!

உடனே பக்கத்துல இருந்த ஹோஸ் பைப்ப எடுத்தேன்.! மள மளன்னு குழாய திறந்து விட்டேன்..!

” பீச்”..சுனு தண்ணிய ஜம்பு மேல அடிக்க ஆரம்பிச்சேன்… அவன் அடைஞ்ச சந்தோஷம் தண்ணீரத் தாண்டி தெரிஞ்சுது…! அழுக்கு போக நல்லா தேய்ச்சு அவனக் குளிப்பாட்டி விட்டேன்..! அவன் ஒழுங்கா குளிச்சு எத்தன நாள் ஆச்சோ..?!

வாய தொறந்துண்டு பாத்திண்டிருந்தார் அந்த பாகன்..அவர் பேர் கூட தெரிஞ்சுக்க விரும்பல நான்..!

குளிச்சு முடிச்ச உடன்.. அந்த டிபன் பாக்ஸ எடு னு மனைவிய கேட்டேன்..!

மனைவி எடுத்து தந்த உடன்.. அதை ஜம்பு முன்னாடி திறந்து காட்டினேன்.!

வெண்டக்கா வெத்தக் குழம்பு சாதம்..!

அதை முகர்ந்து பார்த்த ஜம்பு பிளிரியது ஏன்னு எனக்குதான தெரியும்.? முத முதலாய் அவனை நான் காக்கா பிடிக்க கையாண்ட வழி முறையாச்சே இந்த வெத்தக் குழம்பு..?!

அவன் கூடத்தான் இருட்ர வரைக்கும் இருந்தேன்.. குருக்கள் மாமா பையன் ரொம்ப ஆச்சர்யப் பட்டார்…! யான வெத்தக் கொழம்பு லாம் சாப்பிடுமான்னு ஆச்சர்யமா கேட்டார்.! அவருக்கென்ன தெரியும் எங்க பந்தம்.?

நைட்டெல்லாம் தூக்கம் வரல.. ரொம்ப யோசிச்சேன்..!

காலைல எழுந்து காஃபி குடிக்கும் போது மனைவி கிடட சொன்னேன்.. “ஜானு .! வீட்ட வித்திடலாம்.”

“அதுக்குதானேங்க வந்திருக்கோம்.! புரோக்கர் யாராவது இருந்தா இன்னிககு கூப்பிடுங்க” ன்னு சொன்னா.!

“நான் சொன்னது நாக்பூர் வீட்ட.!”

“என்ன சொல்ரேள்.. அப்பாவோட ஞாபகம்.. கன கனமா தேக்குல இழைச்ச வீடு.. விக்க வேணாம்.. சேஷாவுக்கு உபயோகமா இருக்கும்.!” னு சொன்னேளே னு கேட்டா.!

” இல்ல.! இப்பதான் புரிஞ்சது இனிமே வாழப் போற வாழ்க்கை யார் கூடன்னு..! சேஷா க்கு வசதி, வருமானம் இருக்கு.. அவன் வாழ்க்கைய அவன் பாத்துப்பான்..! வேணும்னா அப்ப அப்ப நம்மள வந்து பாத்துக்கட்டும்…! நான் என் தாத்தா விட்டுட்டுபோன மீதி வாழ்க்கைய வாழரதா முடிவு பண்ணிட்டேன்..இங்கயே இந்த கிராமத்திலயேன்னு சொன்னேன்.!

தேவப்பட்டா ஆடிட்டர் உத்யோகமும் பாத்துக்கலாம் “னு சொன்னேன்..!

என் மனைவிக்கு புரிஞ்சிடுச்ச.. என் மாற்றத்தின் காரணம் யாருன்னு…!

வா ..! கோயிலுக்கு போகலாம்னு கூப்பிட்டேன்.!

ரெண்டு பேரும் போய் குழாயடியில நின்னோம்.. குருக்கள் மாமா பையனையும்.. புது பாகனையும் கூப்பிட்டேன்…

சார்.. இனிமே நாங்க இங்கயே செட்டில் ஆகரதுன்னு முடிவு பண்ணிட்டோம்.. ஜம்புவ நான் பாத்துக்கரேன்..! என்கூட ரொம்ப அட்டாச்டா இருப்பான் அவன்…அவனுக்கு ஆகற செலவையும் நானே பாத்துக்கரேன்.. இவர் ஊருக்குை போக விரும்பரதா சொன்னார் நேத்து.. தாராளமா போகட்டும்.. அப்படியே பூஜை புனஸ்காரத்துல உங்களுக்கு உதவியா இருக்கேன்.. சம்பளம்லாம் ஏதும் வேணாம்னு அடுக்கிண்டே போனேன்..!

அவங்க ரெண்டு பேரும் ஆச்சர்யமா வாயப் பொளந்துண்டு பார்த்துகிட்டு இருந்தாங்க…!

“ஜானு …! வா.. நமஸ்காரம் பண்ணிக்கோ னு கூப்பிட்டேன்..! ஜம்புகிட்ட நமஸ்காரம் செஞ்சதும்.. அவள் தலையத் தடவி விட்டான் ஜம்பு.!

“வரையாடா வாய்க்காலுக்கு போகலாம் ” னு கூப்பிட்டேன்.. ஒரே குஷியாய்ட்டான்..!

நானே சங்கிலிய அவிழ்த்து விட்டேன்..! அவன் கொம்ப புடிச்சிண்டு.. “குளிச்சிட்டு வர்ரேண்டி..தோய்க்கர்தா இருந்தா வாய்க்காலுக்கு துணி மணியோட வா” ன்னு என் மனைவி கிட்ட சொல்லிட்டு புறப்பட்டோம்..!

போற வழியெல்லாம் ஜம்பு கூச்சல் போட்டுண்டே வந்தான்..!

“பாத்தீங்களாடா..?! என் நண்பன் வந்துட்டான்.. இனிமே என்ன விட்டு போகவே மாட்டான்.. எங்கூடத்தான் இருப்பானாம் “னு ஊருக்கே டமாரம் அடிச்சு சொல்ர மாதிரி காதை ஆட்டிண்டே வந்தான்.. எங்கூட ஒரே உரசல் வேற..! வாய்க்கால் ல குளிச்சிட்டு அப்படியே மார்க்கெட்டு போகணும்.. ஜம்புவுக்கு வேணும்கரதெல்லாம் வாங்கணூம்னு நெனைச்சுண்டேன்..!

இனி தாத்தா வோட வழிதான்..! ஆடிட்டிங்.. பூஜை.. சுலோகங்கள்..வைதீகம் ..என் ஜம்பு இதான் இனி என் வாழ்க்கை…!

வழியில எல்லாரும் வாயப் பொளந்துண்டு எங்களையே பாத்தாங்க..!

எங்கயோ ஸ்பீக்கர்ல பாட்டு பாடிண்டு இருந்தது.!

“அந்த நாள் ஞாபகம்.. நெஞ்சிலே வந்ததே.. நண்பனே. நண்பனே.. நண்பனே..!!”

நான் அப்படியே நிமிர்ந்து ஜம்புவ பார்த்தேன்.. அவனும் புரிஞ்ச மாதிரி என்ன பார்த்தான்..!

ஓங்கி ஒரு குத்து விட்டேன் வயித்துலயே..!

“இனி இந்த நாளும் அன்று போல் இன்பமாய் இருக்குமடா..!! வாடா என் நண்பா….!! ”

நடக்க ஆரம்பிச்சோம்…!

மறக்காம லைபாய் சோப்பு வாங்கணும்..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *