கவிதாவும் கயல்விழியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 4,991 
 

திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி திருக்கோயிலின் திருக்குளம் மிகப்பெரியதாக பார்க்க அழகாக இருந்தது. பாசி படிந்திராத படித்துறையும், பெருத்த அலைகள் இல்லா தெளிந்த நீரும், காணப்பெறுவது மனதுக்கு ரம்மியமாக இருந்தது. காலம் போன காலத்தில் குளம் நிறைந்து இருப்பதும், அதில் இருக்கும் மீன்கள் எந்த அடக்கு முறைக்கும் ஆளாகாமல் உடலை வளைத்து, நீட்டி சுதந்திரமாக நீந்தும் காட்சியும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.

கழிந்த பொழுதில் வேண்டும் வேண்டும் என்னும் வேட்கையுடன் இறைவனைத் தேடி பிரார்த்தனை செய்து பேறுப்பெற்ற முகிற்குழலி, நன்றிக்கடன் செலுத்த தவறாமல் கோயிலுக்கு வருவதுண்டு. தெப்பக்குளம் படித்துறையில் நின்று குளிர்ந்த ஜில்லுப்பு காற்றை மெல்லிய தான புன்னகையுடன் ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

ஆண்வர்க்கம் கரடு முரடான குணங்களை கொண்டது. அவர்களின் வாழ்க்கைத் தடங்கள் அவ்வப்போது மாறும் கொள்கையுடையது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் சந்தர்ப்பவாதிகள் என்று கணித்து அவர்களைப்பற்றி அச்சம் கொண்டிருந்தாள். சுற்றி இருக்கும் உறவுகள் உறவுக்குள்ளிருக்கும் அனுதின சம்பாஷணைகள், நடக்கும் போரட்டங்கள், எதிர்ப்புக்கள், எதிர்க்கொள்ளும் விதம் அனைத்தும் அவளை அச்சுறுத்தும். தாம் அமைதியாக இருப்பது போல தனக்கு அமையக்கூடிய. வாழ்க்கையும் அமைதியாக, ஆனந்தமாக அமைய வேண்டும் என்று பிரையாசைப் பட்டு கடவுளை வேண்டிக்கொள்வாள்.

மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தனார், தாத்தா, பாட்டி, இப்படி உறவுகளுக்கிடையில் புகுந்த வீடு அமைந்தால் பாதுகாப்பும், அனுசரனையும் கிடைக்கும் என்ற கூடுதல் அப்பிராயம் கொண்டிருந்தவளுக்கு அதுவும் கிட்டியது. கணவன் தடம் மாறும் போது, பெரியவர்களின் கண்டிப்பு மடை மாற்றமாக இருக்கும் என்று அபிலாஷையும் கொண்டிருந்தாள். பள்ளியில் படிக்கும் போது தம்மீது விழுந்த காதல் கனைகளை கண்ணியத்துடன் எதிர்க்கொண்டு முறியடித்தவளுக்கு இப்படி ஒரு குடும்பம் அமைந்த விஷயம் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கியது. கணவன், கடவுள் கொடுத்த வரமாகும் என்று பரிப்பூரணமாக நம்பினாள்.

மிகப்பெரிய வியாபாரம் நிறுவனம் ஒன்றின் வழி வந்த ஸ்தாபகரானான திருக்கைவேல், தமது ஈன்ற இருவரின் வற்புறுத்தலுக்கு கட்டுப்பட்டு, முகிற்குழலியை கரம் பற்றினான். வற்புறுத்தல் என்பதை விட அச்சுறுத்தல் என்பது பொருத்தமாக இருக்கும். அச்சுறுத்தல் சூழ் நிலையை மாற்றும் காரணியாக இருந்தது.

இளமை, அழகு, அடக்கம், அமைதியின், மொத்த வடிவம் கொண்ட பாக்கியவதி முகிற்குழலியை மனைவியாக வாய்க்கப்பெற்றான்.

கவிதாவை வட்டமிட்டு துரத்தி துரத்தி காதலித்த அவன், அவளுக்கு அநீதி இழைத்து நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தம் மனதை பல நிலைகளில் வைத்துக் கொண்டு வேதனைப்பட்டான்.

தெப்பக்குளத்தில், வெகு நேரமாக முகிற்குழலியைப் பார்த்துக் கொண்டிருந்த கயல்விழிதாமோதரன், தம் பள்ளித்தோழியை அடையாளம் கண்டு குறுநகையுடன், ஹேய் முகில் எப்படி இருக்கே என்று கேட்டாள்.

முகிற்குழலி திருதிருவென விழித்தபடி யோசித்தாள் .

சிரித்துக்கொண்டே வாஞ்சையுடன் அவளது கைகளைப் பற்றி, என்னயா அடையாளம் தெரியலையா.,? ஐந்தாறு வருஷத்துல. ஆளே மாறிட்டே மாறனது சரி அதுக்காக ஆளையே மறந்துடறதா.,? என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

நினைவுகளின் ஆரவாரத்துடன், தோழியை சந்தித்த மகிழ்ச்சி அலையும் சேர்ந்து முகிற்குழலிக்குள் ஆனந்த பேரிரைச்சலை உண்டு பண்ணியது. பொது இடம் மறந்து நாற்குணமிழந்து தோழிகள் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி அன்பின் மிகுதியால் முத்தமிட்டுக் கொண்டனர். அதை கண்ணுற்ற கயல்கள் நீர் மட்டம் மேல் எழும்பி குதித்து கும்மாளமிட்டன.

கயல்விழியை வீட்டுக்கு அழைத்து வந்து உபசரித்து வீட்டிலுள்ளவர்களுக்கு அறிமுகம் செய்தாள். தம் கையால் சமைத்து சாப்பிட செய்து உணவு பரிமாறினாள். இருவரும் பரஸ்பரம் கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

ம்.. பரவாயில்ல நீ ஒருவாறு குடும்பத்தில் ஐக்கியமாகி செட்டிலாகி விட்டாய், ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்றாள் கயல்விழி.

நான் வாங்கி வந்த வரம் அப்படிப்பட்டது.

இந்த வாழ்க்கை எனக்கு அமைய வில்லையே என்று நினைக்கையில் எனக்கு வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கு என்றாள். சொன்னவள் கண்களில் நீர் பனித்திருந்தது.

எல்லாம் அமையும், நீ ஒருபோதும் கவலைப்படாதே.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

அவள் சொன்னதை சிந்தையில் ஏற்காதவளாய், ஆமாம் நீ எப்படி இருக்கிறாய், கழுத்தில் மாங்கல்யம் இல்லை, காலில் மெட்டி இல்லை, ஏன் இன்னமும் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் இருக்கிறாய் என்று கேட்டாள்.

எனக்கு பிடிக்கலை,

இப்படி ஒரு வார்த்தையில் சொன்னால் எப்படி விளங்கும்?

காதலனின் நம்பிக்கை துரோகத்துக்கு ஆளாகி அலைக்கழிக்கப்பட்டு கிடக்கிறேன்.

நினைச்சேன், இப்படி ஏதாவது ஒரு சோகம் இருக்கும் என்று நினைச்சேன். அதுக்காக ஓடிப்போனவனை நினைச்சு உருகுரியாக்கும்.

காதலைப் பற்றி உனக்கு தெரியாது முகில்.

எல்லாம் எனக்கு தெரியும். அதனால் தான் நானும் அவரும் இதுல ஈடுபடவில்லை.

நீ சொல்லலாம், உன் அவரைப் பற்றி உனக்கு என்ன தெரிய வந்தது? எப்படி அவ்வளவு ஊறுதியா சொல்றே.,?.,!

பொண்ணு பார்க்க வர்றப்போ காதல் அனுபவம் இருக்கா என்று கேட்டபோது அப்படி இருந்தால், அவளை கண்ணீருக்கும் கபலைக்கும் ஆளாக்கிவிட்டு, நான் சொந்தம் தேடி பொண்ணு பார்க்க வர்றமாட்டேன் என்று நறுக்குத்தெறித்தாற் போல பதில் சொன்னார். இதை விட வேறு என்ன வேண்டும் அவருடைய மாட்சிமைக்கு.?

உண்மைதான்.,?.,!

நீ அடிக்கடி இங்கு வந்து விட்டுபோ, உனக்கு ஆறுதலாக இருக்கும், மனச்சுமையும் குறையும் என்று சொல்லி விடை கொடுத்தாள்.

தம் வீட்டுக்கு வந்த கயல்விழிக்கு ஆற்றாமை அதிகரித்தது. மனம் வெதும்பி கேவி அழுதது கண்களில் தெரிந்தது. பழைய நினைவுகள் கண் முன் சின்னத்திரை காட்சியானது.

காதலனுடன் பழக பழக அவளுக்கு வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. காதலை நேசித்து வளர்த்தாள். காதல் வைராக்கியம் நல்லதொரு எதிர் காலத்தை உருவாக்கும் என்று நம்பினாள். உள்ளம் உருகி காதலிக்கும் அவன் ஒரு போதும் கை விட மாட்டான் என்றும் நம்பினாள். காதல் சாதி பிரிவினையையும், அந்தஸ்து அதிகாரத்தையும் தகர்த்து தரை மட்ட மாக்கி விடும் என்று தீர்க்கமாக நம்பினாள்.

மனம் ஒத்து, மலர்ந்த காதல், மணம் வீசும் தருணத்தில் என்னை மன்னித்து விடு, என்னை மறந்து விடு என்று சொல்லி அவள் நெஞ்சில் நெருப்பை அள்ளி வீசினான். அவன், தான் கட்டாயத்தின் பேரில் வீட்டார்கள் பேசி முடிக்கும் பெண்ணைத் திருமணம் செய்ய இருக்கும் நிர்பந்ததைச் சொன்னதும் காதல் மலர் கருகியது.

அதிர்ச்சியடைந்த கயல்விழி, என்னை விடாப்பிடியாக தொடர்ந்து துரத்தி துரத்தி வந்து நீ உன் காதலை சொன்ன போது நான் யோசித்து இருக்க வேண்டும், உயிருக்கும் மேலாய் நேசிப்பவளை நீ ஒரு போதும் கை விட மாட்டாய், மனம் விரும்பும் வாழ்க்கை அமையும் என்று நம்பித்தானே நான் உடன் பட்டேன், இப்போ வந்து அம்மா சொல்றா, அத்தாச்சி சொல்றான்னு என்னை மறந்து விட சொல்றீயே உனக்கு வெட்கமாக இல்லை என்று கேட்டு ஆவேசம் கொண்டாள்.

இதை சொல்றதை தவிர எனக்கு வேற வழி தெரியலை கவிதா, நீ சரின்னு சொல்லு நாம செத்து போயிடலாம் என்றான்.

எப்போ நீ இன்னொருத்தியை கட்டிக்கப் போறேன்னு சொன்னாயோ அப்பவே நான் செத்துப் போயிட்டேன் உன்னைப் பார்க்கவே எனக்கு அருவெறுப்பா இருக்கு, என் முகத்தில் விழிக்காதே போய் விடு என்று சொல்லி விரட்டியடித்தாள்.

கயல்விழி வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் தத்தளித்துக் கொன்டிருந்தாள். நாட்கள் கடந்து போகட்டும் ஆத்திரம் கோபமெல்லாம் அடங்கட்டும் பிற்பாடு சமாதானம் செய்து கொள்ளலாம் என்று இருந்த அவனுக்கு அவளின் பிடிவாதம் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

அவளிடமிருந்த ஈடுபாடு குறைந்திராத நிலையில், அவளுக்கு ஒரு நல்ல வழ்க்கையை அமைத்துத்தர வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாள் நீ கல்யாணம் செய்து கொள், என்னையே நினைத்து உன் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளாதே என்று வரன் ஒருவனை சிபாரிசு செய்தான்.

அவள் வெகுண்டு தூற்றினாள். என் வாழ்க்கையை முடிவு செய்ய உனக்கு அதிகாரம் கிடையாது, மனதில் உன்னை வரிந்து விட்டப்பிறகு இன்னொருத்தரை என்னால் நினைத்துக் கூடப்பார்க்க முடியாது. உன்னைப் பிரிந்து என்னால் உயிர் வாழ முடியாது, நீ கல்யாணம் ஆனவனாக இருந்தாலும் கடைசி வரையில் நீ என் கூடவே இருக்கனும் என்று இணங்கி பூவிலங்கிட்டாள்.

தன் காதலன் தன்னிடம் கைதியானதை நினைத்து இப்போது சிரித்துக்கொண்டாள்.

தோழி முகிற்குழலி வீட்டுக்கு போகவர உண்டான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட கயல்விழி, ஒரு நாள், உன் கணவரை வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்ததாகவும், அது பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டாள்.

முகிற்குழலி அதைக் கேட்டதும், அவர் ஒரு நாளும் அப்படி நடந்துக் கொள்ள மாட்டார், நீ தவறாக புணைகிறாய் என்று சொன்னதுடன் அவள் மீது ஆத்திரம் அடைந்தாள். பதிலுக்கு நான் தீர விசாரித்து பிறகு வந்து உன்னை சந்திக்கிறேன் என்று சொல்லி விடைப்பெற்றாள்.

சுழலும், சூறாவளியும் இல்லாமல் ஆற்றில் அமைதியாக சென்று கொண்டிருந்த. ஓடத்தை எங்கிருந்தோ ஒரு முதலை பாய்ந்து வந்து தாக்குதல் நடத்தினால் என்ன கதிக்கு ஆளாகுமோ அதை விட மோசமான தடுமாற்றத்துக்கு ஆளானாள் முகிற்குழலி.

மனசாட்சிக்கு மதிப்புக் கொடுத்து நடந்துக் கொள்ளும் மணாளனை மாசு படிந்தவன் என்று எப்படி நினைக்க முடியும்.,?

எனக்காக எதையும் செய்யக்கூடிய என் கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் உறவா.,?

ஊர் பேசினால் உதாசீனப்படுத்தலாம், உற்ற தோழியே சொல்லுகிற போது எப்படி நம்பாமல் இருக்க முடியும்?

கணவரிடம் இது குறித்து, அவள் விபரம் கேட்டதற்கு, நான் காதலித்த பெண்ணுடன் தோழமையாக இருந்து வருவது உண்மைதான், அது கூட அவளுக்கு கல்யாணம் ஆகிற வரையில் தான், அதன் பிறகு அவள் யாரோ, நான் யாரோ, என்று பொய் சொன்னான்.

மறுமுறை தோழியை சந்தித்தப் போது, தோழமை இல்லை முகில் அதையும் தாண்டி அவர்களுக்குள் அந்தரங்க உறவு, அழுத்தமாக இருக்கிறது, அவள் பெயர் கவிதா, காதலித்த பெண்ணை கைவிட மனசில்லாமல் இன்னமும் தொடர்பில் இருக்கிறார் என்றாள் கயல்விழி.

தன் மணாளனை வளைத்துப்போட்ட பரத்தையை வாய்க்கு வந்தபடி வசைந்தாள். அவள் மட்டும் என் கண்ணில் படட்டும் சாணத்தை கரைத்து தலையில் ஊற்றுகிறேன், என் வாழ்வை நாசமாக்கும் நயவஞ்சககாரியை விளக்குமாறால் அடிக்கிறேன், கொலையும் செய்வாள் பத்தினி என்று அவள் அறியமாட்டாளா.,? என் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக வந்தவளை கொலை செய்து கூறு போடுகிறேன் என்றெல்லாம் கூக்குரலிட்டாள்.

நீ உம் புருஷனை ஆகவேண்டிய காரியத்துக்கு அடக்கி ஒரு வேலைக்காரனாக ஆட்டிப்படைக்கிறாய், அவள் உன் ஆளை மயக்கி மடியிலிட்டு மகிழ்ச்சி கொண்டாடுகிறாள்.

நில்லுன்னா நில்லு உட்காருன்னா உட்காரு என்று உம் புருஷனை ஒரு தலையாட்டி பொம்மையாக்கி அதிகாரம் பண்றே, அவள் சகட்டுமேனிக்கு பஞ்சு மெத்தையில் புரண்டு களிப்புற்று இருக்கிறாள்.

தோழியா, என்னைப்பற்றித் தெரிந்தும் நீ இப்படி பேசறீயெ.,?

ஐயோ ஈஷ்வரா நானாக எதுவும் சொல்லலை, இதையெல்லாம் உம் புருஷனின் சின்னவீட்டுக்காரி என் கிட்ட சொன்னது.

நீ அவளைப் பார்த்தியா? அவள் எப்படி இருப்பாள்.? என்னை விடவும் அழகா இருப்பாளா.?

நான் என்ன சொல்றேன், நீ எதைப் பற்றி பேசிகிட்டு இருக்கே, இப்போ அதுவா முக்கியம்.? உன் புருஷனுக்கு அவளை பிடிச்சுருக்கு அதை மனசுல வச்சுக்கு நான் வர்றேன் என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினாள்.

கவிதா யாருக்கும் எதுவும் தெரியாமல் நீ என் வீட்டுக்கு வர்ற போக இருந்தே, அப்படியே இருக்க வேண்டியது தானே ஏன் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவளை சீண்டி வெறுப்பேத்துற.,? என்று கோபித்தான் திருக்கைவேல்.

ஏன்னா நீ எனக்கு மட்டுமே சொந்தமானவன், உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். கயல்விழி தாமோதரானாக இருந்த என்னை. க.வி.தா.வாக சுருக்கி பெயர் வைத்து காதலிச்சது நீ தானே என்று சொல்லி, அவனை மார்போடு அணைத்துத் தழுவிக் கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *