கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 29, 2023
பார்வையிட்டோர்: 3,624 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-16 | அத்தியாயம் 17-20 | அத்தியாயம் 21-25

அத்தியாயம்-17 

வடவண்டைச் சரகத்தில் ஒரு வீடு. வாசலிலே இரண்டு தென்னம்பிள்ளைகள், மார் உயரத்திற்கு வளர்ந்திருந்தன. அதைத் தவிர அந்த வீட்டிலே செழுமையோ பசுமையோ இருந்ததாகத் தெரியவில்லை. இருபத்தைந்து அடி அகலமே இருக்கும் வீடு. மண்ணாலான திண்ணை; பல இடங்களில் இடிந்தும் சரிந்தும் இருந்தது. திண்ணைக்குக் கீழே ஆளோடி. சிறு நெறிஞ்சிச் செடிகள் பல சில்லென்று பூத்திருந்தன. ஆளோடியின் மூலையில் ஓர் ஊமத்தம்பூப் புதர் பூத்துத் தொங்கியிருந்தது. திண்ணையின் மேல் இருந்த தூண்களை எல்லாம் பாதிக்கு மேல் செல் அரித்திருந்தது. வெளிச் சுவரெல்லாம் உப்புப் பூத்துக் கொட்டியிருந்தது. கூரை ஒரு பக்கம் ஓலையில்லாமல் திறந்த வெளியாக இருந்தது. அந்தப் பக்கத்தில் சுவரெல்லாம் மழைஜலம் பட்டுக் கரைந்திருந்தது. சுவரிலே சுண்ணாம்போ, சாணமோ பட்டு வெகுநாள் ஆகியிருக்கும்போல் இருந்தது. ஓடுமாற்றி யுகாந்தரங்கள் ஆகியிருக்கும். வாசற் கதவு ஒரு நாதாங்கியில் தொத்திக் கொண்டிருந்தது. 

“இப்போது யாரும் மனுஷா வசிக்கிற வீடு மாதிரியே இல்லையே இது?’ என்றான் மூர்த்தி. 

“இருக்கா இருக்கா” என்றார் சிவராமையர். “அதுவும், ஒரு காலத்தில் சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்தில் ரொம்பவும் பெரிய வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் இப்போது இந்த வீட்டில் இருக்கிறார்கள். சாத்தனூர் சர்வமானிய நிலங்களில் பெரும் பகுதி அவர்களிடம் இருந்தது…” 

“ஒரு காலத்தில் என்றீர்களே. அது ரொம்ப நாட்களுக்கு, பல தலைமுறைகளுக்கு முந்திபோலும்!” என்றான் மூர்த்தி. 

“அப்படியும் இல்லை. இந்த மாறுதல் இரண்டு தலைமுறைகளுக்கு உள்ளாகவேதான். இரண்டு தலைமுறை என்று கூடச் சொல்லிவிட முடியாது. நாற்பது வருஷங்களுக்கு முன் இவர்கள் குடும்பம் சாத்தனூரிலேயே முதற் குடும்பமாக வாழ்ந்தது எனக்குத் தெரியும்” என்றார் சிவராமையர். 

“பின் இது எப்படி நேர்ந்தது?” 

“விதி என்றுதான் சொல்லவேண்டும். வேறு என்ன சொல்வது? சொல்றேன், கேளேன்” என்றார் சிவராமையர். 

அவர் சொல்லத் தொடங்குமுன் அவர் சுட்டிக்காட்டிய வீட்டிலிருந்து ஒரு கிழவர் வந்தார். வயசு சற்று ஏறக்குறைய எழுபதாவது இருக்கும். வயசு அவருக்குக் காம்பீர்யத்தைத் தந்திருக்கிறது. முதுகில் இருந்த லேசான வளைவைத் தவிர அவரிடம் வேறு எவ்விதமான வயசுக்கோளாறுகளும் தெரியவில்லை. கண்கூட மங்கியதாகத் தெரியவில்லை. 

“ஏண்டா சிவராமா? இப்பத்தான் காவேரிக்குப் போறயா என்ன? விடியற்காலையிலேயே குளிச்சுடவயே! யாரு. பிள்ளையாண்டான்?” என்று கேட்டார் சிவராமையரைப் பார்த்து. 

“மருமான்; மதுரத்தின் பிள்ளை.” 

‘ஓ! அன்னிக்குப் பேப்பரிலே பார்த்து எழுதணும்னு சொன்னயே! எழுதி அதுக்குள் வந்துவிட்டானா? தேவலையே!” என்றார் கிழவர். 

“ஆமாம்” என்றார் சிவராமையர். 

“கோயிலுக்குக் கிளம்பினேன். வரட்டுமா?” என்று அவர் போக யத்தனிக்கிற சமயம் பார்த்து எதிர் வீட்டிலிருந்து யாரோ தும்மிய சப்தம் கேட்டது. 

கிழவருக்குக் கோபம் வருகிற மாதிரி இருந்தது. “எதிராளாத்திலே காலேஜிலே படிக்கிற கழிசிறை ஒண்ணிருக்கே; அது தினம் நான் கோயிலுக்கு கிளம்பறச்சே வேணும்னு மூக்கிலே திரியை விட்டுண்டு தும்மறது. நான் என்னடா செய்யறது சிவராமா?” என்றார் கிழவர். 

எதிராளாத்திலிருந்து கேட்ட தும்மல் செயற்கைத் தும்மல் மாதிரி தான் மேஜர் மூர்த்திக்கும் பட்டது. “வேணும்னு தும்மினால் அதுகூடச் சகுனம் ஆகுமா என்ன?” என்றான். 

“அது என்னவோ போ, கெட்ட குடியே கெடும்னு கெட்டாச்சு. பட்ட காலிலே படும்னு பட்டுக்கொள்வானேன்? போய் மோர் சாப்பிட்டு விட்டுக் கிளம்புகிறேன்” என்று கிழவர் வீட்டுக்குள் போய்விட்டார். 

மூர்த்தி நேர் எதிர் வீட்டைப் பார்த்தான். படிய வாரிய கிராப்புத் தலையும், பவுடர் பூசிய முகமுமாகக் காட்சியளித்தான் ஒரு வாலிபன்; அந்தக் கிழவர் சொன்ன ‘காலேஜ் போகிற கழிசிறை’ யான அந்த வாலிபன் சிரித்துக்கொண்டிருந்தான். மூர்த்தியோ சிவராமையரோ சிரிக்கவில்லை. 

‘அவரைப்பற்றி ஏதோ சொல்ல ஆரம்பித்தேளே!’ என்று ஞாபகப்படுத்தினான் மூர்த்தி. 

மேலே நடந்துகொண்டே சிவராமையர் சொன்னார்: 

“கிழவர் பெயர் கிட்டா. அவர் குடும்பம் ஒரு காலத்திலே இந்தக் கிராமத்திலே பெரும் பணக்காரர் குடும்பமாக இருந்தது. முப்பது நாற்பது வேலி நிலம்; பெரிய வீடாக இரண்டொரு வீடுகள், நன்செய், புன்செய் எல்லாம் இருந்தன. ஒரு பையனை அதாவது கிட்டாவின் தம்பியை ஆங்கிலப் படிப்பெல்லாம் படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டு, ஊரில் எல்லோருடைய பகையையும் பொருட்படுத்தாமல், முதலில் கும்பகோணத்திலும் பிறகு தஞ்சாவூரிலும் காலேஜில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அப்போது தஞ்சாவூரில் இன்டர்மீடியட் காலேஜ் ஒன்று இருந்தது. நான் சொல்றது நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன் என்று வைத்துக் கொள்ளேன்.” 

“உம்” 

“கும்பகோணத்தில் படித்துக் கொண்டிருந்த வரையில் பையன் ஒழுங்காகத்தான் இருந்தான். தஞ்சாவூர் போனபிறகுங்கூட முதலில்அதிக மாறுதல் இல்லை. தஞ்சாவூரில் பிள்ளை படிக்கிறானே என்று தாயும் தகப்பனும் போய்க் கொஞ்ச நாள் குடித்தனம் போட்டுப் பிள்ளையுடன் தாங்களும் இருந்தார்கள். பிறகு பிள்ளைக்குக் கல்யாணம் செய்து வைக்கத் தனிக்குடித்தனம் வைத்துப் படிக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்தார்கள். பிறகுதான் வந்தது எல்லா வினையும். பையனுக்குத் தஞ்சாவூரிலேயே மோகினி பிடித்துவிட்டது. பட்டணம் போய்ச் சேர்ந்தபின் தொடர்ந்து வருகிற வெறிகளும் வந்துவிட்டன.” 

“இவர் கிட்டா என்பவர் – மாத்திரம் கிராமத்திலேயே இருந்தாராக்கும்?” 

“ஆமாம். இவர் அத்தியயனம் செய்து நியமதிஷ்டை தவறாமல் மிகவும் வைதிகமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். இவர் தம்பி பட்டணத்தில் அமர்க்களம் பண்ணிக் கொண்டிருந்தார். மூத்த பிள்ளையும் அவஸ்தைப்படாதிருக்கட்டும் என்று படித்த பிள்ளையின் போக்கு நிச்சயமானதும் தகப்பனாரே பாகத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டுத்தான் இறந்தார். பாகம் பிரித்தால் என்ன? ஒரு வருஷம், இரண்டு வருஷங்களில், தன் வீதத்துக்கு வந்தது பூராவையும் குடி, கூத்தி, சூது என்று தீர்த்து விட்டான் இளைய பெருமாள் பிறகு வருஷந்தோறும் கிட்டாவையர் பட்டணம் போவதும், தன் தம்பியை ஒரு கூத்தியாள் வீட்டிலிருந்து பணம் கொடுத்து மீட்டு வருவதுமாக நடந்துவந்தது. அவன் கையில் காசு இல்லாவிட்டாலுங்கூட, கொடுத்து அழைத்துக் கொள்ள ஆள் வரும் என்கிற நம்பிக்கையில் எல்லாத் தாசிகளும் இளையபெருமாளுடன் உறவு கொண்டாடினார்கள்” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார் சிவராமையர். 

“இந்தக் கிட்டாக் கிழவரைக் கோயிலில் வைத்துக் கும்பிடலாமே!” என்றான் மூர்த்தி. 

“அவர் பாகமும் கடைசியில் கரைந்துவிட்டது. நோயும் நொடியுமாகக் கடைசியில் வந்து சேர்ந்தான் தம்பி. ஒரு பாவமும் அறியாத அவன் மனைவியும் இரண்டு குழந்தைகளும் வேறு கதியில்லாமல் கிட்டாவைத் தேடி அடைக்கலம் என்று வந்துவிட்டனர். வீட்டை விற்றுத் தம்பிக்கு வைத்தியம் செய்தார், பலிக்கவில்லை. மனைவியையும் குழந்தைகளையும் அண்ணாவின் காலடியில் கட்டிவிட்டு இறந்துவிட்டான் தம்பி.” 

“அப்புறம்?” 

“அப்புறம் என்ன? கதை அவ்வளவுதான். எவ்வளவோ நல்ல நிலைமையில் இருக்கவேண்டிய கிட்டா இப்போது தலை மேல் இடி விழுந்துவிடுமோ என்று பயப்படும்படியாகக் கிலமாகிப்போன வீட்டில், அன்றாடம் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று அறியாமல் காலந் தள்ளி வருகிறார்” என்றார் சிவராமையர். 

“தம்பியின் மனைவியும் குழந்தைகளும் என்ன ஆனார்கள்? கிட்டாக் கிழவருக்கு மனைவி குழந்தைகள் உண்டா?” கேட்டான் மூர்த்தி. 

“தம்பியின் மனைவியும் சீக்கிரமே இறந்துவிட்டாள். தம்பியின் குழந்தைகள் இரண்டும் வளர்ந்து பெரிதாகிவிட்டன. ரொம்பவும் சிரமப் பட்டு ஏதோ இரண்டு படிப்புச் சொல்லிக் கொடுத்தார். ஏதோ வேலையில் இருக்கிறார்கள்; தங்களுக்கு போதுமானதைச் சம்பாதித்துக் கொள்கிறார்கள்” 

“ஓ! அவர்களால் இவருக்கு ஒன்றும் லாபமில்லையோ?” “எப்படி இருக்கும்? இருக்க முடியாது” என்றார் சிவராமையர். “கிட்டா உபயோகம் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்” என்றார் தீர்மானமாக. 

“அவர் குடும்பம்?” என்று விடாமல் கேட்டான் மூர்த்தி. 

“அவருக்குக் கல்யாணமாகிப் பத்து வருஷங்கள் குழந்தையே பிறக்காமல் இருந்தது. பிறகு, காசி ராமேசுவரம் என்று தெய்வங்களை வேண்டித் தவம் கிடந்து ஒரு குழந்தையைப் பெற்றாள் அவர் மனைவி. பெற்று வைத்துவிட்டு, குழந்தைக்கு ஒரு வயசு ஆவதற்கு முன்னரே இறந்து விட்டாள். அந்தக் குழந்தையும் அதற்கப்புறம் இரண்டொரு வருஷங்களே உயிருடன் இருந்தது” என்றார் சிவராமையர். 

“அடடா! வாழ்க்கையே சூன்யம் ஆகிவிட்டதே!” என்று அங்கலாய்த்தான் மூர்த்தி. 

“இதை ஊழ் என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்வது?” 

“ஆமாம்; அதிலும் முக்கியமாகப் பட்டணத்துத் தாசிகள் வீடு ஒவ்வொன்றாகத் தன் தம்பிக்காகத் தாம் ஏறவேண்டி வந்ததே, அதை விதி என்றுதான் சொல்லவேண்டும். வேறு என்ன என்று சொல்வது?” என்றான் மூர்த்தி. 

சிவராமையர் சொன்னார்: “கிட்டாவுக்கு இப்போது வயசு அறுபத்தைந்து தாண்டியிருக்கும். தக்ககாலத்தில் சந்தியா வந்தனம் மாத்தியான்னிகத்தைப் பண்ணிவிட்டுக் கோயிலுக்குப் போய்வந்துகொண்டிருக்கிறார். தன் சொத்து, சுதந்தரம், வீடு வாசல், மனைவி மக்கள் போனதைப்பற்றி எப்போதும் பேசமாட்டார். எப்பவர்வது ஒரு சமயம் ரொம்பவும் வேண்டியவர்கள் பேச்சுக் கொடுத்தால் தன் தம்பியையும் அவனுடைய அப்பாவி மனைவியையும் பற்றிப் பேசுவார்; அவனுடைய குழந்தைகள் ஏதோ உத்தியோகம் பார்த்துக்கொண்டு சௌகரியமாகச் சம்பாதித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன என்பார். தம்பியின் காரியங்களைப்பற்றி இன்னும் அவர் வருத்தத்துடன் பேசுகிறாரே தவிர, கோபத்துடன் பேசி நான் அறியேன். ஆங்கிலப் படிப்பையும், அதன் வழிகளையும் போக்கையும் பற்றி ஒவ்வொரு தடவை ஆத்திரத்துடன் பேசுவார். ஒவ்வொரு சமயம் தம் தகப்பனாரை நொந்து கொள்வார். அவர் அந்த இளவயசில் தம் பிள்ளையைப் பட்டணக்க,ை யில் விட்டிருக்கப்படாது என்பார். அவ்வளவு தான்” 

“இந்த மாதிரி மனிதர்களும் இன்னும் உலகில் இருக்கும்போது உலகில் மனிதனுடைய எதிர்காலம் நம்பிக்கை தருவதாக இல்லை என்று சொல்லிவிட முடியுமா?” என்றான் மூர்த்தி 

“கிட்டாவைப்போல இந்த ஊரில் வேறு யார் இருக்கிறார்கள்? ஆயிரத்தில் ஒருவர் இவர். அதுகூடத் தவறு. நூறாயிரத்தில் ஒருவர் இவர் என்று சொல்லவேண்டும்” என்றார் சிவராமையர். 

“நீங்கள் சொல்வது புரிகிறது. அவரை மனிதர்களில் ஒருவர் என்று சொல்வது பிசகு. மனித குலத்துக்கு அப்பாற்பட்டவர்களில் ஒருவர் என்கிறீர்கள் நீங்கள்” என்றான் மூர்த்தி. 

எப்படி வேண்டுமானாலும் சொல்லு” என்று சிவராமையர், தெருவின் கிழக்குத் திருப்பம் திரும்பிக் காவேரியில் ஸ்நானம் செய்துவிட்டுத் தெருவுக்குள் வந்துகொண்டிருந்த முப்பது முப்பதிரண்டு வயசிருக்கும் ஒருவனைப் பார்த்து, “வா ராமு எப்ப வந்தே? இப்போ உங்க பெரியப்பாவோட பேசிண்டிருந்தேன். நீ வந்திருக்கிறதாகச் சொல்லல்லையே! அண்ணா சௌக்கியமா?” என்று விசாரித்தார். 

“சௌக்கியந்தான். நான் இன்று காலையில்தான் வந்தேன் பம்பாயிலிருந்து. பத்துநாள் லீவு. அண்ணா சௌக்கியம். டெல்லியிலே தான் இருக்கான், பழைய வேலையிலேயே!” என்றான் ராமு. 

“பெரியப்பா திடமாகத்தான் இருக்கிறார். இருந்தாலும் நீங்கள் யாராவது கூட இருந்தால்தான் தேவலை” என்றார் சிவராமையர். 

“அது எப்படி மாமா சாத்தியம்? சம்பாதித்தால்தான் சாப்பாடு என்கிற நிலைமை, என்றைக்கு மீத்து வைத்துக் கொண்டு ஓய்வு பெற்றுத் திரும்பப்போகிறோம். அதுகூட இல்லை. சம்பாதிக்கிறது சாப்பாட்டுக்குப் போதுமானதாகத்தான் இருக்கிறது. பெரியப்பாவோ சாத்தனூரை விட்டுக் கிளம்ப மாட்டார். என்ன செய்யறது வருஷத்திற்கு ஒரு முறை மற்ற எந்தக் காரியம் எப்படிப் போனாலும் வந்து நாலுநாள் இருந்து பார்த்து விட்டுப் போகிறேன். அவ்வளவுதான் நான் செய்யலாம்” என்றான் ராமு. 

“உன் அண்ணா அதுகூடச் செய்யறதில்லை” 

“அதைச்சொல்லி என்ன மாமா பண்றது? அவன் குடும்பம் பெரிசாயிடுத்து. தெரியாமல் பார்த்து ஒரு பிசாசைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாயிற்று. என்ன பண்றது? ஏதோ மானமாய்க் காலந்தள்ளினால் போதும் என்று அவன் சிரமப்படறான்; எங்கே வரது, எங்கே போறது?” என்றான் ராமு. 

“அது போகட்டும். நீ இன்னிக்கு வாயேன், எங்காத்துக்குச் சாப்பிட” என்று அவனை அழைத்தார் சிவராமையர். ஒரு விருந்தாளிகூட வந்திருக்கு; என் மருமான் இது. கிருஷ்ண மூர்த்தின்னு பெயர். ஜர்மனி, ஜப்பான் எல்லாம் போய் வந்திருக்கான்” என்று மேஜர் மூர்த்தியை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் மாமா. 

“எங்கேயோ பார்த்த முகமா இருக்கே என்று பார்த்தேன். மேஜர் மூர்த்தின்னு போட்டோவெல்லாம் பத்திரிகைகளெல்லாம் வந்ததோ?” என்றான் ராமு. 

“ஆமாம். அவனேதான். ஏதோ பெரிய மனசு பண்ணி மாமா கூப்பிட்டதற்கு ஆட்சேபம் செய்யாமல் வந்திருக்கிறான்..” என்றார் சிவராமையர். “உங்க பெரியப்பாவைப் பற்றி இப்பத்தான் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நம்ப பேசிண்டிருந்தமே அந்தக் கிட்டாவின் தம்பி பிள்ளை இவன், இரண்டாவது பிள்ளை” என்றார். 

“தெரிந்துகொண்டேன்” என்றான் மூர்த்தி. 

“இன்னும் இரண்டொரு நாள் இருப்பீர்களில்லையா?” என்று மூர்த்தியை ராமு கேட்டான். 

“தெரியணும். ஒண்ணும் நிச்சயமில்லை” என்றான் மூர்த்தி. “இருப்பான் இருப்பான்!” என்றார் சிவராமையர். அவருக்குத் தன்னைச் சாத்தனூர் கிராமத்தில் தன்னுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எவ்வளவு ஆசை இருந்தது மனத்தில் என்பதுபற்றி மூர்த்திக்கு வியப்பாக இருந்தது. 

“இங்கே அவருக்குப் பொழுது போகாது. காவேரிக் கரையில் உள்ள அசல் பட்டிக்காடு இது! அவர் நாகரிக உலகம் பூராவும் சுற்றிப் பார்த்தவர்” என்றான் ராமு. 

“அவனுக்கு இங்கே இருப்புக்கொள்ளாது என்பது உண்மைதான்” என்றார் சிவராமையர். 

“மனிதன் மனிதத்தன்மையை இழக்காத எந்த இடமுமே புனிதமானதுதானே? இது சாத்தனூராக இருந்தால் என்ன? லண்டன் மாநகரமாக இருந்தால் என்ன?” என்றான் மூர்த்தி. 

“பட்டணக்கரைகளைவிட இங்கே வசிப்பது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது” என்றான் ராமு. 

தன் மருமான் மேஜர் மூர்த்தி அந்த ராமுவிடம் ஒரு விவாதத் தைத் தொடங்கிவிடப் போகிறானே என்று பயம் சிவராமையருக்கு. அவர், “இன்று எங்காத்துக்குச் சாப்பிட வாயேன். பெரியப்பாவிடமும்.” என்று ராமுவிடம் மீண்டும் சொன்னார். 

ராமு, ‘இன்றைக்கு வேண்டாம். நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். சாப்பிட்டுவிட்டு வருகிறேன் உங்காத்துக்கு, மத்தியானமாக” என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டு போனான். 

மூர்த்தியும் சிவராமையரும் தெருத் திரும்பி, தெற்குப் பார்த்து, காவேரியை நோக்கி நடந்தார்கள். 

அத்தியாயம்-18 

“மெல்லவே போவோம். அவசரம் ஒன்றும் இல்லையே! இந்தச் சந்து நடப்பதற்கு ரொம்பவும் நன்றாயிருக்கிறது” என்றான் மூர்த்தி. 

அவன் வீட்டிலிருந்து பார்த்தபோது தெரிந்த மூங்கிற் புதர், சர்வமானிய அக்கிரகாரமும் அந்தச் சந்தும் சேருகிற இடத்திலே, இடது கைப் பக்கத்தில் இருந்தது. தெற்கு வடக்காகச் சந்து, மூங்கிற் புதரைத் தாண்டி இரண்டு பக்கமும் ஓடிற்று. சந்தில் வெயிலே தெரியவில்லை. நிழல் அடர்ந்திராத சில இடங்களில் மட்டும் வெயில் சில்லுகள் பளிச்சிட்டன. சந்தின் இருபுறத்திலும் எண்ணிக்கையற்ற பறவைகளின் விதவிதமான குரல்கள் கேட்டன. நாட்டுப்புறத்தில் தண்ணீர் இருக்கிற இடத்தில் வீசுகிற சுகந்தம் அங்கே வீசியது. சந்தின் இருபுறமும் அழகாக நூல் பிடித்த மாதிரி, முள்வேலி இருந்தது. களிமண் தரைமேல் புல்லுச் செடிகளும் முளைத்திருந்தன. நடப்பதற்கு, கால் வைப்பதற்கு ரொம்பவும் சுகமாக இருந்தது. தெருவின் கோடி வீட்டுச் சுவர்கள் மிகவும் சுத்தமாக இருந்தன. சமீப காலத்தில் மிகவும் சமீப காலத்தில் – சிமெண்டு பூசிச் செப்பனிட்டது போல் இருந்தது. 

நாரத்தை மரங்கள் நிறைந்த ஒரே தோட்டம் முதலில் இருந்தது. “இந்தத் தோட்டம் பட்டாபிராமையருடையது. அவர் ரொம்பவும் சிரமப்பட்டு இந்தத் தோட்டத்தைக் காப்பாற்றி வருகிறார். புஸ்தகங்களை வைத்துப் படித்துப் படித்து நாரத்தை மரங்களை ஏராளமாகக் காய்க்க வைக்கிறார். கூலியாட்களுக்குச் சம்பளம் முதல் உணவு வரையில் எல்லாம் ஏராளமான செலவுதான்” என்றார் சிவராமையர். 

“இவ்வளவு ஏராளமான செலவுக்கும் கவனத்துக்கும தகுந்த கூலி கிடைக்குமா?” என்று கேட்டான் மூர்த்தி. 

சிவராமையர் சொன்னார்: “கூலியை உத்தேசித்தா செய்கிறார் அவர்? இல்லவே இல்லை. நாரத்தங்காய் பயிரிடுவதில் அவருக்கு அளவு கடந்த ஆர்வம். காய்க்கிற நாரத்தங்காய்களை முதலில் உறவினருக்கும் தெருவுக்கும் ஊருக்கும் என்று பங்கு போட்டு, நாரத்தங்கொல்லை நாரத்தங்காய் நன்றாயிருக்கும் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் ஆறு ஏழு எட்டு பத்து என்று அனுப்பிவிடுவார். கண்டு மிஞ்சினால் கும்பகோணத்தில் உள்ள நண்பர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிடுவார். ஒரு நாரத்தங்காயைக் கூடப் பட்டாபிராமையர் விற்று நான் பார்த்ததில்லை” என்றார். 

‘அப்படியா? அதைக் காய்க்க வைக்கப் பாடுபட்டு, அவர் சாப்பிடு வதிலும் பிறர் – வேண்டியவர்கள் – சாப்பிடுவதிலும் திருப்தி அடைகிறாரே. தேவலையே!” என்றான் மூர்த்தி. 

“பட்டாபிராமையர் ஒரு தினுசான பேர்வழி. சொத்து அதிகம் இல்லாவிட்டாலும் எல்லோருக்கும் கொடுக்கவேண்டும், தானும் சாப்பிட வேண்டும் என்கிற கொள்கையும் தாராள சிந்தனையும் உள்ளவர். தெருவுக்கு யாராவது அந்நியப்பேர் வந்துவிட்டால், தெரிந்தவரா, தெரியாதவரா என்று யோசிக்காமல், சாப்பிட வாயேன் என்று அழைத்துக் கொண்டு போய் விடுவார். 

யாரையாவது அழைத்துத் தம் வீட்டில் சாப்பிடச் செய்யாவிட்டால் அவருக்கு அன்று சாப்பாடு இறங்காது” என்றார் சிவராமையர். 

“ஏது, ஏது நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சாத்தனூர் பூராவுமே ஆயிரத்துக்கு ஒருவர் ரகத்தைச் சேர்ந்த மனிதர்கள்தான் இருப்பார்கள் போல் இருக்கிறது?” என்றான் மூர்த்தி. 

“அப்படிச் சொல்லவில்லை நான். இதற்கு மாறான ரகத்தில் ஒரு ஏழெட்டுப் பேரைப்பற்றி நீ காலையில் அறிந்து கொண்டாய் அல்லவா? அதற்கு மாற்றாகத்தான் சில பேரைப் பற்றிச் சொல்ல நினைத்தேன்; சொன்னேன்” என்றார் சிவராமையர். 

மூர்த்தி பதில் சொல்லவில்லை. வேலி ஓரத்தில், இடுப்புயரம் வளர்ந்திருந்த ஒரு செடியில் பூத்திருந்த நீல நிறப் பூ ஒன்றைப் பறித்து மோந்து பார்த்தான்; அது ஒரே நாற்றமாக நாறியது. ‘சீ’ என்று பூவை எறிந்துவிட்ட பிறகு கூடக் கை நாறிற்று. பார்ப்பதற்கு என்னவோ அந்தப் பூவும், ஆறு இதழ்களுடன், நீல வர்ணமாக அழகாகவேதான் இருந்தது. 

மூர்த்தி பூவைத் தூக்கி எறிந்ததைச் சிவராமையர் கவனிக்காமல் இல்லை. கவனித்தார். ஆனால் அதைப்பற்றி எதுவும் சொல்லாமல் பட்டாபிராமையரைப்பற்றித் தொடர்ந்து சொன்னார்: “அவர் தெருவுக்கு வருபவர்களைச் சாப்பிடக் கூப்பிட்டு வருவதைப் பற்றி அவர் பையன் என்ன சொல்கிறான் தெரியுமா?” என்றார். 

“சொல்லுங்கள்” என்றான் மூர்த்தி. 

“போன ஜன்மத்தில் அவர் ஒரு சத்திர நிர்வாகியாகவோ ஹோட்டல் சொந்தக்காரராகவோ இருந்திருக்க வேண்டும் என்கிறான் அவர் பையன்” என்றார் சிவராமையர். 

“ஏனாம்?” 

“இந்த ஜன்மத்திலும் பூர்வஜன்மப் பழக்க வேகத்தால் எல்லோரையும் சாப்பிடக் கூப்பிட்டு வருகிறார்; லாபம் அடைய மட்டும் மறந்து விடுகிறார்; என்பது அவர் பையன் அபிப்பிராயம்” என்றார் சிவராமையர். 

“பையனுக்கு வக்ரபூத்தி என்பதைத் தவிர, கெட்டிக்காரன்தான் போல் இருக்கிறது” என்றான் மூர்த்தி. 

“ஆமாம், பி.ஏ. பரீட்சையில் ராஜதானியிலேயே முதலாவதாகப் போன வருஷம் பாஸ் பண்ணினான்” என்றார் சிவராமையர். 

“தேவலையே!” என்றான் மூர்த்தி. 

அவனுக்குத் தன் கல்லூரி நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன. அறுபது பேரில் முதல்வனாக இருக்க அவன் எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டியிருந்தது. சிலசமயம் முதல்வனாக இருப்பது சாத்தியமில்லாமல் போய்விடும். வகுப்பில் இரண்டாவது பையன் ஆகிவிடுவான். 

நாரத்தங்கொல்லையை அடுத்து வேறு ஒரு தோட்டம் இருந்தது. அதில் எட்டு வரிசை தென்னைமரங்கள் கிழக்கு மேற்காக இருந்தன. தென்னைகள் தவிர மா, பல முதலிய மரங்களும் இருந்தன. நடுவிலே ஒரு சிறு குளம் இருந்தது. அக்குளத்தைச் சுற்றிப் பூஜைக்குத் தேவையான சகலவிதமான புஷ்பங்களும் இருந்தன. ஒரு துளசி மாடம் இருந்தது. அதை அடுத்துச் சிறியதாக ஒரு சவுக்கண்டி இருந்தது. கூரை போட்ட சிமெண்டுத் தளமிட்ட சவுக்கண்டி. 

“மனத்துக்கும் உடலுக்கும் சௌக்கியம் தரக்கூடிய இடம் இது” என்றான் மூர்த்தி; சற்று நின்று சவுக்கண்டியையும் துளசி மாடத்தையும், கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த புஷ்பச் செடிகளையும் தெளிந்த நீரோடு கூடிய குளத்தையும் பார்த்துக் கொண்டு. 

“தெருவிலிருந்த வீட்டையும் தொலைத்த பிறகு சாம்ப மூர்த்தி ராயர், இந்தத் தோட்டத்தில் இந்தச் சவுக்கண்டியை அமைத்துக்கொண்டு ஒரு வருஷம் இருந்துவிட்டுப் பிறகு இங்கிருந்துதான் பாண்டுரங்க பஜனை செய்துகொண்டு பண்டரீபுரம் கிளம்பினார்” என்றார் சிவராமையர். 

“பண்டரீபுரத்திலிருந்து அவர் இன்னும் திரும்ப வில்லையோ? சவுக்கண்டியில் யாரும் ஆள் நடமாட்டம் இருக்கிற மாதிரியே தெரிய வில்லையே” என்றான் மூர்த்தி. 

“அவர் பண்டரீபுரத்திலிருந்து திரும்பவே மாட்டார். நேரடியாக ஒரே எட்டில், பண்டரீபுரத்திலிருந்து வைகுந்தத்துக்கே போய்விட்டார். அவர் வாழ்வு அற்புதமான வாழ்க்கை அவகாசம் கிடைக்கும்போது பூராவும் சொல்லுகிறேன். மனிதனுடைய பலவீனத்துக்கும் பலத்துக்கும் ஆண்மைக்கும் ஆண்மையின்மைக்கும் அவர் ஓர் உதாரணம். அவர் இருக்கும்போதும், இறந்தபிறகும் அவரால் திருந்தியவர்கள் பலர்…” என்றார் சிவராமையர். 

“அப்படியா?” என்றான் மூர்த்தி. 

“என்ன, சாம்பமூர்த்திராயருடைய சவுக்கண்டியைப் பற்றி ஆராய்ச்சி நடத்தத் தொடங்கிவிட்டேள்? என்ன விசேஷம்? யாரு மாமா இது? புதுசாக இருக்கே?” என்று கேட்டுக் கொண்டே வந்து சேர்ந்த ஆசாமியைக் கவனித்தான் மூர்த்தி. 

அம்மை வடு நிறைந்த முகமும் வாராத தலையும் விளிம்பு ஓரங்களிலும் களிம்புப் பச்சை காட்டிய மூக்குக் கண்ணாடியும் லேசான முதுகுக் கூனலுமாக இருந்தார் வந்தவர். 

“இவ என் மருமான்; மூர்த்தின்னு பெயர். ஜர்மனி, ஜப்பான், இ.தே. ரா.எல்லாவற்றிலும் போய் இருந்தவன்” என்று மேஜர் மூர்த்தியை வந்தவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பிறகு மூர்த்தியின் பக்கம் திரும்பிச் சொன்னார் சிவராமையர்: ‘இவர் ஒரு கதாசிரியர், சாமா என்று பெயர். இரண்டொரு புஸ்தகங்கள் போட்டிருக்கிறார்.’ 

சாமா என்கிற இலக்கியாசிரியன் குறுக்கிட்டான்: “யாரும் படிக்காத புஸ்தகங்கள் ஏழெட்டுப் போட்டிருக்கிறேன்” என்றான். 

“பத்திரிகைகளிலெல்லாம் நிறையக் கதைகள் எழுதியிருக்கிறார். பட்டாபிராமையர்னு – முன்னே சொன்னேனே அந்தப் பட்டாபிராமையர் அல்ல – இவர் வேறு ஒருத்தர்; சர்க்கார் உத்தியோகத்திலிருந்து பென்ஷனுடன் விலகிக்கொண்டவர். அவருடைய ஒரே பிள்ளை..” என்று இலக்கி யாசிரியன் சாமாவை மூர்த்திக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சிவராமையர். 

“பெயரை மட்டும் இரண்டொரு பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன். ஒன்றும் படித்ததில்லை” என்றான் மூர்த்தி. 

“அதனால் ஒன்றும் நஷ்டமில்லை” என்று அடக்கமும் அடக்கமில்லாமையும் தொனித்த குரலிலே பதில் அளித்தான் இலக்கியாசிரியன் சாமா. 

ஒரு விநாடி, பதில் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கிவிட்டு மூர்த்தி சொன்னான்: “நீங்கள் எழுதிவிடுகிறீர்களே தவிர, படிப்பது படிக்காதிருப்பது, நஷ்டம் நஷ்டமில்லை என்பதை வாசிக்கப் பிறந்தவர்களாகிய நாங்கள்தானே சொல்லவேண்டும்?” என்று கேட்டான். 

“எங்க ஊர்க்காரர் என்பதற்காக மட்டும் நான் சொல்வதாக 

நினைத்துக்கொள்ளாதே, கிட்டா. சாமா உண்மையிலேயே நன்றாக எழுதுகிறவன்தான். நீ வாசித்தாயானால் உனக்கு நிச்சயம் அவன் எழுத்துப் பிடிக்கும்” என்றார் சிவராமையர். 

சாமா சிரித்தான். “சிவராமையர் சொல்லுகிறாரே என்று நீங்கள் படித்து ஏமாந்து போய்விட வேண்டாம், ஸார். ஆமாம், இப்பவே சொல்லி விட்டேன். நான் எழுதுகிற கதைகளும் கட்டுரைகளும் உண்மையில் என்னை தவிர வேறு யாருக்குமே பிடிப்பது கிடையாது” என்றான். 

“அவ்வளவு நிச்சயமாகச் சொல்லுகிறீர்களே?” என்று சொல்லிச் சிரித்தான் மூர்த்தி. 

“நிச்சயமில்லாமல் என்ன, ஸார்? நிச்சயந்தான். இதோ சவுக்கண்டி யைப் பார்க்கிறீர்களே; இந்தச் சவுக்கண்டியின் சொந்தக்காரரைத் தெருவிலி ருந்து கொஞ்சம் கொஞ்சமாக விரட்டியடித்து, இந்தத் தோட்டத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு குடியேறச் செய்தார்கள். கடைசியில் இந்தச் சவுக்கண்டியையும் பிடுங்கிக்கொண்டு அவரை இந்தத் திசையிலிருந்தே துரத்திவிட்டார்கள். சாம்பமூர்த்தி ராயரைப் போன்ற மனிதர்கள் மட்டுந்தான் உயிர்வாழ யோக்கியதை உள்ளவர்கள்; மற்றவர்கள் மாள்வது தான் நியாயம் என்கிற கொள்கையை உடையவன் நான். என் எழுத்து இந்தத் தெருவில் யாருக்காவது பிடிக்கும் என்று சொன்னால் நம்பும்படியாக இருக்கிறதா?” என்றான் சாமா, அடக்கமாட்டாத ஆத்திரத்துடன். 

சிவராமையர் சொன்னார்: “ஆத்திரப்படாமல் கேள். சாமா, நான் சொல்லுகிறேன். யாரும் சாம்பமூர்த்தி ராயரைச் சர்வமானியத் தெருவிலி ருந்து இங்கும், இங்கிருந்து பண்டரீபுரத்துக்கும் விரட்டவில்லை. 

அவர் தம் சுயதேவையைப் பூர்த்தி செய்துகொள்ள, ஆத்மார்த்தமான ஒரு பரிபூரணத்தை எட்டிப்பிடிக்க ஆரம்பத்திலிருந்து முயன்றுகொண்டே வந்தார். குதிரைச் சவாரி செய்யும் மணமகனாகவும், பிறகு சொத்துள்ள கிரஹஸ்தனாகவும், குடியானவனிடம் நெல் வேண்டாத மிராசுதாராகவும், பண்டரிநாதனை பூஜிப்பவராகவும், பெண்டிழந்தவராகவும், குடிகாரராகவும், கூத்திமார் லோலராகவும், பிறகு சகலமும் ஒடுங்கி நீயறிந்த சாம்பமூர்த்தி ராயராகவும், சவுக்கண்டியில் சந்நியாசியாகவும், அவர் ஓர் ஆத்ம தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பாடுபட்டார். பூர்ணத்வம் பண்டரீபுரத்தில் நின்று கை காட்டி அழைத்தது; போனார். அவரை யாரும் விரட்டியதாக நீ நினைப்பது அவருடைய மேன்மைக்கே இழுக்குத் தேடுவதாகும்” என்றார் சிவராமையர். 

அவர் சொன்னதுதான் சரி என்று பட்டது மூர்த்திக்கும். 

ஆனால் சாமா ஒப்புக்கொள்ளுகிற மாதிரி இல்லை. “வெறும் வார்த்தைகள்” என்றான். 

சிவராமையருக்கும் கோபம் வருவது மாதிரி இருந்தது. “வார்த்தை வியாபாரி நீ! நீ என்னைப் பார்த்து, நான் சொல்லுவது வெறும் வார்த்தைகள் என்கிறாயே! இது சரியா?” என்று கேட்டார். 

சாமா சிறிது நேரம் யோசித்தான். பிறகு அடக்கமாகச் சொன் னான்; “உண்மைதான். நான் வார்த்தை வியாபாரிதான். இந்த உலகத்தில் வேறு என்னத்தைச் செய்ய முடிகிறது?” என்றான். ஒரு பெருமூச்சு விட்டான். “காவேரிக்குத் தானே போகிறீர்கள்? நானும் வரேன். காவேரியில் ஸ்நானம் செய்தால் உடம்பிலுள்ள அழுக்குகள் மட்டும் அல்ல, மனசிலுள்ள அழுக்குகளும் கூட அழிந்துவிடும் என்று சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது” என்றான். 

மூவரும் நகர்ந்தார்கள் காவேரிக் கரையை நோக்கி. 

“இவ்வளவுக்கும் பிறகு நீங்கள் எழுதியிருப்பதில் ஏதாவது கொஞ்சம் படிக்கவேண்டும். அது அவசியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது” என்றான் மூர்த்தி. 

“நான் அப்படி ஒன்றும் பிரமாதமாக எழுதியிருக்க மாட்டேன். பிரமாதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு படிக்க வேண்டாம்” என்றான் சாமா. 

“அவரவர்களிடம் உள்ளத்தில் சிறந்ததைத் தரத்தான் உலகில் எல்லோருமே முயலவேண்டும். அவரவர்கள் தருவதும் வெளியிடுவதும் எவ்வளவு சிறந்தது என்பது வேறு பல காரணங்களையும் காரியங்களையும் பொறுத்தது; இல்லையா?” என்றான் மூர்த்தி. 

இலக்கியாசிரியன் சாமா சிறிது தயங்கிவிட்டுச் சொன்னான்; “என்னில் சிறந்தது என்று நான் அறிவதைத் தந்திருக்கிறேன்; அதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் அது இன்னும் சிறந்ததாக இல்லையே; சாம்பமூர்த்தி ராயருக்கும் ஏற்றதாக இல்லையே என்பதுதான் என் வருத்தம் எல்லாம்.” 

“நான் ஜர்மனியிலும் ஜப்பானிலும் நம் ஊரிலேயும் பல ஆசிரியர் களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களில் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் இந்த, ‘சிறந்தது, எவ்வளவு சிறந்தது, ஏன் சிறந்தது, இன்னும் சிறந்தது’ என்கிற பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டார்கள்” என்றான் மூர்த்தி. 

“அவர்கள்தான் அறிவாளிகள்” என்றான் சாமா. 

அவன் உள்ளத்தின் அமைதியின்மை அவனை இப்படிப் பேசத் தூண்டியது என்பது மூர்த்திக்குப் புரிந்தது. அவன் எழுதியது – கதையோ கட்டுரையோ – எதையானாலும் படித்துப் பார்த்துவிட வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. 

“தார்மீகமான கோபம் என்பதே கலிகாலத்தில் அரிதாகிக் கொண்டிருக்கிறது” என்றார் சிவராமையர். 

“தர்மத்தையும் மனிதனுடைய ஆத்மாவையும் அரித்து, மண்ணாக உதிர்த்துவிடக் கூடிய கோபமும் வெறுப்பும் உலகம் பூராவும் இன்று நிறைந்திருக்கின்றன” என்றான் சாமா 

“நேரில் பார்த்தவன் நான் இருக்கிறேன்” என்றான் மூர்த்தி. 

“ஏது? உலகில் மூன்று பேர் இப்படிப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி இப்படிப்பட்ட ஒரே முடிவுக்கு வருவது என்பது ஒரு விசேஷ சமபவந்தான்!” என்று கூறிச் சிரித்தான் சாமா. 

“விசேஷ சம்பவந்தான். மருமானுடைய வருகைக்காக என் ஆம்படையாள் வடை பாயசமாவது பண்ணியிருப்பாள். எங்காத்துக்குச் சாப்பிட வாயேன், சாமா” என்று சாமாவை அழைத்தார் சிவராமையர், 

சிவராமையருக்கு வயசு என்னவோ அதிகம் ஆகிவிட்டதே தவிர, அவர் உள்ளத்தில் உண்மையில் வாலிபந்தான் என்று எண்ணிக்கொண்டே மூர்த்தி எதிர்ப்பட்ட அரசமரத்தைத் தாண்டிச் சரக்கொன்றை மரத்தைத் தாண்டி, காவேரிக்கரை ஏறினான். 

அத்தியாயம்-19 

காவேரி என்கிற பெயருக்கு எண்ணிக்கையற்ற தலைமுறை களாகக் கவிகள் தனியான ஓர் அர்த்தத்தைக் கற்பித்துத் தந்திருக்கிறார்கள். அந்த அர்த்தம காவேரி தீரத்தில் பிறந்து, வளர்ந்து, பெரியவர்கள் ஆனவாகளுக்கு மட்டுமே தெரியும் என்று சொலவது ஒரு விதத்தில் தவறுதான் – ஒரு விதத்தில் தவறும் ஆகாது. 

மூர்த்தி, தன் ஆயுளில் பல ஊர்களைச் சுற்றி இருக்கிறான். பல ஆறுகளைப் பார்த்திருக்கிறான். கவிதைப் புகழ் பெற்ற எத்தனையோ ஆறுகளில் நீந்தி விளையாடியிருக்கிறான். 

ஆனால் அவன் அதற்குமுன் காவேரி ஆற்றை – நினைவு தெரிந்து – பார்த்ததுகூடக் கிடையாது. பிறந்தது என்னவோ சாத்தனூரில் சர்வமானிய அக்கிரகாரத்தில்தான். தாய் இருந்தது அவன ‘ஞாபகத்தில் உறைக்குமுன் அவள் இறந்து விட்டாள் தாய் மாமனைப்பற்றி அவன் என்றைக்குமே கவலைப் பட்டதில்லை. ஆகவே சாத்தனூருக்கோ காவேரிக்கரைக்கோ மூர்த்தி வந்ததே இல்லை. 

காவேரி என்று இப்போது நினைக்கும்போது எத்தனையோ எண்ணங்கள் அவன் மனசிலே ஊசலாடின. ஊசலாடப் போராடின. இதுவரையில் தான் காவேரியாற்றைப் பார்த்ததுகூடக் கிடையாது என்பதை எண்ணியபோது அவனுக்கே வெட்கமாக இருந்தது. 

காவேரி என்று தாயை அழைப்பது போல ஓவென்று உரக்கக் கூப்பிட்டுவிட்டு, கரைமேட்டிலிருந்து விழுந்து புரண்டு காவேரித் தாயக்கு நமஸ்காரம் செய்யவேண்டுமென்று தோன்றியது மூர்த்திக்கு. ‘என்ன பைத்தியக்காரத்தனம்!’ என்கிற சிந்தை தொடர்ந்தது. கூட மாமா சிவராமையர் இருந்தார். இலக்கியாசிரியன் ஒருவனுங்கூட இருந்தான். “இது என்னடா, வக்கிரம்! முழுக்கோணல்!” என்று நினைப்பார்களே !’ 

தன் நினைப்பை அடக்கிக் கொண்டு மூர்த்தி, “காவேரி! காவேரி!’ என்பது இன்று வரையில் என்னைப்பற்றிய வரையில் ஒரு பெயரே தவிர வேறு அல்ல. இன்றுதான் நான் முதல் தடவையாகக் காவேரிக் கரையில் நிற்கிறேன். காவேரியாற்றையே பார்க்கிறேன்” என்றான். 

“நீ பிறந்த இடம் சாத்தனூர். அதையே நினைவு தெரிந்து இன்றுதான் பார்க்கிறாய்;. இல்லையா?” என்றார் சிவராமையர். 

சாமா சொன்னான்: “சொந்த ஊர் எது என்று கேட்டால் நாம நமமுடைய தகப்பனாருடைய ஊரைச் சொல்வதுதான் வழக்கம். உண்மையில் பிறந்த ஊர் எது என்றுகேட்டால் தாயாருடைய ஊராகத்தான் இருக்கும்.” 

“இதிலே அதிசயம் ஒன்றுமில்லை. நாம் இருவருக்கும் சொந்தந்தானே!” என்றார் சிவராமையர். 

“இந்தக் காவேரி மண்ணுக்குந்தான் சொந்தம்” என்றான சாமா, மனத்தில் இருந்த ஒரு கசப்பு வார்த்தைகளிலும் தொனிக்க. 

சிவராமையர் சற்று யோசித்தார். பிறகு, “உண்மைதான். காவேரி மண்ணுக்குந்தான் நாம் சொந்தம். நான் இங்கேதான் இறக்க விரும்புகிறேன். இங்கேதான் இருக்கவும் விரும்பினேன் என்பது வேறு விஷயம். என்னை இதே காவேரிக்கரையில் கிழக்கே நாலு துறைகளுக்கப்பால் இருக்கிற ஸ்மசானத்தில் வைத்துக் கொளுத்த வேண்டும் என்பதுதான் என் ஆசை. என் சாம்பலும் எலும்பும் இந்த மண்ணிலே கலந்து இந்தக் காவேரித் தண்ணீரிலே கரைந்துவிட வேண்டும் என்பதுதான் ஆனீச. ஏன், இந்த ஆசைக்கு அஸ்திவாரம் என்ன என்று யாராவது சொல்ல முடியுமோ?” என்றார். 

மனிதனுடைய ஆசைகள், சிந்தனைகள், கனவுகள், வார்த்தைகள் எல்லாவற்றுக்குமே ஆண் பெண் உறவு சம்பந்தமான அர்த்தம் கற்பித்து உலகச் சிந்தனையையே பொய்யாக ஒரு புரட்டுப் புரட்டிய ஸிக்மண்டு ப்ராய்டு என்பவன்கூட, இந்த ஆசைக்கு காரணம் கண்டுபிடித்துச் சொல்லி விட முடியாது என்பது திண்ணம்” என்றான் மூர்த்தி. 

“காவேரி நதிக் கரையிலே நம்முடைய முன்னோர்கள் பலரும் வாழ்ந்து வந்தார்கள். நமது ஊனும் உடலும் உணர்வும் எல்லாம் காவேரி நதி வளத்திலேதான். காவேரியின் நீரே நமக்குள் ரத்தமாக ஓடுகிறது என்று வேண்டுமானால் கற்பனை செய்து கொள்ளலாம்” என்றார் சிவராமையர். 

“அது எவ்வளவு தவறான, அழகில்லாத, உண்மைக் கலப்பே இல்லாத கற்பனை என்பது சற்று நின்று யோசித்தால் தெரிந்து விடும்” என்றான் சாமா 

“யோசிப்போமே; நிழலில்தான் நிற்கிறோம். சாத்தனூரில் உள்ள நமக்கு என்ன அவசரம் கொள்ளை போகிறது?” என்றார் சிவராமையர். 

“காவேரி நதி தீரத்தில் நம் முன்னோர்கள் குடியேறியதெல்லாம் சென்ற சில தலைமுறைகளுக்கு முன்தான்” என்றான் சாமா. 

“அப்படியானால் அதற்குமுன்…?” என்றான் மேஜர் மூர்த்தி 

“விஷயத்தைத் தெளிவாக்குவதற்கு ஓர் உதாரணத்தை எடுத்துக் கொண்டு சொல்லுகிறேன் நான். நானேதான் அந்த உதாரணம். என் அப்பா சாத்தனூர்க்காரர். ஆனால் என் தாத்தா வேறு ஓர் ஊர்க்காரர். அவர் சாத்தனூரில் கல்யாணம் செய்து கொண்டவர். இதுவே சௌகரியமாக இருக்கிறது என்று இங்கே தங்கிவிட்டார். அதற்கு முன் என் தாத்தாவின் தகப்பனாருக்குச் சொந்த ஊர் திருவாலங்காடு. ஆனால் அதுவும் காவேரி தீரந்தான். ஆனால் அந்தத் தாத்தாவின் தகப்பனாரின் தாத்தாவுக்குத் தாத்தா ஹைதருக்குப் பயந்துகொண்டு அவர் காலத்தில் தெற்கே ஹிந்து ராஜாக்களிடம் இருந்த ராஜ்யங்களில் வந்து குடிபுகுந்தவர். இது நூற்றைம்பது நூற்றறுபது வருஷக் கதை. இதற்குள்ளாகவே இது ஓரளவு மறைந்துவிட்டது. என் குடும்பத்துக்கே மறந்துவிட்டது. அதற்கு முந்திய கதையை – மனிதன் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போய்க் குடி ஏறிய கதையை -எப்படி அறிந்து யார் சொல்வது?” என்றான் சாமா. 

“அதனால் காவேரியின் புனிதத் தன்மை போய்விடுமா?” என்றார் சிவராமையர். 

இதுவரை தனக்குத் தோன்றாத ஒரு புது உண்மையைக் கேட்கத் தயாராக நின்றான் மூர்த்தி. ஆட்சேபம் ஆதரவு இரண்டுக்கும் அவன் மனசிலும் விஷயங்களும், வார்த்தைகளும் தோன்றின. பிறகு. அவசியமானால் சொல்லிக்கொள்ளலாம் என்று அவன் பேசாமல் இருந்தான். 

சாமா சொன்னான்: “காவேரியின் புனிதத் தன்மையைக் குறைத்துச் சொல்லவில்லை நான். மனிதன் காலடிபட்டுள்ள எந்த இடமும், கைப்பட்டுள்ள எந்த இடமும், நின்று சிந்தித்துள்ள எந்த இடமும் புனிதமானதுதான்; காவேரி நதிக்கரையைப்போல் புனிதமானதுதான்” என்றான். 

“உண்மைதான்; நாம் காவேரி என்று நமக்குள் உள்ள, அவ்வப் போது ஏற்படுகிற ஒரு தேவைக்காக ஏதோ ஒன்றை உருவகப்படுத்திக் கொண்டு போற்றுகிறோம். அவ்வளவுதான்” என்றான் மூர்த்தி. 

“நம் உள்ளத்தில் உள்ள புனிதத் தன்மையையோ, புனிதத் தன்மையல்லாததையோதான் நாம் வெளிக்கொணர்ந்து காவேரிக்குத் தரமுடியும்!” என்றான் சாமா. 

“காவேரிக்கு என்ன? எல்லாவற்றுக்குமே அதுதானே பொருந்தும்?” என்றார் சிவராமையர். 

“ஆமாம், கோயில், காவேரி, பள்ளிக்கூடம், கிராமம், தெரு, குடும்பம் எல்லாவற்றுக்குமே நாம் ஏற்றி வைக்கிற புனிதத்தன்மைதான் ஒளி வீசும். நாம் ஏற்றிக் காண்பிக்கிற கற்பூரந்தான் எதிர் ஒளி தரும்” என்றான் சாமா, 

மனிதனைச் சிந்தனைப் பலவீனம் என்கிற வியாதி எத்தனை இடங்களில் அமுக்கத் துயாாாகக் காத்திருந்தது என்று யோசித்தான் மூர்த்தி. சிந்திக்கத் தெரிந்தவன் என்று பெருமை பாராட்டிக்கொண்டிருந்த தன்னையே,  ஒன்றன்பின் ஒன்றாகப் பல தவறுகளைச் செய்யத் தூண்டி விட்டதே? 

தான் சத்தனூர் வந்ததும் ஒரு தவறுதானோ? 

பலவீனம் நிறைந்த ஒரு வினாடியில் செய்துவிட்டு ஆயுள் பூராவும் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயமோ, அது? 

சிந்திக்கத் தெரிந்தவனாக இருந்துதான் என்ன பலன்? 

தன் சிந்தனைகளின் அசட்டுத்தனத்தைச் சாமா இந்த முப்பது வயதாகாத வாலிபன்; கேவலம் பேனா வீரன் – இடித்துக் காட்டுகிறான். கிழவராகி விட்ட சிவராமையர், அவனுடைய மாமா, அவன் கட்டுகிற சிந்தனைக் கோட்டைகளை ஒரே வார்த்தையில் தகர்த்து எறிந்துவிடுகிறார். ‘சிந்தித்தும் புரியாத விஷயங்களைத் துரத்தி ஓடி என்னடா பலன் ?” என்று வெகு சுலபமாகக் கேட்டுவிட்டு அவன் மாமி நகர்ந்து விடுகிறாள்; அதுவும் சமையல் அறைக்கு’ வாழ்க்கையில் மிகவும் சுலபமான பலனுள்ள காரியங் களைச்செய்வதற்காகச் சமையல் அறைக்கு! 

கிட்டா என்று ஒரு கிழவர் தன் வாழ்க்கையே தியாகமாகச் சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்தில் வாழ்ந்து வந்தார். நச்சுவாய்க் கிழம் நாராயணையரும் அதே தெருவில், தம் வாழ்வின் அழமின்மையைத் தெரிந்துகொள்ளாமிலே வாழ்ந்து வந்தார். பாடுபட்டு உழைத்துக் காசு கொடுத்து வாங்கி எருப்போட்டு, காய்க்காத வகை மரங்களையும் காய்க்க வைத்து ஒருவர் பிறருக்குக் கொடுத்துத் திருப்தி அடைந்துகொண்டிருந்தார். அதே சமயம், அவருடைய உதாரகுணத்தைப் பூராவும் உதாசீனம் செய்து விட்டுப் பிள்ளையார் கோயில் பொதுச்சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே பிள்ளையாருக்குக் குட்டிக்கொள்வதும் தோப்புக் கரணங்கள் போடுவதுமாக ஒருவர் – பெரிய மனிதர் என்று – வாழ்ந்து வந்தார். அக்கிரகாரத்திலிருந்து காவேரிக்கரைக்கும், மாளிகையிலிருந்து சவுக்கண்டிக்கும், மணமகனாக்க குதிரை மேலிருந்து கால்நடையாய் மண்டப கோபுரத்துக்குமாக யாரோ ஒருவர் – சாம்பமூர்த்தி ராயர் என்று பெயராம் போய்விட்டாராம். அவரைப்பற்றி இரண்டு அறிஞர்கள் – ஒருவருக்கு வயது அறுபது; மற்றவருக்கு வயது முப்பது இருக்கலாம் – எவ்வளவு ஈடுபாட்டுடன் பேசிக்கொண்டார்கள்? 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரம் என்கிற உண்மையை அறிந்துகொண்டுவிடுவது என்பது, அதுவும் ஒரே நாளில் அறிந்து கொண்டு விடுவது என்பது மிகவும் சிரமந்தான் என்று பட்டது மேஜர் மூர்த்திக்கு. 

எல்லாவற்றுக்கும் சிகரமாக இந்தக் காவேரி என்கிற புதிரை வேறு விவரித்துக்கொண்டிருந்தான் இந்த இலக்கியாசிரியன் சாமா. 

அப்பால் கோயில் இருந்தது. 

காலையில் தூரத்திலிருந்து பார்த்ததுதான். இன்றும் மூர்த்தி 

நெருங்கிப் பார்க்கவில்லை. 

அந்தக் கோயிலையும் கவிகள் பாடியிருந்தார்கள். 

அத்தியாயம்-20 

ஸ்நானம் பண்ணக் காவேரியில் இறங்கியபோது படித் துறையில் நாலைந்து பேர்தாம் இருந்தார்கள். எல்லோரும் ஸ்நானம் செய்து விட்டுப் போயிருப்பார்கள். அதாவது, அக்கிரகாரத்து ஆசாமிகளில் அநேகமாக எல்லோரும் போயிருப்பார்கள். மேட்டுத் தெருவார் இன்னும் வர நேரம் ஆகவில்லை. 

சூரியன் உச்சியை இன்னும் எட்டவில்லை. ஆனாலும் வெயில் ஐப்பசி மாசத்துக்குச் சற்றுக் கடுமைதான்; ஜலத்துக்கு மேலே இருந்த ஜிலுப்பு, அந்தச் சமயத்திலே ஜலத்திலே இல்லை. 

“இன்னும் இரண்டு மணி நேரம் முன்னதாக வந்திருக்க வேண்டும்” என்றார் சிவராமையர். 

“இன்னும் கொஞ்ச நேரங் கழித்து வந்திருந்தால் இன்னும் மோசமாக இருக்குமே” என்றான் சாமா. 

மாமா சொன்னதற்குச் சாமாவின் பதில் சரியான பதில் என்று பட்டது மூர்த்திக்கு. சிரித்தான். 

சாமா தொடர்ந்து சொன்னான்: “நமக்குக் கையில் ஒரு காரியம் இருக்கிறது; நமக்கென்று ஒரு இடம், எங்கேயோ காவேரி நதிக்கரையிலேயோ, ஏதாவது ஒரு பெயரில்லாத ஏரிக் கரையிலேயோ – ஏற்பட்டிருக்கிறது. வேறு காரியத்தைக் கண்ணெடுத்தும் பாராமல், வேறு இடத்தைச் சிந்தனையால் கூட நாடாமல் இருப்பதுதான் எதையும் செய்ய வழி” என்றான் சாமா. 

“நீ சாத்தனூரில் இருக்க மாட்டேன் என்று சென்னைக்குப் போன போது, இந்தக் கொள்கை எங்கே போச்சாம்?” என்றார் சிவராமையர். 

“ஓஹோ!” என்று திரும்பிச் சாமாவைப் பார்த்தான் மூர்த்தி. 

சாமா உடம்பைத் தேய்த்துக்கொண்டே சொன்னான்: “துவந்தங் களிலிருந்தும் தளைகளிலிருந்தும் விடுபட முயல்வது மனிதனுடைய முதல் கடமையாகும்” என்று. 

“அட பாவி !” என்றார் சிவராமையர். 

மூர்த்திக்குத் தூக்கிவாரிப் போட்டது. 

சாமா சிரித்தான். 

சிவராமையர் கேட்டார்! “துவந்தம், தளை என்று ஏனடா இப்படிச் சொல்லுகிறாய்? வேறு யார்? ஒரு கிழட்டுத் தகப்பனார் இருக்கிறார்; மனைவி இருக்கிறாள். இன்னும் குழந்தை குட்டிகள்கூட உண்டாகவில்லை. துவந்தம், தளை என்று யாரையடா சொல்கிறாய்? உன்னை விட்டால் அவர்களுக்கு வேறு யார்?” என்று சரமாரியாக, கோபமாகப் பேசினார் சிவராமையர் கரை ஏறிக்கொண்டே. 

சாமா மீண்டும் சிரித்தான். அவன் சொன்னான்: “உம்முடைய இந்தக் கோபம் தார்மீகமான கோபம். சொந்தக் காரியத்துக்காக வந்த கோபம் அல்ல. அதனால் நீங்கள் இப்படிச் சொல்வதைப்பற்றி நான் கோபித்துக்கொள்ளவில்லை. சமாதானம் மாத்திரம் சொல்கிறேன்.” 

“இந்த மேதாவித்தனமான பேச்சைத்தான் கண்டது!” என்றார் சிவராமையர். 

“மேதாவித்தனமான எழுத்தும் கொஞ்சம் இருக்கு” என்றான் சாமா சிரித்துக்கொண்டே. 

சாமாவினுடைய மனோபாவமும் பேச்சும் அவ்வளவாகப் புரிய வில்லை மேஜர் மூர்த்திக்கு. கட்டுக்கு அடங்காத ஒரு விபரீதப் போக்காகவும் பேச்சாகவும் பாவமாகவும் பட்டது அது. 

“ஏதோ, சமாதானம் சொல்றேன் என்றாயே, சொல்லு” என்றார் சிவராமையர். 

சாமா கரை ஏறினான். மேஜர் மூர்த்தியும் அவனைத் தொடர்ந்து கரை ஏறினான். உடம்பைத் துடைத்துக்கொண்டே சாமா சொன்னான்: “எனக்கு இருப்பது நீங்க சொன்ன மாதிரி இரண்டே தளைகள்தான் – ஒரு பெண்டாட்டி, ஒரு தகப்பனார். அவர்கள் இரண்டு பேருக்கும் சமாதானம் செய்து வைக்கிற முயற்சியிலேயே நான் என் வாழ்நாள் பூராவையும் கழித்துவிட முடியுமா? வேறு வேலையே எனக்குக் கிடையாதா? சிவராமையரே, நீங்களே யோசித்துச் சொல்லுங்கள்” என்றான். 

ஊருக்கு ஊர் தெருக்களும், தெருவுக்குத் தெரு வீடுகளும், வீட்டுக்கு வீடு வாசற்படிகளும் உண்டு என்கிற வாக்கியம் உண்மைதான் என்று எண்ணினான் மூர்த்தி. அன்று காலை விடிந்தது முதல் அவன் வாசற்படிகளை எண்ணிக்கொண்டே காலந்தள்ளி விட்டான். அது அநாவசியமான, பயனற்ற ஒரு காரியந்தான். 

சிவராமையர் சாமாவுக்குப் பதில் சொன்னார்: “பாக்கி எல்லாக் காரியத்துக்கும் முந்தி நீ இதைக் கவனிக்க வேண்டியது தான் முக்கியம். அதுதான் முதல் காரியம், பிறகுதான் உன் மற்ற வேலைகளை நீ கவனிக்கலாம்” என்றார். 

“அது உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிற மாதிரி எனக்குத் தெரியவில்லையே?” என்றான் சாமா. 

“இதுதான் பெரிசாகப் பேசி, பெரிசு பெரிசாகக் கரை காண்பவர்களிடம் உள்ள விசேஷம்; பிறருடைய பிரச்னையைப் பற்றி அலசி முடிவு காண்கிற மாதிரி தங்கள் காரியங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து முடிவு கண்டு நடக்க அவர்களால் முடிவதில்லை” என்றார் சிவராமையர். 

மனித குலத்துக்கே இதுதான் சாபம் போலும் என்று எண்ணி னான் மூர்த்தி துக்கத்துடன். 

சிவராமையர் தொடர்ந்து சொன்னார்: “ஏதோ கதைகள் சொல்கிறார்களே தவிர, இந்தக் காவேரி நதியின் கரைகளை மனிதன் கட்டியதில்லை; ‘இந்தக் கரைகளுக்குள் ஓடு’ என்று யாரும் காவேரி நதிக்கு ஆணையிட்டுக் கட்டுப்படுத்தவில்லை. இந்தக் கரைகளை, தன் தேவைகளை உத்தேசித்து, தன் போக்கை அறிந்து, தன் லட்சியத்தை மனத்தில் ஏற்றுக்கொண்டு காவேரி நதியே இந்த இரண்டு கரைகளையும் ஏற்படுத்திக் கொண்டது. வெள்ளம் வருவது உண்டு சில சமயம்; கரை உடைவது உண்டு. உடைந்துவிட்ட கரையைச் செப்பனிட மனிதன் மண்ணும் கூலியும் உதவுவது உண்டு. ஆனால் இந்தக் கரைகள், காவேரியாறு தானாகச் சிருஷ்டித்துக்கொண்டதுதான். கரைகளை மீறக்கூடாது என்கிற சிந்தனை தூய்மையானது. அதனால்தான், தன் கரைகளினாலேயே காவேரி நதி புனிதமடைகிறது.” 

“அதே மாதிரி?” என்று சாமா கேட்பதற்கும் சாம்பமூர்த்தி ராயரின் சவுக்கண்டிக்கு நேர் எதிரில் அவர்கள் வருவதற்கும் சரியாக இருந்தது. 

“சாம்பமூர்த்திராயர் – உன் சாம்பமூர்த்திராயர் – என்ன சொல்லுவார் என்று யோசித்துப் பார். உன்னைத் தவிர வேறு புகலிடம் இல்லாத உன் தகப்பனையும் உன் மனைவியையும் தளைகள் என்று நீ சொல்வதை அவர் ஒப்புக்கொண்டிருப்பாரா என்று உன்னை நீயே கேட்டுக்கொண்டு பார்” என்றார் சிவராமையர். 

சிறிது நேரம் தயங்கினான் சாமா. பிறகு, “மனைவியைப் பற்றிச் சொன்னதை அவர் ஒப்புக்கொண்டிருக்கமாட்டார். ஆனால் தகப்பனார் விஷயமாகச் சொன்னதைப்பற்றி அவர் என்ன சொல்வாரோ எனக்குத் தெரியாது” என்றான். 

“அவர், தம் மனைவியைப்பற்றிப் பேசி நீ கேட்டிருக்கிறாய். அவருக்கு மனைவி இருந்தாற்போலத் தகப்பனாரும் இருந்தார். அந்தத் தகப்பனாரிடமும் அவருக்கு அத்தியந்தமான கனிவும் விசுவாசமும் 

உண்டு. அவர் தகப்பனாரையும் நான் பார்த்திருக்கிறேன். அவர், தம் தகப்பனாரைப் பற்றிப் பேசியும் நான் கேட்டிருக்கிறேன். நான் சொல்றேன் நீ நம்பலாம்” என்றார் சிவராமையர். 

“நம்புகிறேன் மாமா” என்று அடக்கத்துடன் பதில் அளித்தான் சாமா. 

சாம்பமூர்த்திராயரைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மேஜர் மூர்த்தி முதலில் எண்ணியது வாஸ்தவந்தான். ஆனால், இப்போது அவன் மாமா என்ன சொல்லுவார் ? சாம்பமூர்த்தி ராயர் இருந்தது, போனது எல்லாவற்றையும் சொல்லுவார். அவரைப் பற்றிய முழு உண்மையையும் அவரிடம் கேட்டு அவன் தெரிந்து கொண்டு விட முடியாது. 

சர்வமானிய அக்கிரஹாரத்தில் வசித்தவர்களில் யாரைப் பற்றியுமே ஏன், உலகத்தில் வசித்தவர்கள் யாரைப்பற்றியுமே, யாரையும் கேட்டுத் தெரிந்துகொண்டுவிட முடியாது. உண்மை என்பது எங்கேயோ காணக்கிடக்கிறது. மனத்தால், உள்ளத்தால் ஆத்மாவால் அறியக்கிடக்கிறது. 

சாமாவைப் போன்ற ஒருவனிடம் சாம்பமூர்த்தி ராயர் என்கிற பெயர் இவ்வளவு அடக்கத்தைத் தரவில்லை என்றால், சாமாவைப் பற்றிய வரையில் சாம்பமூர்த்திராயர் என்கிற உண்மையை வார்த்தைகளால் அளக்க முடியாது என்பதுதானே உண்மை? 

மாமாவிடம் தெருவில் உள்ள மற்றவர்களைப் பற்றிக் கதையாக விசாரித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியமில்லை என்று எண்ணினான் மேஜர் மூர்த்தி, 

அக்கிரகாரத்தில் திரும்பினார்கள். தென்னண்டைச் சரகத்தில் வடக்குப் பார்த்த வீடுகளிலே மாடிவீடு – கிழக்கேயிருந்து நாலாவது வீடு – சாமாவின் வீடு. 

“சாப்பிட்டுவிட்டு வருகிறேன் மாமா” என்று விடை பெற்றுக் கொண்டான் சாமா. 

அவன் வீட்டுத் திண்ணையில் சிவந்த மேனியும், தளர்ந்த உடலும், நரைத்த தலையுமாக உட்கார்ந்திருந்த கிழவர், பொடியை எடுத்து ஒரு தரம் உறிஞ்சிவிட்டு, “ஏண்டா சாமா இவ்வளவு நேரம்?” என்று கேட்டார். 

“ஏதோ பேச்சு” என்று சொல்லிக்கொண்டே சாமா உள்ளே போய் விட்டான். 

அவன் தகப்பனாரான கிழவரின் குரலிலேதான் எத்தனை ஏக்கம் நிறைந்திருந்தது! ‘காவேரிக்குப் பிள்ளை போய் நேரமாயிற்றே, இன்னும் வரவில்லையே, என்ன நேர்ந்திருக்குமோ?’ என்ற கவலை போலும்! அவன் வந்து விட்டதில்தான் எத்தனை ஆசுவாசம்! 

கற்பனை உள்ள மனிதர். 

‘அப்படித்தான் இருக்கும்; அதனால்தான் அவர் பிள்ளை கதைகள் எழுதுவது சாத்தியமாக இருந்தது’ என்று எண்ணினான் மூர்த்தி. 

அந்த வெயிலில் குளித்துவிட்டு வந்ததே தெரியவில்லை; வீட்டுக்குப் போய்க் கிணற்றடியில் ஒரு தரம் ஸ்நானம் செய்தால் கூடத் தேவலை என்று இருந்தது மூர்த்திக்கு. 

மனிதனைக் கடவுள் வெறும் சிந்தனை யந்திரமாக மட்டும் படைத்துவிட வில்லை. வெறும் சொந்த ஆசைகள், அபிலாஷைகள், ஏக்கங்கள் மட்டும் நிறைந்த மாமிச பிண்டமாகவும் படைத்து விடவில்லை. வார்த்தைகளுக்கே அகப்படாத பல ஏக்கங்களுடனும், அதீதமான சில புலன்களுடனும் படைத்திருந்தான். 

ஏன்? 

மனிதனுக்கு இவ்வுலகில் அவன் வாழ்க்கையைச் சகல விதங்களிலும் சுலபமாக்கித் தந்திருக்கலாமே, அந்தப் பாழும் கடவுள். 

ஏன் அப்படிச் செய்யவில்லை அவன்? 

அதற்கு மர்மமான காரணம் ஏதாவது இருக்கலாமா? 

வெயில் சற்று கடுமைதான்; கீழே தெரு மணல் சுட்டது. மணல் சுடுகிறது என்கிற காரணத்துக்காகத்தான் போலும் எங்கள் நிழல்கள் எல்லாம் காலோடே ஒட்டிக்கொண்டிருந்தன. அதிகதூரம் நீண்டு முன்னும் செல்லவில்லை; பின்னும் செல்லவில்லை. 

இந்த நிழலின் காரியத்திற்கு ஓர் உள் அர்த்தம் கற்பிக்கலாம் என்று தோன்றியது மூர்த்திக்கு. 

ஆனால் அவன் உள் அர்த்தங்களில் அவ்வளவாக நம்பிக்கை வைக்காதவன்.

அவன் இருளில்தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். எனினும் அவனுக்குப் பிரியமானது இவ்வுலகில் ஒன்று உண்டு என்றால், அது ஒளிதான். 

ஆச்சு. மணி பன்னிரண்டு ஆகியிருக்கும். இன்னும் ஆறு மணி நேரத்தில் இருட்டிவிடும். 

காலையில் சூரியனை வரவேற்க அவன் எழுந்துவிட்டான். காலை இளம்பரிதியின் மென்மையாலே, கிழக்கு வெளிறிட, எதிர் வரிசை வீட்டுக்கூரைகள் தோன்றத் தொடங்கியது அவன் கண்ணில் அன்று காலையில் பட்டது. 

இருளும் ஒளியும் அற்ற ஒரு மயக்கநிலையிலே தெருக் கோடி யிலிருந்த மூங்கிற்புதரைச் சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்துவாக ஏற்று அவன் மனம் மயங்கியது உண்டு. ஒளி மயக்கத்தால் ஏற்பட்ட மன மயக்கம் அது. 

ஒளியிலும் இருட்டிலும், மென்மையான அந்தியிலும், நண்பகலிலும் அதிகாலையிலும் அவனும் அவனுடைய நிழலும் தான் உண்மைகள் என்று சூரியன் உச்சியை எட்டுகிற சமயத்திலே அவனுக்குத் தோன்றியது. 

இருளில் நிழல் இல்லையா என்ன? 

இருக்கிறது, இருக்கும். இருக்கத்தான் வேண்டும். வேண்டுமென்றே மனிதன் கண்ணில் படாமல் மறைந்து நின்று கண்ணா மூச்சி விளையாட விரும்புகின்றன இவைகள். 

இருளில் நிழலைக் கண்டுகொள்பவன் – அவனை என்ன என்று சொல்வது? சித்தன் என்று சொல்லலாமா? பித்தன் என்று சொல்லலாமா? ஞானி என்று சொல்லலாமா? அறிஞன் என்று சொல்லலாமா? கலைஞன் என்று சொல்லலாமா? 

“இருளிலும் தங்கள் நிழலையே கண்டுவிட்டவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்திலே, கிட்டா என்கிற கிழவர், சிவராமையர் என்கிற தன் மாமா, சாமா என்கிற இலக்கி யாசிரியன், அன்பு ததும்பி’, ‘மதுரத்தின் பிள்ளையா, ஆத்துக்கு வாடா என்ற மங்களத்தம்மாள் நாரத்தங்காய்த் தோட்டத்துப் பட்டாபிராமையர், என்றைக்கோ மறைந்துபோன சாம்பமூர்த்திராயர், யாரோ மளிகைக் கடைக் காரன் என்று சொன்னாரே, மாமா, சோமு முதல் என்று. அட்டா, இதில் பெண்களை விட்டுவிடடோமே’ என்று தோன்றியது மூர்த்திக்கு.

ஆனால் சர்வமானிய அக்கிரகாரத்துப் பெண்மணிகளில் யாரைப் பற்றி அவனுக்குத் தெரியும்? 

புருஷர்களின் கதைகளில் பலவற்றைத் தனக்குத் தெரிந்த வரையில் ஏதோ மாமா சிவராமையர் சொல்லிவிட்டார். பெண்மணிகளின் கதைகளை அம்மாமி சொன்னால்தான் உண்டு. 

ஆனால் அம்மாமி சொல்லமாட்டாள். 

இந்தச் சமூகத்தில் இன்றுவரை பெண்களுக்குப் பேசத் தேவையே இருந்ததில்லை. 

பராசக்தியின் அம்சங்கள் அவர்கள். வாய் திறவாமலே ஆட்டி வைக்கவும் அழிக்கவும் ஆக்கவும் அறிந்தவர்கள்! 

நிழலும் காலைச் சுற்றிக்கொண்டு உள்ளே வர மூர்த்தி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். 

– தொடரும்…

– ஒரு நாள் (நாவல்), முதற் பதிப்பு: 2004, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *