ஒருத்திக்கே சொந்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2023
பார்வையிட்டோர்: 9,712 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11

ஒரு நாள் மாலையில் ரவி பத்மினியைப் பார்க்க வந்த போது, இருவரும் மாடியில் இருந்த ரூஃப் கார்டனில், ஓர் அலங்கார ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தனர். அன்று பத்மினி மிகவும் அழகாக அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். முழு நிலவு, மயக்கும் மாலைப் பொழுது, குளிர்ந்த தென்றல், பத்மினியின் கருமேகக் கூந்தலில் மல்லிகை மலர்களின் நறுமணம், இருவருடைய இளமை வேகம்; இத்தனை ஆண்டுகளாக இருவருடைய மனத்திலும் தேக்கி வைத்திருந்த தீராத ஏக்கம்-இத்தனையும் ஒருங்கே இணைந்ததால் பொங்கி எழுந்த உணர்ச்சிகளை இருவராலும் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. 

ரவி மெல்ல பத்மினியை அணைத்துக் கொண்டான். அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தான். அவன் ஆசை அவளுக்குப் புரிந்தது. அவளாலும் மறுப்புக் கூற இயலவில்லை. மயக்கத்தில் கண்களை மூடிக் கொண்டாள். கொடிபோல் அவன் மீது சாய்ந்தாள். ரவி அவளை அப்படியே தனது கரங்களில் மலர்ச் செண்டு போல் அள்ளிக் கொண்டான். அவளைப் படுக்கை அறைக்குத் தூக்கிச் சென்றான். இத்தனை ஆண்டுகளாக ஒருவரையொருவர் நினைத்து நினைத்து ஏங்கிய காதலர்கள், அன்று இரவு ஒன்றாகக் கலந்துவிட்டனர். இத்தனை காலம் பத்மினியின் உள்ளம் மட்டுமே ரவிக்குச் சொந்தமாக இருந்தது. அன்று அவளுடைய தந்தச் சிலை போன்ற உடலையும் தனக்குச் சொந்தம் ஆக்கிக் கொண்டான். இருவரும் ஆனந்தத்தின் எல்லையைக் கடந்தே சென்று விட்டார்கள்.


ரவிக்குத் திடீரென விழிப்பு வந்து அவன் கைக் கடியாரத்தைப் பார்த்தபோது அதிகாலை ஐந்து மணி ஆகி விட்டிருந்தது. பத்மினி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளை எழுப்ப ரவிக்கு மனம் வரவில்லை. அன்று சீக்கிரமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். ஆகவே, ரவி ஒரு கடிதம் எழுதி படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த மேஜையின் மீது வைத்துவிட்டுச் சென்று விட்டான். 

பத்மினி கண் விழித்துப் பார்த்தபோது ரவி அவள் பக்கத்தில் இல்லை. ஒரு வினாடி அதிர்ச்சி அடைந்தாள். பிறகு படுக்கையின் பக்கத்தில் மேஜை 

பக்கத்தில் மேஜை மீது இருந்த கடிதத்தைப் பார்த்தாள். அதைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். 

என் ஆருயிர் கண்மணியே: 

உன்னிடம் சொல்லாமல் போய் விட்டேனே என்று என்மீது கோபம் கொள்ளாதே. குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்த உன்னை எழுப்ப எனக்கு மனம் வரவில்லை. ஆகவே. இதை எழுதி வைத்திருக்கிறேன். நேற்று இரவு நடந்ததைப் பற்றி எந்த விதமான வருத்தத்திற்கும் உன் மனத்தில் இடம் தர வேண்டாம்.நடக்க வேண்டியதுதான் நடந்தது. என்றுமே எனக்கு நீ. உனக்கு நான். உள்ளத்தால் என்றைக்கோ கணவன்- மனைவி ஆகிவிட்டோம். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இந்த உலகம் அறிய உன்னை வெளிப்படையாகவே என் மனைவியாக்கிக் கொள்கிறேன். ஷூட்டிங்கிற்கு நேரமாகிவிட்டது. ஆகவே புறப்படுகிறேன். மாலை உன்னை வந்து சந்திக்கிறேன். நீ எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. நான் வரும் வரை என்னை நினைத்துச் சிரித்துக் கொண்டே இரு. 

உன் அன்பு கணவன், 
ரவி 

பத்மினி இதைப் படித்தவுடன் தன் சிவந்த பவழ நிற உதடுகளால் அந்தக் கடிதத்திற்கு நூறு முத்தம் இட்டாள். சிரித்துக் கொண்டே அறையைச் சுற்றிச் சுற்றிப் பம்பரம் போல் சுழன்று வந்தாள். அந்தக் கடிதத்தைப் பத்திரமாக பீரோவுக்குள் பூட்டி வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றாள். குளியல் அறையில் ஒரே பாட்டு, ஒரே குதூகலம்! பாலைவனம் போன்ற அவளது வாழ்க்கை பூத்து, செழித்து, மலர்த் தோட்டமாக மாறத் தொடங்கிவிட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அன்றுதான் முதல் முதலாக பத்மினியின் உதடுகளிலிருந்து பாடல் பிறந்தது. அவளுடைய இனிய குரல் வீடெங்கும் ஒலித்தது. 


கடந்த இரவு நடந்த சம்பவத்திற்குப் பிறகு, இனி தாமதிக்கக் கூடாது என்ற முடிவுக்கு ரவி வந்து விட்டான். இவ்வளவு தூரத்திற்கு விஷயம் போய்விட்ட பிறகு, எப்படியும் இன்று சாந்தாவிடம் பத்மினியைப் பற்றிச் சொல்லிவிட்டு அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து விட வேண்டும் என்று ரவி தீர்மானித்து விட்டான். 

ஆனால், காலையில் ஒரே அவசரம், ஏற்கனவே படபிடிப்புக்கு நேரமாகிவிட்டது. காலையில் சாந்தாவிடம் பேச நேரம் இருக்கவில்லை. 

சரி, இன்றைக்குப் படப்பிடிப்பு முடிந்தவுடன், மாலையில் வீடு திரும்பியவுடன் முதல் வேலையாக இதைப் பற்றிச் சாந்தாவிடம் பேசிவிட வேண்டும் என்ற நிச்சயத்தோடு ரவி ஸ்டுடியோவிற்குப் புறப்பட்டுச் சென்றான். 


சாந்தாவின் மனத்தில் ரவியின் செய்கைகளும், நடத்தையும், பெருமளவிற்குச் சந்தேகத்தை உண்டாக்கிவிட்டன். தினமும் படப்பிடிப்பு முடிந்தவுடன் நேரே வீட்டுக்கு வராமல் இவர் எங்கே போகிறார்? முதலில் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணினாள். 

ரவியுடைய வேலைக்காரர்கள் அத்தனை பேரும் அவனிடம் அளவு கடந்த பக்தியும் விசுவாசமும் உள்ளவர்கள். அவர்களுக்கு ரவியைப் பற்றி ஏதாவது தெரிந்தால் கூட அவர்கள் அவளிடம் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும். ஆகவே, ஊரிலிருந்து தனது தம்பியை வரவழைத்தாள். அவனிடம் ரவியை ரகசியமாகப் பின் தொடர்ந்து, மாலை வேளைகளில் அவன் எங்கே போகிறான் என்பதைக் கண்டறியும்படி சொன்னாள். 

சாந்தாவின் தம்பி அப்படியே செய்தான். பெஸன்ட் நகர் வீட்டை அவன் கண்டுபிடித்து விட்டான். அங்கே யாரோ ஒரு பெண்ணை ரவி வைத்துக் கொண்டிருக்கிறான் என்று சாந்தாவின் தம்பி அவளிடம் சொன்னான். மேலும் அவனுக்கு வேறு எந்த விவரங்களும் தெரியவில்லை என்றும், ஆனால் அந்தப் பெண் ஒரு பேரழகி என்றும் சாந்தாவின் தம்பி சொன்னான். பத்மினி மாடி பால்கனி பக்கம் நின்றபோது அவன் ஒரு முறை அவளைப் பார்த்து விட்டான். 

இரண்டு நாட்கள்வரை இந்த விஷயத்தைச் சாந்தா மனத்திற்குள்ளேயே அசை போட்டுக் கொண்டு, புகைந்து கொண்டே இருந்தாள். ரவியிடம் இதைப் பற்றிக் கேட்டு விடலாமா என்று முதலில் எண்ணினாள். ஆனால், உடனே கேட்கத் தைரியம் வரவில்லை. தன்னைப் 

பின்தொடர்ந்து தம்பியை அனுப்பினாள் என்ற விஷயம் ரவிக்குத் தெரிந்தால், அவன் அவள் மீது அளவு கடந்த ஆத்திரம் அடைந்து எரிமலை போல வெடித்து, அது எங்கே போய் முடியுமோ என்று அஞ்சினாள். ஆனால் அவளால் எந்த நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை. 

‘எப்போது ரவி முதன் முறையாக இரவு முழுவதும் பத்மினியின் வீட்டிலேயே கழித்து விட்டானோ, என்ன ஆனாலும் ஆகட்டும், இனிமேல் என்னால் பேசாமல் இருக்க முடியாது! நானே போய் அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து, நீ செய்வது நியாயம் தானா என்று கேட்டு விடுகிறேன்,’ என்ற முடிவுக்கு வந்தாள். 


அன்று காலையில் பத்மினி, ரவியின் கடிதத்தைப் படித்துவிட்டுக் குளிக்கச் சென்றிருந்தாள். குளித்துவிட்டு டிரெஸ் பண்ணிக் கொண்டிருந்தபோது, வேலைக்காரி வந்து படுக்கை அறைக் கதவைத் தட்டினாள். 

‘உள்ளே வா,” என்று குரல் கொடுத்தாள் பத்மினி. 

“அம்மா. உங்களைப் பார்க்க யாரோ ஒரு அம்மா வந்திருக்காங்க.” 

“என்னைப் பார்க்கவா? எனக்கு இங்கே யாரையுமே தெரியாதே? சரியாக் கேட்டியா?” 

“ஆமாங்கம்மா கேட்டேன். உங்களைத்தான் பார்க்க வந்திருக்கிறதாகச் சொன்னாங்க. அவுங்களை ட்ராயிங் ரூமிலே உட்கார வச்சிருக்கேன், என்னம்மா சொல்லட்டும்?” 

“பேர் ஏதாவது சொன்னாங்களா?” 

“அவுங்க எதுவும் சொல்லலைம்மா, உங்களையே பார்த்துப் பேசணும்னு சொல்றாங்க.” 

“சரி, உட்காரச் சொல்லு. இதோ வந்துடறேன்.” 

பத்மினி டிரெஸ் செய்து கொண்டு கீழே ட்ராயிங் ரூமுக்கு இறங்கி வந்தாள். அங்கே சாந்தா உட்கார்ந்திருந்தாள். பத்மினியைக் கண்டதும் எழுந்து நின்றாள். 

”உட்காருங்க,” என்று உபசரித்தாள் பத்மினி. 

”பரவாயில்லை,” என்று கடுப்போடு பதில் சொன்னாள் சாந்தா. “நான் இங்கே உட்கார வரலை!” 

எடுத்த எடுப்பிலேயே இப்படிக் காரமாகப் பேசுகிறாளே என்று பத்மினிக்கு ஒரு மாதிரியாய் இருந்தது. “யார் நீங்க?” என்று மீண்டும் சமாதானக் குரலில் கேட்டாள். 

“நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கறியா? ரொம்ப நெஞ்சழுத்தம் அம்மா உனக்கு”, என்று பத்மினியை முறைத்துப் பார்த்தாள் சாந்தா. 

“என் வீட்டுக்குள்ளே வந்து என்னையே அவமரியாதையாப் பேசறீங்களே! நீங்க யாருங்கறதை முதல்லே சொல்லுங்க,” என்று கொஞ்சம் மிடுக்கோடு பத்மினி பதில் அளித்தாள். 

“உனக்கு மரியாதை வேறு ஒரு கேடா? நான் யாருன்னு நிஜமாகவே உனக்குத் தெரியாதா? சொல்றேன் கேளு. இந்த வீட்டை வாங்கிக் கொடுத்து, உன்னை இங்கே வச்சுட்டிருக்காரே, ஒரு பெரிய மனுஷர், அவருடைய மனைவி நான்! என் பேரு சாந்தா!” 

பத்மினிக்குக் கண்கள் இருட்டி விட்டன. அவளால் நிற்கக் கூட முடியவில்லை. அவளுடைய தலை சுற்றியது. அவளுடைய கனவுக் கோட்டைகள் எல்லாம் இடிந்து தூள் தூளாகி அவள் கால்களுக்கு அடியில் சிதறிக் கிடந்தன. தள்ளாடினாள். கால்கள் தடுமாறின. ஒரு சோபாவின் மீது தனது கைகளை ஊன்றிக் கொண்டு, விழுந்து விடாமல் சமாளித்துக் கொண்டு நின்றாள். 

“‘என்ன? நீங்க ரவியுடைய மனைவியா? ரவிக்குக் கல்யாணம் ஆயிட்டதா?” என்று நடுங்கும் குரலில் கேட்டாள். 

“என்னம்மா ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்கிறே! அவருக்குக் கல்யாணம் ஆயிட்டதான்னு என்னமோ புதுசாக் கேக்கறியே!” என்றாள் ஆத்திரத்தோடு சாந்தா. 

“அம்மா.தயவு செய்து என்னை நம்புங்க! அவருக்குக் கல்யாணம் ஆகியிருக்கிற விஷயம், சத்தியமா இப்போ நீங்க சொல்ற வரைக்கும் எனக்குத் தெரியாது!” 

“சீ, வாயை மூடு, வெட்கம் கெட்டவளே! யாரை ஏமாத்த நினைக்கிறே? அவர் ஒரு பிரபல சினிமா நடிகர், நாலு வருஷங்களுக்கு முன்னாலே எனக்கும் அவருக்கும் ஊர் அறிய, உலகம் அறிய தடபுடலா ஆபட்ஸ்பரியிலே கல்யாணம் நடந்தது. அந்தக் கல்யாணத்தைப் பத்தி எழுதாத பத்திரிகை இல்லை, எங்க கல்யாண போட்டோக்களைப் பிரசுரிக்காத தமிழ்ப் பத்திரிகையே இல்லை! அவருக்குக் கல்யாணம் ஆன விஷயம் உலகத்துக்கே தெரியும், உனக்கு மட்டும் தெரியாதா?” 

‘இல்லையம்மா, சத்தியமாய்த் தெரியாது. நான் குருடியாக இருந்தவள், ஏமாந்து போனவள், ஏமாற்றப்பட்டவள்! விசித்திரமான சந்தர்ப்ப சூழ்நிலைகளால் என் உயிருக்கு உயிரான ரவிதான் பிரபல சினிமா நட்சத்திரம் ரவி குமார் என்பது எனக்குத் தெரியாமலே போய் விட்டது. அவருக்குத் திருமணமான செய்தியையும் அவரே என்னிடம் மறைத்து விட்டார்.ஹூம்.. இதையெல்லாம் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்? நான் உங்களுக்கு என்ன சொல்வேன், எதைச் சொல்வேன்? எங்கே ஆரம்பிப்பது? இப்போது உங்களிடம் சொல்வதால் என்ன பயன்? நான் எனது தெய்வமாக நினைத்தவரே என்னை ஏமாற்றிவிட்ட பிறகு, இனி உங்களிடம் என்ன சொல்லி என்ன பயன்? இப்படி ஏமாந்து போனதற்கு, நான் எல்லாவற்றையும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியவள்தான். திட்டுங்கள் அம்மா, உங்கள் ஆசைத் தீரத் திட்டுங்கள்! வாழ வேண்டும் என்ற பேராசை இந்தப் பாவிக்கு மீண்டும் ஏற்பட்டது மன்னிக்க முடியாத குற்றம்தான்! திட்டுங்கள்! வாய் நிறையத் திட்டுங்கள்!’ இப்படி மனத்துக்குள் தனக்குத் தானே பத்மினி நொந்து கொண்டாள். மெளனமாக, சிலை போல, மூடிய கண்களோடு நின்றாள். வாய் திறந்து பத்மினி எதுவுமே பேசவில்லை. 

சாந்தா எரிந்து, பொரிந்து, வாய்க்கு வந்தபடி எல்லாம் பத்மினியைத் திட்டி விட்டாள்.”நீயும் ஒரு பெண்தானா? ஏம்மா. என் புருஷனைத் தவிர வேறே யாருமே உனக்குக் கிடைக்கலையா? ஹூம்… நான் ஒரு முட்டாள் மாதிரி கேக்கறேன். வேறே ஒரு ஆள் உனக்குக் கிடைக்காமப் போயிட மாட்டான், ஆனா என் கணவர் மாதிரி பணக்காரர் கிடைக்கணுமே! உன்னை மாதிரிப் பெண்களுக்குப் பணம்தானே பெரிசு? அந்தப் பணம் ஒண்ணுதான் உங்களுக்கெல்லாம் முக்கியம்! என் வாழ்க்கை, என் குழந்தையோட வாழ்க்கை பாழாகிறதைப் பத்தி நீ ஏன் கவலைப்படப் போறே? சரி, உனக்கு எவ்வளவு பணம் கொடுத்தா என் புருஷனை விட்டுடச் சம்மதிப்பே? சொல்லு, மொத்தமா நீ எவ்வளவு பணம் கேட்டாலும் அதை இப்பவே கொடுத்தனுப்பறேன். ஆனா, என் புருஷனை மட்டும் விட்டுடு. ஏன் பேசாமே நிக்கிறே? எவ்வளவு பணம் வேணும்? சொல்லு, அந்தப் பணத்தை எடுத்துட்டு எங்கேயாவது போயிடு. உனக்கு இன்னொருத்தன் கிடைக்காமலா போயிடுவான்? நீ எப்படியும் பிழைக்க முடியும். ஆனா எனக்கு என் புருஷனை விட்டா வேறே கதி இல்லை. அவரை விட்டுடு, நான்தான் பணம் தறேன்னு சொல்றேனே! எவ்வளவு வேணும்? சொல்லு. ஏன் பேச மாட்டேங்கறே?” 

“அம்மா!” பத்மினியால் இதற்கு மேலும் சகித்துக் கொள்ள முடியவில்லை.”தயவு செய்து இங்கேயிருந்து போயிடுங்க. இனிமே உங்க வாழ்க்கையிலே குறுக்கிட மாட்டேன், இது சத்தியம். தயவு செய்து போயிடுங்க!” 

”பணம்? எவ்வளவுன்னு சொல்லலையே!” 

“அம்மா! எனக்குப் பணமும் வேண்டாம், எதுவுமே வேண்டாம்! என்னைத் தனியா இருக்க விடுங்க! போயிடுங்க. ப்ளீஸ்!” 

சாந்தா ஒரு வினாடி அவளை ஆச்சரியத்தோடு பார்த்தாள். ‘பணம் வேண்டாமா? அப்புறம் என்னதான் வேணும்?” 

பத்மினி மௌனமாக அவளை நிமிர்ந்து பார்த்தாள். 

“ஓகோ, அப்படீன்னா நீ அவரை விட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொல்லாமச் சொல்றியா? எனக்கு முன்னமே தெரிஞ்சிருக்கணும். உன்னை மாதிரிப் பெண்கள், ஒரு பணக்காரனை வலைக்குள்ளே போட்டுக்கிட்டதுக்கு அப்புறம், அவ்வளவு லேசிலே தப்ப விடுவீங்களா?” என்று வார்த்தைகளைப் பொரிந்து தள்ளினாள் சாந்தா. 

“அம்மா! இதுக்கு மேலே எதுவும் பேசாதீங்க. என்னாலே தாங்கிக்க முடியாது!” 

துக்கத்தால் பத்மினியின் இதயமே வெடித்துவிடும்போல் இருந்தது. அழுது கொண்டே ட்ராயிங் ரூமை விட்டு மாடியில் தனது அறைக்கு ஓடிச் சென்று விட்டாள். 

அதற்குப் பிறகு சாந்தாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளும் வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டாள். 

– தொடரும்…

– ஒருத்திக்கே சொந்தம், முதற் பதிப்பு: ஜூன் 1980, மாலைமதி,, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *