ஒருத்திக்கே சொந்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2023
பார்வையிட்டோர்: 4,645 
 
 

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10

பத்மினியின் மனத்தில் சந்தேகம் எதுவும் இல்லாததால். அன்புடன் ரவியோடு பழகினாள், கள்ளங்கபடம் இல்லாமல் மனம் விட்டு சகஜமாகப் பேசினாள். 

‘இத்தனை காலமாக அடி பட்டுப் பட்டு. வேதனை பட்டுப் பட்டு மரத்துப் போயிருந்த அவள் இதயத்துக்குள், மறுபடியும் மென்மையான ஆசை எண்ணங்கள் இளங்குருத்துப் போல துனிர் விட ஆரம்பித்தன. வாழ்க்கை என்றாலே வெறும் ஏமாற்றம். சோகம், விரக்தி, வறுமை, முடிவில்லாத துயரம் என்றில்லாமல், மகிழ்ச்சி என்ற ஒன்றும் தனது வாழ்க்கையில் ஓர் அம்சமாக இருக்க முடியும் என்று மெல்ல மெல்ல பத்மினி மீண்டும் உணரத் தொடங்கினாள். தானும் சந்தோஷமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை துளித் துளியாக அவள் மனத்தில் ஏற்பட்டது. 

சிறு குழந்தை தத்தித் தத்தி முதன் முதலாக தடை பயில ஆரம்பிப்பதைப் போல, பத்மினி கவலைகளை மறந்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் சிரிக்கவும், கலகலப்பாக இருக்கவும் தன்னைப் பழக்கிக் கொண்டாள். இருள் சூழ்ந்த வானுக்குள் கதிரவனின் பிம்பங்கள் மீண்டும் புகுந்து வெளிச்சத்தைப் பரப்பும் போது.இருள் ஒரே நொடியில் அகன்று விடாது. வெளிச்சம் மெதுவாக, நிதானமாகத்தான் பரவும். அதைப் போலவே. இத்தனை ஆண்டுகளாகச் சோகம், விரக்தி என்ற இரு உணர்ச்சிகள் மட்டுமே தனிக் காட்டு ராஜா-ராணியைப் போல பத்மினியின் மனத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அவ்வளவு எளிதில் அவ்ளிரண்டும் தங்கள் ராஜ்யத்தை விட்டுக் கொடுத்து, நம்பிக்கை என்ற சூரியனுக்கு இடம் அளித்து. மகிழ்ச்சி என்ற வெளிச்சம் பரவ உடனடியாக அனுமதிக்கவில்லை. 

நாள் ஆக, நாள் ஆக, இனிமேல் தனக்கு எந்தக் கவலையும் வராது என்ற நம்பிக்கை பிறக்கவே, ரவியின் ஆழமான அன்பு அசைக்க முடியாத ஒரு கோட்டை. தனக்கு என்றைக்கும் பாதுகாப்புக் கவசம் போல மாறமல் இருக்கக் கூடியது என்பதை உணரவே. பத்மினிக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் வாழ்க்கையில் பிடிப்பும், தெம்பும், உற்சாகமும் ஏற்பட்டது. 

சாந்தாவின் மன நிலையோ அதற்கு நேர் விரோதமாக இருந்தது. பளிச்சென்று பிரகாசித்துக் கொண்டிருந்த அவள் வானத்தில், திடீரென்று எங்கிருந்தோ மேகங்கள் வந்து சூழ்ந்து கொண்டு காரிருளை உண்டாக்கி விட்டன. இத்தனை நாட்களாக ரவி தனக்கே சொந்தம் என்ற மன நிம்மதியோடு வாழ்ந்து வந்த அவள், சற்றும் எதிர்பாராத விதத்தில் அந்தச் சொந்தம் எங்கே பறி போய் விடுமோ என்று பயந்து துடி துடித்துப் போனாள். 

அன்று இரவு ரவி அவளிடம் காரணம் என்னவென்று கூறாமல் வீட்டை விட்டு வெளியே கிளம்பிப் போய் அதிகாலையில் அவன் திரும்பி வந்ததிலிருந்து, சாந்தா அவனிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அவனை மறுபடியும் அவள் எந்தக் கேள்விகளும் கேட்கவில்லை. ரவி அவளிடம் எப்போதும் போலச் சிரித்துப் பேசி, தாஜா பண்ண முயற்சி செய்த போதெல்லாம், அதிகமாகப் பேசாமல், ‘ஆமாம்.’ ‘இல்லை,’ என்று மிக அவசியமான வார்த்தைகளை மட்டும் சுருக்கமாகப் பேசிவிட்டு போய் விடுவாள். 

சாந்தாவின் வேதனை, அச்சம், சந்தேகம் எல்லாமே ரவிக்குப் புரிந்தது. ஒரு பாவமும் அறியாத இவளை இப்படி மானசீகச் சித்திரவதைக்கு ஆளாக்கி விட்டோமே என்று தன்னைத் தானே வெறுத்துக் கொண்டான். 

ரவி அப்போது நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தின் தயாரிப்பாளர், தனது மகளுக்குத் திருமணம் நடத்தி வைத்தார். குடும்பத்தோடு ரவியின் இல்லத்திற்கு வந்து, ரவியையாம் சாந்தாவையும் தவறாமல் கல்யாணத்திற்கு வரவேண்டும் என்று அழைத்தார். 

காலையில் நடைபெற்ற திருமண முகூர்த்தத்திற்கு ரவி சாந்தாவுடன் சென்றான். சாந்தா அன்று மிக அழகான பச்சை நிறக் காஞ்சீபுரம் சேலையை உடுத்துக் கொண்டு, விலை உயர்ந்த வைர அட்டிகை, வைரத் தோடுகள், வைர வளையல்கள், வைர மோதிரங்கள் எல்லாம் அணிந்திருந்தாள். காரில் செல்லும்போது, ரவியின் பார்வை ஜெகஜோதியாக ஜொலித்த அந்த வைர நகைகள் மீது பட்டது. உடனே அவனுக்கு பத்மினியின் நினைப்பு வந்து விட்டது 

அடேடே! பத்மினிக்கு இத்தனை துணிமணிகளை வாங்கிக் கொடுத்தேனே தவிர, அவளுக்கு நகைகள் எதுவுமே வாங்கித் தரவில்லையே! சாந்தாவின் உடம்பெல்லாம் வைரங்களாக மின்னுகின்றன. ஆனால், என் பத்மினிக்கு ஒரு குந்து மணிப் பொன் கூட இல்லையே! நான் ஒரு மடையன்! முதலில் அந்தக் குறையை நீக்க வேண்டும் என்று மனத்துக்குள் நினைத்துக் குறித்துக் கொண்டான். 

கல்யாண முகூர்த்தம் முடிந்ததும், ரவி சாந்தாவை வீட்டில் இறக்கிவிட்டு, ஸ்டூடியோவிற்குப் போனான். அங்கிருந்து வாசுவுக்கு டெலிபோன் செய்து உம்மிடியாரிலிருந்து அப்ரூவலுக்காக நகைகளை ஸ்டுடியோவுக்கே கொண்டு வருமாறு சொன்னான். 

ஒரு மணி நேரத்துக்குள், வாசு தன்னுடன் உம்மிடியார் கடையைச் சேர்ந்த ஒருவரையும் அழைத்துக் கொண்டு, பெட்டி பெட் டியாகப் பலவிதமான டிசைன்களில் நகைகளை ஸ்டூடியோவுக்குக் கொண்டு வந்து, ரவியுடைய தனிப்பட்ட ஏ.ஸி. மேக்-அப் அறையில் அடுக்கி வைத்தான். 

ஸெட்டில் டைரக்டரிடம் அரை மணி நேரத்துக்கு வேறு ஏதாவது ஷாட் எடுக்கும்படி கேட்டுக் கொண்டு, ரவி மேக்-அப் அறைக்கு வந்தான். தனக்குப் பிடித்த சில நகைகளை ஸெலக்ட் செய்துவிட்டு, வாசுவைப் பணம் கட்டிவிடச் சொன்னான். தான் வாங்கிய நகைகளை மட்டும் மேக்-அப் அறையிலேயே வைத்துவிட்டு, அஸிஸ்டெண்ட் பையனை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டான். 


அன்று மாலை, ஸ்டூடியோவிலிருந்து ரவி நேராக பத்மினி வீட்டிற்குச் சென்றான். காலையில் வாங்கிய நகைகளை பத்மினிக்குப் பரிசாக அளித்தான். “ரவி! இத்தனை நகைகளா? ஏற்கெனவே எனக்காக எவ்வளவோ செலவு பண்ணியிருக்கீங்க. இதெல்லாம் வேறே இப்போ எதுக்கு?” என்றாள் பத்மினி. ”எனக்கு என்ன பணத்துக்கா பஞ்சம்? லட்ச லட்சமாச் சம்பாதிக்கிறேன். உனக்காகச் செலவு பண்ணாம வேற யாருக்காகச் செலவு பண்ணப் போறேன்?” என்றான் ரவி சிரித்துக் கொண்டே. 

“இருந்தாலும்… ஒரே நாள்லே இத்தனை நகைகளை ஏன் வாங்கணும்? இது வீண் செலவுதானே?” 

“இல்லை பத்மினி. உனக்காக நான் உலகத்தையே கூட விலைக்கு வாங்க முடிஞ்சா வாங்கிடுவேன். உனக்காக எவ்வளவு செஞ்சாலும் அது போதாதுன்னு தான் நான் நினைக்கிறேன்.”

மறு நாள், சாந்தாவின் சிநேகிதி சித்ரா திடீரென்று முன்னறிவிப்பின்றி அவளைப் பார்க்க வீட்டுக்கு வந்தாள். 

”சித்ரா,என்ன ஆச்சரியம்! நாக்பூர்லேர்ந்து எப்போ வந்தே?” 

“வந்து ரெண்டு நாள்தான் ஆச்சு, சாந்தா”. 

”ஓஹோ! ரெண்டு நாள் ஆச்சா? இன்னிக்குத்தான் என் ஞாபகம் வந்ததா?” 

“கோவிச்சுக்காதே சாந்தா! வீட்டிலே ஒரே அமர்க்களம், ஒரே கூட்டம். என் தங்கைக்குக் கல்யாணம் ஸெட்டில் ஆயிருக்குன்னு எழுதியிருந்தேன். இல்லையா? அதுக்காகத்தான் இப்போ வந்திருக்கேன். அம்மாவாலே வர வர ஒண்ணும் பண்ண முடியலை. கல்யாண ஏற்பாடெல்லாம் நான்தான் கவனிச்சுக் கணும்,” என்று விளக்கினாள் சித்ரா. 

சாந்தா கொஞ்சம் சமாதானம் அடைந்தாள். 

”சரி சித்ரா, நீ எப்படி இருக்கே சொல்லு?” 

”எனக்கு என்ன? ஜோரா இருக்கேன். நீ எப்படி இருக்கே?” 

“எப்பவும் போலத்தான்.” 

சித்ரா அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். 

“நோ, ஸம்திங் இஸ் ராங். என்னமோ போல இருக்கே. ஏன் சாந்தா உடம்பு சரியில்லையா?” 

சாந்தாவுக்கு அவளிடம் எதுவும் கூற விருப்பம் இல்லை. என்னதான் சித்ரா அவளுக்கு நெருங்கிய தோழியாக இருந்தாலும். அவளிடம் போய், ‘என் புருஷன் இப்போதெல்லாம் என்னிடம் சரியாகப் பழகுவதில்லை. அவர் என்னைவிட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுக்குப் பின்னால் சுற்றுகிறார். அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது,’ என்று சொல்வது தனக்கு அவமானம் என கருதினாள். 

செயற்கையான சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஐம்’ பர்ஃபக்ட்லி ஆல் ரைட்,” என்று சாந்தா சமாளித்தாள். 

சித்ரா அதை நம்பவில்லை. ஆனால், அதைப் பற்றி மேலும் பேசச் சாந்தா விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டு வி விட்டாள்.. 

“சாந்தா. இன்னும் என் தங்கைக்காக நகையெல்லாம் வாங்கலை. உன்னைப் பார்த்துட்டு, அப்படியே உம்மிடியார் கடைக்குப் போகலாம்னு நினைச்சேன். நீயும் என் கூட வாயேன்,” என்று சித்ரா அழைத்தாள். 

“இப்பவா?” என்றாள் சாந்தா தயங்கியபடி. 

“இப்பத்தான். ஏன், சும்மாத் தானே இருக்கே? வாயேன். போயிட்டு வரலாம்,” என்று சித்ரா மீண்டும் வற்புறுத்தினாள். 

சாந்தாவுக்கும் அவளோடு போனால்தான் என்னவென்று தோன்றியது. தனியாக வீட்டில் உட்கார்ந்து போர் அடிப்பதைவிட, எங்கேயாவது வெளியே சென்று வந்தால் மனத்துக்கும் கொஞ்சம் மாறுதலாக இருக்கும் என்று நினைத்தாள். குழந்தை ஸ்ரீதரும் நர்ஸரி ஸ்கூலுக்குப் போயிருந்தான். வீட்டில் வேலைக்காரர்களைத் தவிர யாருமே இல்லை. ‘சரி சித்ரா . போகலாம் வா,” என்று கிளம்பி விட்டாள். 

உம்மிடியார் கடைக்குள் நுழைந்ததும் சாந்தாவைக் கண்டவுடனேயே கடை முதலாளி அவளிடம் வந்து விட்டார். 

“நமஸ்காரம் அம்மா.” 

“நமஸ்காரம்,” என்றாள் சாந்தா. 

“நேத்திக்கு உங்க ஹஸ்பண்ட் வாங்கின நகைகள்ளே ஏதாவது உங்களுக்குப் பிடிக்காமப் போச்சா? சொல்லுங்கம்மா. நீங்க அதிலே எதையாவது ரிட்டர்ன் பண்ண விரும்பினா அப்படியே செய்யுங்க. அதுக்குப் பதிலா உங்களுக்கு வேறே எது பிடிக்குதோ ஸெலக்ட் பண்ணுங்க,” என்றார் நகை வியாபாரி. 

சாந்தாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆச்சரியத்தில் கண்களை விரித்து அவரையே பார்த்தாள். கடை முதலாளி பேசிக் கொண்டே இருந்தார். 

“நேத்திக்குத் திடீர்னு போன் வந்தது. உங்க மேனேஜர் வாசு வந்து அர்ஜண்டா அப்ரூவல்லே நகைகள் வேணும்னு கேட்டாரு. உடனே இங்கிருந்து எங்க ஆளையும் நகையோட அனுப்பிக் கொடுத்தேன். ஸ்டூடியோவிலேயே பார்த்து நகைகளை ஸெலக்ட் பண்ணாராமே, உங்க ஹஸ்பண்ட்? நாங்க இங்கே பேசிக்கிட்டோம் – ஒரு வேளை, அம்மாவுக்குப் பிறந்த நாளோ என்னமோ, அதனாலேதான் மிஸ்டர் ரவி குமார் அவுங்களுக்குத் தெரியாம நகைகளை ரகசியமா வாங்கி, அம்மாவுக்கு ஒரு ஸ்ர்ப்ரைஸ் ப்ரெஸண்டா கொடுக்கப் போறாரோ என்னமோன்னு பேசிக்கிட்டோம்.ஏம்மா, அதிலே எதையாவது நீங்க ரிட்டான் பண்ண விரும்புறீங்களா?’ என்று மீண்டும் கேட்டார் கடை முதலாளி. 

அவர் வார்த்தைகள் சாந்தாவின் நெஞ்சத்தில் ஈட்டிகளைப் போலப் பாய்ந்தன. ரவி ரகசியமாக நகைகளை வாங்கினாரா? அவளுக்குத் தெரியக் கூடாதென்று ஸ்டூடியோவுக்குக் கொண்டு வரச் சொன்னாரா? அவளிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே! வாசுவும் இதில் அவரோடு கூட்டாகச் சேர்ந்து விட்டானா? தற்செயலாகச் சித்ராவோடு நகைக் கடைக்கு வந்ததால் இந்த விஷயம் தெரிய வந்தது. இல்லையென்றால், அவளுக்குத் தெரிய வழி ஏது? இவ்வளவு தூரத்துக்கு வந்து விட்டதா இந்தக் கள்ளக் காதல்? 

வேறொரு பெண்ணுடன் ரவிக்குத் தொடர்பு இருப்பது இப்பொழுது ஊர்ஜிதம் ஆகி விட்டது. இல்லையென்றால், யாருக்காக நகைகளை வாங்கியிருப்பார்? மனத்துக்குள் பீரிட்டு எழுந்த ஆவேசத்தையும், துக்கத்தையும் அடக்கிக் கொண்டு, “அதெல்லாம் ஒண்ணுமில்லை. எல்லா நகைகளுமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நான் எதையும் ரிட்டர்ன் பண்ண வரலை. என் சிநேகிதி இங்கே நகை வாங்கணும்னு சொன்னா. அவளுக்குத் துணையா வந்திருக்கேன். அவ்வளவுதான்,” என்றாள் சாந்தா. 

“அப்படியா? ரொம்ப சந்தோஷம்மா.” என்றார் நகை வியாபாரி. 

“ஆமாம், நேத்திக்கு அவர் வாங்கின நகைகளுக்கு பில் எவ்வளவு ஆச்சு? நான் அவரைக் கேட்டதுக்கு, அதெல்லாம் உனக்கு எதுக்கு, நகை பிடிச்சிருந்தா சரி, எவ்வளவு செலவாச்சுன்னு கேட்காதேன்னு சொல்லிட்டார். எனக்குத் தெரிஞ்சுக்கலாமேன்னு ஒரு ஆசை, அவ்வளவுதான். என்கிட்டே இருக்கிற நகைகளோட மதிப்பு எனக்குத் தெரிஞ்சா நல்லது இல்லையா?” என்று சாமர்த்தியமாக விசாரித்தாள் சாந்தா. 

“நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டியதுதான். ஒரு நிமிஷம் இருங்கம்மா, பில்லோட நகலை எடுத்துப் பார்த்துச் சொல்றேன். கடைக்காரர் சாந்தா கேட்ட விவரத்தைக் கண்டறியச் சென்று விட்டார். 

சித்ரா சாந்தாவைப் பார்த்து லேசான பொறாமை உணர்வோடு “பரவாயில்லையே! கல்யாணமாகி நாலு வருஷங்களுக்கு அப்புறம், ஒரு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் கூட, உன் ஹஸ்பண்ட் உன்கிட்டே இவ்வளவு அன்பா, இவ்வளவு ரொமான்டிக்கா இருக்காரே! நீ ரொம்ப லக்கி, சாந்தா! எனக்கும் இருக்காரே… கல்யாணம் ஆன புதுசுலே ஏதோ ஒரு வருஷம் வரைக்கும் பரவாயில்லை. கொஞ்சம் ரொமான்டிக்கா இருந்தார். ஆனா இப்போ? சதா பிஸினஸ், பிஸினஸ், பிஸினஸ்! நான் ஒருத்தி இருக்கேங்கறது கூட அவருக்கு ஞாபகம் இருக்கிறதில்லை. ஹூம்! என் வீட்டிலே உங்க ரவி மாதிரி இருந்தா எவ்வளவு நன்றாயிருக்கும்? நீ கொடுத்து வச்சவ டீ!” என்றாள். 

சாந்தா சிரித்துவிட்டு அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. சித்ராவும், கடைக்காரரும் ரவி தனக்காகத்தான் நகைகளை வாங்கினான் என்றே நம்பட்டும்! அப்படி அவர்களை நம்ப வைப்பதில்தான் அவளுடைய கௌரவமே அடங்கி இருந்தது. உண்மை அவர்களுக்குத் தெரிந்தால், அவளைப் பற்றி எவ்வளவு உதாசினமாக நினைப்பார்கள்! 

கடைக்காரர் பில்லுடன் வந்தார். அதைச் சாந்தாவிடம் கொடுத்தார். சாந்தா அதைப் படித்துப் பார்த்தாள். இரண்டு லட்சம் ரூபாய்! இரண்டு லட்சம் மதிப்புள்ள நகைகளை ஒரே நாளில் வாங்கினாரா? இந்த நாசகாரி யாராக இருந்தாலும், ரொம்ப ஆபத்தானவளாய் இருப்பாள் போல் தோன்றுகிறதே! இப்படியே விட்டு வைத்தால், அவரைச் சுத்தமாகத் தன் பக்கத்திற்கே இழுத்துக் கொண்டு என்னை ஒரேயடியாக கை கழுவ வைத்து விடுவாள் போலிருக்கிறதே! இப்படியே போனால், கடைசியில் நான்தான் முழுமையாக ஏமாந்து போய் விடுவேன்! ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது? என்னால் என்ன செய்ய முடியும்? இப்படியே சாந்தா மனத்துக்குள் குழம்பினாள், ஆடிப் போனாள். 

ரவியிடம் நகைகளைப் பற்றி அவள் எதுவும் கேட்கவில்லை. கேட்கத் துணிவு வரவில்லை.ஒரேயடியாக அவளைத் தூக்கி எறிந்து, ‘ஆமாம்! நான் வேற ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்! அவளோடதான் இனிமே வாழ விரும்புறேன். உன்னை எனக்குப் பிடிக்கலை,என்னை விட்டுடு!’ என்று ரவி கூறி விட்டால்? 

அதற்கு அவளாக இடம் அளிக்க விரும்பவில்லை. இதுவரை ரவி அப்படி வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. தானாக அவளைத் தூண்டிவிட்டு இப்படி ஒரு விபரீத பதிலை வாங்கிக் கட்டிக் கொள்வானேன் என்று சாந்தா நினைத்தாள். அவசரப்பட்டு ரவியின் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டு அப்படி ஏதாவது நடந்து விட்டால், அவள் நிலை என்ன? ஸ்ரீதர் நிலை என்ன? ஆனால், எத்தனை நாட்களுக்குத்தான் மெளனமாக இருப்பது? மனத்துக்குள்ளேயே புகைந்து புகைந்து எரிவதைத் தவிர சாந்தாவுக்கு வேறு என்ன செய்வதென்று விளங்கவில்லை. 

– தொடரும்…

– ஒருத்திக்கே சொந்தம், முதற் பதிப்பு: ஜூன் 1980, மாலைமதி,, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *