ஏன் இப்டி செஞ்சேன்?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 14,718 
 
 

“ஹலோ குணா, பீ நெகட்டிவ் ரத்தம் தேவைப்படுது… ஹாஸ்பிட்டல் வரைக்கும் வரமுடியுமா?” தேவ் பேசும்போதே, அவசரத்துக்கான அவதி தெரிந்தது…

தேவ், ஜேகே மருத்துவமனையில் பணிபுரியும் என் சமீப கால நண்பன்… கண் தானம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று எங்கள் அலுவலகத்தில் நடந்தபோது தொடங்கிய நட்பு, இப்போது இதைப்போன்ற அவசியமான சந்திப்புகள் மூலம் தொடர்கிறது…

எங்கள் நட்பு வட்டத்தின் அத்தனை பேருடைய ரத்த ஜாதகமமுமே தெரியும் அவனுக்கு… இப்போது நான் ஏதேனும் காரணம் கூறி மறுத்தாலும், அதை பெரிதாக பொருட்படுத்தாது உடனே அடுத்த நபருக்கு அழைப்பை தட்டிவிடுவான்… ஏனோ எனக்கு மறுக்க மனம் வரவில்லை… லேசான தலைவலி இன்னும் விடாமல்
துரத்திக்கொண்டுதான் இருக்கிறது… என்றாலும் கூட, சற்றும் தாமதிக்காமல் எழுந்து ஒரு பாரசிட்டமாலை போட்டுக்கொண்டு, உடை மாற்றி கிளம்பிவிட்டேன்…

உச்சிவெயில், ஒட்டுமொத்த சரீரத்தையும் சுளீரிட செய்தது.. பைக்கின் இருக்கைகூட பைல்ஸ் உண்டாக்கும் அளவிற்கான மிதமிஞ்சிய வெப்பத்தை கக்கியது… சென்னையின் ட்ராபிக் கொடுமையில் சிக்கித்தடுமாறி,
மருத்துவமனையை அடைந்தபோது என் உடலிலிருந்து ஆயிரம் கலோரிகளாவது எரிக்கப்பட்டிருக்கும்…

பேசாமல், “இல்ல தேவ், நான் வெளில இருக்கேன்…வரமுடியாது”ன்னு சொல்லிருக்கலாமோன்னு ஒரு நிமிடம் யோசிக்க தோன்றியது…

வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு, வழக்கமாக அவனை சந்திக்கும் அறையை நோக்கி நடந்தேன்… நான்கு மாதங்களுக்கு முன்பு, ஒரு கருவுற்ற பெண்ணுக்கு இதே மருத்துவமனையில் ரத்தம் கொடுத்தது நினைவுக்கு வந்தது… நல்லவிதமாக குழந்தை பிறந்ததும், அவள் கணவன் இனிப்பு பெட்டியோடு என் வீட்டிற்கு
வந்ததை வாழ்நாளில் மறந்திடமுடியாது… சமூக சேவை என்பதை தாண்டியும், இப்படிசில அன்பிற்காகவே அசௌகரியங்களைகூட பொருட்படுத்தாமல் உதவிகள் செய்யலாமென தோன்றுகிறது…

அந்த அறைதான்… அறைக்குள்லிருந்து சரியாக அவன் வெளிவரும் நேரத்தில், நானும் கதவருகே சென்றுவிட்டேன்…

“வா குணா… காணுமேன்னு நினச்சேன்…” ஒருசில காகிதங்களை படித்தபடியே அவன் முன்னே நடக்க, நானும் அவன் பாதசுவட்டினை தொடர்ந்தேன்…

எனக்கு பழகிய இடம்தான் என்பதால் அவர்கள் சொல்வதற்கு முன்பாகவே கட்டிலில் ஏறி படுத்து, வலது கையின் சட்டையை உயர்த்திக்கொண்டேன்… எனக்கு எதிரே அமர்ந்து ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்டை தீவிரமாக ஆராயந்துகொண்டிருந்தான் தேவ்…

“என்ன கேஸ் தேவ்?…”

“குழந்தைக்கு ஆக்சிடென்ட்… வலது கைல அடி, அதான் எக்ஸ் ரே பார்த்தேன்…”

“ஓஹோ… ரொம்ப ப்லட் லாஸா?”

“இல்ல… ஒரு யூனிட் போதும்னு சொல்லிட்டாங்க… பிராக்சர் கூட இல்ல… சின்ன பையன்ங்குறதால வலியால துடிச்சுட்டான்…”

“அடப்பாவமே… என்ன வயசு?”

“அஞ்சு இருக்கும்… எவனோ தண்ணிய போட்டுட்டு வந்து பைக்ல மோதிட்டான்…அப்டியே குழந்தை மயங்கிட்டான், அதை என்னன்னு கூட பாக்காம அந்த நாய்க ஓடிட்டானுக…”

குறிப்பிட்ட அளவு ரத்தம் எடுத்தவுடன், துளையிட்ட இடத்தில் பஞ்சு வைத்து ப்ளாஸ்த்ரி ஒட்டினர்… கொடுக்கப்பட்ட பழச்சாறை ஒரே மூச்சில் குடித்துவிட்டேன், பிஸ்கட் பாக்கெட்டை மட்டும் பிரிக்காமல்
யோசித்துக்கொண்டிருந்தேன்…

“அந்த பையன பாக்கணும் தேவ்…”

“என்ன ரத்தம் கொடுத்த பாசமாக்கும்?”

“ஹ ஹா… அப்டியும் சொல்லலாம்… என்னமோ நீ சொன்னதும் அவனை பாக்கனும்னு தோணுது…”

“ஹ்ம்ம்.. போகலாம்..” அந்த அறையின் இடதுபக்கமாக நான்காவது அறைக்குள் நுழைந்தோம்… செவிலிப்பெண் ஒருத்தி ஐவி இணைப்பை சரிபார்த்துக்கொண்டிருந்தாள்…

“இப்ப எப்டி இருக்கான் பையன்?”

“இப்ப ஓகே சார்… வலியால ரொம்ப துடிச்சதால பெயின் கில்லரும், ஸ்லீப்பிங் டோசும் போட்ருக்கேன்…” என்று மெல்லிய மலையாள வாடையுடன் சொல்லிமுடித்தாள் செவிலி…

அழகாக உறங்கிக்கொண்டிருந்தான் சிறுவன்… உறங்கவில்லை என்றால், அப்படியே தூக்கி கொஞ்சியிருப்பேன்.. அப்படி ஒரு துறுதுறுப்பான சாயல்… கையில் வைத்திருந்த பிஸ்கட்டை, அந்த படுக்கையின் அருகே வைத்துவிட்டு, அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன்…

“என்ன குணா இவ்ளோ பீல் பண்ற?” தேவ் ஆச்சர்யப்பட்டான்…

“அப்டி இல்ல தேவ்… குழந்தைல்ல அதான்…” எனக்கும்கூட ஆச்சர்யமாகத்தான் இருந்தது..

“இதுல கொடும என்ன தெரியுமா?.. இந்த பையனோட அப்பாவுக்கும் பீ நெகட்டிவ்தான்… ஆனா, அந்தாளுகிட்டேந்து ப்லட் எடுக்க முடியாத சூழல்…முழு தண்ணிவண்டியாம்… ஹாஸ்பிட்டல் வரும்போதுகூட புல் தண்ணில வந்தான்..நம்ம சீப்தான், இங்க இருக்கக்கூடாதுன்னு விரட்டிட்டாரு”

தேவ் இதை சொல்லும்போது, அந்த சிறுவன் மீது இன்னும் அதிக கரிசனம் உதித்தது…

அப்போதுதான் யாரோ அந்த அறைக்கதவை திறந்து உள்ளே வந்தார்கள்… தேவின் பேச்சிலிருந்து அந்த சிறுவனின் அம்மாதான் அதுவென புரிந்துகொண்டேன்…

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லம்மா… பிராக்சர்’லாம் இல்ல… பையன் நல்லா இருக்கான்… வலிக்கு மருந்து கொடுத்திருக்காங்க, அதனால இன்னும் ரெண்டு மணி நேரம் தூங்குவான்… பயப்பட வேணாம்…” அவன்
சொல்லிமுடிக்கும்போதுதான் அந்த பெண்ணை நான் கவனித்தேன்… அவள் அதுவரை என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்…

“இவர்தான் உங்க பையனுக்கு ப்லட் கொடுத்தார்” அறிமுகப்படுத்தினான்… அந்த பெண்ணின் பார்வை இன்னும் ஆழமாகியது… எனக்குமே பழக்கப்பட்ட முகம் போல தெரிகிறது… ஆனால், யாரென புலப்படவில்லை…அழுதே சிவந்த கண்களுக்கு கீழே தூக்கமில்லாத இரவுகளை சொல்லும் கருவளையம், முகம் வீங்கி, உடல் இளைத்ததை போல தெரிகிறாள்… நான் பார்ப்பதை கவனித்ததும், அவசரமாக சேலையின் முனையை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டாள்…

ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு ஒரு ஊகத்திற்கு வந்ததை போல, “மதுமிதா!” என்றேன்…

அவள் கண்கள், இன்னும் ஆற்றாமையோடு கண்ணீரை வெளிவிட்டது…

“இவங்கள உனக்கு தெரியுமா குணா?…”

“ஹ்ம்ம்… சொந்தக்காரங்கதான்..” தயக்கத்தோடு சொன்னேன்…

“பாவம், நேத்து நைட்லேந்து ஒன்னும் சாப்பிடல… கேண்டீனுக்கு கூட்டிட்டு போய் எதாச்சும் சாப்பிட சொல்லு…” சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு வெளியேறிவிட்டான்…

“எப்டி இருக்க மது?” இப்படியோர் கோலத்தில் பார்த்தபிறகும், அவளை அப்படி கேட்டிருக்கக்கூடாதுதான்… அவள் பதிலெதுவும் சொல்லவில்லை, முகத்தை சேலையின் முந்தானையால் மூடிக்கொண்டு அழுதாள்…

“ப்ளீஸ் மது… ரிலாக்ஸ்… முதல்ல உட்காரு, இந்தா தண்ணி குடி” என்று அவளை அமரவைத்து, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை அவள் கைகளில் திணித்தேன்… நடுங்கிய கைகளுடன் அதைப்பற்றி, ஓரிரு வாய் குடித்தாள்…

“எதாச்சும் சாப்பிடுறியா?… வாங்கிட்டு வரவா?” என்று கதவை நோக்கி நகர்ந்தேன்…

“இல்ல வேணாம்.. நீ உக்காரு குணா…” இன்னொரு இருக்கையை நோக்கி கை காட்டினாள்… இருக்கையில் என்னால் இயல்பாக அமரமுடியவில்லை… அவள் தோற்றம் என்னை துளித்துளியாக துன்பத்தில் ஆழ்த்தியது… அருகிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து, அவள் கையில் ஒன்றை திணித்தேன்…

“ப்ளீஸ்… இதாச்சும் சாப்பிடு” என்றேன்…

என் வற்புறுத்தலுக்காக ஒரு கடி கடித்ததோடு, படுத்திருந்த குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தாள்…

“ஒன்னும் பயப்பட வேணாம் மது… இன்னும் ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க…”

தலையசைத்தபடி, மெலிதாக சிரித்தாள்… அது சம்பிரதாய சிரிப்பை போலத்தான் தெரிந்தது…

ஓரிரு நிமிடங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை… மதுவின் முகத்தைப்பார்த்தேன், தொடர்ந்து இன்னும் சில நிமிடங்கள் பார்த்தால் அழுதுவிடுவேன்… ஏழு வருடங்களுக்கு முன்புவரை என் மனைவியாக இருந்த மதுவா
இது?.. இன்னுமே என்னால் நம்பமுடியவில்லை… ஏன் இப்படி ஆகிவிட்டாள்?…

குழந்தைச்சிரிப்பும், துறுதுறுப்பும் நிறைந்த அழகுப்பதுமையாக இருந்தவள்..

எங்களுக்கு திருமணமான புதிதில், நெற்றிவகிட்டு குங்குமமும், மஞ்சள் தாலியும் அவளை தேவதை போல வெளிக்காட்டின… ஆனால், இப்போதோ கண்களின் கருவளையமும், இளைத்த உடலும், வெடித்த உதடுகளுமாய்… வேண்டாம்…

வேறுபக்கம் பார்வையை திருப்பிக்கொண்டேன்…

சில நிமிட அமைதி அவளை கொஞ்சம் இயல்பாக்கியிருக்கக்கூடும், மதுதான் பேச்சை தொடங்கினாள்…

“எப்டி இருக்க குணா?”

“ஹ்ம்ம்… இருக்கேன்… சாரி மது” தொண்டையை செருமி, குரலை இயல்பாக்கிக்கொண்டேன்…

“எதுக்கு சாரி?”

“தெரியல… ஆனா சாரி..”

“நீ செஞ்ச உதவிக்கு நியாயமா நான்தான் நன்றி சொல்லணும்… ஆனாலும், உன்ன வேத்து மனுஷனா எனக்கு பார்க்கத்தோனல…”

பதில் எதுவும் சொல்லவில்லை… என் மனதை அழுத்திய கேள்வியைத்தான் கேட்டேன்…

“நீ ஏன் இப்டி ஆகிட்ட மது?”

“எப்டி ஆனேன்?… ஏழு வருஷத்துக்கு முன்ன இருந்த மாதிரி இருப்பேன்னு நினைச்சியா?… இப்போ அஞ்சு வயசு பையனுக்கு அம்மா நான்… வேற எப்டி இருப்பேனாம்?” சகஜமாக பேசத்தொடங்கினாள்… மனதளவில் அவள் தைரியம் பெற்றதை போல தெரிந்தது… யோசிக்காமல் பேசுகிறாள், பொய்யாக இருக்குமோ? என்று
நம்மை யோசிக்கவிடாமல் பேசுவதில் மது வல்லவள்…

“நிஜமாவே நல்லாதான இருக்க?”

“குழந்தைக்கு அடிபட்டதால இப்டி இருக்கேன்… வீட்டுக்கு வந்திருந்தா, பழைய மதுவை ஓரளவு பார்த்திருக்கலாம்… ஹ ஹா…” சிரிக்கிறாள்… அந்த சிரிப்பு என்னை இன்னும் கலவரமூட்டியது… தன் கவலைகளை மறைக்க சிரிப்பதை போல தெரிகிறது…

“உன் ஹஸ்பன்ட்…” கேள்வியை முடிக்காமல் அவளை பார்த்தேன்…

“அவரு பிஸ்னஸ் பண்றாரு குணா… ஏதோ எக்ஸ்போர்ட் பிஸ்னஸ்.. என்னை நல்லா பாத்துக்கறார்… இப்போ ஏதோ மீட்டிங்க்னு பெங்களூர் போயிருக்கார்…இன்னிக்கு வந்திடுவார்…” என் அடுத்தடுத்த கேள்விகளை யூகித்து, அவளே பதில்களை கொட்டினாள்… நிச்சயமாக பொய்தான்… தேவ்தான் உண்மையை சொல்லிவிட்டானே..

“உன் ஹஸ்பன்ட் தண்ணி அடிச்சதால ப்லட் கொடுக்கமுடியலன்னு சொன்னாங்களே?”

நானும் விடுவதாக இல்லை…

பெருமூச்சு விட்டுக்கொண்டாள்… “சொல்லிட்டாங்களா?… ஹ ஹா… அது நேத்து ஒரு பார்ட்டின்னு ட்ரின்க் பண்ணிருந்தாரு… அதான், மத்தபடி அவரு குடிகாரனல்லாம் இல்ல… பார்த்தியா குணா, ட்ரின்க் பண்ணதை இங்க்லீஷ்’ல சொன்னா அது மேற்தட்டு விஷயமாவும், தண்ணி அடிச்சதை தமிழ்ல சொன்னா கேவலமாவும் தெரியுது… நம்ம ஊர்கள்ல இன்னும் இந்த மொழி ஏற்றத்தாழ்வு போகல…” பேச்சை மடைமாற்ற முயல்கிறாள்…

மது ஒருசில பட்டிமன்றங்களில் பேசியவள், திருமணத்திற்கு பிறகு விட்டுவிட்டாள்… என்னிடம் பேசி
சமாளிக்கவே அவளுக்கு நேரம் போதவில்லை என்பதால் கூட இருக்கலாம்..

“நெஜமாவே சந்தோஷமாதான் இருக்கியா மது?”

“ஐயோ குணா… கோவில்ல சத்தியம் பண்ணாதான் நம்புவியா?… நம்புப்பா… என் ஹஸ்பன்ட் கொஞ்சம் தண்ணி அடிப்பார்தான்… ஆனாலும் நல்லவர்..அதுமட்டுமில்லாம எங்க மாமியார் வீட்ல இருக்கவங்க என்னைய தங்கமா
பாத்துக்கறாங்க… இவ்ளோ நேரம் இருந்துட்டு இப்போதான் வீடுவரைக்கும் போயிட்டு வரேன்னு போயிருக்காங்க… நான் ரொம்ப சந்தோஷமாதான் இருக்கேன்பா…”

“சாரி மது… இதுவும் எதுக்குன்னு தெரியல… ஆனாலும், சொல்லத்தோணுது…”

எங்கள் இருவரின் திருமணமுமே ஒரு பொம்மை திருமணம் போலத்தான் நடந்துமுடிந்தது… அழகாக வண்ணங்கள் பூசப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்துக்குள் மரத்துப்போன மனதுடன் அவளுக்கு தாலி கட்டியதை “திருமணம்” என்கிற பட்டியலுக்குள் இணைக்க என்னால் முடியவில்லை..

திருமணமாகி மூன்று மாதங்கள் கழித்துதான் மது என்னிடம் நேரடியாக அந்த விஷயத்தை கேட்டாள்…

“என்னை நிஜமாவே பிடிச்சிருக்கா குணா?”

“என்ன மது இது கேள்வி?… பிடிக்காமலா உன் மேல இவ்ளோ பாசமா இருக்கேன்…”

மூன்று மாதத்தில் ஆறாவது முறையாக இந்த கேள்வியை கேட்கிறாள்…

இம்முறையும் அதே பதிலைத்தான் சொன்னேன்..

“பாசமா இருக்குறது சரி குணா… ஆனா…” தடுமாறினாள்… அவள் தயக்கம் என்னை கலக்கமுற செய்தது… எதையேனும் யூகித்திருப்பாளோ? என்ற சந்தேகம் எழும்பியது…

“ஒரு உண்மைய உன்கிட்ட சொல்லணும் மது… நீ தப்பா நினச்சாலும் அத சொல்லித்தான் ஆகணும், இதுவே ரொம்ப தாமதம்தான்… ஆனாலும்…” வேறு வழியில்லை, இப்போதே சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்..

“ஐயோ தயங்காம சொல்லு குணா… என் மனசல்லாம் பதறுது…”

“அது… அது வந்து… நான் ஒரு கே… என்னால ஒரு பொண்ணுகூட இயல்பா தாம்பத்ய வாழ்க்கைல ஈடுபடமுடியாது… அதனாலதான் ஒவ்வொருமுறையும் செக்ஸ் சம்மந்தப்பட்ட சூழல் வர்றப்போ, நான் எதாச்சும் காரணம் சொல்லி விலகிடுறேன்… இதுக்கு சாரின்னு சொல்லி ஒருவார்த்தைல தப்பை மறச்சிட முடியாது… ஆனாலும், இதுக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கறேன்…” கண்களை மூடிக்கொண்டு உண்மையை கொட்டிவிட்டேன்…

நியாயமாக அந்த மூன்று மாதங்களும் மதுவை நான்தான் தண்டனைக்கு உள்ளாக்கியிருக்கிறேன்… ஏதோ பேச்சு சாதுர்யத்தால் இப்படி சமாளித்துவிட்டாலும், என் குற்ற உணர்ச்சி என்னை கொல்லாமல் கொன்றது…

இரண்டு நாட்கள் அவள் எதுவும் பேசிடவில்லை… நானுமே பேச முற்படவில்லை…

தனியாக அழுதிருப்பாள் போல, முகமல்லாம் பலமுறை வீங்கிய நிலையில் இருந்ததுண்டு… ஆனாலும், அவள் பெற்றோருக்கோ, வேறு யாருக்குமோ எதையும் சொன்னதாக தெரியவில்லை… அழுது ஆர்ப்பாட்டமோ, சண்டையோ போடவில்லை… இந்த நிசப்தம்தான் என்னை அதிக கலவரமூட்டியது…

மூன்றாம் நாள் பொறுமை இல்லாமல் நானே பேசினேன்…

“மது…”

“லன்ச் பண்ணிட்டேன், எடுத்துட்டு வரேன்..” சொல்லிவிட்டு சமையலறைக்குள் போக முயன்றவளை தடுத்து நிறுத்தினேன்…

“ப்ளீஸ் எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசு” கெஞ்சுவதை போல கேட்டேன்…

“என்ன பேசணும் குணா?” சுவரோரம் சாய்ந்து நின்று, என் கண்களை பார்த்துக்கேட்டாள்…

என்னால் நேரடியாக அவள் கண்களை எதிர்கொள்ளமுடியவில்லை, தலையை கவிழ்த்துக்கொண்டேன்…

“சாரி மது…”

“இந்த சாரியால ஒன்னும் மாறிடப்போறதில்ல குணா… நீ கே’வா இருக்குறத நான் தப்புன்னு சொல்லல… ஆனா, சரியான நேரத்துல, சரியான நபர்கள்கிட்ட அதை சொல்லாததுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்…”

“உண்மைதான் மது… நான் சொன்னா புரிஞ்சுக்கற நிலைமைல என் பேரன்ட்ஸ் இல்ல, இப்போதான் அது எவ்ளோ தப்புன்னு புரியுது… நீ வேணும்னா விவாகரத்து பண்ணிட்டு, வேற கல்யாணம் பண்ணிக்கவே”

“வெண்டைக்காய் நறுக்குறது மாதிரி விவாகரத்த நினச்சுட்டியா குணா?… அதுல எவ்ளோ சிக்கல் இருக்குன்னு தெரியாதா?… எனக்கு பின்னாடி ரெண்டு தங்கச்சிக இருக்காங்க, அவங்களுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் வெடிகுண்டே வெடிச்சாலும் வாயை பொத்திக்கிட்டுதான் அழனும்!… அதுமட்டுமில்லாம எனக்கு
உன்ன ரொம்ப பிடிக்கும்… இதுவரைக்கும் என்கிட்டே அதிர்ந்துகூட பேசுனதில்ல, ரொம்ப பாசமா பாத்துக்கற.. என் அப்பாவுக்கு அடுத்தபடியா நான் நேசிக்குற ஆண் நீதான் குணா… இப்பவுமே உன் மேல இருக்குற காதல் எனக்கு
போகல… குறைகள் எல்லார் வாழ்க்கைலயும் இருக்குறதுதான், அதை சகிச்சுகிட்டு வாழறதுதான் வாழ்க்கை… அதனால, நான் இப்டியே இருந்திடுறேன்…” மனதில் பட்டதை பட்டென போட்டு உடைத்துவிட்டாள்…

என்னிடம் பதில் எதையும் எதிர்பார்த்திடாமல், சட்டென சமையலறைக்குள் நுழைந்துவிட்டாள்…

அதன்பிறகுதான் என் மனம் அதிகமாக அழுத்தியது… அடுத்த நான்கைந்து மாதங்களில், நானும் விவாகரத்தை பலமுறை வலியுறுத்தினாலும், வழக்கம்போலவே அவள் காரணங்களை கூறி மறுத்துவிட்டாள்…

“என்ன மது ஏதும் விசேஷம் இல்லையா?” என்று வீட்டுக்கு வரும் ஒவ்வொருவரையும் அவள் எதிர்கொள்வதே பகீரத பிரயத்தனமாக இருந்தது…

“எதாச்சும் ப்ராப்ளம்னா ட்ரீட்மென்ட் போகலாம்ல?” என்கிற அட்வைஸ்’கள் மறுபக்கம் குவியத்தொடங்கின…

“ஐயோ அம்மா சந்தோஷமாதான் இருக்கேன்… இப்போ தலைக்கி குளிச்சதால தனியா படுக்குறேன்!” எங்கள் உறவைப்பற்றிய சந்தேகங்களையும் அவ்வப்போது மது தீர்க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டாள்…

நித்தமும் மது நடிக்கிறாள், என்னாலுமே இரட்டை வாழ்க்கை வாழ்வது முடியவில்லை.. எப்படித்தான் இந்த துன்பசூழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது?… மெள்ள மெள்ள என்னைப்பற்றியதான நல்ல இமேஜை, உடைத்தெறிவதை தவிர எனக்கு வேறு வழிதெரியவில்லை…

மதுவின் ஈகோவை சீண்டிப்பார்க்கும் விஷயங்களை அவ்வப்போது செய்து, சிற்சில சண்டைகளை உருவாக்கினேன்… மது குடிப்பது, புகை பிடிப்பதுன்னு அவளுக்கு பிடிக்காத விஷயங்களை தேடிப்பிடித்து செய்தேன்.. சாம்பாரின் உப்புக்குறைபாட்டை, அவள் அப்பாவை குறைசொல்வதோடு முடித்தேன்.. அவள் அண்ணன் குடும்பத்தை சீண்டியே பலமுறை சர்ச்சைகளை உருவாக்கினேன்…

“உனக்கு என்ன குணா ப்ராப்ளம்?… மௌனராகம் மோகன் போல, உன் மேல எனக்கு வெறுப்பு வரணும்னு எதிர்பாக்குறியா?… உன் குணத்துக்கு, கெட்டவன் இமேஜ் செட் ஆகாதுப்பா… நீ இவ்ளோ ட்ரை செஞ்சு கெட்டவனா காட்டிட்டு என்ன சாதிக்கப்போற?.. உனக்கு டைவர்ஸ்தான வேணும்?… நான் கையெழுத்து போடுறேன்!” என்று என் கையைப்பிடித்து சொன்னபோது, அவள் கண்கள் கலங்கியிருந்தது…

அவள் புத்திசாலி, என் ஒவ்வொரு அசைவின் நோக்கத்தையும் அச்சுபிசகாமல் யூகித்துவிட்டாள்… ஆனால், அந்த திருமண முறிவின் மூலம், அவள் வேறொரு திருமணம் செய்துகொண்டு, நலமுடன் வாழனும் என்பதுதான் என் ஆசை.. ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அவளுக்கு முழு மகிழ்ச்சியை கொடுக்கமுடியவில்லை
என்கிற எனது குற்றஉணர்வு விலகினால் போதும் என்கிற சுயநலமும் அதில் இருந்தது…

ஒருவழியாக விவாகரத்து நடந்தேறி, ஆறு வருடங்கள் முடிந்துவிட்டது…

அவளுடைய ஐந்து வயது குழந்தை என் கண் முன்னால்தான்

உறங்கிக்கொண்டிருக்கிறான்.. காலம் இவ்வளவு வேகமாக உருண்டோடும் என்பதை யூகிக்கவே முடியவில்லை…

“எவ்ளோ நாள் ஆச்சுல்ல?… ஆறு வருஷத்துல, ஒருமுறை கூட என்னை பாக்கனும்னு உனக்கு தோணலயா குணா?… டைவர்ஸ் கிடச்சா போதும்னு ஓடியே போய்ட்டல்ல?”

நினைவுகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்தேன்…

“அப்டி இல்ல மது… எதுக்கு உன்ன தொந்தரவு பண்ணனும்னுதான்…” இது வெறும் சால்ஜாப்புதான்… நிஜத்தில் அவள் சொன்னதுகூட காரணமாக இருக்கலாம்… ஏன் எனக்கு ஆறு வருடங்களாக அவளை பார்க்கனும்னு தோனல?… திருமணமான செய்திகூட இரண்டு வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக பார்த்தபோது, மதுவின் தூரத்து சித்தப்பா சொல்லித்தான் தெரியும்…

“ஆள் இன்னும் அப்டியே இருக்க… திருச்சிலேந்து எப்போ சென்னை வந்த?”

அவளிடம் பழைய சிநேகிதம் இன்னும் குறையவில்லை…

“திருச்சிலேந்து வந்து மூணு வருஷம் இருக்கும்… நீ கரஸ்’ல எம்.ஏ பண்ணியே, முடிச்சுட்டியா?.. மேற்கொண்டு எதுவும் படிச்சியா?”

“ஹ ஹா… இல்லப்பா… என் ஹஸ்பண்டை பொருத்தவரைக்கும் குடும்பப்பெண்கள் படிக்கக்கூடாது, அதனால நானும் மேற்கொண்டு படிக்கல… எம்.ஏ முடிச்சப்புறமாவது நாம டைவர்ஸ் பண்ணிருக்கலாம்னு இப்போ தோணுது…” மிக இயல்பாக பேசுகிறாள்.. அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் என் இதயம்
இன்னும் அதிவேகமான பாய்ச்சலில் துடித்தது…

“சாரி மது…”

“ஐயோ குணா… கால் மணி நேரத்துல இது மூணாவது சாரிப்பா… போதும் விடு… படிக்கலைன்னா என்ன, நல்லா சந்தோஷமாதானே இருக்கேன்… ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்” என் கையை பிடித்து ஆறுதலாக சொன்னாள்… கையை தொட்ட மறுவினாடியே, பதட்டத்துடன் விலக்கியும்கொண்டாள்… என் மீதான அவள் நட்பு
நிச்சயம் அடுத்தவர்களால் புரிந்துகொள்ளப்படமுடியாது, அதை நிரூபிப்பதற்கான சூழலும் இதுவல்ல…

அடுத்து என்ன பேசுவது?… பேசுவதற்கான ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும், எதை எடுப்பது? எதை விடுப்பது? என்கிற குழப்பம் இருவரையும் பேசிக்கொள்ளவிடவில்லை…

அறைக்கதவை திறந்து இரண்டு பெண்கள் உள்ளே நுழைந்தனர்… அவர்களை பார்த்ததும் மது பதட்டமாய் எழுந்துநின்றாள், முகத்தில் ஆயிரம் குழப்ப ரேகைகள்…

“யாரு இது?” என்று குள்ளமாக, பருத்த உடம்பினை உடைய பெண்மணி கேட்க, மது தடுமாறினாள்… நானும் சூழலின் சிக்கல் அறிந்து, தயங்கியபடியே எழுந்து நின்றேன்…

“குழந்தைக்கு ரத்தம் கொடுத்தேன், அதான் பாத்துட்டு போகலாம்னு” நான்தான் சமாளிக்க ஆயத்தமானேன்…

“ரத்தம் கொடுத்தவருக்கு நன்றின்னு சொல்லிட்டு, அனுப்பிடாம ரூமுக்குள்ள என்னவாம் பேச்சு?” இது ஒடிசலான பெண்மணியின் குதர்க்கப்பேச்சு…

மது என்னைப்பார்த்தாள்… அந்தப்பார்வை, “ஏன் குணா குழப்பிட்ட?… நானே சமாளிச்சிருப்பேன்ல?” என்று கேட்பது போல தோன்றியது…. அதற்குமேல் அங்கு நிற்பது நல்லதல்ல, வெளியே அமர்ந்திருக்கலாம் என்று சட்டென கதவை திறந்து வெளியேவந்துவிட்டேன்..

மூடிய கதவு, ஒரு மருந்து புட்டியின் மூடி இடைசெருகியதால், மெலிதான இடைவெளியோடு மூடியிருந்தது… உள்ளே பேசும் விஷயங்கள் வெளியில் நின்ற எனக்கு அப்பட்டமாய் கேட்டது…

“இதென்ன ஹாஸ்பிட்டல்லயும் நீ அடங்கமாட்டியா?”

“ஐயோ அத்த, அவரு ரத்தம் கொடுக்க வந்தவரு”

“ஆமா… வந்தவன் ரத்தத்த மட்டும்தான் கொடுத்தான்னு யாருக்கு தெரியும்”

“போதும் நிறுத்துங்க…ஏன்தான் என்னைய தெனமும் இப்டி பேசியே கொல்றீங்க?”

“நீதான் எங்கள இப்டி கொல்ற… எங்கயும் இல்லாத சீமை பொண்டாட்டியா உன்னைய ரெண்டாம்தாரமா கட்டி கூட்டிட்டு வந்தான் பாரு எம்மவன், அவன சொல்லணும்!”

மதுவின் விசும்பல் அழுகையாக தொடர்ந்தது…

அதற்குமேல் அங்கு நிற்க முடியவில்லை… என்னையும் அறியாமல் என் கால்கள் நடக்கத்தொடங்கியது…

அங்கேயே நின்று மது வெளியே வந்தபிறகு, அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது… சொன்னாலும், “இது நாலாவது சாரி” என்ற கணக்கு சொல்வாள்… இன்னும் ஆயிரம் ‘சாரி’கள் கேட்டாலும், என் பாவத்திற்கான பிராயச்சித்தம் மட்டும் கிடைக்காது என்பதை அறிவேன்… என்னுடைய தவறுக்காக என் வாழ்க்கையும் புதைந்து, அவள் வாழ்க்கையும் சிதைந்து… எல்லாம் நிர்மூலமாக ஆகிவிட்டது… என்னோடு வாழ்க்கையை தொடர்ந்திருந்தாலும் இதே அளவிலான கஷ்டத்தை, வேறு விதத்தில் அனுபவித்திருப்பாள்.. மருத்துவமனை வாசலை அடைந்துவிட்டேன், இன்னும் என் கால்கள் நடப்பதை நிறுத்தவில்லை…

என்னை தற்காத்துக்கொள்ள, நல்லவனாக காட்டிக்கொள்ள ஒரு பெண்ணின் வாழ்க்கையை பணயம் வைத்துவிட்டேன்.. திருமணம் என்கிற படுகுழியில் தள்ளி, விவாகரத்து என்கிற பாழும் கிணற்றில் விழச்செய்து, மறுமணம் என்கிற கொதிநீரில் மதுவை தத்தளிக்க செய்த கொடும்பாவி நான்… ஏழு வருடங்கள் கழித்து என் தவறை உணருகிற நேரம், மிகவும் காலம் கடந்த தன்னிலை உணர்தல்… கண்களை மூடி அழுத்தியபோது, கண்ணீர் என் உதட்டினை கடந்திருந்தது… “பாம்… பீம்…பாம்..” ஏதேதோ சத்தங்கள் கேட்டு, வலது புறம் திரும்பினேன்… நடுசாலையில் நிற்கிறேன், எனது வலதுபுறத்தில் அலறல் சத்தத்துடன் டேங்கர் லாரி ஒன்று
அதிவேக பாய்ச்சலில் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது… என் கால்கள்
நகர மறுத்தது…

Print Friendly, PDF & Email

1 thought on “ஏன் இப்டி செஞ்சேன்?

  1. உண்மையாக நல்ல உருவாக்கம் ….ஒரு குறும் படம் பார்த்த உணர்வு தோன்றியதை மறுக்க முடியாது. எதிர்பாராத கதை திருப்பங்கள், சோகத்துடன் மெல்லிய இழையாய் நகைச்சுவை , நாயகனின் பரிதவிப்பு அனைத்தும் அருமையான உணர்வு பதிவுகள்.நன்றி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *