கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 21,836 
 
 

-1-

தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் எல்ஸாவுக்கு வயது 5. சுருள் சுருளாக, பழுப்பு நிறத்தில் நீண்டமுடி. படிகம் போன்ற தெளிவான விழிகள். மண்ணில் விளையாடியதால் அழுக்கடைந்த கால்கள். எல்ஸாவின் தோட்டம் உயரமான மரங்களும், எண்ணிக்கையற்ற பூவகைகளும் நிறைந்த தோட்டம். எல்ஸாவின் சிறியக் கண்களுக்குள் அடங்காத மிகப்பெரியத் தோட்டம். ஆனால் அவள் கற்பனையில் விரிந்தக் கதைகளுக்கும், துடுக்கான விளையாட்டிற்கும், அவ்விளையாட்டுக்கெனவே கற்பனையில் உதிக்கின்ற அவளது தோழர்களுக்கும் ஏற்றத் தோட்டம்.

மரங்கள் தோறும் தாவிச் செல்லும் சித்திரக் குள்ளன். அழகான மலர்களிலிருந்து சுகந்தத்தை மட்டுமே சேகரிக்கின்ற குட்டி தேவதைகள். வழக்கம்போல வசிய மருந்துகக்காக கள்ளிச் செடிகளையும், அழுகியப் பழங்களையும் தேடுகின்ற சூனியக்காரிகள் என அவளது கற்பனைக் கேற்றவாறு தோட்டத்தின் பங்களிப்பு மாறும். மணல் நிரப்பப்பட்டத் தொட்டியில், அவள் கட்டுகின்ற மணற்கோட்டைகளில் சூரியனின் கதிர்களும், மேகத்தின் நிழல்களும் வாசம் செய்யும். பூமியில் காதினை வைத்து மண்ணில் வாழும் புழுக்களும் வண்டுகளும் இடும் இரைச்சலைக் கேட்டு, அவைகளை ஆச்சரியப் படுத்துவாள். சிறிது நேரம் அவள் ஆடுகின்ற ஊஞ்சலின் மூலம் உயரே பறக்கின்ற ‘மேசான்ழ்’ குருவியை பிடித்திட முயல்வாள். பின்னர் இறங்கி ‘ராஸ்பெரி’ பழங்களைப் பறித்து ‘மாக்பை’ குருவியோடு பங்குபோட்டுக் கொள்வாள். ‘மாக்பை’ குருவி அமர்ந்திருக்கும் சுவர்தான் வீதியிலிருந்தும், வெளி மனிதர்களிடமிருந்தும் தோட்டத்தைப் பாதுகாக்கிறது. தோட்டத்து அமைதியை எப்போதும் பூட்டி வைத்திருக்கிறது.

“உஸ்.. சத்தம் போடாதே!” அணிலிடம் ஏதாவது வேலையைப் பணிக்கும்போதுகூட இப்படித்தான் ஆரம்பிப்பாள். மழையில் நனைவதில் சந்தோஷமா? அடுத்தவர்களுக்கு கேட்டுவிடாது, மெதுவாகத்தான் சிரிப்பாள். அவளது கற்பனைக் கதைகளின் தோழர்களான நரி, பூனை எறும்புகளைப்போல, மெள்ள, ஊர்ந்து நடப்பதெல்லாம் கூட அப்படித்தான். கற்பதித்தத் தோட்டத்து பாதைகளில் விழுந்து அவள் முழங்காலிலோ, முழங்கையிலோ சிராய்த்துக்கொள்ள நேரும்போது கூட கண்ணீரை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவள். அப்படி அழுவதால் ஒருவேளை ஜன்னலை மூடிக்கொண்டு கீழ்த்தள அறைக்குள் களைப்பாலுறங்கும் அவள் அம்மாவை எழுப்பிவிடக் கூடும். அதற்கடுத்தவறையில் இருக்கும் அப்பாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கோபக்காரர். கண்டிப்பானவர். எல்ஸாவிற்கு அடக்கமில்லை என்றும், பெரியவர்கள் பேசும்போது குறுக்கிடுகிறவள் எனவும் கூச்சலிட்டு பயமுறுத்திக் கொண்டிருப்பவர்.

-2-

தோட்டத்தில் படித்துக் கொண்டிருக்கும் எல்ஸாவிற்கு வயது 10. சுருள் சுருளாக தலை முடி ஆனால் கண்களில் முன்பிருந்த ஒளியும், தெளிவும் தொலைந்திருந்தன.

கைவிரல்கள் புத்தகத்தை அழுந்தப் பிடித்திருந்தன. இப்போதெல்லாம் படிப்பதென்பது ஒருவகையில் அவளுக்கான புகலிடம். அவளது விருப்பமானத் தோட்டத்தைப் போலவே வெளிமனிதர்களிடமிருந்தும் அவர்களிடும் கூச்சல்களிடமிருந்தும் அடைக்கலம் தரும் புகலிடம். அலுவலக அ¨றையினின்று அப்பா கூச்சலிடுகின்ற நேரங்களில் புத்தகங்கள் மட்டுமே அவளுக்கான ஒளிப்பிடம். புத்தகத்திலிருந்து விடுபட்டு எல்ஸா வானத்தை பார்க்கிறாள். பிறகு ‘திய்யேல்’ மரத்தருகேச் சென்று, அதன் நிழலில் குப்புறப் படுக்கிறாள். தலையை உயர்த்தி பின்னோக்கிச் சாய்த்து கதிரவனை நேராகப் பார்க்கிறாள். பிறகதன் வண்ணத் துகள்கள் செய்யும் ஜால வித்தையை கண்ணிமைகளை இறுக மூடி அனுபவிக்கிறாள். மேகத்தின் குளிர் நிழல் முகத்தில் படவே, கண்களை மெள்லத் திறக்கிறாள். அப்பாவின் அலுவலக அறையிலிருந்து, கூடுதலாக இ¢ந்த முறை இன்னொரு குரல் – பெண்குரல். அந்த குரல்கள் உரையாடலைப் பொறுத்து, உயர்ந்தும் தாழ்ந்தும் தோட்டம் வரை கேட்கின்றன. அப்பெண் எல்ஸாவின் வகுப்பாசிரியையாக இருக்க வேண்டும். ‘எல்ஸாவின் அதிகப் படியான அமைதி’ அந்தப் பெண்ணை கலவரபடுத்துகிறதாம். புகார் சொல்லிக்கொண்டிருக்கிறாள். எல்ஸா அவர்கள் பேசுவதை அமைதியாகவேக் கேட்டுக் கொண்டாள். அவளை பொறுத்தவரையில் கீழ்த்தளத்து அறையில் ஜன்னலை மூடிக்கொண்டு உறங்கும் அம்மாவுக்குத் தொந்தரவு நேர்ந்துவிடக்கூடாது. அப்பா “வாயை மூடிக்கொண்டிரு” என்று சொல்லியிருந்தார்.

பட்டாம் பூச்சியொன்று அவளது திறந்திருந்த புத்தக ஏட்டில் மெள்ள காற்பதித்து உட்காருகிறது. எல்ஸா மூச்சினை அடக்கிக் கொண்டாள். தன் சுவாசம் பட்டாம்பூச்சியை எழுப்பிவிடுமென்கின்ற பயம். ஆசிரியையும், எல்ஸாவின் அப்பாவும் தோட்டத்திற்குள் நுழைந்து, இவள் படுத்திருக்கின்ற ‘திய்யேல்’ மரத்தை நோக்கி வருகிறார்கள். அவர்களின் காலடி சத்தத்தில் அதிர்ச்சியுற்ற பட்டாம் பூச்சி பறந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து சென்ற எல்ஸாவின் கண்கள் எதிர்பட்ட வகுப்பாசிரியைச் சந்திக்கின்றன. ஆசிரியை அளவாகப் புன்னகைக்கிறாள். எல்ஸாவின் அப்பா என்ன நினைத்தாரோ விலகிக் கொண்டார். ஆசிரியை எல்ஸாவில் பக்கத்திலமர்ந்து நிறைய பேசுகிறாள். எல்ஸா வழக்கம்போல அமைதியாகக் கேட்டுக்கொண்டாள். ‘அவள் வாயை திறக்ககூடாது, குறுக்கிடக்கூடாது. எதைச் சொன்னாலும் அமைதியாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படித்தான் அவளப்பா வளர்த்திருக்கிறார்.

எல்ஸா எழுந்தாள். தோட்டத்தில் உள்ள நடைபாதையை எப்போதாகிலும் உபயோகிப்பாள். இந்த முறை அதில் நடக்கும் போது, கால்களை அழுந்தப் பதித்துத் தேய்த்து நடந்தாள். தோட்டத்துச் சுவரினை நெருங்கி ராஸ்பெரியை கை நிறையப் பறித்துக் கொண்டாள். அதில் கொஞ்சமெடுத்து அவளைத் தொடர்ந்து வந்திருந்த, ஆசிரியையிடம் கொடுத்தாள். இருவரும் அமைதியாகப் புன்னகைத்துக் கொண்டனர். அப்பாவிடம் ‘அடக்கமாயிருப்பேன்’ என்று சத்தியம் செய்திருப்பது ஞாபகத்துக்கு வந்தது. அதை மீறுவதில்லையெனத் தீர்மானித்தாள். ஆசிரியையிடம் பேசவில்லை.

-3-

தோட்டத்தில் அழுதுகொண்டிருக்கும் எல்ஸாவிற்கு வயது 15. குட்டையான முடி. சோகம் நிறைந்த விழிகள். ஒடுங்கிய உடல்.

முழங்கால்களை மார்புபட முடக்கி, முன் கைகளால் அவற்றை இறுகப் பிடித்து, தலையை வளைத்து, முகத்தைப் புதைத்து, அவளுக்குள்ளேயே அடைக்கலம் தேடி, அவளுக்குள்ளேயே கரைந்து, அவளை அவளே விழுங்க நினப்பதுபோல சுருண்டு கிடக்கிறாள். அவளது ஊமை அதிர்வுகளை அடக்க வேண்டி, சுவாசமே நின்று போகும் அளவிற்குத் தன்னை வருத்திக் கொள்கிறாள். அசையாமல் கிடக்கிறாள். சுற்றிலும் தோட்டத்தின் நிசப்தம். மலர்களின் சுகந்த வாசம். வீதியிலிருந்தும் வெளியுலகத்திலிருந்தும் தோட்டத்தைப் பிரித்து நிற்கும் சுவரில் மண்டிக்கிடக்கும் ராஸ்பெரி, அவற்றின் சர்க்கரை மணம். பிறகு தனிமை. அந்த நிலையிலிருந்து மீளவோ, ஒரு கைப்பிடி அளவு ராஸ்பெரியை பறிக்கவோ அவளுக்கு ஆர்வமில்லை. பசி கூட தோன்றவில்லை. சொல்லபோனால் எதன் மீதும் விருப்பமில்லை. நாளை மாலைவரை, விடுதிக்குத் திரும்பும்வரை இப்படித்தான் நேரத்தைப் போக்கியாகவேண்டும்.

பூமியில் முன்பு அவளுக்குக் கிடைத்த ஆறுதலை, மண்ணுயிர்களின் எதிரொலியை மறுபடியும் தேடினாள். கண்கள் குருடாகின்ற வகையில், மூச்சை நிறுத்திக் கொள்ளும் எண்ணத்துடன் முகத்தை பூமியில் பதித்து இறுகத் தேய்த்தாள். திடுமென்று எழுந்து கொண்டாள் ‘ தியல்’ மரத்தின் முன்னே சென்று நின்றாள். மரப்பட்டைகளை மெள்ள வருடினாள். தனது துயரங்களை விட்டுச் செல்கின்ற வகையில் மரத்தை இறுகத் தழுவினாள். அதன் வேர்களிடமிருந்து அன்றைய மாலையைச் சந்திக்கப் போதுமான சக்தியைத் தேடிப் பெற்றுக் கொண்டாள்.

இப்போதெல்லாம் எல்ஸாவிற்கு மாலையைக் கண்டால் வெறுப்பு. இரவென்றால் அச்சம். அவளது பின் கழுத்தை சுவற்றுக்குப் பின்னால் மறையும் சூரியனின் கடைசிக் கதிர்கள் தொட்டுவிட்டு விலகிக் கொள்கின்றன. அந்தி நேரம் அவளுக்குள் காய்ச்சலை ஏற்படுத்தி உடலை நடுங்கச் செய்வதால் அதனிடமும் பயம். அப்பா அலுவலக அறையிலிலிருந்து வெளிப்பட்டு கூச்சலிடுகிறார். இனி, மேலும் கூச்சலிடலாம். எல்ஸாவின் அம்மா இரண்டாண்டுகளுக்கு முன்னால் ஏதோவொரு தீராத வியாதியால் இறந்திருந்தாள். அவளுக்கினி எவரும் தொந்தரவு கொடுத்துவிட இயலாது. அம்மாவிற்காக எல்ஸா அமைதியாக இருக்க வேண்டியதில்லை. விம்மி விம்மி அழுதாள். அவ்வழுகை கேட்பதற்கு ஆளின்றி ஒலித்து ஓய்ந்தது.

-4-

தோட்டத்து நினைவுகளில் ஆழ்ந்து கிடக்கும் எல்ஸாவிற்கு வயது 20. தலை முடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தது.

நினைவுகளால் தேய்ந்து, உருக்குலைந்து, உணர்ச்சியற்று மரத்துப்போன உடல். இப்போதெல்லாம் ஊஞ்சலில் ஆடுவதற்கோ, ‘தியேல்’ மரத்தடியில் உட்காருவதற்கோ ஆளில்லை. சித்திரகுள்ளனுக்கும், தேவதைகளுக்கும், மண்ணில் வாழ்கின்ற இனத்திற்கும் உயிரூட்ட எவருமில்லை. சூரியனை முகத்திற்கு நேரே பார்ப்பதற்குக் ஒருவருமில்லை. எல்ஸா சன்னல் வழியே வெறித்து நோக்குகிறாள். இங்கே அவளைச் சுற்றியிருந்த சுவர் வானத்தையும் பூமியையும் அவளிடமிருந்து பிரித்திருந்தது. தோட்டத்தையும் அதன் அமைதியையும் பாதுகாத்த சுவர் ஞாபகத்தில் வந்து போனது. இந்தச் சுவர் அப்படியல்ல இவளிடமிருந்து வெளியுலகத்தைக் காக்கின்ற சுவர். இவளைச் சிறை பிடித்துள்ள சுவர். இங்குள்ள சன்னலை இவளது விருப்பபடி மூடவோ அல்லது திறக்கவோ இயலாது. விளையாடுவதற்கோ, படிப்பதற்கோ அல்லது அழுவதற்குமே கூட அவள் விரும்பிய நேரங்களில் வெளியில் சென்றிட முடியாது. அதிக பட்சமாக அவள் வெளியே அனுமதிக்கப் படுகின்ற நேரம் பதினைந்து நிமிடங்கள். அப்படி அனுமதிக்கப் படுகின்ற நேரங்களில் காங்க்ரீட் வெளி வாசலில் காதினைவைத்து எறும்புகளுக்கும் மண்புழுக்களுக்கும் காத்திருப்பதென்பது நடக்கின்ற காரியமா? எல்ஸா விளையாடுவதில்லை, படிப்பதில்லை ஏன் அழுவதைக் கூட நிறுத்தியாயிற்று. மாறாக தண்டனைக் கைதியாக மணிக் கணக்காக, நாட்கணக்காக, மாதக் கணக்காக, வருடக் கணக்காக அமைதியாகக் காத்திருக்கிறாள். இந்த அமைதி மட்டுமே அவளைவிட்டு நீங்காது, தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கிறது. அந்த அமைதியின் சுவாசத்தில் மட்டுமே அவளது ஜீவன் அடங்கிக் கிடக்கின்றது. இந்த வாழ்க்கையை மறுக்கவில்லை ஏற்றுக் கொண்டாள்.

மறுபடியும் அமைதி கண்களை மூடுகிறாள்: கற்பனையில் மீண்டும் அந்த சிறுமி. சுருள் சுருளாக முடி, பளபளக்கும் கண்கள். தோட்டத்து நடைபாதையைக் கடக்கும் போதெல்லாம் கால்களை அழுந்தப் பதித்து தேய்த்து நடக்கும் சிறுமி. அறையிலிருந்துகொண்டு திறந்திருக்கும் ஜன்னல்வழியாக பட்டாம்பூச்சியொன்றின் பறக்கும் அழகை ரசிக்கும் சிறுமி. ஜன்னலருகில் கையூன்றி புன்னகை செய்யும் அம்மாவிற்கு தன்னுடைய புன்னகையை மறுமொழியாக அளிக்கின்ற சிறுமி. உயரே பறந்துகொண்டிருக்கும் ‘மேக்பை’ குருவிக்கு இடையூறின்றி மெள்ள நடந்து கைநிறைய ராஸ்பெரியை பறித்து மென்று துப்புகின்ற சிறுமி. இறுதியாக, கால்களாள் குழிபறித்து அதில் எல்ஸாவின் தந்தையைப் புதைத்து அவளுக்கு விடுதலைவாங்கித் தரும் சிறுமி.

– மே 2004
பிரெஞ்சு சிறுகதை-ஷோவென் ழான்-ரொபெர்
தமிழில் -நாகரத்தினம் கிருஷ்ணா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *