என்றென்றும் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 6,988 
 
 

தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள் ஹேமா. அருகில் கணவன் செழியனும் உறங்காமல்தான் இருந்தான்.

“என்னடா… தூக்கம் வரலையா? விசுக் விசுக்னு புரண்டு படுக்கக் கூடாதுன்னு உங்க அம்மா சொன்னாங்களே… மெதுவா திரும்பிப் படு. கொஞ்சம் காத்தாட பால்கனில உக்காந்துக்கறியா?”

“இல்லைங்க… அதெல்லாம் வேண்டாம். அம்மா ஒரு மாதிரியா இருக்காங்க, நீங்க கவனிச்சீங்களா? ஏதும் உடம்புக்கு முடியலையா… என்னன்னு தெரியல?”

“ஆமா ஹேமா… நானும் கவனிச்சேன். அத்தைகிட்டேயே கேட்டேன்…. உடம்புக்கு ஏதாவது முடியலையா? இங்கே உங்களுக்கு சௌகரியப்படலியா…? எல்லாம் கேட்டுட்டேன். அதெல்லாம் ஒண்ணுமில்ல… நான் நல்லாத்தான் இருக்கேன்னு சொல்றாங்க. சரி… நீ மனசைக் குழப்பிக்காதே. வயித்துல குழந்தை இருக்கற இந்த நேரத்துல நீ நல்லா தூங்கணும். சீக்கிரம் தூங்கு. காலைல பொறுமையா பேசிக்கலாம், சரியா… குட் நைட் டியர்.”

குட்நைட்ங்க. நீங்களும் மொபைல் பார்க்காம சீக்கிரம் தூங்குங்க.”

திரும்பிப் படுத்துக்கொண்ட ஹேமாவுக்கு, அம்மாவின் நிலையை எண்ணி கவலையாக இருந்தது.

ஹேமாவுக்கும், செழியனுக்கும் திருமணம் முடிந்து ஏழு வருடங்களாகிறது. இருவரும் வேலைக்குப் போவதால், ஆரம்பத்தில் குழந்தைப் பேற்றை ஒரு மூன்று வருடங்களுக்குத் தள்ளிப்போட முடிவு செய்தார்கள். அதன்பின் ஏனோ அவர்கள் எதிர்பார்த்தாற்போல் நடக்கவில்லை. நிறைய மருத்துவ பரிசோதனைகள் என அலைந்து, இப்போது தான் ஹேமா கருத்தரித்திருக்கிறாள். ஆசை மகள் எப்போது கர்ப்பமாவாள் என ஹேமாவின் அம்மா சாவித்ரி வேண்டாத தெய்வம் இல்லை. அதனால் அவள் நல்ல செய்தி சொன்னதும், மகளைப் பார்க்கும் ஆவலில், மார்ச் மாதத் துவக்கத்தில், சென்னையிலிருந்து பெங்களூரு கிளம்பி வந்தாள்.

சென்னையில் ஹேமாவின் அண்ணன் கார்த்திக் வீட்டில் அப்பா, அம்மா இருக்கிறார்கள். கார்த்திக், அவன் மனைவி ஜெயா இருவரும் வேலைக்குப் போவதால், குழந்தை அஸ்வினைப் பார்த்துக் கொள்ள, அப்பா வெங்கட் சென்னையில் இருக்க வேண்டியதாயிற்று. அதனால், அம்மா மட்டும் கிளம்பி வந்து, மகளுடன் ஒரு பத்து, பதினைந்து நாட்கள் இருந்துவிட்டுப் போகலாம் என வந்தாள். ஆனால் எதிர்பாராத விதமாக, ஊரடங்கால் மறுபடி சென்னை திரும்ப முடியவில்லை.

அம்மா பெங்களூரு வந்தபோது, ஹேமாவுக்குக் கொஞ்சம் மசக்கை அதிகமாக இருந்ததால், அம்மாதான் முழுக்க, முழுக்க அவளைக் கவனித்துக் கொண்டாள். என்ன பிடிக்கும், எது உடம்புக்கு நல்லது என, பார்த்துப் பார்த்து செய்து கொடுத்தாள். ஆனால் மார்ச் மாதம் முடிந்து, ஏப்ரல் ஆரம்பத்தில் இருந்தே அம்மா கொஞ்சம் தளர்ந்து விட்டாள். ஹேமாவும், செழியனும் இதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சரி… அம்மாவுக்கு வேலைகள் அதிகம்… அதனால் முடியவில்லையோ என ஹேமாவும், செழியனும் முக்கால்வாசி வேலைகளை பங்கிட்டுச் செய்தார்கள். ஆனாலும் அம்மா முகத்தில் அந்தப் பழைய தெளிவு இல்லை. மருந்தெல்லாம் சரியாக எடுத்துக் கொள்கிறாளா எனக் கேட்டுக் கொண்டாள் ஹேமா. கைவசம் மருந்துகள் இருக்கட்டும் என்று கொஞ்சம் சேர்த்தே வாங்கியும் கொடுத்தாள்.

ஒரு வேளை பேரன் அஸ்வினைத் தேடுகிறதோ, என்னவோ… அவனைக் குழந்தையில் இருந்து அம்மாதான் கவனித்துக் கொள்கிறாள். அதனால், பேரனைப் பிரிந்த ஏக்கம் அம்மாவை வாட்டுகிறதோ என எண்ணினாள். அதனால் வீடியோ காலில் தினமும் அண்ணா, அண்ணி, அப்பா, அஸ்வின் அனைவரையும் பேசச் சொன்னாள். அவர்களும், தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பின் ஏன் அம்மா இப்படி இருக்கிறாள்? யோசித்துக் கொண்டே இருவரும் தூங்கிப் போனார்கள்.

மறுநாள்முதல் ஹேமாவும், செழியனும் அம்மாவின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க ஆரம்பித்தார்கள். எது அவளுக்கு சிரமமாக இருக்கிறது, எது ஒத்துக் கொள்ளவில்லை என ஒவ்வொன்றாக கவனித்தனர். ஹேமாவுக்கும், செழியனுக்கும் தினமும் ஆஃபீஸ் வேலைகள், கான்ஃபரன்ஸ் கால் என இருக்கும் போது, அம்மாவுக்குப் பொழுது போக புத்தகங்கள் எடுத்துக் கொடுத்தாள் ஹேமா. அல்லது யூ ட்யூபில் ஜெமினி கணேசன் படத்தைப் போட்டு விட்டார்கள்.

கிட்டத்தட்ட ஒருவாரம், இந்த ஆராய்ச்சியிலும், ஏற்பாடுகளிலும் கழிந்தது. ஆனாலும் அம்மா முகத்தில் அந்தப் பழைய கலகலப்பு இல்லை. ஹேமாவுக்கு இது கவலையாக இருந்த்து. அவளால் சந்தோஷமாக தன் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. அம்மாவுக்கு என்னாயிற்று என்பதே எப்போதும் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஹேமா, கர்ப்ப காலத்தில் இப்படிக் கவலையாக இருப்பது செழியனுக்கு மிகவும் வேதனையளித்தது. எப்பாடுபட்டாவது அத்தையின் கவலையைக் கண்டுபிடித்து, அதை சீர்செய்ய நினைத்தான். விரைவில் அதற்கான சந்தர்ப்பம் அமைந்தது.

அன்று இரவு, பதினோரு மணி இருக்கும்… ஹேமா அசந்து தூங்கிவிட்டாள். செழியனுக்குத் தூக்கம் வராததால், டிவி பார்க்கலாம் என எழுந்து வந்தான். டிவியை ஆன் செய்யும் முன், அத்தையின் அறையில் ஏதோ பேச்சுக் குரல் கேட்கவே, சற்று தயங்கினான். ”அத்தை இந்த நேரத்தில் யாருடன் பேசுகிறார்?” என யோசித்தான். லேசாக விசும்பும் சத்தம் கேட்கவே, செழியனுக்கு, அத்தை அழுது கொண்டே யாருடனோ பேசுவது புரிந்தது. காதைக் கொஞ்சம் கூர்மையாக்கி கவனித்தான்… ஆபத்துக்குப் பாவமில்லை… ஒட்டு கேட்கலாம்… என சமாதானப்படுத்திக் கொண்டான் தன்னை. அத்தை பேசுவது மட்டும் கேட்டது.

“என்னங்க… எனக்கு ஃபோன் பண்ணி பேசணும்னு உங்களுக்குத் தோணவே இல்லையா…?”

மாமா ஏதோ சொல்கிறார்.

“தினமும் வீடியோ கால்ல பேசறீங்க.. இல்லேன்னு சொல்லல. ஆனா அப்போ எல்லாரும் பக்கத்துல இருக்காங்க. எப்படி சகஜமா பேச முடியும்? ராத்திரி பத்து மணிக்கு மேல கூப்பிடலாம் இல்லையா?”

“………”

“அது எனக்குத் தெரியாதா…? பேரன் உங்க கூடத்தான், கதை கேட்டுட்டு தூங்குவான்னு எனக்குத் தெரியுமே. அவன் தூங்கினதுக்கு அப்புறம் நீங்க ஃபோன் பண்ணலாமே? நான் கூப்பிட்டா, ஃபோன் அடிக்கும் போது குழந்தை முழிச்சுக்குவானேன்னு நான் யோசிக்கறேன்.”

“….”

“உங்களுக்கும் கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும். ஒரு பத்து நாளைக்கு அவளுக்கு வாய்க்கு ருசியா செஞ்சு குடுத்துட்டு வந்துடலாம்னு நினைச்சேன். இப்படி இங்கேயே மாட்டிப்பேன்னு நான் நினைக்கல. அப்போ கார்த்தியும், ஜெயாவும் வேலைக்குப் போயிட்டு இருந்ததால, அஸ்வினைப் பார்த்துக்க நீங்க இருக்க வேண்டியதாப் போச்சு. இப்போ அவங்களே வீட்டுல இருக்காங்க. இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நீங்களும் வந்திருக்கலாம்.”

“…..”

“நீங்க வேளா வேளைக்கு மருந்து சரியா போட்டுக்கறீங்களா? மூட்டு வலி எப்படி இருக்கு? வெயில் வேற அதிகமா இருக்கு… காரம் கம்மியா போடச் சொல்லுங்க ஜெயாகிட்ட. உங்களுக்குக் காரம் ஒத்துக்காது. கறிகாய் வாங்கறேன்னு நீங்க வெளில போயிடாதீங்க… வயசானவங்க கவனமா இருக்கணும்னு சொல்றாங்க. எனக்கு நினைப்பெல்லாம் அங்கதான் இருக்கு. இதெல்லாம் எப்படி மருமக முன்னாடியும், மாப்பிள்ளை முன்னாடியும் பேசறது. குழந்தையும் கூடவே இருக்கான். சங்கோஜமா இருக்காதா எனக்கு?”

“….”

“புரியுது… என் தலைசுத்து, இடுப்புவலி பத்தி நீங்க கவலைப்படாதீங்க. இங்க மாப்பிள்ளையும், ஹேமாவும் என்னை நல்லா கவனிச்சுக்கறாங்க. என்னைப் பத்தி கவலைப்பட்டு, உங்க உடம்பைக் கெடுத்துக்காதீங்க. பிபி அதிகமாயிரும்… மருந்து காலியாயிருச்சுனா கார்த்தியை வாங்கித் தரச் சொல்லுங்க. நம்ம குழந்தைகளுக்காக நாம கஷ்டப்படறோம்… இல்லேன்னு சொல்லல. ஆனா, ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருந்தா ஒண்ணும் தெரியாது. இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி இருக்கும்னு தெரியல. என்னை ஒரு தடவை கண்ணம்மானு கூப்பிடுங்க. அதைக் கேக்காம ஒரு மாதிரியா இருக்கு…” என்று மீண்டும் லேசாக விசும்ப ஆரம்பித்தார்.

அதற்கு மேல் அங்கு நிற்பது சரியில்லை என செழியன் தன் அறைக்குத் திரும்பினான். இந்தக் கோணத்தில் பிரச்சனையை இவ்வளவு நாள் யோசிக்கவேயில்லையே என நினைத்துக் கொண்டான். இருந்தாலும், அத்தையின் கவலைக்கு மருந்து தெரிந்து விட்டது. அதை சரி செய்தால், ஹேமாவும் கவலையில்லாமல் இருப்பாள் என்ற தெளிவுடன் தூங்கினான்.

மறுநாள், முதல் வேலையாக, செழியன், காவல்துறையில் இருக்கும் தன் நண்பனிடம் பேசினான். ஹேமாவின் அண்ணனிடமும் பேசி, மாமாவை பெங்களூரு வரவழைக்க ஏற்பாடு செய்தான். இந்த ஏற்பாடு எல்லாம் ஹேமாவுக்கும், அத்தைக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

சென்னையில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று, காரில் அப்பாவை அனுப்பி வைத்தான் கார்த்திக். பெங்களூரில் செழியனின் நண்பன் உதவியால் பத்திரமாக வீடுவந்து சேர்ந்தார் ஹேமாவின் அப்பா.

ஹேமாவும், அத்தையும் ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடினார்கள்.அத்தை செழியனை நன்றியுடன் பார்த்தார். மாமாவும் செழியனின் கைகளைப் பிடித்துக் கொண்டார். அந்த ஸ்பரிசத்தில் நிறைவை உணர்ந்தான் செழியன்.

அத்தை ஹேமாவிடம், “கண்ணே… ஹேமா… என் மனசுல இருந்ததை மாப்பிள்ளை சரியா புரிஞ்சுகிட்டாரு. அப்பாவை விட்டுட்டு இருக்கறதுல நான் தவிச்ச தவிப்பை புரிஞ்சுகிட்டு அவர் அப்பாவை வரவழைச்சுட்டார். இது போதும்டி எனக்கு…. இனி உனக்கு பிரசவம் பாக்கற வரைக்கும் கூட நான் இங்க இருக்கத் தயார்,” என்றார்.

ஹேமா செழியனைத் தனியாக அழைத்துப் போய், அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“எப்படிங்க… என்னாலகூட இதைப் புரிஞ்சுக்க முடியல. அவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன். எங்கம்மா முகத்துல இப்பதான் அந்தப் பழைய தெம்பு வந்திருக்கு. இது போதுங்க எனக்கு…. இனிமேல் நம்ம குழந்தையை கவனிச்சுக்கறது மட்டும்தான் என் வேலை. ஆமா… அம்மா, அப்பாவை மிஸ் பண்றாங்கன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“அது… எப்படியோ தெரிஞ்சுகிட்டேன். ஆனா ஒரு விஷயம் நாம புரிஞ்சுக்கணும். எவ்வளவு வயசானாலும் கணவன் மனைவி அன்பு மட்டும் குறையாது. பொதுவா இதை யாரும் யோசிக்கறது இல்ல. வயசான அப்பா, அம்மாவை நம்ம சுயநலத்துக்காகப் பிரிச்சுடறோம். அம்மா இங்க இருந்தா எனக்கு உதவியா இருக்கும்… அப்பா இருந்தா என் குழந்தையைப் பார்த்துப்பார்னு, நம்ம தேவைக்காக அவங்களைத் தனித்தனியா வேலை வாங்க மட்டும்தான் நமக்குத் தெரியுது. ஆனா, அவங்க ரெண்டு பேருக்கும், ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு இருக்கறது கஷ்டமா இருக்கும்னு நாம யோசிக்கறது இல்ல. சின்ன வயசுலதான் மனைவி, அம்மா வீட்டுக்கு போனாலோ, இல்லை கணவன் ஆஃபீஸ் விஷயமா வெளியூர் போனாலோ பிரிவு கஷ்டமா இருக்கும்னு நினைச்சுக்கறோம். ஆனா, அன்பு என்னைக்கும் ஒண்ணுதான்… அப்படினா பிரிவும் எவ்வளவு வயசானாலும் கஷ்டம்தானே… அவங்க மட்டும் இல்ல… நமக்கு வயசானாலும் நாமளும் இப்படித்தான் எப்பவும் பிரியாம இருக்கணும்,” என்று மனைவியை அன்பாய் அணைத்துக் கொண்டான் செழியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *