கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2023
பார்வையிட்டோர்: 1,959 
 

அம்மா வழக்கம் போல் ஆரம்பித்து விட்டாள் ஏய்யா எத்தனை முறை சொல்லறது, மறு மறுபடி அப்படித்தான் செய்யறே?

அப்பாவும் தன்னுடைய பெருங்குரலில் ஆரம்பித்து விட்டார்

என்னடி பெரிய தப்பை கண்டு பிடிச்சுட்ட? அரை மணி நேரம் அப்படியே வெளியே போயிட்டு வந்தா குத்தமா?

வெளியே போ, எங்கியோ போ, எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போ, நீ துரை மாதிரி ஊரை சுத்திட்டு வருவே, நீ வர்ற வரைக்கும் நாங்க காத்து கிட்டு இருக்கணுமா?

உன்னைய நான் காத்துகிட்டு இருக்க சொன்னனா? போய் வேலையை பாப்பியா சொல்ல வந்துட்டா, உறுமலுடன் உள்ளே சென்றவர் தட்டெடுத்து வைத்து டொம் என்று உட்கார்ந்தார்.

ஆமா ஊரை சுத்திட்டு வந்து கொட்டிக்கறதுக்கு வந்துடு, முணங்கிக்கொண்டே அம்மா உள்ளே வந்தாள்.

அறைக்குள் நாளை கல்லூரி இறுதித்தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த எனக்கு சே என்றிருந்தது. ஒரு வயசுப்பெண் இருக்கிறாள் என்ற எண்ணமில்லாமல் இவர்கள் தினமும் சண்டை போட்டுக்கொண்டிருப்பது எரிச்சலாக வந்தது.

இவர்களுக்குள் இத்தனை சண்டைகளை வைத்துக்கொண்டு எப்படித்தான் குடும்பம் நட

த்துகிறார்களோ? மனசுக்குள் ஆயாசமாய் இருந்தது. எனக்கு வருபவன் அப்பாவை போல கண்டிப்பாய் இருக்க கூடாது, அப்படியானால் நானும் அம்மாவை போல இருக்க கூடாது, மனசுக்குள் இந்த எண்ணம் வர வெட்கத்துடன் சே அதுக்குள்ள எதுக்கு கல்யாண எண்ணமெல்லாம். இனியும் மேல படிக்கணும்,

காலையில் மீண்டும் அவர்கள் இருவருக்கும் சண்டை ஆரம்பித்து விட்டது. இப்பொழுது அப்பா கத்திக்கொண்டிருந்தார். எத்தனை முறை சொன்னாலும் கேக்க மாட்டேங்கறா. உன்னைய விடிய காலையில போய் வாசல் பெருக்க சொன்னாங்களா, கொஞ்சம் வெளிச்சம் வரட்டுமே, எங்க இந்த எருமை சொன்னதை கேட்டிருக்குது. கொஞ்சம் சத்தமாகவே திட்டிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தார்.

அம்மா தன் வெண்கல் குரலில் ஆமா பொம்பளையா பிறந்துட்டு எருமை கணக்கா தூங்க சொல்றான் இந்த ஆளு, ஏதோ இருட்டுல பூச்சியோ புழுவோ போச்சுன்னு சொன்னா அதுக்கு இந்த குதி குதிச்சுட்டு போறான், முணு முணுத்த்து இவளது காதில் நாரசாரமாய் விழுந்தது.

அப்பொழுதுதான் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிக்கலாமா, வேண்டாமா என்ற சிந்தனையில்

இருந்த எனக்கு இவர்களின் கூப்பாடு அன்றைய நாளை “சே” என்றாக்கி விட்டது.

எந்திரிடி, அம்மாவின் குரலில் கணவன் மீதிருந்த ஆங்காரம் வெளிப்பட சட்டென எழுந்தேன். இனி சும்மா இருக்க மாட்டாள், பொண்ணுக்கு என்ன காலையில எருமையாட்டம் தூக்கம் பிலாக்கணம் பாட ஆரம்பிப்பாள்.

அப்பாடி கடைசி தேர்வும் முடிந்து விட்டது. இனி சுதந்திர பறவைதான். நினைத்து மனசு சந்தோசப்பட்டாலும், ஐயோ வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா? இதுகள் இரண்டும் போடற கூப்பாட்டுல எப்படி இருக்கறது. எங்கியாவது ஒரு வேலைய தேடிக்கணும், ரிசல்ட் வந்த பின்னால மேல படிக்கறத பத்தி யோசிக்கலாம். முடிவு செய்தவள், நட்பு வட்டாரத்தை தேடி போனேன்.

ஹாய் கவிதா, பரிட்சை எல்லாம் முடிஞ்சிடுச்சு. அடுத்து என்ன கல்யாணமா? கண்ணை சிமிட்டினாள் கல்பனா.

கல்யாணமா? இப்ப வேணாம்ப்பா, எங்க அப்பா அம்மாவை பத்திதான் உனக்கு தெரியுமே, அவங்களை பாத்துட்டு எவளாவது கல்யாணத்துக்கு அவசரப்படுவாளா !

யேய் சும்மா சொல்லாதே, எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க, அதுக்கப்புறம் என்ன பண்ணறது, வீட்டுல தொந்தரவு பண்ணூனாங்க, வேற வழி இல்லாம போச்சு அப்படீன்னு கெட்டி மேளம் கொட்டிடுவாங்க.. மற்றொரு தோழியின் கிண்டல்.

சரி அதை விடுங்க, இப்ப வேலைக்கு முயற்சி செய்யணும், யாராவது தெரிஞ்ச கம்பெனியா இருந்தா சொல்லுங்க.

வேலைக்கா? நீயா? அதுவும் அவ்வளவு அவசரமா? உங்க அப்பா அம்மா அதுக்கு ஒத்துக்குவாங்களா? அவர் கடையிலயே நாலு ஆளு வேலை செய்யுது, உங்க அம்மா வேற கல்யாணத்துக்கு சமையல் பாத்திரம் வாடகைக்கு விட்டுட்டு இருக்காங்க. அப்புறம் எப்படி உன்னை வேலைக்கு அனுப்புவாங்க, உங்க அப்பா அம்மா யாராவது உன்னை அவங்க தொழில்ல இழுத்து விட்டுவாங்க வேணா பாரேன்.

ஐயோ அவங்களுக்கு பயந்துட்டுத்தான் வேலைக்கே போறேன், அவங்களோட இருந்தா நானும் தொண்டை தண்ணி வத்த கத்திகிட்டு இருக்கணும். சிரிப்புடன் சொன்னேன்.

வேலைக்கு போகும் முடிவை சொன்னவுடன் அம்மா முகம் கருத்து அதெல்லாம் அப்புறம் பாக்கலாம், சட்டென முடித்துக்கொண்டாள்.

இரண்டு மூன்று நாட்கள் அதிசயமாய் அமைதியாய் ஓடியது. இருவரும் கூடி கூடி பேசினார்கள். என் அறையில் தூங்குவதற்காக ரெடியாகிக்கொண்டிருந்த என்னை நோக்கி அப்பா வந்தார்.

அம்மா உனக்கு வரன் ஒண்ணு வந்திருக்கு, பையன் பாரின்ல இருக்கான், கல்யாணம் முடிஞ்ச கையோட கூட்டிட்டு போயிடறானாம். எனக்கும், உன் அம்மாவுக்கும் விருப்பமில்லை

அவங்க நம்ம சொந்தம்தான் ஆகுது, உனக்கு விருப்பமின்னா சொல்லு, இல்லையின்னா உள்ளுருல மாப்பிள்ளை பாக்கலாம், எனக்கும் உங்க அம்மாளுக்கும் உன்னைய இந்த ஊருக்குள்ளயே கட்டிக்கொடுக்கணும்னு ஆசை என்ன சொல்றே?

என்ன சொல்றது என்று திகைத்து போய் உட்கார்ந்தேன். என் திகைப்பை பார்த்து சரி டைம் இருக்கு யோசிச்சு சொல்லு, அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

இரண்டு நாட்கள் மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது. இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளலாமா? அப்படி செய்தாள் உள்ளூர் மாப்பிள்ளையோடா? இல்லை பேசாமல் வெளி நாட்டு மாப்பிள்ளையை கல்யாணம் செய்துட்டு போய் விடலாமா? தோழிகள் பேசாம வெளி நாடு போய் செட்டிலாகறதை பாரு, இதைத்தான் நிறைய பேர் சொன்னார்கள்.

ஒரு சிலர் மட்டும் வேண்டாம் உள்ளுருல பாத்துக்க, அப்பா அம்மா பக்கத்துல இருக்கற மாதிரி இருக்காது.

அப்பா சாமி அவங்க சண்டைக்கு பயந்துகிட்டுத்தான், நான் கல்யாணத்துக்கே ஒத்துக்கலாமுன்னு இருக்கேன், அதுலயும் உள்ளுருலன்னா, கஷ்டம்தான், சட்டென உறுதி எட்டி பார்க்க வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தலை அசைத்தேன்.

இவர்கள் இருவரின் முகமும் ஏமாற்றமடைந்ததை கண்டதும் மனசுக்குள் பாவமாக இருந்தாலும் வெளி நாட்டு வாழ்க்கையில் கணவன் மனைவியின் அன்னியோனத்தை நிறைய போர் சொன்னது நினைவுக்கு வந்தது. யாரும் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்களாம்.

உன்னுடைய வேலையில் பிறர் தலையிட்டு பேசுவது என்பது கிடையவே கிடையாதாம். இப்படி நிறைய..நிறைய.. சொல்லியிருந்தார்கள்.

இரண்டு நாட்கள் முகத்தில் கவலையுடன் வலம் வந்தவர்கள் மூன்றாம் நாளிலிருந்து சமாதானமாய் கல்யாணவேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்கள். ஒரு மாதத்திற்குள் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கல்யாணமும் நடந்து முடிந்தது.

என்னதான் அப்பா, அம்மாவுடன் சண்டை போட்டாலும், அல்லது அவர்களின் சண்டை எரிச்சலூட்டினாலும் அவர்களை விட்டு பிரிவது மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

ஆயிற்று இங்கு வந்து நான்கைந்து மாதங்கள் ஓடி விட்டது. அந்த கல்யாண மகிழ்ச்சிகள் ஓடி மறைந்ததும் வீட்டில் சும்மா இருக்க வேண்டாம் ஏதாவது வேலைக்கு போக முயற்சி செய், என்று சொன்ன கணவர் ஒரு வேலையை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வர இரவு பத்து மணி ஆகி விடுகிறது. உள்ளே வந்தால் கணவன் நிம்மதியாய் உறங்குவதை காண கோபம் வந்தது. அது எப்படி? அம்மா ஞாபகம் வந்தது அவளோ, அப்பாவோ, வீட்டுக்கு வர கொஞ்சம் தாமதமானாலும் அவ்வளவுதான், சண்டைதான்.

இவளே சமையலறைக்குள் நுழைந்து ஆறிப்போன பழையதை பிரிட்ஜில் இருந்து எடுத்து சுட வைத்து சாப்பிட்டு படுக்க வேண்டும்.

உடல் அயர்ச்சியில் தூங்க போய் சட்டென விழிப்பு வந்தால் மற்ற விசயங்கள் கூட வெறும் கடமையாய் முடிய மறு நாள் விழிக்கும்போது கணவன் தயாராய் கிளம்பி போயிருப்பான். சொல்லாமலே, தூங்குபவர்களை தொந்தரவு செய்ய நினைக்காமல்.

இப்பொழுதெல்லாம் அம்மாவின், அப்பாவின் சண்டை அவர்களின் அன்புக்கு எவ்வளவு ஆழமாய் இருந்திருக்கிறது என்பது புரிகிறது. நேரமாகி விட்டால் கணவனுக்கோ, எனக்கோ ஏதாவது ஆகி விடுமோ என்ற பதைபதைப்பு அப்படி காட்டு கத்தலாய், மனைவிக்கு இருளில் ஏதாவது பூச்சி புழு கடித்து விட்டால்? அப்பாவின் பதைபதைப்பு..இவையெல்லாம் மனதுக்குள் வந்து கண்ணீராய் இரு பக்கமும் வழிந்தது. யார் கண்டு கொள்ளுவார்கள் நானே எனக்குள்ளே கழிவிரக்கத்துக்குள் முழுகிக்கொண்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *