காற்றோடு போதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2021
பார்வையிட்டோர்: 2,329 
 

தன்னால் பறக்க முடியுமென்பது அவனுக்குத் தற்செயலாகத் தான் தெரிய வந்தது. தற்செயல் எனக் குறிப்பிடுவது அவனே எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில் அது நேர்ந்ததைத்தான். ‘ஆனால், உண்மையிலேயே அது தற்செயல் நிகழ்வுமல்ல .

பறப்பதற்கு அவன் ஒருபோதும் எத்தனித்த தில்லை. பறப்பதென்பது தனக்கு இயலாத காரியம் என்றே எண்ணியிருந்தான். ஆனாலும் பறப்பதை அவன் விரும்பியிருந்தான். பறப்பது பற்றி பல தடவை கற்பனைகளில் மிதந்திருக்கிறான். சிறு வயதிற்தான் அப்படியான கற்பனைகள் வரும். பறக்க முடியுமானால் ஸ்கூலுக்குக் கால் கடுக்க நடக்கத் தேவையில்லை. தெருவைக் கடப்பதற்காக வாகனங்கள் வருகிறதா என இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்துக் கொண்டு நிற்கத் தேவையில்லை. லேட்டாகப் போய் வாசலில் நின்று கையை நீட்டி பிரின்ஸிபலிடம் அடி வாங்கத் தேவையில்லை. சரியான ரைம்முக்குப் போய் அவரை அசத்திவிடலாம்.

பறவைகள் பறக்கும் விதங்களையெல்லாம் பார்த்துப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கிறான்.

நினைத்த மாத்திரத்தில் எழுந்து பறக்கும் லாவகம் (ரேக் ஓஃப்), வேண்டிய திசையில் சட்டென் திரும்பும் உத்தி, முகம் குப்புற அடிபட்டு விழாமல் சேஃப்லான்ட்டிங் செய்யும் நேர்த்தி……. இதையெல்லாம் அவைகளுக்குக் கற்றுக் கொடுத்தது யாராக இருக்கும்?

அவன் கனவுகளில் பறந்திருக்கிறான். கனவுதானென்றாலும் பறப்பது ஒரு சாதனை புரிகிற பெருமிதத்தைக் தரும். பறக்க முடியாதவர்கள் வியப்போடு பார்த்துக் கொண்டு நிற்க …. பறக்கும் போது, ஓர் அற்புத உணர்வில் ஆழ்ந்து போவான். கைகளை சிறகு போல அடிக்கும் போது அல்லது நீச்சலடிப்பது போல வலிக்கும் போது காற்றில் மிதப்பதென்பது ஒரு வித சுகம். கனவுகள் கலைந்து எழும் போது இப்படி நிஜமாகவே பறக்க முடியாதா என ஒரு வித ஏக்கம் தோன்றும்.

அது இப்போது நிஜப்பட்டிருக்கிறது ஆனால், அவனுக்குப் பறக்க முடியுமென்பதை யாரும் நம்பத் தயாரில்லை . அவனாவது பறப்பதாவது? சும்மா கதை விடுகிறான் – யாரும் நம்ப வேண்டாமாம். அப்படி நம்பத் தயாராயிருந்த ஒரு சிலரும் அவன் இந்த வித்தையை அவன் தங்கியிருந்த வெளிநாட்டிற் தான் கற்று வந்திருக்கிறான் என்று கருதினார்கள் பதினைந்து ஆண்டளவில் ஜேர்மனியில் இருந்து வந்திருக்கிறான். அங்கு இன்னும் என்னென்ன வித்தைகளைக் கற்று வந்திருக்கிறானோ என்றெல்லாம் சந்தேகப்பட்டார்கள் – ஆனால், அவன் பறப்பது பற்றிய எந்த நுணுக்கங்களையும் ஜேர்மனி யில் கற்று வரவில்லை என்பதே உண்மை. அப்படியானால் அங்கிருந்து வந்தபோது விமானத்தில் வந்திருக்கத் தேவையில்லையே? பறந்தே வந்திருக்கலாமே?

இப்படி நியாயத்தைப் பேசினால் அதைக் கேட்க யாரும் தயாராயில்லை. அந்தக் கதையெல்லாம் இங்கு வேண்டாம் அப்பனே … நீ ஏன் ஜேர்மனிக்குப் போனாய்? அங்கு என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டாய்? நீ தமிழன். உன் மேல் சந்தேகமாய் இருக்கிறது.

அவன் ஜேர் மனிக்குப் போனது எந்தக் கற்கை நெறிகளுக்கோ அல்லது . ஏதேனும் ஆராய்ச்சிகளுக்காகவோ அல்ல. மொட்டையாகச் சொல்வதானால் உயிர் தப்பிப் பிழைப்பதற்காக அந்த நேரத்தில் ஓடவேண்டியிருந்தது என்றும் சொல்லலாம். பிறந்து வளர்ந்த சொந்த நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு உயிர் தப்பிப் பிழைக்க ஓடியதென்பது தன்னையே தான் கேவலப் படுத்தியது போலவும் உணர்ந்தி ருக்கிறான். ஆனால், கேவலம் தனக்கல்ல அல்லது தனக்கு மட்டுமல்ல என்பதையும் எண்ணிச் சமாதானமடைய முயன்றிருக்கிறான்.

எண்பத்தி மூன்று – ஜுலைக் கலவரங்கள் வெடித்தபோது அவன் கொழும்பில் படித்துக் கொண்டிருந்தான். கலவரத்தில் பாதிக்கப்பட்டு தப்பியோடியிருந்த தமிழருக்கு தஞ்சமளிக்க சில நாடுகள் அப்போது தங்கள் கதவுகளைக் கொஞ்சம் திறந்து விட்டன. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுதான் அவனும் போனான். இது தான் உண்மை … உண்மை …. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை .

ஆனால் அதை யாரும் நம்பத் தயாராயில்லை . நீ வேறு எதற்காகவோ போயிருக்கிறாய் . இப்போது ஏன் இங்கு வந்திருக்கிறாய்?

என்ன கேள்வி இது? சொந்த நாட்டுக்கு (அதை ஒத்துக் கொண்டால்) வருவது ஒரு குற்றமா? அது குற்றமென்றால் சொந்த வீட்டுக்கு வருகிறேன் என்றாவது சொல்லலாமா? அவனுக்கும் வீடு என்று ஒன்றிருந்தது . இராணுவ நடவடிக்கையின் போது அம்மா அங்கிருந்து இடம் பெயர நேர்ந்ததாம். பிறகு வந்து பார்த்தால் ……… வீடு குண்டுக்கு இரையாகி இருந்ததாம் – அம்மா எழுதியிருந்தாள் . யாழ்ப்பாணத்துக்குப் போய் வீடு இருந்த சுவட்டையாவது பார்க்க வேண்டும் – அம்மாவைப் பார்க்கப் பறந்து போக வேண்டும்.

“தம்பி ஒருக்கால் வந்திட்டு போ ராசா! நான் கண்ணை மூட முதல் வந்திடு. எப்படியாவது வந்திட்டு போ ராசா!” – அம்மா கடைசியாக எழுதிய கடிதம் அது.

அம்மா செத்துப் போய் விடுவாள் என்பதைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அம்மாவிற்கு சாவு நெருங்கி விட்டதா? ஏன் இப்படி எழுதினாள்?

அம்மாவுக்கும் தெரியாமலே கொழும்பி லிருந்து ஜேர்மனிக்குப் போய்ச் சேர்ந்தது, அது பற்றி அறிவித்த செய்தி அம்மாவுக்குப் பல மாதங்களுக்குப் பின்னர் கிடைத்த போது “எங்கயெண்டாலும் தப்பியோடி உயிரோட இருந்தால் போதும் ராசா, நான் கும்பிட்ட தெய்வங்கள் கைவிடயில்ல, இஞ்சை வராதை! இளம் பிள்ளை.. உண்டு இல்லையென்டு ஆக்கிப் போடுவாங்கள்” என்றுதான் எழுதியிருந்தாள் . அதற்குப் பின்னர் இத்தனை வருடங்களாக எழுதிய கடிதங்களிலெல்லாம் இதே வாசகங்களைத்தான் ஒரு பாட்டுப் போல எழுதுவாள் . “இஞ்ச நாட்டு நிலைமைகள் படுமோசம், வர வேண்டாம்!”

அம்மா தனிய இருக்கிறாளே என்ற கவலை எப்போதும் அவனை வருத்தியிருக்கிறது . இந்த தள்ளாத வயதில் அவள் ஒழுங்காகச் சமைப்பாளா ….வேளாவேளைக்குச் சாப்பிடுகிறாளா? என்றெல்லாம் கவலைகள் தோன்றும். இப்போது அக்காமாரும் அம்மாவுடன் இல்லை. திருமணம் முடிந்த பிறகு யாழ்ப்பாணத்தில் யுத்த நெருக்கடிகளும் அதிகரிக்க அவர்களும் அம்மாவை விட்டுப் பறந்து விட்டார்கள். அம்மா தனித்துப் போய் விட்டாள்; வீட்டுக்குக் காவலாக!

“வீடு எப்படிப் போனாலும். போகட்டும் நீங்களும் இந்தப் பக்கம் வந்திட்டால் நல்லது . ஏஜன்ட் மூலம் ஜேர்மனிக்கு வருகிற ஒழுங்குகளும் செய்யலாம்” என அவன் அம்மாவுக்கு எழுதியிருக்கிறான். அம்மா அதற்குச் சம்மதிக்க வில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய பெற்றோரைப் போல பிள்ளை குட்டிகளை ஒரு வழியில் விட்டு விட்டு, வீட்டுக்குக் காவலாகக் கிடந்தாள்.

“தம்பி இது…நாங்கள் பிறந்து வளர்ந்த மண். இந்த வீடு வாசலை விட்டு எங்கை போறது? எல்லாரும் விட்டுட்டு போனால் வீடும் பாழடைஞ்சு போகும். ஊரும் அழிஞ்சு போகும். வந்தான் வரத்தான் எல்லாத்தையும் கொண்டு போயிடு வாங்கள். நீ ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். இப்போதைக்கு இஞ்ச வரவும் வேண்டாம். நிலைமைகள் சீரடைஞ்ச பிறகு வா!”

நிலைமைகள் எப்போது சீரடையும், எப்போது போய் அம்மாவைப் பார்ப்பது எனக் கவலை மேலிடும். அம்மா எழுதுவதை எழுதட்டும் அதைப் பொருட்படுத்தாது போய் வரலாம் என யோசித்தான். இலங்கையை விட்டு தூர இருந்தாலும் கொழும்பி லிருந்து யாழ்ப்பாணத்துக்கான பயணமானது ஒவ்வொரு கால கட்டத்திலும் எவ்வளவு சிரமங்களுக்குள்ளானதாய் இருந்திருக்கிறது . என்பதை அறிந்தே வைத்திருந்தான். கொழும்பு – யாழ் பஸ் சேவை இருந்த நாட்களிலேயே எத்தனையோ சோதனைத் தடை நிலையங்கள். அவற்றால் வடிகட்டல்கள் என்ற பெயரில் பிடித்து வைத்தல்கள். (தம்பி உன்ர வயசும் அப்படி……..இஞ்ச வந்து இவங்கட கையில மாட்டியிடாதை …..!) தொண்ணூறுக்குப் பின்னர் தரைப் பாதையும் தடையேற்பட, சேறு சகதிகளுக் கூடாகவும் கடல் மார்க்கமாகவும் உலகத்தின் வேறு எங்கோ மூலையில் உள்ள தேசத்துக்குப் போவது போன்ற நிச்சயமற்ற பயணங்கள். கிளாலிக் கடலூடாக உயிருக்கு உத்தரவாதமில்லாது போய் வந்த பயணங்களைப் பற்றியும், பறிபோன உயிர்களைப் பற்றியும் கேள்விப் பட்டு மிருக்கிறான் ; செய்திகளாக அறிந்து மிருக்கிறான். எப்படியாவது அம்மாவைப் போய் பார்க்க வேண்டுமென மனம் உந்தும் போதெல்லாம் இந்தப் பயணங்கள் பற்றிய பயம் வந்து தடுத்து விடும். ஆனால் மனம் அடங்காது.

அம்மாவுக்கு ஒரு வருத்தம் துன்பம் என்றால் யார் டொக்டரிடம் கூட்டிப் போவர்? இராணுவ நடவடிக்கைகளின் போது ஊரே பெயர்ந்த வேளைகளிலெல்லாம் அம்மா என்ன செய்திருப்பாள்? எங்கு ஓடியிருப்பாள்? யாராவது உதவி செய்திருப்பார்களா, எனத் தனக்குள்ளேயே கனன்று வெந்து போயிருக்கிறான். பிறகு அம்மாவிடமிருந்து கடிதமாவது வந்து சேரும் வரை நிம்மதி குலைந்து போயிருக்கும்.

தன்னைப் பெற்று வளர்த்த அன்னையை அவளது வயோதிபத்தில் பக்கத்திலிருந்து உதவ முடியவில்லையே என்ற வேதனை நெஞ்சைப் போட்டு உடைத்திருக்கிறது . சிறு வயதிலேயே அப்பாவை இழந்த பிறகு அம்மா தான் எல்லாமாக இருந்து அவனை ஆளாக்கியவள் . அம்மாவை பார்க்காமல் இருக்கிறோமே…. என்ற குற்றம் மனதை உறுத்தும் போதெல்லாம் அம்மாதானே வர வேண்டாம் என்று எழுதியிருக்கிறாள்…. எனத் தனக்குச் சமாதானம் சொல்லிக் கொள்வான். ஆனால்………… அம்மாவுக்கு இப்போது என்ன வந்தது? (உன்னைக் கண்ணிலை வைச்ச பிறகு தான் நிம்மதியாகக் கண்ணை மூடுவன்!)

சாவில் நிம்மதியான சாவு, நிம்மதியற்ற சாவு என்றெல்லாம் உள்ளதா?

“தம்பி சின்ன வயதிலேயே படிப்பையும் குழப்பிப் போட்டு உழைச்சு கொக்காமார் ரெண்டு பேரையும் கரை சேர்த்திருக்கிறாய். இந்த நன்றியை நான் ஒருக்காலும் மறக்க மாட்டேன். கடவுள் உன்னைக் கைவிட மாட்டார்!”

கடவுள் என்றால் அவனுக்கு அம்மாதான். வருடக்கணக்கான காலங்கள் அம்மாவைக் காணாமலே பறந்திருக்கின்றன. ஆனால், கூட இருப்பது போன்ற உள்ளுணர்வு எப்போது மிருக்கும். எந்தக் கருமங்களைச் செய்ய முன்னரும் அம்மாவை நினைத்துக் கொள்வான். காலையில் எழுந்தவுடனும் படுக்கைக்குப் போகும் முன்னரும் சாப்பிடும் போதும், இப்படி எல்லா நேரங்களிலும் அம்மாவை ஒரு தெய்வம் போல நினைத்து வணங்குவான்.

விட்டுப் போன ஆரம்ப காலத்தில் அம்மாவை நினைத்து அழுததுண்டு…சொல்லாமல் வந்து விட்டேனே…கடைசியாகப் பார்க்காமலும் வந்து விட்டேனே! வீட்டில் அம்மாவுடனிருந்த நினைவுகள் வரும். சாப்பாடு சரியில்லை, வாய்க்கு ருசியில்லை, என அம்மாவுடன் சண்டை பிடித்திருக்கிறான். சாப்பாட்டைத் தள்ளிவிட்டு எழுந்திருக்கிறான்.

“தம்பி சாப்பாட்டை இப்படித் தள்ளக் கூடாது. சாப்பாட்டுக்கு மரியாதை கொடுக்க வேணும் எத்தினை சனங்கள் இந்த ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்குதுகள்?”

ஜேர்மனிக்குப் போய் ஒரு “பார்ட்டைம்” வேலை கூடக் கிடைக்காத அந்த நாட்களில், ஒழுங்காக ஒரு வேளைச் சாப்பாடு கூட கிடைக்காத அந்த நேரங்களில், முகம் தெரியாத மனிதர்களின் முகங்களைப் பார்த்துப் பார்த்து யாரிடம் (வேலை) கேட்கலாம்? யார் உதவி செய்வார்கள்? என ஏக்கத்தோடு அலைந்த நாட்களில், அம்மா உலையில் வடிக்கிற கஞ்சியாவது கிடைக்காதா என வாடியதுண்டு.

காலப் போக்கில் எல்லாவற்றையும் “அஜஸ்ட்”பண்ணப் பழகி உழைப்பே மூச்சாகி, புதிய உலகம் புதிய நண்பர்கள் புதிய தொழில்… உழைப்பு பணம்! பணம்! அம்மாவின் கடிதங்களைக் கண்டால் ஒரு பதில் போடுவதோடு சரி. அவ்வப்போது பணமும் அனுப்பி வைப்பான் . அத்தோடு கடமை முடிந்தது போன்ற உணர்வு ஏற்படுகிற மரத்துப் போன வாழ்க்கை.

அவன் அனுப்பிய பணத்தில் அக்காமாருக்கு திருமணங்கள் ஒப்பேறிய போது அவன் ஊருக்கு வர விரும்பினான். “அம்மா உங்களைப் பார்க்க ஆசையாயிருக்கு!” அவன் அப்படி அம்மாவிற்கு எழுதினாலும் உள்ளுர இன்னொரு ஆசையும் இருந்தது. ஊருக்குப் போனால் சாந்தியைப் பார்க்கலாம். (பச்சைக் கிளியானால் பறந்தோடி வருவேன் .) சாந்தி ஓரிரு கடிதங்கள் தான் எழுதியிருக்கிறாள். அவன் ஜேர்மனிக்குப் போய்ச் சேர்ந்து சுமார் நான்கு வருடங்களின் பின் தான் அவளது முதற் கடிதம் கிடைத்து. (நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோன்றுதே.)

அந்தக் கடிதம்தான் அவனுக்குத் தனது மனதிலும் என்ன இருக்கிறது என்பதை உணர்த்தியது . அந்தக் கணத்தில் அவன் வானத்தில் எழுந்து பறப்பது போன்ற உணர்வில் மிதந்தது இன்னும் நினைவிருக்கிறது. சாந்தி இப்போது எப்படியிருப்பாள்? போகும் போது பதிமூன்று வயசு சிறுமியாயிருந்தவளுக்கு இப்போது எத்தனை வயசு இருக்கும்? சாந்தி விஷயத்தில் கூட்டல் கணக்குக் கூடப் பிழைக்கிறது. அவளது வளர்ந்த தோற்றத்தைப் பார்க்க வேண்டுமென்று ஆவல்.

ஆனால், அம்மா வரவேண்டாமென்றுதான் எழுதினாள்; “இஞ்ச நிலைமைகள் படு மோசம்” அப்போது வந்திருந்தால் அம்மாவைப் பார்த்திருக்கலாம். இப்போது யாழ்ப்பாணம் போய்ச் சேரும் வரை அம்மா உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டு காத்திருப்பாளா?

விமானத்திலிருந்து இறங்கிய போதும் அவனுக்கு அதே உணர்வுதான் மனதைக் குடைந்து கொண்டிருந்தது . எவ்வளவு கெதியில் யாழ்ப்பாணம் போக ஏலுமோ அவ்வளவு கெதியில் போய் விட வேண்டும். ஆனால்…யாழ்ப்பாணப் பயணம் நினைத்தவுடன் போகக் கூடிய மாதிரியா இருக்கிறது? பதிவுகள், விசாரணைகள், பாஸ்கள், அது வரை எங்கே தங்குவது?

தரையிறங்கிய பின்னரும் விமானங்கள் இறக்கைகளை நீட்டி விரித்துக் கொண்டு நின்றன. நாங்கள் நிரபராதிகள் எனக் கைகளை உயர்த்திக் கொண்டு நிற்கும் மனிதர்களைப் போல! முன் பின் தெரியாத தேசங்களுக்கெல்லாம் போய் இரவு பகலென்றின்றி இன்ன நேரமென்றின்றி சர்வ சுதந்திரமாகத் திரிந்திருக்கிறான் . கொழும்பில் தங்கியிருக்க நினைத்தால் பயமாயிருந்தது. விமான நிலையத்தில் சோதனைகள் முடிந்து வெளியே வந்தது நள்ளிரவு கடந்த நேரம். அம்மாவின் கடிதத்தைக் கண்டதும் திடுதிப்பென்று வெளிக்கிட்டு வந்தாயிற்று. வந்த பிறகு தான், தங்கியிருப்பது பற்றிய பிரச்சினையொன்று தன் தலையைப் பெரிதாக நீட்டிக் கொண்டு எழுவது தெரிந்தது.

கொழும்பில் மாமா ஒருவர் இருக்கிறார். அவர் வீட்டுக்குப் போகலாமா? கேட்டுப் பார்க்கலாம். வேளை கெட்ட நேரத்தில் “போன் கோலை” கையில் எடுத்த பதற்றம் மாமாவிடம்! “இதெல்லாம் முன்னமே சொல்லி ஒழுங்கு படுத்தி போட்டல் லோ வரவேணும்? இப்படி சட்டு புட்டென்று வந்து நின்றால் நான் என்ன செய்யிறது? இஞ்ச பொலிசில பதியாமல் ஒருத்தரையும் வீட்டிலை வைச்சிருக்கேலாது. பதிஞ்சு போட்டு வைச்சிருந்தாக் கூட விடுறாங்களில்லை!”

மாமா பாவம். அருமையான மனுசன். யாருக்கும் என்ன உதவியும் சலிக்காமல் செய்கிறவர். கொழும்பு நெருக்கடி நிலைமைகள் அவரையும் மாற்றியிருக்கின்றது.

“சரி…அங்கிள்…பரவாயில்லை. நான் வேறை எங்கையாவது தங்கிறன்”

“இந்த நேரத்தில எங்க போய்த் தங்கப் போறீங்கள்?” உண்மையாகவே மாமா கவலைப் படுவது அவரது குரலில் தொனித்தது.

“எங்கையாவது தங்கலாம்!”: போனை வைத்தான். செய்வதறியாது நின்றான்.

அப்படி டெலிபோனை சட்டென வைத்தது சரியில்லையோ எனத் தோன்றியது. மாமாவிற்கு அது முகத்திலடித்த மாதிரி இருந்திருக்கும். என்ன நினைத்தாரோ தெரியாது. தனக்கு ஏன் அவ்வாறு கோபம் வந்தது எனக் கவலையடைந்தான். ஒரு நம்பிக்கையுடன் “கோல்” எடுத்த போது மாமாவின் கடுமையான தொனி எரிச்சலையூட்டிவிட்டது. மாமாவும் இப்படியான ஒரு சங்கடமான நிலைமையை எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் எதிர் பார்த்திருக்க மாட்டார் . அதனாற்தான் அப்படி சினந்து கதைத்திருக்கிறார். “நோர் மலா”ன நாளென்றால் இப்படி நேர்ந்திருக்குமா?…இவ்வளவு காலத்துக்குப் பிறகு வந்திருக்கிறேனே, பார்க்கப் போகிறோமே என மாமா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார் . நாட்டின் நெருக்கடி நிலைமைகள் மனிதர்களின் குணாதிசயங்களைக் கூட மாற்றுகிற அளவுக்கு நிர்ப்பந்திக்கிறது. யாருடையதோ பாவத்தை யாரோ சுமக்கிறார்கள். யார் மேலோ தோன்றும் கோபத்தை வேறு யார் மேலோ காட்டுகிறோமே எனக் கலங்கினான். திரும்பவும் “கோல்” எடுத்து மாமாவுடன் சமாதானமாகப் பேசினால் நல்லது என நினைத்தன். ஒருவேளை மாமா கூட மனம் இரங்கி…வீட்டுக்கு வா…என்று சொல்லக்கூடும் – பெரியதொரு பிரச்சினை தீர்ந்த மாதிரியிருக்கும். ஆனால்…வேண்டாமென இன்னொரு மனசு தடுத்தது. “யாருக்கும் தொல்லை கொடுக்க வேண்டாம். வேறு வழியைப் பார்.”

முன்னர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் சேர்ந்து படித்தவர்களை ஒவ்வொருவராக நினைவு கூர்ந்து பார்த்தான். அவர்களில் யார் யார் கொழும்பு வாசிகளாக இருந்தவர்கள் என நினைவில் கொண்டு வர முயன்றான். அவர்கள் கூட இப்போது கொழும்பிற் தான் தங்கியிருக்கிறார்களோ தெரியவில்லை. அவர்களுடனான தொடர்புகளெல்லாம் இந்தப் பதினைந்து வருட காலங்களில் விட்டுப் போய் இருந்தது . இருக்கிறார்களா எனப் போய்ப் பார்க்க லாம் ஆனால்…… இந்த நடு நிசியில் … வீடு வாசல்களைத் தேடிப் பிடித்து கதவைத் தட்டுவது சரியா?… அப்படி யாரையாவது கண்டு பிடித்தாலும் இன்னும் நினைவு வைத்திருப்பார் களோ என்னவோ…! தன்னை இன்னார் என அறிமுகம் செய்து ….. இப்போது ஜேர்மனி யிலிருந்து வருகிறேன் தங்குவதற்கு இடம் வேண்டுமென்று சொன்னால் அது எந்த வகையில் புரிந்து கொள்ளப்படும்….. சொந்த மாமாவே காய்வெட்டி விட்டார். மற்றவர்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது தானே….? இதற்கெல்லாம் மேலாக இந்நடு நிசியில் தங்குவதற்காக இடம் தேடித் திரிவது சாத்தியப்படுமா என்பதே பெரிய கேள்வி . பாதுகாப்புப் படையின் கையில் அகப்பட்டால் என்ன பதிலைச் சொல்லுவது? கணத்துக்குக் கணம் அவனுக்குப் பயம் அதிகரித்துக் கொண்டிருந்தது. சொந்த நாட்டுக்கென வந்து திக்கற்றுப் போய் நிற்பதாய் உணர்ந்தான்.

மாமாவிடமே இன்னொரு முறை ஃபோன் பண்ணிப் பார்க்கலாம்.அவராகச் சொல்லாவிட்டால் தானாக என்றாலும் ப்ளீஸ் பண்ணிக் கேட்டுப் பார்க்கலாம். (ஒரு வழியும் இல்லை அங்கிள் …… விடியிற வரையாவது தங்கியிட்டு …. பிறகு வேற இடம் பார்க்கிறன் . ) அதற்கு அவர் சம்மதிக்கக்கூடும் எனக் கருதினான்.

பொதிகளை இழுத்துக் கொண்டு டெலிபோனுக்கு நடந்த போது அண்மையாக இருவர் வந்தார்கள். ஒரு மாதிரிப் பார்த்தார்கள் . அவனுக்குள் மிரட்சி

“எங்க இருந்து வாறது?….பெட்டியில என்ன இருக்கிறது?……படு சேரம செக் கறன்ட ஓன …. (சாமான் எல்லாம் செக் பண்ண வேணும்……)”

என்ன இது? யார் இவர்கள் …..? எதையாவது கையாடல் செய்யும் நோக்கமா?

அவன் ஆத்திரமாக சொன்னான் . “எயாப்போட்டுக்குள்ள எல்லாம் செக் பண்ணி முடிஞ்சுது, பிறகென்ன…?”

“பரவாயில்லை ….. திரும்பவும் பார்க்க வேணும். அதுக்கு எங்களுக்குத் தகுதி இருக்கு.”

அவன் உஷாரடைந்தான் – ஒரு வேளை இவர்கள் சிவில் உடையில் உள்ள அதிகாரிகளாக இருக்கலாம். சந்தேகத்துக்குரியவர்களை “செக்” பண்ணுவதற்காக இப்படி ஒரு ஒழுங்கு இருக்கக் கூடும். அவர்களுடன் முண்டுவது புத்திசாலித்தன மல்ல என நினைத்து அடக்கமாகப் பேசினான். “இவ்வளவு பணம் தந்தால் போகலாம்….. அல்லது டெலிபோன் கோலிலேயே உள்ள போட முடியும்” மிரட்டினார்கள். அவர்களிடமிருந்து விடுபட்டாலே போதுமென்று இருந்தது – பேரம் பேசி விலையை குறைத்துக் கொடுத்தான். மறுபக்கம் திரும்பிய போது இன்னொரு ஆள்.

“மஹத்தையா .. எங்க போறது . . . . ? வாஹனயக் ஓனத (வாகனம் தேவையா…..?)” இந்த இடத்தில் நின்று யோசிப்பதை விட போய் விடுவது நல்லது. அந்த ட்ரைவரிடமே தனது நிலைமையைச் சொல்லிப் பார்க்கலாம்.

“மஹத்தையா….பயவெண்ட எப்பா (பயப்பட வேண்டாம்.) எனக்குத் தெரிந்த ஒரு லொட்ஜ் ஆள் இருக்கிறான். அங்கு போகலாம்.”

வாகனம் கொழும்பை அண்மித்த போது அடுத்த தடை. “டோர்ச் லைட்”டைக் காட்டி நிறுத்தினார்கள். நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? கொழும்புக்கு ஏன் போகிறாய்? “ஐடென்ரிரிக் காட்” பார்த்தார்கள்.

“என்ன தமிழனா?… பாக்குகளை இறக்கு!” சோதனை மேல் சோதனை….(போதுமடா சாமி)

“கொழும்பிலே எங்க தங்கப் போகிறாய்? லொட்ஜிலா?” கேட்ட தொனியே லொட்ஜில் தங்கினால் தொலைத்து விடுவோம் என்பது போல் இருந்தது . (இல்ல…வெள்ளவத்தையில் …. மாமா வீடு இருக்கு…. அங்க தான்.) மாமா யார்? என்ன செய்கிறார்? அவரது பூர் வீகம் என்ன? . . . . உருட்டல்களும் மிரட்டல்களும். ட்ரைவர் இறங்கி வந்து அவர்களோடு பேசினான்.

“மம … மேயாவ . . அந்துர்ரணவா ….. (எனக்கு அவரைத் தெரியும்)”

“சரி போங்க”

லொட்ஜில் தங்கியிருந்து யாழ்ப்பாணம் போவதற்குரிய பதிவு, அனுமதி பெறுதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டான் . இரண்டாவது நாளே மனேஜர் சொன்னார் .

“நீங்க…. இங்க தங்கியிருக்க வேணாம்… யாராவது சொந்தக்காரங்க இருந்தால் அங்க போய் இருங்க”

“ஏன்?”

“இங்க அடிக்கடி செக்கிங் வருவாங்க… புது ஆளென்றால் புடிச்சிக் கொண்டு போயிடுவாங்க…..”

அவனுக்குக் கலக்கமாயிருந்தது . யாழ்ப்பாணத்துக்கு நினைத்தவுடன் போக முடியாது. “பொலிஸ் கிளியரன்ஸ்”, அனுமதி கிடைக்கத் தாமதமாகலாம் என்று சொல்கிறார்கள்.

அது வரையும் இங்கு எங்கேயும் தங்கி நிற்கக் கூடாதென்றால் … அடியுமின்றி முடியுமின்றி இதென்ன …?

இரவு அறைக் கதவு தட்டப்பட்டது . திறந்தால் காக்கிச் சட்டைகள் துவக்குகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு……….

கடவுளே இங்கு வராமலே நின்றிருக்கலாமே. இந்தப் பதினைந்து வருடங்களும் ஜேர்மனியில் எந்த உபத்திரவங்களும் உயிர்ப் பயமும் இல்லாமல் சீவிக்க முடிந்ததே! .

“விசாரணை செய்ய வந்திருக்கிறோம்.” பொருள் பண்டங்களை சோதனை செய்தார்கள் . “உன்னை மேலும் புலன் விசாரணைக்காக கொண்டு செல்ல வேண்டியுள்ளது .” அவன் விக்கித்துப் போனான். …. அம்மாவைப் பார்ப்ப தற்காகத்தான் இங்கு வந்தேன் … அம்மாவின் உயிர் பிரிவதற்கு முன் ஊருக்குப் போக வேண்டிய அவசரம்….அதற்காக ஏற்கனவே பொலிஸில் பதியப்பட்டிருக்கின்ற சான்று…. மூன்று நாட்களுக்கு முன்னர் தான் இந்த நாட்டுக்கு வந்து சேர்ந்ததற்குரிய சான்றுகள் போன்ற பத்திரங்களை யெல்லாம் காண்பித்தான். அந்த கதையொன்றும் தேவையில்லை. உன்னை விசாரிக்க வேண்டியுள்ளது .

இப்படித்தான் அது நடந்தது . கொண்டு வந்து பூட்டி வைத்தார்கள். ஓரிருவரே தங்கக் கூடிய அறையில் முப்பத்திரண்டு பேர் வரை அடைக்கப்பட்டிருந்தார்கள். அறையுள்ளே ஒரு பக்கத்தில் கதவில்லாத ரொய்லட் . அதன் நாற்றம். இவன் யார், அவன் யார் என்றே தெரியவில்லை . ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அழலாம் போலிருந்தது. அமைதியாக இருக்க முயன்றான். விசாரித்து விட்டு விடுவதாகத் தானே சொன்னார்கள். நாளைக்குப் போய் விடலாம்.

நாளையும் வந்தது . விசாரணைகள் …. பூட்டி வைப்பு, விசாரணைகள் . தினமும் நாளைகள் வரும் வரும் என்ற எதிர்பார்ப்பு. நாட்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால், “உன் மேல் சந்தேகம் உள்ளது உன்னை விட முடியாது”

உள்ளே இருந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கதைத்தார்கள். இனி மீட்சியே இல்லை என்றார்கள். “தங்களுக்கு புரமோசன் கிடைப்பதற்காக யாரையாவது பிடித்து வைத்து விட்டு மேலதிகாரிகளின் தயவைப் பெற றுக் கொள்கிறார்கள்” எனப் பேசிக் கொண்டார் கள். அதற்காகத்தான் வெருட்டி உருட்டி தாங்கள் தயார் செய்த பத்திரங்களில் வாக்குமூலம் எனக் கையெழுத்து இடச் செய்கிறார்கள். அவனுக்கு எல்லாமே சிதம்பர சக்கரமாய் இருந்தது . “நீ வெளி நாட்டிலிருந்து தானே வந்திருக்கிறாய்? அது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். யாராவது “ரிப்” கொடுத்திருக்கலாம். இவ்வளவு காசு கட்டினால் உடனே விட்டு விடுவார்கள். எல்லாம் காசு பிடுங்குவதற்காகத் தான். நான் இத்தனை முறை பிடிபட்டு வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இவ்வளவு காசு கொடுத்து விடுதலை யாகியிருக்கிறேன்” எனச் சிலர் வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரண விஷயம் என்பது போல மிக அலட்சியமாகப் பேசினார்கள். சிலர் அழுது வடித்துக் கொண்டிருந்தார்கள்.

அவனுக்கு யாருடனும் பேச முடியவில்லை . அழுகை நெஞ்சுக்குள் முட்டி முட்டி மோதியது . உறக்கமில்லை . அல்லது உறக்கம் மறை முகமாக கெடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட ஒரு சிலர் இரவு பகலாக மாறி மாறி பக்கத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். (நான் இன்ன இயக்கம் எனக்கு இன்னாரைத் தெரியும்) என்று பெருமையாக! அவனுக்கு எல்லாமே பிரமையாக இருந்தது . இவர்கள் உண்மையாகவே கைது செய்யப்பட்டு வந்தவர்களா அல்லது மூளைச் சலவை செய்விப்பதற்காகத் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டவர்களா?

நாளாக ஆக அவன் நம்பிக்கை இழக்கத் தொடங்கினான். தடுத்து வைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்திலிருந்து வேறு தடை முகாமுக்கு மாற்றப்பட்டான்.

அம்மாவை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு பற்றி எரிந்தது . போய்ப் பார்க்க முதலே அம்மா விட்டுப் போய் விடுவாளோ… “நீ எங்கையாவது தப்பி இரு தம்பி ….. இங்கு வர வேண்டாம். இங்கு நிலைமைகள் படு மோசம்” என அம்மா எழுதிய கடிதங்கள் நினைவு வந்தன . இப்போது இதை அறிந்து கொண்டால், “கடவுளே ….இது அம்மாவுக்கு தெரிய வரக் கூடாது .”

அவனுக்கு வேதனையாக இருந்தது. எதற்காக அடைத்து வைக்கப்படுகிறோம் என்று தெரியாமலே அடைத்து வைக்கப்படுகிற கொடுமை எதிரிக்குக் கூட ஏற்படக் கூடாது . சாந்தி கனவுகளில் வந்தாள். ஊருக்குப் போய் அவளைக் காணப்போகிறோம் என உள்ளத்தில் உந்தப் பட்டிருந்த துடிப்புகளெல்லாம் அடங்கிப் போயிருந்தன. (காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ?)

வருடக்கணக்காகச் சிலர் அடைக்கப்பட்டு கிடக்கிறார்கள். அதே கதிதான் தனக்கும் ஏற்படுமோ…? எப்போது இந்தப் பிரச்சினைகள் தீரும் …. எப்போது எங்களுக்கு விடுதலை கிடைக்கும்? என்றெல்லாம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்வதும் அன்றாடக் கடமையாகி விட்டிருந்தது . “உனக்கு எதிராக இன்னும் நீதி மன்றத்தில் ஒரு குற்றமும் சமர்ப்பிக்கப்படவில்லைத் தானே . மூன்று மாதத்தில் விட்டு விடுவார்கள் . அதற்கு மேல் வைத்திருக்க முடியாது?” என சிலர் சட்ட நுணுக்கங்களைக் குறிப்பிட்டு ஆறுதற் படுத்தினார்கள். அது உண்மையாயிருந்தால் …. மூன்று மாதம் முடிவத ற்கு இன்னும் சில நாட்கள் தானே இருக்கிறது? ஆனால், “இங்கு சட்டத்தைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படுகிறார்கள் ……?”

அவனது உடல் தளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சரியான சாப்பாடு இல்லை . மனதில் அயர்ச்சி. அடிக்கடி மயக்க நிலை ஏற்படுவது போன்ற உணர்வு. சிறு விடயங்களுக் கெல்லாம் பயம் ஏற்படுகிறது . பக்கத்தில் ஏதாவது விழுந்து சத்தம் கேட்டாலும் யாராவது உரத்துக் கதைத்தாலும் பயம். உறக்கமில்லாத இரவுகள், துயரம்.

விஞ்ஞான பூர்வமாக உலகம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஒவ்வொரு காரியங்களையும் சாதிக்க அரிய சாதனங்க ளெல்லாம் வந்து விட்டன. ஒருவனைப் பற்றி சரியான கணிப்புச் செய்யும் வல்லமை மனிதப் பண்புக்கு இல்லாவிட்டால் அதற்கு என்று ஒரு சாதனத்தைக் கண்டு பிடித்து விட்டால் எவ்வளவு நல்லதாயிருக்கும்.

அவனுக்கு நெஞ்சு வலித்தது. இப்போ தெல்லாம் இந்த நெஞ்சு நோவும் புதிய தொரு தொல்லையாய்ப் போய் விட்டது . நெஞ்சு நோவுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். நியாயமின்றி அடைக்கப்பட்டிருக்கிற கொடுமை பற்றிய கவலை, எதிர்காலம் பற்றிய பயம் எல்லாம். நெஞ்சை ஒரு கையால் அழுத்தி அழுத்தி தானே வருடிக் கொண்டிருந்தான். ஒரு மூலையில் சுருண்டு படுத்தான். எது சரி? எது உண்மை ? எது பொய் …? இப்படி இங்கே அடைக்கப்பட்டுக் கிடப்பது கூட ஒரு கனவு போலிருந்தது . நிஜ வாழ்க்கை என்பது எது என்று குழப்பமாயிருந்தது. கண்கள் சொருகியது. திடுக்கிட்டுத் திடுக்கிட்டு விழித்தான். நெஞ்சு வலித்தது . யாரோ வருடி விட்டார்கள் . யாரோ வருடி விடுகிறார்களா?… அல்லது அது தனது கையா…? கண்கள் இர ண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ …?

பறவைகள் பறந்தன. உல்லாசமாக … . கூட்டம் கூட்டமாக! அவை திரும்பவும் தரைக்கு இறங்கின. வேறு சில பறவைகள் தன்னந் தனியாக பறந்து கொண்டிருந்தன. அவை களைத்துப் போனவை போல மிக மெதுவாக சிறகுகளை நீட்டி விரித்துக் கொண்டு இன்னும் உயர உயரக் காற்றில் மிதந்து கொண்டிருந்தன . அவை தரைக்கு இறங்கி வரவே மாட்டாதா என அவற்றின் தனிமை குறித்துச் சோகமாயிருந்தது .

…… உயர்ந்து வளர்ந்த மரங்கள் …. ஒரு காடு போலவும் தோன்றுகிறது. ஆனால் காடல்ல. மரங்கள் அவ்வளவு நெருக்கமாக இல்லை . பற்றைப் புதர் இல்லை . குளிர்ந்த காற்று மரங்களூடு வீசி வருகிறது . தார் போட்ட வீதி மரங்களை இடைபிரித்துச் செல்கிறது . இரவு. அதனாலோ என்னவோ பாதை தெரியாமலிருப்பது போலொரு மயக்கம். இரவின் கோலத்தைத் துகிலுரித்துக் காட்டும் மின் வெளிச்சம் அறவே இல்லாத பிரதேசம் அது. எனினும் நிலா எறிக்கிறது . மரங்களென்றாலோ நிலவைக் கூடிய வரை மறை த்து அந்த இரவைப் பாது காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன . நிழல்தானென்றாலும் நிலவு மனதுக்கு இனிமையைச் சேர்க்கிறது. (நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோன்றுதே)

அந்தப் பாதையில் போனால் ஒரு கோயில் தென் படுகிறது. கோயிலிற் திருவிழா – நிலா வெளிச்சத்திற் திருவிழா நடக்கிறது . அங்கு மிங்குமாக திருவிழா பார்க்க வந்த மக்களையும் சாமி கும்பிட வந்த மக்களையும் துப்பாக்கிகளுடன் நிற்கும் இராணுவத்தினரின் தோற்றம் பயமுறுத்துகிறது. எங்கும் நிறைந்தவர்கள் . எல்லாம் வல்லவர்கள். கடவுளிலும் சக்தி வாய்ந்தவர்களைப் போல தங்களிலும் பெரிய பெரிய துப்பாக்கிகளைச் சுமந்து கொண்டு நீக்க மற நிறைந்திருந்தார்கள்.

அவன் கோவிலுக்குள் நுழைந்து கர்ப்பக் கிரகத்தை நோக்கிச் சென்றான். அங்கே ஒளித்திருக்கலாம். அங்கே போனால் … சாந்தி! பேச எத்தனித்தான். பேச்சு வரவில்லை. சாந்தி எழுந்து அவனைப் பார்த்துக் கொண்டே அந்தப் பீடத்தில் தன் கைகளிரண்டையும் வைத்தாள் . அவளது கைகளை அவன் ஆதரவுடன் பற்றினான்.

அந்தக் கணத்தில் அவர்கள் கால்கள் பூமியை விட்டு எழுந்தன. ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த நிலையிலும் மேலே மேலே காற்றோடு போனார்கள். அடைத்து வைத்திருந்த மூச்சு உடைந்து வெளிப்பட்டது போல.

“நீயும் செத்துப் போனாயா?”

அவனால் பறக்க முடியுமென்பதை யாரும் நம்பத் தயாரில்லை. யார் நம்பினாலும் அம்மா மட்டும் ஒரு போதும் நம்பவே மாட்டாள். “தம்பி எப்படியாவது வருவான் …. வராவிட்டால் கடிதமாவது போட்டிருப்பான்… ஏனோ கிடைக்கவில்லை” எனத் தபால் சேவையை குறை சொல்லிக் கொண்டு வழியை வழியைப் பார்த்திருப்பாள்.

– மல்லிகை 2000 – காற்றோடு போதல் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு 2002, எம்.டி குணசேன அன் கம்பனி, கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *