என்னதான் உங்க பிரச்சினை?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 7,230 
 
 

இன்று திங்கட்கிழமை ஆதலால் காலையில் இருந்தே நோயாளர்கள் வந்தவண்ணமிருந்தனர். பலரும் பலவித உபாதைகளைப் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். என்னிடம் மருந்து எடுப்பதைவிட தங்களின் சுகதுக்கங்களை பகிர்வதிலேயே குறியாக இருந்தனர்.

நானும் எவ்வளவு நேரந்தான் ஆச்சரியக்குறிகளையும் கேள்விக் குறிகளையும், சந்தோசரேகைகளையும், துக்கக்கோடுகளையும் முகத்தில் காட்டிய வண்ணமிருப்பது? மனம் சோர்வடையத்தொடங்கியது. இருந்தும் கடமையைச் செய்தவண்ணம் இருந்தேன். வெளியில் நோயாளியொருவர் வடிவேலு பாணியில் சொல்லிக்கொண்டிருந்தார்,

“எவ்வளவு சொன்னாலும் அந்தப்பெடி தலையாட்டித் தலையாட்டி கேட்குதப்பா” குரலைக்கொண்டே அந்த நபரை அடையாளம் காண முடடியும். அவர் என் அறையில் இருந்தபோது “ஐயா, நீ என்ர பிள்ளைமாதிரி, தம்பி என்று சொல்லிப்போட்டன் குறைநினைச்சுப்போடாதே அப்பு” என்று கெஞ்சியவர். பரவாயில்லை ஐயா, உங்கள் வருத்தத்தை சொல்லுங்கோ என்று சொல்லியிருக்க வேண்டிய நான் உங்கள் பிரச்சினையை சொல்லுங்கோ என்று கேட்டதுதான் தாமதம், ஆன்மீகப் பேச்சாளருக்கு மைக் கிடைத்த கதையாக அந்த மனுசன் புலம்பித் தள்ளிவிட்டது. என்னுடைய பொறுமையையும் நன்றாக சோதித்து விட்டு வெளியே போய், “அந்தப்பெடி….” கதை. ம் ம் …அதுதான் உலக நடப்பு. மனம் சலித்துக்கொண்டபோது அலைபேசி சினுங்கியது.

எண்ணத்தை திசைதிருப்ப அலட்டல் கைகொடுக்கும் என்கின்ற நினைப்பில் அலைபேசியைத் தூக்கினால், அட! இவளா!…. வித்தியாசமா யோசிக்காதையுங்கோ என்னுடைய பழைய நண்பி சுதா. அவளுக்கு திருமணமாகி நான்கு பிள்ளைகள். ஆனாலும் மனிசனோட நெடுகச்சண்டை. அந்தப் பஞ்சாயத்துக்குதான் இப்ப கூப்பிட்டிருப்பாள். நானும் முன்னர் பல தடவை மனுசனோடையும், அவளோடையும் கதைச்சுக் கதைச்சு களைத்துப்போனேன். இதில இருக்கின்ற சிக்கல் என்னவென்றால்? இன்னும் அவர்களுக்கே பிரச்சினை விளங்கவில்லை. எனக்கும் விளங்கவில்லை. ஆனால் ஒவ்வொருமுறையும் பிரச்சினை ஓய்வுக்கு வரும்போதும் அவள் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் வழக்கம். இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி சுதா கலியாணம் கட்டி எத்தனை வருடங்கள்? எத்தனை தடவை கணவனுடன் சண்டை பிடித்திருப்பாள்? சரியான விடை சொல்பவர்களின் பிள்ளைகள் புலமைப்பரீட்சையில் சித்தியடைவார்கள்.

அலைபேசி அழுத்தியபடி ஆ சொல்லுங்க?

நான் சுதா கதைக்கிறேன். அவரோட கதைச்சனியோ?

ம்…ம்… இல்லை. நான் பின்னேரம் ஒருக்கா அவனோட கதைத்து, அவன்ர பிரச்சினையை முதலில் வடிவாக கேட்டுவிட்டு உனக்கு எடுக்கின்றேன். என அவசரமாக அலைபேசியை வைத்தேன். நான் எடுக்கின்றேன் என்று சொல்லவில்லையென்றால் பின்னேரம் முடியமுதலே சுதாவினால் எனது அலைபேசி திரும்ப திரும்ப சினுங்கும். சுதாவின் மனுசனும் என்னுடைய நண்பன்தான். அதனால்தான் நான் பஞ்சாயத்துத் தலைவர். மனுசன் நல்ல வேலை, அரச உத்தியோகம். பிறந்ததுகளும் நாலும் பெண்சிங்கங்கள். துருதுருவென்ற அழகுக் குட்டிகள். பெயருக்கேற்ற செல்வந்தன். அதாவது அவன் பெயர் செல்வநாதன். செல்வம் என்று கூப்பிகிறபடியால்தான் அடிக்கடி வீட்டை விட்டு செல்கின்றானோ தெரியாது. ஒருவேளை பெயரில்தான் பிரச்சினையோ? எதற்கும் எண் சோதிடமும் பார்க்கச் சொல்லவேணும்.

திடீரென்று மப்புக்கட்டி புழுங்குகின்றது.நேரம் நான்கைக்காட்டியது. ஓ…. வைத்தியசாலை பூட்டுகின்ற நேரம் வந்திட்டுது!. இல்லை பூட்டியே விட்டாங்கள்.காலையில் மட்டும் அரைமணித்தியாலம் பிந்தி ஓடுகின்ற மணிக்கூடு மாலையில் மட்டும் சரியான நேரத்துக்க ஓடும் இந்த அரசாங்க உத்தியோகத்தில். கொஞசம் அசந்தால், என்னையும் வைத்துப் பூட்டிப்போடுவாங்கள். அவ்வளவு கடமையுணர்வு. அவசர அவசரமாக வீடு கிளம்மபினேன்.

வீட்டுக்கு வந்தவுடன் ஞாபகமாக செல்வத்துக்கு அழைப்பு எடுத்தேன். ஹலோ! நான் சுதன் கதைக்கின்றேன்” மறுமுனையில் இருந்து எரிச்சலூட்டும் பதில் வந்தது.

“அன்பே சிவம்” நான் சரியான எண்ணுக்குத்தான் அழைத்தேனா? என்பதை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டேன். சரியான எண்தான்.

செல்வம், எனது குரல் தயக்கத்துடன் ஒலித்தது. ஓம் நான்தான் சொல்லு. எனக்கு கேட்கின்றது, என்ற குரல் எகத்தாளமாக தோன்றியது எனக்கு. உள்ளிருந்து எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டேன்.

செல்வம் உன்னுடன் கொஞ்சம் கதைக்கவேண்டும் வீட்டை வாறியோ?

மறுபடியும் எரிச்சலை ஊட்டக்கூடிய பதில், அதுவே சத்தியம். என்றது அவன் வாய்.

நாசமாகப் போக! கேட்டதுக்கு பதில் சொல்லுடா? கத்தினேன். இவனுக்கு ஆஸ்பத்தரியில் அந்த ஐயாவே பரவாயில்லை என்று தோன்றியது. சரி வாறன் எத்தனை மணிக்கு?

ஐஞ்சுக்கு பிறகு விரும்பின நேரம் வா. இப்ப நான் போனை வைவக்கிறேன்.

இன்றையபொழுது வீணாகப்போகின்றது என்று மனம் எச்சரித்தது. அவன் வருவதற்கிடையில் வீட்டுவேலைகளை முடித்துவிட்டு இருந்தால், பாரியாரின் கோபக்கணைகளில் இருந்து கொஞ்சம் தப்பித்துக்கொள்ளலாம். சூளை சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தது. இப்ப என்னுடைய இலக்கு இந்த அன்பே சிவம் அதுவே சத்தியத்தை, அன்பே சுதா அதுவே சாத்தியம் ஆக்கிறதுதான். என்ன செய்யலாம் என்ற மின் அலைகளை அட்டகாசமாகப் பரப்பிக் கொண்டிருந்தது மூளை. கூடவே தன்னிச்சையாக கைகள் வீட்டு வேலைகளில் மூழ்கித் திழைத்தன.

வாசலில் செல்வத்தின் அவலக்குரல் கேட்டபோது, எனது வேலைகளும் முடீவுக்கு வந்திருந்தன. வந்து பார்த்தால் எனது நாய்கள் இரண்டும் செல்வத்தை சுற்றி ஆவேசமாக குரைத்துக்கொண்டிருந்தன. செல்வம் வாடா அதுகள் ஒன்றும் செய்யாதுகள். “ஏய் போங்க அங்கால” என்றதும், நாய்கள் வாலை ஆட்டியபடி செல்வத்தைஓரக்கண்ணால் பார்த்தபடி நகர்ந்தன. செல்வம் உள்ளே வந்தான். நான் நேரடியாகவே விசயத்துக்கு வந்தேன். என்ன பிரச்சினை மனிசியோட? நாலு மாதமாக வீட்டை போகவில்லையாம்! இவ்வளவு நாலும் நீயும் ஒன்றும் சொல்லவில்லை…?

ஒரு பிரச்சினையும் இல்லை….

விளையாடுறதை விட்டிட்டு விசயத்தை சொல்லு. ஒரு பிரச்சினையும் இல்லாமலே நாலு மாசமாக வீட்டுப்பக்கம் போகமா இருந்தனீ?

வீட்டு வேலியை அவவின்ர அண்ணை அடைக்கிறார். என்ர வீட்டு வேலியை நான்தானே அடைக்கவேணும்.?

இதுவெல்லாம் ஒரு பிரச்சினையா? இதுக்காடா சன்னியாசம் போனனீ? மனதில் நிரம்பிய கேள்விகளை மனத்துள்ளேயே அடக்கியபடி, “ மச்சான் வேலியை அடைச்சா உனக்கு செலவு மிச்சந்தானே? இதுக்குப்போய்? உண்மையில் அவர் உன்ர மச்சான் இல்லையடா, அவர் ஒரு தெய்வ மச்சான்!. என்றேன்.

எனது நக்கல் அவனுக்கு ரசிக்கக்கூடியதாக இருக்கவில்லை. விட்டேத்தியாகப் பார்த்தான். “உச்” கொட்டினான். சரி சரி இப்ப என்ன வந்தது, நீ நாலு மாசமாக வீட்டை போகவில்லை. இந்த நாலுமாசத்தில் மச்சான் அடைச்ச வேலியும் உக்கிப்போயிருக்கும் இப்ப போனால் நீ வேலியை அடைக்கலாம் தானே?

உனக்குப் பகிடி! என்ர பிள்ளையளுக்கு அவவின்ர அம்மா சாப்பாடு தீத்துகின்றா, என்னை சாப்பாடுகொடுக்க விடமாட்டாவாம்.

அடப்பாவி! அம்மம்மாவின்ர கையால சாப்பிடுறது நல்லம்தானே? ஏன்? பிள்ளைகளுக்கு ஏதும் சத்துக்குறைபாடு வந்திட்டுதோ? அம்மம்மா சாப்பாடு கொடுத்து?.

அதுக்காக இல்லை. ஆனால் அப்பன் எனக்கில்லாத என்ன உரிமை அவவுக்கு? எங்கட வீட்டில் வந்த கொஞ்ச நாள் நிற்கச் சொன்னனான். சுதா வரமாட்டன் என்று சொல்லிவிட்டா. எங்களுக்கு என்று அங்கே வீடு இல்லை சும்மா போய் எப்படி நிற்கின்றது? என்று கேடகிறா? முதலில் வந்து நிற்கிறவதானே? இப்ப எனக்கு நான்கு பிள்ளைகள், எல்லோரையும் கூட்டிக்கொண்டு போய் நிற்கிறது கஸ்டம் என்று சொல்லுகிறா. எங்களுக்கு நான்கும் பொம்பிளைப் பிள்ளைகள், எனக்கு ஆம்பிளைப் பிள்ளை ஒன்று வேண்டும். கொஞச நாள் இடம் மாறி அம்மா வீட்டில் நின்று பார்ப்போம் என்று சொன்னான். அவ அதுக்கு மாட்டாவாம்.

மாமியும் பேசுகிறா, தங்கட காலம் வேற எங்களது காலம் வேறாம். பெத்துப்போட்டு எப்படி வளர்க்கப் போகிறீர்கள்? என்று கேட்கின்றா? நான் என்ன அவவையே வளர்க்கச் சொல்லி கேட்டனான்?

இப்ப எனக்கு விளங்கியது, ஒவ்வொரு சண்டைக்குமான காரணம் வீட்டில் எல்லா வேளைகளையும் மாமியும் மச்சானும் செய்தால், தம்பிக்கு ஆம்பிளைப்பிள்ளை கேக்கமால் வேற என்ன கேட்கும்? கஸ்ட நஸ்டம் தெரிஞ்சாத்தானே? பிள்ளையை வளர்க்கிற கஸ்டத்தை அப்பனுக்கு என்ன என்றே தெரியாமல் வைத்திருந்தால்? தம்பிக்க அடிக்கடி ஆம்பிளைப்பிள்ளை கேட்கத்தானே செய்யும்.

அடேய்! அவனவன் பிள்ளைகள் இல்லை என்று அலைகிறாங்கள் நீ என்னடா என்றால்? அடுத்ததும் பெண்பிள்ளை என்றால் என்ன செய்வாய்? திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறுவியோ? குரலை உயர்த்திக் கத்தினேன். அவனிடமிருந்து பதில் இல்லை. என் கேள்வியை ஏற்றுக்கொள்ளவில்லை; தன் முடிவில் பிடிவாதமாக இருக்கின்றான். என்று சொல்லியது அவனின் அழுத்தமான அமைதி.

சரி சரி அது உன்னுடைய விருப்பம். அப்படியென்றாலும் இப்படிப்பிரிந்திருந்து என்ன செய்யப்போகின்றாய்? முதலில் வீட்டுக்குப் போ. பிறகு பார்ப்போம். நான்தான் இறங்கிவந்து சமாளிக்க வேண்டியிருந்தது.

இல்லையடா, பலாக்காய் உடனே பழுக்காது. இப்ப உடனே போனால் பிறகு மதிக்கமாட்டார்கள். எதுக்கும் நீயே ஒருக்கா சொல்லிவிடு. ஒருதரம் அம்மா வீட்டுக்கு வந்து நேரில் என்னுடன் கதைக்கச் சொல்லு. போன் எடுக்க வேண்டாம் என்றும் சொல்லு. நான் வாறன். அவன் எழுந்து சென்றுவிட்டான். நான் பேயறைந்தமாதிரி அமர்ந்திருந்தேன். என்ன மனுசன் இவன். பெற்றார்களா? செய்தார்களா?. அவசர அவசரமாக அலைபேசியை எடுத்து அணைத்து வைத்தேன். எனக்கு சுதாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல பிடிப்பிருக்கவில்லை.

மன்னிப்பாய் சுதன்.

– 14/02/2016 உதயன் பத்திரிகையில் வெளிவந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *