அதே முகம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2023
பார்வையிட்டோர்: 2,446 
 

தன்னைப்போல் அச்சு அசலாக ஒரு முகத்தைக்கண்ட ரேணுகாவுக்கு அக்காவின் திருமணம் நடந்து கொண்டிருந்த திருமண மண்டபத்தில் இருப்பு கொள்ளவில்லை. அந்தப்பெண்ணையே சுற்றி, சுற்றி வந்தாள்.

ஒருவரைப்போல உலகில் ஏழு பேர் இருப்பதாக கேள்விப்பட்டதோடு சரி. உண்மையை கண்முன் பார்த்து வியந்தாள். ரேணுகா வியந்தளவுக்கு அந்தப்பெண் ரேணுகாவைப் பார்த்து வியப்படைந்தது போல் இம்மியளவும் தெரியவில்லை.

அந்தப்பெண் சாப்பிட அமர்ந்த இடத்திலேயே அருகில் அமர்ந்ததோடு, தன் தோழியைப்பார்த்து ஆள் காட்டி விரலையும், பெரு விரலையும் இணைத்து கண்ணில் வைத்துக்காட்டி செல் போனில் போட்டோ எடுக்குமாறு கண் சிமிட்டினாள். மிக அருகில் நெருங்கிய போது தான் தெரிந்தது அந்தப்பெண்ணுக்கு முடி நரைத்து, தோல் சுருங்கி தன் அம்மா வயது இருக்குமென்று.

சாப்பிட்ட பின் ஒதுக்குப்புறமாக எழுந்து சென்றவள் தன் தோழியின் செல்போன் கேலரிக்கு சென்று வாட்ஸ் அப்பில் தன் எண்ணுக்கு அந்த போட்டோவை அனுப்பிக்கொண்டு தன் தாய் சங்கம்மாவிடம் அந்தப் போட்டோவைக் காட்டி “இவங்க நமக்கு உறவா?” என கேட்க, “இல்லை” என்ற ஒற்றைப்பதிலில் திருப்திபடாமல், உறவுகளிடம் காட்டி கேட்டாள். யாருக்கும் தெரியவில்லை.

“இத்தனை பேரிடம் கேட்பதற்கு பதிலாக அந்தப்பெண்ணையே கேட்கலாமே?” என்ற தோழியின் யோசனைப்படி அவளை நெருங்க, அவள் முகத்தில் கலவரமும், பயமும், படபடப்பும் தொற்றிக்கொண்டதையும், உடல் லேசாக நடுங்கியதையும் பொருட்படுத்தாமல் அவள் தோள் மீது கை வைத்து “நீங்க யாரு…?” என்று கேட்ட ரேணுகாவை தாயன்புடன் ஒரு பார்வை பார்த்து கண்ணீர் வடிய, திடீரென மண்டபத்தை விட்டு வெளியேறி ஓட்டமும், நடையுமாக சென்று காருக்குள் அமர்ந்தவளை, விடாமல் பின் தொடர்ந்த ரேணுகா அப்பெண் தேம்பி, தேம்பி அழுவதை பார்தவுடன் தன் தாயிடம் வந்து பிடிவாதமாக, “என்னைப்பார்த்து அந்தப்பெண் ஏன் தேம்பி அழ வேண்டும்..?” என கேட்க, தாய் சங்கம்மாவும் தேம்பி அழ, அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டாள்.

மனதைக்கல்லாக்கிய தாய் “அவ பீகாரைச்சேர்ந்த என்னோட கல்லூரி தோழி. சென்னைல ஒன்னா படிச்சோம். பேரு மங்கம்மா. அவ தான் உன்னைப்பெற்ற தாய்” என்றதும் மயங்கி தன் தோழியின் மடியில் சரிந்தாள் ரேணுகா.

நினைவு வந்த போது அந்தப்பெண் தன் மடியில் தன்னை தலைவைத்து படுக்க வைத்திருந்தது கண்டு இனம்புரியாத ஆனந்தம் கொண்டாள்.

“உன் அக்கா என் வயித்துல பிறந்த கையோட கற்பப்பையில பிரச்சினையிருக்குன்னு அதை டாக்டர் அகற்றிட்டாங்க. அதுக்கப்புறம் உன்னோட அக்கா அடிக்கடி நோய்வாய் பட்டதுனால உன்னோட அப்பா இன்னொரு குழந்தைய தத்தெடுக்க ஆசைப்பட்டார். நான் தான் மங்கம்மாவிடம் வாடகைத்தாயா இருக்கனம்னு கேட்க, அவளும் சம்மதிக்க பிறந்தவள்தான் நீ. அப்ப பீகார்ல ஒரு வருசம் உன் அப்பாவுக்கு வேலை கிடைச்சதால எனக்கு பிறந்த குழந்தைன்னு உறவுக்காரங்களை நம்ப வச்சு, மங்கம்மா கிட்ட உன் பொண்ணுன்னு சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டோம். எனக்கு கற்பப்பை எடுத்த விசயமும் உறவுகளுக்கு தெரியாததால நம்பிட்டாங்க” என்று இதுவரை பெற்ற தாயென எண்ணியிருந்த வளர்ப்பு தாய் சங்கம்மா சொன்னதும், தன்னைப்பெற்ற தாய் மங்கம்மாவை கட்டியணைத்து கண்ணீர் வடித்தாள் ரேணுகா.

தாய், சேய் என்பது உரிமை வெளிப்பாடல்ல, உணர்வின் வெளிப்பாடு. அது காந்தம் போல் இணைக்கவே செய்யும். பொய் அற்பாயுள் கொண்டது. உண்மை நீண்டாயுள் கொண்டது என்பதை புரிந்தவளாக அன்று இரவு மங்கம்மாவுடன் ஆசையாக உறங்கச்சென்ற ரேணுகாவின் மனத்திரையில் ‘பெத்து எடுத்தவதா என்னையே தத்து கொடுத்துப்புட்டா’ என்ற சினிமா பாடல் ஓடிக்கொண்டிருந்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *