டிரைவர் மாப்பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 7,332 
 

யாழ்ப்பாணம் காரைநகர் வீதி வழமையான காலைப்பொழுதைத் தொடங்கியிருந்தது.பெரும்பாலான முக்கிய வீதிகள் திருத்தப்பட்டு சொகுசான வீதியாக மாற்றப்பட்டிருந்தபோதும் காரைநகரையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் வீதி மட்டும் குண்டும் குழியுமாகவே இருக்கிறது. யார் தவறோ தெரியவில்லை? “அரசனை நம்பி புரிசனையும் கைவிட்டது போல்”, வலி வடக்கு விடுவிப்பு, தமிழ்க்கைதிகள் விடுவிப்பு என பலதை நம்பி இந்த காப்பெற் போடுபவர்களைக் கைவிட்டு விட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. அதிகரித்த வாகனப் பாவனையைத் தாங்கமுடியாது மானிப்பாய் வீதி நாளாந்தம் திணறித் திமிருகின்றது. ஆனால் அதில் பயனிப்பவர்கள் பலருக்கு அது பற்றி அக்கறையில்லை. வீதி அபிவிருத்தி அதிகாரசபையை திட்டுவதுடன் சமாதானப்பட்டுக்கொள்கின்றார்கள். தங்களது கடமைகளுக்காக விரைகின்றார்கள்.

சண்முகத்தாரும் அந்த வீதியில்தான் ஓட்டோ ஒன்றில் பயனித்துக்கொண்டிருந்தார். வழமையாகச் செல்லும் ரவியின் ஓட்டோ. ரவிக்கு சண்முகத்தாரின் குடும்பநிலை நன்றாகத் தெரியும். இப்போது எங்கு செல்கிறார் என்பதும் தெரியும்.

மூன்று பெண்களைப் பெற்ற சண்முகத்தார், நாட்டின் அசாதாரன சூழ்நிலைகளையும் தாண்டி தனது குடும்ப கஸ்டங்களையும் பாராது உழைத்த பணத்தை எல்லாம் செலவழித்துப் பெண்களைப் படிக்க வைத்ததன் பயனாக மூவரும் அரச உத்தியோகத்தில் இணைந்து கொண்டனர். பெண் உரிமையை பேச்சளவில் கொண்ட பலர் மத்தியில் ஒரு தகப்பனாய் சகல உரிமைகளையும் தனது பிள்ளைகளுக்கு கொடுத்து வளர்த்திருந்தார் சண்முகத்தார்.

மூத்தவளை சொந்தத்திலேயே கட்டிக்கொடுத்தார். அதிக சுமை இல்லாமல் அடுத்த பெண் அப்பாவின் சம்மதத்துடன் தான் விரும்பியவரைக் கைப்பிடித்தாள். கடைசியின் திருமணத்தை முடித்தால் தனது கடமைகளும் முடிந்துவிடும் என்ற நினைப்பில் திருமணப்பேச்சைத் தொடங்கினார் சண்முகத்தார். ஆனால் கடைக்குட்டியின் திருமணம் இழுபடத்தொடங்கியது.

பெண்ணின் சாதகத்தில் சூரியனும் செவ்வாயும் சேர்ந்து உள்ளதால் அவ்வாறு இருக்கும் மாப்பிள்ளையின் சாதகம்தான் பொருந்தும் எனச் சாத்திரியார் அடித்துக்கூறிவிட்டார். பிறகென்ன, ஒரு சாதகத்தில் இருக்கும் பன்னிரெண்டு பெட்டிகளில் ஒரு பெட்டிக்குள் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கும் மாப்பிள்ளையை தேடத் தொடங்கிய சண்முகத்தார், மூன்றாவது வருடத்தில் இன்றும் ஓட்டோவில் மகளின் சாதகத்துடன் யாழ்ப்பாணப் புறோக்கரிடம் போய்க் கொண்டிருக்கின்றார்.

ரோட்டு கிடக்கிற கிடையில இப்படிப்போனாத்தான் சரி ஐயா! ஓட்டோவுக்கும் இன்னும் லீசிங் கட்டி முடிக்கேல்ல. செலவு வந்தால் பிறகு கஸ்டம், லீசிங் கட்ட முடியாது. லீசிங்காரன் வந்திடுவான் வீட்டுக்கு. என்று கதைத்துக்கொண்டு வந்தவனின் காதைப் பின்னால் வந்து கொண்டிருந்த சிற்றூர்தியின் “கோர்ண்” சத்தம் பிளந்தது. அவசரத்துக்கு அம்புலன்ஸ்கூட இப்படிப் பொகாது, ஓட்டோவை ஓரங்கட்டிக்கொண்டே “ தொடங்கிட்டாங்கள் சும்மா கலைபட” என்றான் ரவி. புளுதியைக் கிளறிய வண்ணம் முதல் மினி பஸ் அவர்களைக் கடந்தது.

“இந்தாவிடு வாறன்” என்று அடுத்ததும் வேகமாக கலைபட்டு வந்ததை ஓட்டோ மிரரில் பார்த்த ரவி ஓடடோவை பாதி வீதியிலேயே ஓடிக்கொண்டிருந்தான். இவங்கள் திருந்தமாட்டாங்கள் என்றார் சண்முகத்தார். ஆரேன் செத்தால் அவங்களுக்கென்ன? ஒத்துப்பாடினான் ரவி. மீண்டும் கோர்ன் சத்தம் காதைக்கிழித்தது. சிவப்பு நிறத்தில் கடந்தது. மீண்டும் கண்ணை மறைக்கும் புழுதி…. நாசமாகப் போவாங்கள் என்று மனதுள் திட்டியவாறே முகத்தை சால்வையால் மூடிக்கொண்டார் சண்முகத்தார்.

ரெண்டு குறிப்பு வந்திருக்காம்! என்று புரோக்கர் சொன்னார். பொருத்தம் பார்க்கச் சொல்லியிருக்கிறேன். சரிவந்தால் உடனே முடிச்சிடவேணும். எனக்கும் வயசாகி விட்டது.

ரவியிடம் மனச்சுமையை பகிர்ந்து கொண்ட சண்முகத்தாரிடம், என்ன வேலையாம்? ரவியின் கேள்வியில் விபரம் அறியும் ஆர்வம் தெரிந்தது. சண்முகத்தாரின் இளைய மகள் ரவியுடன்தான் படித்தவள். அதனால் சற்று அதிகப்படியான ஆர்வம். ரவியின் ஆர்வத்தின் உள்ளார்த்தம் சண்முகத்தாருக்கு புரியாமலில்லை. ரவியின் குடும்பம் அவருக்கு நன்கு தெரிந்த குடும்பம்தான், ஆள் நல்ல பிள்ளையும் கூட. இருந்தாலும்…. ஒரு வேலை இல்லை..

“இவளின்ர சாதகத்துக்கு வரன் அமையிறதே கஸ்டம். பெடியன் குணமானவனாக, குடும்பம் நல்லதாக இருந்தால் முடிக்கவேண்டியதுதான். பட்டதாரியாக இல்லாவிட்டாலும் ஒரு நிரந்தர உத்தியோகம் இருந்தால் பரவாயில்லை.” என்று அவன் உள்ளார்த்தத்தின் அடியிலேயே தீயை வைத்தார்.

ஓம் ஐயா! அதுவும் சரிதான் என்றான். என்ர சாதகமும் உங்கட மகளின்ர சாதகம் பொல்தானாம். என்ன? எனக்கு செவ்வாயும் தோசமாம் சாத்திரியார் சொன்னவரென்று அம்மா சொன்னா. நான்தான் இப்ப ஒன்றும் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். மெல்லச் சொல்லி வைத்தான் ரவி.

ஏனடாப்பா? இந்த வயசில செய்யாம எப்ப செய்யப் போகின்றாய்? காலாகாலத்தில் செய்யவேண்டியதைச் செய்து போடவேணும். என்று ஆலோசனையை இலவசமாக அவசரப்பட்டு இறக்கினார் சண்முகத்தார்.

இப்பதான் இரண்டு மூன்று வேலைகளுக்கு போட்டிருக்கிறன். எப்படியும் ஒன்றாவது கிடைக்கும் வேலை கிடைச்ச பிறகு செய்வம் என்று சொல்லிக்கொண்டே ஓட்டோவின் வேகத்தைக் குறைத்தான். முன்னால் சனக்கூட்டமாக இருந்தது. என்ன பிரச்சினை? என்றபடி சண்முகத்தாரும் ஓட்டோவில் இருந்து தலையை வெளியே நீட்டினார். ரேஸ் ஓடிக்கொண்டு வந்து அடிபட்டிட்டாங்கள். என்று தன்பாட்டில் விளக்கம் கொடுத்தான் ரவி. யாரைச் சாக்காட்டினாங்ளோ?. ஓட்டோவை மெல்ல ஓரமாக நிறுத்தி, என்ன நடந்தது? என்று விசாரித்தான் ரவி.

“நாசமா போவாங்கள், போட்டிக்கு ஓடி கரையால போய்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை அடிச்சு தூக்கிப் போட்டாங்கள். பள்ளிக்கூடத்துக்கு பிள்ளையை ஏத்திக்கொண்டு போன மனுசன், ஒரே ரத்தம், பார்க்க உடம்பெல்லாம் நடுங்கிடுச்சு. பிள்ளையையும் தகப்பனையும் கடவுள்தான் காப்பற்ற வேணும்.” நடுத்தர வயதுக்காரர் ஒருவர் கோபத்தில் கொந்தளித்தார். ரவிக்கும் சண்முகத்தாருக்கும் தாங்கள் மயிரிழையில் தப்பியது போன்ற உணர்வு தாக்க, பக்கத்தில் இளைஞன் ஒருவன் மற்றவர்களுக்கு கூறிக்கொண்டிருந்தான், “அடிச்சுப்போட்டு ஓடப்பார்த்தாங்கள், நல்ல காலம் சனம் மடக்கிப்போட்டுது. நல்ல அடி ஆக்களுக்கு” சண்முகத்தாரால் பொறுக்கமுடியவில்லை. அவங்கள் பிழைவிட்டால்! நாங்களும் பிழைவிட வேனுமே. பொலிசிட்ட ஒப்படைக்கிறதுதானே முறை. சட்டம் தண்டனை கொடுக்கவேணும் நாங்கள் இல்லை. என்று பொங்கினார். ஐயா சத்தம் போடாதேயுங்கோ, பிறகு ஓட்டோவையும் அடிச்சு உடைச்சுப் போடுவாங்கள், பேசாம வாங்கோ, நாங்க மெதுவாகப் போவோம். என்றபடி ஓட்டோவைமெீண்டும் இயக்கினான் ரவி.

எல்லாம் காலப்பிழை புறுபுறுத்தார் சண்முகம். ஓட்டோ மெதுவாக நகர நகர கூடி நின்றவர்கள் ஓட்டுநருக்கு இட்ட சாபங்கள் ஆயுள் முழுக்க போதுமானதாக காதில் விழுந்து கொண்டிருந்தது.

அடிபட்ட இடத்தை பார்க்க மனமில்லாமல் முகத்தை மற்றைய பக்கம் தருப்பிக் கொண்டார் சண்முகத்தார். ஓட்டோ சடுதியாக நிற்க காரணம் என்னவென்று பார்த்தார்.இரண்டுகைகளையும் கைகளையும் நீட்டியபடி ஒருவர் ஓட்டோவின் முன்னே மறித்துக்கொண்டிருந்தார்.

ரவி என்ன அண்ணை? என்று கேட்க.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் வந்த அந்த நபர் தன்னையும் ஓட்டோவில் ஏற்றிக்கொள்ளச்சொல்லிக் கேட்டார். பிள்ளை ஆஸ்பத்திரியில் சாப்பாடு கொண்டுபோகவேணும், பிந்தினால் உள்ளே விடமாட்டாங்கள், என்றார். அதுக்கொன்ன வாங்கோ என்று அழைத்தார் சண்முகம். இவங்களால் எத்தனை பேருக்கு கரைச்சல் பாருங்கோ? தன் பங்குக்கு மினிபஸ் ஓட்டுநரை வைதார். நான் நேற்றும் பஸ்ஸிலதான் வந்தனான், டிரைவர் சின்னப்பெடியன்தான். ஆனாலும் பொறுப்பா ஆறுதலாக ஓடினவன். இன்றைக்க ஏறினதில இருந்து உயிரைக் கையில் பிடிச்சுக்கொண்டுதான் இருந்தனான். பார்சலை திறந்தால்தான் தெரியும். உள்ளுக்குள் குழம்பெல்லாம் ஊத்துப்பட்டிருக்கும். ஓட்டோவில் ஏறிய புதியவர் தன் பங்குக்கு அர்ச்சித்தார்.

அவரின் கதையை கேட்ட சண்முகத்தாரின் சிந்தனை எங்கெல்லாமோ ஓடியது. ஐயா! இடம் வந்திட்டுது. நீங்க இறங்கி அலுவல பாருங்கோ நான் அண்ணையை ஆஸ்பத்திரியடியில இறக்கி விட்டிட்டு வாறன். என்று ரவி கூவியபோதுதான் சுயநினைவுக்கு வந்தார். கடவுளைக் கும்பிட்டவாறே இம்முறையாவது சரிவரவேணும் என்று நினைத்தவாறு புறோக்கரின் வீட்டினுள் அடியெடுத்து வைத்தார்.

வாங்கோ! வாங்கோ! உங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கறேன், புறோக்கர் வெகு விமரிசையாக வரவேற்றார். விபத்தைப்பற்றி கூறியவாறே குறிப்புக்களை வேண்டி மேலோட்டமாப் பார்த்தார். மூன்று வருடங்களில் ஓரளவு பொருத்தம் பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருந்தார் சண்முகம். முதல் பார்த்த சாதகத்தைக் காட்டி இது பொருந்தாது என்றார்.

இது ரீச்சர்ப் பெடியன் மகளும் ரீச்சர்தானே பரவாயில்லை என்று பார்த்தேன். பொருத்தமில்லாவிடில் பரவாயில்லை மற்றையதைப் பாருங்கோ. அது பொருந்தும். புறோக்கர் சொன்ன வாக்கு மெய்யாக, எண்பது வீதப்பொருத்தம் இருந்தது. சண்முகத்தாருக்க நல்ல சந்தோசம். இது நல்ல பொருத்தம் என்றவாறே என்ன வேலை? என்றார்.

புறோக்கர் தன் அனுபவத்தின் படி கூறத்தொடங்கினார், குணமான பெடியன், நல்ல பரம்பரையான குடும்பம், ஏ. எல். படிச்சிருக்கின்றான், நிரந்தர உத்தியோகம், பஸ் டிரைவராக இருக்கின்றான்….. புறோக்கர் சொல்லிக்கொண்டே போனார். சண்முகத்தாருக்கு சப்பென்று ஆகிவிட்டது. கடந்து வந்த விபத்தின் நினைவுகளில் இருந்து அவர் முற்றாக விடுபட்டிருக்கவில்லை. தடீரென ஒரு முடிவுக்கு வந்தவராய், தம்பி! இனி பிள்ளைக்கு ஒரு வரனும் பார்க்க வேண்டாம். நான் பிறகு வாறன். என்று சொல்லி விட்டு வெளியில் வந்தார். ஓட்டோவுடன் ரவி காத்திருந்தான். ஓட்டோவை இயக்கியவாறே ஆர்வத்துடன், என்ன மாதிரி? எல்லாம் சரியே? என்றான்.

சரிவராதடா தம்பி. என்றவரை, ஏன் சாதகம் பொருத்தமில்லையோ? என்றவனுக்கு, சாதகம் நல்ல பொருத்தம், ஆனால் பெடியன் டிரைவர். ஓ…..படிப்பு பிரச்சினையோ? வேலை பிரச்சினையோ?

படிப்பு பிரச்சினை இல்லை. வேலையும் அரசாங்கத்துலதான். ஆனால் எத்தனை பேரின்ட சாபங்களை சுமக்க வேணுமோ தெரியாது? காலையில் பார்த்தனாங்கள்தானே? அதுதான் வேண்டாம் என்றுவிட்டன்.

எல்லோரும் அந்த டிரைவர் மாதரி இருக்கமாட்டினந்தானே ஐயா! ஒருத்தர் இரண்டுபேர் செய்யிறத்துக்காக எல்லோரையும் என்னெண்டு குற்றம் சொல்லுறது?

அந்த சிலரில், இவனும் இருந்திட்டால்? என்ன செய்யிறது? சண்முத்தாரின் தீர்மானமா முடிவு பதிலைக் கேட்ட பின் அமைதியானான் ரவி. அவரும் அமைதியானார். யோசனையில் வீடு வந்தது கூட தெரியாது இருந்தவரை ஐயா! வீட்டுக்கு வந்தாச்சு, இறங்குங்கோ. என்ற ரவியின் குரலில் நித்திரையில் இருந்து முழித்ததுபோல் ஓட்டோவில் இருந்து இறங்கினார்.

ஓட்டோவின் சத்தம் கேட்டு, கடைசி மகள் வாசலுக்கு ஓடி வந்தாள். அவள் பார்வை ரவியை வருடியபின், தன்னிடம் திரும்புவதை உணர்ந்தார் சண்முகம். நான் வாறன் என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டான் ரவி.

– 13/03/2016 உதயன் பத்திரிகையில் வெளியானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *