எச்சரிக்கை..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 5,514 
 
 

” இதோ பாருங்க..! பாலுக்குக் காவலா பூனையை வைச்சுட்டுப் போற மாதிரி உங்களை வைச்சுட்டுப் போறேன். வீட்டுல யாரும் இல்லேங்குற துணிச்சல்ல என் தங்கச்சிக்கிட்ட எசகு பிசகா நடந்துகிட்டீங்க… ஆமா..! அப்புறம் நடக்கிறதே வேற…”இதோடு என்னை ஆயிரத்தெட்டுத் தடவையாக எச்சரித்து விட்டாள் என் மனைவி சங்கவி.

எனக்கு எரிச்சலாக வந்தது.

“ஏன்டி..! எத்தனைத் தடவை இதையே பதிவு நாடா மாதிரி மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்லுவே..? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லேன்னா அவளையும் அழைச்சிக்கிட்டுப் போறதுதானே ..!” என்று நான் விழுந்து பிடுங்கியதும் அரை மனதுடன் அடங்கிப் போனாள் அவள்.

‘இந்த’விசயத்துல பொம்பளைங்க ஏன் தான் ஆம்பிளைங்களை நம்புறதில்லையோ..?!” உள்ளுக்குள் பொருமினேன்.

பின்ன என்ன..! நான், என் மனைவி, எங்களின் ஒன்றரை வயது மகன் விமல், என் மனைவியின் கடைசி தங்கை ஜீவிதா, மாமி… இதுதான் எங்கள் குடும்பம். சுருக்கமாகச் சொல்லப் போனால் நான் மாமியார் வீட்டோடு வந்துவிட்ட மருமகன்.!!

இப்படி மூன்று வருட காலமாக கூட்டு குடும்பம் நடத்தி, குப்பை கொட்டி வருகிறோம். இதுவரையில் பட்டப்படிப்பு இறுதியாண்டில் படிக்கும் என் சின்னக் கொழுந்தியா ளை இலைமறைவு காய்மறைவாக வேணும் திருட்டுத்தனமாகப் பார்த்தது, ரசித்தது கிடையாது. இப்படிப்பட்ட என் மீது நம்பிக்கை இல்லை என்றால் கோபம் வருமா வராதா..?!

சங்கவியின் இந்த அலட்டலுக்கு ஒன்றும் பெரிதான காரியம் இல்லை சென்ற வருடம் மதுரையில் கட்டிக் கொடுத்த நடுக் கொழுந்தியாள் அம்மா வீட்டில் தலைப்பிரசவத்திற்கு வந்து முடித்து திரும்ப புகுந்த வீட்டிற்குப் புறப்படுகிறாள். தாய்க்கும் பிள்ளைக்கும் முறைகள் செய்து பச்சைப் பிள்ளைக்காரியைத் தனியே அனுப்ப முடியுமா….? அதனால் என் மாமியாரும், மனைவியும் அவளை அழைத்துக் கொண்டு செல்கிறார்கள்.

எனக்கு அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காததினால் என்னால் அவர்களோடு போக முடியவில்லை. மேலும் கொழுந்தியாளுக்குப் பரிட்சை. அவளாலும் போக முடியாத சூழ்நிலை. இவர்கள் சென்று திரும்பும் இந்த ஒரு வார காலத்தில் தாண்டி தோண்டியில் விழுந்து தவறேதும் செய்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கிறாள் மனைவி. இதுதான் விசயம். !

மாமியார் ரொம்ப தங்கமானவள். மருமகன் மனம் நோகாமல் நடக்கும் புண்ணியவதி. புறப்படும் போது சின்னவளிடம் சொல்வது போல…

“பத்தரமா இருங்கோ…”என்று நாசுக்காகச் சொல்லிவிட்டுச் செல்கிறாள்.!

இதுதான் நாசூக்கு, நாகரீகம். அதை விடுத்து… தொணதொண வென்றால்..????

எல்லோரையும் ராத்திரி எட்டு மணி தொடர் வண்டியில் பத்திரமா ஏற்றி அனுப்பிவிட்டு, வீட்டுக்கு வந்து, மச்சினிச்சிப் பரிமாற சாப்பிட்டுவிட்டு, ஒன்பதரை மணிக்கெல்லாம் திண்ணையில் பாயைப் போட்டு படுத்த கொஞ்ச நாழிக்குப் பிறகுதான் இந்த’சைத்தான் மனசு ‘வேலையைக் காட்டியது.

சட்டென்று கட்டவிழ்ந்த கன்றுக்குட்டி மாதிரி அது இஷ்டத்திற்குத் துள்ளிக் குதித்தது.

நானும் இழுத்து இழுத்துப் பார்க்கிறேன். ம்ம்…. நேரம்தான் நத்தையாய் நகர்ந்து பன்னிரண்டைத் தாண்டுகிறதேத் தவிர சைத்தான் கட்டுக்குள் வந்து கட்டுப்பட மாட்டேனென்கிறது. .

நானும் சமாளித்துப் புரண்டு புரண்டு படுக்கிறேன். உடலுக்குள் வெப்பம் எகிறி, சிறு மூச்சு பெருமூச்சாய் மாறி சூடாய் வருகிறதேத் தவிர குறையவில்லை.

என்ன பெரிய தேர்வு..? பொல்லாத படிப்பு. ஏன்தான் இவளை அழைத்துச் செல்லாமல் பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்து இப்படிப் பாடாய்ப் படுத்துகிறார்களோ..?! – என்று சங்கவி மீதும் மாமியார் மீதும் எனக்குக் காரண காரணமில்லாமல் கோபம் வந்தது.

இந்த உலகத்திலேயே ரொம்ப மோசமானது இரவுதான். மனுசனுக்கு ஆசையாய் இருந்தாலும், நோயாய் இருந்தாலும் உசுப்பி விடுறதுக்கும் கிளப்பி விடுறதுக்கும் இர வைத் தட்டிக்க ஆள் கிடையாது.!!

மச்சினிச்சி மஞ்சுளா வாசல் கதவைத் தாழ் போட்டுக்கிட்டு உள்ளாற நிம்மதியைத் தூங்குறாளோ என்னவோ….?! வெளியில படுத்துக்கிடக்குற எனக்குத்தான் பேரவஸ்தையாய் இருக்கு.?!

இப்பதான் மன்மதன் அவளோட ஒவ்வொரு அழகு, அசைவெல்லாம் எனக்குள் புட்டு புட்டு வைத்து தன் வேலையைக் காட்டுகிறான். மலர் வில்லம்புகள் விடுகிறான்.

அவன் அப்படி கணைகள் எறிய எனக்கு விதவிதமாக கலர் கலர் கற்பனைகளெல்லாம் வருது.

சினிமா வில் காட்சிகள் வருவது போல்

“பயமா இருக்கு மாமா. உள்ளாற வந்து படுத்துக்கோங்க..”- மச்சினிச்சி அழைத்து கட்டிப்பிடித்துக் கொள்ள மாட்டாளா..? என்று மனது கிடந்தது தவியாய்த் தவிக்கிறது.

அப்படி உள்ளிருந்து ஏதாவது குரல், ஒலி வருகிறதா என்று காதுகள் இரண்டும் விழித்துக் கொண்டு காத்துக் கிடக்கிறது.

.கரப்பான் பூச்சி, பல்லி ஏதாவது ஒன்றிக்குப் பயப்படுற மாதிரி இருந்தாலும் எதையாவது ஒன்னைப் பிடிச்சிப் போட்டு, ஆளை அலறவைச்சி அந்த சாக்குல உள்ளாற போ ய் கட்டிப்புடிச்சி காரியம் நடத்தலாம்ன்னா…

ராட்சசி. ! அவ எதுக்கும் பயப்படமாட்டாள்.! எமனே வந்து எதிர்ல நின்னாலும் அசைய மாட்டாள்.. !

ம்ம்…. ஒரு வாரம் காலம் வரை படுக்கை என்பது முள் மெத்தைதானா…? புரண்டு புரண்டு படுத்து கஷ்டப்படவேண்டியதுதானா..?!

கலியாணம் முடிச்சி ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருந்தாலும் இந்த சபலம் மட்டும் போக மாட்டேங்குதே..!

சரி போகட்டும்…

கொழுந்தியாள் குனிந்து சாப்பாடு போடும்போது அவன் முந்தானை நழுவி விழாதா..? சரிய விடமாட்டாளான்னு மனசு கிடந்து அடிச்சுக்குது.

காபி, தண்ணி கொடுக்கும் போது விரலைத் தொட்டுத் தரமாட்டாளான்னு மனசு துடிக்குது.

யாரும்தான் இல்லையே..! அக்கா புருஷன் தானே.! .அவன் தாகத்தைத் தீர்த்தாலெனாவாம்..? என்று மனசு கிடந்து மன்றாடுது, திண்டாடுது.

என் மனைவியைப் பத்தி எனக்குத் தெரியும். அவள் நிச்சயம் நெருப்பை மடியில் கட்டிக்கொண்டுதான் இருப்பாள்.

ஆனால்… மாமியார்..? அம்மா மாதிரி. ரொம்ப அன்பானவள். இதுவரைக்கும் என் முன் நின்று பேசியது கிடையாது. அவ்வளவு மரியாதை. அப்படிப்பட்டவங்க நம்பிக்கையை வீணடிக்கலாமா..?

அதனால் சபல மனதை இறுக்கிப் பிடித்து….

மச்சினிச்சியை நேருக்கு நேர் பார்க்காமல், கையைத் தொட்டு காபி, தண்ணி வாங்காமல், குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுவிட்டு, நல்ல பிள்ளையாய்ப் பாயை எடுத்துக் கொண்டு வந்து வெளியின் படுப்பது வரை ஒரு மதிக்கத்தக்க மனிதன் போல நான் நல்ல பிள்ளையாய் நடிக்கிறேன் என்றால்.. ஹே..! எனக்கே ஆச்சரியம் அதிர்ச்சியாகத்தானிருக்கிறது..!!

இருக்காதா பின்னே..? வடிகட்டின அயோக்கிய ராஸ்கல் நான்.!! புள்ளி வைத்தால் கோலம் போட்டு முடிக்கும் கிராதகன் ! இப்படி இருக்கிறேன் என்றால் ஆச்சரியமாகா இருக்காதா என்ன..?

ஒரு கள்ளப் பார்வை, சின்ன சிரிப்பு, சிதறல் இல்லாமல் சி று தப்புத்தண்டா கூட நடக்காமல் அவஸ்தைப் பட்டே ஏழு நாட்களையும் ஓட்டி இருக்கிறேன் என்றால் என்னுடைய சுயக்கட்டுப்பாட்டை நானே மெச்சிக் கொள்ளத்தான் வேண்டும் !

இதோ இன்றைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். வட்டியும் முதலுமாய் மனையிடம் வசூலித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

இந்த நினைப்பெடுத்ததுமே… தொடர் வண்டி நி லையத்திற்குச் சென்றேன்.

சொல்லி வைத்தது மாதிரி… ஏழு ,மணி வண்டியில் இறங்கிவிட்டார்கள்.

ஒரு வார காலமாக சரியான தூக்கமில்லாமல், கண்கள் குழி விழுந்து, உடல் இளைத்துப் போன என்னை, என் மனைவி சந்தேகமாகப் பார்ப்பது புரிந்ததும் ஓங்கி அறைய வேண்டும்போலிருந்து.

அடக்கிக்கொண்டு ..’அடி அசடே ! நான் எவ்வளவு நல்லவனாய் நடந்திருக்கிறேன் என்று உன் தங்கை சொல்வாள். போய் கேள் !” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

மேலும் அவளை சட்டை செய்யாமல் மகனைத் தூக்கிக்கொண்டேன்.

என் மாமியார் வழக்கம் போல என்னை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

வீட்டின் உள்ளே.. மனைவியும் மாமியும் சென்ற பிறகு பையனைச் சீக்கிரம் தூங்க வைக்க, வெளிக்காற்றில் கொஞ்சிக்கொண்டிருக்கும்போதுதான் உள்ளே விசும்பல் ஒலி கேட்டது.

எட்டிப் பார்த்தேன்.

அறையில் என் மச்சினிச்சியைச் சுற்றி என் மனைவியும் மாமியார் திக்பிரமை பிடித்து நின்றார்கள்.

மஞ்சுளாதான் கண்களைக் கசக்கிக் கொண்டு விசும்பி, விசும்பி அழுது கொண்டிருந்தாள்.

அம்மாவையும் அக்காவையும் ஒரு வார காலமாகப் பார்க்காமல் இருந்த ஏக்கம் அவளுக்குத் துக்கமாக மாறி விட்டது போல என்று அசட்டையாக நினைத்த அடுத்த நொடி…

என் மனைவி சங்கவி பத்ரகாளியாக என்னை நோக்கி வந்தாள்.

அப்புறம் என்ன நடந்தது, ஏது நடந்தது என்று சொல்லவெல்லாம் எனக்கு வார்த்தைகள் இல்லை. ஆனால் எதுவும் தன்னிச்சையாக நடக்க வில்லை. என்னை மீறி நடக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

காரியங்கள் மடமடவென்று நடந்தன. விளைவு..?

என் மச்சினிச்சி மஞ்சளாவிற்கு முதல் இரவு. எனக்கு இரண்டாவது. இரவு.!

என்னருகில் அமர்ந்துகொண்டு சொல்கிறாள்…

“இருபது வயசான எனக்கு உங்களை மாதிரி ஒரு நல்ல மனுசனை நான் இதுவரைக்கும் சந்திச்சதில்லே. நாம தனியா இருந்த அந்த ஏழு நாட்களிலும் எப்படி ஒரு அப்பழுக்கு இல்லாத மனுசனா நடந்துக்கிட்டீங்க..?!

உங்க நடத்தையைப் பார்த்தே என் மனசைப் பறி கொடுத்துட்டேன். கையில வெண்ணையை வைச்சுக்கிட்டு எதுக்கு நெய்க்கு அலையனும்..? உங்களைக் கணவராய் அடைஞ்சி அக்காளுக்கு உதவியாய் இருக்கலாம் என்கிற எண்ணத்தில் நீங்க என்னைக் கெடுத்துட்டதா என் அம்மா அக்காகிட்ட பொய் சொல்லி நம்ப கலியாணத்தை முடிச்சேன். எப்படி..?!” என்று கேட்டு கண் சிமிட்டினாள் !”

எனக்கு மயக்கம் வந்தது. வராமல் என்ன செய்யும்..????

என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *