பஸ்ஸை விட்டு இறங்கி சேகர் தன் கையை திருப்பி மணி பார்த்தான்.அதற்குள் “உறைபனி” வாட்ச்சின் மீது மறைத்திருந்தது.வலது கையால் துடைத்துவிட்டு பார்த்தான்.மணி பத்தை தொட ஒரு சில நிமிடத்த்துளிகளை காட்டியது. இந்நேரத்திற்கு மேல் என்ன செய்வது?, பஸ் நிலையத்தில் தங்கவும் முடியாது. தோல் பையில் ஓரிரண்டு துணி மணிகள், கொஞ்சம் பணம், அதுவும் இரண்டு நாளில் கடையில் சாப்பிட்டால் திரும்பி போக பணம் காணாது. இப்பொழுது என்ன செய்வது?
யோசித்து நிற்கும் நேரம் நடக்க ஆரம்பிக்கலாம். குன்னூர் செல்லும் பாதையில் ஒரு பர்லாங்க் செல்லவேண்டும் என்று சொல்லி இருந்தார்கள் அதன் பின் அங்கு ஒரு “வாட்டர் டேங்க்” வரும். அதன் அருகில் சென்று வலது புறம் திரும்பி ஒரு பத்து நிமிட நடை சென்றால் வள்ளுவன் நகர் போர்டு தென்படும். அந்த தெரு வழியாக சென்றால் சரியாக ஐந்தாவது வீடு.இதை விலா வாரியாக சேகரனுக்கு உபதேசித்து கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி உள்ளார்கள்.
அங்கு தங்கி பயிற்சி பெற்று வர,எப்படியும் மூன்று நாட்கள் தேவைப்படும், மலையில் வசிக்கும் மக்களுக்கு இவர்களின் பொதுச்சேவை செய்யும் இயக்கம்.
பொதுச்சேவைகள்பற்றி அங்குள்ள மக்களிடம் எப்படி விளக்க வேண்டும் என்ற களப்பயிற்சி.
இது. சொல்லும்போது அவ்வளவு கடினமாக தெரியவில்லை. ஆனால் அவர்கள் மலையில் வசிக்கும் மக்களிடம் நீங்கள் செல்லும்போது உங்களுக்கு ஏற்படும் இன்னல்கள், அதை சமாளிக்கும் திறமை போனறவைகள் கிட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த பொழுது சேகரன் அசுவராசியமாக கேட்டுக்கொண்டிருந்தான்.
அவன் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவன். அது கொஞ்சம் வெப்ப பிரதேசம். அவனுக்கு இந்த பிரசார உத்தியோகம் கிடைக்கப்போகும் இடம் மலை வாசஸ்தலமாக இருக்கலாம் என்றதன் பேரில் அவனுக்கு மலைகளில் களப்பயிற்சி அவசியம் என கருதியது அந்த இயக்கம். அதன் பேரிலேயே அவனை இந்த இடத்துக்கு போகச்சொல்லி உள்ளார்கள்.
ஊட்டியில் குளிரும் என்று நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான். அப்பொழுது அதை பொருட்டாக நினைக்கவில்லை. படித்து முடித்து வேலைக்கு அலைந்து திரிந்து கடைசியில் அரசாங்கத்தால் நடத்தப்பெற்ற இந்த பொதுச்சேவை இயக்கத்தில் அவனுக்கு பிரச்சாரகராக பணி கிடைத்தது. அதுவும் இந்த பயிற்சி முடித்தால்தான் அவனுக்கு பணி ஆணை கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள். மதியம் ஊட்டி செல்ல கோயமுத்தூருக்கு பஸ் ஏறிவிட்டான்.சேகர் கிளம்பும்போது நல்ல வெயிலாய் இருந்தது ஈரோட்டில்.கோயமுத்தூர் வரும்வரை அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. அதன் பின் மதியம் சாப்பிட்டு விட்டு ஊட்டிக்கு பஸ் ஏறினான். எப்படியும் நாலு மணிக்கு ஊட்டி சென்று விடலாம்,அதன் பின் அரை மணி நேர நடை, இடத்தை கண்டு பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்டான்.அவன் கதை இப்படி ஆகும் என்று நினைக்கவே இல்லை.
அவன் ஊட்டிக்கு ஏறிய பஸ் கிளம்பும்போதே மக்கர் செய்ய ஆரம்பித்தது. அதை சரி செய்து கிளம்புவதற்கே மணி மூன்று ஆகிவிட்டது. அதன் பின் மலை ஏறிய கொஞ்ச தூரத்துக்குள் படுத்துவிட்டது. அடுத்த வண்டி வந்தால் ஏற்றி விடுவதாக கண்டக்டர் சொன்னார். ஆனால் அடுத்து வந்த அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிறைய வந்ததால், ஊட்டியிலிருந்து மெக்கானிக் வந்து வண்டியை சரி செய்து, ஊட்டி வந்து சேர்வதற்கு இந்நேரமாகிவிட்டது.
இது வரை எவ்வளவு தூரம் நடந்து வந்திருப்போம் என நினைத்து பார்த்தான். எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்று தொ¢யவில்லை.பாதையில் ஆளரவமே இல்லாமல் இருந்தது.எதிரில் ஒரு வண்டி வாகனம் கூட அவனை கடந்தோ. அல்லது எதிரிலோ வரவில்லை. குளிர் ஊசியாய் உடல் முழுவதும் குத்துவது போல் இருந்தது.ஒரு ஸ்வெட்டராவது எடுத்து வந்திருக்கலாம்.தலையில் அடித்துக்கொள்ள கையை தூக்க முயற்சிக்க கை எடுக்கவே முடியாமல் விரைத்தது போல் இருந்தது.இந்நேரமெல்லாம் ஊட்டி அடங்கி விடும் என்று அவனுக்கு யாரும் சொல்லவில்லை.
பாதை வேறு, மேடாக சென்றதால் வேகமாகவும் நடக்க முடியவில்லை.கால்கள் எடுத்து வைக்க முடியாமல் தடுமாற்றமாக இருந்தது. அந்த பனியிலும் தொண்டை வரண்டு தண்ணீர் தாகம் எடுத்தது.எங்காவது ஒதுங்க நினைத்தாலும் குளிர் அவனை இருக்க விடாமல் விரட்டிக்கொண்டே இருந்தது.
அந்த இருட்டில் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என்று கூட தெரியாமல் சென்று கொண்டிருந்தான். வீதி விளக்குகள் எரியும் இடத்தை தாண்டி விட்டதால் காரிருள் வந்து சூழ்ந்து கொண்டது. எதிரில் என்ன உள்ளது என்பது கூட தொ¢யவில்லை.சேகருக்கு பயம் வந்து தொற்றிக்கொண்டது. பேசாமல் பஸ் நிலையத்திலேயே இருந்திருக்கலாம். நடக்க ஆரம்பித்தது தவறோ என்று நினைக்க ஆரம்பித்து விட்டான்.இந்த குளிரால் இப்படியே பாதையில் மயங்கி விழுந்து விடுவோமோ என தோன்ற ஆரம்பித்து விட்டது.கை விரலகளை முயற்சி செய்து விரித்தான். குளிரால் உடல் விரைத்து போவதை ஏதோ ஒரு திரைப்படத்தில் பார்த்தது இப்பொழுது ஞாபகம் வந்தது. எங்கேயோ பிறந்து எங்கேயோ வந்து மரணிக்க வேண்டுமா என்று நினைத்தான்.
அவனின் நடை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து கொண்டிருந்த போது தூரத்தே நிழலுருவமாய் “வாட்டர் டேங்க்” ஒன்று தொ¢வது போல் தொ¢ய அவன் மனம் கொஞ்சம் விழித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது. பாதி தூரம் வந்துவிட்டோம், கொஞ்சம் முயற்சி செய்வோம் என்று மிகுந்த முயற்சி செய்து நடையை வேகப்படுத்த முயற்சி செய்தான். வெயிலை விட குளிர் எவ்வளவு கொடுமையானது என்பதை அவனது உடல் நடக்க ஒத்துழைக்காத போது புரிந்து கொண்டான். எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டான். எப்படியாவது என்னை கொண்டுபோய் சேர்த்து விடுங்கள், தெய்வங்களே ! வாய்விட்டு வேண்ட வாய் திறக்க முயற்சித்த பொழுது வாய் திறக்கவே முடியவில்லை.
இப்பொழுது “வாட்டர் டேங்க்” அருகில நின்று கொண்டிருந்தான்.வலது இடது என அந்த இருளில் பிரித்து பார்க்க தடுமாறினான். வலது கை இருக்கும் பக்கமென்று முடிவு செய்தவன் கீழே பாதை உள்ளதா என்பதை கணிக்க முடியாமல் தடுமாறினான்.மெல்ல கால்களை நகர்த்தியவாறு நடக்க ஆரம்பித்தான்.அவனுடைய அதிர்ஷ்டம் ஒரு சில வீடுகளில் சின்ன விளக்குகள் எரிவதை பார்த்தவன் வீடுகள் இருப்பது உறுதி ஆனத்ற்கு மகிழ்ச்சி அடைந்தான்.
மீண்டும் பல்லைக்கடித்தவாறு நடக்க ஆரம்பித்தான். எப்பொழுது வேண்டுமானாலும் மயங்கி விழக்கூடிய சூழ்நிலையில் இருந்தான். அப்படி விழுந்தால் ஐந்தே நிமிடத்தில் குளிரில் விரைத்து விடுவோம். அதன் பின் நினைத்தால் கூட எழ் முடியாது என்பது புரிந்தது.இப்பொழுது கால்கள் நடக்கவில்லை மெல்ல நகர்த்திக்கொண்டு சென்றான். கைகள் இரண்டும் அவன் உடலோடு ஒட்டிக்கொண்டன. அவனே நினைத்தாலும் அந்தக்கைகளை தூக்க முடியாது என்பது புரிந்து போயிற்று.
வலது புறம் ஒரு போர்டு இருப்பதை பார்த்தான்.கண் இமைகளில் படிந்துவிட்ட பனிகளினால் இமைகளை துக்க முடியாமல் தலையை முயற்சி செய்து துக்கி பார்க்க “வள்ளுவன் நகர்” சலனப்படமாய் அவன் கண்களுக்கு தென்பட்டது. இன்னும் கொஞ்சம் என்று அவன் மனம் கெஞ்ச ஆரம்பித்தது. வந்துவிட்டோம், வந்துவிட்டோம், மனம் அலை பாய அந்த பனியை மீறி கொஞ்சம் பரபரப்பாய் ஆனது போல் பிரமை வந்தது. மீண்டும் மெல்ல கால்களை நகர்த்த ஆரம்பித்தான். வலது புறம் வீடுகளை எண்ண ஆரம்பித்தான் ஒன்று.. இரண்டு.. மூன்று… நான்கு. இதென்ன பூட்டியிருக்கிறது? அப்படியே உடல் சுருண்டு விழப்போனது. நம்பிக்கையில்லாமல் அருகில் மெல்ல கால்களை நகர்த்தி வீட்டுக்கு அருகில் சென்று பார்த்தான்.
சந்தேமில்லை, வீடு பூட்டி இருந்தது.அந்த கதவின் மீதே அவன் உடல் சாய்ந்தது. இனி அவ்வளவுதான். என்னுடைய கதை இந்த பனியில் முடிந்துவிட்டது. அவன் மனம் எழு எழு விழுந்துவிடாதே, என்று சொல்வது மூளைக்கு சென்றாலும் உடல் தன்னுடைய செயல்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டது போல் இருந்தது.
அந்த வீட்டின் மேல் சாய்ந்திருந்த உடலை மிகுந்த பிரயாசைப்பட்டு நிமிர்த்தி அந்த சுவற்றில் சாய்ந்தவாறே நகர்ந்து அடுத்த வீட்டின் அருகில் சென்று கையை எடுத்து கதவை தட்ட முடியாமல் தன்னுடைய உடலால் மோதினான்.ஐந்து நிமிடம் ஆயிற்று ஒரு சத்தமுமில்லாமல் இருந்தது. இவனிடன் அடுத்த அசைவுகள் தென்படவேயில்லை.
அந்த வீட்டு கதவு திறந்தது. இவன் உடல் “தடால் என” கீழே விழுந்தது.
திடீரென உடல் சூடு தாங்காமல் விழிப்பு வர கண்ணை திறந்து பார்த்தவன் அருகில் நெருப்பு கங்குகளின் சிவப்பு நிறம் தெரிந்தது.அந்த கங்குகளின் சூடுதான் தன் உடம்பின் சூட்டுக்கு காரணம் என புரிய மெல்ல தன் உடலை எழுப்பி பார்த்தான்.
சற்று தொலைவில் நான்கைந்து ஆட்கள் கம்பளியை போர்த்திக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதை பார்த்தான். மெல்ல கணைத்தான். சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்தவர்கள் இவன் குரல் கேட்டு மெல்ல திரும்பி பார்த்து என்னப்பா எழுந்திட்டயா? என்று கேட்க இவன் பதில் சொல்ல முடியாமல் தலையாட்டினான்.
அவர்கள் உள்ளே பார்த்து படுக மொழியில் ஏதோ சொல்ல ஒரு பெண் ஒரு குடுவை போன்ற ஒரு தட்டை கொண்டு வந்து கொடுத்தாள்.அதில் ஆவி பறக்க கலவை சாதம் இருந்தது. வெகு வேகமாய் அதை வாங்கியவன் யாரேனும் பிடுங்கிக்கொள்வார்களோ என்று பயப்படுவது போல் வேக வேகமாக சாப்பிட்டான்.
மறு நாள் அவனை காப்பாற்றியவர்கள் உதவியுடன் தேடி வந்த இடத்தை கண்டு பிடித்து, பயிற்சியில் சேர்ந்தவன், மலைப்பகுதிகளில் எத்தகைய இடர்ப்பாடுகள் வரும் என அங்கு கற்றுக்கொண்டதை விட அனுபவத்தில் தான் கற்றுக்கொண்டதே அதிகம் என நினைத்தான்.