(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5
மனதிற்குள் ஒரு முடிவுக்கு வந்த தமிழரசி.
“முகிலா! நான் உன் பொண்டாட்டியை உன்னைக் கவனிச்சிக்கன்னு மட்டும்தான் சொன்னேன்ப்பா… இனிமே அதைக்கூட பேசமாட்டேன்” என்று கூறிவிட்டுத் திரும்பிக் கொண்டார்.

ஒரு பெருமூச்சுடன் தோளைக் குலுக்கிக் கொண்டு வெளியே வந்தவன். டைனிங் டேபிளில் இருந்த டிபனை சாப்பிட்டுவிட்டு, மாடிக்கு வந்தான்.
மிருணாளினி, ஜன்னலருகில் நின்று தூரத்தே தெரிந்த திராட்சைத் தோட்டத்தையும், புகை படிந்த ஓவியமாய் நீண்டிருந்த மலைத் தொடர்களையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மிருணி நமக்குன்று விருப்பங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனா ஒரு குடும்பத்துக்கு வந்தப்புறம் சில பிடிக்காத விஷயங்களையும் சகிச்சுக்கப் பழகிக்கணும்” ஆழமாக வந்தது அவன் குரல்.
கோபமும் வேதனையுமாக அவள் நிமிர்ந்தபோது “நான் கிளம்பறேன்! மத்தியானம் லஞ்சுக்கு வந்துடுவேன்.:” – என்றபடி அவன் கிளம்பினான்.
வாசலுக்குச் சென்று அவனை வழியனுப்பவில்லை என்றால் அதற்கு வேறு மாமியார் கோபப்படுவாரோ என்று தோன்ற, இறுகிய முகத்துடன் அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவன் கிளம்பிச் சென்ற பிறகு, கீழே எந்த வேலையு மின்றி அமர்ந்திருக்கவும் மனம் ஒப்பவில்லை.
முகிலன் புத்தகங்களைப் பற்றிக் கூறியது ஞாபகம் வந்தது.
மாடிக்குச் சென்று ஆவலுடன் அந்த அலமாரியைத் திறந்த போது அங்கு வரிசையாக நிறைய புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன.
விவேகானந்தர், மகாத்மா காந்தி, ராமகிருஷ்ண பரம ஹம்சர், புத்தர், அப்துல்கலாம். கார்ல்மார்க்ஸ், அரவிந்தர் என்று உயர்ந்த சிந்தனையாளர்களின் பல புத்தகங்கள், அங்கு கம்பீரமாய் அணிவகுத்திருந்தன.
அந்த நிமிடம் அவளுக்குள் பெரும் வியப்பும் ஆச்சர்யமும் கை கோர்த்தன.
இவ்வளவு உயர்ந்த சிந்தனையாளனாகத் தான் அவனை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது புரிந்தது.
அந்த நிமிடம், உருவத்துக்கும் உணர்வுகளுக்கும் சம்பந்தமில்லை என்றும் தோன்றியது.
ஏனோ அவன் மேல் முதன் முதலாக ஒருவித மதிப்பும் மரியாதையும் எழுந்தன.
மதியச் சாப்பாட்டிற்கு அவன் வந்த போது, அவள் மாடியறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். கீழே சில உறவுக்காரர்கள் வந்திருந்தனர்.
“என்ன அண்ணி! நாங்க கல்யாணத்துக்கு வரலைன்னு கோபத்துல உங்க புது மருமகளைக் கண்ணிலேயே காட்ட மாட்டேங்கறீங்களா?”
உறவுப் பெண் ஒருவர் கிண்டல் செய்து கொண்டிருந்தார். அப்போது உள்ளே வந்த முகிலனைக் கண்டதும், “உன் பொண்டாட்டியைப் பாத்துட்டுப் போகலாம்னு வந்தோம்ப்பா” மெதுவாகக் கூறினார்.
”அம்மா… மிருணா எங்கே?”
அவன் கேட்க, ”மாடியிலதான் இருப்பா. போய் வரச் சொல்லுப்பா” என்றார் தமிழரசி.
திடீரென்று அறைக்குள் வந்தவனைக் கண்டதும், பதறிப் போய் எழுந்தவளின் மடியிலிருந்த புத்தகம் தவறிக் கீழே விழுந்தது.
மெதுவாகக் குனிந்து அதை எடுத்தவன், “புத்தரின் மொழிகளா? ரொம்ப அற்புதமா இருக்கும்… படிச்சிட்டியா?”
“ம்..” தலைகுனிந்தபடியே முணுமுணுத்தாள் அவள்.
“கீழே நம்ம சொந்தக்காரங்க சிலர் வந்திருக்காங்க….. அம்மா உள்னை வரச் சொன்னாங்க! நீ முன்னாடி போ…. நான் முகம் கழுவிட்டு வரேன்” என்றான்.
“நான் போகமாட்டேன், உங்கம்மா என்னை அவங்க எல்லாருக்கும் எதிரிலேயும், ஏதாவது மட்டமா பேசுவாங்க. என்னால் தாங்கிக்க முடியாது” வீம்புடன் கூறினாள் அவள்.
“ம்… இப்பத்தான் புத்தரின் மொழிகள் படிச்சே! ‘உணர்வுகளை ஆட்சி செய்… இல்லையெனில் அது உன்னை ஆட்சி செய்யும்! தீவிர உணர்ச்சி போன்ற அழிக்கும் நெருப்பு வேறெதுவுமில்லை’. அப்படின்னு படிச்சிருப்பியே?” மெதுவாகக் கேட்டான்.
அவள் அசையாமல் நிற்பதைக் கண்டதும். “ஓகே! இங்கேயே இரு….ஆனா நான் வந்து உன்னைத் தூக்கிட்டுப் போக வேண்டி இருக்கும். எது பெட்டர்? நீயே போறியா… இல்லை?” கண்ணோரங்கள் சுருங்க அவன் குறும்புடன் கேட்க, மறுநிமிடம் மிருணாவின் நெஞ்சம் விதிர்த்துப் போனது.
பதிலேதும் சொல்லாமல் திரும்பிக் கீழே சென்றாள்.
திருமணத்திற்கு வராத அந்தப் பெண்கள், கோவில் சிலையே உயிர்பெற்று வந்ததைப் போல் நடந்து வந்தவளைக் கண்டு, பிரமித்துப் போயினர்.
அவர்கள், அவளை அருகில் அமர்த்தி கேள்விக் கணைகளைத் தொடுக்க, வெட்கம் என்ற பெயரில் தலைகுனிந்து சமாளித்துக் கொண்டிருந்தாள் அவள்.
திடீரென்று, “என்ன? என் பொண்டாட்டிய சுத்தி உக்காந்து ராகிங் பண்றீங்களா?” கிண்டலாகக் கேட்டுக் கொண்டே வந்து, அவளருகில் இயல்பாக அமர்ந்தான் முகிலன்.
“உன் பொண்டாட்டி என்ன… தங்கச்சிலை மாதிரியில்லை இருக்கா… இத்தனை அழகை நான் பாத்ததே இல்லை போ!” என்றார் ஒரு வயதான பாட்டி.
“அப்பத்தா! அவ என்னோட தேர்வாச்சே.. அப்படித்தான் இருப்பா! நான் என்ன. உங்க வீட்டுத் தாத்தா மாதிரியா செலக்ட் பண்ணுவேன்.”
கிண்டலாகக் கூறிவிட்டு, அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினாள் முகிலன்.
தர்ம சங்கடத்துடன் அவள் தலைகுனிந்து கொள்ள கிண்டலும் கேலியுமாகப் பொழுது சென்றது.
சாப்பிட்டுவிட்டு அனைவரும் விடைபெற்றுச் சென்றதும், மாடிக்குச் சென்றாள் மிருணா.
அவளைப் பின்தொடர்ந்து வந்த முகிலன், “தேங்க்ஸ்!” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.
”எதுக்கு…?”
மெல்லிய குரலில் அவள் கேட்டபோது, “என் வார்த்தைக்கு மதிப்புக் குடுத்துக் கீழே வந்ததுக்கு” என்றபடி கட்டிலில் படுத்துக் கொண்டான்.
தன்னை தூக்கிச் செல்வதாக மிரட்டிவிட்டு, இப்போது என்ன நன்றி சொல்வது என்று தோன்றும் போதே. முகிலனின் குரல் தொடர்ந்தது.
“நீ ஏன் இன்னிக்கு சரியாவே சாப்பிடலை… அசைவ சமையல் உனக்குப் பிடிக்காதா?” அவனிடம், மிருணாவைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம்!
“ம்… எனக்கு நான்-வெஜ் பிடிக்காது!” என்றாள்.
“உனக்குப் பிடிக்கலைன்னா, நானும் இனிமே சாப்பிடலை! கொஞ்சம் கொஞ்சமா விட முயற்சி பண்றேன்” என்றான்.
பதறிப்போய் எழுந்தவள், “வேண்டாம்… நீங்க சாப்பிடுங்க.எனக்காக நீங்க எதையுமே மாத்திக்க வேண்டாம்” என்றாள் வேகமாக.
“ஓ! ‘அதே மாதிரி உங்களுக்காகவும் நான் எதையுமே மாத்திக்க மாட்டேன்’னு சொல்லாம சொல்றே… அப்படித் தானே?”
“அப்படி இல்லை!” முனுமுணுத்துவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டவளையே சிறிது நேரம் பார்வையால் இதமாகக் கோதியவன், பிறகு மெல்லக் கண்ணயர்ந்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் ஏதோ சப்தம் கேட்டு அவள் கண் விழித்தபோது, தூய வெள்ளை வேட்டி சட்டையணிந்து முகிலன் வெளியில் கிளம்பத் தயாராக நின்றிருந்தான். புரியாமல் விழித்தவளிடம், “நீ படுத்துக்கோ! நான் எப்பவுமே மத்தியானத்துல சாப்பிட்டப்புறம் ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு மூணு மணிக்கு வயலுக்குக் கிளம்பிடுவேன். திரும்பவும் ஆறு மணிக்குத்தான் வருவேன்” என்று கிளம்பினான்.
இரவில் சரியாக உறங்க முடியாமல், அவனருகில் படுத்து வெகு நேரம் விழித்திருப்பதால். அவள் இமைகளை உறக்கம் கொஞ்சித் தழுவியது.
பிறகு, விழித்து எழுந்தபோது மணி ஐந்தாகி இருந்தது. பதறி எழுந்து முகம் கழுவி வேறு புடவையணிந்து தயாராகிக் கீழே வந்தாள். சமையல்காரம்மா காபியும் டிபனும் தர – அவள் மட்டும் அநாதையாய் தனித்து விடப்பட்ட உணர்வு!
மாமனார் வெளியில் சென்றிருக்க, மாமியாரோ எல்லாவற்றையும் மேற்பார்வை செய்தபடி வீட்டைச் சுற்றி வர, தான் என்ன செய்வதென்று யோசித்தாள்.
காதல் கொண்டு மணந்திருந்தால், ஒருவேளை இனிய தவிப்புடன் இதயம் படபடக்க முகிலனுக்காகக் காத்திருந்திருக்கலாம்.
மெதுவாக நடந்து தோட்டத்திற்குச் சென்றபோது, அங்கு பரவித் தெரிந்த பசுமையும் மலர்களும் மனதை லேசாக்கின. அப்போது படபடவென்ற புல்லட்டின் ஓசை, அவள் கவனத்தைக் கலைத்துத் திரும்பச் செய்தது.
புல்லட்டை லாவகமாக ஓட்டியபடி கம்பீரமாக வந்து கொண்டிருந்த முகிலனின் உருவம், முதன் முதலாய் அவளுக்குள் ஆழமாகப் பதிந்தது.
அவனிடமிருந்து பார்வையை விலக்காமல் சிலையாய் நின்றிருந்தவளினருகில் வந்தவன், “என்னடா… நம்ம தோட்டத்துல புதுசா ஒரு பூப் பூத்திருக்கு…! பூக்களிலே சிறந்தது ‘டக்விட்’ மலர்னு படிச்ச ஞாபகமாச்சே. ஒரு வேளை அதுதானோன்னு பாக்க வந்தேன்” என்றான் விழிகள் மின்ன.
அதுவரை உணர்ந்த தனிமையும் பாதுகாப்பின்மையும் திடீரென்று விலகி, மனதை நிறைத்தன.
“ஊஹூம்… பாவம் இது ஒரு ஏழை வீட்டுப் பூ” என்றாள் அவளும் உடனே.
“ம்… ம்… பாக்க அப்படித் தெரியலையே! பக்கத்து வந்தாலே அனலாத் தகிக்குது. ஒருவேளை ‘நெருப் பூவோ.?” கிண்டலாகக் கேட்டான்.
ஒரு கணம் கோபமாகக் கண்களை இறுக மூடித் திறந்தவள்,
வேகமாக உள்ளே சென்று விட்டாள்.
முதலில் மருமகள் கோபமான முகத்துடன் உள்ளே வருவதையும், தொடர்ந்து வந்த மகனுடைய முகத்தில் யோசனையையும் கண்ட தமிழரசி, “என்னய்யா… டிபன் காபி நான் எடுத்துட்டு வரவா? இல்லை…” என்று நிறுத்தினார்.
அவருடைய பேச்சின் உட்பொருளைப் புரிந்து கொண்டாள் மிருணா,
“நான் எடுத்துட்டு வந்து தரேன்!” என்றபடி வேகமாக சமையலறைக்குச் சென்று எடுத்து வந்து அவனிடம் கொடுத்து விட்டு, மாடிக்குச் சென்றாள்.
அன்றிரவு சிவராத்திரியாய் சென்றது.
மறுநாள் காலையில் வெளியில் சென்றுவிட்டு வரும் போதே. அவளுடைய முதுகலை பட்டப் படிப்பிற்கான கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் அப்ளிகேஷனையும், சில புத்தகங்களையும் வாங்கி வந்து அவளிடம் கொடுத்தான், முகிலன்.
மனதில் நன்றியுணர்ச்சி ஊற்றெடுக்க, “ரொம்ப தேங்க்ஸ்.. நான் சொன்னதை மறக்காம ஞாபகம் வச்சிருந்ததுக்கு!” மகிழ்ச்சியுடன் கூறினாள் மிருணா,
“நான் எதையுமே சுலபத்தில மறக்க மாட்டேன். மனசில பதிஞ்சதை அழிக்கவும் மாட்டேன்”
அவன் குரலில் புதிராய் ஏதோ செய்தி!
உடனே அப்ளிகேஷனைப் பூர்த்தி செய்து அவனிடம் கொடுத்து விட்டு ஆவலுடன் புத்தகங்களை எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது, அவன் குரல் இடைமறித்தது.
“கல்யாணம் ஆன புதுசிலே, பொதுவா எல்லாத் தம்பதிகளும் படிக்கற பாடமோ வேறயா இருக்கும். நம்மளோடது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு… இல்லை?”
குறுகுறுத்த விழிகளுடன் அவன் கேட்க, மிரட்சியுடன் நிமிர்ந்தாள் மிருணா.
ஆனால், அந்தக் கண்களில் தெரிந்த குறுஞ்சிரிப்பு. அவன் பேசியது இதமான கேலி என்பதை அவளுக்கு உணர்த்தியது.
– தொடரும்…