கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2023
பார்வையிட்டோர்: 7,333 
 
 

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16

அத்தியாயம்-13

நீ இவ்வளவு காலம்
எங்கிருந்தாய்?
உன் வருகையால்
இன்பச் சிகரத்தை
கையால் எட்டித் தொடுகிறேன்-
என்றாலும்
இவ்வளவு காலமும்
உன்னைக் காணாமல்
வீணாகப் போய்விட்டதே
என்று எண்ணிக்
கவலைப் பள்ளத்தில் கால் வழுக்கி
விழவும் செய்கிறேன்.
-மீரா: “கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்”

ராஜீவ் மேலும் தனது சொந்தக் கதையைத் தொடர்ந்தாள். ”அப்படியே கிட்டத் தட்ட ஒரு வருஷம் எங்கள் வாழ்க்கை நீடித்தது. நான் துளியும் நிம்மதி இல்லாமல் இருப்பதை, எங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷமே இல்லாமல் இருப்பதை, என்னுடைய அப்பா அம்மாவுக்கு நான் தெரியப்படுத்தவேயில்லை, அவங்க மனசை நோக வைக்க நான் விரும்பவில்லை. ஏற்கனவே என் அண்ணன் அப்படி நடந்துக் கிட்டதாலே மனம் நொந்து போயிருந்தாங்க. ஏதோ இளைய மகனான நானாவது ஒழுங்கா அவங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியாக் குடித்தனம் நடத்தறதாக அவங்க நம்பினதாலே, அவங்க மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருந்தது. அவங்க மனச் சாந்தியைக் கெடுக்க நான் இஷ்டப்படலே. அப்பா அம்மாவுக்கு முன்னாலே சந்தோஷமா வாழ்க்கை நடத்துதற மாதிரியே நடிப்பேன்.”

ராஜீவுடைய தாய் தந்தை, கமலாவுடைய தகப்பனார், மூவரும் சேர்ந்து புனித க்ஷேத்திரங்களுக்குத் தீர்த்த யாத்திரை போக வேண்டுமென முடிவு செய்து ஒன்றாகக் கிளம்பினார்கள். அருப்புக் கோட்டையிலிருந்து மதுரைக்குப் போகும் வழியில், அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த பஸ் ஒரு பயங்கர விபத்துக்கு உள்ளாயிற்று. பஸ் தலை கீழாகக் கவிழ்ந்து பற்றி எரியத் தொடங்கியது. உதவி வந்து சேருவதற்குள் அதில் பயணம் செய்த அத்தனை பேரும் மாண்டு விட்டிருந்தார்கள். அந்த விபத்திலிருந்து ஒருவர் கூட மீளவில்லை, ராஜீவுடைய பெற்றோர், கமலாவின் தகப்பனர், மூவரும். அதே விபத்தில் இறந்து போனர்கள்.

“எனக்கு அந்தச் செய்தி பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்பாவைப் பறி கொடுத்துட்டாளேன்னு கமலா கிட்டே இன்னும். கொஞ்சம் பரிவோடு நடந்துக்க முயற்சி பண்ணினேன். ஆனால் பெத்த தகப்பனார் போயிட்டாரேங்குற வருத்தம் துளியும் அவளுக்கு இருந்ததாகத் தெரியலை. எங்க அப்பா அம்மா அசம்பாவிதமா இறந்துபோயிட்டதை நினைச்சு நான்தான் கண்ணீர் சிந்தினேனேயொழிய கமலாவோட கண்கள்லே சொட்டுக் கண்ணீரைக் கூட நான் பார்க்கலை. அப்போ கூட, அவ தந்தை மேலே அவளுக்கிருந்த துவேஷம் குறையலை. செத்துப்போன பிறகு கூட அவளாலே அவரை மன்னிக்க முடியலை. ரியல்லி, உஷா, ஷீ வாஸ் ஏன் அன்னேச்சுரல் வுமன்! கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாத உள்ளம். அப்படி ஒரு பெண்ணை நான் வேறே எங்கேயும் பார்த்ததில்லை. சில சமயங்கள்ளே அவள் உண்மையா பெண்தானாங்குற சந்தேகம் கூட எனக்குத் தோணும். சாதாரணமாக எந்தப் பெண்ணாலேயும் அவ்வளவு கடினமா இருக்க முடியாது” என்றான் ராஜீவ்.

திடீரென்று ராஜீவ் அவள் முகத்தைத் தன் இரு கரங்களின் நடுவே எடுத்துக் கொண்டு, உணர்ச்சி ததும்பும் பார்வையோடு அவள் சுண்களுக்குள் உற்றுப் பார்த்தான், “உஷா! இத்தனை காலமா நீ எங்கே இருந்தே? அப்போவே நீ என்கிட்டே வந்திருக்கக் கூடாதா?'”

உஷா மெல்லச் சிரித்தாள். “அப்போ நான் பிறந்தே இருந்திருக்க மாட்டேனே ராஜீவ்!”

ராஜீவும் சிரித்தான். ஆனால், அந்தர் சிரிப்புக்குப் பின்னால் சோகம் ஒலித்தது.

உஷா அவன் கன்னத்தை அன்பாக வருடி விட்டாள். அவன் கண்கள் மீது ஆறுதல் கூறும் வகையில் முத்தமிட்டாள், “ராஜீவ், டோன்ட் லுக் ஸோ ஸேட். இப்பத்தான் நான் உங்ககிட்டே வந்துட்டேனே. உங்க கூடவே இருக்கேனே.”

அவளை நெஞ்சோடு இறுகத் தழுவிக் கொண்டான். “யெஸ், டார்லிங். யெஸ்! இப்ப நீ எனக்குக் கிடைச்சிருக்கே! சொல்லில் அடங்காத அன்பையும். சந்தோஷத்தையும் எனக்குக் கொடுத்துக்கிட்டு இருக்கே. இருந்தாலும், நீ இல்லாமே என் வாழ்க்கையிலே எத்தனை வருஷங்கள் வீணாகிப் போயிட்டதுன்னு நினைக்கிறப்போ, வருத்தமாகத்தான் இருக்கு உஷா,”

“வருத்தப்படாதீங் டார்லிங். உங்களை விட்டுப் போகவே மாட்டேன்,”

“நான் மட்டும் உன்னைப் போக விடுவேனா என்ன?”

உஷா அவன் அணைப்பிலிருந்து விடுபட்டுப் பின்னுக்குச் சாய்ந்தாள். “அப்புறம் என்ன ஆச்சு? உங்க டைவோர்ஸைப் பத்தி இன்னும் சொல்லலையே?” என்றான்.

ராஜீவ் மேலும் சொல்லத் தொடங்கினான். கமலாவும் அவனும் தங்கியிருந்த அதே அபார்ட்மெண்ட் கட்டிடத்தில், அவர்களுடைய ஃபிளேட்டுக்கு கீழ் ஃபிளோரில், ஓர் இளம் பெண் தங்கியிருந்தாள். அவளுடைய கணவன் ஒரு டிராவலிங் ஸேல்ஸ்மேன், அடிக்கடி நீண்ட இடைவெளிகளுக்கு வெளியூர் போய்விடுவார். அந்தப் பெண்ணுக்குக் குழந்தைகள் இல்லை. எப்போதும் தனியாகவே இருப்பாள். தனிமை அவளை அதிகமாக வாட்டியது. தன் தனிமையைப் போக்கி கொள்ள, துணையாக அவனை எந்த நேரத்திலும் வரவேற்கத் தயாராக இருப்பதை பல முறை. பல வகைகளில் அவனுக்குத் தெரியப்படுத்தினான். ராஜீவ் காலையில் வேலைக்குக் கிளம்பும் போதும் சரி. மாலையில் ஆபீசிலிருந்து வீடு திரும்பும் போதும் சரி, தற்செயலாக அங்கு வந்தவள் போல் தவறாமல் மாடிப் படிகள் அருகில் நின்று கொண்டிருப்பாள். பேச்சுக் கொடுப்பாள் சிரிப்பாள், பெரு மூச்செறிவாள்.

இதைக் கமலாவும் சுவனித்தாள். இந்தப் பெண்ணைக் குறித்து ஓயாமல் ராஜீவுடன் சச்சரவு செய்ய ஆரம்பித்தாள்.

”உம்! இந்த ஆண்களே இப்படித்தான்! உங்க புத்தி உங்களை விட்டு எங்கே போகும்?” என்பாள்.

”என்ன சொல்றே கமலா?”

*கீழ் வீட்டுப் பெண்ணோட நீங்க கொஞ்சறதையும், குலாவறதையும் நான் கவனிக்கலைன்னு நினைக்கிறீங்களா?”

“நான் ஒண்ணும் அவளே கொஞ்சலை,”

“பொய் சொல்லாதீங்க. தினமும் நீங்க அவகூடப்பேசறதைப் பார்த்துக் கிட்டுத்தான் இருக்கேன்.”

”கமலா! அவ வேணும்னு வழி மறிச்சுக்கிட்டு நிக்க. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? மரியாதைக்கு ஏதாவது உடனே ரெண்டு வார்த்தைகள் பேசிட்டு போயிடறேன். சாயங்காலம் நேரா வீட்டுக்குத்தான் வறேன். உன் கூடவே இருக்கேன். ஒரு தரமாவது அவள் வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைச்சிருக்கேனா? இல்லைன்னு உனக்கே தெரியாதா? அப்படியும் என்னைச் சந்தேகப்படறியே?”

உண்மையாகவே ராஜீவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அழகான இளைஞனாகிய அவனைக் கண்டு அவள் ஆசைப்பட்டது என்னவோ உண்மை. இருந்தாலும். அவள் – ஆசைக்கு அவன் இணங்கவில்லை.

உண்மை புரிந்தும், கமலா வேண்டுமென்றே அவனுடன் சண்டை போடுவாள். அவளுக்குத்தான் இல்லற வாழ்க்கை நடத்துவதில் சிறிதளவும் விருப்பமே இருக்கவில்லையே. சச்சரவு செய்ய ஏதாவது காரணம் கிடைக்காதா என்று சதா சர்வ காலமும் காத்துக் கொண்டிருப்பாள், பிடிக்காத கணவனுடன் சண்டை போட அந்தக் கீழ் வீட்டுப் பெண் ஒரு நல்ல காரணத்தை உண்டாக்கிக் கொடுத்து விட்டாள்.

ஓர் இரவு கமலா வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே காரமாகப் பேசிவிட்டாள். ராஜீவுக்கும் அவளுக்கும் இடையே பெரிய தகராறு மூண்டு விட்டது. சண்டைக்குக் காரணம் – அதே பெண்தான். அவளுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டிருப்பதாகக் கமலா அவன் மீது குற்றம் சாட்டினாள்.

”உங்க அப்பா ஒரு காலத்திலே அப்படி கேடு கெட்டு அலைஞ்சாருங்கிறதுக்காக எல்லா ஆண்களுமே அப்படித்தான்னு நினைக்கிறியா?” என்று கத்தினான் ராஜீவ்.

கமலா அத்தோடு அடங்கிவிட்டாள். போய் மௌனமாகப் படுக்கை அறையில் சுவரை விறைத்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து ஆத்திரம் அடங்கவே ராஜீவுக்கு அவள் மேல் அனுதாபம் பிறந்தது. பாவம் கமலா! தாய், தகப்பன், உற்றார், உறவினர் யாருமே இல்லாத இளம் பெண் அவள். அவனைத் தவிர அவளுக்கு வேறு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே சண்டையை மறந்து அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். கமலாவின் கோபம் தணியவில்லை.

கொஞ்சினான், கெஞ்சினான், மன்றாடினான், செய்யாத குற்றத்துக்கு மன்னிப்புக் கேட்டான், ஊஹும்! கமலா பிடிவாதமாக இருந்தாள். ஆசையோடு வந்த அவனைப் புறக்கணித்தாள். கணவனாக அவன் உரிமை கொண்டாட அனுமதிக்க மறுத்தாள்.

எவ்வளவு தூரம் அவன் இதைச் சகித்துக் கொள்வான்? அவர்களுக்குத் திருமணம் நடந்த பிறகு அன்றிரவுதான் முதன் முறையாக ராஜீவ் முழுமையாகப் பொறுமையை இழந்தான். “நீயும் ஒரு பெண்ணா? உன்னேடு எவன் குடும்பம் நடத்த முடியும்? செய்யாத தப்புக்காக என்னை தண்டிக்கிறே! சரி, நான் நிரபராதின்னு நீ நம்பப் போறதில்லை. எப்படியும் நான் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கு, அப்போ உண்மையாகவே அந்தத் தப்பைச் செய்தா என்ன? எப்பவும் வெறுப்போட என்னை ஒதுக்கித் தள்ளற உள்னைவிட, ஆசையோட என்னை வரவேற்கக் காத்திருக்கிற அவள் கிட்டேயே போறேன்” என்று ஆத்திரத்தில் கத்திவிட்டு ராஜீவ் கோபமாக வெளியேறி அன்று இரவு முதன் முறையாக கீழ் வீட்டுக்குச் சென்றான். அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்றாள்.

இரவு முழுவதும் ராஜீவ் கீழ் வீட்டிலேயே தங்கிவிட்டான்.

காலையில் நிதானம் திரும்பியது. ”சே! நான் இப்படி நடந்து கொண்டிருக்சுக்கூடாது” என்று நினைத்தான். பொறுமையை இழந்து அவன் செய்த தவறுக்காக உண்மையாகவே வருந்தினான்.

கமலாவிடம் உடனே மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே மாடிக்குச் சென்றான்.

பெட்டி படுக்கையுடன் கமலா ஊருக்குப் புறப்படத் தயாராக இருந்தாள்.

“கமலா, என்ன இது?”

‘”நான் ஊருக்குப் போறேன். அங்கேயே இருக்கிறதா முடிவு பண்ணிட்டேன். இனி மேல் நான் உங்களோட வாழ விரும்பல்லை” என்றாள்.

ராஜீவ் அதிர்ந்து போனான். ”கமலா! நேத்து ராத்திரி நடந்ததுக்காக நான் உண்மையா வெட்கப்படறேன். என்னை மன்னிச்சுடு கமலா!”

“நீங்க மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. இதுக்கப்புறம் நான் உங்களோடு வாழ் முடியாது.”

”கமலா, நானும் மனுஷன்தானே? தப்பு செய்யாத மனுஷன் யாராவது உலகத்திலே இருக்கானா? என்னை அந்தத் தப்பு செய்யத் தூண்டினதே நீதானே?”

”ஓகோ! ரொம்ப நல்லா இருக்கு! தப்பு செய்தது நீங்க. பழியை என் தலையிலே கட்டப் பார்க்கிறீங்களா?”.

“நோ, நோ! உன் தலையிலே எந்தப் பழியையும் நான் கட்டப் பார்க்கலை, கமலா. கொஞ்சம் பொறுமையா யோசி. நேத்து நடந்த தப்பை மறந்து மன்னிச்சுடு. இனிமே இந்த மாதிரி நடக்காது!” என்று ராஜீவ் கெஞ்சினான்.

“இனிமேல் நான் உங்க கூட வாழ்க்கை நடத்த முடியாது. உங்களோட நான் இனிமே வாழ விரும்பலை!”

ராஜீவுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “அப்படீன்னு எதுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டே?” என்றான் ஆவேசத்துடன்.

வெறுப்பு நிறைந்த கனல் கக்கும் பார்வையைக் கமலா அவன் மீது திருப்பினாள். அவள் விழிகளில் தென்பட்ட தீவிர துவேஷம் ராஜீவை அதிரச் செய்தது. “எதுக்காகக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா கேட்கிறீங்க? அப்பா என்னைக் கட்டாயப்படுத்தினதாலே! எனக்குக் கல்யாணமே வேண்டாம்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அழுதேன், கெஞ்சினேன்! ஆனா அவர் அதைச் சட்டைப்படுத்தவேயில்லை. வலுக்கட்டாயமாக என்னை உங்களுக்குக் கட்டி வைச்சாரு. அதனாலேதான்!” என்றாள் கமலா உரத்த குரலில்.

உண்மையாகவே ராஜீவுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. “கணவன் ஒரு பெண்ணோடு ஒரு இரவைக் கழிக்கிறது எந்த மனைவியாலேயும் சகிக்க முடியாதது தான், ஆனால்,ஒரே ஒரு தரம் கணவன் அப்படி நடந்துக்கிட்டான் என்கிறதுக்காக, அவனை வாழ்நாள் பூராவும் தண்டிக்கிறது சரியா? உலகத்திலே எத்தனை ஆண்கள் அப்படித் தவறு செய்த தவறை ஒத்துக்கிட்டு, மன்னிப்புக் கேட்டுத் திருந்திட்டா, அவங்க மனைவிமார்கள் அதை மன்னிச்சு மறந்துடறதில்லையா? வழக்கமா கணவன் ஊர் சுத்தறவனா இருந்தா, அது வேறே சமாசாரம், பட்,நான் அப்படி இருக்கலையே! அது கமலாவுக்கும் தெரியுமே! கல்யாண பந்தத்திலிருந்து வீடுபட எதாவது சாக்குக் கிடைக்காதான்னு ஏங்கிக்கிட்டு இருந்தா போலிருக்கு. ஒரு நல்ல சாக்குக் கிடைச்சுது. அதை முழுமையாப் பயன்படுத்திக்கிட்டா” என்று எண்ணினான் ராஜீவ்.

கமலா மனம் திருந்தித் திரும்பி வருவாள் என்று எதிர்பார்த்தான், அவள் வரவேயில்லை. அவளுக்கு இரண்டு கடிதங்கள் எழுதினான். அதற்கு அவளிடமிருந்து பதில் எதும் வரவில்லை. ஆபீஸில் லீவ் போட்டு, மொத்தம் நான்கு முறை கிராமத்துக்குப் போனான். ஒரு தடவை கூட கமலா அவனுக்குத் தன் முகத்தைக் காட்டவில்லை. தனது அறைக்குள் சென்று கதவை உள்ளிருந்து தாழ் போட்டுக் கொள்வாள். அவன் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் கதவைத் திறக்க மாட்டாள், ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள், அவன் போகும் வரையில் வெளியே வரமாட்டாள்.

நான்காவது முறை அவன் சென்னைக்குத் திரும்பிய சில நாட்களுக்கெல்லாம் கமலா விடமிருந்து ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. அவனிடமிருந்து விவாகரத்துக் கோரி கோர்ட்டில் விண்ணப்பித்து இருந்தாள் கமலா.


“உஷா, அதுவரைக்கும் தான் பொறுமையா இருந்தேன். ஆனா. எப்போ விவாகரத்து வேணும்னு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாளோ, என் மனசு முழுமையா வெறுத்துப் போச்சு, டு ஹெல் விதி ஹர்னு நினைச்சேன். ஆரம்பத்திலிருந்தே ஒரு நாள் கூட அவளோட நான் சந்தோஷமா இருந்ததில்லை அவளும் என்னைச் சந்தோஷமா இருக்க விட்டதில்லை. சரி, தொலைஞ்சு போகட்டும் சனியன்னு நினைச்சேன். அவ்வளவு தூரத்துக்கு அவ போன பிறகு அதுக்கும் மேலே அவகிட்டே கெஞ்சிக்கிட்டு இருக்க நான் விரும்பலை”

“அப்புறம் என்ன செஞ்சீங்க?” என்று கேட்டாள் உஷா.

“நானும் என் வக்கிலைப் பார்த்தேன். கல்யாணம் நடந்து ஒண்ணரை வருஷங்கள் தான் ஆகியிருக்கு; மூன்று வருஷங்கள் நிரம்பினால் தான் விவாகரத்து செய்ய கோர்ட்டு அனுமதி வழங்கும்னு வக்கில் சொன்னார். எது எப்படி இருந்தாலும் நான் டைவோர்ஸை எதிர்த்து வழக்காட விரும்பலை. ஆகவேண்டியதை நீங்களே கவனியுங்கன்னு வக்கீல் கிட்டே சொல்லிட் டேன். எல்லாம் முடியறதுக்கு இன்னும் ஒன்றரை வருஷங்கள் ஆச்சு. அதுவரைக்கும் வக்கில்கள் மூலமாகத்தான் எங்களுக்குள்ளே தொடர்பு இருந்தது. மறுபடியும் நான் கமலாவைப் பார்க்கவோ, அவகூடப் பேசவோ முயற்சி பண்ணலை. விவாகரத்து தீர்ப்பு அளிக்கப்பட்ட அன்றைக்குக்கூட நான் கோர்ட்டிலே ஆஜர் ஆகலை. ஸோ. ஆக்ச்சுவலா நான் கடைசி முறையா அவளைப் பார்த்தது, அன்னிக்குக் காலையிலே ஊருக்கு போகப் போறேன், உங்களோட வாழ் விரும்பலைன்னு சொன்னாளே – அன்னைக்குத் தான். ஜீவனாம்சம் கூடவேண்டாம்னு சொல்லிட்டா. அவ அப்பா சொத்து அவளுக்கு இருந்தது. எல்லாம் அந்தத் திமிரு தான்”

‘இப்போ எங்கே இருக்காங்க அவங்க?” என்று கேட்டாள் உஷா.

“உண்மையாகவே எனக்குத் தெரியாது உஷா, மறுபடியும் நான் அருப்புக்கோட்டை கிராமம் பக்கமே போகலை. அங்கே இருந்த சொத்துக்களை வித்துட்டு ஊரை விட்டே போயிட்டாள்னு ஒரு நாள் என் வக்கீல் என்கிட்டே சொன்னார். எந்த ஊருக்குப் போனா, எங்கே இருக்கா, இன்னும் உயிரோட இருக்காளா, இல்லையா – எதுவுமே எனக்குத் தெரியாது, என்னைப் பொறுத்த வரைக்கும். அது என் வாழ்க்கையிலே முடிஞ்சு போன அத்தியாயம். திரும்பப் புரட்டிப் பார்க்க விரும்பாத அத்தியாயம். நீ கேட்டதுக்காக இவ்வளவு தூரம் அவளைப் பத்திப் பேசினேன் .இல்லைன்னு, சாதாரணமா நான் அவளைப் பத்தி நினைக்கிறதுகூட இல்லை”.

“அதுக்கப்புறம்தான் நடிப்புத் துறைக்கு வந்தீங்களா?” எனக் கேட்டாள் உஷா.

அத்தியாயம்-14

நீ எனக்குத் தாகவெறி தந்தாய்;
பிறகுநான்-
என் இதயம் வறண்ட தீலமாய்க் கிடந்தது
எனக்குப் புரிந்தது.
-மீரா: ”கனவுகள் + கற்பனைகள், காகிதங்கள்”

“ஆமாம்” என்றான் ராஜீவ். ”ஒரு ஃபிரண்ட் வீட்டிலே ஒரு சினிமா டைரக்டர் என்னைப்பார்த்தாரு. ‘என்னுடைய அடுத்த தயாரிப்பிலே நடிக்கிறியா’ன்னு கேட்டாரு. முதல்லே என்னைக் கேலி செய்யறார்னு நினைச்சேன் பட், ஹி வாஸ் சீரியஸ், நானும் ஒத்துக் கிட்டேன். அதுக்கு அப்புறம், தேர் வாஸ் நோ லுக்கிங் பேக், பெரிய நட்சத்திரம் ஆயிட்டேன்”

“நீங்க சினிமா நடிகரா பிரபலமானதும் உங்க மனைவி நிச்சயம் அதைப் பத்திக் கேள்விப்பட்டிருப்பாங்களே, அதுக்குப் பிறகு எப்போதாவது உங்களைக் கான்டேக்ட் பண்ண முயற்சி செய்தாங்களா?” என்று உஷா கேட்டாள்.

“இல்லை, நாட் ஈவன் ஓன்ஸ், விடு உஷா. இன்னும் ஏன் அவளைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கணும்? ஷீ இஸ் நாட் வர்த ஸோ மச் டிஸ்கஷன். இருந்தாலும் அப்போ நானும் இளைஞன். வாழ்க்கையிலே என்னுடைய முதல் அனுபவமே இவ்வளவு கசப்பாக அமையவே, பெண்கள் இடத்திலே எனக்கும் ஒருவிதமான கசப்பு உணர்வு, ஒரு வெறுப்பு உண்டாயிடுச்சு. வெறுப்புன்னா. அவங்களோட பழகவே கூடாதுங்குற மாதிர் வெறுப்பு இல்லை, பட், பெண்களை சீரியஸா எடுத்துக்கக் கூடாதுன்னு முடிவு செய்தேன். ஒரு பெண் கிட்டே சின்னியரா இருக்கிறது; அவ மேலே உண்மையான அன்பைச் செலுத்தறது: ஒரு பெண்ணிடம் ஆழமான உறவை வளர்த்துக்கறது – இதெல்லாம் கண்மூடித்தனம்; முட்டாள்தனம்; வேஸ்ட் அப்படீன்னு கருத ஆரம்பிச்சேன்.

“உஷா, உன்கிட்டே எதையும் மறைக்காமே சொல்றேன். அதுக்கப்புறம் எத்தனையோ பெண்கள் கூடப் பழகினேன். ஆ னா அவங்களை வெறும் விளையாட்டுப் பொருளாகத்தான் நடத்தினேன். அவங்களும் என்கிட்டேயிருந்து கிடைக்கக் கூடிய லாபத்துக்காக என்னோட பழகினாங்களே தவிர. யாரும் என்னிடம் உண்மையான அன்பைச் செலுத்தவில்லை. எப்படியோ, என் சொந்த வாழ்க்கையைப் பொருத்த வரைக்கும் இப்படியே இருந்திடலாம். கல்யாணம் என்கிற பேச்சுக்கே இனி என் லைஃப்லே இடமில்லைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அன்டில்..” என்று நிறுத்தினான்.

”அன்டில்!” கண்களில் கேள்ளிக் குறியோடு உஷா அவனைப் பார்த்தாள்.

ராஜீல் அவளைத் தன் அருகில் இழுத்துக் கொண் டான். ஓரு கையால் அவன் மெல்லிய தோன்கை வளைத்துத் தன் நெஞ்சோடு இறுக அவளை அனைத்த படி, இன்னொரு கையின் ஆன்காட்டி வீரபை அவள் முக வாய்க் கட்டையின் அடியில் வைத்து. அவள் முகத்தை மெல்லப் பின்னுக்குச் சாய்த்தான், அவள் கண்கள் நேராக அவன் கண்களுக்குள் விழித்தன. அவள் உதடுகளுக்கும் அவன் உதடுகளுக்கும் இடையே சற்றே இடைவெளி இருந்தது. “அன்டில் ஐ மெட் யூ!'” என்றான் ராஜீவ், தாழ்ந்த கரகரத்துப்போன குரலில், “உன்னைச் சந்திச்சதும், என் முடிவை மாத்திக்கிட்டேன் உஷா-“.

ஆனந்தம் தாண்டவம் ஆடும் விழிகளோடு உஷா அவனைப் பார்த்தாள், “ராஜீவ் என்ன சொல்றீங்க? டூ யு மீன்…?”

“யெஸ் உஷா. ஐ வாண்ட்டு மேரி யூ! உன்னை என் மனைவியாக்கிக் கொள்ள விரும்பறேன். உன்னை எனக்கே சொந்தம் ஆக்கிக்கொள்ள விரும்பறேன். உஷா, நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா? உன் கணவன் ஆகிற பெருமையை எனக்குத் தரச் சம்மதிக்கிறியா?”

”ஓ ராஜீவ்! ஓ மை டார்லிங்!” இரு வகுடைய உதடுகளும் சந்தித்து உணர்ச்சி ததும்பும் இணைப்பில் வெகு நேரம் நீடித்தன.

மூச்சு வாங்கியபடியே, “ராஜீவ், இப்ப நீங்க சொன்னீங்களே… உண்மையாத் தான் சொன்னீங்களா… இல்லை… அதை நான் கற்பனை செய்தேனா?” என்று கேட்டாள் உஷா.

“உண்மையாத்தான் சொல்வேன் டார்லிங்! ஐ மென்ட் எல்ரி வாட் அஃப் இட்!”. அவள் கூந்தலில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான் அவன், “உஷா! இனிமே நீ இல்லாமே நான் இல்லே. நீ இல்லாத வாழ்க்கை எனக்குத் தேவையுமில்லை. இல்லைன்னா, இந்தச் சொத்து, சுகம். அந்தஸ்து, பேரு, புகழ் – எதுவுமே எனக்கு வேண்டாம்!”

“ராஜீவ்…!”

“ஆமாம். உஷா சத்தியமாச் சொல்றேன், பகிரங்கமா, வெளிப்படையா, பெருமையோட நீதான் என் மனைவின்னு இந்த உலகத்துக்கு அறிவிக்கணும்னு ஆசைப்படறேன். எப்போதும் நீ என் பக்கத்திலேயே இருக்கணும்னு விரும்பறேன். ஒரு நிமிஷம் கூட உன்னைப் பிரிஞ்சு நான் இருக்க விரும்பலை, எல்லா இடங்களுக்கும், நான் கலந்துக்கிற எல்லாப் பொது நிகழ்ச்சிகளுக்கும், நான் போற எல்லா ஊர்களுக்கும், தைரியமாக, மனைவிங்கிற அந்தஸ்தோட, பரீபூரண் உரிமையோட உன்னையும் என் கூடவே அழைச்சுக்கிட்டுப் போகப் பிரியப்படறேன், போதும் இந்தத் திருட்டுத்தனமான சந்திப்புக்கள்! பயந்து பயந்து நாம் ஏன் இப்படி வாழ வேண்டும்? நாம யாருக்குப் பயப்படணும்; எதுக்காகப் பயப்படனும்? எதுக்கு இன்னும் இந்தத் திருட்டு வாழ்க்கை? நமக்குள்ளே இனி எந்தத் தடையும் இல்லாமே செய்துடறேன். வா! உன்னை இப்பவே, இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கிறேன்! இனி ஒரு நாள் கூட உன்னைப் பிரிஞ்சு நான் இருக்க மாட்டேன், இப்பவே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறேன்!”

உஷாவின் முகம் மாறியது. “ராஜீவ் டார்லிங்… எனக்கும் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னுதான் ஆசையாயிருக்கு. ஆனா….”

ராஜீவின் புருவங்கள் சுருங்கின. “ஆனா என்ன?”

சற்றுத் தயக்கத்துடன் உஷா நிதானமாகப் பதில் சொன்னாள், “ராஜீவ்.. எங்க அம்மாவை நினைக்கும்போது. எனக்குப் பயமாக இருக்கு, இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிஞ்சா, என்ன சொல்வாங்களோ தெரியாது…”

ராஜீவுடைய முகம் தெளிவு அடைந்தது, “அவ்வளவுதானா? நான் என்னவோ ஏதோன்னு பயத்துட்டேன்! கவலைப் படாதே உஷா, நானே நேரிலே உங்க அம்மானவச் சந்திச்சு, விஷயத்தைப் பிட்டு வைச்சு, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முறைப்படி அவங்க அனுமதியைக் கேட்டு வாங்கிடறேன்.”

அத்தனை நம்பிக்கையுடன், உறுதியுடன் அவன் பேசியபோதிலும் உஷாவுக்கு இன்னும் நம்பிக்கை வந்ததாகத் தெரியவில்லை. “இல்லை ராஜீவ், நீங்க நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுலபமான காரியமில்லை. உங்களுக்கு எங்க அம்மாவைப் பத்தித் தெரியாது. அவங்களை அவ்வளவு லேசுலே எதுக்கும் ஒப்ப வைக்க முடியாது. அம்மாவுக்குப் பிடிவாதம் ரொம்ப அதிகம்.”

“எனக்கும் பிடிவாதம் ரொம்ப ரொம்ப அதிகம்!” கோபமாக ராஜீவ் சுருக்கென்று திருப்பிச் சொன்னான். “நான் ஒரு முடிவுக்கு வந்த பிறகு, கடவுளே குறுக்கே வந்தாலும் நான் நினைச்சதைச் சாதிக்காமே விடமாட்டேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதா நான் தீர்மானம் செய்தாச்சு. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டே தீருவேன்! இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தடுக்கவும் விட மாட்டேன். நம்ம கல்யாணத்தை யார் எப்படித் தடுக்கறாங்கன்னு நானும் பார்த்துடறேன்!” கோபத்தில் அவன் உதடுகள் ஒன்றோடு ஒன்று இறுகிப்போய் ஒரு மெல்லிசான கோடுபோல் காட்சி அளித்தன. ”இன்னைக்கே கார்லே ஸ்ரீரங்கத்துக்குப் புறப்படுவோம். உங்க அம்மாவைப் பார்த்து, அவுங்க அனுமதியைப் பெற்று உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்.”

மென்மையாக அவனைப் பார்த்தாள். அருகில் சென்று அவன் கன்னத்தை அன்பாக வருடி விட்டாள். “ராஜீவ், யூ ஆர் நத்திங் பட் எ பிக் பேபி! குழந்தை மாதிரி கோவிச்சுக்காதீங்க. கொஞ்சம் நிதானமா இந்தச் செய்தியை அம்மாவுக்குத் தெரியப்படுத்தலாம்னுதான் சொல்றேன். ஒரே அடியா திடீர்னு அம்மாவுக்கு ஓர் அதிர்ச்சியை உண்டாக்க வேண்டாம்னு நினைக்கிறேன். அதுக்குக் காரணம் இருக்கு” என்றாள்.

ராஜீவ் சமாதானம் அடையவில்லை. “என்ன காரணம்?” என்று கேட்டான், எரிச்சலுடன்.

“ப்ளீஸ் ராஜீவ், கோபப்படாமே நான் சொல்றதைக் கேளுங்க. நான் ரொம்பச் சின்னக் குழந்தையா இருக்கும்போதே. எனக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாலேயே எங்க அப்பா இறந்து போயிட்டார்” என்றாள் உஷா.

“உம். அதனாலே? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் ராஜீவ்.

“இருக்கு, அப்போதிருந்தே அம்மா என்னைச் சுற்றியே அவங்க உலகத்தை அமைச்சுக்கிட்டாங்க. என்னைத் தவிர அம்மாவுக்கு லைஃப்லே வேறே எந்த இன்ட்டரெஸ்டும் கிடையாது. அம்மா எங்க அப்பாவை ரொம்ப ஆழமா நேசிச்சு இருக்கணும்னு நினைக்கிறேன். அதனாலே தானோ என்னவோ அவர் மறைவுக்குப் பிறகு, அம்மா உலகத்தை முழுமையா வெறுத்திட்டாங்க. எப்பவும் வெள்ளைப் புடவைதான் உடுத்துவாங்க, வெளியே எங்கேயும் போக மாட்டாங்க. எனக்குத் தெரிஞ்சு எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லை. வேலைக்காரங்களைத் தவிர வீட்டிலே வேறே யாருமே இல்லை. அம்மாவுக்குப் பேச்சுத் துணைக்கு கூட ஆள் இல்லை. சுருக்கமா சொல்லப்போனா என்னைவிட்டா அம்மாவுக்கு வேறு யாருமே இல்லை, நான் வீடுமுறை நாட்கள்ளே எப்போ ஸ்ரீரங்கத்துக்கு வருவேன்னு ஏக்கத்தோட காத்துக்கிட்டு இருப்பாங்க.”

“எப்படி உன்னை இவ்வளவு தூரம் மெட்ராஸுக்கு அனுப்பச் சம்மதிச்சாங்க?” என்று ராஜீவ் கேட்டான்.

”அதை ஏன் கேட்கிறீங்க அம்மா லேசுலே ஒத்துக்கலை. பள்ளிக்கூடம் வரைக்கும் திருச்சியிலேதான் படிச்சேன். காலேஜ் படிப்புக்கு மெட்ராஸ் வந்தே தீருவேன்னு அடம் பிடிச்சேன். அழுதேன். நாலு நாட்கள் உண்ணா விரதம் இருந்தேன். அப்புறம், பூர்ணிமாவோட அம்மா-அப்பா தைரியம் கொடுக்கவே என்னை இங்கே அனுப்பச் சம்மதிச்சாங்க, பூர்ணிமாவோட அம்மா- அப்பா, அவங்க வீட்டிலேயே நான் தங்கலாம்னு சொன்னாங்க, ஹாஸ்டல்லே இருந்தால் இன்னும் பாதுகாப்பா இருக்கும்னு அம்மாதான் ஹாஸ்டல்லேயே தங்கணும்னு கண்டிஷன் போட்டாங்க. எனக்கும் அம்மாவைத் தனியா விட்டுட்டு வர மனசு என்னவோ போல இருந்தது. நீயும் மெட்ராஸுக்கு வாயேம்மா. அங்கே ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக்கிட்டு என் கூடவே இருக்கலாமேன்னு கேட்டுப் பார்த்தேன், ஆனா, அம்மா ஸ்ரீரங்கத்தை வீட்டு வர மறுத்துட்டாங்க, அம்மா எங்கேயும் போறதில்லை. அவங்க அங்கே தன்னந்தனியா இருக்கிறதை நினைக்கும்போது, மனசுக்குக் கஷ்டமா இருக்கு” என்றாள் உஷா.

ராஜீவ் பரிவோடு உஷாவைப் பார்த்தான். “இப்போது புரியுது.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, இவ்வனவு அன்பா உன்னை வளர்த்த அம்மாவை நிரந்தரமாக விட்டுட வேண்டியிருக்குமேன்னு வருத்தப்படறே இல்லே? அந்தக் கவலையே உனக்கு வேண்டாம். உங்க அம்மா ஏன் அங்கே தனியா இருக்கணும்? நம்ம கல்யாணத்துக்கு அப்புறம், அவங்க இங்கேயே, இந்த வீட்டிலேயே நம்ம கூடலே இருக்கட்டுமே? நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்?” என்றான்.

“அது நடக்காது ராஜீவ், அம்மாவை உங்களுக்குத் தெரியாது. அதனாலேதான் இப்படிப் பேசறீங்க. அம்மா ஒரு ஸ்ட்ரேஞ்ச் டைப். அவங்க மனசை யாராலும் மாத்த முடியாது. நிச்சயமா அவங்க ஸ்ரீரங்கத்தை விட்டு மெட்ராஸுக்கு வர ஒத்துக்கவே மாட்டாங்க. இது உங்களுக்கு வினோதமாப் படலாம். ஆனா, இதுக்கெல்லாம் காரணம் அப்பாவோட இழப்பினாலே ஏற்பட்ட சோகம் இன்னும் அம்மாவுக்குத் தீரலைன்னு நினைக்கிறேன். எனக்கு அப்பா ஞாபகமே இல்லை. அவரைப் பத்தி ஏதாவது கேள்வி கேட்டால் கூட அம்மா பதிலே சொல்ல மாட்டாங்க. அவரைப் பத்தி நினைக்கும்போது, அவரைப் பத்திப் பேசும்போது, அவங்களுக்குத் துக்கம் தாளாதோ என்னவோ, அவரைப் பத்திப் பேச மாட்டாங்க. அவங்க மனசைப் புண்படுத்த வேண்டாம்னு நானும் கேட்கிறதை விட்டுட்டேன்”

ராஜீவ் திடீரென்று முழுமையாகப் பொறுமையை இழந்தான். சடாரென்று எழுந்தான், ஆத்திரத்திதில் ஒரு டீப்பாயை எட்டி உதைத்தான். அது பறந்து சென்று அறையின் மறுகோடியில் போய்ச் சுவரில் மோதிச் சிதறியது, அந்த உதைக்குப் பின்னால் அத்தனை பலமும் கோபமும் இருந்தது. கூண்டில் அடைக்கப் பட்ட சிங்கம் போல அறையைச் சுற்றி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

“டு ஹெல் வித் இட்! உஷா, நீ என் பொறுமையை ரொம்பச் சோதிக்கிறே! அப்புறம் என்னதான் செய்ய உத்தேசம்? இப்படியே இருந்திடலாம்னு சொல்றியா? இந்தத் திருட்டு வாழ்க்கையே உனக்குத் திருப்தியா இருக்கா? என்ன தலையெழுத்து இது? குற்றவாளிகள் மாதிரி, திருடர்கள் மாதிரி, ஊருக்குப் பயத்து, உலகத்துக்குப் பயந்து, காலேஜ் அதிகாரிகளுக்குப் பயந்து-சே! என்ன வாழ்க்கை இது! இந்தப் பாழாப் போன கடிகாரம் வேறே எதிரியாவே என் கண்ணுக்குத் தெரியுது. ‘மணி 5-30 அடிச்சா நீ போயாகணும்! மறுபடியும் அடுத்த வாரம் வரைக்கும் காத்திருக்சணும். ஏன்? இந்தச் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைதான் நமக்குக் கதியா? ஒளிஞ்சுக்கிட்டு, மறைஞ்சுக்கிட்டு என்னைத் திருட்டுத்தனமா நீ இப்படிச் சந்திக்க வரது அவரியம்தான? என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, சகல உரிமையோடு, ரைட் ராயவா மகாராணி மாதிரி நீ இங்கே ராஜாங்கம் நடத்தறதைவிட்டுட்டு – எதுக்கு இந்த ஒளிவு மறைவு?”

உஷா மென்மையோடு அவனைப் பார்த்து முறுவலித்தாள். அவனைப் படுக்கையில் படுக்கச் செய்து, அவன் தலையைத் தன் மடிமீது வைத்துக் கொண்டாள். மிருதுவான தனது விரல்களால் அவன் அடர்த்தியான தலைமுடியைக் கோதிக் கொடுத்தாள், அந்த இன்பத்தில் தன்னை மறந்தவனாகக் கண்களை மூடிக்கொண்டு, சில நிமிஷங்கள் ராஜீவ் அப்படியே மௌனமாகப் படுத்திருந்தான். என்ன இன்பம்! என்ன சுகம்! எவ்வளவு இனிமையானவள் இந்த உஷா! வேண்டுமென்று பிரயத்தனப்பட்டாலும் ஓரிரு நிமிஷங்களுக்கு மேல் இந்த அன்புத் தேவதையிடம் கோபம் நீடிக்கவில்லையே!

“ராஜீவ்…” என்று மெதுவாக ஆரம்பித்தாள் உஷா. சிறிது நேரம் கழித்து.

“ம்?”

“இந்த வருடம் செகண்ட் செமெஸ்டர் முடியப் போகுது. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளே பரீட்சை நடக்கப் போகுது”

“ம்”

“பரீட்சை எழுதி முடித்ததும் எப்படியும் காலேஜ் மூடுவாங்க. நான் எப்படியும் ஊருக்குப் போகணும். ராஜீவ்… நான் சொல்ல வந்தது… முதல்லே நான் ஊருக்குப் போறேன், நிதானமா நம்ம விஷயத்தை அம்மாவுக்குச் சொல்லி அவுங்களைத் தயார் படுத்தி வைக்கிறேன். திடீர்னு அம்மாவுக்கு ஒரு ஷாக் கொடுகிறதை விட அப்படிச் செய்யறது நல்லதுன்னு நினைக்கிறேன். நான் அம்மா கிட்டே ஜெண்டிலா விஷயத்தைச் சொல்லி வைக்கிறேன். அப்புறம் ஒரு வாரம் கழிச்சு, நீங்க ஸ்ரீரங்கத்துக்கு வந்து அம்மாவோட பேசுங்க. அப்போ எல்லாம் சரியாப் போயிடும். இதைத்தான் சொல்லனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ளே ஆத்திரப்பட்டு சீறி விழுந்தீங்க!”

“ஐ ஆம் ஸாரி ஸ்வீட் ஹார்ட்! ஐ லவ் யூ ஸோ மச்? அதனாலேதான் அப்படி ஆத்திரப் பட்டுட்டேன்!”

“ராஜீவ்… உங்க வாழ்க்கையிலே நான் முதல் பெண்ணாக இருந்திருக்க முடியாது. இடையிலே ஒருத்தியாகவும் நான் இருக்க விரும்பலை. பட் ராஜீவ்.. உங்க வாழ்க்கையிலே கடைசிப் பெண்ணாக நான் இருக்க விரும்பறேன். அதிலேதான் எனக்கு மகிழ்ச்சி பெருமை. திருப்தி – எல்லாமே!”

“உஷா! யு வில் பீ தி லாஸ்ட் கர்ல் இன் மை லைப். யு வில் பீ தி ஒன்லி கர்ல் இன் மை லைஃப் ஹியர் ஆஃப்டர். இது சத்தியம்!”

“தேங்க் யூ டார்லிங், அது போதும் எனக்கு, வேறே எதுவுமே எனக்கு வேண்டாம்!” என்றாள் உஷா.

– தொடரும்

– உறவின் கைதிகள், கல்கி வார இதழில் (22-06-1980 – 26-10-1980) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *