உபதேசம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 8,975 
 
 

நெஞ்சுக்குள் ஏதோ பிசைவது போல மாதுமைக்குத் தோன்றியது.இன்று அவள் தன்னந்தனியாக டாக்டரை பார்க்கப்போகிறாள்.அதுவும் சுவிசுக்கு வந்து மூன்று வருடம் கடந்த நிலையில் தன்னந்தனியாக தனது கணவனாகிய செல்வம் இல்லாமல் …….

அடிவயிற்றில் புளியை கரைத்தது போல ஏதோ பயமாகவே இருந்தது.பல முறை டாய்லட்டுக்குள் போய் வந்து விட்டாள்.இன்று காலை பத்துமணிக்கு டாக்டரை பார்க்க வேண்டும்.ஆனால் காலை ஆறு மணியிலிருந்தே பரபரப்பாக அங்கும் இங்கும் நடந்து விட்டாள்.சீ…என்ன சிறுபிள்ளைத்தனம்!

ஈழத்தில் தனியாக எல்லா இடமும் போகவில்லையா? இல்லை படிக்கத்தான் இல்லையா ?தனது ஊரான திருகோணமலையில் இருந்து கண்டி வரை எத்தனை தடவை பேருந்தில் தனியாக பல்கலைக்கழகம் சென்று இருப்பாள் .அத்தனை ஆமிப்பிரச்சனையிலும் வராத பயம் இன்று மட்டும் அதுவும் இந்த நாட்டில்…

நியாயமான கேள்வி தான்! ஆனால் பதில் சொல்லும் நிலையில் மட்டும் மாதுமை இல்லை.வீட்டின் கதவை பலமுறை பூட்டித் திறந்து பார்த்தாள். இன்னும் ஒருபடி மேலே போய் கதவை ஆட்டிப்பார்த்தாள்.எல்லாம் சரியாக இருப்பது போல திருப்தி ஏற்படவே வீதியை நோக்கி நடந்தாள் மாதுமை.மார்கழிமாதக் குளிர் காதுகளை கிழித்துக் கொண்டு உடலுக்குள் ஊடுருவியது.வழுக்கு நிலத்தைப் பார்த்து பார்த்து மெல்ல மெல்ல நடந்து பேருந்து தரிப்பிடத்தை வந்தடைந்தாள் மாதுமை.அடக் கடவுளே ஒரு மணி நேரம் அவளது பேருந்துக்காக காத்திருக்க வேண்டும்.ஏனெனில் இவளது பேருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையே இந்த தரிப்பிடத்தை கடந்து செல்லும்.இவளுக்கும் தெரிந்ததே….ஆனால் பேருந்தை தவற விட்டுவிடுவேனோ என்ற பயத்தின் காரணமாக காலை எட்டு மணிக்கே பேருந்து தரிப்பிடத்துக்கு வந்து விட்டாள்.இந்தக் கடுங் குளிரில் ஒரு மணி நேரம் காய வேண்டும் என அழுத்துக் கொண்ட மாதுமை தனது அறியாமைக்கு வெட்கப்படாது அநியாயத்துக்கு செல்வத்தை மனதுக்குள் திட்டித்தீர்த்தாள்.

சீ….என்ன மனிதன் எத்தனை தடவை இரவு கேட்டேன்.. ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி லீவு எடுங்க என்று .! இதை காதில் வாங்கினாரா.?
ஏதோ இவர் போய்த்தான் வயோதிபர் மடத்தை திறப்பது போல ..”இப்ப கிறிஸ்துமஸ் நேரம் வேலை அதிகம் இப்ப போய் லீவு எல்லாம் கண்டவாறு எடுக்கமுடியாது .எத்தனை தடவை மனுஷிக்கு டாக்டர்..மனுஷிக்கு அது இது என்று லீவு எடுக்கிறது. என்னுடன் வேலை செய்பவர்கள் எல்லாம் உன் மனுஷிக்கு தனியாக போக முடியாதா ? என்று கேட்கிறார்கள்

என்ன சொல்வது? என் மனுஷி என்னிடம் மட்டுமே வாயால் வங்காளம் போவாள் என்று சொல்ல முடியுமா?நான் என்ன வீட்டுக்குள் அடைச்சா வச்சிருக்கன் ”

என கோபமாக முணு முணுத்துக் கொண்டே தூங்கிப்போனான் சிவம்.இது நேற்று இன்று அல்ல திருமணமான சில மாதங்களை கடந்த நிலையிலிருந்தே தொடர்கின்றது.ஆனால் விடியும் போது டாண் என்று கார்த்திறப்பும் கையுமாக நிற்பான்.நேற்று இரவும் அவனது வழமையான பல்லவியைக் கேட்ட போதும் மாதுமை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.நிம்மதியக தனது வயிற்றில் வளரும் குழந்தையை தடவியவாறு தூங்கி விட்டாள்.

அதிகாலை ஐந்து முப்பது “ஏய் மாது இன்றைக்கு டாக்டர் மறந்திடாதே ..முக்கியமான பரிசோதனை அதிலும் நம் குழந்தைக்கான பரிசோதனை …வெளியில் பனிக்கொட்டுது மெல்ல மெல்ல போய் வந்திடு கண்ணம்மா” என பதிலை எதிர்பாராது தொலைபேசித் தொடர்பை துண்டித்தான் செல்வம்.
இதமாக போர்வையில் சுருண்டு படுத்திருந்த மாதுமைக்கு திடீரென குளிர் ஜூரம் வந்தது போல இருந்தது. ஆனால் திருமணமாகி இரண்டு வருடம் கழிந்த நிலையில் தனது தாய்மையை அடையாளப்படுத்துவதற்காக துளிர்விட்ட தனது மகவை சுமந்த வயிற்றை தன்னையறியாது தடவியவள் “டாக்டரிடம் இன்றைக்கு கட்டாயம் போகவேண்டும் என் செல்லம் எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும்…ஆனால் கடந்த ஆறுமாத காலமாக தன்னுடன் கூட வந்த செல்வம் இன்று தவிர்க்க முடியாத காரணத்தினால் வரமுடியாமல் போனதை அவளது அப்பாவி மனம் உணர மறுத்தது.கோபமும் அழுகையும் முட்டி மோதியது தனது பெற்றோர் மீதே கோபம் வந்தது.”அடிச்சு அடிச்சு சொன்னேன் வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாமென்று கேட்டார்களா? இன்றைக்கு இந்தக் குளிரில் வாயும் வயிறுமாக இருக்கிற பெண்னை ஒரு டாக்டரிடம் அழைத்துச்செல்ல முடியவில்லை அவனுக்கு ”

என ஆதங்கப்பட்டாள் மாதுமை. ஆனால் அவனிடம் மீண்டும் தொடர்பு கொண்டு கெஞ்ச மனமின்றி, ஏனோ தன்னால் மட்டுமே எல்லாம் முடியுமென்ற திமிர்த்தனம். நானும் படிச்சவதான் வேலைக்கு போனவதான் ஆனால் இந்த நாட்டில் வந்துதான் இப்படி முடங்கிக் கிடக்கிறன் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் மாதுமை.

சுவிஸ் நாட்டுக்கு இந்தப் பூம்பனிதான் அழகு !ஆனால் என்னைப்போன்ற தாயகத்தவர் ஓடுவதுக்கும் ஒடுங்குவதுக்கும் இந்த பூம்பனியின் கடுங்குளிர் தான் காரணம்.இரண்டு மடங்கு உடைக்குள் தன்னை மறைத்து இருந்தவளை ஏமாற்றிக்கொண்டு குளிர் காற்று உடலை உணர்ச்சியற்ற ஜடமாக்கிக் கொண்டிருந்தது.பலமுறை தனது உடலை சரிபார்த்தவள் இயல்பாக தான் இல்லை என்பதை உணர்த்திக் கொண்டிருந்தாள்.

தூரத்தில் கொட்டும் பனியில் குழந்தை வண்டில் சகிதம் பெண்னொருத்தி இவளை நோக்கி வருவது தெரிந்தது.தன் தாயை உள்வாங்காது குழந்தைக்கே உரிய துடிப்புடன் இரண்டு சிறுவர்கள் வெண்பனியை பந்துகளாக உருட்டி எறிந்து விளையாடியவாறு துள்ளல் நடையுடன் தாயை முந்திக்கொண்டு ஓடி வந்தனர்.இவளருகில் வந்தவள் தமிழரின் அடையாளமாக வணக்கம் என்றாள்.மூன்று குழந்தைகளுடன் அதுவும் இந்தக் குளிரில் என்ற ..சிந்தையில் சிக்கியிருந்த மாதுமையால் அந்த வணக்கத்தை இயல்பாக உள்வாங்க முடியவில்லை.பதிலுக்கு பதட்டமாக வணக்கம் என்றாள்.ஆனாலும் மூளைக்குள் ஆயிரம் கேள்விகள்! யாவற்றுக்கும் மேலாக நம் இனத்தில் அதுவும் ஒரு பெண்னை சந்தித்தமை மனதுக்குள் மகிழ்ச்சியை அளித்தது.இயல்பாகவே வெளிப்படையாக பேசும் மாதுமைக்கு தன்னுடன் நேசமாக புன்னகைக்கும் பெண்ணுடன் பேசாது இருக்கமுடியவில்லை.எனவே மெதுவாக பேச்சைத் தொடங்கினாள்..இந்தக் குளிரில் மூன்று பிள்ளைகளுடன் பயணம் செய்வது மிகவும் கஷ்டம் என்றாள் இயல்பான கருணையுடன்.அவளது கேள்வியை அசட்டையாக உள்வாங்கியவள் இவளது கேள்விக்கு பதில் கூறாது,என் பெயர் கோமதி என்றாள்.ஓ…சாரி என் பெயர் மாதுமையென கூறி இருவரும் முகம் மலர்ந்து திடீர் நட்புடன் உள்வாங்கிக்கொண்டனர்.கோமதியே தொடர்ந்தாள்..”என்ன செய்வது நாம்வாழும் நாட்டுக்கு ஏற்ப நம்மை மாத்தி வாழ பழகிக்கொள்ளத்தானே வேண்டும்.தினமும் நடு இரவு பன்னிரண்டு ஒரு மணிக்கு வேலைவிட்டு வருகிறவரை விடியற் காலையிலேனும் தூங்க விடவில்லையென்றால் எப்படி அவரால் ரெஸ்டாரண்ட்டுக்கு போய் கத்தியுடனும் அடுப்புடனும் வேலை பார்க்க முடியும்? ஆரம்பத்தில் எனக்கு எல்லாம் கடிணமாகத்தான் இருந்தது.இப்போது பழகிட்டன்.வெள்ளையளைப் பாருங்க எப்படி தனித்து இயங்கிறாங்க நாங்கள் அவர்களிடம் உள்ள நல்லதைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.எங்களை சரியான வழியில் வளப்படுத்தினால் நம் குழந்தைகளையும் தயார்படுத்தலாம்”என ஒரு சொற்பொழிவை நடத்தி முடித்தாள் கோமதி.

ஆனால் சம்மட்டியால் யாரோ தலையில் அடித்தது போல உறைந்து நின்றாள் மாதுமை.ஆனாலும் தனது முகமாற்றத்தை வெளிக்காட்டாது இயல்பாக மீண்டும் பேச்சை தொடர்ந்தாள்..ஊரில் எந்த இடம்?

ஓ … நான் முல்லைத்தீவு இந்தப் பிரச்சனையில் என் வீட்டார் எல்லோரும் இறந்திட்டாங்க.அநாதையாக தூரத்து உறவினர் வீட்டில் தான் வாசித்தேன்.பெரிதாக படிக்கவும் இல்லை.எட்டாம் வகுப்பு வரைதான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஒரு வருடத்தில் மூன்றுமுறை இடப்பெயர்வு ஒழுங்காக பள்ளிக்கும் போகமுடியவில்லை.ஆமிக்கு பயந்திட்டு அப்பா பள்ளிக்கு அனுப்பவில்லை.என்ன செய்வது ? என் அப்பா அம்மா செய்த புண்ணியம் போரில் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளைக்கு வாழ்வு கொடுக்க வேண்டுமென்று இவர் நினைத்திருந்த போது எங்கள் திருமணம் நடந்தது.இங்க வந்தால் எல்லாமே புதுசு.நம் தாயகத்தில் ஊர்விட்டு ஊர் இடம் பெயர்ந்தாலே ஏதோ மாற்று நாட்டுக்குள் போனது போல இருக்கிறது.ஆனால் நாடுவிட்டு நாடு வந்து வாழ்வது என்பது சர்வசாதரணமாக நினைக்க முடியாது.எனவே சமாளிக்க கத்துக்கிட்டேன்.இவரும் இந்த நாட்டு மொழியை படிக்குமாறு வற்புறுத்தினார் மறுக்க வழியின்றி டொச்சு படிக்கச் சென்றேன்.அங்கு சென்றதுக்குப் பிறகுதான் தெரிந்தது இன்னும் எத்தனையோ புலம்பெயர் நாட்டவர்கள் இங்கு வாழ்கிறார்கள் என்று..புதிய ஒரு உறவு உருவாகத் தொடங்கியது.கொஞ்சம் கொஞ்சம் துணிவு வந்தது.இப்போது என்னால் ஓரளவு டொச்சு மொழியில் பேச முடியும் எங்கேயும் தனியாக போக முடியும் என்றாள் மிடுக்குடன்.

புத்தருக்கு ஞானோதயம் வந்தது போல மாதுமைக்கும் இந்த இடத்தில் ஏதோ தோன்றியது.தனது கணவன் எத்தனை தடவை டொச்சுப்படி டொச்சுப்படி என கெஞ்சி இருப்பான் ?ஆனால் எனக்கு அங்கே இங்கே எல்லாம் போகமுடியாது என்று மறுத்தது மட்டுமல்லாது நான் ஆங்கிலத்தில் பேசுவேன் என விடுக்காகவும் பதில் கூறி இருக்கிறாள்.ஆனால் ஒருபுலம்பெயர் நாட்டில் வசிப்பவர்கள் அந்த நாட்டு மொழியில் தேர்ச்சி பெற்றால் சமூகத்தொடர்பை பலப்படுத்துவதுடன் தனிமையைத் துரத்தும் முடியுமென இப்போது மனதார உணர்கிறாள் மாதுமை.

தனக்குள் ஏதோ முடிவு செய்தவளாக தனது கைத்தொலைபேசில் சிரித்துக்கொண்டிருந்த செல்வத்தைப் பார்த்து காதலில் மயங்கினாள் மாது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *