சோழ நாட்டு வீரச்சிறுவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 8,872 
 

சோழநாட்டை குலோத்துங்கன் என்ற மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். இவர்தான் “சுங்கம் தவிர்த்த சோழன்’ என்று வரலாற்றில் பேசப்படும் மன்னர். சோழ மரபிற்கு ஒரே வாரிசு.

குலோத்துங்கன் ஆட்சியில் கல்வியில் சிறந்த புலவர்கள் அரசனை நாடிப் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றனர். அதே போல் வீரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டிப் பரிசுகள் பல பெற்றனர். நாடெங்கிலும் திருவிழாக்கள் கோலாகலமாய் நடந்தன. மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி நடத்தி வந்தார்.

அக்காலத்தில் கடோத்கஜன் என்ற மாளவ நாட்டு மல்லன் ஒருவன் நாடெங்கும் போரிட்டு வெற்றிக்கொடி நாட்டி வந்தான். வட இந்தியாவில் பல மல்லர்களை ஜெயித்த அவன் தென்னகத்திற்கும் விஜயம் செய்தான்.
http://www.tamilvu.org/courses/diplo…mahabharat.jpg

மற்போரில் மட்டுமல்லாமல், வில்வித்தைகளிலும், வாட்போரிலும் வாகை சூடிவந்தான். அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வீரர்கள் நடுநடுங்கினர்.

அவனை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற வீரர்களின் தலைகளை மொட்டை அடித்து அவர்களைத் தன் அடிமைகளாக்கினான். தான் செல்லும் தேசங்கள் தோறும் அவர்களைப் பரிவாரங்களாக அழைத்துச் சென்றான். அதனால் சிறந்த வீரர்களும் கூட அவனை எதிர்க்க அஞ்சினர்.

சோழநாட்டிற்கு வந்த அவன் மன்னன் குலோத்துங்கனைக் கண்டு “”என் சவாலை ஏற்கக் கூடிய வீரர்கள் உம் நாட்டில் உள்ளனரா?” என்று ஆணவத்துடன் கேட்டான்.

மன்னன் பறை முழங்கி வீரர்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்.
சோழநாடு வீரத்தில் என்றும் சோடை போனதில்லை. வீரர்கள் பலர் திரண்டனர். விற்போருக்கும், மற்போருக்கும் நாட்கள் குறிக்கப்பட்டன.
அன்று அரண்மனை மைதானத்தில் மன்னர் முன் ஆயிரக் கணக்கானோர் கூடினர். போட்டி ஆரம்பமாயிற்று.

முதல் நாள் வாட்போர்—
பத்துக்கும் மேற்பட்ட சோழநாட்டு வீரர்கள் கடோத்கஜனிடம் வரிசையாகத் தோற்றனர். அவர்களால் பத்து நிமிடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை.
தோற்ற வீரர்களை கடோத்கஜனின் ஆட்கள் கூடாரத்திற்கு இழுத்துச் சென்று உடனுக்குடன் மொட்டை போட்டு அவமானப்படுத்தி அடிமையாக்கினர்.

மறுநாள் மற்போர்—
சோழநாட்டின் மானத்தைக் காக்க வீரன் ஒருவன் இன்றாவது வருவானா என்று மன்னன் ஏங்கிக் கொண்டிருந்தார்.

கடல் அலையெனத் திரண்டிருந்த கூட்டத்தில் சிங்கமெனக் கர்ஜித்தான் கடோத்கஜன். அவனது திண்ணிய தோள்களும், விம்மிப்புடைத்த மார்பும், வலிமைபொருந்திய கால்களும், தினவெடுத்த கைகளும், அனல்கக்கும் பார்வையும் அனைவரையும் அச்சமுறச் செய்தன.

கோதாவில் நின்று கொக்கரித்த அவனை எதிர்க்க யாரும் முன்வரவில்லை.

“”மன்னா! உம்மிடம் மலைபோல் படையிருந்தும் என்னை எதிர்க்க எந்த மல்லனும் வரவில்லை. பார்த்தீர்களா என பராக்கிரமத்தை?” என்று இறுமாப்புடன் சொன்னான்.

மன்னன் வெட்கித் தலைகுனிந்தான்.

அதே நேரத்தில்—

“”இதோ, நானிருக்கிறேன்,” என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.
அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

பத்து வயது சிறுவன் ஒருவன் திறந்த மார்புடன் வெளியே வந்தான்.

“”ஏய் சிறுவனே, நீயா எனக்கு எதிரி? மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடுவேன். உயிர் பிழைக்க ஓடிவிடு,” எனக் கர்ஜித்தான் கடோத்கஜன்.

என்ன ஆச்சரியம்! கண் சிமிட்டும் நேரத்தில் பறந்து சென்ற சிறுவன், மல்லனின் தோள்களில் அமர்ந்து தன் வலக்கையை நீட்டி அவன் கழுத்தில் மின்னலாய் ஒரு வெட்டு வெட்டினான். அவ்வளவுதான்… கடோத்கஜனின் கழுத்து நரம்பொன்று சுளுக்கி வலப்பக்கம் 45 டிகிரி கோணத்தில் முகம் பின்புறம் திரும்பிக் கொண்டது. அவனது விழிகள் சுழன்றன. கற்சிலையாய் அசைவற்று நின்றான்.

தோள்களிலிருந்து கீழே குதித்த சிறுவன் மல்லனின் இடது காலை வாரி அவனை மண்ணைக் கவ்வச் செய்தான்.

கூட்டம் ஆரவாரித்தது. சிறுவனைத் தலை மேல் துõக்கி வைத்துக் கூத்தாடியது.

யாரிந்தச் சிறுவன்?

உடலின் நரம்புகளின் ஓட்டம் அறிந்து இன்ன நரம்பைத் தட்டினால் இப்படி ஆகும் என்று கூறும் வர்ம சாஸ்திரக் கலை நிபுணர் வரகுணபதியின் மகன் கபிலன் தான் அவன்.

கடோத்கஜினின் மனைவியும், மக்களும் மன்னனிடம் மன்னிப்புக் கேட்க, சிறுவன் கபிலன் கழுத்து நரம்பில் மற்றுமொரு தட்டு தட்டிவிட்டு தலைக்கோணலைச் சரியாக்கினான்.

கடோத்கஜன்வெட்கித்தலைகுனிந்தான். அவனுடைய ஆணவம் அன்றோடு அழிந்தது. தான் அடிமைபடுத்தி இருந்த ஆட்களை எல்லாம் அன்றே விடுதலை செய்து அனுப்பி வைத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *