உன் விழியில் என் கண்ணீர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 3,417 
 
 

“அம்மா! ஓடிவா! முத்துமாமா! வாம்மா!”

***

தனக்கொரு சொர்க்கத்தை
அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்!

அரசனின் மகனல்ல
அம்பிகாபதிஈஈஈஈ
அமர காவியம் பாடினாள்
அமராவதி
இறைவனின் சாலையில் விதித்த விதி
ஈஈஈஈஈஈஈஈ
அரசன் தலையிட்டால் அதுதான் கதி
ஈஈஈஈ
அதுதான் கதி…

பணம் உள்ள இடம் உலகை ஆட்டலாம்
பகுத்தறிவுள்ள உறவும் ஆடுமா
மனமேஏஏஏ …..

நதி செல்லும் வழிதன்னை யார் சொன்னது
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது….

தனக்கொரு சொர்க்கத்தை
அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்…”

பாதி புரிந்தும் புரியாத மொழியில் ஆடி பாடிக் கொண்டிருந்த முத்து பண்டாரத்தைப் பார்த்துதான் குதிக்கிறாள் முல்லை…

***

தென்மலைக்கு வந்து மூன்று வருடங்கள் பறந்து விட்டது…

மலைகளுக்கு நடுவில் தனி வீடு.

ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகவே இருந்தது..

“ஏங்க…எல்லாங்கெடக்க இப்படி ஒரு எடத்துல வேல பார்க்கணுமா.? ராத்திரியானா ஒறக்கமே வரமாட்டேங்குது…ஏதேதோ சத்தம்.. புலி உறுமுறமாதிரி…யான பிளிற்ற சத்தம்!கொழந்த தூக்கத்தில தூக்கிவாரிப் போடுது..”

“கண்ணகி..! சும்மா பொலம்பாத! இது மாதிரி காத்தும் , பச்சையும் டவுன்ல கெடைக்குமா?? ரப்பர் தோட்டத்து சூப்பர்வைசர்னா சும்மாவா?

காட்டு இலாகாவுல புருசனுக்கு வேலைன்னு தெரியாமலா என்ன கட்டிகிட்ட?

கண்ணையும் காதையும் தெறந்து வச்சுகிட்டாத்தானே இதோட அரும புரியும்…”

ஏதோ சொல்லி அவள் வாயை அடைத்து விடுவான் செந்தில்.

திண்டுக்கல் மாங்கரையில் பிறந்து வளர்ந்து தென்மலையில் பொருந்தி வாழ மிகவும் சிரமப்பட்டாள் கண்ணகி.

“எல்லாம் இந்த குட்டிப் பிசாசால்தான் “

முல்லையின் கன்னத்தில் செல்லமாய் தட்டினாள்.

கண்ணகியைப் பெண் பார்க்க வந்த செல்வத்தை பார்த்ததுமே எல்லோருக்கும் பிடித்துப்போனது.

ஆனால் வன இலாகாவில் வேலை என்றதுமே தன்னை மறந்து பலமாக தலையை ஆட்டி ஆட்சேபித்தாள் கண்ணகி.

சிரித்து விட்டான் செல்வம்…

“நான் புலி வேட்டையெல்லாம் ஆட வேண்டாம்.ரப்பர் எஸ்டேட்ல சூப்பர்வைசர் வேலை.நல்ல சம்பளம்.தனி ஆஃபீஸ் குவார்ட்டஸ். வருசம் ஒரு மாசம் சம்பளத்தோட லீவு.”

கண்ணகி சம்மதித்தாளே தவிர அம்மா வீட்டிலேயே தங்கி விட்டாள்.

செல்வமும் வற்புறுத்தவில்லை.

அடிக்கடி வந்து பார்த்தான்.

மூன்று வருஷமானது முல்லை பாப்பா பிறந்து.

“அம்மா..அப்பா தோட்டத்த பாக்கணும்.வாங்க போகலாம்..!”

முல்லை தென்மலையின் அழகில் சொக்கிப் போனாள்.
மரத்திலிருந்து வடியும் ரப்பர் பாலை டின்களில் பிடிப்பதை பார்க்க பார்க்க அவளுக்கு அலுக்கவேயில்லை.

“அப்பா! இந்த மரத்தில மட்டும்தான் பால் வருமா ? பாவம்! அது வெட்டுறாங்கன்னு அழுவுது போல இருக்கு!”

“என் ராசாத்தி குட்டி! எப்படி கண்டுபிடிச்ச ?

அமேசான் காட்டுலதான் முதல் முதல்ல இதக் கண்டு பிடிச்சாங்க..! அங்க வந்த பிரஞ்சுக்காரங்க , பூர்வ குடிகள் இம்மரத்தை “காவுசோவுக்”(கண்ணீர் சிந்தும் மரம்) அப்படின்னு கூப்பிட்டத கேட்டு ஆச்சரியப் பட்டாங்க..!

“‘ரப்பர் ரிட்லி’ ங்கறவர்தான் இந்த மரத்தோட விதைகளை பையில போட்டுகிட்டே ஊர் ஊரா போய் அதை நட்டு பெரிய புரட்சியே பண்ணிட்டாரு.

மலாயாலதான் முதல் முதல் ரப்பர் தோட்டம் உண்டானது….”

“ஏம்பா.. தப்பா எழுதினா அழிக்க நான் வச்சிருக்கேனே ரப்பர்…! இதுலேந்துதான் தயார் செய்யுறாங்களா ?”

“ஆமாண்டா தங்கம்…”

“அப்பா..இனிமே நான் மிஸ்டேக் பண்ணாம கேர்ஃபுல்லா எழுதப்போறேன்..!

“ஏண்டா..?

“அடிக்கடி அழிக்க ரப்பர் யூஸ் பண்ணினா , பாவம் நிறைய மரத்த வெட்டணுமே! “

“சமத்து சக்கரக் கட்டி…”

அடிக்கடி அப்பாவுடன் ரப்பர் எஸ்டேட்டுக்கு போக ஆரம்பித்தாள்..

அப்புறம் என்ன?

முல்லையின் முடிவை ஏற்றுக் கொள்வதைத் தவிர கண்ணகிக்கு வேறு வழியே இல்லை.

அப்போதுதான் ஒரு கூடுதல் ஈர்ப்பும் உண்டானது..

***

காந்தக் குரல்… அலைபாயும் தலைமுடியை அலட்சியமாய் கோதியபடி, கையில் பறையுடன் , நெற்றி , கைகள் மார்பில் வரிவரியாய் திருநீற்றுப் பட்டை , எட்டு திக்கும் ஒலிக்கும் பாடலுடன் பரிச்சயமானான் முத்துப் பண்டாரம்.

இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் மயிர்கூச்செரியும் கண்ணகிக்கு…

***

“இங்கனக்குள்ள வந்து பாருங்க…! யாரு வந்திருங்காங்கன்னிட்டு…?

“ஏம்மா ? இப்பிடியா சொல்லாம கொள்ளாம திடுதிப்புண்டு ??

“இந்த ஆயாவுக்கு எப்பவும் பலகாரந்தான் நெனப்புல இருக்கும்!”

அப்படியே பாட்டியை ஓடி வந்து கட்டிக் கொள்கிறாள் முல்லை..

“உங்க மாப்பிள்ளை சமாச்சாரம் தெரிஞ்ச கதைதானே அம்மா…! தீடீர்னு ‘ஒரு வாரம் லீவு..கிளம்பு ஆத்தா வீட்டுக்குன்னு வண்டிய எடுத்துட்டாரு…!”

“எங்கண்ணு..! செல்லம்..!”

வழித்து வழித்து முத்தமிடுகிறாள் பாட்டி…!

“இந்தப் பிள்ளைய கெளப்ப பட்ட பாடு! தோட்டத்த விட்டு அங்கிட்டு இங்கிட்டு நகந்தாதானே!”

“அம்மா பொய் சொல்லுது ஆயா…! அம்மாவுக்கு கதையே சொல்லத் தெரியல..திரும்ப திரும்ப முயல், ஆமை ன்னு….நீங்க எத்தனை கதை சொல்லுறீங்க…. நான் ஆயாகிட்ட போகவேண்டாம்னு சொல்லுவேனா…?”

“போடி…வாயாடி..”

முல்லை படுப்பது பாட்டி பக்கத்தில்தான்…

கண்ணகிக்கு தனது பாட்டி சின்னத்தாயி நினவு வந்து போனது…..!”

***

சின்னத்தாயி நல்ல நெடுநெடுவென்ற உயரம்.அவர்கள் குடும்பத்தில் இல்லாத ஒரு வித மஞ்சள் நிறம்.தங்கம் போல மினுமினுக்கும் உடல்…

கண்ணகியின் அம்மா செல்லம்மா அவளது ஒரே மகள்…அவளுக்கு பிறந்த மூத்த மகன்தான் ஆறுமுகம்….

இப்போதும் அவன்பேச்செடுத்தாலே செல்லம்மா ஓங்கி ஒரு குரலெடுத்து அழுவாள்..

ஆறுமுகம்…

***

பரம்பரை பரம்பரையாய் ஆண்வாரிசு இல்லாத குடும்பத்தில் பிறந்த ஆறுமுகம் எல்லோருக்கும் செல்லப்பிள்ளையானான்.

சின்னத்தாயி அவனை மடியில் உட்கார வைத்துக் கொண்டேதான் கதை சொல்லுவாள்…

சமையலறையே கதியாய் கிடக்கும் அந்தக்கால பெண்கள் மத்தியில், தெரிந்து வைத்திருக்கும் கதைகள் ஏழுதலைமுறைக்கு சொத்து…

சுற்றிலும் சின்னஞ்சிறுசுகள்..

‘பண்டார பாட்டி’ என்றுதான் ஊரில் பெயர்.

‘குருசாமி கதை’ குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்த ஒன்று.

குருசாமியின் இயற்பெயர் வேலாயுதம்.

மலையாள நாட்டைச் சேர்ந்தவர்.

அவரும் ஒரு பண்டாரமும் சேர்ந்த பல ஊர்களில் பாடல்கள் பாடி மக்களை மகிழ்வித்த கதையை தினம் ஒருமுறையாவது கூறுவாள்.

“ஆண்டிப் பண்டாரம் ‘ என்று குழந்தைகள் கைகொட்டி கேலி செய்தால் அப்படி ஒரு கோபம் பொத்துக் கொண்டு வரும்.

‘பண்டாரம்னா இளக்காரமா செய்யுதீங்க…??பண்டாரம் சாமி சொத்துடா..! அதக் காப்பாத்தறவுங்க அவங்க..வீர சைவமாருங்க….!

முருகனே ஆண்டிப்பண்டாரம்தான்…

தெரிஞ்சுக்குங்க…!

குருசாமி பழனியில் எடுக்காத காவடி இல்ல…மாய மந்திரம் எல்லாம் தெரிஞ்சவரு…

நெற்குப்பைங்கிற ஊருல தங்கி அங்க இருக்கிற சனத்துக்கு குலசாமியா இருந்து முக்தியடைஞ்சவரு..

ஒரு நாளு உங்களையெல்லாம் பழனிக்கு கூட்டிப் போறேன்.! வரீகளா…?”

“கண்டிப்பா வாரோம் ஆத்தா…”

ஆம்.உண்மையாகவே ஒரு நாள் சின்னத்தாயி பழனிக்கு கிளம்பினாள்.இடுப்பில நாலு வயது ஆறுமுகம்..

கூடவே அக்கம்பக்கத்திலிருந்த மூன்று குடும்பங்கள்…பிள்ளை குட்டிகளுடன்…

செல்லமாள் வயிற்றில் கண்ணம்மா ஆறுமாதம்.. வீட்டில் தங்கிவிட்டாள்..

அந்த நாள்..

***

தென்மலைக்கு வந்த புதிது.

அக்கம்பக்கத்தில் வீடுகள் இல்லாதது கொஞ்சம் தனிமையைத்தந்தது.

பயமும் இருந்தது.

ஆனால் சில நாட்களில் கண்ணகிக்கு பழகிவிட்டது.

முல்லை சீக்கிரமே பள்ளியிலிருந்து வந்து விடுவதால் நேரம் போவதே தெரியவில்லை…

கதவு , சன்னல் எல்லாம் திறந்தே இருக்கும்..

ஒருநாள் முல்லை பெரிதாக சத்தம் போட்டுக் கொண்டு அம்மாவை ஓடிவந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“அம்மா..! வெளிய..வெளிய….!”

மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை..

“என்னம்மா..? யாரு…?”

“வாயேன்…வந்து பாரேன்…”

வாசலில் ஒரு உருவம்… முகம் மறைக்கும் அளவுக்கு தலையில் முடி விரிந்து தொங்கியது… உடம்பெல்லாம் திருநீறு….

முப்பத்தைந்து வயது இருக்கும்..நல்ல உயரம்.. தங்கம் போல் மேனி தகதகத்தது.

கையில் ஒரு பறை.அதிலிருந்து சுகமான நாதம்….

“அஞ்சலி பண்ணியே – மாயவன்அருளினால் அடியேன் நினைவினால்
இங்கித மாகவே கிருஷ்ண விலாசம் சங்கீதமே செய்தேன்.
துவாரகா புரிவாசர்..”

அவன் பாடி முடிக்கும்போது கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது.

முல்லையும் கண்ணகியும் மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் மெய்மறந்து நின்றனர்.

“பாப்பா..வாம்மா..!”

இடுப்பில் கட்டியிருந்த பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்தான்.

“இந்தா..பிடி..பயப்படாத.. மலைத்தேன்…”

“இது “தேன்மலை “சுத்தமான மலைத்தேன். அமிர்தம்மா… அமிர்தம்….!”

பதிலுக்குக் கூட காத்திருக்காமல் மாயமாய் மறைந்து போனான் அந்த மாயவன்….

***

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
பழனி தைப்பூசம்..
எங்கும் காவடிகள்…
பண்டாரம் பாடல்கள்..

“எல்லாரும் ஒருத்தரு கையை ஒருத்தர் கெட்டியா பிடிச்சுக்குங்க..விட்டுடாதீங்க..

‘ஏலே! வடிவேலு.. அங்கிட்டு இங்கிட்டு திரியாம அம்மா கைய பிடிச்சுக்குவே..!

“ஆண்டாளு…! குழந்தைங்கள எண்ணிக்குங்க….!”

சின்னத்தாயி வாய் மூடாமல் பேசிக்கொண்டே காவடி ஆட்டத்தைக் கண்டு குதிபோடும் குழந்தைகளை கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு பத்திரமாய் பார்த்தவண்ணம் அலைமோதும் கூட்ட்த்தில் புகுந்து புறப்பட்டாள்..

“பண்டாரமாம் பண்டாரம்…
பழனிமலை பண்டாரம்….
சின்ன சின்ன பண்டாரம்….
சிரித்து மகிழும் பண்டாரம்….
வண்ணமயில் ஏறிவரும்…
வடிவழகு பண்டாரம்……
ஆடிவரும் பண்டாரம்….
அழகு மணி பண்டாரம்…..”

காவடிகள் குலுங்கி குலுங்கி ஆட ஆட ஆறுமுகம் இடுப்பில் துள்ளினான்…

“ஆயா..எறக்கி விடு..மயில் காவடி..கிட்ட போயி பாக்கணும்…”

“இருலே..நானே தூக்கி காட்டுதேன்.. கூட்டம் நெரிக்குது..

“விடு ஆயா..விடு….”

பேரனின் தொல்லை தாங்க முடியவில்லை..

“செத்த எறக்கித்தான் விடு ஆயா..பிள்ளை ஆசப்படுதில்ல….!

புத்தி தடுமாறியது.. இறக்கிவிட்டு கையை இறுக்கிப் பிடித்தாள்..

“ஆயா..கை வலிக்குது..விடு…மயிலு.. மயில் பாரு…!

ஒரு கணம்…ஒரே வினாடி..கூட்ட நெரிசலில் மாயமானான்..

“எலே ஆறுமுகம்..!

“எங்கண்ணு…!என்னப் பெத்த ராசா.! ஆயான்னு கொரல் கொடு ஐயா..!

ஆறுமுகம்…ஆறுமுகம்….!“

மயக்கமானாள் சின்னதாயி..
அவள் உசிரே போய்விட்டதே..!
வெறும் உடல்தான் வீடு திரும்பியது…

வயிற்றில் குழந்தையுடன் கிணற்றில் குதித்த செல்லம்மாவை , தாய் வேறு , சிசு வேறாக எடுக்கும் வரைக்கும் ஊர்சனம் பொத்தி பாதுகாக்கவில்லையென்றால் இன்றைக்கு கண்ணகி ஏது? முல்லை தான் ஏது…?

முல்லைக்கு ஒரு விவரமும் தெரியக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாள் செல்லம்மா….

***

இப்போதெல்லாம் தாயும் மகளும் முத்து பண்டாரத் துக்காக காத்து கிடக்கிறார்கள்.

ஆனால் இவன்தான் பாடி முடித்ததும் சிட்டாய் பறந்து விடுகிறானே!

இதோ அந்த கான கந்தர்வன்…

“மாமா…! முத்து மாமா..!”

முத்து சம்மணமிட்டு அமர்ந்து கொள்கிறான்….

ஆராரோ ஆரிவரோ…
சங்கரனார் கோயிலிலே..
நடுச் சந்தியிலே நின்ன மரம் .
அஞ்சு தலைச் செந்நாகம்..
அதிலே அடை கிடக்கும்……
சுத்திவந்து பூவெடுத்து…..
சூரியனார் உங்களம்மான் …
அஞ்சி அஞ்சிப் பூவெடுக்கும் ..
அஞ்சியூர்ப் பண்டாரம்…..’

“அம்மா…தாயி..! என்னிய மாமான்னு மொற கொண்டாடுத. மனசு ரொம்பிப் போச்சு…! இந்தா தேனு…!

நீ நல்லா வருவ….!

இந்த மாமனோட அருள் வாக்கு பலிக்கும்.

சட்டென்று எழுந்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போனான்…

என்றும்….எனறைக்குமாய்….

***

“ஆயா! இன்னைக்கு புதுசா ஒரு கத வேணும்!”

“நெதம் நெதம் புதுக்கதைக்கு எங்கிட்டு போறது தாயி ?? எங்க ஆத்தா சொன்ன பண்டாரம் கதை சொல்லவா. ..?”

“ஐய்யா…! சொல்லுங்க ஆயா….! மாமா மாதிரியா ?”

முல்லையைக் கட்டிக் கொண்டு படுத்திருந்த செல்லம்மா விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்..

மொத்த உடம்பும் தூக்கிப் போட்டது…

“என்ன குட்டி சொல்லுத? மாமனா ? பண்டாரமா ? சரியா சொல்லு…”

“ஆயா…எங்க ஊருல முத்துப்பண்டாரம்னு ஒரு மாமா…அவரு பாட்டெல்லாம் பாடிக்கிட்டே ஆடுவாரு…!எனக்கு தேன் வாங்கிட்டு வருவாரு பாட்டி…”

செல்லம்மா எழுந்து விட்டாள்..

“கண்ணகி….இங்க வா பிள்ளை! என்ன ? இதுங்காட்டியும் ஒறங்கிட்டியா ? வெரசா வா!”

அரைத் தூக்கத்தில் இருந்த கண்ணகி வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து வருகிறாள்…

“ஏம்மா…? நல்ல ஒறக்கம் வர சமயத்தில எழுப்பிட்டியே…! என்னவாம் பேத்திக்கு…?”

“இங்கனக்குள்ள உக்காரு….! உம்பொண்ணு என்னென்னவோ சொல்லுதா?”

“அவ ஒரு வாயாடி…என்ன சொன்ன முல்ல? ஆயாவ பயங்காட்டினயா…?”

“ஒண்ணுமே இல்லம்மா…..நம்ப முத்து மாமா இல்ல…! பண்டார மாமா..! அவரு பாட்டப்பத்தி சொன்னேன்…”

“கண்ணகி…..யாரும்மா அது….?? வெவரமா சொல்லு….! ஐய்யோ..! ஒடம்பெல்லாம் என்னவோ செய்யுதே! ஆறுமுகம்..! எங்கப்பனே…!”

அப்படியே மயங்கி சாய்ந்தாள்…!

***

ஆத்தாளும மகளும் ஒருவாரம் பேசினாலும் தீராத கதை….. கதையின் முடிவு கண்ணகிக்கு தெரிந்து விட்டது….

அவன்…முத்து பண்டாரம்…!

கண்ணாடியின் முன்னால் நின்று உத்துப் பார்க்கிறாள் கண்ணகி…!

யார் முகம் இது?

கண்ணகியின் கண்கள்…இல்லை..இல்லை..!இது முத்துப்பண்டாரத்தின் கண்கள்…!

“அச்சு அசலு உங்கண்ணேதான் பிள்ளை அவனுக்கும்…! ஆத்தா மாதிரி ஒடம்பே நெடுநெடுன்னு தங்க கலருல மினுமினுண்டு சொலிக்குமே…! என்னிய அங்க கூட்டிப்போ தாயி….!

செல்லம்மா குமுறி அழுதது நினைவில் வந்து வந்து போனது.

கண்ணிலிருந்து வழியும் கண்ணீர். ? யாருடையது ?

அவனை மீண்டும் பார்க்க முடியுமா…?அண்ணனாய்..! மாமனாய்.! அருமை மகன் ஆறுமுகனாய்…?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *