இரண்டு இருபது காசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2020
பார்வையிட்டோர்: 7,727 
 
 

காலையிலதான் பாத்துட்டு வந்தேன். அதுக்குள்ள இப்படி…… எதிர்பார்க்கல. மனத்துக்குள் திடீரென்று ஒரு கனம் வந்து உட்கார்ந்துகொண்டது. ஹாலில் தெரிந்த மின்னிலக்கக் கடிகாரம் மணி விடியற்காலை நான்கு இருபது என்று காட்டிக்கொண்டிருந்தது. தம்பிதான் தகவலைச் சொன்னான்.

வழக்கம்போல் தூக்கத்தில் முட்டிக்கொண்டுவரும் மூத்திரத்தை அடக்க முடியாமல், பாத்ரூம் சென்றுவிட்டு வரும்போது இடதுபுற அறையில் இருக்கும் பாட்டியிடமிருந்து ஏதாவது ஒரு புலம்பல் கேட்டுக்கொண்டிருக்கும். தாத்தா பிப்ரவரி மாதம் இறந்ததிலிருந்து அந்தப் புலம்பல் இன்னும் அதிகமாகிப்போனது. வயசானா அப்படித்தான் என விட்டுவிட்டோம். இன்று அந்தப் புலம்பல் கேட்காதது அவனுக்கு வித்தியாசமாகப்பட்டது. பாட்டியின் அறைக்கதவு எப்போதும் திறந்தேதான் கிடக்கும். எட்டிப் பார்க்கையில், பாட்டி தரையில் குப்பிறக் கிடந்திருக்கிறாள். அவள் கைப்பட்டுத் தண்ணீர்க் குவளைச் சாய்ந்ததில் அவள் தலைப்பக்கத் தரை ஈரமாகிக்கிடந்தது. பதறிப்போய் அப்பா அறைக்குச் சென்று கதவைத்தட்ட, இடுப்பிலிருந்து நழுவியிருந்த கைலியைச் சரிசெய்துகொண்டு கதவைத்திறந்தார். பின்னால் அம்மாவும் நிழலாடினாள். அதன்பிறகு பாட்டி இறந்துவிட்டது உறுதியாகிவிட்டது.

செண்பா பாதி தூக்கத்தில் இருந்தாள். படுப்பதற்கு முன்பாகத் நெற்றிப்பகுதியில் அவள் தேய்த்திருந்த கோடாலி சாப் தைலத்தின் வீச்சு இன்னமும் அந்த அறைக்குள் மெல்லியதாய்ச் சுழன்றுகொண்டிருந்தது.

‘ஏங்க……இந்த நேரத்துல யாரு போன்ல? எப்ப பாத்தாலும் போனுதான்.’

ஒருவித சலிப்போடு கேட்டாள்.

‘தம்பிதான்’

‘என்னவாம்?’

‘பாட்டி இறந்துட்டாங்களாம்’

‘ஆ…….எப்ப….நல்லாத்தான இருந்தாங்க, காலைலகூட பாத்துட்டு வந்தேனு சொன்னீங்க’

‘இப்பத்தான். பாத்ரூமிற்குப் போகும்போதுதான் பாத்திருக்கான். அம்புலன்ஸ்க்குத் தகவல் கொடுத்திருக்காங்க. அவங்க வந்து பாத்துட்டுதுதான் உறுதிப்படுத்தியிருக்காங்க’

‘இன்னைக்கே எடுத்திடுவாங்கலா? மாத கடைசி……கம்பெனியில் வேல அதிகமாக இருக்கும். தலகிட்ட சொன்னா சலிச்சுக்குவா’

‘மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்காங்க. போர்மலிட்டிஸ்லா முடிஞ்சபிறகு குடுத்திடுவாங்க. வயசானதால சீக்கரமா முடிஞ்சிரும். பத்து மணிக்கெல்லாம் குடுத்துருவாங்க’

கோவிந்தம்மா பாட்டி. என் அம்மாவின் அம்மா. கைக்குழந்தையாய் இந்த நாட்டுக்கு வந்தவர். அவரின் அப்பா மன்னார்க்குடியிலிருந்து நாகப்பட்டிணத்தில் கப்பலேறி மலாயாவிற்குத் தன் குடும்பத்தோடு வந்தவர். சிலாங்கூர் மாநிலத்தின் நெற்களஞ்சியமான கோலாசிலாங்கூரில் உள்ள தஞ்சோங்க காராங்கில் குடியேறியவர்கள். கோவிந்தம்மாள் பாட்டியின் அப்பா மணவாளன் கங்காணியாக இருந்தபடியால் வந்த இடத்தில் அதிகச் செல்வாக்கோடு பாட்டியும் வளர்க்கப்பட்டதாகப் பாட்டி முன்பு ஒரு முறை சொல்லியிருக்கிறார். மேலும், மன்னார்க்குடியிலிருந்து பல சொந்தங்களையும் பாட்டியின் அப்பா கூட்டிவந்ததாகவும் அந்தக் காலத்தில் தஞ்சோங் காராங் நெற்களஞ்சியப் பகுதியில் அவர்களின் குடும்பமே அதிக ஆதிக்கம் செலுத்தியாகவும் பாட்டி சொல்லியிருக்கிறார். பாட்டியின் அம்மா சிவகாமி அம்மாளை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது பார்த்த ஞாபகம் இன்னும் நினைவில் தொக்கிக் கொண்டு இருக்கிறது. அவர் அதிகமாக மாலாய்க்காரர்களின் உடையில்தான் கைலியுடன் இருப்பார். சிங்கையிலிருந்து அவர் கோவிந்தம்மா பாட்டியைப் பார்ப்பதற்கு ஜோகூர் ஸ்கூடாயில் இருந்த லிண்டன் எஸ்டேட்டிற்கு வந்து ஒன்றிரண்டு நாள்கள் தங்கிவிட்டுப் போவார். அது ஒரு தீபாவளி சமயம். கட்டி உருண்டையைக் கடிக்க முடியாமல் நான் கையில் வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் தன் பாக்கு வெட்டியைக்கொண்டு கட்டி உருண்டையை நறுக்கிக் கொடுத்திருக்கிறார். பழைய ஞாபகங்கள் மட்டுமே நம் வாழ்க்கையின் மகிழ்வான தருணங்களையும் அந்த வாழ்க்கைக்கு ஓர் அழகையும் தந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. நிகழ்காலத்தின் இடுக்குகளில் இருந்து நம்மை நகர்த்திக் கொண்டிருப்பதும் நம் நினைவுகள் மட்டுமாகவே இருக்கின்றன.

வெயிலின் கீற்றுகளும் இன்று மரணத்தின் சாயலைப் போர்த்திக்கொண்டு வெப்பமாக வீட்டிற்குள் ஊடுறுவிக்கொண்டிருப்பதாகப்பட்டது. ஹாலில் இருந்த பலவையும் வெள்ளைத்துணிகளால் போர்த்தப்பட்டிருக்க, வீடு முழுக்க மரணத்தின் சாயம் பூசப்பட்டிருந்தது. என் மூக்கின் மேலேறி பிணவாடை உட்கார்ந்துகொண்டதை என்னால் தடுக்க இயலவில்லை. மற்றவர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். உயிரின் வாசனை இல்லாத உடலுக்கு ஏதேதோ வாசனைகள். கோவிந்தம்மா பாட்டியின் தலைமாட்டிற்கு நேரே எரிந்துகொண்டிருக்கும் விளக்கின் ஒளி பாட்டியின் நெற்றியில் விழுவதுபோலவே என் பார்வைக்குள் விழுகிறது. விளக்கின் ஒளியில் பாட்டியின் நெற்றிப் பகுதியில் ஒரு தெய்வாம்சம் தெரிந்தது. நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது என் அப்பாவின் அம்மா சின்னம்மா திடீரென இறந்துபோக, அப்போது சாவுக்கு வந்திருந்த கோவிந்தம்மா பாட்டி சொன்னது இப்போதும் நினைவுக்கு வருகிறது.

‘செத்தவங்க எங்க போவாங்க பாட்டி’

‘சாமிகிட்ட’

இன்று, கோவிந்தம்மா பாட்டியும் இறந்து சாமிகிட்ட போயிட்டதாலத்தான் பாட்டியின் நெற்றியிலும் அந்தத் தெய்வாம்சம் தெரிவதாகப்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து பாட்டியின் தங்கச்சி சுந்தரம்பாள் பாட்டி வருவதாக இருப்பதால் நாளை எடுக்கலாம் என அப்பா சொல்லியிருந்தார். தம்பி, சாவுக் காரியங்களைக் கவனிக்கும் வாண்டையாரைப் பிடித்துக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் மும்முரமாக இருந்தான். பாட்டியின் தலைமாட்டில் அம்மாவும் அவருக்குப் பக்கத்தில் சின்னம்மாவும் அழுதழுது கண் சிவந்து, முகம் வீங்கி, மூக்குச் சிந்தி, கன்னப்பகுதிகளில் உப்பு தேங்கிய நீர்க்கோடுகளோடும் உட்கார்ந்திருந்தனர். ராத்திரி முழுவதும் அழுதுத் தீர்த்ததால் இப்போது அழுகையின் வீச்சுக் குறைந்திருந்தது. இருந்தாலும் அவ்வப்போது வரும் உறவுக்காரர்கள் அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழும்போது மட்டும் ஓலங்கள் கூடி பின் அமைதி நிலைக்கு வந்துவிடுவது திடீர் திடீரெனப் பெய்து ஓயும் மழையின் பேரிரைச்சலாய் வாடிக்கையாகியிருந்தது. வந்தவர்களும் சிறிதுநேரம் அழுது ஒப்பாரி வைத்துவிட்டு, பின் அங்கிருந்த பிண வாசத்தை மறந்து மற்றவர்களுடன் அவரவர் கதை பேச ஆரம்பித்துவிட்டனர். ஓலமிட்ட வாய்கள் உதட்டோரம் சோகமாடிய ஒரு சிறு புன்னகையைத் தவழவிட்டபடி மற்றவைகளில் தஞ்சம் புகுந்துகொண்டன. மரணம் தன் சார்ந்தவர்களுக்கு வராதவரை மற்றவர்களுக்கு அது ஒரு வெறும் சம்பவம்தான். சில நிமிட துக்க விசாரிப்புகளோடு இவர்களின் வாழ்விலிருந்து விலகும் அந்த மரண சம்பவத்துக்கான அனுதாபங்கள் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றன.

உடல் சிறுத்து குங்கும வண்ணச்சேலை போர்த்தப்பட்டு உடல் முழுக்க மாலைகளோடும் பூக்களோடும் பல்லில்லாத பாட்டியின் முகம் சிரிப்பதுபோலவே இருக்கிறது. பூக்கள்தான் எத்தனை இயல்பாகச் சூழலுக்கேற்ப தம் இயல்பை மாற்றிக்கொள்கின்றன. கல்யாணத் தம்பதிகளின் தோள்களில் இருக்கும்போதும் பூஜையறையின் தெய்வப் படங்களுக்கு முன் மாலையாகத் தொங்கிக்கொண்டிருக்கும்போதும் கோயில் சிலைகளை அலங்கரிங்கின்றபோதும் ஒவ்வொரு இருப்புக்கும் ஏற்ப அவை முகங்களையும் வாசனைகளையும் மாற்றிவைத்துக்கொள்வது போன்றவற்றை இந்தப் பூக்கள் எங்குக் கற்றுக் கொண்டன. மகிழ்ச்சிக்கும் துக்கத்துக்கும் இப்பூக்கள் நம்மோடு ஒட்டி உறவாடிக்கொண்டிருப்பது எவ்வகையில் இங்குச் சாத்தியமாகிப்போனது. பாட்டியும் அப்படித்தான். அவள் வாழ்ந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும் அதே அளவு சோகங்களையும் மூழ்கித்திருக்கிறாள். முதல் பிள்ளைக்குக் கருவுற்றிருக்கும்போதே பாட்டியின் கணவர் வேலாயுதம் தாத்தா இறந்துவிட, சொந்தமும் சொத்தும் வேறிடத்தில் போயிடக்கூடாதென்று, கணவரின் தம்பியையே பாட்டிக்குக் கல்யாணம் செய்துவைத்தனர். இணக்கமில்லாத ஒரு வாழ்க்கைக் கட்டாயமாகப் பாட்டியின் வாழ்க்கைக்குள் தினிக்கப்பட்டதால் காலப்போக்கில் விரும்பியோ விரும்பாமலோ சுப்ரமணியம் தாத்தாவிற்கும் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்துவிட்டாள். அதில் முதல் பிள்ளைதான் என் அம்மா. அவரைத்தொடர்ந்து ஒரு மாமா ஒரு சின்னம்மா. கோலாசிலாங்கூரிலிருந்து பாட்டியின் குடும்பம் லிண்டன் எஸ்டேட்டுக்குப் புலம்பெயர, மூத்த கணவருக்குப் பிறந்த பிள்ளையைப் பாட்டியின் தங்கை சுந்தரம்பாள் பாட்டி சிங்கப்பூருக்குக் கொண்டுசென்று தன் குடும்பத்தோடு வைத்துக்கொண்டாள்.

இருபுறமும் இரப்பர் மரங்கள் வரிசையோடு நிழல்கொடுக்க ஒரு ரதம் செல்லும் அளவுக்குச் செம்மண்சாலை மையப்பகுதி உயர்ந்து மற்ற இருபுறங்களும் கீழ்நோக்கியிருக்கும். எப்படிப்பட்ட மழை பெய்தாலும் தண்ணீர் செம்மண் சாலையில் தேங்கி நிற்காமல் கீழ்நோக்கிப் பாய்ந்து சாலையில் இருபுறமும் வழிந்தோடுவதைத் தூரத்தில் இருந்து பார்க்கும்போது, ஒரு முழு ஆட்டை முழுங்கிய நீண்டதொரு மலைப்பாம்பு சாலையோரத்தில் படுத்துக்கொண்டு நெளிவெடுத்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றமளிக்கும். அந்த மண்சாலை நேராகத் தோட்டத்தின் மாரியம்மன் கோயிலை அடைந்து அங்கிருந்து வலதுபுரமாகத் திரும்பிச் சென்றால் அதன் வலதுபுரத்தில் ஒரு பெரியதிடல் வரும். திடலுக்கு இடதுதுபுரம் பச்சைச்சாயம் பூசப்பட்ட தோட்டத்து லயன் வீடுகள் வரிசைப்பிடித்து நிற்கும். அந்த வரிசைவீடுகளில் முதல் வீடுதான் பாட்டியின் வீடு. அந்தத் தோட்டத்தில் பாட்டிக்குத்தான் நிறைய மாடுகளும் ஆடுகளும் இருந்தன. அந்த மாரியம்மன் கோயிலின் பின்புரம்தான் பாட்டி வளர்த்து வந்த ஆடு மாடுகளின் கொட்டகையும் இருந்தது. வருடா வருட தீபாவளிக்குக் கிராணிமார்களுக்காக ஒரு கெடாயும் தோட்டத்திலுள்ளவர்களுக்குப் பல கெடாக்களையும் சமைச்சிப்போட்டது பாட்டியின் குடும்பம். தோட்டத்தில் உள்ளவர்களுக்குப் பணத்தட்டுப்பாடு என்றால் பாட்டியின் வீட்டுக் கதவைத்தான் முதலில் தட்டுவார்கள். அப்படிப்பட்ட வாழ்வை வாழ்ந்த பாட்டி, நேற்றுக் காலை வேறு அலுவல் விஷயமாக இந்தப்பக்கம் வந்தபோது வீட்டில் தங்கையையும் பாட்டியையும் தவிர வேறுயாருமில்லை. தங்கையிடம் புதிதாக வெளிவந்திருந்த எனது கவிதை நூல்களில் சில படிகளைக் கொடுத்துவிட்டு, வீட்டின் முன்போடப்பட்டிருந்து பெரஞ்சாவில் உட்கார்ந்திருந்துகொண்டு, குனிந்து வெற்றிலைப் போடுவதற்காகப் பாக்கை இடிகல்லில் வைத்து இடித்துக்கொண்டிருந்த பாட்டியைப் பார்த்துப் பேசிவிட்டு வந்து கார் கதவைத் திறக்கும்போது,

‘ராசா, பொயல வாங்கனும், இருவது காசு கொடுத்துட்டுப்போடா’, என்றார். பாக்கெட்டில் கைவிட்டு எடுத்தபோது இரண்டு இருபது காசுகள் வெளிவந்தன. பொயலையின் விலை ஒரு பாக்கெட் பதினைந்து காசுதான். அந்த இரண்டு இருபது காசுகளைப் பாட்டியின் கையில் கொடுத்துவிட்டு கிளம்பியபோது, இதுதான் பாட்டியுடன் எனக்கான இறுதியான பேச்சாக இருக்கும் என்று நான் கொஞ்சங்கூட நினைத்துப் பார்க்கவில்லை.

நாலைந்து பேர்கள் கறுப்பு உடையில் நடமாடி, அந்த இடத்தின் துக்கத்துக்கு மேலும் கனத்தைச் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தத் துக்கத்தின் கனம்கூட அவர்களுக்கானதல்லாதது போலவே இருந்தது. அதை அவர்கள் தூக்கி நிறுத்தியுள்ள இடம் பாட்டியின் நெருங்கிய உறவுகளின் நெஞ்சாங்கூடுகளில்தான்.

பாட்டி நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும்போது நிறைய கதைகள் சொல்வார். அவரைத் தவிர்த்து அம்மாவும் அதே கதையைப் பலமுறை சொல்லியிருக்கிறார். அப்படி இருவரும் அடிக்கடி சொல்லிய ஒன்றுதான் ‘வாளைமீனும் பெண்ணும்’ என்ற கதையாகும். காலங்காலமாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் வாளைமீனுக்குச் சோறு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம். இந்தப் பெண்ணின் முறை வந்ததும் அவளும் அந்த வாளைமீனுக்குச் சோற்றை உருண்டைப் பிடித்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள். திடீரென ஒருநாள், சோற்றில் மண்ணைக் கலந்துகொடுத்தால் வாளைமீனுக்குத் தெரியவா போகிறது என நினைத்துச் சோற்று உருண்டையில் மண்ணைக் கலந்துகொடுத்து விடுவாள். அதைச் சாப்பிட்டுக் கோபமடைந்த அந்த வாளைமீன் அவளை முட்கள் நிறைந்திருந்த தன் வாலால் அவளை அறைந்துவிட்டு, இனி ஒவ்வொரு நாளும் சாப்பாடு கொடுக்கும்போது அடி வாங்கவேண்டும் எனக் கூறிவிட்டதாம். பிறகு, அதிலிருந்து அவள் எப்படி மீண்டு வந்தாள் எனக் கதை பல இரவுகளாகத் தொடரும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவள் மீண்டு வருவதில்தான் பாட்டிச் சொன்ன கதையும் அம்மா சொன்ன கதையும் வெவ்வேறாக இருக்கும். ஆனால், இருவருமே அந்தக் கதையை மீண்டும் மீண்டும் சொல்லும்போது முதல் கதையிலிருந்து மாறுபட்டுக்கொண்டே போகும். கதையின் இடை இடையே எம்.ஜி.ஆரின் விக்கிரமாதித்தன் சாயலில் சாகசமும் சிவாஜியின் பாசமலர் சாயலில் சோகமும் மாறிமாறி கலந்தே வரும். இந்த மாறுதல்தான் கதையை நகர்த்திக்கொண்டு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். அம்மா வேலைக்குச் செல்ல ஆரம்பச்சதிலிருந்து கதை சொல்வதை நிறுத்தி வெகுகாலமாகிவிட்டது. பல தலைமுறையின் தொன்மமும் தொடர்ச்சியுமான இக்கதைசொல்லலும் இம்மண்ணோடு பின்னிப் பிணைத்திருந்த பாட்டியின் சரித்திரப் பூர்வமான வாழ்வியலும் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து பர்மா சென்று இன்றுவரை திரும்பாமல் காணாமல் போய், எங்கள் வீட்டுப் பூஜையறையில் இந்திய தேசிய இராணுவ உடையில் கம்பீரமாக ஒரு ஃபிரேமிற்குள் அடக்கமாகியிருக்கும் அவர் அண்ணன் பெருமாளைப்போல இனி இந்தப் பெட்டியிலேயே அடக்கமாகிவிடக்கூடும்.

பாட்டியின் மூத்த மகன் குடியுரிமைச் சிக்கலால் வர இயலாமல் போக, சுந்தரம்பாள் பாட்டி மட்டுமே ரயிலேறி வந்திருந்தார். நான்தான் அவரைக் காலையிலேயே போய் கோலாலம்பூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அழைத்து வந்திருந்தேன். மூத்த மகன் வராததால் இளைய மகனை வைத்துக் காரியம் செய்யச் சொல்லியிருந்தார்கள். இந்த மாமாதான் பாட்டியின் உழைப்பில் கூலாய் பெசாரில் வாங்கிப்போட்டிருந்த ஒரு பங்களா வீட்டோடு பழமரங்கள் நிறைந்த அந்த ஆறு ஏக்கர் நிலத்தைப் பாட்டிக்குத் தெரியாமலேயே அவர் தூக்கத்தில் இருக்கும்போது கைரேகையை எடுத்து விற்று விட்டார். ஒருநாள் பாட்டி ஜோகூரிலிருந்து ரயிலேறி எங்கள் வீட்டிற்கு வந்து ஒப்பாரி வைத்தாள். அப்போதுதான் நிலம் விற்ற விஷயமும் பாட்டியையும் மாமாவின் முதல்தார மனைவிக்குப் பிறந்த மகனையும் அவர்கள் கொடுமைப்படுத்தியதும் எங்களுக்குத் தெரிய வந்தது. அன்றிலிருந்தே அப்பா இருவரையும் நம்முடனேயே இருக்கட்டும் எனக் கூறிவிட்டார். வெகுநாட்களுக்கு முன்பு நாங்கள் சீனக் கம்பத்தில் இருந்தபோது, மணல்மேட்டில் வீடு கட்ட இடம் கிடைத்தது. அப்போது பாட்டி கொடுத்த பணத்தில்தான் அப்பா மூவறை வீட்டைக் கட்டினார். அந்த நன்றிக்காகக் கூட அப்பா இப்படிச் சொல்லியிருக்கலாம். அல்லது தன் அப்பாவின் சகோதரி என்ற உறவாலும் கூட சொல்லியிருக்கலாம். எது எப்படியிருப்பினும் அப்பாவின் அன்றைய முடிவு எனக்கு மகிழ்ச்சியாக இருந்நது.

அத்தை அழுத முகத்தோடு பாட்டியின் காலடியில் அமர்ந்துகொண்டு மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள். பாட்டிக்கு ஒரு குவளைக் கோப்பிக்கூட கலக்கிக்கொடுக்க ஆயிரம் பேச்சுப் பேசும் தம்பி மனைவியும் பாட்டியின் உடலருகே அமர்ந்து மூக்கை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். ஒரு சாவு இந்த மனிதர்களை எல்லாம் எப்படி இப்படி வேஷமிட வைக்கிறது. இருக்கும்போது மகிழ்ச்சியாக வைத்திருக்க இயலாதவர்கள் கண்களிலிருந்து இந்த ஈரம் எப்படி இப்படிக் கொட்டுகிறது. இது எனக்கு வினோதமாகப்பட்டது. வாழ்க்கையிலிருந்து நாம் எங்கோ விலகி ஓடுவதுபோலவே இருந்தது.

பாட்டியை மின்சுடலைக்கு ஏற்றிச் செல்ல சவ ஊர்தியும் வந்து விட்டது. இளையர்கள் சிலர் வாழைமரத்தையும் தோரணங்களையும் கொண்டு அந்த வண்டியை அலங்கரிக்கத் தொடங்கினர். சாவு காரியங்களைக் கவனிக்கும் நாராயணசாமியும் செய்ய வேண்டிய காரியங்களை வேகமாகச் செய்துகொண்டிருந்தார். அவ்வளவு கூச்சலுக்கும் அழு குரல்களுக்கும் நடுவே அவரின் நாட்டாமைத்தனம் தனியாகத் தெரிந்தது.

பெட்டியை மூடுவதற்கு முன், நாராயணசாமி,

‘பொட்டியில போடுறதுக்கு வேறெதுவுமிருக்கா……..இல்லன்னா மூடிறலாம்’ என்றார். அம்மா என்னைப் பார்த்து,

‘பாட்டியோட சுருக்குப் பைய எடுத்துட்டு வந்து பொட்டியில வைடா’ என்றதும், பாட்டியின் அறைக்கு விரைந்தேன். பாட்டி உயிருடன் இருந்தவரையில் அந்தச் சுருக்குப் பையை யாரையும் தொடக்கூட அனுமதித்ததில்லை. ஆனால், இன்று பாட்டியின் துணிகள் இறைந்துகிடந்த அந்த அறையின் ஒரு மூலையில் பாட்டியின் சுருக்குப் பை பாட்டியின் உடல்சூடு படாமல் தன்னந்தனியே பரிதாபமாகக் கிடந்தது. அந்தப் பையை எடுத்துத் திறந்தேன். உள்ளே, இரண்டு இருபது காசு மட்டுமே ஜில்லிட்டுக் கிடந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *