இயல்பிகந்த கிண்ணாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 24, 2023
பார்வையிட்டோர்: 2,450 
 

இத்தவணை கடிதம் உயிர்த்து விடும் என திடமாய் நம்பினான். வேறு ஒரு பதிவுக்கும் திட்டமிட்டிருந்தான். தன் மரண நேரத்தை தானே எழுதிக் காட்டும் ஜால வித்தை அது தூக்க மாத்திரை சாப்பிடுவோருக்கு அது சாத்தியமில்லை நெடுந்துயிலின் ஏதோ ஒரு பகுதியில் துயிலின் ஒரு கணமெனவே இருதய நிறுத்தம் சம்பவித்து விட்டிருக்கும். 

மீண்டும் மலை தூக்கிப் பறப்பதற்கு சோம்பல்பட்ட மாருதி ‘சஞ்சீவி’யைத் தெற்கே எறிந்தபோது உதிரியாய் உதிர்ந்த கல் ஒன்று சங்கு மலையாய் வளர்ந்தெழுந்தது. கைப்பிடி அறுந்த மணியெனக் கண்ட அது யுகங்களின் வெய்யில் பட்டு உருகி வழிவதில் கூம்பு வடிவின் சீர்மை தொலைத்து அகன்று பணைத்து, பக்கலில் பெருத்து துணை நாளங்களாக அடுக்குகளையும், மடிப்புகளையும் பெற்று தொடர்ச்சி மலையென நீண்டிருந்தது. மழைக் கத்தி செருகிய நாளில் திடீரெனத் தூம்புகளின் வெள்ளை ரத்தம் வடியும் சுனை நீரின் சுவையோடு. வரகம் பட்டியில் பிதுங்கிய வீடுகள் ஓரிரண்டு மலையடிவாரத்தில் உண்டு. 

தேசிய நெடுஞ்சாலை. எழில் ஒரு ஆலமரத்துக்கு அருகுள்ள ஒரு மண் சாலையில் ஆரம்பிக்கிறது மலைக்கான பயணம். மற்றபடி உங்கள் ஊரிலிருந்தும் துவங்கலாம். மலையேற்றத்தில் மல்லீசுவரனும், மேலும் உயர்ந்தேக ‘கம்பம்’ என்னும் இடமும் காணும் பதினெட்டாம் தேதி நல்ல பகல் ஒன்றே காலுக்கு அவன் பாதைப் பிரிவில் பஸ் இறங்கினான். மரத்தடி மனிதன் அவனை மிகச் சாதாரணமாகப் பார்த்துக்கொண்டிருக்கையில் பையுடன் கடந்து நடந்தான் மலைநோக்கி, பின்னாடி நினைவு கூரத்தக்க செய்தியாகவும், கதையாகவும் அவன் மாறப் போவதை மரத்தடி மனிதன் அறிந்திருக்கவில்லை. 

அவன் நடந்துகொண்டிருந்தான். கண்கள் சூன்யத்தின் வெறுமையும் பொருளும் கொண்டிருந்தன. கடைசிப் பயன்பாட்டுக்கான சாதனம் கைப்பையிலிருந்தது. செம்போத்து ஒன்று தத்திக் கடந்து போனது. முதுகில் காந்தள் அலையோ, கானலோ தாக்கியதுபோல வேலமரத்தின் தண்டுகளில் அப்பிய சுவர்க்கோழிகள் ரீங்கரித்தன. ஒரு மகத்துவமான வெய்யில் அடித்துக்கொண்டிருந்தது. வாழ்வில் கடைசியாய்ச் சந்திக்கிற வெய்யில் இதுவே எனத் தீர்மானமாயிற்று. பகலின் வெய்யிலாடையில் மலை விகசித்திருந்தது. அவனுக்கு போதை இறங்காமலிருந்தது. பையில் மதுப்புட்டியும் வசமிருந்தது. கால்கள் தள்ளாடவில்லை. திரவத்திடைத் தோய்தலில் எந்த நிலையிலும் தள்ளாடப்பெறாத 

உறுதிகொண்டிருப்பதில் தேர்ந்திருந்தான். உடலின் சகல பாகங்களிலும் பரவியிருந்த மனதின் சூட்சுமம் இறுதிச் சுவாசங்களை எண்ணிக்கையிட ஆரம்பித்திருந்தது. 

மலையின் ஆகிருதி முற்றிலும் வெளிப்படாத விதமான பாதங்கள் சமைத்த பாதையின் முகப்புக்கு வந்து மேலேறத் துவங்கினான். நியாயத்துக்கு மலைமேல் தரிக்கும் மல்லீஸ்வரனோ, கோயில் பூசாரியோ ஒரு பக்தனின் வரவை எதிர்பார்த்திருக்கலாம். அவனோ சாபங்கள் வரங்கள் எதுவும் வேண்டப்படாதவனாகி மேலேறிக் கொண்டிருந்தான். செருப்பு புதியதாய் இருந்தது. அரக்கு நிறத் தோலில் பதிந்திருந்த கம்பெனிப் பெயரிட்ட பொன்னெழுத்துக்கள் முற்றிலும் மங்கிவிடவில்லை. வாழ்வைப் போலவே ஒழுங்கற்ற படிகள் கொண்டிருந்தது மலை, எப்போதோ பெய்து விட்டிருந்த மழையின் ஈரம் தாங்கி உயிர் நிலைத்திருந்த தாவரங்கள் இலைகளில் பச்சையம் தேக்கி சூரியனை யாசித்திருந்தன. மலையின் கன பரிமாண ஒழுங்கற்ற ஒவ்வொரு படிகளிலும் சந்தித்து வந்த முகங்கள் பிம்பமாடியதில் பிடித்த முகம். பிடிக்காத முகம் என பிரிக்கத் திராணியற்று நடந்தான். ‘தொலைந்தான் பாறை’ தாண்டி நடைத்திசைக்கு இடதுபுறமாயிற்று பாதை ஏதோ ஒரு மலைப்போக்கன் எதிர் கடந்து போனான். அவனுக்கு இவனும், இவனுக்கு அவனும் விசித்திரமாய் தோன்றியிருக்க வேண்டும். ஆடி 18, அமாவாசை என விழாக்களற்ற நாளாகையால் மலை தனது மனித நெருக்கடியைத் தொலைத்திருந்தது. தொலைந்தான் பாறை எனப் பெயர் வந்த காரணம் ஆதி நாளில் உயிர்ப்புடன் விளங்கியிருக்கலாம். திசை தவறி யாரேனும் இங்கே உட்கிளைத்த மலையின் பரப்பில் புதிய பாதை செய்து மறைந்திருக்கலாம்-திசைகளற்ற புதிர்ப் புதர் வெளியில் திசைகளற்றது மலை. 

சமப் பாதைகளையும், வீடுகளையும் கொண்டிராத அடர்வெளியில் திசை காண்பது எங்ஙனம்? சூரியனின் திசையறியலாம் கிழக்கு மேற்கென. உச்சிச் சூரியனுக்கும் திசை இல்லை. என்றைக்காவது அது வடக்கிலோ தெற்கிலோ இறங்கி விடலாம். அப்படி அற்புதங்கள் நிறைந்ததே அண்டமெனில் அவனது இந்த மலைப்பயணமும் தவிர்க்கப்பட்டிருக்கும் போதை தாழ்ந்து விட்டதாய்த் தோண பாட்டில் திறந்து ஒரு மிடறு சரித்துக் கொண்டான். மலை உயர உயர போதையும் தாளாமல் இருக்க வேண்டும். இலக்கடையும் வரை-இப்போதைக்கு இலக்கு தௌவில்லை. 

முன்பு இடந்தலைப்பட்டு இதே மலையில் புணர்ந்தாடிய நாட்களில் இலக்கு தௌவானதாயிருந்தது. பைக்குள் வைத்த பாட்டிலை மேற்புறம் தடவினான். பாம்பைத் தடவுவது போல் வழுவழுப்பாயிருந்தது. பாம்புகள். சில தற்கொலை முயற்சிகளுக்கிடையில் ஒருமுறையேனும் பாம்பு தீண்டியிருக்கலாம்தான். விரும்பியது விரும்பிய விதம் கிட்டினால் விஷப்பற்கள் வேண்டியிராது. இந்த இரண்டு ஆண்டுகளில் லபித்ததெல்லாம் கொடுக்குகள்தான். முதல் முயற்சி ஒன்றரை வருடத்துக்கு முன் நிகழ்ந்தது. அம்முறை மட்டமான கயிறைத் தேர்ந்தெடுத்து சட்டைப்பையில் கடிதத்துடன் உத்தரத்தில் தொங்கினான். கயிறு வாட்டமாய் இருந்திருந்தால் காரியம் அன்றே முடிந்திருக்கும். கடந்து உயிர் மீண்ட நான்கு முறைகளிலும் அவன் சட்டையில் கடிதங்களுடனே இருந்துள்ளான். உயிர் மீண்டு வந்ததால் கடிதங்களின் முக்கியத்துவம் செத்தொழிந்திருந்தன. 

இத்தவணை கடிதம் உயிர்த்து விடும் என திடமாய் நம்பினான். வேறு ஒரு பதிவுக்கும் திட்டமிட்டிருந்தான். தன் மரண நேரத்தை தானே எழுதிக் காட்டும் ஜால வித்தை அது. தூக்க மாத்திரை சாப்பிடுவோருக்கு அது சாத்தியமில்லை. நெடுந்துயிலின் ஏதோ ஒரு பகுதியில் துயிலின் ஒரு கணமெனவே இருதய நிறுத்தம் சம்பவித்து விட்டிருக்கும். அவனது இரண்டாம் முயற்சியில் உறக்க வில்லைகளின் எண்ணிக்கைப் போதாமை அவனைக் கைவிட்டிருந்தது. மரண முயற்சிகளுக்கிடையே மூன்று நான்கு மாத இடைவெளிகளைப் பயின்று வந்தான் அவன். அழுத்தமான ஆள். எல்லா உண்மைகளையும் சொல்வதற்கென யாரையும் அவன் தேர்ந்தெடுத்திருக்கவில்லை. கடவுள் உட்பட. 

கடவுள் இருந்தால் சொல்லித் தெரிந்து கொள்கிற நிலையில் இருக்க மாட்டார். மூன்றாம், நான்காம் முயற்சிகள் விஷ மருந்து(ம்) முயற்சிகள். இதன் பின்னீடாக மாவட்டத் தலைநகரின் ஆஸ்பத்திரியில் குளுக்கோஸ் பாட்டிலை ஊசி வழியாய் அனுப்பும் எத்தனத்தில் நரம்புகள் துளையாயின. காதலைத் தோற்றுவிக்கும் அழகுடைய இளைஞர்கள் மரணத்தை அண்டிப் போகும் ரணவாதத்தில் ஈடுபடுவது நர்ஸகேளுக்கு தீராத ஆச்சரியம், (எண்டெ ஈகோ எந்த சுந்தரனாய குட்டனா அவன்). இம்முறை எருமை வாகனன் கைவிட மாட்டான். காரியத்தில் உறுதி இருக்கிறது. கயிற்றில் உறுதி இருக்கிறது. மலை உண்டு. மலையில் மரங்கள் உண்டு. அளவு கடந்த மலை வனத்தில் அரவமற்ற பிரதேசம் உண்டு. மாலைக்குப் பின் உயிர் மட்டும் இல்லை. இல்லை. 

வெண் பரந்த தகட்டுச் சுடரென தகிக்கும் மண்ணும், மலைக்கல்லுமான பாதை கடந்து நெரிபடும் மணற் சத்தத்தினூடே கிண்ணாரக் கல்லுக்கு அருகில் போனான். இந்தக் கலலுக்கப்பால் நூறடி நடந்தால் பாதையெனக் காணாத பாறைப் பிளவு கடந்து பாதையொன்றுண்டென களவொழுக்கம் மூலம் அறிந்திருந்தான். அந்தப் பாதை முன்னெப்போதும் அவனது செளகரியங்கருதி ஐம்பது மீட்டருக்குள்ளாக 

முடிந்திருக்கும். இப்போது மைல் கணக்கில் நீளுமாயிருக்கும். இதுவரை தோணாத ஆசை இப்போது தோன்றிற்று. கிண்ணறைக் கல்லைத் தட்டிப் பார்க்க வேண்டுமென. போன வருடத்துக்கு முன்வரை போகித்துத் திளைக்கவும், தட்டவும் திகட்டவும் தசைகள் இருந்தன. ஏற்று வாங்கப் புழைகளுடனும், ஈந்துவக்கும் முலைகளுடனும் சல்லாபித்த தினங்களின் உட்கிடக்கை வரிகளென மாறி அவனைப் புலம்போல ஆட்கொண்டு சூழத் தகித்தது. மேலும் ஒரு மிடறைக் குடித்துவிட்டு கிண்ணாரக் கல்லை நெருங்கினான். பயணங்களின்போது மினரல் வாட்டருக்குப் பதில் பீர் வாங்குகிற ஆசாமி. ரசனையான குடிகாரன் என்று கோழி வறுவல் மணத்தோடு ஊருக்கு அறிவித்திருந்தான். என்றபோதும் ‘கச்சா’வாகவே தண்ணியடிப்பதிலும் நிபுணனே. அந்தக் கல்லின் மேலாக கோள வடிவில் ஒரு கல் கிடந்தது. புதிய கற்களைத் தேர்ந்து புதிய ஓசை எழுப்பிய பெரும்பாலோர் தயாராக இல்லை என்பதனால் ஏற்பட்ட உருண்டை வடிவம் அது. காலமகாப் பரப்பில் முரசென அதிரும் ஒற்றை அதிசயம் அம் மலையிலொரு கிண்ணாரம். மனதில் இளமையும், பால்யமும் மீந்திருக்கும் யாரும் ஏற்ற இறக்கத்தின்போது இரு. மும்முறைகள் தட்டிச் செல்வர் அதை யாரும் பாராத தருணத்தில் சில சந்நியாசிகள். சிலரைத் தாள வித்வானுமாக்கியிருக்கிறது கல். தட்டுகல்லை மாற்றும் செயலில் மனம் விழையாமல் உருண்டைக் கல்லை எடுத்து கிண்ணாரக் கல்லை மேற்புறம் தட்டினான். அதற்கும் திசைகள் இல்லை என்றபோதும் மலையொட்டிய அதன் பகுதியைக் கீழ் என்றும் காற்று தடவும் பகுதியை மேல் என்றும் கொள்ளலாம். காற்றில் பரவின அதிர்வுகள். காற்றில் கலந்த சிறு ஓசை அது பரவின தூரத்தை பெரிய கண்டெய்னர் அளவினதான பொட்டலத்தில் கட்டிவிடலாம். ஆனால் ஆசைகளும், செய்திகளும் பொட்டலங்களை ஊடுருவிக் கடக்கவல்லன. 

ஈஷித் திரிந்த நெடும் பட்டியலில் எவளேனும் ஒருத்திக்காவது நினைவின் தாத்பர்யத்தில் விக்கல் எடுத்திருக்கலாம். அல்லது ஏதேனும் மதுக்கடை விற்பனையாளனுக்கு அவனது தேநீர் எண்ணிக்கையையும் மீறி, அதிர்வுகள் சுருள்வடிவம் பூணி எழுந்தன. அலைகளின் விதி வட்ட வடிவமானது. அலைச்சுருள் பொட்டலம் கடக்கும் முயற்சியில் கோட்டுத் துண்டென மாறி பயணித்தது. ஏழு கடல் இன்னும் ஆறு மலை தாண்டி பூக்கொணரும் நிர்ப்பந்தம் அதற்கில்லை. ஒற்றைக் கடலுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இருந்தன அவற்றின் சஞ்சாரம். 

கணவன் வரத் தாமதமாகுமென ‘டிஸ்க்’கில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியில் கண்ணிகளின் இடைவெளியில் அமர்ந்தது அதிர்வின் துகளொன்று. 

ராட்டை நூற்றுக்கொண்டிருக்கும் பெண்ணின் கைவளையில் கவ்விப் படரும் ஒரு கோட்டுத் துண்டு. எதிர்ச் சுற்றில் மறை இறுகும் ஆடு மேய்க்கும் கொலுசுகளில். 

உயர்மட்ட, கீழ்மட்ட என எல்லா மட்டங்களிலும் இருந்தன அவனது சரீர ஒத்தாசையும், பண ஒத்தாசையும். பணம் பொருட்டில்லை எனுமிடத்து பரிசு வழங்கல்கள். 

கிண்ணாரக் கல்லைத் தட்டி ஓய்ந்ததும் தன் மரபான பாதையில் நடக்கத் துவங்கினான். கால்களில் சிராய்ப்பே… மரணத்தின் தாழ்வாரத்தில் சாவின் பெருவிளி; விசித்திரத்தையே ஸ்திரமாய்ப் பாவிக்கும் கடைசிச் சேகண்டி ஓசை. 

விலாசத்தைச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு விண்ணுலகமெய்திய அவனது சாமர்த்தியம் நாங்கள் தகவல் பெற உதவியது. இருப்பத்தைந்தாம் தேதி மாலை ஆறு மணிக்கு ஊரில் சேதியானது. இம்முறை மருத்துவமனைச் செலவிலிருந்து, நர்ஸகேளின் வியப்பிலிருந்தும் தப்பிவிட்டான். இனி இரவில் மலையில் உடலைக் கண்டடைவது சுலபமல்ல என முடிவு செய்து விட்டு. 

காலையில் அதிநேரமே வேனிலும், காரிலுமாக மலைக்குச் சென்றோம். ஃபாரஸ்ட் ரேஞ்சர், காவல் அதிகாரி, மருத்துவர், புகைப்படக்காரர் எனப் பலரும் இருந்தனர். எங்கள் காவல் சரகத்தைச் சேராதவர்கள் அவர்கள். இதன்மூலம் மரணம் எல்லை கடந்தது என்பது உறுதியாகிறது. இதில் ஃபாரஸ்ட் ரேஞ்சர் தான் இரண்டாவதாக பிணவாசனையை நுகர்ந்து உலகுக்கு அறிவித்தவர். முதலாவது ஆள் ஒரு தேன் அடையனோ, ஆட்டிடையனோ, பிணம் சட்டையைத் தனியாக கழற்றி வைத்திருந்ததில் அதிலுள்ள விலாசத்தைப் பார்த்து ரேஞ்சர் குடும்ப மற்றும் அதிகார வட்டாரங்களுக்கு தகவலளித்து இந்தக் காலையை இவ்விதம் ஆக்கியிருக்கிறார். 

இப்போது எங்கள் மலையேற்றம். இதில் பாதிப் பேர் பாதி வழியில் தயங்கி, மயங்கி நின்று விட்டனர். அவனது தந்தை உட்பட, ரேஞ்சரின் தலைமையில் நடக்கிற பாதங்கள் கடந்த பின்னரே பாதை என 

உறுதியாயிற்று பலவழிகள். காக்கைகள் அண்டாத அடர்வழி. மரங்களின் அடர்வில் தரை இருள் போர்த்தியிருந்தது. இயக்கம் தொலைத்த பிண்டம் எனக் கண்டால் கழுகுகளுக்கு வரச் சாத்தியம் உண்டு இவ்விடம். சரிவான பயணத்தில் முழங்கால் மடித்துத் தவழ வேண்டியிருந்தது சில இடங்களில். மலை இவ்வளவு பிரமாண்டமானதென்றும் வனாந்திரங்களை உள் அடக்கியதென்றும் இப்போதே தெரிகிறது. நேற்றுப் பார்த்த ரேஞ்சருக்கு இன்று வழி தப்பிவிட்டது. ஒன்றே போல் காணும் மரங்களில் நினைவின் தகட்டை எங்கே செருகி வைப்பது, சரிந்த ஒரு பாதை தொடர்ந்து அம்மாம் பெரியவனம் துவங்குவது ஆச்சரியமாயிருந்தது. தனியாய் அல்லது இருவராய்க்கூட பிரிந்து போய்த் தேடுவதில் யாருக்கும் உடன்பாடில்லை. கிஞ்சித்தும் எதிர்பாராத கிளைகளிலிருந்து நம் கண்களை மறித்து அவனது கால்களோ. உடலோ தென்பட்டால் என்ன ஆவது. ஒற்றைப் பிணத்தை ஒற்றையாய் எதிர்கொள்வது சாவையே எதிர்கொள்வது போல-அதனினும் பயங்கரமும் கூடவாயிருக்கலாம். 

பல வழியாய்ச் சுற்றி ஒரு வழியாய்க் கண்டாயிற்று. அவனது உடல் காணும் அரை நிமிடம் முன்னதாக அனைவரும் துர்வாடை உணர்ந்தோம். பத்தில் மூணு பேர் ஓங்கரித்து வாந்தி எடுத்தார்கள். அவனது உடலோ கயிறு அறுந்து வீழ்ந்தால் அதல பாதாளத்தில் விழுமாறு அமைப்பில் ஆடிக்கொண்டிருந்தது. தொடர் சாத்தியப்பாட்டிலான மரணத்தை நேர்ந்தான் போலும். தலையழகு அவனெனக் காட்டிக்கொண்டிருக்க முகச் சதைப்பற்றுகளில் புழு வைத்திருந்தது. மரத்தின் கீழாக சரிவு துவங்கும் பகுதியில் உருகிய உடல் திசுக்களின் உணங்கல் பரவியிருந்தது. சரிவின் புள்ளி இதுவென யாரும் சுத்தமாகச் சொல்லி விட முடியாது. உடலைக் கவனமாய் இறக்கி எரிக்கும் ஏற்பாட்டை மேற்கொண்டோம். 

பையில் கடிதம் ஒன்று இருந்தது. நானறிய அவன் எந்த நண்பனுக்கும் கடிதம் எழுதியதில்லை. கடிதங்கள் என்றாலே மரணத்துக்கு முன்னதாக எழுதப்படுவது என வைத்திருந்தான். நான் உட்பட அவனது நண்பர்கள் அனைவரும் அடுத்தேழ் பிறவிகளிலும் நண்பர்கள் ஆகணும் என விரும்பினான் கடிதத்தில். தன் பெற்றோரின் துயரம் எதிரிக்கும் நேரலாகாது என இறைவனை வேண்டியிருந்தான். தன் மரணம் ‘சுயக் கொலை’ எனவும் யாரும் காரணம் அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தான். வாழ்வதற்கு காரணம் இல்லாதபோது சாவதற்கு மட்டும் காரணங்கள் எதுக்கு? அவனை அவ்விடமே தீயிட்டு முடித்தோம். சப்- இன்ஸ்பெக்டர், வி.ஏ.ஓ. மருத்துவ அதிகாரி, ரேஞ்சர், தலையாரி, என்னோடு சிலர் மட்டும் புரோமிதியஸ் சாட்சியாகி, அவனை எரித்த பின்னரே அந்த மதுக்குப்பியைப் பார்த்தோம். பாட்டிலுக்குள் தாள் வடிவம் தென்படவும் ஆவலாய் மூடி திறக்கப்பட்டது. பல்வேறு யூகங்களில் பணம், கடனெல்லாம் அவனுக்குப் பிரச்னையாய் இருந்திருக்க முடியாது. வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம் என்றெல்லாம் மக்கள் பேசியதையடுத்து மரண காரணம் அநேகமாய் பாட்டிலில் இருக்கும் என அந்த வெள்ளைத்தாள் பாட்டிலுள்ளிருந்து நெம்பி எடுக்கப்பட்டது. இன்னும் பத்து நாள் அவனை யாரும் காணாதிருந்தால் துணுக்குகளும் மிஞ்சாது ஊர்வன, பறப்பனவான மாமிச பட்சிணிகளால் தொலைந்திருப்பான். ஆனால் கண்ணாடி பாட்டில் எண்ணுறு ஆண்டுகளுக்குத் தாங்கவல்லது. 

பெயர் : சிவகுமார் 

பிறந்ததேதி: 25.07.69 கல்வி : +2 

இன்னோரன்ன, இத்தகையதை விண்ணப்பபாரம் பூர்த்தி செய்யும் யாரும் யூகித்து விட முடியும். இதன் இறுதிப் பகுதி சற்றே அதிர்ச்சியூட்டுவது. 

இறந்த தேதி:18.05.99 

இறந்த நேரம் : மாலை 5 மணி. 

நான் மீண்டெழப் பிடித்தவை நீண்ட காலம், ஒரே கேள்வி ஓயாமல் தொக்கி ஊஞ்சலாடுகிறது. 

சஞ்சலம் மிக்க என் நண்பனே! விழுமியங்கள் பொருட்டில்லை எனக் கருதி வசீகர நிமித்தம் என் பிரியத்திற்கானவனே!! ஊரில் முற்று முதலாகவும் மலைமீது எரியூட்டப் பெற்ற புதிரே! சொல்… சொல்.. 

உன் கல்லறை வாக்கியம்தான் என்னடா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *