ஆதாமும் ஏவாளும்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,709 
 
 

வானம் மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. வேலையிலிருந்து திரும்பிய ஜெயந்தி, வீடு திறந்திருப்பது கண்டு சற்று நிம்மதியானாள், “தியாகு வந்திருப்பார்…’ என்ற நினைவுடன் <உள்ளே வந்தாள்.
ஹாலில் தியாகு, “டிவி’ பார்த்தபடி இருந்தான். ஜெயந்தியின் காலடி ஓசை கேட்டு திரும்பினான். “”வா வா… பஸ் கரெக்டா கிடைக்கலியா?” என விசாரித்தான்.
“”ஆமாங்க… ரெண்டு பஸ் விட்டு, மூணாவதா, அதுலயும் நின்னுகிட்டுதான் வர முடிஞ்சுது,” சொல்லிக் கொண்டே சோபாவில், “”அப்பாடா,” என்று அமர்ந்தாள்.
“டிவி’யை அணைத்தான் தியாகு.
“”வித்யா குட்டி எங்கே?” ஜெயந்தி கேட்க, “”இன்னிக்கு ட்யூஷனாச்சே… சரி காபி சாப்பிடறியா?” தியாகு கேட்டான்.
ஆதாமும் ஏவாளும்!“”பச்… அலுப்பா இருக்குங்க. மணி வேற ஏழு ஆய்டிச்சு… பேசாம சாப்பாடே சாப்பிடுறேன்,” என்றவள் தொடர்ந்து கேட்டாள்… “”கொழம்பு, ரசம் ஏதாவது வெச்சீங்களா?”
“”இல்ல ஜெயந்தி… வழக்கம் போல சாதம் மட்டும் வெச்சேன்,” என்றான் தியாகு.
பொதுவாக தியாகுவும், ஜெயந்தியும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவர். ஜெயந்தி வரத் தாமதமானால், சாதம் மட்டும் குக்கரில் வைக்க பழகியிருந்தான் தியாகு. இன்று ரொம்ப லேட்டாக வந்திருப்பதால், சற்று அலுத்துக் கொண்டாள் ஜெயந்தி.
“”என்னங்க… ஒரு ரசம் வைக்க கத்துக்க கூடாதா… தொட்டுக்க அப்பளம், வடாம்ன்னு பொறிச்சா கூட, <உடனே சாப்பிடலாம். ரொம்ப டயர்டா இருக்குங்க… ரசம் வைக்க, கால் மணி நேரமாவது ஆவும். என்னமோ போங்க… கடமைக்கு சாதம் வச்சிட்டு, “டிவி’ பாக்கத்தான் <உங்களுக்கு நேரம் சரியாயிருக்கு. சரி… வித்யாவுக்கு காம்ப்ளானாவது போட்டுக் கொடுத்தீங்களா?”
இப்போது, சற்று சூடானான் தியாகு.
“”ம்…போட்டுக் கொடுத்தேன். என்னவோ காம்ப்ளனாவதுன்னு கேக்கற… நீ கஷ்டப்பட்டு வேலை பார்த்துட்டு வர்ற, அதுக்காக நான் என்ன செய்யணும்ன்னு எதிர்பாக்கற. ஒரு ஆம்பளையா இருந்தாலும், நீ வேலை பாக்கறதால, என்னால முடிஞ்ச உதவிய மனசாட்சிக்கு விரோதம் இல்லாம செய்யறேன்… புரிஞ்சுக்க. நான், “டிவி’ பாத்துக்கிட்டிருந்தது, உன் கண்ண உறுத்தும்ன்னு தெரிஞ்சுதான், அத அணைச்சேன். போதுமா?”
பதிலுக்கு பதில் பேசக்கூடாது என்று, ஜெயந்தியும் நினைத்தாள். ஆனால், தியாகு, “ஆம்பளையா இருந்தாலும்’ என்று சொன்னது, அவளுக்கு எரிச்சலை வரவழைத்தது.
“”என்னங்க அது, இந்த காலத்துலயும் ஆம்பளை, பொம்பளைன்னு பேசறீங்க… எப்ப ரெண்டு பேரும் வேலைக்கு போற சூழ்நிலை வந்தாச்சோ, அப்ப எல்லா வேலையையும் ரெண்டு பேரும் பழகித்தானே ஆகணும். அப்பதான நேரத்துக்கு எல்லாம் நடக்கும்.
“”பெட்காபி கொடுக்கறது, வாசல்ல டாட்டா காட்டறது, சாய்ந்தரம் டிபனோட காத்திருக்கறது, நைட்டு கை, கால் அமுக்கி விடறது இப்படி ஒரு பொண்ணு நடந்துக்கணும்ன்னா, வேலைக்கு போகக் கூடாதுங்க. நீங்க எனக்கு உதவி செய்யறத, பெரிய தியாகம் போல பேசறீங்க… அது குடும்ப வேலைங்க,” நறுக்கென்று சொல்லி விட்டு, கிச்சனுக்குள் சென்றாள் ஜெயந்தி.
யோசித்தான் தியாகு.
“சீ… எனக்கு மட்டும் சம்பளத்தில், ஒரு பத்தாயிரம் அதிகம் வந்தால், ஜெயந்தியை வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லி விடலாம். இந்த அளவு வாயும் பேச மாட்டாள்…’ மீண்டும், “டிவி’யை ஆன் செய்தான் தியாகு.
ஜெயந்தியோ, பூண்டு ரசம் வைத்தாள். டியூஷன் முடித்து வந்தாள் வித்யா. மூவரும், இரவு சாப்பாட்டை சாப்பிட, கணவனும், மனைவியும் பேசிக் கொள்ளவில்லை.
இரவு, வித்யா ஹோம் ஒர்க் முடித்து, தூங்கிய பின், திடீரென்று ஞாபகம் வந்தவளாய், “”ஏங்க… மாடியிலிருந்து துணியை எடுத்து வந்தீங்களா?” என்று கேட்டாள் ஜெயந்தி.
தியாகு சுத்தமாக மறந்திருந்தான்.
“”சாரி ஜெயந்தி… மறந்துட்டேன். நீயாவது ஞாபகப்படுத்தியிருக்கலாம்,” என்று சொன்னான்.
“”அட போங்க… நாளைக்கு வெள்ளிக்கிழமை, அந்த மெஜந்தா கலர் புடவையை கட்டணும்ன்னு துவைத்துப் போட்டிருந்தேன். இப்ப பாருங்க… தூறல்ல நனைஞ்சு போயிருக்கும். ஏன் ஞாபகம் இல்லேன்னு கேட்டா, உங்களுக்கு கோபம் வரும். ஆம்பள, பொம்பளன்னு ஆரம்பிச்சிருவீங்க.”
மறுநாள் அந்த புடவையை கட்ட முடியாதே என்ற வெறுப்பில் பேசினாள் ஜெயந்தி.
“”போதும் ஜெயந்தி… சாரின்னு சொன்னேன்ல, வேற புடவையா இல்ல… பொதுவா இந்த மாதிரி விஷயத்துல, பொம்பளைங்க கவனமா இருக்கணும் தெரிஞ்சுக்க… இப்பவும் சொல்றேன், என்ன தான் வேலை பார்த்தாலும், சம்பாதிச்சாலும், உன்ன மாதிரி என்னாலும், என்ன மாதிரி உன்னாலும் நடந்துக்க முடியாது. கடவுளோட ரெண்டு வித்தியாசமான படைப்புல, சில வித்தியாசங்கள் இருக்கத்தான் வேணும். இனிமே காலம் மாறுது, ப்ராக்டிக்கலா பாருங்கன்னு நெனைச்சுக்கிட்டு, ஆம்பள, பொம்பள சமம், ரெண்டு பேருக்கும் ஒரே மனசுதானே, எந்த வேலையையும் யாரும் செய்யலாம்ன்னு வியாக்யானம் பேசாத,” பதிலுக்கு எரிச்சல் காட்டினான் தியாகு .
ஜெயந்திக்கு கோபமும், அழுகையும் வரும்போல் இருந்தது. “சீ… ஒரு ரசம் வைக்கக் கூடாதா, மாடியிலிருந்து துணி எடுக்க கூடாதா என்று கேட்டால் கூட, ஆண், பெண் பேதம் கொள்கிறாரே இந்த மனிதர், என்னதான் காலம் மாறினாலும், இந்த ஆண்கள் மனதில், தான் ஒரு ஆண் என்ற எண்ணம் அல்லது திமிர் இருக்கத்தானே செய்கிறது…’
“”ஆமாங்க… நான் வியாக்கியானம் பேசல, எப்ப தாலின்னு ஒண்ண கட்டிகிட்டு, உங்களோட கிளம்பி வந்தேனோ… அப்பவே நான் ஒரு பொண்ணு மாதிரி தான் நடந்துகிட்டேன். நீங்களா எங்க கூட வர்றீங்க… அப்புறம் என்னத்த, சமம், கிமம்ன்னு பேச முடியும்… கொழந்தையும் நாங்கதான் சுமக்கணும், பெத்துக்கணும்… கடவுள் அப்படி செய்துட்டான். ஆனாலும் சொல்றேங்க… என்னையும் ஒரு சமமான மனுஷியா நீங்க நெனைக்கிற காலம் வரும். சமம்ன்னு மட்டுமில்ல, ஒரு படி மேலேயும் பாராட்டுவீங்க. அப்ப பாத்துக்கறேன்,” சொல்லி விட்டு, தூங்க முற்பட்டாள்.
அதற்கு மேல் அவ்விஷயத்தை தொடர விரும்பவில்லை தியாகு. அவன் நிறைய தத்துவ புத்தகங்களை படித்திருந்தான். உண்மையில், மனைவி, பெண் என்பதால் மட்டம் என்று நினைப்பவன் அல்ல, சைக்காலஜிபடி, ஆண் மனம், பெண் மனம் பற்றி அறிந்திருந்தான். ஆண் மனதை விட, பெண் மனம் உறுதியானது, கடினமானது என்று உணர்ந்திருந்தான். ஆனால், தொடக்க நிலையில் பெண் மனது பலகீனமானது என்றும் புரிந்து வைத்திருந்தான்.
இரண்டு நாட்கள் ஓடியிருக்கும். சகஜ நிலைக்கு திரும்பியிருந்த ஜெயந்தி, ஒரு மதிய வேளையில் தியாகுவிற்கு போன் செய்தாள்.
“”என்னங்க… எனக்கு பிரமோஷன் வந்திருக்கு, ஐயாயிரம் கூட வரும்ங்க…”
“”வெரி குட் ஜெயந்தி… மீதிய வீட்ல பேசிக்கலாம்,” லைன் கட் ஆகியது. ஜெயந்தியோ வருத்தமானாள். ஏன் இந்த அசுவாரஸ்யம்?
மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் தியாகுவிடம் கேட்டாள்.
“”ஏங்க டல்லா இருக்கீங்க… என் பிரமோஷன் பத்தி பெருசா எதுவும் கேக்கலியேங்க?”
சிறிது நேரம் அமைதியாக இருந்தான் தியாகு.
“”ஜெயந்தி… உனக்கு பிரமோஷன் கிடைச்ச சந்தோஷத்த, ரொம்ப கொண்டாட முடியாதபடி, எனக்கு ஒரு ப்ராப்ளம் வந்திருக்கு. பயப்படாத… பொறுமையா கேளு. எங்க கம்பெனியை, இந்த ஊர்ல ஆரம்பிச்சதுக்கு காரணமே, வரி கிடையாது என்ற விஷயம்தான். அந்த சலுகைக்கான அஞ்சு வருஷ பிரியட் முடிஞ்சு போச்சு. இப்ப சத்தீஸ்கர் மாநிலத்துக்கு, எங்க கம்பெனி மாறப் போகுது.
“”காரணம், அங்க தொழில் வளர, அந்த கவர்மென்ட், முதல் அஞ்சு வருஷம் வரி விலக்கு தருவாங்க. இது, கம்பெனி எடுத்த முடிவு. ஒண்ணு, நானும் சத்தீஸ்கர் போகணும். இல்ல வி.ஆர்.எஸ்.,ல வீட்டுக்கு வரணும்.”
தியாகு சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
“”வேண்டாங்க… நீங்க எம்.பி.ஏ.,ங்க… வேற வேலை கிடைக்கும். இந்த கம்பெனில தர்ற பணத்த பேங்க்ல போட்டு, வர்ற வட்டிய வச்சு, அடுத்த வேலை கிடைக்கிற வரைக்கும் சமாளிச்சுக்கலாங்க,” என்று ஆறுதல் சொன்னாள் ஜெயந்தி. அவள் அதிகமாக கவலைப்படாதது, தியாகுவிற்கு பெரிய ஆறுதலாய் இருந்தது.
அடுத்த ஆறே மாதத்தில், தியாகுவின் கம்பெனி மாநிலம் மாறியது. அவர்கள் கொடுத்த பத்து லட்சமும், பேங்கில் டெபாசிட் ஆனது. இப்போது தியாகுவின் வேலை, “இன்டர்நெட்’டில் வேலை தேடுவதே என்றானது.
அதே நேரம், அவனது மற்ற அன்றாட பணிகள் அடியோடு மாறின. காலையில் சீக்கிரம் எழுந்தான். பாலை காய்ச்சினான்; காபி போட்டான். ஜெயந்தியுடன் சமையலுக்கு உ<தவினான். வித்யா வாடிக்கையாக சென்ற ஆட்டோவை நிறுத்தி, இவனே, ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டான்; மாலை அழைத்து வந்தான். ஜெயந்தியையும் பஸ் ஸ்டாப் கொண்டு போய் விட்டான்.
இடைப்பட்ட நேரத்தில், வீட்டை ஒழுங்கு படுத்தினான். வேலைக்காரிக்கு, துணிமணி பாத்திரங்கள் எடுத்துப் போட்டு, திரும்பவும் பத்திரப்படுத்தினான். அத்துடன் சில கம்பெனிகளுக்கு, “இன்டர்வியூ’வுக்கும் சென்றான்.
தியாகுவின் துணை, ஜெயந்திக்கு எவ்வளவோ <உதவியாய் இருந்தது. பொருளாதாரத்தில் பெரிய இழப்பு இல்லையெனினும், தியாகு இப்போது ஹவுஸ் ஹஸ்பெண்டாக மாறியது, ஜெயந்திக்கு பாவமாக இருந்தது.
இப்படி ஒரு மாதம் கழிந்தது.
ஒரு நாள், “”ஏங்க… நீங்க எம்.பி.ஏ., கேண்டிடேட், எக்ஸ்பீரியன்ஸ்ட் வேற, அப்படியுமா வேலை கிடைக்கல?” என்று கேட்டாள் ஜெயந்தி.
அவளையே உற்றுப் பார்த்தான் தியாகு.
“”வேலை கிடைக்காம இல்ல ஜெயந்தி… நான் தான் அவாய்ட் செய்றேன்.”
“”ஏங்க?” பதறினாள் ஜெயந்தி.
“”ஏன் பதட்டப்படற ஜெயந்தி. <உனக்கு அஞ்சாயிரம் கூட வருது; பேங்க் வட்டி பத்தாயிரம் வருது. வருமானத்துல பெரிய லாஸ் இல்லியே… நான் வீட்ல முன்ன விட, நிறைய ஹெல்ப் செய்றேன். உனக்கும் நிம்மதியா இருக்கு.
“”இன்னும் கொஞ்ச நாள்ல, சமையல் முழுசா கத்துப்பேன். அப்பறம் உனக்கு எந்த வேலையும் கிடையாது ஜெயந்தி… நீ நிம்மதியா ஆபீஸ் வேலைய மட்டும் செஞ்சா போதும். எனக்கு இது புடிச்சிருக்கு, ஒரு திருப்தி இருக்கு. உனக்கும், வித்யாவிற்கும் ரொம்ப கான்ட்ரிப்யூட் செய்ற சந்தோஷம் இருக்கு. இது இப்படியே தொடரட்டுமே ஜெயந்தி.”
தியாகு ஆர்வமாகச் சொல்ல, ஜெயந்தியோ முறைத்தாள்.
“”பைத்தியமா நீங்க… வேலை புருஷ லட்ஷணம்ங்க. இந்த வேலைல திருப்தி இருக்கா… நீங்க வேலைக்குப் போனாலும், இதெல்லாம் எப்படியோ நடக்கும். வேலைக்கு போனா, பணம் வரும்கிறதால சொல்லலீங்க… வேலைக்கு போவது ஒரு கவுரவம். எங்க வீட்ல, எம்.பி.ஏ., மாப்ள, துணி காயப்போடறான்னு சொன்னா, அது நல்லாவா இருக்கும். உங்கள என்ன சொல்வாங்க…”
“”பொண்டாட்டிக்கு சேவகம் பண்றான்னுதான…”
“” எல்லாம் தெரிஞ்ச நீங்க, இத புரிஞ்சுக்கலியா! நீங்க வீட்ல <உட்கார்ந்து, நான் வேலைக்கு போய்ட்டு வர்றது, எனக்கே கூட என்னவோ மாதிரி இருக்குங்க. உடனே, உங்க எண்ணத்த மாத்திங்கங்க. குறைச்ச சம்பளம்ன்னா கூட, ஏதோ ஒரு வேலைய ஒத்துக்கங்க. மானத்த வாங்காதீங்க.”
இதை எதிர்பார்த்தாலும், ஆச்சரியப்படுவது போல் நடித்தான் தியாகு.
“”என்ன ஜெயந்தி நீ… காலம் எவ்வளவோ மாறுது. இதுல, வேலை புருஷ லட்ஷணம்ங்கிற… எத்தனையோ வீட்ல, பல பெண்கள் ஹவுஸ் ஒய்ப்பா தான் இருக்காங்க. ஆண் பெண்ல, ஒருத்தர் தான சம்பாதிக்கறாங்க. நம்ம வீட்ல, அது பெண்ணா இருந்துட்டு போகட்டுமே.
“”யாராவது கேட்டா, எல்லாத்துலயும் ஆணும், பெண்ணும் சமம்ன்னு வரும்போது, இது மாதிரி ஆண் வீட்லயும், பெண் வேலைக்கு போற மாதிரியும், ஏன் இருக்கக் கூடாது. பெண் வேலைக்கு போகாதது, ஒரு ஆணுக்கு கவுரவ குறைச்சலா இல்லாத போது, ஒரு ஆண் வேலைக்கு போகாதது, பெண்ணுக்கு கவுரவ குறைச்சலா இல்லாமதான இருக்கணும். நல்லா யோசி ஜெயந்தி,” சொல்லி விட்டு அமைதியானான் தியாகு.
ஜெயந்திக்கு குழப்பமாக இருந்தது. அவன் எதையோ இடித்துச் சொல்வது, புரிவது போல இருந்தது.
“தியாகு சொல்றது போல, ஒரு வருமானம் போதுமானதாக இருக்க, மற்றொருவர் வீட்டைக் கவனிப்பது, அது ஆணாக இருக்கும் பட்சத்தில், அது ஏன் சமூகப் பார்வையில் ஏளனமாகப் படுகிறது? அதுவே, பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அது, அந்த ஆணுக்கு, “பெண்டாட்டியை வேலைக்கு அனுப்பாமல் காப்பவன்’ என்று பெருமையாக அல்லவா இருக்கிறது? பொதுவாக ஆண், பெண் சமம் என்பது, எந்தப் பார்வையில் இருக்க வேண்டும்; இருக்க முடியும்? அது, ஏன் இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாக இல்லை? பிறகு காலம் மாறுகிறது என்பது பொய்தானே…’ என நினைத்தாள்.
மற்றொரு நாள் தியாகுவிடம், ஜெயந்தி கனிவாகப் பேசினாள், “”என்னை மன்னிச்சிடுங்க… ஆணும், பெண்ணும் எல்லா விஷயத்துலயும், எல்லா நேரத்துலயும் சமமா இருக்க முடியாதுங்க. பணம் சம்பாதிக்கறத மட்டும் வச்சு, ரெண்டுபேரும் சமம்ங்கிறது அற்பமான வாதம்தாங்க, பணம் பற்றாக்குறையைப் போக்கும்… ஆனா, குடும்ப அமைப்புக்கு, பெண்ணும், அவள் பங்கும் ரொம்ப முக்கியம்தாங்க. ஆணுக்கு உரிய மரியாதையை தர்ற குணம்தாங்க, பெண்ணுக்கு நல்ல மரியாதையைத் தரும். அதே மாதிரி, பெண்ண அனுசரிச்சு நடக்கற குணம்தாங்க, ஆணுக்கு நல்ல மரியாதையைத் தரும். இது தாங்க நம்ம சமூகம். இத நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேங்க. நீங்க வேலைக்குப் போறதுதாங்க, எனக்கு கவுரவம், ப்ளீஸ்…”
ஜெயந்தி புரிந்து கொண்டதை <உணர்ந்து, வேலைக்கு செல்வதென்று தியாகுவும் முடிவெடுத்தான்.

– கீதா சீனிவாசன் (ஜூலை 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *