ஆண் குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2014
பார்வையிட்டோர்: 8,129 
 

“ மூணாவதும் பெண் குழந்தையா?….இனி என்னடா செய்வது?…..ஸ்ருதிக்கு ஆண் குழந்தை பாக்கியமே இல்லே!….நீ பேசாமே உங்க அத்தை பெண் மாலதியை இரண்டாம் தாரமா செய்துக்கோ!….உன் அத்தையும் பெண் கொடுக்க தயாரா இருக்கா!….நம் சொத்துக்கும், குலத்திற்கும் ஒரு ஆண் வாரிசு கட்டாயம் வேண்டுமடா!….நீ குழந்தையைப் பார்க்க திருச்சி போகும் பொழுது ஸ்ருதியிடம் எப்படியாவது சொல்லி ….அவ சம்மதத்தை வாங்கி விடு….மத்ததை நான் பாத்துக்கிறேன்!…..”

“ ஏம்மா!….ஸ்ருதி பெண்ணியம் அது இதுனு பேசற படிச்ச புதுமைப் பெண்!….இந்த விஷயத்தை அவளிடம் சொன்னா கொதித்துப் போய் சண்டைக்கு வந்திடுவா!…அவகிட்ட சண்டைப் போட என்னால் முடியாதம்மா!…”

“ அவளை மிரட்டி சம்மதம் என்று ஒரு கையெழுத்து வாங்க உனக்கு துப்பில்லே!… நீ எல்லாம் ஆம்பிள்ளையாடா?…”

“ அம்மா!…நீ புரியாத பேசாதே!…நான் மெதுவா ஆண் குழந்தை இல்லாத குறையைச் சொல்லி, உங்க வருத்தங்களை எல்லாம் அவளிடம் நாசுக்காகச் சொல்லிப் பார்க்கிறேன்!…”

“ அதெல்லாம் எனக்குத் தெரியாதடா!….எனக்கு ஒரு பேரன் கிடைக்க அவ சம்மதத்தோட நீ இங்கு வர வேண்டும்!….”

“சரியம்மா!….”முணகிக் கொண்டே போனான் சக்தி.

திருச்சியில் ஸ்ருதியின் வீடு.

அறையில் ஸ்ருதியும், சக்தியும் தனியாக இருந்தார்கள்.

மெதுவாக அம்மா ஆண் குழந்தைக்கு ஆசைப்படும் விஷயத்தை தட்டுத் தடுமாறி சொன்னான் சக்தி.

“ஸ்ருதி!…எனக்கு கூட ஆண் குழந்தைனா ரொம்ப இஷ்டம்!…உன் விருப்பம் தெரிந்தால் அது பற்றி யோசிக்கலாம்!.” என்றான் சக்தி மெதுவாக.

“ என்ன அப்படி சொல்லிட்டீங்க?.எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? உங்கள் மூலம் எனக்கு ஆண் குழந்தை பிறக்க வழி இல்லைனு உங்க டெஸ்ட் ரிசல்டைப் பார்த்த டாக்டர் முதல் நாளே என்னிடம் சொல்லிட்டாரு! அது எனக்குகூட பெரிய குறையாதானிருந்தது!..எனக்கும் ஆண் பிள்ளைனா கொள்ளைப் பிரியமுங்க!… எனக்குத் தெரிந்த ஒரு ஸ்பெலிஸ்ட் டாக்டரம்மா இங்கு இருக்கிறாங்க!…பொருத்தமான விந்தணுவை கர்ப்ப பையில் விடும் ஒரு முறை இருக்காம்! அதன்படி தக்க ஏற்பாடு செய்து ஆண் குழந்தை எனக்கும் பிறக்க ஏற்பாடு செய்து கொடுப்பாங்க!…எனக்கு கூட பூரண சம்மதம் தான்!…அத்தை அந்தக் கால மனுஷி…எப்படி நினைப்பாங்களோனு தான் எனக்கு சந்தேகமா இருக்கு!..நீங்க எப்படியாவது அத்தையிடம் சொல்லி அத்தையின் சம்மதத்தை வாங்கிட்டு வந்திடுங்க! !நாம அந்த டாக்டரைப் பார்ப்போம்!.”

காலம் எப்படியெல்லாம் மாறி விட்டது! இப்படிக் கூட பெண்கள் சிந்திப்பார்கள் என்று சக்தி கனவில் கூட நினைக்கவில்லை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *