“எழுத்தாளனுக்கு இரண்டாவது பிரம்மா என்று ஒரு பெயர்; உண்மைதான். முதற் பிரம்மா எழுத்தாள னைப் படைத்தான்; படைக்கப்பட்டவன் தனது ‘படைப் பு’களிற் பலரைச் சிருட்டித்தான். வாழத் துடிப்பவர்களை அநியாயமாகக் கொன்றும், சும்மா போகிறவனைக் காத லிக்கச் செய்து கலங்க வைத்தும், கிழவனைக் குமரனாக்கிக் குமரனைக் கிழவனாக்கி, நல்லவனைக் கெட்டவனாக்கிக் கெட்டவனை நல்லவனாக்கி……. இப்படியெல்லாம் செப் பிடு வித்தையை மனம்போனபடி செய்து, அதனாற் கிடைக்கும் அற்ப மனநிம்மதியில் திருப்தியடைந்து ……. அதெல்லாம் சரி, இவற்றையெல்லாம் நானிங்கு ஏன் எழுத வேண்டும்…?”
“இதுகூடவா தெரியாது? நீயும் ஓர் இரண்டாவது பிரம்மாவாக முயற்சிக்கின்றாய்!”
“சீச்சி! அப்படிப்பட்ட எண்ணமொன்றும் இல்லை!”
“சும்மா சொல்லு! ஏன் மறைக்கிறாய்? வெட்கப்படாதே…!”
“நானேன் வெட்கப்படவேண்டும்?”
“பொய் சொல்வதிற் கூட உனக்கு ஒரு திருப்தி! எழுதப்பா, எழுது… கிறுக்கித் தள்ளு …. எழுத்தாளனாகிவிடலாம் .!”
“என்னத்தைப்பற்றி எழுதுவது…?”
“இருக்கவே இருக்கிறதே காதல் ….?”
“காதலைப்பற்றியா …? எல்லா இரண்டாவது பிரமாக்களும் காதலை அச்சு வேறு ஆணி வேறாகப் பிய்த்து, அலசி ஆராய்ந்து விட்டார்களே? அதைப்பற்றியா…?”
“பின் எதைப்பற்றி? உனக்குத் தெரியுமா ..? பசி, காதல் இரண்டையும் தவிர உலகத்தில் வேறென்னவிருக்கிறது? நடைபெறும் செயல்கள் யாவும் ஒன்று பசிக்காக, அல்லது காதலுக்காக! வாழ்க்கைப் போராட்டம் பசிக்காக! காதல் …”
“அதுவும் ஒருவித பசிக்காக!”
“குதர்க்கம் பேசாதே! … பசி, காதல் இரண்டில் எதைப்பற்றியாவது ஒரு கதையைப் படையேன்?”
“முன்னது பற்றி எனக்குத் தெரியாது! நான் அதை அனுபவித்ததில்லை…!”
“அப்படியானால் பின்னதைப்பற்றி எழுதேன்?”
“எதை. ? காதலைப்பற்றியா?”
“ஏன் ஒருவிதமாகக் கேட்கிறாய்? காதலில் உனக்கேன் இவ்வளவு வெறுப்பு?”
“காதலில் ஒன்றும் வெறுப்பில்லை! காதற் கதைகளில் தான் வெறுப்பு ..!”
“அப்படியானால் நீ எழுதவே மாட்டாயா?”
“எழுதுகின்றேன் …… காதலை ஒரு புதுக்கோணத்தில் ஆராய்ந்து ..”
“ஏழை ஒருவனையும், பணக்காரி ஒருத்தியையும் காதலிக்கச் செய்து பின், பணத்தைக் காரணம் காட்டிப் பிரித்து ……”
“நிறுத்து, நிறுத்து! உப்புச்சப்பற்ற பழையவிடயம்!”
“பின் … தாழ்ந்த சாதியில் ஒருவனுக்கும், உயர்ந்த சாதியில் ஒருத்திக்கும் காதலுண்டாக்கி……”
“இது என்ன புதுக்கோணமா?…”
“ஓ! இப்படி எழுதப்போகின்றாயா? மதத்தால் வேறு பட்ட இருவரைப் பிணைத்து, பின் மதத்தைக் காரணம் காட்டி…”
“இதிலென்ன, புதுமை இருக்கிறது?”
“புதுமை …? புதுமை ….?”
“உன் தொல்லை பெருந்தொல்லை! சிறிது அமைதியாக என்னை எழுதவிட மாட்டாயா?”
“விட்டுவிடுகிறேன்! நீ விரும்பாவிடில் நான் ஏன் துள்ளப்போகின்றேன். ஆனால், ஒன்றை மட்டும் கூறி விடு …!”
“என்ன …”
“உன்னை அறியாமல் உன் கண்கள் ஏன் கலங்குகின்றன? உன் நண்பன் பாலசுப்பிரமணியத்தை எண்ணிக் கொண்டாயா?”
“பாலா! பாலா!! பாலா!! …. ஐயோ! நீ என்னைக் குழப்பிவிட்டாய். வேதனைப்படுகின்றேன்!”
“பிரசவவேதனையில் தான் இரண்டாவது பிரமாக்க ளின் படைப்புகள் பிறக்கின்றன!…”
“வேதனையில் தான் அவன் கதையும் முடிகிறது!”
“வேதனையில் தானே அவன் கதை முடியவேண்டும்? காதலித்தவள் ஏமாற்றினாள், என்பதற்காக அவளையே?…”
“நீ கூடவா அவனைக் குற்றவாளியாக்குகிறாய்? மனமே! உனக்காக அவன் கதையைக் கூறுகிறேன், கேள்!”
அவன் சமாதியில் நான் இரண்டாவது பிரம்மா ஆகிறேன்.
ஊஞ்சல்கள் இரண்டும் மெதுவாக ஆடுகின்றன, ஓர் ஊஞ்சலில் இருக்கும் பாலசுப்பிரமணியம் என்னைப்பார்த் துச் சிரிக்கின்றான்; எண்ணெய் காணாத ஊஞ்சற் சங்கிலி கள் பயங்கரமாக ஓலமிடுகின்றன. மேல் வளையம் கூட நன்கு தேய்ந்து காட்சி தருகிறது.
காங்கேசன் துறை வீதியும், அரசடி வீதியும் சந்திக் கும் இடத்திற்குத் தட்டாதெருச் சந்தி என்று பெயர். அத்தட்டாதெருச் சந்தியின் வடமேற்குப் பக்கத்தில் மாநகர சபையினரால் ஒரு ‘பாக்’ அதாவது பூந்தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு பக்கத்தில் அறி வை ஒளியாக்கும் சனசமூக நிலையம்; மறு பக்கத்தில் நக ரை ஒளியாக்கும் மின்சார நிலையம். இவற்றினிடையே அமைந்துள்ள இடத்தைப் பூந்தோட்டம் என்று கூற முடியாவிடிலும், அங்குள்ள சில பூச்செடிகளும், சறுக்கி விளையாடுவதற்காகக் கட்டப்பட்டிருக்கும் ‘ சறுக்கீசும்’, இரண்டு ஊஞ்சல்களும் பூந்தோட்டந்தான் எனச் சாட்சி கூறிக்கொண்டிருக்கின்றன.
பெரும்பாலும் மாலைவேளைகளில் அந்த இரு ஊஞ்சல்களும், எங்களிருவரால் ஒருநாளைக்கு ஒரு தரமாவது ஆடும் பாக்கியத்தைப் பெற்றன.
பாலசுப்பிரமணியம் என்னைப் பார்த்துத் திரும்பவும் சிரிக்கின்றான்; நான் அவனைப் பார்த்துச் சிரிக்கின்றேன்.
“ஏன் சிரிக்கிறாய்?” என அவன் என்னைக் கேட்கின்றான்; நான் திரும்பவும் சிரிக்கின்றேன்.
“நானல்லவா அதை உன்னிடம் கேட்கவேண்டும்?”
“நான் ஏன் சிரிக்கிறேன் தெரியுமா? மகிழ்ச்சி உள் ளத்தில் நிறைந்திருக்கிறது ……. சிரிக்காமலிருக்கமுடிய வில்லை! சும்மா சிரிக்கிறேன்! நீயேன் சிரிக்கிறாய் …?”
“நீ சிரிப்பதைக் காண எனக்குச் சிரிப்பாக விருக்கி றது! பாலா! சும்மா சிரித்தால் என்ன அர்த்தம் தெரியுமா….?”
“பைத்தியம் என்கிறாயா?”
“இல்லை ….. உன்னைக் ‘காதலன்’ என்கிறேன்! பைத் தியம், கவிஞன், காதலன் இவர்கள் மூவரும் ஒன்றிற்குள் அடங்குவர் …!”
அவன் ஊஞ்சலை உன்னியாடுகிறான்; அவன் முகத் தில் மகிழ்ச்சி கூத்தாடுகிறது; கண்களிற் பெருமித உணர்வு கோடிடுகிறது; தனக்குள் சிரித்துக்கொள்கிறான்.
“சென்றவிரவு நடந்ததை உனக்கு நான் சொல்லவில் லையே .!”
நான் அவனை விழித்துப் பார்க்கின்றேன்.
“ஓ! அப்படியானால் நேற்றிரவு நீ அவளைச் சந்தித்தாயா?”
அவன் அருகே அவள் அமர்ந்திருக்கிறாள்;அவன் அவ ளைப் பார்த்தபடியிருகின்றான். மரங்களை ஊடறுத்து வந்த நிலவுக்கதிர்கள் அவள் உடலிற் படிகின்றன; சிவப்பான அவள் உடலைப் பார்க்கின்றான். இருவரிடையேயும் நில விய அமைதியை, அவள் கீறுகிறாள்:
“பாலா! என்ன மௌனமாகிவிட்டீர்கள்? ஏதாவது கதையுங்களேன்!”
“கதைப்பதா … ராஜாத்தி! உன்னைப்பற்றிக் கூறட்டுமா ..?”
“எங்கே … கூறுங்களேன்?”
“கனலில் இழைத்த உடல்! … உன் விழிகள் நிதம் கனவில் மிதப்பன! … உன் இதழ் நறுமதுவைப் பிலிற்றும்… குழலோ கருமுகிலைப்பழிக்கும்…. முறுவல் எப்படி யிருக்குந் தெரியுமா, ராஜாத்தி?… முறுவல் ஒளிக் கதிரை நிகர்த்தும் …!”
ஆசையை விழிகளில் தேக்கி, அவனை விழிகளாற் சிறைபிடித்த அவள் உதட்டைக் கடித்து அழகு காட்டுகி றாள்; காற்றிலே அவள் தலைமயிர் ஊசலாடுகிறது; இப்போது அவள் கலகல வெனச் சிரிக்கின்றாள்.
“நீங்கள் கவிஞராகிவிட்டீர்கள், பாலா!”
அவன் அவள் கரங்களை எடுத்துக்கொள்ளுகின்றான்.
“ராஜாத்தி”
“என்ன…?”
“எங்கோ பிறந்த நாம், எங்கோ சந்தித்தோம் ! பிறந்த போதே பிணைக்கப்பட்டு விட்டோமா …?”
அவள் அவனை நிமிர்ந்து பார்க்கின்றாள்.
“பாலா…”
“என்ன…”
“இலக்கியத்தைப்பற்றி யெல்லாம் கூறுவீர்களே? சிறிது கூறுங்களேன்..?”
“கற்புக்கரசி கண்ணகியைப் பற்றிக் கூறவா? தாசி வீட்டிற்குக் கணவனைக் கூடையிற் சுமந்த நளாயினியைப் பற்றிக் கூறவா? கணவனுயிரை யமனிடமிருந்து மீட்ட சாவித்திரியைப்பற்றிக் கூறவா?”
அவன் கண்களில் ஒருவித ஒளி.
“வேண்டாம், வேண்டாம்! கற்புக்கரசிகளைத் தான் உங்களுக்குப் பிடிக்குமோ?”
“பெண்களால் பெருமை பெற்றது, நம் நாடு , ராஜாத்தி!”
அவள் அவன் மார்பிற் சாய்கிறாள்.
“நேரமாகிவிட்டது. பாலா! வரட்டுமா?”
“அதற்குள்ளாகவர்…”
“எவ்வளவு நேரமாகிவிட்டது! யாராவது எழுந்து வந்திடுவினம்! நான் போறேன் …. என்ன!”
அவன் விடைகொடுக்கிறான் : ‘இச்’சென்ற ஒலி இரு ளிடையே ஒலித்து மறைகிறது.
என் நண்பனின் காதல் இவ்விதமாக வளர்ந்தது; தன் காதல் அனுபவங்களையும், தான் அவளைச் சந்தித்து அளவளாவியவைகளையும் ஒன்று விடாமல், ஊஞ்சலில் அமர்ந்தபடி, அவன் எனக்குச் சொல்வான். எனக்கு எதையும் கூற அவன் வெட்கப்படவில்லை. அவன் கூறிய வற்றிலிருந்து, இருவருடைய காதலும், கதைகளிற் படித் தது போன்ற தெய்வீகக் காதல் என நான் எண்ணிக் கொள்வேன். என் நண்பனை மணக்கோலத்திற் காண நான் துடித்தேன். எவ்வளவு உரிமையோடு அவர்கள் பழகினார்கள் …. ஆனால்…
அவள் அவனருகே அமர்ந்திருக்கின்றாள்; கண்கள் மொழி பேசும் என்பார்களே? – அது நடந்து கொண்டிருக்கிறது. திடீரென அவள் எழுகிறாள்:
“ஐயையோ! அதோ பாருங்கள் யாரோ வருகினம்” எனப் பதறுகிறாள்.
அவன் திடுக்கிட்டு எழுந்து நிற்கிறான்.
“எங்கே , ராஜாத்தீ …?”
“பயந்துவிட்டீர்களா?” என்றவள் சிரிக்கிறாள்.
அவனுக்கு ஆத்திரமாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது; ‘நறுக்’ என அவள் தலையிற் குட்டுகிறான்.
“பாலா! இவ்வளவு உரிமையுடன் என்றும் பழகும் பாக்கியம் கிட்டுமா….?” என்கிறாள் அவள்.
அப்படிச் சொன்னவள் தான் ….?
நண்பன் ஏதோ அலுவலாகக் கொழும்பு சென்றவன் திரும்பிவரச் சிலநாட்கள் பிடித்தன. அந்தச் சில நாட்களில் இங்கு நடந்த அந்தச் சம்பவம் என்னைத் திடுக்கிட வைத்துவிட்டது; முதலிற் கேள்விப்பட்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. என்னிதயமே வெடித்து விடும் போலிருந்தது. என் நண்பனுக்காக நான் பச்சாத்தாபப்பட்டேன்.
“ஐயோ! நண்பா , நீ ஏமாந்துவிட்டாய்!”
“அவன் வந்தவுடன் இதை நான் எப்படிக்கூறப்போகிறேன்?”
ஊஞ்சல்கள் மெதுவாக ஆடுகின்றன; சங்கிலிகள் மரண ஓலம் எழுப்புகின்றன; பாலசுப்பிரமணியம் பேசுகின்றான்:
“எனக்குக் கொழும்பில் இருப்பே கொள்ளவில்லை! அவளைக் காணாது எப்படி இருக்கமுடியும்”
எனக்கு அவனை நிமிர்ந்து பார்க்கத் துணிவில்லை; பாவம், அவன் உண்மையை அறியாது பேசுகிறான். அறிந்தால் எப்படித் துடிப்பானோ? கூறுவதா, வேண்டாமா?– கூறித்தானே ஆகவேண்டும்?
“என்ன பேசாமலிருக்கிறாய்?”
அவனை நிமிர்ந்து பார்க்கிறேன்.
“ஏன் உன் கண்கள் கலங்குகின்றன?” என்றவன் பதறிப்போய் ஊஞ்சலிலிருந்து குதிக்கின்றான்; எனக்குத் துணிவு பிறக்கிறது; ஆவேசமாகப் பேசுகிறேன்:
“பாலா! அவள் உன்னை ஏமாற்றிவிட்டாள்! நீ கொழும்பில் இருந்தபோது இங்கு அவளுக்கும், கந்தை யற்ற மோன் கனகரெத்தினம் சி.சி. எஸ். சிற்கும் கலியாண எழுத்து முடிந்துவிட்டது…!”
அவன் நிலைகுலைந்தவன் போலக் காட்சி தருகின்றான்; அவன் மனதில் ஏதேதோ நிகழ்கின்றன; அவனாற் பேச முடியவில்லை; எதையோ மென்று விழுங்குகிறான்; பேயறைந்தவன் போல அவன் முகம் மாறுகிறது; மெதுவாகப் பழையபடி ஊஞ்சலில் அமர்கின்றான்.
ஊஞ்சல்கள் மரண ஓலமிடுகின்றன.
அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை; படுக்கையிற் புரண்டு புரண்டு படுக்கிறேன். என் மனம் தவியாய்த்தவிக்கிறது; அவன் நண்பனான எனக்கே இவ்வளவு வேதனை யென்றால் அவனுக்கு எவ்வளவு வேதனையாக விருக்கும்?
திடீரென நான் படுத்திருந்த அறைக்கதவு திறக்கிறது; உள்ளே யாரோ ஒருவன் நுழைகிறான்; நுழைந்தவனுக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது.
“ராஜா …!” பாலாவின் குரல் ஒலிக்கிறது; துடித்துப் பதைத்து எழுந்த நான், பதறிப்போய் விளக்கை ஏற்றுகிறேன்.
அவள் முகத்தில் ஏதோ வெறி தாண்டவமாடுகிறது; என்னை அவன் வைத்த கண் வாங்காது பார்க்கின்றான்.
“அவளை நான் கொன்றுவிட்டேன்!”
“என்ன ..?” – தீயை மிதித்தவனான நான் அவனை உடலுக்குகிறேன் :
“என்ன … என்ன சொல்கிறாய்?”
அவன் அமைதியாகப் பேசுகிறான்: “அவளை நான் கொன்றுவிட்டேன்!”
“அட பாவி! உன்னை ஏமாற்றினாள் என்பதற்காகவா அவளைக் கொன்றாய்!”
அவன் தலை, ‘இல்லை’ என்பதுபோல ஆடுகிறது.
அவன் எதிரில் அவள் நிற்கிறாள்; அவள் முகத்தில் எவ்வித சலனமுமில்லை; அவன் எரிமலையெனக் குமுறுகிறான் : அவள் முகத்தில் இருந்த செம்மை அவன் கண்களில் தெரிகிறது.
“அடி, ராஜாத்தி! என்னை நீ ஏமாற்றிவிட்டாய்? காதலிக்க ஒருவன், கைபிடிக்க இன்னொருவனா?”
அவள் சிரிக்கிறாள்.
“பாலா! ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்? அதிலென்ன? நாம் என்றும் போல் காதலர்களாகவே இருப்போம் ! அவருக்கெங்கே தெரியவா போகிறது…?”
அவன் வெறியனாகிறான்; ‘இப்படியும் ஒரு பெண்ணா?’ என அவன் மனம் கூக்குரலிடுகின்றது; பழைய சில சம்பவங்கள் கண்களின் முன் தோன்றுகின்றன – ‘கற்புக்கரசிகளைத்தான் உங்களுக்குப் பிடிக்குமா?’
அவன் அவளை நெருங்குகிறான்.
“சீ… களங்கப் பிண்டமே! உன்னைப்போன்றவர்கள் உயிருடன் இருப்பது பெண்ணினத்திற்கே மாசு! தீராத வசை!!”
அவள் பின்னடைகிறாள்; ‘இச்’சென்ற ஒலிக்குப்பதிலாக ‘வீல்’ என்ற அலறல் இருளிடையே ஒலித்து மறைகிறது.
“என்னை அவள் ஏமாற்றினாள், என்பதற்காக அவளை நான் கொல்லவில்லை! ஒருவனுக்குத் தலை நீட்டத் தயாராகவிருந்துகொண்டு…” அவன் சூனியத்தை வெறித்துப் பார்க்கின்றான்:
“இத்தகைய பெண்கள் இருப்பதிலும், இல்லாதிருப்பதே நல்லது!”
இருந்தாற்போல் அவன் இருமுகின்றான்; அடிவயிற்றைக் கையால் அமுக்கிக்கொண்டு இருமுகிறான்; முகமெல்லாம் வியர்த்துக் கொட்டுகிறது; அவன் வாய் ஒரு புறமாகக் கோணுகிறது; கால்கள் தள்ளாடுகினறன; என்னைப்பரிதாபமாகப் பார்க்கிறான்; அவன் கண்கள் குளமாகின்றன: “நானேன் வாழவேண்டும்? விஷமெனக்கு அமைதியைத் தரப்போகிறது, நண்பா!”
“பாலா!…” என நான் வீரிடுகிறேன்.
“என்னை மறந்துவிடமாட்டாயே?”
அவனை நான் மறக்கவில்லை; அவன் சமாதியில் நான் ‘இரண்டாவது பிரம்மா’ ஆனேன்.
– கதைப் பூங்கா – பல்கலை வெளியீடு, பேராதனை, இலங்கை – முதற்பதிப்பு ஜனவரி 1962
க.குணராஜா: (செங்கை ஆழியான்) ‘பரிகாரத்’தின் மூலம், தமிழ்ச் சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசைப்பெற்ற இவர், யாழ்ப்பாணம், இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்; கல்கண்டு ; கரும்பு; சுதந்திரன், கலை அமுதம், அமுதம் என்பன இவரது படைப்புக்களைத் தாங்கிய பத்திரிகைகள். இவரெழு திய ஆராய்ச்சிக் கட்டுரை-“பூமித்தாயின் மடியில் …” அமுதத்தில் தொடராக வந்த கொண்டிருக்கிறது. இலக் கிய ஆர்வம் மிக்க இவரின் மறு பெயர் — தவேந்திர ராஜா; புனைப்பெயர்-‘மணாளன்’