(ச‌ரியான‌ லூசுப்) பசங்க

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 7,237 
 

“என்ன தான் ஒரே ஊர்ல இருந்து வேலை செய்தாலும் நாமெல்லாம் பார்த்து எவ்ளோ நாளாச்சு ? இந்த வீக்கென்ட் நாம எல்லோரும் மீட் பண்ணலாம்” என்று தொலைபேசி, மின்ன‌ஞ்ச‌ல், டிவிட்ட‌ர் என்று க‌ல‌க்கிக் கொண்டிருந்த‌ன‌ர் க‌ணினியால் இணைந்த‌ ந‌ண்ப‌ர்கள்.

சனிக்கிழமை, மணி மாலை ஐந்தரை. சிறுகுழந்தையின் அழுகையாய் விடாது சிணுங்க‌ ஆர‌ம்பித்த‌ வானோடு, புக‌ழேந்தியின் செல்லும் சேர்ந்து கொண்ட‌து.

“இல்ல‌ மாப்ள, அவ்ளோ தூரம் வ‌ர‌முடியாது சொன்னா கேளுங்க‌டா. வெளியில் ந‌ல்ல‌ ம‌ழை வேற‌. இன்னோரு தரம் பார்த்துக்கலாம். ஆள‌விடுங்க‌ சாமிகளா” என்று க‌ம்ப‌ளிக்குள் சுருண்டு ப‌டுத்துக்கொண்டான். ‘இந்த‌ ம‌ழையில‌ எவ‌னாவ‌து வெளிய‌ல‌ சுத்துவானா, ச‌ரியான‌ லூசுப் ப‌ச‌ங்க‌’ என்று நினைத்து கோழித் தூக்க‌த்தைத் தொட‌ர்ந்தான்.

அபார்ட்மென்டின் ஒரு பக்கம் முழுக்க வீடுகள், ம‌றுப‌க்க‌ம் பொட்ட‌ல் காடு. பொட்டல் காட்டை ஒட்டி இருந்த அறையில் படுத்திருந்தான் புகழ். சோவென்று இறையும் காற்று, எந்நேரமும் சுவ‌ற்றை உடைத்துக் கொண்டு உள்ளே வ‌ருவ‌து போல‌ இருந்த‌து.

மீண்டும் செல்லோசை. ‘லூசுப் பசங்க தொல்லை தாங்கலையே. விடமாட்டானுங்களே’ என்று நினைத்தான். ஆனால், சிணுங்கிய‌து ர‌ம்யா.

“ஹாய் ரம்யா. சொல்லு. இன்னிக்கா உன் பர்த்டே. சொல்லவே இல்ல. ஆமா, ஆமா. எனக்கே தெரியும் ப்ராஜ‌க்ட்ல நீ பிஸி. நோ ப்ராப்ளம். செவ‌ன் த‌ர்ட்டி தான கண்டிப்பா வர்றேன். போன வருஷம் உன் பர்த்டேல உன் அப்பார்ட்மென்ட்ல மீட் பண்ணது. ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடிப் போச்சு” என்று ரம்யாவிடம் சொல்லி பாராசூட்டாய் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்தான்.

ர‌ம்யா எப்ப‌வும் யாருட‌னும் அதிக‌ம் பேச‌ மாட்டாள். அலுவலக மீட்டிங்குகளில் தான் அதிகம் பார்த்திருக்கிறான். வெளியில் எங்கும் எவருடனும் பார்த்ததில்லை. நெருங்கிய நண்பர்கள் பர்த்டே பார்ட்டிகளில் பார்த்திருக்கிறான். நார்மல் ஹோம்லி டைப். அத‌னாலேயே புக‌ழிற்கு ர‌ம்யாவின் மேல் எப்போதும் ஒரு இது இருக்கும். ஆனால் அவ‌ளுக்கு(ம்) இருக்கா இல்லையா என்றெல்லாம் அவன் க‌வ‌லைப்ப‌ட‌வில்லை.

பொட்டுப் பொட்டாய் விழுந்த தூறல், காற்றின் வேகத்தில் பல்லாயிரம் பாம்புக் குட்டிகளாய் காரின் முன் கண்ணாடியில் ஊர்ந்தது. வைப்பரைத் தட்டி குட்டிகளை அழித்தான்.

‘என்ன வேகம், சுதாரிச்சு கண்ணாடி ஏத்தறதுக்குள்ளே இப்படி நனைச்சிருச்சே’ என்று கைக்குட்டை எடுத்து, இருக்கைக் கதவையும், தன் இடதுபுற உடலையும் துடைத்துக் கொண்டான் நன்றாகவே நனைந்து போன புகழேந்தி.

எட்டு எட்டரைக்கு இருட்டும் வானம், இன்று ஏழு மணிக்கெல்லாம் இருண்டிருந்தது. முன்சென்ற கார்களின் பின்விளக்கு, மழைநீரில் செங்குருதி சிந்தி நிற்க‌, தானும் ப்ரேக் பிடித்து காத்திருந்தான் சாலைவிளக்கின் வண்ண மாற்றதிற்கு.

கருவானில் பழுத்த வெள்ளிக்கம்பியாய் வெண்மின்னல் கோடு கிழிக்க கண்கள் கூசியது. மழையின் அடர்த்தி அதிகரித்ததில் ‘சோ’வென்று பேரிறைச்சல். சிறிது நேரத்தில் எதிர்புற அணிவகுப்பு நகர ஆரம்பிக்க, இவன் பக்கம் வாகனங்கள் நிலைகுத்திய தேராய் நின்றுபோனது.

தூரத்தே, சாலை விள‌க்கின் அருகில் சிறுவிபத்து ஏற்பட்டு, இரு வாகன‌ங்கள் மோதி நிற்பது போல், நீரூற்றும் கண்ணாடிவழி மங்கலாகத் தெரிந்தது.

தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை அங்கிருந்து நகர‌ மறுப்பது போல, இப்போதைக்கு வாகன‌ங்கள் ந‌க‌ருவதாய் தெரிய‌வில்லை.

‘இன்னிக்கு என்று பார்த்தா இப்ப‌டி ந‌ட‌க்க‌ணும். அழைக்காத‌வ‌ள் அழைத்திருக்கிறாள். இன்னும் எவ்ளோ நேர‌ம் இங்கேயே நிற்க‌ப்போகிறேனோ ? ச‌ரியா அவ‌ சொன்ன‌ நேர‌த்துக்குப் போக‌முடியுமா ? கொஞ்சம் லேட்டானாக்கூடப் பரவாயில்லை’ என்று எண்ணச் சுழற்சிகள், நீர்குமிழிகள் போல்.

யாரோ ஒரு புண்ணிய‌வான் ‘ஒன்ப‌து ஒன்று ஒன்று’ அழைத்திருக்க‌ வேண்டும். ம‌ழை வெள்ள‌த்தில் ஒளி வெள்ள‌ம் சிந்தி, சீறி வ‌ந்த‌து சீருடைக் காவ‌ல‌ர் வாகன‌ங்க‌ள். சில‌ நிமிட‌ங்க‌ளில் போக்குவ‌ர‌த்து ச‌ரிசெய்ய‌ப்ப‌ட‌ சிட்டாய் ப‌ற‌ந்தான் ர‌ம்யாவின் அப்பார்ட்மென்ட் நோக்கி.

ஏழ‌ரை மணி போல் ர‌ம்யாவின் வீட்டுக் க‌த‌வைத் த‌ட்டினான்.

ஹாப்பி ப‌ர்த்டே அட்டைக‌ள், பல வண்ணப் ப‌லூன்க‌ள், சிலந்தி வலைக் க‌ல‌ர் காகித‌ங்க‌ள், அல‌ங்கார‌ கேக், என்றெல்லாம் எதிர்பார்த்த‌வ‌னுக்கு எதுவுமே இன்றி வெறுமையாய் இருந்த‌ ர‌ம்யாவின் அபார்ட்மென்ட் க‌ண்டு திகைத்தான்.

செல் எடுத்து அவள் எண்ணை அழைத்தான். எதிர்முனையில் ரம்யா.

“ஹாப்பி பர்த்டே ரம்யா. உன் வீட்டு முன்னால தான் நிற்கறேன். வீட்டில் தான இருக்கே ?”

“தேங்ஸ். ஆமா வீட்டில் தான் இருக்கேன். உன‌க்காக‌த் தான் காத்திருக்கிறேன். நீ எங்கே இருக்கே ?”

புக‌ழ் சொல்ல‌ச் சொல்ல‌, “ஹேய், யாரும் சொல்லலியா ? உனக்குத் தெரியும்னு நெனைச்சேன். நான் அப்பார்ட்மென்ட மாறிட்டேன்.”

“என்ன சொல்றே ரம்யா ?” என்றான் புகழ் இடிந்து போன குரலில்.

“ஐம் ரிய‌லி சாரி புக‌ழ். ப‌ழைய‌ இட‌த்திலிருந்து ஒரு ப‌தினைந்து நிம‌ட‌ ட்ரைவ் தான்”

“சரி, புது அட்ரஸ் சொல்லு …”

ம‌ழையிலும் வாடி வ‌த‌ங்கிய‌ செடியாய் ரம்யாவின் அப்பார்ட்மென்ட் விட்டுக் கிளம்பப் போன‌ புக‌ழேந்தி, எதிரே வ‌ரிசையில் த‌ன் ந‌ண்பர்களோடு ரம்யாவும் நிற்பது க‌ண்டு ட‌ன் ட‌ன்னாய் வ‌ழிந்தான் அசடை.

‘யாருடா லூசு’ என்ப‌து போல‌ இருந்த‌து ஒவ்வொருவ‌ரின் பார்வையும்.

ரம்யா கதவைத் திறக்க, உள்ளே புகழைத் தள்ளினர் நண்பர்கள்.

‘மவனே, இந்த மீட்டை எந்த ஜென்மத்துக்கும் மறக்கக் கூடாது நீ’ என்று நண்பர்கள் புகழை அடித்த அடியில் சற்றைக்கெல்லாம் வானம் வெளுத்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *