(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருமண மண்டபம், வரவேற்பு நிகழ்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.
“சார்…!” அழைத்தபடிக் கைக் கூப்பினான் குணா.
“வாங்க குணா!” எதிர்கொண்டு வரவேற்றார் மணமகன் ரகுபதி.
“வாழ்த்துக்கள் சார்…?”
“நன்றி குணா…!
” ” குணா ஏதோ சொல்ல தயங்கினான்.
ரகுபதிக்கு அது புரிய, “ஏதாவது சொல்லனுமா, குணா?”
“ம்…!”
“எதானாலும் தயங்காமச் சொல்லு…!”
“சார், நம்ம ஆபீஸ்ல…?”
“ஆபீஸ்ல…?… என்ன?…. சொல்லு குணா…?”
பதட்டமாய்க் கேட்டார் ரகுபதி.
“பிரச்சனையெல்லாம் ஒண்ணுமில்லே சார். ராமபிரசாத் சாருக்கு நீங்க இன்விடேஷன் வைக்கலை. விட்டுப் போயிருச்சு…?”
“ஓ…! இதுதானா! நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.”
குழப்பத்துடன் பார்த்தான் குணா.
“விட்டுப் போகலை குணா, ‘பர்ப்பஸா’, நான்தான் அழைக்காம விட்டேன்!” என்றார்.
“ஏன் சார்?” அதிர்ச்சியுடன் கேட்டான் குணா.
“ராமபிரசாத் சார், குடும்பத்தோடப் போயி, முறைப்படிப் பெண் பார்த்த பிறகு ஏதோ காரணங்களால வேண்டாம்னு நிராகரிக்கப்பட்டவங்கதான் என் ‘வுட் பீ’. அவருக்கு மட்டுமில்லே, என் மனைவிக்கும் சங்கடமா இருக்கும்தானே அவரோட வருகை…? அதைத் தவிர்க்கத்தான்…!”
ராமபிரசாத் கேட்கும்படி போனை ஆன் பண்ணி வைத்திருந்ததை ஆஃப் பண்ணி விட்டு சாப்பிடச்சென்றான் குணா.
– ஜூலை, 2023, கதிர்’ஸ்
நறுக்கென வளவளவென்று இழுக்காத கதை. அருமை.வாழ்த்துகள்!