அம்மாவும், அந்தோன் சேக்கவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 9,728 
 
 

அம்மா ஒருமுறைகூட,தன் தேவைகளுக்காகப் பிறர் உதவியை நாடியது கிடையாது.அந்த ராத்திரியில்,குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு எழுப்பியது ஆச்சரியமாக இருந்து.

“ரொம்பத் தொண்டையெல்லாங் காஞ்சு போச்சு..எந்திரிக்க முடியாம தாகம் அமுக்குது..தம்பீ..தண்ணீ கொண்டாடா… ” என்றாள்.

அவள் குரலில் மரணத்தின் நெடி ஏறி விட்டிருந்ததுது.எனக்குப் புலப்படவில்லை.இரவு ஒன்றரை மணியில் இருந்து,காலை ஐந்து மணிக்குள் நாலைந்து சொம்பு குடித்தும் தாகம் தீரவில்லை. உதடுகள் வறண்டு,பிளந்து கிடந்ததுது;துயரம் தருவதாக இருந்தது.நாக்கினால் இரண்டு உதடுகளையும் புரட்டிக்கொண்டே இருந்தாள்.ஐந்தரை மணிக்குக் கொஞ்சம் பால் கொடுத்தேன்.உறங்கப் போகுமுன்,எல்லா சமுத்திரங்களும் வற்றி தூர்ந்து விட்டதாகவும், அனைத்துக் கப்பல்களும் அதனதன் இடத்தில் தரை தட்டி நிற்பதாகவும் சொன்னாள்.தரை தட்டிய கப்பல்களில் இருந்து இறங்கிய மனிதர்கள், தவிப்புடன் கப்பலைச் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள் என்றாள்.ஏதாச்சும் கனவா?என்று கேட்டதும்,புன்னகைத்தாள்.

வீட்டில் முதல் ஆளாய் எழுந்திருக்கும் அம்மா ஏழு மணிக்குப் பிறகும் உறங்குவதால் அப்பா அதிர்ந்து போயிருந்தார்.இரவில் அம்மா தண்ணீர் கேட்டதை,தாகம் அடங்காமல் தவித்ததைக் குழப்பத்துடன் கேட்டுக் கொண்டார்.”என் சத்தம் கேட்டும் அவ எந்திரிக்காம இருக்கிறதுதான் ஆச்சரியம்” என்று நான்கைந்து முறை சொன்னபடி,கொல்லையில் பல் விளக்கிக் கொண்டிருந்தார்.தலையணையில் இருந்து தலை இறங்கி, அம்மா வினோதமாகப் படுத்திருப்பதாக வேலம்மா வந்து சொன்னதும் எல்லாம் துயரம் மிக்கதாக மாறிவிட்டது.டாக்டர் உறுதி செய்ததும்,வேலைகள் துவங்கி விட்டன.

உடனே, குளிப்பாட்டி,சுத்தம் செய்து வைப்பதற்காக, அழுதபடி பெண்கள் கூட்டம் கொல்லைப் புறத்தில் சேர்ந்திருந்து.எல்லோருக்கும் ஆள் அனுப்புகிற வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார்கள்.இரண்டாவது தெருவில் இருந்த சித்தி, அம்மாவின் முகத்தோடு முகம் வைத்து அழுது கொண்டிருந்தாள்.”எப்பிடியும் சாயங்காலம் அஞ்சு அஞ்சரைக்கு எடுத்துரணும். அக்கம் பக்கத்துல,குழந்தைங்க நிறைய இருக்கு.இப்ப கோவில் பூட்டுனாலும்,ராத்திரி சாமிக்கு வெக்கணும்.குழந்தைங்களையும் , சாமியையும் பட்டினி போட்டுறக் கூடாது” என்றார்,மாமா.

வாசலுக்கு இடதுபுறம்,தெருவைப் பார்த்துப் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பா,இறுதிவரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை.ஒரு முறை எழ முயன்று,மயக்கமாகி நாற்காலியிலேயே விழுந்தார்.அழுது கொண்டே இருந்தார்.யாரோடும் பேசவேயில்லை.என்ன ஆச்சு?எப்படி ஆச்சு?என்று கேட்டவரிடம் கூட , அழுகையே பதிலாக தந்து கொண்டிருந்தார்.விசாரிக்க வந்த சிலரின் முகத்தில் அது மிகுந்த ஏமாற்றத்தைத் தந்து கொண்டிருந்து.

அக்கா மட்டும் சென்னையில் இருந்து வரவேண்டும்.அவளும், அத்தானும் பஸ் ஏறிவிட்டதாகவும்,சாயங்காலம் அஞ்சு மணிக்குள் வந்து விடுவார்கள் என்றும் யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.யாராவது, எதையாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.எல்லாவற்றிற்கும் தலையாட்டுவது தவிர எதுவும் செய்யத் தோன்றவில்லை.எங்கும் துயரத்தின் சாயல்கள் பெருகிக்கொண்டே இருந்தன.நான் மட்டுமே அறிந்திருந்த என் ஒற்றை நிழல்,பல்கி பெருகி …எங்கும் நிழல்களின் நெரிசலில் நான் தொலைந்து கிடந்தேன்.

“தலை முடி இறக்கணும் தம்பி” என்று சொல்லி விட்டு, சித்தப்பா கூர்ந்து பார்த்தார். சம்மதம் என்று தலையசைத்தேன்.”எங்க முடியாது சொல்லியிருவியோன்னு பயந்தேன்…நம்ம புள்ளைங்க பாசமானதுங்க.. “என்று சொல்லிக் கொண்டே போனார்.

எல்லோரது இயக்கத்திலும்,ஒரு கடிகாரம் இணைந்து ஓடுவது புலப்பட்டது.சில நூறு கடிகாரங்களின் ஓசை மட்டும் உருவாகி,ஓசை பெரிதாகி,எல்லாக் கடிகாரங்களும் ஒரு சேரப் பன்னிரண்டு மணியை ஒலிக்கிற பேரோசை உள்ளுக்குள் அறைந்தது.”வாய் விட்டு அழுதுரணும்” என்று என்னை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.

அழுவதற்கான என் முயற்சிகள்தோற்றுப் போன துயரமும் என்னோடு சேர்ந்து கொண்டது. நம் துயரம் மற்றவர்களுக்குத் தெரியாது என்பதல்ல அந்தக் கவலை.சேர்ந்து அழுது கண்ணீர் பெருக்கி, ஆறுதல் கொள்வது இயலாது போனது.சிரமத்தையும்,கடுமையான மன அழுத்ததையும் தந்தது.எதுவானாலும் ,சாயங்காலம் அஞ்சு,அஞ்சரை மணிவரை தான்.

ஏதோ வேலையாக, வீட்டுக்குள் போவது மாதிரி, அம்மாவைப் பார்க்கப் போனேன்.அறையின் மய்யத்தில் அம்மா.என்ன வேலை சொன்னாலும்,உடனே அதைச் செய்ய தயாராக இருப்பதாக,இருந்து முகம். வாயின் வலது புறமிருந்து லேசாக பால் கசிந்து கொண்டிருந்து.இடது நாசியின் முகப்பில் வேர்வை துளிகள் மாதிரி ரத்தம் பூத்திருந்து..என்னைப் பார்த்த அத்தை என்னைக் காட்டி அம்மாவிடம் ஏதோ நியாயம் கேட்டது.அத்தையின் அழுகைக்குள் அமிழ்ந்து மூழ்கியது அவளது நியாயம்.என்ன வேலை சொன்னாலும்…அதிலும் அப்பா என்ன சொன்னாலும், உடனே ஒப்புக் கொண்டு சம்மதிக்கிற அதே முகத்துடன் அம்மா.

ஒரு முறைகூட மறுத்துப் பேசியதில்லை அம்மா.அக்காவுக்கும், எனக்கும் அது தீராத ஆச்சர்யம்.அம்மா மாதிரி சொன்னதை மட்டும் செய்கிற ஒரு பெண் கிடைத்தால்,அப்பா மாதிரி நிறைய சம்பாதிக்க முடியும் என்று உறவில் எல்லோரும்சொன்னார்கள்.அக்காவின் திருமணத்திற்குப் பிறகு,எனக்கும் அப்பாவுக்கும் இடையில் அதிகரித்த இடைவெளி வீட்டின் நிம்மதியைச் சீர்குலைத்தது.

“அவரு என்ன சொன்னாலும் சரின்னு கேட்டுக்க”என்றுதான் அம்மா எப்போதும் சொல்வது.”எப்படித்தான் காலமெல்லாம் அவரு சொன்னதுக்குத் தலையாட்டிக்கிட்டே இருக்க?” என்று ஒரு தடவ அம்மாவிடம் கேட்ட நாள்,மறக்க முடியாத நாளாகி விட்டது.

“உங்க அக்காவுக்கு மூணு வயசு… அதுவரைக்கும் அவரு சொல்லி,நா எதுக்கும் மறுப்புச் சொன்னதில்லை…உங்க அத்தைக்கு அவர் பார்த்த பையன வேண்டாமுன்னு சொன்னேன்.மறுத்துப் பேசுனது அதுதான் முத தடவ…அந்த மாப்பிள்ளைப் பையன எனக்கும் தெரியும்.அவன் என்னயவே ஒரு மாதிரி பாக்குற பையன்…அதனாலதான் அதக்கூட சொன்னேன்.உங்க அப்பா ரொம்பக் கோபமாகி,ரெண்டு கையையும் எம் முகத்துக்கு நேரா நீட்டிக்கிட்டு, “பொண்டாட்டின்னா சொன்ன பேச்சு கேக்கணும்;சொன்ன வேலையச் செய்யணும்; எதுத்து ஒரு வார்த்த பேசின..உன்னையும் கொன்னுட்டு, உம் புள்ளையையும் கொன்னுட்டு, நானும் செத்துருவேன்.முட்டை போடுற கோழிக்குத்தான் பொச்செரிச்சல் தெரியும்…பேருக்குத்தான் சேவல்..அந்த மரியாதையக் காப்பாத்து ” என்று சொல்லிட்டு அழ ஆரம்பிச்சுட்டாரு..அதாம் முதலுங் கடைசியும்.இனி என்னிக்கும் எதுத்துப் பேசீர மாட்டேன்.குழந்தையிலே இருந்தே அவருக்கு கொஞ்சம் மன பாதிப்பு இருந்துருக்குன்னு அப்புறதான் தெரிஞ்சுது.மத்தவங்களுக்குத் தான் இது வீடு…எனக்கு ஆஸ்பத்திரியுங் கூட..”

அக்கா வந்து சேர இன்னும் தாமதம் ஆகும் என்றார்கள்.மயானக் கரையில் காத்திருப்பது என்று முடிவானது.ஆறரை மணிக்கெல்லாம் மூலக்கரை மயானம் வந்தாகி விட்டது.அப்பாவும், அவரது வெகு சில நண்பர்களும்,உறவினர்களும்,எனது
நண்பர்களும் தனித்தனியே அவரவர் வசதிக்கு நின்றும், உட்கார்ந்தும் பேசிக் கொண்டிருந்தார்கள்.நான் மட்டும் தனியாக அம்மாவுக்குப் பக்கத்தில் உடகார்ந்திருந்தேன்.யாரோ தொட்டுக் கூப்பிட்டார்கள்,”வாங்க அந்தப்பக்கம் உக்காருவோம்” என்று எழுந்து போனேன்.

நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேனுக்கு அந்தப்புறம் நண்பர்கள் அமர்ந்திருந்தார்கள்.பற்ற வைத்த ஒரு சிகரெட்டை செல்வா என்னிடம் நீட்டினார்.புகை இதமாக இருந்து.நிறைய சிகரெட்டுகள் புகைந்து கொண்டிருந்தன.”அக்கா வர இன்னும் ஒன் அவர் ஆகும்…சமீத்துல படிச்ச கதை ஏதாவது இருந்தா சொல்லுங்க”என்றார்,செல்வா,ஆமோதிப்பது போல,எல்லோரும் மவுனமாக இருந்தார்கள்,இளங்கோ , என்னைத் தொட்டு, கதை சொல்லுமாறு ஜாடை செய்தார்.இரண்டு முறை ஆழ்ந்து புகைத்துக்கொண்டேன்..துக்கம் அடைத்திருந்த தொண்டைக் குழிக்குள் புகை சுழன்று இறங்கியது.மெல்லிய குரலில் அந்தோன் சேக்கவ் எழுதிய ‘ஆறாவது வார்டு’ கதையைச் சொல்லத் துவங்கினேன்.

”மேல் நோக்கி நீண்டிருக்கும் ஆணிகள் அடர்ந்த, சாயம் போன அந்த வேலியடைப்பு,நமது மருத்துவமனைகளுக்கும்,சிறைச்சாலைகளுக்கும் உரித்தான கேடு கெட்ட சோகத்தோற்றத்துடன் ”கதை துவங்கியது” உலகிலுள்ள வன்முறை அனைத்தும் தனது முதுகுக்குப் பின்னால் ஒன்று சேர்ந்து தம்மை விரட்டுவதாக அஞ்சி….” வீதியில் ஓடிய இவான் தீமித்ரிச்சும்,”வலி என்பது வலியைப் பற்றிய ஒர் உயிர்த்துடிப்புள்ள எண்ணமே ஆகும்.மன வலிமையின் துணை கொண்டு அந்த எண்ணத்தை விட்டொழித்தால்,வலி மறைந்து போகும்” என்று அறிந்து உணர்ந்த டாகடர் ஆந்திரேய் எபிமிச்சும்…மூலகரை மயானத்தில் திரிந்தார்கள்.

கதை முடிந்ததும்,எல்லோரும் மவுனமாக கலைந்து போனார்கள்.நான் மீண்டும் அம்மாவிடம் வந்தேன்.

இறந்து கிடந்தது அம்மாவே அல்ல; அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் அதிகாரம்.

(ஜனவரி 2008′ ‘உயிர் எழுத்து” என்ற மாத இதழில் வெளிவந்த ”பாரதி கிருஷ்ணகுமார்” அவர்களின் முதல் சிறுகதை இது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *