அம்பா வேலை தேடுகிறாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 8,617 
 
 

இவ்வாண்டுதான் பல்கலையுள் ‘உளவியல்’ படிக்கப்புகுந்திருக்கும் என் மகள் அம்பாவுக்கு ஈஸ்டருடன் இப்போது நீண்ட கோடை விடுமுறை ஆரம்பித்திருக்கிறது.

“இவ் விடுமுறை நாட்களில் நான் வேலை செய்யப்போகிறேன் டாட்” என்றாள்.

“சரி உன் இஷ்டம்” என்றேன்.

பொருத்தமான வேலைகளை இணையத்தில் தேடியதில் ஓரிடத்தில் ’ஆபீஸ் அசிஸ்டென்ட்’ என்றொரு பணி வாய்ப்புக்கிடைத்தது. ’ முதநாளே வேலை ஆரம்பித்துவிடலாம், அத்தனை எளிமையான வேலை’ என்றார்களாம். அடுத்த நாள் உற்சாகமாக இரைந்துகொண்டு அங்கே போனாள்.

அது ஒரு காப்புறுதிக்குழுமம். ’எப்படிப் புதிய பயனர்களை தொலைபேசியில் அழைத்து நட்பாகப்பேசி அக்குழுமத்தின் பலவேறுவகையான காப்புறுதித்திட்டங்களை கவர்ச்சியாக எடுத்துச்சொல்லி அவர்களை அவர்களது ஏதாவது ஒரு திட்டத்தில் நைச்சியமாக இணைத்துக்கொண்டுவிட வேண்டியது இவளுக்கான பணி.

இவளுக்கு அதற்கான பேச்சுப்பயிற்சியை அன்றே வழங்கிவிட்டு அப்படி ஒருநாளில் எத்தனைபேரை இணைத்துக்கொள்கிறாயோ அதற்கேற்ப ‘போனஸ்’ உமுண்டு என்றுஞ் சொல்லியிருக்கிறார்கள்.

ஜெர்மனியில் ஒருவரை தொலைபேசிமூலம் ஒரு ஒப்பந்தத்துள் இழுத்துக்கொண்டுவிட்டால்கூட அது அவர்களுடன் எழுத்துமூலம் ஒப்பந்தம் செய்துகொண்டமாதிரித்தான். மறுசீராய்வுசெய்யவோ, திரும்பப்பெறவோ முடியாது.

பயிற்சிமுடிந்த உடனேயே அவளிடம் 200 வரையிலான தொலைபேசி இலக்கங்களைக்கொடுத்து அவர்களை ஒவ்வொருவராக அழைத்துப்பேசச் சொன்னார்கள்.

இவளும் முதலாவது அழைப்பை ஏற்படுத்தினாள், மறு துறையில் ஒலிவாங்கி எடுக்கப்பட்டதும் குரலில் தேன்தடவிப்பேசினாள்.

“இனிய காலை வணக்கம். இது ’அம்பா’ Good Fortune காப்புறுதிக் குழுமத்திலிருந்து பேசுகிறேன் மெடம்.”

“ சரி……..வணக்கம்”

“ திரு. Hoffmann…….அவர்கள் ”

“ அவன் போனவாரம் செத்துப்போனான்…….. செத்தபிறகாவது அவனை நிம்மதியாய் இருக்கவிடுங்கடி வேசைக்குமரிகளா…….. டொக்.”

அக் கைம்பெண் தன் முரட்டுக்குரலால் இவளின் செவிப்பறைகள் கிழிய வாழ்த்திவிட்டு தொலைவாங்கியை அதிரவைத்தாளாம்.

முதநாளன்று முதல் பணியிலேயே “ வாழ்த்தும் சுபமங்களமும் ” ஒரு சேரக்கிடைத்ததில் தளர்ந்துபோய் இரண்டு நாட்கள் வீட்டிலேயே இருந்தாள்,

அம்பா உளவியல் அடிப்படைகள் தெரிந்தவள், நான் தேறுதல் சொல்லவேண்டியதில்லை. அவளாக எழுந்துகொண்டு மீண்டும் உற்சாகமாய் வேலை தேடினாள்.

***

இணையத்தில் அவந்திகா Brian எனும் பெண், தன் அரை இந்தியக்குழந்தைகளைப் பராமரிக்க ஒரு செவிலித்தாய் தேவை என்று விளம்பரம் கொடுத்திருந்தாள். இந்தியப்பெண் என்றதிலும், ஒரே சுரங்கத்தொடரியில் செல்லக்கூடியவகையில் நாலைந்து தரிப்புகள் தொலைவிலேயே அவர்களின் வீடு இருந்ததாலும் மனநிறைவுடன், அவளுக்குத் தொலைபேசினாள். அம்பாவுக்கு நேர்முகத்துக்கு ஒரு சனியன்று நேரம் குறிக்கப்பட்டது. அவந்திகாவுக்கும் இவள் ஆசியப்பெண் என்பதில் மனத்திருப்தி இருந்திருக்கும். அச் சனிக்கிழமையன்று மாலைநேரம் நேர்முகத்துக்காக அவளிடம் சென்றவள் அதே வேகத்தில் திரும்பிவந்தாள்.

“ நானும் என்னம்மா போனகாரியம் என்னாச்சு….. ”என்றேன் பதட்டத்துடன்.

தோட்பையை வீசிவிட்டுப் ‘பொத்’தென்று மென்னிருக்கையில் சப்தமெழ இருந்தாள்.

“அவள் இந்தியாவில் பிறந்திருக்கிறாள்…….. ஆனால் நடத்தையில் இந்தியன் இல்லை” என்றாள் என்னத்தைக் கன்னையா பாணியில்.

நான் புரியாமல் விழிக்கவும்…… “ Es ist eine (That’s a) bitchy problematic familie Dad.”

“ அப்பிடி என்னதான் ப்ரொப்ளம்………”

“ நான் அங்க வேலைக்குப்போகல, அந்தப்பிரச்சனையும் உங்களுக்கு வேண்டாம், விட்டுவிடுங்கள் It’s Nasty, Silly and Ridiculous” என்றாள்.

சற்று நேரங்கழித்துத் தானாவே “ அது அவளோட Ethics and Principles க்கு ஓகேயா

இருக்கலாம்……… எனக்கு ஓகே இல்லை……. என்னால அவள் குழந்தைகளைப் பார்க்கமுடியாது. ” என்றபடி தன் அறைக்கு உடைகள் மாற்ற எழுந்து போனாள்.

Philosophy படிக்கிறவள், பன்னிரண்டு வயதிலேயே “ கடவுள் உனக்கு ஒரு எலுமிச்சங்காயைத்தான் தருவார். அதைக் கறிக்குப் பிழிகிறாயா, இல்லை உன் எதிரியின் கண்ணுக்குள் பிழிகிறாயா ” என்பது உன் சாமர்த்தியம். என்றெல்லாம் தத்துவம்ஸ் பகர்ந்தவள், ஒன்றை நிராகரிக்கிறாள் என்றால் அதற்கு நியாயமான காரணமில்லாமல் போகாது. அப்பாவென்றாலும் இப்போதைய பிள்ளைகளிடம் ஓரளவுக்குமேல் எதையும் துருவேலாது. சரி பிறகொருநாள் கேட்போம் என்று அவ்விடயத்தில் ஆர்வமில்லாதமாதிரி இருந்துவிட்டேன்.

ஆனால் தூங்கப்போகுமுன் இரவே தாயிடம் நடந்ததைச் சொல்லியிருக்கிறாள். இரவு அவள்தான் விஷயத்தை எனக்குக் காதுடன் சொன்னாள்.

அதின் முன் நிகழ்வு இதுதான்.

முயலும் ரெடிக்கரடியும்போல பெண்ணுமாய் ஆணும் இரண்டு குழந்தைகள். Lilly 4 வயது, Moritz 2 வயது, இருவருக்கும் தாயைப்போலவே கறுத்தக்கேசமும், கறுப்பு விழிகளுமாம், முதற்பார்வையிலேயே குழந்தைகள் ஆசையாசையாய் ஏதோ முன்னமே பரிச்சயமானவர்களைப்போல் இவளிடம் தாவிவந்து ஒட்டிக்கொள்ள இவளுக்கும் அவர்கள்மேல் இனம்புரியாத ஈர்ப்பு வந்துவிட்டது.

அவந்திகா இவளுக்கு நல்லதொரு மணங்கமழும் கோப்பியை வழங்கிவிட்டு சம்பாஷணையைத் தொடங்கியிருக்கிறாள்:

“ நீங்கள் இந்தியாவில எந்தப்பக்கம்”

“ இந்தியா இல்லை அதுக்குக் கிட்டவுள்ள ஒரு தீவு, அஞ்சல்ல குறிப்பிட்டிருந்தேனே”

“ மொறீஷியஸ்……… ”

“ எதுக்குங்க அவ்வளோ தூரம்…….. ஜஸ்ட் ஒரு 30 கி.மீட்டர் தொலைவிலுள்ள ஒரு குட்டித்தீவு”

“ ஓ…………. ஸ்ரீலங்காவா ”

“ தமிழா அல்லது அந்த மற்றப்பாஷையா……”

“நான் தமிழ்…….அங்குள்ள மற்றப்பாஷையை சிங்களம் என்போம்.”

அவந்திகாவும் தன் கணவன் பணிபுரியும் குழுமத்தின் பெயர், தான் ஒரு பல்பொருள் அங்காடியில் ‘அளி’யில் பணிபுரிவதுபோன்ற பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு “ இன்னும் 3 மாதத்தில் Lilly இக்கு முன்பள்ளி கிடைத்துவிடும் Moritz க்கு மேலும் ஒராண்டுக்கு பராமரிப்பு தேவைப்படும் ” என்றாளாம்.

இன்னும் குழந்தைகள் இருவரினதும் பழக்கவழக்கங்கள், விருப்புவெறுப்புகள், குணங்கள், மனோபாவங்கள் பற்றியெல்லாம் சொன்னவள் அத்துடன் நிறுத்தித் தொலைத்திருக்கலாம்.

“ இந்த இரண்டு நத்தைகளுக்கும் நான்தான் அம்மா, ஆனால் அப்பாதான் வேறுவேறு” என்றாளாம்.

இவள் அவ்விஷயத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டாமலிருக்க அவள் மேலும் சலம்பியிருக்கிறாள்.

“ Lilly இன் அப்பாவல்ல……. Brian அப்பாதான் Moritz க்கும் அப்பா.”

தலை கிறுகிறுத்திருந்தவள் பேசமுடிந்தபோது அவளைக் கேட்டிருக்கிறாள்:

“ஏன்……….. மாமன் உன்னை ‘றேப்’ பண்ணிட்டானா?”

“ No….. Non…… No.……He is a gem of men you know?”

“அப்போ எப்படி ‘இது’ ஆச்சு?”

“ நாங்கள் ஒரே வீட்டிலிருக்கிறோமா, அவன் அடிக்கடி ‘டூர்’ போயிடுவான், தனிமை, அப்படியாயிடிச்சு.”

“ இப்போதும் ஒரே வீட்டிலேயா…….?”

தலையை மேலும் கீழும் ஆட்டினாளாம்.

“ சொறி……… மாம், என்னைப் பொறுத்தாற்றவேண்டும், என்னால் உங்கள் குழந்தைகளைப் பார்த்துக்க முடியாது, உங்கள் கோப்பிக்கு நன்றி.”

“ Hey… what happened dear, what’s wrong with you Miss….?”

“ Sorry…… Mam, I have no words to say you.”

என்றுவிட்டு எழுந்துவந்துவிட்டாள் கோபக்காரி.

சகியும் எனக்கு அதைச் சொல்லாமல் விட்டிருக்கலாம்.

என் தலைக்குள் இயக்குனர் சாமியின் ‘சிந்து சமவெளி’ சினிமாவின் காட்சிகள் சலனிக்கத் தொடங்கின.

அம்பா தொடர்ந்தும் வேலை தேடுகிறாள்.

– அம்ருதா இதழ் 159, ஒக்டோபர் 2019.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *