கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 7,199 
 
 

என் சின்ன வயதில்
சட்டையில்லாத அப்பா
எப்படியோ இருப்பார்
அவருடைய தளர்ந்த இந்த வயதில்
சட்டை போட்டால்
அப்பா எப்படியோ இருக்கிறார்
அப்படியே இல்லாமல் இருப்பதுதான்
அவருடைய சாயல் போல
– கல்யாண்ஜி

நகரத்தின் ஆகச்சிறந்த மருத்துவமனையின் “ஆன்காலஜி” பிரிவின் வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறேன். என்னுடைய இதயத்துடிப்பு இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் கூட இதே மருத்துவமனையின் கார்டியாலாஜி பிரிவில் என்னை அட்மிட் செய்ய நேரிடலாம். வாங்கியிருந்த அப்பாயிண்ட்மண்டிற்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்து விட்டிருக்கிறேன். படிக்கும் காலத்தில் புரியாத ரிலேட்டிவிட்டி தியரியெல்லாம் இப்போது தெள்ளத்தெளிவாக புரிந்தது. நேரம் கடத்துவதற்காக கையில் வைத்திருந்த அந்த ஹெல்த் மேகசினில் ஒரு வரியைக்கூட முழுதாகப் படிக்க முடியவில்லை. நான் அமர்ந்திருந்த சோபாவிற்கு இடப்பக்கம் இருந்த அறையின் கதவில் சுரேஷ் வெங்கடேஷன் என்ற பெயர் தங்கப்பூச்சில் மினுங்கியது. உண்மையில் தங்கத்தில் பொறிக்கத் தகுந்த பெயர்தான் அது. எத்தனை அருமையான மனிதர் இந்த சுரேஷ். அவர் செய்த ட்ரீட்மெண்டுக்காக லட்சம் லட்சமாய் கொடுத்த போதிலும் என்னை அவரிடத்தில் கடனாளியாக்கி வைத்திருப்பவர். சிலரால் மட்டுமே மூன்று மாதங்களில் முப்பது வருட நேசத்தைக் கொட்ட முடியும்.

மூன்று மாதங்களுக்கு முன், முதன்முறையாக இதே வரவேற்பறையில் நானும், அப்பாவும் டயக்னாசிஸ் முடிவுகளுடன் உட்கார்ந்திருந்தோம். எத்தனை கட்டுப்படுத்தியும் என் கண்களில் நீர் திரண்டு வருவதை நிறுத்த இயலவில்லை. அப்பா என் அருகில் வந்து, தோள்களை மெதுவாக அணைத்தார். அவர் பூசியிருந்த ஜவ்வாது மணம் ஒருவித தெய்வீகமாயிருந்தது. அந்த அணைப்பும் கூட.

” டேய் தீபு.. என்னதிது சின்னப்பிள்ள போல கலங்கிட்டு. அதான் டாக்டரே சொல்லிட்டாருல்ல.. குணப்படுத்த முடியாத நிலைமை ஒண்ணும் இல்லனு.. அப்புறம் ஏன் டா? எம்புட்டு தன்மையாப் பேசுறாரு மனுசன். நீ எதுக்கு போயி அலட்டிக்கிட்டு கிடக்கிற கழுத.. கண்ணத் தொட.. அம்மாகிட்ட இதெயல்லாம் ஒண்ணுஞ் சொல்ல வேண்டாம். கேட்டா ஏதோ சின்ன கட்டிதான். கொஞ்ச நாள்ல சரியாயிடும்ன்னு மட்டும் சொல்லிக்கிடலாம். இல்லன்னா அழுது அழுதே பாதியாளாயிடுவா. அப்புறம் அந்தக் கோவில் இந்தச் சாமின்னு பட்டினியா கிடப்பா.. அதான்.. சரியா ” என்று என்னை ஆறுதல் படுத்திவிட்டு, கொண்டு வந்திருந்த பையை இடக்கையிலும், மறு கையை என் தோளிலும் போட்டபடியே நடக்கத் தொடங்கினார் அப்பா.

அப்பா. எத்தனை தெளிவான மனிதர் இவர். தன்னுடைய நோய்க்காக பிறருக்கு ஆறுதல் சொல்லும் இந்தப் பக்குவம் எப்படி வந்தது இவருக்கு. வாழ்வின் இத்தனை பெரிய நிகழ்வை இவ்வளவு எளிதாக கடந்து போக கற்றுக் கொடுத்தது எது. ஒரு சாதாரண பள்ளிக்கூடத் தமிழாசிரியருக்கு எப்படி வாய்த்தது இத்தனை திடமும், தைரியமும், வாழ்வியல் கலையும். என் தோளில் கிடந்த அவரது கரத்தை அழுத்தமாய் பற்றிக் கொண்டேன். அவ்வழுத்தம் எனக்கு அப்போது தேவையாய் இருந்தது.

அப்பாவிற்கு இருந்த ஒரே வருத்தமெல்லாம் காலில் வந்த இந்தக் கட்டியால் நிற்க முடியாமல் போகவே, ரிட்டையர்மண்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வி.ஆர்.எஸ் வாங்க நேரிட்டதுதான். எந்த ஒரு வேலையையும், எப்படிச் செய்ய வேண்டுமென அவர் கற்றுத் தருவதில்லை. செய்தே காட்டுவார். கம்பனை நடத்தும் போது, கண்ணதாசனையும் இழுத்துக் கொள்வார். எல்லாத் தலைமுறையினரையும் கவரும் ஏதோ ஒன்று அப்பாவிடமிருந்தது. வாசிப்பையும், வாத்தியார் தொழிலையும் பெரிதும் நேசித்தவர். அதில் ஒன்றை இழப்பதுதான் அத்தனை கடினமாக இருந்தது அவருக்கு.

அப்பாவின் முன்னிலையில் டாக்டர் சுரேஷ் இது முற்றிலும் குணப்படுத்திவிடக் கூடியது என்றே கூறினாலும், மறு நாள் என்னைத் தனியாக வந்து அவரைச் சந்திக்கச் சொல்லியிருந்தார்.

” நான் நேத்தேச் சொன்னாப் போல, இது ஒரு சாப்ட் திஷ்யு சர்கோமா. சிம்ளா சொன்னா ஒரு வகையான தசை கேன்சர். ஒரே ஒரு நல்ல விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா.. இது உடம்புல உள்ள முக்கியமான பாகங்கள பாதிக்காம, கால் மூட்டுல வந்துருக்கிறதுனால உயிருக்கு பெருசா ஆபத்திருக்காதுன்னு நம்பலாம். ப்ரவைடட், இது வேறு எந்த ஒரு வெயினையும் பாதிக்காம இருக்கணும். உங்க அப்பா கொஞ்சம் லக்கி. அப்படி ஏதும் நடக்கல. யு ஹவ் டு தேங் காட் ஃபார் திஸ். ஆனா அதே நேரத்தில அவரோட வயசையும் நாம கன்சிடர் பண்ணனும். பொதுவா கேன்சருக்கு கீமோதெரபி கொடுப்பாங்க. இதோட அப்ஜக்டிவ் என்னனா ஃபாஸ்ட்டா மல்டிபிளை ஆகுற செல்ஸை எல்லாம் இது அழித்துடும். ஐ மீன் கேன்சர் செல்ஸ். நம்மோட முடியும் நகமும் கூட இப்படி ஃபாஸ்ட்டா மல்டிபிளை ஆகுற செல்களின் வகைகளைச் சார்ந்தது. அதனாலதான் ட்ரீட்மண்ட் நேரத்தில வர்ற முடியிழப்பு எல்லாம். இதோட பக்க விளைவா, நம்ம உடம்பிலுள்ள வெள்ளை அணுக்களையும் அழிக்கிறதினால நோய் எதிர்ப்பு சக்தியும் குறைஞ்சுடும். அதனால பேஷண்ட்ஸ் கொஞ்சம் தளர்வா, சோர்வா இருப்பாங்க. வயதானவர்களுக்கு பொதுவாவே எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பச்சிரும். கூட இருக்கிற நீங்கதான் அவங்க தளராம பாத்துக்கணும். புரியறதா. இந்த நேரத்தில் அவங்களுக்கு வேண்டியதெல்லாம் உங்களோட நேசம் மட்டும்தான் ”

” புரியுது டாக்டர்.. இது எதுனால வருதுன்னு.. ” நான் கேள்வியை முடிக்கும் முன்னரே அவர் ஆரம்பித்தார்.

” பெஸ்டிசைட்ஸ், ஆஸ்பெடாஸ், ரேடியேசன், டயட், உடல் பருமன் இது போல எதுவா வேணும்னாலும் இருக்கலாம். இதுதான்னு அறுதியிட்டுக் கூற முடியாது. முன்னாடி ஏற்பட்ட ஏதாவது சிறு காயத்தினால் வரக்கூடிய இரத்தக்கட்டு.. அத அப்படியே கவனிக்காம விட்டிருந்தா அது கூட இப்படி கேன்சரா மாறியிருக்கலாம். ஆனா, அப்படி விடப்பட்ட எல்லாமே இப்படியாகும்ணும் சொல்லமுடியாது. ”

” ஓ.. சரி டாக்டர் ”

” இன்னொரு விஷயமும் இங்க சொல்லிட்றேன். உங்க அப்பாவுக்கு ஒரு ஆப்பரேஷன் பண்ணி அந்த மூட்டுல உள்ள கட்டிய எடுத்துட்வோம். அதுக்குப் பிறகு அதச் சுத்தியிருக்கிற கேன்சர் செல்களை அழிக்க கீமோ கொடுப்போம். அதன் விளைவா எல்லா கேன்சர் செல்களும் முற்றிலும் அழிஞ்சுடுத்துனா எவ்ரிதிங் இஸ் ஃபைன். அப்படியில்லாம திரும்பவும் அது வந்துடுத்துன்னாதான் சிக்கல்.”

” அதுக்கு வேற என்ன பண்ண முடியும் டாக்டர்?”

” வொர்ட்ஸ்ட் கேஸ்ல, நாம அந்தக் காலையே எடுக்க வேண்டியது வரலாம். ஆனா, லெட்டஸ் திங்க் பாசிட்டிவ். உங்க அப்பா தைரியமானவராத் தெரியுது. இஸ் இண்ட் இட்?? ”

அவ்வப்போது, அப்பா மூட்டுவலி என்று சொன்ன போதே தேவையான சோதனைகளைச் செய்திருந்தால், இன்று இப்படியொரு நிலைமை வந்திருக்க வாய்ப்பில்லை. அது சாதாரண மூட்டு வலி, கால்சியம் குறைபாடு என்று ஆளுக்கொரு காரணம் சொல்லித் தட்டிக்கழித்தோம். அதன் விளைவே, இன்று முட்டியலைகிறோம். படித்ததென்னவோ தமிழ் இலக்கியமும், மெக்கானிக்கல் இஞ்சினியரிங்கும் தான். ஆனாலும் அவ்வப்போது “ப்ரெஷ்கிரிப்சன்கள்” எழுதுகிறோம். இதுபோன்று எம்.பி.பி.எஸ் படிக்காத டாக்டர்கள் வீட்டுக்கு வீடு உண்டென்றே நினைக்கிறேன்.

அந்தச் சந்திப்பிற்குப் பின்னர் வந்த ஒவ்வொரு நாளும் நத்தை நகர்வாகவேக் கழிந்தன. எல்லாவற்றிற்கும் மேலான ஒரே ஆறுதல், அப்பாவின் தைரியம் தான். அம்மாவை வெகு காலம் ஏமாற்ற முடியவில்லை. ஆனாலும் அப்பா என்னும் மந்திரத்துக் கட்டுப்பட்டவள் அம்மா. அவரின் தைரியமே கடன்பெற்ற நிலவொளிபோல் என்னிடமும், அம்மாவிடமும் எதிரொளித்தது. அக்காவும், மாமாவிடம் சொல்லிவிட்டு எங்களுடன் வந்து ஒரு மாதம் இருந்தாள். அவள் அப்பா பிள்ளை. அப்படியே அவரைப் போலவே. எங்களுக்கு இன்னும் தைரியம் கூடியது. அப்பாவிற்கு ஆப்பரேசன் வெற்றிகரமாக நிறைவேறியது. அதன் விளைவாய் அப்பாவிற்கு ஒரு கைத்தடி கூடிப் போனது. எடை நான்கு கிலோ குறைந்து போனது அவ்வளவுதான்.

கீமோதெரபி எடுத்துக் கொள்ளும் போது கூட அப்பா கொஞ்சம் உடலளவில் சற்று சோர்ந்து போனாரே ஒழிய மனதளவில் சற்றும் ஓயவில்லை. அவர் சேர்த்து வைத்த நட்புகளுக்கும், உண்டாக்கிவிட்ட மாணவர்களுக்கும், அத்தனைக்கும் காரணமான அன்னைத் தமிழுக்கும் தான் இதற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். வாழ்க்கையில் ஒரு பிடிப்பு உள்ளவர்கள் அவ்வளவு எளிதில் தளர்ந்துவிடமாட்டார்கள். அப்பா ஆணிவேர் விட்டு, கூட சல்லியும் பரப்பியிருந்தார்.

ஒரு வழியாக ஹீமோதெரபியும் வெற்றிகரமாகவே முடிந்தது. அப்பாவின் பெயரிலிருந்த இன்சுரன்சும் தக்க நேரத்தில் வந்து, பொருளாதார அளவிலும் எங்களைக் காப்பாற்றியது. சுருள் முடியுடன் சுற்றியலைந்தவரை மொட்டையாகப் பார்க்கத்தான் கொஞ்சம் கஷ்டமாகத் தெரிந்தது. ஆனால் அதைக் கூட அப்பாவால் ‘சிவாஜி’ ரஜினி ஸ்டைல் என்று தலையில் தட்டி தன்னைத் தானே பகடி செய்துகொள்ள முடிந்தது. துறு துறுவென்றிருக்கும் ரஜினியை அப்பாவிற்குப் பிடிக்கும் என்பது வேறு விசயம்.

என்னைத் தவிர எல்லோரைப் பொறுத்தமட்டிலும், இந்த கண்டம் முடிந்தே போனது. இந்த வருடத் திருவிழாவில் அம்மா, பூவிறங்கக்கூட முடிவு செய்தாகிவிட்டது. அக்காவும் அவள் வீடு திரும்பிவிட்டாள். அப்பா புத்தகங்களுடான அவரது உலகில் பிரவேசிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் என்னால் மட்டும் மற்றவர்களைப் போல் இயல்பாக இருக்க இயலவில்லை. தெரபி முடிந்து ,மூன்று மாதங்கள் கழித்து எடுக்கப்படும் பரிசோதனையின் முடிவில், அந்த பாழாய்ப் போன கேன்சர் செல்கள் மீண்டும் வராமல் இருக்க வேண்டுமே. அப்படி வருமாயின், மறுபடியும் எதிர்கொள்ள வேண்டியதை எண்ணிப்பார்க்கவே பயமாய் இருந்தது.

இதோ நேற்றுதான் மூன்று மாதம் முடிவுற்று ஸ்கேன் முதலிய அத்தனை பரிசோதனைகளும் மீண்டும் எடுக்கப்பட்டன. அதன் முடிவுகள் குறித்து ஆலோசிக்கவே இப்போது சுரேஷ் என்னை வரச் சொல்லியிருக்கிறார். தர்க்கத்திற்கு இடமின்றி, இருக்கும் அத்தனை கடவுள்களையும் வேண்டிக் கொண்டிருக்கிறேன். இதோ எனக்கான அழைப்பு மணி அடிக்கிறது. என் அப்பாவிற்காக நீங்களும் கொஞ்சம் வேண்டிக் கொள்ளுங்கள்.

– ஜனவரி 11, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *