மதியழகியின் கண்கள் பள்ளியின் கடிகார முள் எப்போது மணி நான்கை தொடும் என இதோடு பத்தாவது முறையாவது பார்த்து விட்டது. இன்று பார்த்து முள் ஆமை வேகத்தில் நகர்கிறதே என்று சலித்துக் கொண்டாள் மதியழகி.அவள் மட்டுமல்ல அவளின் சகோதரிகள் அன்பரசி மற்றும் அறிவழகியின் கண்களும் கடிகாரத்தை தான் பார்த்து கொண்டிருந்தன. ஆம் மதியழகியும் அவளின் சகோதரிகளும் ஒரே பள்ளியில் மூன்று, நான்கு,ஐந்து என அடுத்தடுத்த வகுப்புகளில் பயில்கிறார்கள். ஒரு வழியாக மணி நான்கை தொட்டு பள்ளி முடிந்து விட்டது. பள்ளி முடிந்து சகோதரிகள் மூவரும் வேக வேகமாகவும், அதே நேரம் மகிழ்ச்சியுடனும் இரண்டு தெரு தள்ளியுள்ள வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சிக்கு காரணம் அன்று வெள்ளிக்கிழமை, ஆம் அவர்களது தந்தை இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கிறார். வாரவாரம் வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு தொலைப்பேசியில் அழைத்து பேசுவார்,அதற்காகத்தான் இந்த பரபரப்பு.
வீட்டிற்கு வந்து உடை மாற்றிவிட்டு நொறுக்கு தீனியை சாப்பிட்டுட்டு தொலைபேசி அழைப்பிற்காக காத்து இருந்தார்கள். இவர்கள் வருவதற்கு முன்பே அவளின் தம்பி தயாராகி இருந்தான். அவனுக்கு நான்கு வயதுதான் ஆவதால் இன்னும் பள்ளியில் சேர்க்க வில்லை. அவர்களின் ஊரில் ஒரே ஒரு கடையில் மட்டும் தான் தொலைபேசி உள்ளது. போன் வந்ததும் கடையில் இருந்து கூப்பிட்டு விடுவார்கள். மழை வேறு இருட்டி கொண்டு வந்தது. மணி ஆறை தொட்டுவிட்டது, இன்னும் அவர்கள் அப்பாவின் அழைப்பு வரவில்லை. மதிக்கும் அவளின் சகோதரிகளுக்கும் வருத்தம் இருந்தாலும் அப்பாவிற்கு வேறு வேலை இருந்திருக்கும் அப்படி இப்படினு ஆளுக்கொரு காரணம் சொல்லி சமாதானப் படுத்தி கொண்டனர்.
ஆனால் அவள் தம்பி அழ ஆரம்பித்து விட்டான், நேற்று அவர்கள் அப்பாவின் சாயலில் உள்ளவரை பார்த்து விட்டு அப்பாவை பார்க்க வேண்டும் என்று ஒரே அழுகை, அவள் அம்மா தான் நாளைக்கு அப்பாவிடம் போன் பேசலாம் அப்படினு சொல்லி சமாதானப் படுத்தினார். ஆதலால் இன்று கொஞ்சம் அதிகமாகவே அழுதான்.
மழை தூற ஆரம்பித்தது, தூறலாக ஆரம்பித்த மழை பெரிய மழையாக கொட்ட ஆரம்பித்தது. மின்சாரமும் போய்விட்டது. அவர்களின் அம்மா சிறு மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் இரவு உணவை தயார் செய்து எல்லோருக்கும் கொடுத்தார்.எல்லோரும் சாப்பிட்டுட்டு சிறிது நேரத்தில் பாய் விரித்து படுத்துவிட்டனர். படுத்துவிட்டார்களே தவிர யாருக்கும் தூக்கம் வரவில்லை. தம்பி மட்டும் தூங்கிவிட்டான்.
இன்னும் அப்பாகிட்ட பேச ஒரு வாரம் காத்திருக்கணும் என்றாள் அன்பரசி. ஆமா என்றாள் மதியழகி. இடையில் ஒருநாள் அப்பா போன் போட்டால் நல்லா இருக்கும், எப்படியும் அப்பா இரண்டு மாதத்திற்குள்ள வந்துருவாங்கள்ள அம்மா என்றால் அறிவழகி. ஆமா கண்டிப்பாக வந்துருவாங்க அவங்க கம்பெனியில் டிக்கெட் போடுறேனு சொல்லிருக்காங்களாம், கிடைச்சதும் வந்துருவாங்க நீங்களெல்லாம் தூங்குங்க என்றார் அவளின் அம்மா.
மெதுவாக கண்ணை மூடி தூங்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் மதி. வெளியில் கார் வருவதுபோல் சத்தம் கேட்டது. இந்த நேரத்திற்கு நம்ம ஊருக்கு கார்ல யாரு வரப் போறா, மழை சத்தமாக இருக்கும், இல்லையே மழை வெறித்து விட்டதே வேறு என்ன சத்தமாக இருக்கும் என பக்கத்தில் படுத்திருந்த அவளின் அக்கா அறிவழகிய எழுபிபினாள். அறிவழகி முழித்து பார்க்கவும் சன்னல் வழியாக வெளிச்சமும் தெரிந்தது. மின்சாரம் இல்லையே இது என்ன வெளிச்சமாக இருக்கும் என அம்மாவையும் அன்பரசியையும் எழுப்பினார்கள்.
எல்லோரும் சன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்தார்கள். உண்மையிலேயே கார் தான் வந்து நின்றது. முதலில் அதிலிருந்து ஒருவர் இறங்கினார். இரண்டாவதாக அவர்களின் அப்பா இறங்கினார். அவர்களின் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. அம்மா வேகமாக கதவை திறக்க சென்று விட்டார். இவர்கள் ஆச்சரியத்தில் ஒவ்வொருத்தரும் கண்களை நன்கு விரித்து பார்த்தனர். மின்சாரமும் வந்து விட்டது, அப்பாவும் வீட்டுக்குள் வந்து விட்டார். திடீரென்று பயணம் உறுதி செய்யப்பட்டதால் தொலைபேசியில் அழைக்க முடியவில்லை என்றார். இனிமேல் ஆறுமாதம் கழித்து தான் அப்பா வெளிநாடு செல்வார். இன்னும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொலைபேசிக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்று எல்லோருடைய மனதிலும் நிம்மதி பிறந்தது.