அன்பிருந்தால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 880 
 

வீட்டிற்குள் நுழையும் போதே கல்பனா உர்ரென்றிருந்தாள். என் பேகை வாங்கிக் கொள்ளவில்லை. மல்லிகைப்பூ இருக்கிறதா, ஸ்வீட் இருக்கிறதா என்று பார்க்கவில்லை.

சட்டையை பாதி கழட்டினதுமே பிடுங்கிக் கொண்டு போய் ஹாங்கரில் மாட்டவில்லை. முகம் கழுவி வந்ததும் டவல் எடுத்து நீட்டவில்லை. பேனை போட்டுக கொண்டு அமர்ந்ததும் கண் முன் காபி மணக்கவில்லை.

இந்த வரவேற்பெல்லாம் கல்யாணமான மூன்றாம் மாதமே ஓடிப்போயிற்று. அலுவலகத்திலிருந்து வரும் கணவனை உபசரிக்க வேண்டாம் – முகத்தில் அட்லீஸ்ட் புன்னகையாவது காட்டக் கூடாதா…?

மாட்டாள். அத்தனை பிடிவாதம்! வைராக்கயம்! சந்தோஷம் வந்துவிட்டால் ஒட்டிக்கொள்வாள் சின்ன குழந்தைமாதரி முதுகில் (மெத்தென) கட்டிக்கொண்டு உப்புமூட்டை!

இன்று என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. தானாக வெளியே வரட்டும என்று நானும் கண்டு கொள்ளவில்லை. வார இதழை எடுத்துக் கொண்டு ஈஸிசேரில் சரிந்தேன்.

கண்கள் பத்திரிகையிலிருந்தாலும் கவனம் அவள் பக்கமேயிருந்தது. என்ன ஏதேன்று கேட்பேன். கேட்கவேண்டும் என்று அவள் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

பெண்களுக்கு இப்படி ஒரு வீம்பு எப்படியிருந்தாலும் கொட்டியும் குமுறியும் தீர்க்கதான் போகிறார்கள். அதை தானகவே கொட்டிவிட்டால் என்ன குறைந்துப் போகுமாம்?

ஆழம் பார்ப்பார்கள். அகலம் பார்ப்பார்கள். நீட்டி முழக்கி, பெருமுச்சு விடுவார்கள். முகம் கருப்பார்கள், பாத்திரம் உருட்டுவார்கள். அவற்றிற்கெல்லாம் மிசியவில்லை யென்றால் படுக்கையில் விழுந்து புசுபுசுவென அழுகை!

உடனே பாவப்பட்ட புருஷன்காரன் ஒடிப்போய் அணைத்துக் கெர்ண்டு கண்ணீரைத் துடைத்து ‘என்ன விஷயம் என்று கேட்க வேண்டும்.

‘என்னைத் தொடாதீங்க!’

‘எங்கிட்ட பேசாதீங்க!’

இதெல்லாம் சகஜம் இப்படிச் சொன்னால் ‘என்னை தொட்டுக் கொண்டேயிரு என அர்த்தம். என்னுடன் பேசிக்கொண்டேயிரு! இது ஒரு பாசாங்க. இந்த பாசாங்க எனக்கு பிடிப்பதில்லை. பார்த்துப் பார்த்துப புளித்துப் போயிற்று. வேண்டாததிற்கெல்லாம் கோபம்! ஊடல்! சந்தேகம்! புகைச்சல்! அப்புறம் தர்க்கம், விவாதம்.

கடைசியில் ‘என்பேரில் உங்களுக்கு அன்பேயில்லை, அக்கரையேயில்லை’ எனப் புலம்பல்.

வர வர வீட்டிற்குள் நுழையவே பயம், பிடிப்பதில்லை. பற்றிக் கொண்டு வருகிறது. பொறுத்துப் பார்த்து காபி கிடைக்காமல் போகவே சட்டையை மாட்டிட்க கொண்டு கிளம்பினவனை குறுக்கே வந்து மறித்து, “நில்லுங்கள்!” என்று கத்தினாள்.

“வழியை விடுடி!”

“எனக்கு பதில் சொல்லிவிட்டுப் போங்கள்!”

“நீ இன்னும் கேள்வியே கேட்கவில்லை” என்று சிரிக்க முயன்றேன்.

“இந்த மழுப்பலெல்லாம் வேண்டாம். எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். சேலத்திற்கு நீங்கள் அடிக்கடி போவதேன்? யாரையோ பார்க்கதானே?”

“ஆமாம்”

“யாரை… யாரைன்னேன். “

“எங்கள் பிராஞ்ச் ஆஸை. “

“பிராஞ்ச் ஆபிஸில் யாரைன்னு தான் கேட்டேன்.”

“யாரைன்னு கேட்டால். வந்து எல்லோரையும் தான்.”

“எல்லோரையும் என்றால் அதாவது பிராஞ்ச் மானேஜர், அக்கவுண்டன்ட், காஷியர், ஸ்டேனே…”

“அதாவது ஸ்டேனே பாரதி. “

“ஐ! உனக்கெப்படி அவ பேரைத் தெரியும்?” என்று கன்னத்தை கிள்ளப் போக தட்டிவிட்டாள். தட்டிவிட்டதை சாக்காய் வைத்து கையை அவளது மா….. சரி அதுவாப்போது முக்கியம்? உனக்கெப்படி அவளைத் தெரியும்?”

“அதுதான் ஊர் முழுக்க பேசுதே!”

“என்னன்னு?”

“உங்களுக்கும் அவளுக்குமிடையே லவ்வாம்”

“லல்வா.” என்று சிரித்தேன்.

“லவ்லி ஜோக்.“

“ஜோக்கில்லை நிஜம்” என்று முகம் சிவந்தாள் கண்களில் கடுகடுப்பு. இதே பெண்டாட்டி சந்தோஷமாய் பேசும் போது எத்தனை ஜொலிக்கிறாள்? அந்த சமயத்தில் தேவதை! மகாலட்சமி!

ஆனால் இப்போதே பிடாரி! அம்மாடியோவ்! எப்படியாவது இங்கிருந்து தப்பித்தாக வேண்டும்.

“அவளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?“

“வேறு என்ன – நான் ஆபீஸர். அவள் ஸ்டேனோ அவ்ளோதான்!“

“அவ்ளோதானா? அதுக்குமேல் எதுவுமேயில்லையா…?” என்று வாசலிலேயே அழ ஆரம்பித்து விட்டாள்.

அவளுடைய குணம் எனக்குத் தெரியும். இத்தனை வயசாகிவிட்டாலும் மனைவி என்கிற அந்தஸ்திற்கு வந்துவிட்டாலும் கூட கல்பனா இன்னமும் ஒரு குழந்தை! வெகுளி! யாராவது எதையாவது சொன்னால் உடனே அதை உண்மையென நம்பிவிடுவாள். இப்போதும் யாரோ என்னத்தையே விதைத்திருக்கிறர்கள். அதை தெளிவுபடுத்திவிட்டால் புயல் ஒய்ந்து விடும்!

கதவை மூடிவிட்டு “சீ ஏன் இப்படியெல்லாம் சந்தேகப்படுகிறாய்…?”

“எனக்குத் தெரியும். நான் அதிகம் படிக்காதவள். சுமாரான அழுகுதான். கிராமத்து கட்டை!”

“கிராமத்து பொண்ணாய் வேணும்னுதானே கட்டிக்கிட்டேன்!”

“அன்னைக்கு ஏதோ ஒரு வேகத்துல சரி. இப்போ நான் அலுத்துப் போயிட்டேன். வேண்டாதவளாயிட்டேன்!”

“சீச்சீ அசடே! ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்? பெண்டாட்டியாவது அலுப்பதாவது. வேண்டாம்னு தோணுவதாவது.? உனக்கு நான் துரோகம் செய்வேனா…” என்று அவளது கழுத்தை நெஞ்சோடு கட்டிக்கொண்டு இடுப்பில் ஒரு கிள்ளு கிள்ளவும் அந்த சந்தேகம் அப்போதைக்கு ஓடிப்போயிற்று.

மறுநாள் தூங்கும்போகும் போது கல்பனா முகத்தோடு முகம் உரசி “ஏங்க எனக்கு நீங்க துரோகம் செய்யமாட்டீங்கதானே…?” என்று ஆரம்பித்தாள்.

“உனக்கு ஏன் அடிக்கடி சந்தேகம் வருது?”

“எனக்கு எல்லாம் தெரியும்.”

“என்னத் தெரியும்?”

“உங்க ஜாதகத்தைப் பார்த்தேன். அதில் இருககு.”

“என்ன இருக்கு?”

“உங்களுக்கு ரெண்டு பெண்டாட்டின்னு ஜோஸ்யம்…!”

“என்ன ஜோஸ்யம் கிளியா, தேவாங்கா இல்லை குரங்கு, புலி, எலின்னு!“

“அதெல்லாமில்லை எங்க குருக்களே சொன்னார். உங்களுக்கு ரெண்டு தாரமாம். அதனால் புருஷனை ஜாக்கிரதையாய் பார்த்துக்கோம்மான்னு.”

“அவர் கிடக்கார். என்னை நீ பரிபூரணமாய் நம்பலாம்”.

“நம்பரேன். ஆனாலும் எங்க குருக்கள் பொய் சொல்ல மாட்டார். அவர் சொன்னால் அப்படியே பலிக்கும்!”

“அதுக்காக…? என்னை இப்போ என்னப் பண்ணச் சொல்கிறாய்? அவர் வாக்கை பொய்யாக்கணுமா இல்லை உண்மையாக்கணுமா என்கிறாயா….ம்?”

“ஷ்…ஷி மெல்ல பேசுங்க! ஏன் இப்படி கத்தறிங்க…?”

“கத்தாமல் அப்புறம் என்ன பண்றதாம்….” என்று மேலும் கத்த ஆரம்பிக்க கப்பென வாயை பொத்திப் (தன் வாயால்) அடக்கினாள்.

ஒரு வாரத்திற்கு பிறகு-

திரும்ப சீதோஷ்ணம் மாறிற்றுத் திரும்பவும் புயல்!

செல்ஃப்பை சுந்தம் பண்ணுகிறேன் என்று கிளம்பிளவளின் கண்ணில் அந்த பெண்ணின் படம் பட்டிருக்க வேண்டும்.

வீட்டிற்குள் நுழைந்த மாத்திரத்திலேயே கதவைப் பட்டென்று சாத்திவிட்டு “அன்னைக்கென்னவோ பெரிசாய் கத்தினீர்களே…? இது யாரு….” என்று படத்தை காட்டினாள்.

நான் பதில் சொல்லவில்லை. வாய் திறக்காமல் டிரஸ் மாற்றினேன். பதில் கிடைக்காமல் போகவே கல்பனாவின் பதற்றம் அதிகமாகியிருக்க வேண்டும்.

“நான் கேட்கிறேனில்லை இதுயாரு…? இவளுக்கும் உங்களுக்கும் என்ன உறவு? எல்லாம் நான் பயந்தபடியே நடந்து போச்சு! அந்த குருக்கள் சொன்னது போலவே”

“ஆமாம் கல்பனா என்னை மன்னிச்சிரு. உங்கள் குருக்கள் சொன்னது நிஜம்தான்!”

“அப்போ இவ ரெண்டாந்தாரமா…” என்று வானம் பொழிய ஆரம்பித்தது.

“இல்லை. ”

“அப்புறம்?”

“ரெண்டாந்தாரம் – நீதான்!”

அந்த வார்தைகளை கேட்டதும் அவள் ஆடிப்போனாள். “என்னச் சொல்றீங்க… நீங்க சொல்றது நிஜமா…?” என்று என் தோளைப் பிடித்து உலுக்கினாள். “ஐயோ…. ! நான் மோசம் போயிட்டேனே… ! யாரிவள்? எப்போ இவளை கட்டினீர்கள்?”

“பாம்பேயில் வேலை பார்த்த போது!”

“இவதான் சேலம் பாரதியா…”

‘இல்லை நான் சொல்வதை பதற்றப்படாமல் கேள். பாம்பேயில் இருந்தபோது நானும் இவளும் உயிருக்குயிராய் நேசித்தோம். கோவிலில் வைத்துத் திருட்டுத்தனமாய் திருமணமும் செய்து கொண்டோம். ஆனால் அவளுடைய பெற்றோர்கள் அதை ஏற்கவில்லை.”

“இவ இப்போ எங்கேயிருக்கிறாள்?”

நான் சோகத்துடன் முகட்டுவளையைக் காட்னேன். “பெற்றோரின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அவள்… அவள்… தற்கொலை!”

சொல்லிவிட்டு அறைக்குள் போய் ஜன்னலை வெறித்தேன்.

“இதை ஏன் எங்கிட்ட முன்பே சொல்லலை..?”

“உன்னிடமென்றில்லை எங்கள் வீட்டிலும் கூட யாரிடமும் சொல்லவில்லை. இனி சொல்லி ஆகப் போகிறதென்ன? நான் அவளை மறக்க விரும்புகிறேன். அடுத்தவர்களுக்குத் தெரிந்தால் அவ்வப்போது அவளை சுட்டிக்காட்டி காட்டி ஞாபகபடுத்துவர். என் மனதிலிருந்து அவளை முழுக்கத் தூக்கி எறிய வேண்டியே மறைந்தது வைத்தேன். எனக்கு நீ வேண்டும் என் நெஞ்சு முழுக்க நீயே நிறைந்திருக்க வேண்டும் அதனால்தான் என்னை நம்பு!”

அரைமணி நேரத்திற்குப் பிறகு கல்பனா புதுமலராய் அறைக்குள் நுழைந்தாள். அவளது கையில் பலகாரம்! முகத்தில் பற்கள். முடியில் மல்லிகை!

“போனதெல்லாம் போகட்டுங்க. நான் உங்களை நம்பறேன். முழுதாய் நம்பறேன்!”

“இனி சேலம் ஸ்டேனோவை சந்தேகிக்க மாட்டாயே…”

“ம்கூம்” என்று இறுக்கிக் கொண்டு மூச்சு முட்ட வைத்தாள்.

“எப்படியோ எங்கள் குருக்கள் சொன்ன ஜோஸ்யம் பலித்துவிட்டது பார்த்தீர்களா. ! அவர் சொன்னது உண்மை என்று இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா?”

“ஆமாம், ஆமாம்! அவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை!” என்று வார்த்தைகளை உதிர்த்தாலும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

பெண்டாட்டியின் சந்தேக தொல்லையிலிருந்து விடுபட வேண்டி செய்த ஐடியா இது என்பதும், அந்த படத்திலிருப்பது பெயர் தெரியாத ஏதோ ஒரு மராத்தி துணை நடிகை என்பது கல்பனாவிற்கு தெரியவாய் போகிறது!

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *