அன்பின் வழியது….உயர்நிலை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2013
பார்வையிட்டோர்: 11,660 
 
 

காலையில் கண் விழித்ததும் நான் கண்ட காட்சியில் உண்டான என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

சில தினங்களாய் நான் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த என் வெளி நாட்டுப் பயணத்திற்கான விசா, மேசையின் மேல் எனக்காக காத்திருந்ததுதான் அதற்குக் காரணம்.

நேற்று இரவே நிரஞ்சன் அதைப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டார் போலிருக்கிறது!

ஆனால், ஏன் அதைச் சொல்லவில்லை?!

ஏனென்றால், என் பயணத்தில் அவருக்குத் துளியளவும் விருப்பமில்லை.

ஆனால், விருப்பமின்மை…என் பயணத்தின் மீது தானேயொழிய…..என் மீதல்ல

காதலித்து, பின் கரம் பற்றிய என் அருமை மணாளன் அவர் கண்போல் தான் இன்னமும் என்னைக் கனிவுடன் கவனித்துக் கொள்கிறார்!

உண்மையில், என் மீது ஆழமான அன்பு கொண்டிருப்பவர், என் பிரிவினால் என் அன்பை, தானும் தன் அருமை மகளும் இழக்க நேருமோ என அச்சம் கொண்டிருப்பது நான் அறிந்ததே.

என் பயணம் நிச்சயமான நொடியிலிருந்து எனதருமை மகள் கூட என்னுடன் பொழுதைக் கழிப்பதைத் தவிர்க்கிறாள் என்பதையும் என்னால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

இருப்பினும், என்ன செய்ய?!

வாழ்வு சொல்லும் யதார்த்தத்தையும், நான் உணர்ந்து கொள்ளத்தானே வேண்டும்?!

மாமனார், மாமியார், மனைவி, மகள் மற்றும் தான் என, அனைவருக்குமாக நிரஞ்சன் சம்பாதிக்கும் பணம், அனைவரின் தேவையையும் நிறைவாக பூர்த்தி செய்யுமா?!

மருத்துவச் செலவில் ஆரம்பித்து, மளிகை, மடிக்கணிணி என எல்லா தேவைகளும் நடந்தேற, வரும் வருவாய் போதாது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?!

அதனால் தான் முடிவெடுத்துவிட்டேன்… வேலைக்குப் போவதென்று.

பாழாய்ப் போவதற்கா, காலத்தை விரயமாக்கி பட்டப் படிப்பை பூர்த்தி செய்தோம்?! இக்கட்டான சூழலில் இரண்டு தோள்கள் ஆதரவாய் சேர்ந்தால், குடும்ப பாரம் சுமக்கும் நிரஞ்சனுக்கு எத்தனை ஆதரவாய் இருக்கும்?!

இதையெல்லாம் சொன்னால், ஏனோ அவருக்குப் புரிவதில்லை.

“வேண்டாம், அனு. வேண்டுமானால் இங்கேயே ஒரு நல்ல வேலை பார்த்துக்கொள். நீ சொன்னது போல வருவாயும் அதிகரிக்கும்…. நிறைவான அன்பும் குழந்தைக்குக் கிடைத்தேறும். நினைத்துப்பார்….குழந்தையால் உன் பிரிவை எதிர்கொள்ள இயலுமா?” என்று என்னிடம் எதிர்கேள்வி கேட்கிறார்.

இங்கேயே வேலை பார்க்கலாம் தான்; கிடைக்கும் தான்; ஆனால், இங்கே பெறும் ஊதியம், வெளிநாட்டவர் தரும் ஊதியத்தின் முன்பு சொற்பமாய்த்தான் இருக்கும். வெளிநாடு செல்வதானால் இரண்டு மூன்று வருடங்கள்…..குழந்தையை அவள் பாட்டி பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகென்ன பிரச்சனை?

தலைக்குள், கடந்த கால உரையாடல்களும் அதற்கான கருத்தாய்வும் நடந்துகொண்டிருந்ததில், அயர்ச்சி ஏற்பட்டது.

ஒரு வழியாக என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இனி நடந்தேறுவதில் கவனம் செலுத்த ஆயத்தமானேன்.

போவதென்று முடிவெடுத்தாகிவிட்டது. இனி, பயணத்திற்கான பொருட்களை வாங்கவேண்டி கடைவீதிக்குச் செல்ல வேண்டும். இப்பொழுதே தயராகிக் கிளம்பினால், எல்லாமும் முடித்து மாலைக்குள் வீடு திரும்பலாம். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டால், கடைசி நாளில் எல்லாமும் அலைச்சலில் தான் முடியும். இன்று குழந்தைக்கும் விடுமுறைதான். அவளை மாமியார் பார்த்துக் கொள்வார்கள்.

விரைவில், எண்ணங்களில் இருந்து விடுதலைப் பெற்று, அவற்றை செயலாக்கும் முயற்சியில் மூழ்கிப் போனேன்.

***

ஆயிற்று, மாலை!

கூட்ட நெரிசல்களுக்கிடையில் சிக்கித் திக்குமுக்காடி, ஒருவழியாக அல்லல்பட்டு எல்லாப் பொருட்களையும் வாங்கியாயிற்று.

பின் திரும்ப வீடுவந்து சேர்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

வீட்டின் வரவேற்பறையை கடக்கும் போது தான், உள்ளறையில் எனது மகளும், அவள் தோழியான பக்கத்து வீட்டு குழந்தை திவ்யாவும் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.

“வீணா, ஏன் டல்லா இருக்க? விளையாட வரல்லயா?” திவ்யா கேட்க,

“நீ போ! எனக்கு மூட் அவுட். நா வரல்ல ” வீணா சொல்ல, எனக்கு சிரிப்பு வந்தது.

இந்தக் குட்டி வயதில் அவளுக்கென்ன அப்படி மூட் அவுட் வந்து விட்டது?!

எனது அயர்ச்சியையும் பொருட்படுத்தாது, குழந்தைகளின் உரையாடலின் மீது உண்டான ஆர்வத்தில், அப்படியே செயலற்று நின்று, அதன் தொடர்ச்சியைக் கேட்கத் தலைப்பட்டேன்.

“என்னடி ஆச்சு? சாக்லேட் வேணுமா?”

“ம்ஹும்”

“பார்பி டால் வேணும்னு உங்க‌ டாடிகிட்ட கேட்ருந்தயே… அவங்க வாங்கித் தரல்லயா?”

“ப்ச்”

“ரோஷினி உங்கிட்ட பேசலயா?”

“அதெல்லாமில்லை”

“வேறென்ன? ஓ! என் ம்யூசிக் பென்சில் வேணும்னியே…..வா, நான் தர்றேன்.”

குழந்தைகளின் இந்த கல்மிஷமில்லாத உரையாடலும், வாஞ்சையான வார்த்தைகளும், என் நெஞ்சை ஏதோ செய்தது.

என்னையுமறியாமல் புன்னகைத்தேன்.

“அம்மா…அமெரிக்கா போறாங்க!”

உரையாடலில் உண்டான திருப்பு முனையால், என் எண்ணம் தடைபட்டது.

“ஓ! எப்ப திரும்பி வருவ?”

“அதான் சொன்னனே….அம்மா போறாங்க. நான் போகலை!”

“ஏன் நீ போகல? ஆன்ட்டீ ஏன் போறாங்க?”

“அவங்களுக்கு வேலை கிடச்சிருக்கு அங்க. நான் பாட்டி கூட இருப்பேன்.”

சிறிது நேரம் அங்கே மௌனம் நிலவியது. திவ்யா திரும்பவும் பேசினாள்.

“ஆன்ட்டீ இனி உன்னை ஸ்கூல்ல விடறதுக்கு வரமாட்டாங்களே, அதான் மூட் அவுட்டா?”

வீணா பேசாமல் இருந்தாள்.

“ஆன்ட்டீ…லன்ச் கொண்டு வந்து ஊட்டி விடமாட்டாங்களே அதுக்கா?”

“……………”

“ஓ! கரெக்ட். இனி டெய்லி கதைகேட்க முடியாதில்லை…அதனால தானே?”

திவ்யாவின் கேள்விகள்…… எனது மகளுக்கா? இல்லை எனக்கா?

கேட்கப் பெற்ற கேள்விகள், கேட்பதற்கு மிக எளிமையாய் தோன்றிடினும், அவற்றின் ஆழத்துள் செல்லச் செல்ல, அவற்றுள் பல்வேறு விஷயங்கள் பரிமளிப்பதை என்னால் உணரமுடிந்தது.

மனம் உடைந்தது. உள்ளே கனம் அதிகமானது.

வீணா, முன்பை விட இப்போது சோகம் மிகுந்தவளாக காணப்பட்டாள். அது, அவளின் கண்ணீரின் வழியே அப்பட்டமாய்த் தெரிந்தது.

அழுதுகொண்டே மிருதுவாய் திவ்யாவிடம் இவ்விதம் கூறினாள்….

“ஆமா! கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும் ஓரளவுக்கு நான் மேனேஜ் பண்ணிக்குவேன். ஆனா, அம்மா பாவம்! நா இல்லாம அவளால் இருக்கவே முடியாது. அங்க போனதுக்கப்புறம் நினைச்சு நினைச்சு அழுதுகிட்டே இருப்பாங்க. சாப்பிடுவாங்களோ, தூங்குவாங்களோ தெரியாது”

அவள் சொன்ன நிலையைக் கண்ணுற்றதும் நானும் என்னையறியாமல் அழத் துவங்கியிருந்தேன்.

இந்தப் பாசப் பரிமாற்றத்தை பறிகொடுத்தா நான் அங்கு போய் பணம் சம்பாதிக்க வேண்டும்? அங்கே சம்பாதிக்கும் பணம், நான் இழக்கும் அன்பில் எத்தனை சதவீதத்தை ஈடுகட்டும்?

என்னால் அதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நெஞ்சு விம்ம ஓடிச் சென்று, மகளை வாரியணைத்துக் கொண்டேன்.

அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தமாரி பொழியும்போதே, விடைகாணாத என் ஆழ்மனக் கேள்விகள் பல அவற்றுக்கான விடைபெற்றுக் கொண்டிருந்தன.

இதோ, என் அன்புக் குழந்தையை நெஞ்சாரத் தழுவி, ஆனந்த்தத்தில் லயித்திருக்கிறேன் நான்!

என் ஆனந்தத்தைப் பறிக்க எண்ணி, அது ஆகாமல் போக, சோகத்தில் திளைத்திருக்கின்றன… வாங்கி வந்த பொருட்கள்!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *