அந்தோனியும் விசேந்தியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2021
பார்வையிட்டோர்: 2,872 
 
 

“மனுக்குலத்தின் இரட்சகர் எனப் புனைந்து அழைக்கப்படும் யேசு, அர்ச்சசிஷ்ட கன்னிமரியம்மாள் வயிற்றில் இஸ்பிரீத்து சாந்துவினால் கர்ப்பமாய் உற்பவித்து, இன்று இரவு நடுச்சாமம் பன்னிரண்டு மணியில், மாட்டுக்கொட்டிலில், நடுங்கும் குளிரில் பாலகனாய்ப் பிறக்கப் போகிறார்.

அந்தோனியின் மனமும் அவரின் வருகையையிட்டு, நிறைவெய்திக் களிகூர்கிறது. கொய்யாத் தோட்டத்தில் வாழும் பரம்பரைக் கத்தோலிக்கருள் அவனும் ஒருவன். கறுத்த நாடாவில் கோர்த்து, கழுத்தில் கட்டிவிடப்பட்டிருக்கும் சிலுவையே அதற்குச் சான்று.

அவன், தன் குடிசையின் ஓரமாக, விரித்த பாயில், நீட்டி நிமிர்ந்து, கைகளின் முஷ்டிகளை, நெற்றியில் பாரப்படுத்திக் கிடக்கிறான். ஒருவருட காலமாக அவன் அதிலேயே நிரந்தரமாகிவிட்டான். அவன் கண்கள், வாசலோடு கிடந்து ஒளிரும் பேணி விளக்கின் ஒளியில், முகட்டை நோக்கி, மெதுவாய் வெட்டி வெட்டி மூடுகின்றன. வாழ்க்கையின் பரப்பை அடக்கி மனப்புழுக்கத்தில் பின்னிய நினைவின் வலைக்குள் அவன் ஒரு சிலந்தி. இரைதேடி அலையும் சிலந்தி அல்ல; அந்த வலையின் இழைகளைப் பிட்டுக்கொண்டு வெளிநாட வழிமோப்பும் சிலந்தி.

“இகபர தேவநம் அனைமரியாளிடம்
மனுவுரு வானதை வாழ்த்திடுவோம் – மனுவுருவானதை வாழ்த்திடுவோம்”

அவனுக்கு அனுபவமான பாட்டின் ஒலி, கலங்கலாய் அவன் கொட்டிலை அண்டுகிறது. ஒவ்வொரு நத்தார்த் திருநாளுக்கும், “கெரோல்” குழுகொண்டு, வீடு; வீடாய்ச் சென்று யேசுபாலனைத் துதி பாடி, பைலா ஆடி, மகிழ்ந்து, மகிழ்வித்து பணம் திரட்டும் “மறையகுளம்” வாலிபர்கள் இன்றும், பழைய பூங்கா வீதியால் பாடி, ஆடி வருகிறார்கள்.

அவர்கள் பாடிய பாட்டின் இசை அந்தோனியின் செவிப்பறையில், நுளம்பின் அனுக்கமாக அசைந்தது. அந்த அசைப்பு, காலமான நிகழ்ச்சிகளின் தொடருகளை மனதில் கோர்வையாய் இழைத்து விடுகின்றது.

“யேசுவே! இவர்கள் போன வருஷம் கெரோல் கொண்டு வரேக்கை நான் முழு மனுஷன். அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து, வீட்டிலை பாட வைச்சு, சந்தோஷமாக காசும் குடுத்து விட்டனான். இந்த வருஷம் நான் வெறும் மனுஷன், இல்லாட்டி, என்ரை புள்ளையள் இந்த நேரம் நித்திரை கொள்ளுமா? பத்து மாசத்துக்கு மேலை இதிலை கிடக்கிறன், நான் விசரன்; அவனைக்காப்பாத்தப் போகாட்டி எனக்கொண்டுமில்லை. அந்த நன்றி இருக்கா அவனுக்கு! முகட்டுக் கூரையில் பல்லி சூள் கொட்டிற்று.

இந்தா பல்லியுஞ் சொல்லுது. அவங்கடை குணமது. மேசன் கட்டிக்கொண்டு போன சுவர் சரியிறதைக் கண்டிட்டு, முதலாளிமேலை விழப்போகுதெண்டு, அவரைப் போய் இழுக்க, அது என்ரை நாரியைப் பதம் பாத்திட்டுது, ஒரு மாதமா நோத்தான் இருந்துது. பேந்து என்னைப் பாயில் போட்டது, ஒருக்கா சாட்டுக்கு வந்து பார்த்தான். பேந்து ஆளிடை முச்சே இல்லை. அவர் பெரிய முதலாளி, வேலைசெய்த காசாலை எப்பவோ ஐந்து ரூபா தரவேணும் அதையெண்டாலும் ஆரிட்டையுங் குடுத்து விட்டானா? சுரண்டிற புத்தி, யேசுவே உதவிசெய்யப் போன நான் அழுந்திறன். நான் என்ன பாவஞ் செய்தன், என்ரை புள்ளையள் என்னட்டை புதுச்சட்டை கேட்டிட்டுச் சுருண்டு படுத்துட்டுதுகள்.”

நினைவு உணர்வில் மங்க தலையை இடதுபக்கம் சரித்து, பாயில் உடலை வளைத்து, குறண்டிக்கிடக்கும் தன் இரு பிள்ளைகளையும் பார்த்தான், கண்களில் நீர் மாலையிட்டது. நினைப்பு இன்னும் மந்தமாக, கழுத்தில் தொங்கிய சிலுவையை எடுத்து, பற்களால் நன்னிக் கொண்டான்.

அவனின் மனைவி றோசம்மா, எங்கோ இருந்து குடிசையை அண்டிவரும் அரவம், அவன் செவிப்பறையில் பட்டது. றோசம்மா, அவன் பாயில் படுத்த நாள் முதல், வீடுவீடாகச் சென்று, மாவிடித்துக் கொடுத்து, கிடுகுபின்னி, வேறு சில்லறை வேலைகளும் செய்து, குடும்பத்தை ஓட்டுகிறாள். இன்று அவளுக்கு வேலை அதிகம். “கிறிஸ்மஸ்” கொண்டாட்டத்துக்காக, அரிசிமாவில் பலகாரம் செய்பவர்கள், அவளுக்கு மாவிடிக்கும் உழைப்பைக் கொடுத்துவிட்டார்கள். அதனால் அவள் வழமை போலன்றி ஒன்பது மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தாள்.

அவள் வருகை கேட்டதும் வேதனையில் நோகும் அவன் மனத்தின் மையத்துள் அனுதாபப் பொருளானாள் அவள். உள்ளே சென்றதும், அவனருகில், கால் மடக்கிக் குந்தி இருந்து, தூரத்தில் கிடந்த பேணி விளக்கை கணவனின் முகம் தெரிவுமளவிற்கு, முன்னிழுத்து விட்டாள்.

“இஞ்சாருங்கோ !”

“ம்…”

அவன் உடலைப் பக்கவாட்டில் சரித்து, ஒருகையை மடக்கி தலையின்கீழ் வைத்து, அவளுக்கு முகம் காட்டிக் கிடந்தான்.

அவள் முகத்தில், ஏதோ சொல்லும் அவதியில், சின்ன மகிழ்ச்சி மொட்டவிழ்க்க, தன் முந்தானைச்சேலையை அவிழ்த்து தான் வேலை செய்யும் ஒரு வீட்டுக்கார அம்மாவிடம் வாங்கிய இரு சட்டைகளைப் பக்குவமாய் வெளியில் தூக்கினாள்.

அவன் கண்கள் பாயில் விளக்குப்பூச்சி பிடித்தன.

“இஞ்சாருங்கோ ”

“என்ன”

“நான் வேலைசெய்வன் அந்த அம்மாவை; அவவிட்டை; புள்ளையளுக்கு நத்தாருக்கு போட உடும்பில்லையெண்டன். இதுகளைத் தூக்கிக்தந்தா ஒண்டு பொடியனுக்கு ஒண்டு புவனாவுக்கு நல்லாருக்கு”

அனுபவமற்ற அவள் மனம் பிள்ளைகளுக்கு உடுப்புக் கிடைத்ததில் பூரிப்பில் குளித்தது. ஆவலோடு அந்தோனியின் முகத்தைப் பார்த்தாள்; அவன் முகத்தில் கண்ட மாற்றத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. கண்கள் அவளைக் கோபத்தில் நறுமின.

“கொண்டுபோடி! கொண்டே அவளிட்டை எறிஞ்சிட்டுவாடி, உன்னை ஆரடி வாங்கியரச் சொன்னது?”

கோபத்தின் வீறிப்பில், அவள் கையில்பிடித்த இருசட்டைகளையும், சட்டெனப் பறித்து, தூரவீசி எறிந்தான்.

“ஏன் எறிஞ்சனீங்க!”

“ஏனோ? ஓமடி நீ கேப்பாய்; அவையிரை புள்ளையள் ஆரும் போட்டிக்கிழிச்ச சட்டையாடி எங்கடை பிள்ளையள் போர்றது.? உனக்கு எத்தனை முழ செஞ்சடி? அவளிடை துணிவைப்பார்” அவன் கண்களில் நீர் கசிந்து, தொண்டை கரகரத்து, அடைத்திற்று.

“எடியே என்ரை புள்ளையளுக்கு ஆரிட்டையும் வாங்கிப் போட்டுப் பழக்க மிருக்காடி; நான் அதுக்கு விடுவனாடி, தெரிஞ்சு கொண்டும் ஏனடி வாங்கிக் கொண்டந்தனி?”

“அதுகள் அன்பிலை தந்தவை!”

“ஓமடி! எனக்குத் தெரியும்; அவயிடை அன்பை; நாளைக்கு உன்னட்டைக் கொஞ்சம் கூட வேலை வாங்குவினம்; என்ன செய்வம்?”

மனதில் யோசனை ஓட, பாயில், பிசிறி நின்ற ஓலைக்கற்றை விரல் நகத்தால் பிய்த்துப் பிய்த்துக் கிழித்தான். அவன் மனதுக்கு நிம்மதி இல்லை.

கண்களை வெட்டி, அவளைப் பார்த்தான். அவள் கலங்கிய கண்களால், அவன் எறிந்து விட்ட உடுப்புகளில் பார்வை விட்டிருந்தாள். அவனுக்கு மனம் பொறுக்கவில்லை.

“நான் ஆரும் தாறதை வாங்கி என்ரை புள்ளையளுக்குப் போடுவனாடி? நாளைக்குக் கொண்டு போய்க் குடுத்திடு.”

கண்களில் கரித்த நீரை கைமுஷ்டியால், உரஞ்சித் துடைத்துக் கொண்டான். றோசம்மா, துக்கம் கண்களின் மேல் கனக்க, மௌனித்து இருந்தாள், அவள் அந்த உடைகளை வாங்குவதற்கு உள் மனத்தோடு எவ்வளவு போரிட்டிருப்பாளோ?

பேசவேண்டிய விஷயங்கள் பல இருந்தும் இருவரும் பேசவில்லை. அடுக்கி, இடையின்றி வெடிக்கும் பீரங்கி வெடிகளும் அயலில் உள்ள குழந்தைகள், வானத்தை நோக்கிவிடும் சீறு வானவெடிகளின் ஒலிகளும்; வானத்திலே சென்று “டுப்” பட்டு வர்ணம் ஜொலிக்கும் மத்தாப்பின் சத்தங்களும் சேர்ந்து இருவரின் செவிகளிலும் தெளிவாக இரைக்கின்றன.

முற்றத்தில் தூங்கிக் கிடந்த நாய், குரைத்துக் கொண்டு, முன்னோக்கி நகர்ந்து செல்வதை அதன் குரைப்புத் தொனியைக் கொண்டு இருவரும் உணர்ந்தனர். அப்போது தான் நெடுநேரத்துக்குப்பின் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அண்ணை!”

புதுமையான அழைப்பு. முற்றத்திலே இருந்து, நாயின் குரைப்பைப் பீறிட்டு வந்தது.

“ஆரது?”

அந்தோனியே கேட்டான்.

“அது நான்!”

“நானென்டு?”

“நான் விசேந்தி!”

“வா! வா! நான் ஆரோ எண்டு நினைச்சன்”

விசேந்தி தோளில் இட்ட, துவாயைக் கையில் எடுத்துப் பக்கத்தில் வைத்திருந்த பார்சலை மறுகையில் காவியவண்ணம் குனிந்து குடிசையின் உள்ளே சென்றான்.

அவனைக் கண்டதும் றோசம்மா எழுந்து ஒதுங்கி, பிள்ளைகள் படுத்திருந்த பாயில் சென்று, குந்தி, கைகளைக் கோர்த்து நாடியைத் தாங்கி இருந்தாள்.

விசேந்தி அந்தோனிக்கு முன் போய் துவாயை மடியோடு பிடித்தவாறு, நிலத்தில், கால் கூட்டி அமர முனைந்தான்.

“இஞ்சை பாயிலை இரு; நிலத்திலை ஏன் இருக்கிறாய்”

“எங்களுக்கு எங்கை இருந்தாத்தான் என்ன?” –

துவாயைத் தோளில் எறிந்து, அந்தோனியின் காலோரமாய், பாயில் குந்தி அமர்ந்து பார்சலை மடிக்குள் வைத்துக் கொண்டான்.

அவன் ‘சும்மா’ வந்தவனைப் போல நடித்துக் கொண்டான்.

“என்ன இந்த நேரம்?”

“சும்மா, உன்னைப் பாத்திட்டுப் போவமெண்டுதான் வந்தனான். இரண்டு கிழமையா இங்காலை நான் வரல்லை”

“தல்லாலையிலை இருந்து, நடந்தே வாறாய்; இந்தப் பனிக்காலை”

“ஓ! இதென்னண்ணை , எங்களுக்குப் பனியும், வெய்யிலும் – இப்ப நாரி எப்பிடியிருக்கு.”

“அது அப்பிடித்தான், எத்தினை புக்கை கட்டியாச்சு ; இனி எனக்கு நம்பிக்கை இல்லை .”

அந்தோனி பேணி விளக்கைப் பார்த்தான். அதைக் கேட்டு றோசம்மாவின் கண்கள் நீரில் நனைவதை அவன் அறியான். விசேந்தி, சொல்வது தெரியாது முகட்டைப் பார்த்தான்.

“நீயும் போய் அந்த அறுவானுக்குதவி செய்தியே? அவனும் ஒரு மனுஷனே?”

“எங்களுக்கு அந்த மனமில்லையே – நீ இப்ப செல்லப்பாவோடை வேலைக்குப் போறல்லையே.”

“இல்லை நான் விட்டுட்டன், அவனுக்கு விடிய ஏழுமணிக்கு முதல் வேலைத்தலத்திலை நிக்க வேணும். பொழுதுபட ஏழு மணிக்குத்தான் பேந்து வேலை விடுவான், அதுமட்டும் நாங்கள் என்ன மாடே!” –

அந்தோனியும் செல்லப்பாவுடன்தான் வேலை செய்தவன்.

செல்லப்பா என்பவர் யாழ்ப்பாணத்தில் பிரபல ‘கொன்றாக்ரர்’ தல்லாலை அவரது சொந்த இடமானதால், அங்கு அவருக்கு மதிப்பு அதிகம், அவர் ஒப்பந்தத்துக்கு வீடு எடுத்துக் கட்டிக் கொடுத்த வீடுகள் யாழ்ப்பாணத்தில் அநேகம்.

“இப்ப எங்கை வேலை?”

“இப்பவா? மணி எண்ட பொடியனோடை, பொடியன் புளையில்லை. அது எங்களைப் போலத்ததான். அதுக்கு எங்கடை கஷ்டம் தெரியும். செல்லப்பன் உன்னை வந்து பாக்கேல்லையண்ணை.”

“ஒருக்கா வந்தான், பேந்து மூச்சேயில்லை. வேலை செய்த காசாலை ஐஞ்சு ரூபா தர வேணும்.”

“அவங்கடை குணமதண்ணை அந்தக் காசு தருவாணெண்டா நெனைக்கிறாய். அது முதலாளியளிடை இரத்தத்தோடை ஊறின குணமண்ணை .

விசேந்தி றோசம்மாவைப் பாத்தான். அவள் அவர்களோடு கலந்தவளாய் இருந்தாள்.

“உவர் வேலைசெய்த அஞ்சாறு பேர் உப்பிடித்தான் காசு பிடிச்சுக்கொண்டு தராமல் விட்டுட்டாங்கள்.”

அதேனக்கா கேட்கிறாய், அவங்கடை கொடுமை பெரிய கொடுமை!”

விசேந்தி தலையைக் குனிந்து தன் பெருவிரலைப் பாத்த்துக் கொண்டான். அவனுக்குச் சம்பாஷணையின் ஊடேயும், வந்த விஷயத்தை முடித்துவிட வேண்டுமென்ற ஆசை. நூல் இழுத்தது என்றாலும், அந்தோனி என்ன சொல்லி விடுகிறானோ என்ற பயமும் இருந்தது. மூவரும் கதையின்றி மௌனமாயினர்.

விசேந்தி, கையை மெதுவாக மடிக்குள் விட்டுப் பார்சலை வெளியிலே தூக்கி, அவர்களைப் பார்க்காது, தன் காலோடு வைத்தான். அந்தோனி அதைக் கவனித்தான்.

“உதென்ன பாசல்”?”

விசேந்தி, பார்சலைக் கையில் தூக்கி சிறிதாகச் சிரித்தவாறு அந்தோனியைப் பார்த்தான்.

“அது உன்ரை புள்ளையளுக்கு இரண்டு சட்டையண்ணை ; அதுகள் நத்தாருக்குப் போடட்டன்.” பார்சலை முன்னால் நீட்டி, அந்தோனியின் முன்னால் வைத்தான். அந்தோனியால் அதை மறுக்க முடியவில்லை. வாஞ்சைப்படும் கண்களினால் அவனை நோக்கி,

“உனக்கேன் இந்த வேலை; நீ புள்ளை குட்டிக்காரன்; விசர் வேலை பார்க்கிறாய்” விசேந்தி வாசற் பக்கமாய்த் தன் தலையை திருப்பிக் கொண்டான்.

“சும்மா இரண்ணை ! உன்னர புள்ளைகளும் என்னர் போலத்தான்”

விசேந்தி, குனிந்து மடியை மெதுவாக அவிழ்த்து, அவனுக்குக் கொடுக்க வைத்திருந்த ஐந்து ரூபாவை வெளியில் எடுத்தான்.

“அண்ணை, கோவிக்காமல் இதை நாளைக்குச் சிலவுக்கு வச்சிரண்ணை, புள்ளையளுக்கு ஏதும் ஆசைப்பட்டதை வாங்கிக்குடு”

“ஐயோ என்ன விசேந்தி உன்ரை வேலை. உனக்கெங்காலை காசு”

“அதண்ணை, எங்கடை வீட்டுக்குப் பத்கத்திலை இராவிலை போய், அத்திவாரத்துக்கு மண்ணள்ளிப் போட்டனான்.”

அந்தோனியின் இதய இழைகள் விபரிக்கமுடியாத அன்பின் இறுக்கத்தில் முறுகி இளகின. அவனால் தன் நெஞ்சின் கோரிக்கையை வார்த்தையில் வடிக்க முடியவில்லை.

“உனக்கேன் இந்த வேலை!” வேறு வார்த்தைகள் அவனுக்கு வரவில்லை.

“நீ ஒரு நாளைக்கு, நான் விழுந்து கிடக்கேக்கை உதவி செய்யமாட்டியே?”

றோசம்மா, விசேந்தியின் பரிவையும் தன் வீட்டுக்கார அம்மாவின் அன்பையும் மனதில் இட்டு நிறுத்துத் தெளிவடைவது, அவள் முகத்தில் வெளிச்சப்படுகிறது.

“உன்ரை புள்ளையளுக்குச் சட்டையெல்லாம் தச்சுப்போட்டியோ”

“ஓம் அதெல்லாம் முடிஞ்சுது”

விசேந்தி, தன் மனைவியிடம் தன் பிள்ளைகளின் பழய சட்டைகளை, சலவைக்குக் கொடுக்கும்படி சொன்னது, அவன் எண்ணத்தில் சில்லிட்டு மறைந்தது. தன் பொய்யை அந்தோனி அறியமாட்டான் என்ற துணிவு.

அந்தோனியின் குடிசைக்குத் தெற்குப் பக்கமாக, சிலுவை அமைப்பில் ‘ பிரமாண்டப்படும் பெரிய கோவிலின் நடுச்சாமப்பூசைக்கு ஆயத்தமணி அடித்து ஓய, பாஷையூர் கடற்கரையை அண்டி இருக்கும் அந்தோனியார் கோவில் மணி “டங்” காரமிடத் தொடங்கியது.

“அண்ணை , அங்கை பூசைக்கி ஆயத்தமணி அடிச்சிட்டுது; புள்ளையளை எழுப்பு; நான் போட்டு வாறனண்ணை”

அந்தோனி நீர்வழியும் கண்களால், எழுந்துநின்ற அவன் கால்களையே பார்த்துக் கொண்டு கிடந்தான்.

“அண்ணை, நான் நாளைக்கி வாறன்”

“ஓம்”

விசேந்தி துவாயைக் கையில் எடுத்து, குனிந்து கொண்டு வெளியே நடந்தான். அவன் கால்களில் அந்தோனி எறிந்த சட்டைகள் தட்டுப்பட்டன்.

“அக்கா! இங்கை சட்டைகள் மண்ணுக்கை கிடக்கு, எடுத்து உள்ளுக்குப் போடு”

“ஓம்”

அவள் எழுந்தாள்.

“இஞ்சை, விளக்கைப் புடியன். வெளியாலை இருட்டால்லை கிடக்கு”

“நான் போறனண்ணை விளக்கு வேண்டாம் “

விசேந்திக்காக குடிசை வாசலில் நின்று விளக்குப் பிடித்த றோசம்மா குடிசைக்குள் விளக்குடன் நுழையும் போது அவன் தெருவில் ஏறி நடப்பது, தெருவிளக்கின் பிரகாசத்தில் தெரிந்தது.

அந்தோனியின் மனம், நெடு நாட்களுக்குப் பிறகு, அன்று தான் சந்தோஷத்தில் நிலைத்தது.

– ஈழநாடு – 1962 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *