அத்தமக செம்பருத்தி….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 9,020 
 
 

புழுதிக்காட்டுல பூவு ஒண்ணு பூத்துச்சு.அத்தவயித்துல அழகா பொறந்தா ஆசமக செம்பருத்தி. செவசெவன்னு இருக்கும் அவ பாதம். இலவம் பஞ்சு மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கும் அந்த பட்டுப்பாதம்.

ரெண்டு தெருவுக்கு பந்தல் போட்டு நாப்பது கெடா வெட்டி எட்டு ஊருக்கு கறிச்சோறு போட்டு அசத்திபுட்டா அத்தக்காரி அஞ்சுகம்.

நாலு பந்தி சோறு தின்னுபுட்டு ரெண்டு சோடா குடிச்சப்பக்கூட தெரியாது செம்பருத்திதான் எம் பொஞ்சாதியா வரப்போறான்னு…….

ஆத்துதண்ணி போல வெரசா ஓடிப்போச்சு வருசம் பதினெட்டு.

ஆறடி உசர பனமரம் மாதிரி நல்லா வளர்ந்து நிக்கறேன். மயிலக்காள மாதிரி திமு திமுன்னு இருக்கும் என் தோளு ரெண்டும். மதுரக்கார அண்ணாச்சி வச்சிருக்கற ஜிம்முக்கு ஜம்முன்னு போறோம்லா!

செம்பருத்திய பத்தி சொன்னா புகையில வாயிலயும் மல்லியப்பூ வாசம் வீசும்.
செம்பருத்திய பார்க்கறதுக்கு வண்டிகட்டிகிட்டு வாரானுக மீசை மொளச் இளவட்ட பயலுக.

சோளக்காட்டு பொம்ம போல வெடவெடன்னு வளர்ந்து நின்னா..
மாமன் எம்மேல ஆசவச்சு அழகா சமஞ்சு நின்னா..
வாய்க்காவோர ஆலவிழுதுல அவ ஊஞ்சல் ஆடுற அழக ரசிக்க ஊருகண்ணெல்லாம் போட்டி போடும்……

சைக்கிள் கம்பியில செம்பருத்திய ஒக்காரவச்சு என் நெஞ்சுல சாச்சுகிட்டு பெடல மிதிச்சா
ச்சும்மா பறக்கல்லா செய்யும் சைக்கிளு!

வயித்தெரிச்சலோட பார்க்கும் இருபதும் அறுபதும். கறுத்த பயலுக்கு செவத்த பொண்ணு கெடச்ச
வயித்தெரிச்சல்தான்.
செம்பருத்திக்கும் எனக்கும் ஓடக்கர அம்மன்கோவிலுல
கல்யாணம் நடந்துச்சு….

வானவில்லுகூட வாழ ஆரம்பிச்சேன்; வசந்தமுல்ல மாதிரி மலர ஆரம்பிச்சது
எங்க வாழ்க்க.

சாணியால வீடு மொழுகி,தட்டுபுட்டு சாமனுக்கு இடயில பாச்சா உருண்ட வாங்கிபோட்டு
ஒலக்குடிசைய வசந்த மாளிகையாக்கிபுட்டா வந்த ஒத்த நாள்ல!
கோவத்துல நான் கத்த ஆரம்பிச்சா மாமான்னு ஒரு வார்த்த அவ சொல்லி தலைய சாச்சு பார்ப்பா….படக்குன்னு பஸ்ஸ புடிச்சு பட்டணம் போயிரும் கோவமெல்லாம்.

மூணு மாசங் கழிச்சு மாங்கா கேட்டா எம் மயிலு.

என்ன பாக்குறீய? நான் அப்பா ஆக போறன்னு சொல்லித்தான் தெரியனுமோ?
ஒலகத்துல அழகானது நிலாவும் இல்ல மழையும் இல்ல புள்ளய சுமக்குற
புள்ளத்தாச்சியோட முகந்தான்.

தங்கம்போல தகதகக்குற அழகுமுகம்; வைரம்போல மின்னலடிக்குது
அவமுகம்.

காள பொறக்குமோ பசு பொறக்குமோன்னு தெரியலை…

ஒம்பது மாசமாச்சு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமா நகர்ந்துச்சு..

வயக்காட்டுல நின்னாலும் தென்னந்தோப்புல நின்னாலும்
உள்ளுக்குள்ள அவ நெனுப்பு மட்டுந்தான் நிக்குது….

உள்ளூரு மருத்துவச்சிக்கு கையி நடுங்குதுன்னு மேலத்தெரு மாணிக்கம்பய சொல்லிட்டு போனதால, பக்கத்தூரு கவர்மெண்டு ஆஸ்பத்திரியில் செம்பருத்திய சேர்த்துபுட்டு வெளியில நிக்கறேன்…

முள்ளுகுத்தினா கூட தாங்கமாட்டா.. புள்ள பெக்குற வலிய எப்படித்தாங்குவாளோன்னு படபடன்னு அடிக்குது நெஞ்சு…

பொம்பளைக்கு புள்ளய குடுத்துபுட்டு ஆம்பளைக்கு வலிய குடுத்திருந்தா கையெடுத்து கும்பிட்டிருப்பேன் கடவுள….

அய்யோ அம்மான்னு கத்துறா என் உசிர சொமக்கற மகராசி…

தூரத்துல ஒரு வேதகோயில் சிலுவ தெரியுது

புள்ள நல்லா பொறந்தா நூறு தேங்கா உடைக்கிறேன்
சாமீ..

புள்ள பொறந்த சேதிய அழுக சத்தம் சொல்லிடுச்சு.

ஓடிப்போயி பார்த்தேன் கறுப்புகலருல காளகன்னு கையி கால ஆட்டுது..

இம்புட்டு சின்னதாவா இருக்கும் மூக்கும் முழியும்?

கட்டியிருந்த வேட்டி அவுந்ததுகூட தெரியாம சந்தோசத்துல மெதக்க ஆரம்பிச்சேன்.

புள்ளய எங்கையில கொடுத்துபுட்டு இடிய எங்காதுல சொல்லுறா நர்சு…

புள்ள சத்தம் கேட்டநிமிசம் செம்பருத்தி சத்தம் நின்னுடுச்சாம்…

அய்யோ! அம்மா! ஊர்காவல் முண்டக்கன்னியாத்தா!
இந்த எழவெடுத்த நர்சு சொல்றது நிசந்தானா?

உடம்பெல்லாம் வேர்த்து போச்சு,காலுரெண்டும் கிடுகிடுன்னு நடுங்குது.

என் செவப்புத்தங்கம் வெரச்சு கெடக்கே! மாமன்நான் பக்கத்துல வந்தாலே படக்குன்னு எழுந்திரிப்பா….

மடைமடையா அழுவறேன் ஒரு அசைவும் இல்லயே!
.
யார் கண்ணு பட்டுச்சோ என் கண்ணு பட்டுப்போச்சே!

அழுது அழுது எங் கண்ணு ரெண்டும் தண்ணியில்லாத வயலப்போல வறண்டு போயிருச்சு.

பதினாறு நாள் விசேசம் முடிஞ்சுபோயாச்சு…

செம்பருத்திய பொதச்ச இடத்துல புல்லுபூண்டு வளர்ந்தாச்சு..

கம்பியூட்டரு இருக்குன்னாக செகப்பு வெளக்கு வேன்வண்டி இருக்குன்னாக

என்ன இருந்து என்னத்த செஞ்சாக..

வெள்ளச்சட்ட டாக்டரு மட்டும் இருந்தா போதுமா வசதி ஏதும் இல்லைன்னா ஆசுபத்திரின்னு சொல்லலாமா?

புள்ள பெக்கற வசதி குறைவா இருந்த ஆசுபத்திரிய நம்பினதுக்கு கை நடுங்கின மேலத்தெரு மருத்துவச்சிய நம்பி இருக்கலாம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *