வேலையால் வரும்போது தன்னையறியாத அலுப்பு உடலில் புகுந்து முறிப்பதாய் ஒரு அவஸ்தை. வீடு வேலை வீடு வேலை என இயந்திரமயமாகிய அலுத்துப் போன மனதில் உருவாகும் நச்சு உணர்ச்சிகளாகக் கோபம், ஆதங்கம், அவசரம், வெறுப்பு என்பதாக இன்னும் பல புற்றில் இருந்து சீறியெழும் கருநாகங்கள் போல் எப்போதும் தலை நீட்டுகின்றன. அலுத்த வாழ்வா? அடைபட்ட வாழ்வா? விடை காணமுடியாத அவஸ்தையுடன் அலையும் வாழ்வா? எங்கோ பறிபோகிவிட்ட எமது சுதந்திரத்தை எண்ணி இங்கே தலை நீட்டும் கருநாகங்களான உணர்ச்சிகளா?. சுதந்திரப் பறவைகளாகச் சுற்றிவந்த சுகத்தை இழந்த ஏக்கமும் கோபமும் அடிமனதில் தணலாகக் கனன்று கொண்டிருக்க வேலை வீடு வேலை வீடு என்பதான விடை காணமுடியாத வாழ்க்கையாக. குருவிக் கூடுகளான எமது வாழ்க்கையைக் குரங்கு கூட்டமாய் நிர்மூலம் செய்து நிர்க்கதியாக்கிய இலங்கை அரசை எண்ணும்போது கருநாகம் தலை நீட்டிச் சீற, கவலை முகத்தில் கருமேகமாய் அப்ப, சோகம் மலைப்பாம்பாய் விழுங்கச் சோர்வடைந்து சுருண்டுபோகும் அவஸ்தையா?.
அன்று மேலதிக வேலையை முடித்து வரும்போது அலுப்பு அவனை வெற்றி கொண்டு அகங்காரமாய் எள்ளி நகையாடியது. சோர்வு சுற்றி வளைத்துச் சூறையாடியது. அப்பாடா என்பதாகப் போய் சோபாவில் விழுந்து தொலைக்காட்சி சிருட்டித்த உலகில் புகுந்துவிடத் துடித்தான். ஒரு உலகில் இருந்து இன்னொரு உலகிற்குப் பாய்ந்து இந்த ஓயாத அலைச்சலில் இருந்து விடுதலைப் பெறும் முயற்சி.
சபேசன் வீட்டுக் கதவைத் திறந்தான். ஆ என்கின்ற அலறும் ஓசை பழுக்க காய்ச்சிய ஆணியாய் காதிற்குள் பாய்ந்தது. சூவைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றபோது குமுதினியும், கபியும் சமையலறையில் உள்ள மேசையில் இருந்தனர். குமுதினி கையில் ஒரு மரத்தால் செய்யப்பட்ட அகப்பை இருந்தது. அந்த அகப்பையை ஆட்டினால் அவன் ‘ஆ’ எனக் கத்துவான். அவன் கண்களில் பயம் மின்னும். கபிலனைப் பொறுத்தவரையில் அம்மா இப்போது அகப்பைக்காம்புப் பயங்கரவாதி. அப்பா வந்தால் ‘ஆ’ அரிகண்டத்தில் இந்தும் அகப்பைக்காம்பு பயங்கரவாதியிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை.
ஒரு சிரட்டையும் தடியும் இணைந்துகொண்டு அற்புதமாகப் பிடியும் தலையுமாக மனிதனுக்காய் பாடுபடும் கருவியாக அது ஈழத்தில். இங்கு மரத்தில் செருக்கி எடுக்கப்படும் அதன் பிரதி. அன்று அகப்பைக்காம்பு எமது அன்னையரின் பிரதான ஆயுதமாக இருந்த காலம் அலாதியானது. அது அடுப்படியை விட்டு அதிக தூரம் செல்லது. குதிரைப் பாய்ச்சலுக்கு முன்னே முயலோட்டம் வெல்லாது. இந்த அகப்பைக்காம்புகள் மட்டுமே சமையலில் எத்தனை விதமாக உதவும். ஐரோப்பியர் பத்து கத்தி கரண்டியை வைத்துச் செய்யும் வேலையை எமது அன்னையரின் அகப்பைக்காம்பு தனியே செய்து முடிக்கும். பிட்டுக் கிண்டுவது தொடக்கம் பொங்கல், கழியென இதன் உதவியை அடுப்போடு போராடிய அன்னையரால் மறக்க முடியாது. அகப்பைகளின் அளவுகள் பாத்திரத்திற்கு ஏற்ப மாறும். பானையைக் கிளறும் அகப்பைக்கு அண்டாவுக்குள் ஆழம்பார்க்க முடியாது. அது தனி இனம்.
எமது அன்னையருக்குக் கோபம் வரும்போது, அவர்கள் வன்முறையைக் கையில் எடுத்துப் பத்திரகாளிகளாக அல்லது பயங்கரவாதிகளாக மாறும் போது, அகப்பைக்காம்பு ஆயுதமாகும். முதுகுகளை முரட்டுத்தனமாகப் பாதம் பார்க்கும். சில வேளைகளில் அகோரத் தாக்குதலில் தோல் வெடித்துக் குருதி வடிவதுண்டு. அகப்பைக் காம்போடு அன்னை கோபமாக வந்தால் பல வேலிகளைக்கூட ஒற்றைப் பாய்ச்சலில் பாய்ந்து சவாரிக் குதிரையாய் ஓடி மறைபவர்கள் அதிகம். இது ஈழத்தில் இராணுவப் பிரசன்னத்தில் பலருக்குக் கிடைத்த அனுபவம். தப்பிப் பாய்ந்து மூச்சிறைக்கக் கோவில் வீதியில் வந்து நின்று வீட்டை நோக்குபவர்கள் சிலர். அகப்பையை எண்ணும் போது சபேசனுக்கு ஊரில் நிற்பது போன்ற உணர்வு. முதலில் வன்முறையை உடல்ரீதியில் ஒரு பிள்ளை அனுபவிப்பது அம்மாவின் அகப்பைக் காம்பிடம் இருந்துதான் என்பது அவன் அனுபவம்.
சபேசன் சமையலறைக்குள் வந்தான். அவனுள் அடங்கிப் போயிருந்த கருநாகங்கள் இப்போது குமுதினி மீது பாயத் தாயாராக நின்றன. சீறிப்பாயும் கோபத்தையும், ஓடும் குதிரையான மனதையும் அடக்கி ஆள்பவனே வீரன் என்கின்ற கொள்கையில் சபேசனுக்கும் அபாரப் பிடிப்புண்டு. சிறிது நேரம் பேசாது நின்றான். பின்பு அந்த மேசையில் தானும் அமர்ந்துகொண்டான். இதைப் பார்த்த கபிலன் அப்பாவுடன் அழகாக ஒட்டி அமர்ந்து கோழிக்குஞ்சு பருந்தைக்கண்டால் தாயிடம் அடைக்கலம் தேடுவது போல அடைக்கலம் தேடிக்கொண்டு, ‘ஏனப்பா இவ்வளவு பிந்தி வாறியள்? ‘ என்கின்ற தனது பெரிய ஆதங்கத்தை வெளியிட்டான்.
‘அதுவா அப்பாவுக்கு ஓவர்ரைம்.’
‘ம்… உந்த வித்தை எல்லாம் இருக்கெட்டும்… நீ தந்ததை எழுதி முடி பார்ப்பம்…’
என்பதாக அகப்பைக் காம்பை காட்டி உறுக்கினாள் குமுதினி. கபிலனுக்கு அம்மா பயங்கரவாதி. அகப்பைக் காம்பால் அடிக்காவிட்டாலும் அடிப்பேன் எனப் பயமுறுத்தும் பயங்கரவாதி. அடித்து அது பாடசாலைக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் என்பது குமுதினிக்கு நன்றாகத் தெரியும். அடிக்கும் துணிவு இல்லாவிட்டாலும் அடிப்பேன் எனப் பயமுறுத்தும் படலம் நித்தம் நடக்கும். சபேசனின் கருநாகங்கள் சீறிப் படமெடுத்துப் பாயத் தயாராகும் கணங்கள் அவை. அடிப்பதாய் பயமுறுத்துவதையும் சட்டத்தால் தடை செய்ய வேண்டும் எனத் தோன்றும் அவனுக்கு.
‘அப்பா விளையாடப் போகட்டா? ‘
‘ஆ…?’ குமுதினி அகப்பைக் காம்பை மீண்டும் ஓங்கிக் காட்டினாள். கபிலன் ‘ஆ’ வென அலறினான்.
‘குமுதினி நீ உதை நிப்பாட்டு. அகப்பையை இங்க தா.’
‘அப்பா நான் விளையாடப் போகட்டா? ‘
‘இல்லை. அம்மா சொன்னதை எழுதி முடிச்சா மாத்திரம்தான் விளையாடப் போகலாம்.’
‘அதுவா… நேரம் போயிடும் அப்பா.’
‘பருவாயில்லை எழுதி முடிச்சிட்டு விளையாடப் போகலாம்.’
சற்றுச் சலிப்படைந்தவனாய் கபிலன் எழுதத் தொடங்கினான். கபிலனை உடனடியாகவே விளையாட விடுவதற்குச் சபேசனுக்கு விருப்பமே. ஆனால் நாளைக் குமுதினி கூறும் எந்த வேலையையும் கபிலன் செய்யாமல் விடலாம் என்பதிற்காகவே குமுதினி சொன்னதை முதலில் செய்து முடித்த பின்பு விளையாட போகலாமெனக் கூறினான். கபிலன் அரை மணித்தியாலத்தில் எழுதி முடித்துவிட்டு அதை அப்பாவிடம் காட்டினான்.
‘ஓ நீ கெட்டிக்காரன்… ‘ என்றான் சபேசன். கபிலன் முகத்தில் சந்தோசமும் பெருமையும் மின்னித் தெறிக்க ‘தக்.’ (நன்றி) என்றான்
‘அப்பா விளையாடப் போகட்டா? ‘
‘சரி ஓடு.’
அவன் சிட்டுக் குருவியாக மறைந்தான்.
‘இந்தாங்க ரீ.’ குமுதினி தேநீரை நீட்ட அதை வாங்கிக்கொண்டு சோபாவிற்குச் சென்றான். சிறிது நேரத்தில் அவளும் அங்கே வந்து அமர்ந்து கொண்டாள். சபேசன் குமுதினியைப் பார்த்து மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான்.
‘நீ உந்த அகப்பைக் காம்பால அவனை வெருட்டுறத விட்டிடு. நான் அதை இனிப் பார்க்கக் கூடாது.’
‘அப்பிடியெண்டா அவன் ஒண்டுமே செய்யமாட்டான் அப்பா.’
‘அப்ப, இப்ப எப்பிடிச் செய்தவன்?’
‘ஆ… அது விளையாட போகோணும் எண்ட அவாவில நடந்தது.’
‘அப்பிடித்தான் ஏதாவது ஒண்டு செய்தா ஏதாவது ஒண்டப் பரிசாக் கொடுக்கோணும். அப்பதான் பிள்ளையள் சந்தோசமா அதைச் செய்வினம். இதுதானே இஞ்சத்தைய முறை.’
‘இஞ்சத்தையான்களுக்கு அது சரி. எங்கடையள் கேக்குதே?’
‘ஏன் கேக்க மாட்டினம்? இப்ப எப்டிக் கேட்டவன்?’
‘அப்பிடி எண்டாலும் எல்லாத்துக்குமெல்லோ கேட்டுக்கொண்டு நிற்பான்.’
‘அதுக்கேத்த மாதிரிச் சொல்லோணும். பள்ளிக்கூடத்தால வந்து வீட்டு வேலை செய்து காட்டினா இவ்வளவு நேரம் வெளியால போய் விளையாடலாம் எண்டு சொல்லு. வேற வேலை செய்தா சனிக்கிழமை கொடுக்கிற இனிப்புச்சாமன் எத்தனை கிறாம் கூடும் எண்டு சொல்லு. செய்யிற ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும் எவ்வளவு கிழமைக்காசில கூடும் எண்டு சொல்லு. அதை விட்டிட்டு அடிக்கிற மாதிரி வெருட்டாத. அப்பிடிச் செய்தா அவன் நர்வொஸ் ஆகிடுவான். பாடத்தில் கவனம் இருக்காது. அகப்பைக் காம்பிலதான் கண்ணிருக்கும். அம்மா என்றால் அகப்பைக் காம்புதான் அவனுக்கு நினைவு வரும். பிள்ளையள் எதாவது செய்து முடிக்கேக்க தட்டி கொடுக்கோணும். அப்ப அவங்கட சந்தோசத்தைப் பார்க்கிறதே அலாதி.’
சற்று நிறுத்திய சபேசன் குமுதினியைப் பார்த்து திரும்பவும் கேட்டான்,
‘கபிலன் உன்ன விட்டு விலகிறது உனக்கு விருப்பமே? நான் உனக்குக் கோபம் வார நேரம் எல்லாம் அடிக்கிற மாதிரி கையோங்கினா எப்பிடி இருக்கும்? யோசிச்சுப் பார்.’ அதிர்ச்சி அடைந்த குமுதினி அவனைப் பார்க்காது வேறெங்கோ பார்த்தாள்.
– நவம்பர் 2018