Daddy had a massive attack and passed away today at 4.30 am. We are at our Kodaikanal Bungalow. Madhivadhani Kulasekaran.
இந்த டெக்ஸ்ட் மெசேஜ் வந்ததும் பாரதி சந்திரனுக்கு முதலில் தோன்றியது அவன் குலசேகரனுக்கு இழைத்த துரோகம்!
இந்த சந்தர்பத்தில் போகவில்லை என்றால் வீண் பேச்சுக்கு ஆளாக நேரிடும் என்று நினைத்தவன் அரை மணி நேரத்தில் காரை எடுத்துக்கொண்டு கோடை நோக்கிப் புறப்பட்டான். பஜேரோ கார். நல்ல பிக்கப் ஸ்பீட். எப்படியும் மாலைக்குள் போய் விடலாம்.
தாம்பரம் தாண்டி ஹைவேயில் வண்டி பறக்கத் தொடங்கியதும் அவன் நினைவுகளும் பின்னோக்கிப் பறக்கத் தொடங்கின.
அவனும் குலசேகரனும் முப்பது வருட ச்நேஹிதர்கள். வளரும் தத்தளிக்கும் எழுத்தாளர்களாக இருந்த காலத்திலிருந்தே நண்பர்கள்.
குலசேகரன் இவனை விட மூத்தவன். அந்த ஹோதாவில் இவன் மீது ஒரு அண்ணனைப் போலப் ப்ரியம் செலுத்தினான். ஆனால் இவன் புத்தி தான் பிறழ்ந்து போயிற்று. ஒரு நாள் குலசேகரன் இல்லாத வேளையில் அவன் பெட்டியிலிருந்து அவன் எழுதிய பல கதைகள் அடங்கிய manuscript ஐ எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டே அகன்று விட்டான்.
குலசேகரனுக்கு ஒருவாறு புரிந்தாலும் நிரூபிக்க முடியாத சூழ்நிலை. தனக்குள் அடங்கிப் போனான். இவன் அந்தக் கதைகளைக் கொண்டு தான் எழுதியதாகச் சொல்லி சினிமாவில் சான்ஸ் வாங்கி விட்டான். அதற்கப்புறம் வெற்றிப் பாதைதான். வெற்றிப் பயணம் தான்.
ஒரு நாள் குலசேகரன் வந்து பாக்கி இருந்த கதைகளையாவது தரச் சொல்லி மன்றாடினான். அது அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. அப்புறம் குலசேகரன் வரவேயில்லை. இவனும் அவனை மறந்தே போனான்.
குலசேகரனும் சோடை போகவில்லை. இன்னும் புது கதைகள் எழுதி பிரபலமானான். ஆனாலும் மனதின் காயம் ஆறவில்லை. இருவரின் நட்பும் முறிந்தது. எவ்வளவு வருடங்கள் கடந்து விட்டன! இப்போது இந்த டெக்ஸ்ட் மெசேஜ்! எப்படி தன் நம்பர் கிடைத்தது என்று ஒரு சின்ன ஆச்சர்யம் மனதுள்! எதுவாக இருந்தாலும் இறப்புக்கு போகாமல் இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட எண்ண ஓட்டங்களுடன் பாரதி சந்திரன் மாலை நாலு மணி சுமாருக்கு போய்ச் சேர்ந்தான்.
சில பல உறவினர் என்று இருந்தனரே தவிர, இலக்கிய உலகிலிருந்து இவன் மட்டும் தான் வந்திருந்தான்.
குலசேகரன் மனைவி இந்திரா இவனைப் பார்த்ததும் ஒரு சோகப் புன்னகையோடு அருகில் வந்தாள்.
“எங்கள அனாதையா விட்டுட்டுப் போயிட்டார்” என்றாள் விரக்தியாக.
தங்கள் பிரச்சனை பற்றி குலசேகரன் தன் மனைவியிடம் சொல்லவில்லை போலும். பாரதி ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
“அண்ணி, நீங்க தைரியமா இருக்கணும். அப்பதான் உங்க பொண்ணு தைரியமா இருப்பா. இது இயற்கை தானே? சொல்ல வேண்டியவங்களுக்கு எல்லாம் சொல்லிட்டீங்களா? நான் யாரையும் கூப்பிட்டுச் சொல்லனுமா?”
“அவருடைய இலக்கிய வட்ட நண்பர்கள் எல்லாம் நாளைக்குத் தான் வருவாங்க. அதுனால நாளைக்கு தான் அடக்கம். உள்ள freezer boxல தான் வெச்சிருக்கோம்.”
உள்ளே சென்றவன் குலசேகரன் உடல் வைக்கப் பட்டிருந்த பெட்டி மீது உடன் கொண்டு வந்திருந்த மாலையைப் போட்டான். மூடியிருந்த கண்களின் பின்னாலிருந்து குலசேகரன் அவனையே பார்ப்பது போலிருந்தது. சிறிது நேரம் அங்கே நின்று விட்டு வெளியே வந்தான்.
“அண்ணி, நான் இன்னைக்கே அடக்கம் இருக்கும்னு நினைச்சேன். அப்ப இன்னைக்கு ராத்திரி தங்க இங்க பக்கத்துல இடம் இருக்கா”
“நம்ம அவுட் ஹவுஸ் இருக்கு. எல்லா வசதியும் இருக்கு. அங்க தங்கிக்குங்க. மதி, அங்கிள கூட்டிக்கிட்டு போய் இடத்தைக் காட்டுமா”
சரியென்று வெளியே வந்த மதிவதனி சுமார் 25 வயதிருப்பாள். நல்ல துருதுரு வென்று புத்திசாலித்தனம் மிளிரும் முகம்.
“நீ என்னம்மா பண்றே?”
“அங்கிள், நான் வெளிநாட்டுல டாக்டரா இருக்கேன்.”
“வெரி குட். அம்மாவுக்கு நீ தான் தைரியம் சொல்லணும்”
“சரி அங்கிள். இது தான் நீங்க தங்கப்போற இடம். இந்தாங்க சாவி. ராத்திரி நேரத்துல பாம்பு நடமாட்டம் இருக்கும். அதனால கதவ சாத்தியே வச்சுக்குங்க. நான் வர்றேன். ஏதும் வேணும்னா என் மொபைல்ல கூப்பிடுங்க. You have my number” என்று சொல்லிப் போனாள்.
பெட்டியை வைத்துவிட்டு காஷுவல் ட்ரெஸ்ஸுக்கு மாறினான். ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.
‘நல்ல வேளை குலசேகரன் யாருக்கும் தன்னுடைய துரோகத்தைச் சொல்லவில்லை.
இப்படி அவன் யோசித்துக்கொண்டிருந்தபோது கதவு தட்டப்பட்டது. இந்நேரத்தில் யாரென்று பார்க்க கதவைத் திறந்தால் இந்திரா! கையில் ஒரு பிரீப் கேஸ் போன்ற பெட்டியுடன்.
“என்ன அண்ணி! கூப்டிருந்தா நானே வந்திருப்பேனே!”
“ஒண்ணும் பெருசா இல்ல. இந்தப் பெட்டில அவரோட சில பைல்ஸ் இருக்கு. அதெல்லாம் கதையான்னு தெரியாது. நீங்க தான் இன்னைக்கு ராத்திரி கொஞ்சம் என்னன்னு பாருங்களேன். ஏதும் உபயோகமா இருந்தா சொல்லுங்க. நாளைக்கு பப்ளிஷர் வருவார். அவர்கிட்ட கொடுதுர்லாம்” என்றாள்.
“தாராளமா அண்ணி! அண்ணன் கதைங்கன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். படிச்சு பார்த்து சொல்றேன்” என்று பெட்டியை வாங்கிக் கொண்டான்.
“கதவ அடைச்சுக்குங்க. பாம்பு நடமாட்டம் ஜாஸ்தி” என்றவளிடம் “மதி ஏற்கனவே சொல்லிருச்சு அண்ணி” என்றான்.
அவள் சென்ற பின் சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தான். மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. ‘ஆண்டவா! என்னே உன் கருணை? இப்படி ஒரு அதிர்ஷ்டமா? ஏற்கனவே திருடிய கதைகள் போறாதுன்னு குடுத்து வேற அனுப்புகிறாயா! ரொம்ப நன்றி’ என்று மனதுள் சொல்லிக் கொண்டான்.
சிறிது பதட்டம் அடங்க இன்னொரு சிகரெட் பிடித்தான். பின் அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பைல்களை எடுத்தான். மொத்தம் மூன்று பைல்கள்.
முதலில் ஏதோ காதல் கதை. சற்று நேரம் படித்துவிட்டு கீழே வைத்துவிட்டான். இரண்டாவது பைலை எடுத்தான். தலைப்பே பிரமாதமாக இருந்தது. ‘உங்களைக் கொல்லலாமா ப்ளீஸ்?’ சூப்பர் டைட்டில். சீட்டி அடித்தவாறே பைலைத் திறந்தான்.
கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஒரு நாலு பக்கம் படித்திருப்பான். அதற்கப்புறம் இருந்த பக்கங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்தன. ஏதாவது சிந்தியிருக்கும் போல. பிரித்துப் பார்த்தான். வரவில்லை. விரலை நாக்கில் தொட்டுப் பிரித்தான். இரண்டு மூன்று முறை இப்படிச் செய்ததும் பக்கம் பிரிந்தது.
பிரிந்த பக்கத்துக்குள் ஒரு வெள்ளைத் தாள். புதிதாக இருந்தது. என்னவாயிருக்கும் என்று யோசித்தவாறே அதை எடுத்துப் படித்தான்.
‘டியர் அங்கிள்’ என்று ஆரம்பித்திருந்த அந்த லெட்டரைப் பார்த்து விட்டு கீழே பார்த்தான். ‘மதிவதனி’ என்று கையெழுத்திடப்பட்டிருந்து.
மேலே படித்தான்.
‘ டியர் அங்கிள்,
இந்த லெட்டர் எதிர் பார்த்து இருக்க மாட்டீங்க. நானும் தான் நீங்க இப்படியெல்லாம் செஞ்சிருப்பீங்கன்னு எதிர் பார்க்கல. எங்க அப்பா ஒரு மூணு மாசம் முன்னால என் கிட்டேயும் அம்மா கிட்டேயும் நீங்க செஞ்ச துரோகத்தைப் பத்தி சொல்லிட்டாங்க. பாவம் அவர். அப்ப கூட அவர் மனசுல வருத்தம் இருந்ததே தவிர கோவம் இல்ல. இன்னமும் உங்களத் தம்பி மாதிரி தான் நெனைச்சுக் கிட்டிருந்தார்.
ஆனா அம்ம்மவுக்கும் எனக்கும் உங்க மேல ரொம்ப கோவம். அப்பா அளவுக்கு பெருந்தன்மை இல்லை எங்களுக்கு. உங்களப் பழி வாங்கற எண்ணம் வந்தது எங்க ரெண்டு பேருக்கும். ஆனா சான்ஸ் தான் வரல.
அப்ப தான் போன வாரம் அப்பாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லைன்னு நான் இந்தியா வந்தேன். என்ன வைத்தியம் பார்த்தும் தவறிட்டாரு.
எனக்கும் அம்மாவுக்கும் இதவிட்டா உங்களப் பழிவாங்க சான்ஸ் கிடைக்காதுன்னு தோணிச்சு. அதனால தான் உங்கள இன்னைக்கேக் கூப்பிட்டோம். நீங்களும் எலி பொறில சிக்கற மாதிரி சிக்கிட்டீங்க.
நான் டாக்டர்னு சொன்னேன். என்ன டாக்டர்னு கேக்கலையே? நான் விஷம் சம்பந்தமா ஆராய்ச்சி செய்யுற ஒரு டாக்டர். அப்புறம் இன்னொரு விஷயம். இந்தக் கொடைக்கானல்ல நெறைய மூலிகைச் செடியும் இருக்கு. விஷச் செடியும் இருக்கு. அதுல ஒரு செடிய அரச்சு எடுத்த விஷ ரசத்தைத் தான் இப்ப நீங்க கஷ்டப்பட்டு பிரிச்சீங்களே அந்தப் பக்கத்துல நல்லா தடவி ஒட்டி வச்சோம்.
அங்கிள், துரோகம் துரத்தும். Life has come a full circle for you. இந்த லெட்டர படிச்சு முடிச்சாச்சுன்னா, நீங்க கட்டில்ல வசதியா சாஞ்சு உக்காந்துக்கோங்க. சாவும் போதும் உங்களுக்கு எவ்வளவு வசதி செஞ்சு தந்திருக்கோம் பாத்தீங்களா?
Good bye uncle. உங்க friend உங்களுக்காகக் காத்திட்டிருப்பார். அங்க போயும் அவருகிட்ட எதுவும் திருடிடாதீங்க.
மதிவதனி.
பி.கு.: நாளை காலைல நான் வந்து எங்க கிட்ட இருக்கற இன்னொரு சாவியால கதவத் திறந்து பைலையும் லெட்டரையும் அப்புறப்படுத்திட்டுத் தான் நீங்க செத்ததையே அறிவிப்போம்.
பாரதி சந்திரனுக்கு கடைசி வார்த்தையைப் படிக்கும் போதே தலை சுற்றியது. நாக்கு வரண்டது. வயிற்றுத் தசைகள் இறுகின.
– ஜூன் 2015