ஆந்தை விழிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 8, 2024
பார்வையிட்டோர்: 4,050 
 
 

(1973ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30

அத்தியாயம்-21 

வழியில் சங்கர்லால் ஓர் இடத்தில் ஜீப்பை நிறுத்தும் படி சொல்லி, தீவட்டியுடன் தேடிய ஒருவனிடம் செய்தியைச் சொல்லும்படிச் சொன்னார். காரோட்டி மட்டும் இறங்கிச் சென்று வேண்மகள் உயிருடன் அகப்பட்டு விட்டாள் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு வந்தான். ஜீப் புறப்பட்டது. 

ஜீப் நல்லநாயகத்தின் பங்களாலை அடைந்தபோது ஜீப்பை எல்லாரும் சூழ்ந்து கொண்டார்கள். 

நல்லநாயகத்துக்கும் அவர் மனைவிக்கும் அளவில்லாத மகிழ்ச்சி ஆனால் வேண்மகளுக்குச் சுய நினைவு இல்லை என்பதையும் எதையோ இழந்து வெறிபிடித்தவளைப் போல் அவள் இருக்கிறாள் என்பதையும் அறிந்ததும் மீண்டும் அவர்கள் துன்பத்துள் ஆழ்ந்தார்கள். 

காட்டில் தீவட்டியுடன் சுற்றிக்கொண்டிருந்த பணியாட்களும், நெடியோனும் பங்களாவை நோக்கி விரைந்து வந்தார்கள். 

வேண்மகள் உயிருடன் இருப்பதைப் பார்த்ததும் அவர்களால் நம்பவே முடியவில்லை. 

சங்கர்லால் சொன்னார்: “தமிழ்ச்செல்வம் பருகிய அதே நஞ்சை இவளும் பருகிவிட்டு, இறந்தவளைப்போல் விழுந்து கிடந்திருக்கிறாள்! ஒரு குறிப்பிட்ட நேரம் சென்றதும், மீண்டும் அவள் எழுந்து நடக்கத் தொடங்கியிருக்கிறாள்! அவள் நீண்ட தொலைவு போவதற்குள் நாங்கள் பிடித்துவிட்டோம்!” 

“இப்போது இவளுக்கு எப்படிக் குணமாகும்?” என்று கேட்டார் நல்லநாயகம். 

“இதை எளிய டாக்டர்களால் குணமாக்க முடியும் என்று நான் நம்பவில்லை! எதற்கும் இவளை நான் என்னுடன் அழைத்துச்சென்று டார்ஜிலிங் மருத்துவ விடுதியில் பாதுகாப்புடன் இருக்கவும் இவளுக்கென்ன மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்யவும் ஏற்பாடு செய்கிறேன்” என்றார் சங்கர்லால். 

“நானும் வருகிறேன் சங்கர்லாவ்” என்றார் நல்ல நாயகம்” 

“எவரும் வேண்டா! இவளை மருத்துவ விடுதியில் போலீஸ் பாதுகாப்புடன் விட்டுவைக்கப் போகிறேன்!” என்றார் சங்கர்லால், பிறகு, அவர் வேண்மகளை அழைத்துக் கொண்டு தன்னுடைய காரில் டார்ஜிலிங்கை நோக்கிப் புறப்பட்டார்.

சங்கர்லால் பங்களாவுக்குப் போகும் வழியிலேயே மருத்துவ விடுதிக்குச் சென்று. வேண்மகளை மருத்துவ விடுதியில் சேர்த்துவிட்டு, பெரிய டாக்டர் ஒருவரிடம் நீண்டநேரம் பேசி கொண்டிருந்தார். பிறகு, தொலைபேசியில் போலீஸ் இலாகாவுடன் தொடர்புகொண்டு, வேண்மகளின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார். 

அவர் பங்களாவை அடைந்தபோது, நடு இரவாய் விட்டது. 

கார் நிற்கும் ஓசை கேட்டதும், முதலில் மாதுதான் ஓடி வந்து கதவைத் திறந்தான். அதற்குள் இந்திரா ஓடி வந்தாள், “வந்துவிட்டீர்களா?” என்றாள் அவள் அமைதியுடன். 

அவள் மனம் மிக மகிழ்ந்தது. 

“வந்துவிட்டேன். ஆனால் நீண்டநேரம் நான் இங்கே இருக்கப்போவதில்லை. இதுவரையில் நடந்திருக்கும் நிகழ்ச்சிகளை நீ கேட்டால், மறுபடியும் உனக்குத் தூக்கம் வராது!” என்றார் சங்கர்வால்.

இந்திரா பேசவில்லை. சங்கர்லாலை அவள் இரக்கத்துடன் பார்த்தாள். ஓய்வு பெறுவதற்காக வடக்கே இவ்வளவு தொலைவு வந்தும் இவருக்கு ஓய்வு இல்லையே என்று இரக்கப்பட்டது அவள் மனம். 

சங்கர்லால் மாடிக்குச் சென்றதும் தொட்டிலில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த அருமை மகனைப் பார்த்து, கள்ளம் கபடு இல்லாத அவன் கன்னத்தைக் கொஞ்சம் கிள்ளியிட்டுச் சொன்னார்: “எல்லாரும் இவனைப்போல் உலகம் அறியாமல் இருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு வேலையே இல்லை! மற்றவர்களுக்குத் தொல்லையே இல்லை!” 

மாது, சங்கர்லாலுக்குச் சிறிது தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, “தம்பி சாப்பிட்டுவிட்டாயா?” என்று கேட்டான். 

சங்கர்லால் சொன்னார்: “சாப்பாடா? அதைச் சரியாக கண்ணால் கண்டு ஒரு நாளாகிறது! இப்போது எனக்குச் சாப்பிட உடனே ஏதாவது வேண்டும்!” 

மாது, மலையாள சமையற்காரனிடம் சூடாக ஏதாவது சமைக்கும்படிச் சொல்ல ஓடினான். 

சமையல் ஆகிக்கொண்டிருந்த நேரத்தில் சங்கர்லால், இந்திராவிடம் நடந்தவைகளை அப்படியே சொல்லிக் கொண்டிருந்தார். 

எல்லாவற்றையும் வியப்புடன் கேட்டுக்கொண்டிருத்த இந்திரா பெருமூச்சு விட்டாள். அப்போது தொலைபேசியின் மணி அடித்தது. மாது தொலைபேசியில் பேசிவிட்டுச் சங்கர்லாலிடம் வந்து, “கல்கத்தா கமிஷனர் பேசுகிறார்!” என்றான். 

சங்கர்லால் விரைந்து சென்று தொலைபேசியை எடுத்தார் கல்கத்தா கமிஷனர் சொன்னார்: “சங்கர்லால் இங்கே ஒரு பெரிய தவறு நடந்துவிட்டது! நமமுடைய ஆட்கள் எப்படியோ இந்த மெய்தம்பியைக் கோட்டை விட்டு விட்டார்கள்! அவர் மாறு வேடத்தில் பங்களாவிலிருந்து எப்படியோ தப்பி ஓடிப் போய்விட்டார்!” 

சங்கர்லால், கமிஷனர். சொன்னதைக் கேட்டதும் மெல்லச் சிரித்தார். “இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டார் சங்கர்லால். 

“மெய்நம்பி எங்கே இருந்தாலும் அவரைக் கண்டுபிடிக்கும்படி பல பேர்களை அனுப்பியிருக்கிறேன்” என்றார் கமிஷனர். 

“முயற்சி செய்யுங்கள். மீண்டும் அவர் கிடைத்தால் கோட்டை விட்டு விடாதீர்கள்” என்றார் சங்கர்வால், பிறகு, தொலைபேசியை வைத்து விட்டார். 

சிறிது நேரம் கழித்துத் தொலைபேசியை எடுத்தார். டார்ஜிலிங்கின் போலீஸ் இலாக்காவுடன் தொடர்பு கொண்டு மறுநாள் விடிந்ததும் அவர் கல்கத்தாவுக்கு விரைந்துபோக விரும்புவதாகவும், டார்ஜிலிங்கிலிருந்து தனிப்பட்ட விமானம் ஒன்றில் அவர் புறப்பட ஏற்பாடு செய்யும்படியும் சொல்லி விட்டுச் சாப்பிடச் சென்றார். 

அத்தியாயம்-22 

விடிந்ததும் சங்கர்லாலுக்குத் தொலைபேசியில் போலீஸ் இலாக்காவிலிருந்து ஒரு செய்தி வந்தது. சங்கர்லாலின் பயணத்துக்காக இராணுவ விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர். எப்போது வேண்டுமானாலும் புறப்படலாம் என்றும் செய்தி வந்தது. 

சங்கர்லால், கல்சுத்தாவுக்குப் புறப்படுமுன் மருத்துல விடுதியில் இருந்த வேண்மகளைப் பார்க்க எண்ணினார். அவர் இந்திராவிடமும், கண்களை விழித்து விழித்துப் பார்த்து விளையாடிக் கொண்டிருந்த கண்ணனிடமும் விடை பெற்றுக் கொண்டு காரில் உட்கார்ந்தார். காரை முதலில் மருத்துவ விடுதிக்கு விடும்படிச் சொன்னார். 

மருத்துவ விடுதியில் சங்கர்லால் நுழைந்ததும், நர்ஸ் விழுந்தடித்துக் கொண்டு ஓடிப்போய் பெரிய டாக்டரை அழைத்து வந்தாள். அதற்குள் சங்கர்லால் வேண்மகள் இருந்து அறைக்குள் நுழைந்தார். அறையின் வெளியே எளிய உடையில் பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த கான்ஸ்டபிள் சங்கர்லாலைப் பார்த்ததும் சல்யூட் அடித்து நின்றான். 

வேண்மகள், ஒரு சிறு பிள்ளையைப்போல் தூங்கிக் கொண்டிருந்தாள். சங்கர்லால் அவளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தபடி நின்றார். பிறகு போகத் திரும்பிய போது பெரிய டாக்டர் ஓடி வந்தார். 

“வாருங்கள் சங்கர்லால்! உங்களுடன் தொடர்பு கொள்ளவேண்டுமென்று நான் எண்ணியிருந்தேன். அதற்குள் நீங்களே வந்துவிட்டீர்கள்!” என்றார் பெரிய டாக்டர். 

சங்கர்லால் மெல்லச் சிரித்தபடி, “அப்படியா? எதற்காக?” என்றார். 

“இந்த வேண்மகளைப் பற்றிப் பேசத்தான். இது ஒரு புரியாத நோயாக இருக்கிறது!” 

“இந்தப் பெண்ணின் உடலைச் சோதித்துப் பார்த்தீர்களா?” 

“சோதித்துப் பார்த்து விட்டேன். ஆனால், இவளுக்கு உடலில் எந்தவிதக் கோளாறும் இல்லை! கேட்கும் எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லமாட்டேன் என்கிறாள்! எப்போதும் ஏதோ வெறிபிடித்தவளைப்போல இருக்கிறாள்.” 

“இவளை இப்படியே விட்டுவிட்டால், எத்தனை நாட்களுக்கு இவள் உயிருடன் இருப்பாள் என்று எண்ணுகிறீர்கள்?” என்று டாக்டரைக் கேட்டார் சங்கர்லால்.

“இவள் தன்னால் தூங்கவில்லை! தூக்கம் தன்னால் வராததால், எத்தனை நாட்களுக்கு இவள் உயிருடனிருப்பாள் என்பதைச் சொல்லமுடியாது! தூக்கம் இல்லாவிட்டால் உடல் கெடும். இதனால் ஆயுள் குறையும்”

“இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறாளே, தூக்க மருந்து ஏதாவது கொடுத்தீர்களா?” என்று கேட்டார் சங்கர்லால். 

“தூக்க மருந்தை ஊசியின் வழியாகச் செலுத்தினேன். இவள் எழுந்துகொள்ள இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகும்!” என்றார் டாக்டர். பிறகு- 

“இந்தப் பெண்ணுக்கு என்ன மருந்து கொடுப்பது என்றே தெரியவில்லை. பொதுவாக வெறி பிடித்தவர்களுக்கு ஏதாவது ஒரு தாக்குதலைத் தரும் சிகிச்சையைச் செய்ய வேண்டும். இவளை மனத்தத்துவ நிபுணரிடம் அனுப்பினால் என்ன?”. 

“மனத்தத்துவ நிபுணரால் இவளைக் குணப்படுத்தமுடியாது! இவளுடைய இந்த நிலைக்குக் காரணம் ஏதோ ஒரு மருந்து. அந்த மருந்து இரத்தத்தில் கலந்து விடுவதால் இப்படி ஒரு நிலை ஏற்படுகிறது! ஆகையால் நீங்கள் தான் இவளுக்குத் தொடர்ந்து சிகிச்சை செய்துவரவேண்டும்!” 

“புரிகிறது. ஆனால் அது என்ன மருந்து என்று கண்டு பிடித்தால்தான் அதற்கு மாற்று மருந்து கொடுக்க முடியும்!” என்றார் டாக்டர். 

“காலிப் புட்டி ஒன்று எனக்குக் கிடைத்தது. அதைச் சோதித்துப் பார்த்ததில்; அது ஏதோ ஒரு மூலிகை என்பது தெரிந்தது! ஆனால் அது என்ன மூலிகை என்பது தெரிய வில்லை!”: 

”அந்தக் காலிச் சீசாவை என்னிடம் கொடுங்கள். நான் ஆராய்ந்து பார்க்கிறேன்!”என்றார் பெரிய டாக்டர். 

“இந்தப் பெண்ணை நீங்கள் குணமாக்கி விட்டால், இவளைப்போல் இன்னும் பல பேர்கள் இருக்கிறார்கள்! ஆகையால், நீங்கள் சற்று முழுமூச்சுடன் வேலை செய்ய வேண்டும்!” என்றார் சங்கர்லால்.

“இன்னும் ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்களா?” என்று விழிப்படைந்தார் டாக்டர். 

“ஆமாம். ஆனால், அது நமக்குள் இப்போது இரகசியமாகவே இருக்கட்டும்” என்றார் சங்கர்லால். பிறகு அவர் தொலைபேசியை எடுத்து, தனது பங்களாவுக்குத் தொடர்பு கொண்டார். இந்திரா பேசினாள். சங்கர்லால் சொன்னார். “இந்திரா, என் அறையில் மேசை அறைக்குள் ஒரு காலிச் சீசா இருக்கிறது அந்தச் சீசாவை மிகப்பாதுகாப்புடன் ஓர் அட்டைப்பெட்டியில் வைத்து, மாதுவிடம் மருத்துவ விடுதிக்குக் கொடுத்தனுப்பு. பெரிய டாக்டரிடம் அந்தப் புட்டியைக் கொடுக்கவேண்டும் “

“ஆகட்டும் அத்தான்” என்றாள் இந்திரா. பிறகு “அத்தான் இப்போது வேண்மகளுக்கு எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள். 

“வேண்மகள் மயக்க மருந்தின் உதவியுடன் தூங்கிக் கொண்டிருக்கிறாள்” என்றார் சங்கர்லால்.

“ஆபத்து ஒன்றும் இல்லையே?” என்று கேட்டாள் இந்திரா. 

“ஆபத்து இப்போது ஒன்றும் இல்லை! ஆனால் குணமாகுமா என்பது தெரியவில்லை! நான் கல்கத்தா போய் வருவதற்குள் பெரிய டாக்டர் ஏதாவது கண்டுபிடிப்பார் என்று நாம் நம்புவோம்” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்தார். 

பெரிய டாக்டர். சங்கர்லால் தொலைபேசியின் இந்திராவிடம் சொன்னதைக் கேட்டு மெல்லச் சிரித்தார். “உங்களுக்காக நான் எதையும் செய்யக் காத்திருக்கிறேன் சங்கர்லால். மூலிகைகளைப் பற்றித் தெரிந்தவர்களைப் பிடித்து, அது என்ன மருந்து என்பதை நான் கண்டுபிடித்து விடுகிறேன்!” என்றார். 

“முயற்சி செய்யுங்கள்” என்று சங்கர்லால் சொல்லி விட்டு, விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். 

சங்கர்லால் சென்ற கார், மலைகளின் பள்ளத்தாக்கில் விமான நிலையம் அமைந்திருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டது. 

ஜெட் விமானம், காற்றைவிட, ஓசையைவிட, வெளிச்சத்தைவிட விரைவாகப் பறந்தது.

அத்தியாயம்-23 

ஜெட் விமானம், ஒன்றரை மணி நேரத்தில் கல்கத் தாவை வட்டமிட்டது. 

“விமானத்தை எங்கே இறக்கப்போகிறீர்கள்?” என்று விமானியைக் கேட்டார் சங்கர்லால். 

“கல்கத்தாவில் இரண்டு விமான நிலையங்கள் இருக்கின்றன. ஒன்று, பொதுவாக எல்லா விமானங்களும் வந்து இறங்கும் டம்டம் விமான நிறையம். மற்தொன்று, விமானப்படைக்கு உரிமையுடைய நிலையம். நீங்களாக இருப்பதால் நீங்கள் எங்கே வேண்டுமானாலும் இறங்கலாம்” என்றார், விமானி. 

“விமானப் படைக்கு உரிமையுடைய நிலையத்திலேயே இறங்கலாம்.” 

“ஆகட்டும்” என்றார் விமானி, பிறகு அவர் விமானப் உடையின் விமான நிலையத்துடன் தொடர்புகொண்டு ஏதோ செய்தி சொன்னார். 

ஒரு சில நிமிஷங்களில் விமானம் இறங்கியது. சங்கர்லால் இறங்கியதும் விமானப் படையைச் சேர்ந்த இரண்டு பணியாட்கள் ஓடிவந்து, சங்கர்லால் கொண்டு வந்த பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்தார்கள். 

அவருக்குப் பக்கத்தில் இரண்டுபேர்கள் வந்து நின்றார்கள். சங்கர்லால் இரண்டு பக்கமும் திரும்பிப் பார்த்தார். 

இருவரும் சல்யூட் அடித்து நின்றார்கள். ஒருவன மெல்லக் குனிந்து, “உங்களைக் கண்டுபிடித்துவிட்டதற்காகப் பொறுத்துக் கொள்ளுங்கள், கமிஷனர் எங்களை அனுப்பியிருக்கிறார். கார் வெளியே காத்திருக்கிறது” என்றான். 

சங்கர்லால், பெட்டியைக் கமிஷனர் அனுப்பிய காரில் வைக்கும்படி சொல்லிலிட்டு, அந்தக் காரில் தானும் ஏறி உட்கார்ந்தார். சங்கர்வால் ஏறி உட்கார்ந்ததும், அவரை அழைத்துப் போக வந்த இருவரும் இரண்டு பக்கமும் காரில் ஏறி,சங்கர்லாலுக்கு இருபக்கங்களிலும் உட்கார்ந்தார்கள். 

சங்கர்னால் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். 

இருவரில் ஒருவன் சொன்னான்: “பொறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கலகத்தாவில் எந்தவித ஆபத்தும் ஏற்படக்கூடாதே என்பதற்காகக் கமிஷனர் எங்களை அனுப்பியிருக்கிறார்! இந்த நகரம் மோசமானது!”

“உங்கள் கமிஷனர், மெய்நம்பியின் வழக்கில் இவ்வளவு விழிப்புடன் இருந்திருந்தால், மெய்நம்பி மறைந்து போயிருக்கமாட்டார்!” என்றார் சங்கர்லால். 

இருவரும் பேசவில்லை. கமிஷனரைப் பாராட்டவோ, குறை சொல்லவோ தங்களுக்கு உரிமை இல்லை என்பதைப் போல் அவர்கள் பேசாமல் இருந்தார்கள். 

கார் விரைந்து சென்றது. 

“நான் இந்த விமானத்தில் வந்து இறங்குவது எவருக்கும் தெரியாதே! உங்கள் கமிஷனர் எப்படி ஊகம் செய்தார்?” என்று கேட்டார் சங்கர்லால்.

”ஊகம் செய்யவில்லை! இங்கே இருக்கும் இரண்டு விமான நிலையங்களிலும் உங்களை வரவேற்க ஆட்களைப் போட்டார். உங்களை வரவேற்கும் பேறு எங்களுக்குக் கிடைத்தது!” என்றான் முதலில் பேசியவன். 

கார் இப்போது முன்னைவிட விரைந்து செல்லத் தொடங்கியது. 

“கார் இப்போது எங்கே செல்லுகிறது? ஓட்டலில் எங்கேயாவது நான் தங்குவதற்குக் கமிஷ்னர் எனக்காக ஏதாவது ஏற்பாடு செய்து வைத்திருக்கிறாரா?” 

“தனி பங்களா ஒன்றையே உங்களுக்காகப் பிடித்து வைத்திருக்கிறார் கமிஷனர்” என்றான் அவன். 

சங்கர்லால் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். பிறகு, “சற்றுக் காரை நிறுத்தச் சொல்லுங்கள்! நாம் சிறிது பேசவேண்டும்” என்றார். 

இப்போது இந்த இரண்டு மனிதர்களும் ஒரே நேரத்தில் மின்னலைப்போல் சட்டைப் பைக்குள்ளிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளை எடுத்து சங்கர்லாலின் மீது அழுத்திப் பிடிந்தார்கள்! முதலில் பேசிய மனிதனே இப்போதும் பேசினான். “கார் எங்கேயும் நிற்காது! பேசாமல் எங்களுடன் வாருங்கள்! எங்கள் பெரிய ஐயா மெய்நம்பி உங்களைக் காணக் காத்திருக்கிறார்!”

அத்தியாயம்-24 

துப்பாக்கிகள் தனது உடலை அழுத்துவதைக் கண்டு சங்கர்லால் அஞ்சவில்லை. அவர், இரண்டு பக்கமும் திரும்பி இருவரையும் சிறிது நேரம் மாறி மாறிப் பார்த்துவிட்டு மெல்லச் சிரித்தார். 

சங்கர்லாலின் சிரிப்பு அவர்கள் இருவருக்கும் வியப்பை உண்டாக்கியது. துப்பாக்கி முனையைக் கண்டு அஞ்சாதவர்களே இந்த உலகத்தில் இல்லை. இந்த நிலையில், சங்கர்லாலுக்கு மட்டும் இவ்வளவு துணிவு எப்படி வந்தது? 

சங்கர்லால் சொன்னார்: “நீங்கள் யாராக இருப்பீர்கள் என்று முதலிலேயே தெரிந்துகொண்டேன். உங்களுடன் நானே வரவேண்டும் என்றுதான் நான் வந்தேனே தவிர, உங்களிடம் நான் சிக்கிக்கொண்டதாகத் தவறாக நினைக்க வேண்டா. நான் மெய்நம்பியை நேரில் கண்டு பேச விரும்பியதால், ஜிப்பில் புறப்படுவதற்குப் பதில், வேண்டு மென்றுதான் உங்கள் காரில் நான் உங்களுடன் வந்தேன் நீங்கள் இருவரும் கமிஷனர் அனுப்பிய ஆட்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாதா? நான் வந்து இறங்கிவிட்ட செய்தி கிடைத்தால், உடனே கமிஷனரே என்னை வரவேற்க வந்துவிடுவாரே! கல்கத்தாவில் கமிஷனர் என்னை இந்த விமான நிலையத்தில் எதிர்பார்க்கவில்லை! ஆனால் மெய்நம்பி இரண்டு விமான நிலையங்களிலும் ஆட்களைப் போட்டு என்னைப் பிடித்துவிட்டார்?” 

சங்கர்லாவின் பேச்சு அவர்கள் இருவரையும் கவர்ந்தது. அவர்கள் இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள் என்றாலும்கூட அவர்கள் நங்கள் துப்பாக்கிகளை எடுக்கவில்லை. 

சங்கர்லால் விடவில்லை. “என்மீது நம்பிக்கை இல்லா விட்டால், நீங்கள் துப்பாக்கிகளை இப்படியே வைத்திருப்பதில் எனக்கு ஒன்றும் தடையில்வை! ஆனால், நான் உண்மையை மெய்நம்பியிடம் சொன்னபிறகு மெய்நம்பி உங்கள் செயலை விரும்பமாட்டார்! இந்தத் துப்பாக்கிகள் என் உடலை நிரம்பவும் அழுத்துகின்றன!” 

இப்படிச் சங்கர்லால் சொன்னதும், இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு விட்டார்கள். 

சங்கர்லால் இருவரையும் மீண்டும் மாறிமாறிப் பார்த்துவிட்டு மெல்ல மெல்லச் சிரித்தார். அவருடைய சிரிப்பில் கவர்ச்சி இருந்தது. அதே நேரத்தில் உறுதியும் இருந்தது. 

சங்கர்லால் சொன்னார்: “நாம் இப்படி நண்பர்களைப் போவ இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது! சிரித்துப் பேசிக்கொண்டே நாம் போவோம், என்னுடைய பெயர் சங்கர்லால். இது நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும். உங்கள் பெயர் என்ன?” 

சங்கர்லால் இப்படிக் கேட்டதும் இருவரும் தங்களது கையிலிருந்த துப்பாக்கிகளைத் தங்கள் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார்கள். தங்களைத் தாண்டிக்கொண்டு சங்கர்லால் தப்பி ஓடிவிட முடியாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது! 

சங்கர்லால், அவர்கள் இருவர் பெயரையும் கேட்டு விட்டு அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்ததும், இடப்பக்கம் உட்கார்ந்திருந்தவன் சொன்னான்; “என் பெயர் பால்துரை”. 

சங்கர்வால், வலப்பக்கம் திரும்பினார். வலப்பக்கம் உட்கார்ந்திருந்தவன் உடனே சொன்னான்: “என் பெயர் நஞ்சப்பன். என்னையும் என் பெயரையும் எவரும் விரும்புவது இல்லை”. 

“மெய்நம்பி கூடவா?”

“மெய்நம்பியைத் தவிர! மெய்தம்பி, வேலப்பனுக்கு அடுத்தபடியாக யாரையாவது நம்புகிறார் என்றால் அது என்னைத்தான்! இதனால்தான் உங்களைக் கொண்டு வர என்னை அனுப்பினார்” 

”மிக்க மகிழ்ச்சி” என்றார் சங்கர்லால், பிறகு அவர் திரும்பிப் பால்துரையைப் பார்த்து, “உன்னை எந்த அளவுக்கு நம்புகிறார்? நஞ்சப்பனுக்கு அடுத்தபடியாகவா?” என்று கேட்டார். 

“அப்படியொன்றுமில்லை! மெய்நம்பி இந்த நஞ்சப்பனை நம்பாமல்தான் அவன் போகும் இடங்களுக்கெல்லாம் என்னையும் அனுப்பிக்கொண்டிருக்கிறார். அது இதுவரையில் இந்த நஞ்சப்பனுக்குத் தெரியாது. வேலப்பனுக்கு அடுத்தபடியாக நான் தான்! உண்மையைச் சொன்னால், நஞ்சப்பனை விட எனக்குத்தான் மெய்நம்பி மிகுதியாகப் பணம் தருகிறார்”. 

பால்துரை இப்படிப் பேசியதும் நஞ்சப்பனுக்குப் பால்துரையின் மீது கொதிப்பு மிகுந்தது அவன் மனத்தில் ஏற்பட்ட கொதிப்பு அவன் முகத்தில் படர்ந்தது. அவன் கண்ணை மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் மின்னல் விரைவில் துப்பாக்கியை வெளியே எடுத்துப் பால்துரைக்கு நேரே நீட்டினான். 

சங்கர்லால் சற்றுப் பின்னால் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். 

நஞ்சப்பன் சொன்னான்: “நான் நினைத்தால் இப்போதே உன்னைச்சுட்டுத் தள்ளிவிடுவேன்! உன்னை ஏன் சுட்டேன் என்றுகூட மெய்நம்பி என்னிடம் கேட்கமாட்டார்? இது தெரியுமா உனக்கு? எனவே, எனக்குக் கட்டுப் பட்டவன் நீ! இது எப்போதும் உன் நினைவில் நிற்க வேண்டும்!” 

இதைக் கேட்டதும் பால்துரை மெல்லச் சிரித்தபடி சொன்னாள்: “நீ என்னைச் சுடுகிறவரையில் நான் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேனா? நீ அந்தத் துப்பாக்கியைத் தட்டுவதற்குள், என் சட்டைப் பையிலிருக்கும் துப்பாக்கி வெளியே புறப்பட்டு வந்து வெடிக்கும் என்ற உண்மை உனக்குத் தெரியாதுபோல் இருக்கிறது! இல்லையா?” 

இந்த நேரத்தில் சங்கர்லால் குறுக்கிட்டார்; “நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்வதில் எனக்குத் தடையில்லை! ஆனால் நீங்கள் சுடும் குண்டுகள் என் மீது பட்டு விடக்கூடாது! ஆகையால், உங்கள் சண்டையை இப்போது கொஞ்சம் தள்ளிப்போட்டு வையுங்கள். பிறகு உங்கள் சண்டையை மெய்நம்பியின் முன் தீர்த்துக் கொள்ளுங்கள்!, இல்லாலிட்டால் மெய்நம்பியிடம் நானே உங்களைப்பற்றிக் கேட்டுச் சொல்லிவிடுகிறேன்!” என்றார் சங்கர்லால்.

இதைக் கேட்டதும், நஞ்சப்பன் சற்றுத் தயங்கிக் கொண்டே, வெளியே எடுத்த தன் துப்பாக்கியைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான். 

கார் விரைந்து சென்றது. கல்கத்தாவின் போக்குவரத்து நிறைந்த சாலைகளிலிருந்து பிரிந்து, அந்தக் கார் தனிமையான ஒரு சாலையில் எங்கேயோ சென்றது ஏறக்குறைய அரைமணி நோம் கழித்து அந்தக் கார் ஒரு பெரிய தோட்டத்திற்குள் புகுந்து, உடைத்து ஒரே பக்குவமாக எடுத்துச் செய்யப்பட்ட பாறைகளாலேயே கட்டப்பட்ட மாளிகை போன்ற ஒரு பெரிய பங்களாவை அடைந்தது. 

கல்கத்தாவின் கமிஷனருக்குத் தெரியாமல் இல்லளவு பெரிய பங்களாவிலா மெய்நம்பி பதுங்கி இருக்கிறார். என்று வியப்படைந்தது சங்கர்லால் மனம். கார் நின்றதும். பங்களாவின் வெளியே நின்றிருந்த வேட்டை நாய் ஒன்று மண்டை கிழியக் குரைத்துக்கொண்டு காரை நோக்கி ஓடி வந்தது. உடனே பால்துரை காரிலிருந்து இறங்கி அந்த வேட்டை நாயைத் தடவிக் கொடுத்து அதை உள்ளே அழைத்துக்கொண்டு போனான். 

அவன் மறைந்ததும், நஞ்சப்பன். சங்கர்லாலைப் பார்த்து “என்னுடன் வாருங்கள்” என்று சொல்லிவிட்டு இறங்கினான். 

சங்கர்லால், நஞ்சப்பனுடன் நடந்தார். உள்ளே மெருகிட்டதைப்போல் பளிங்குக் சுற்களால் கட்டப்பட்டிருந்த அந்த மாளிகை சங்கர்லாலை மிகவும் கவர்ந்தது. அதே நேரத்தில்.. இவ்வளவு தொலைவு கலையுள்ளம் படைத்த மெய்நம்பி எப்படி இவ்வளவு பெரிய கொடியவராக இருக்கிறார் என்று சிந்தித்தது! 

அவர் மனத்தில் தோன்றிய கேள்விகளுக்கு விரைவிலேயே அவருக்குப் பதில்களும் கிடைத்தன! 

அத்தியாயம்-25 

அந்தப் பங்களாவில் இருந்த ஒவ்வொரு பொருளும் விலை உயர்ந்த பொருள்களாக இருந்தன. கதவின்பிடி. கீழே விரிக்கப்பட்டிருந்த காஷ்மீர் கம்பளம் மேசை மீதிருந்த விளக்கு, சன்னல் திரை. பச்சைவண்ணத் தொலைபேசி – எல்லாமே கவர்ந்தன சங்கர்லாலை. 

சங்கர்லால் மெய்நம்பியின் அறைக்குள் நுழைந்ததும். அவருக்குப் பின்னால் ஓசையின்றிக் கதவுகள் மூடிக் கொண்டன. அவர் திரும்பிப் பார்த்தார். அந்தக் கதவுகளை வெளியே எவரோ தாழிடும் ஓசை கேட்டது! 

“வாருங்கள் சங்கர்லால்!” 

அழுத்தமான குரல் ஒன்று அந்த அறையில் கேட்டது. சங்கர்லால் திரும்பி முன்னால் பார்த்தார். மிகப்பெரிய ஒரு நாற்காலியின் பக்கவாட்டில், ஒரு கைமட்டும் தெரிந்தது; அந்தக் கையின் விரல்களி இடுக்கில் விலை உயர்ந்த சிகரெட் ஒன்று புகைந்துகொண்டிருந்தது. அந்தக் கைக்கு உரியவர் மெய்நம்பிதான் என்பதை உணர்ந்துகொண்ட சங்கர்லால் சற்று மெல்லவே நடந்து முன்னால் சென்றார்.

மெய்நம்பி எழுந்திருக்கவில்லை அவரின் நீண்ட மூக்கும் கூர்மையான கண்களும் சங்கர்லாலைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தன. அவர் அணிந்திருந்த சட்டைப் பொத்தான்களும், கை விரல்களில் மின்னிய விலை உயர்ந்த கற்களைப் பதித்த மோதிரங்களும் கண்களைப் பறித்தன. 

“உங்களை இப்போதுதான் முதல்முதலில் நேரில் பார்க்கிறேன். உங்களுடைய புகைப்படங்களை நிறையப் பார்த்திருக்கிறேன். உங்களை நேரில் பார்க்கும்போது, நீங்கள். உங்கள் புகைப்படத்தில் இருப்பதைப் போலவே இருக்கிறீர்கள்?” 

“அப்படியா?” என்றார் சங்கர்லால். 

“உங்களுக்குப் பிடித்தது தேநீர் என்பது உலகம் முழுவதும் தெரியும். அதனால் நீங்கள் வருவதற்குமுன்பே தேநீர் போட்டுவைக்கும்படி சொன்னேன். அதோ அந்த பிளாஸ்கில் தேநீர் இருக்கிறது. நீங்களே அதை இரண்டு கோப்பைகளில் ஊற்றி நீங்கள் ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள்; என்னிடம் ஒன்று கொடுங்கள்” என்றார் மெய்நம்பி. 

நீண்ட சதுரமான அந்த அறையின் ஒரு பக்கத்தில், மேஜையின்மீது வெளிநாட்டு வெள்ளி தெர்மாஸ் பிளாஸ்க் ஒன்று இருந்தது. அதன் பக்கத்தில் இரண்டு கோப்பைகள் நீல நிறத்தில் இருந்தன. அந்தக் கோப்பைகள் இரண்டிலும் சங்கர்லால் தேநீரை ஊற்றினார். 

இருவரும் தேநீரைச் சுவைத்துப் பருகியபடி பேசத் தொடங்கினார்கள். 

“உங்களை அச்சுறுத்தி இங்கே அழைத்துவரும்படி சொன்னதற்காக என்னை நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னுடன் பேச விரும்பியதால்தான் நான் உங்களை அழைத்து வரும்படி சொன்னேன்”. 

“அதனால் ஒன்றும் குற்றமில்லை!”

”வழக்கமாகத் தங்கும் பங்களாவிலிருந்து இந்தப் பங்களாவுக்கு நான் ஏன் வந்துலிட்டேன் தெரியுமா?” என்றார் மெய்தம்பி. 

“சொல்லுங்கள்.”

“கமிஷனரின் ஆட்கள் இரண்டு பேர் என்னை தொடர்ந்து வருவதைக் கண்டுபிடித்துவிட்டேன். அவர்கள் இரவு பகலாக என்னைக் கவனித்துக்கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை! மேலும், உங்களை, யாரும் பார்க்காத இடத்தில் நான் கண்டு பேச எண்ணினேன்!” 

“புரிகிறது” என்று சொன்னார் சங்கர்லால்.. ”கமிஷனர் எளிய உடையில் அனுப்பிய கான்ஸ்டபிள்கள் என் பங்களாவை முற்றுகையிட்டிருக்கும் நேரத்தில், அப்படிப்பட்ட சுற்றுப்புறத்தில், உங்களை நான் காணவோ, உங்களுடன் பேசவோ நான் விரும்பவில்லை!”

சங்கர்லால் பேசவில்லை. 

மெய்நம்பி அடுத்தபடியாகச் சொன்னார்: “இது என் பங்களா! என் கோட்டை! இது என் பங்களா என்பது எவருக்கும் தெரியாது. இந்த இடத்தில் நான் சொல்லுவது தான் சட்டம்! இங்கேயிருந்து நீங்கள் உயிருடன் திரும்பிப் போவது என்பது என் கையில் இருக்கிறது?”

இப்படிச் சொல்லிவிட்டு மெய்நம்பி வாய்விட்டுச் சிரித்தார்! அவர் சிரிப்பு அந்த அறையில் அச்சம் தரும் வகையில் எதிரொலித்தது!

– தொடரும்…

– சங்கர்லால் துப்பறியும் ஆந்தை விழிகள் (நாவல்), ஐந்தாம் பதிப்பு: 1973, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *