கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 5,001 
 
 

 (1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குருத்து 1 – 3 | குருத்து 4 – 6

முன்னுரை 

இக் கதை ‘வாஷிங்டனில் திருமணத்’தைப் போன்ற ஒரு நகைச்சுவைத் தொடர் அல்ல என்பதை வாசக நேயர்களுக்கு முன் கூட்டியே தெரிவித்துவிட விரும்புகிறேன். இது ஒரு தனித் தன்மை வாய்ந்த புதுமையான காதல் நவீனம். இதில் நகைச்சுவைக்கும் இடம் உண்டு. 

இதற்கு முன் எத்தனையோ விதமான காதல் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, சாகுந்தலம் போன்ற காதல் இலக்கியங்கள் அழிவில்லாத அமரத்வம் பெற்றவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் தனிச் சிறப்பு வாய்ந்தவை. 

அந்த மாபெரும் இலக்கியங்களுள் இந்தக் காதல் நவீனத்தை நான் ஒப்பிட்டுப் பேசவில்லை. இதுவரை தோன்றியுள்ள காதல் கதைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில் இந்தக் கதை அமைந்துள்ளது என்பது என் கருத்து. ஒரு காதல் கதையின் வெற்றிக்கு இன்றியமையாத அம்சங்கள் எத்தனையோ உண்டு. அந்த உத்திகள் எதுவும் இதில் கையாளப்படவில்லை. காதலுக்குரிய சூழ்நிலை கதாபாத்திரங்கள் இவை இல்லாமலே இதை ஒரு காதல் ரவீனம் என்று தைரியமாகக் கூறுகிறேன். ஆயினும், கதை யின் முடிவில்தான் நேயர்கள் இதைப்பற்றி முடிவு செய்ய வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்த மட்டில் இந்தக் காதல் கதையைப் படித்து முடித்த பிறகு யாராவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவார்களானால் அதையே இந்தக் கதையின் வெற்றியாகக் கொள்வேன். 

இந்தத் தொடரின் பின்னுரையில் நேயர்களுக்காக ஒரு முக்கிய விஷயம் காத்திருக்கிறது, அது இக்கதையில் வரும் கதாபாத்திரங்களையோ நிகழ்ச்சிகளையோ பற்றி அல்ல. அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரசியம் கெட்டு விடுமாகையால் இப்போது கூறாமல் கதையைத் தொடங்குகிறேன். 

குருத்து ஒன்று 

“ராஜா!…” 

மாடியிலிருந்து ஒலித்தது அந்த அதிகாரக் குரல். கண் ணியமும் கம்பீரமும் மிக்க அந்தக் குரலுக்குரியவரின் பெயர் பார்வதி; குரலினின்று பார்வதியின் உருவத்தை – நிறத்தை அழகை – வயதைக் கற்பனை செய்ய முயலுகிறோம். முடிய வில்லை. 

இன்னும் சிறிது நேரத்தில், அந்தக் கன்னிப் பெண் – இல்லை.வயதான மங்கை,-ஊஹூம், குமாரி பார்வதி, அதுவும் சரியில்லை-பின் எப்படித்தான் அழைப்பது? சாரதா மணிக் கல்லூரியின் தலைவி டாக்டர் குமாரி பார்வதி, அது. தான் சரி- இப்போது கீழே இறங்கி வரப்போகிறாள். அப் போது நேரிலேயே பார்த்து விடலாம். 

மேஜை மீது வைக்கப்பட்டுள்ள காப்பி ஆறுவது கூடத் தெரியாமல் அந்தப் புத்தகத்திலுள்ள சில வரிகளில் மனத்தைச் செலுத்தி அவற்றையே திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தாள் பார்வதி. அவளை அவ்வளவு தூரம் கவர்ந்து விட்ட அந்தப் புத்தகம் வேறொன்றுமில்லை. ‘பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ்’ என்னும் நூல்தான். 

பார்வதி தற்செயலாகத் தலை நிமிர்ந்தபோது எதிரில் ஆறிக் கொண்டிருக்கும் காப்பியைக் கவனித்தாள். சாப்பிடு வதற்குப் பக்குவமாக இருந்த சூடு இப்போது அதில் இல்லை. ஆறிப் போயிருந்தது. ஆயினும் அவள் அதைப் பொருட் படுத்தாமல் எடுத்துக் குடித்தாள். அவள் பார்வை பல கணியின் வழியாக ஊடுருவிச் சென்று சற்றுத் தூரத்தில் தெரிந்த சாரதாமணிக் கல்லூரியின் புதிய ஹாஸ்டல் கட்டடத்தில் பதிந்தது. அந்த வெண்மையான தூய நிறக் கட்டடத்தைக் கண்டபோது அவள் உள்ளமும் உடலும் சிலிர்த்தன. எண்ணம் ஆறு மாதங்களுக்குப் பின் நோக்கிச். சென்று, அப்போது நிகழ்ந்த ஒரு காட்சியைச் சலனப் பட மாக்கி, மனத் திரைக்குக் கொண்டு வந்தது. 

ஆறு மாதங்களுக்கு முன்புதான் பார்வதி- முதல் முறை யாக அவரைச் சந்தித்தாள். அவருடைய கௌரவமான தோற்றம், முகத்தில் நிலவிய அமைதி, உள்ளத்தில் உறைந்த உறுதி, வார்த்தைகளைத் தராசிலே நிறுத்துப் போட்டுச் செலவழிக்கும் சிக்கனம், கல கல் வென்ற குற்றமற்ற குழந்தைச் சிரிப்பு!- 

எல்லாம் நினைவில் தோன்றி நெஞ் சத்தை நிறைத்தன. அவள் தன்னுள் வியந்துகொண்டாள். ஒரு முறை அந்த ஹாஸ்டல் கட்டடத்தின் கம்பீரத்தைக் கண்ணுற்றாள். இருப்பது ஒரே நாள். நாளைக் காலைக்குள் எல்லா ஏற்பாடுகளும் முடிந்தாக வேண்டும். மாலையில் விழா ஒரே கோலாகலமாயிருக்கும். அவர் வந்து புதிய ஹாஸ்டல் கட்டடத்தைத் திறந்து வைப்பார். அழகாகப் பேசுவார். மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்வார் கள். கலை நிகழ்ச்சியின் குலூகலத்துடன் ஆண்டு விழா இனிது முடிவுறும். அப்புறம்?… மறுநாள் திங்களன்று காலை வழக்கம் போல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும்போது கலகலப்பெல்லாம் ஓய்ந்து, திருவிழாக் கோலம் கலைந்து பேரமைதி நிலவும்-இந்தக் காட்சியையும் அவள் எண்ணிப் பார்த்தாள். 

“ராஜா!” 

மீண்டும் குரல் கொடுத்தாள் பார்வதி. பதில் இல்லை; பதில் கொடுக்க வேண்டியவன் அங்கே இல்லை. 

கீழே சாம்பிரானிப் புகை கம்மென்று மணம் வீசி அந்தப் பங்களா முழுவதும் நெளிந்து வளைந்து அடர்த்தியாக மண்டியது. அம்மம்மா! என்ன மணம்! அந்தத் தெய்விக மணத்தை நுகரும்போது உள்ளத்தில் எத்தனை நிம்மதி பிறக்கிறது! 

முன்வாசல் ஹாலில் மாட்டப்பட்டிருந்த கெடிகாரத்தின் பெண்டுலம் அமைதியாக ஊசலாடிக்கொண்டிருந்தது. 

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும், அன்னை சாரதா மணி தேவியாரும் ஹால் சுவரின் இன்னொரு புறத்தை அலங்கரித்தார்கள். 

“ஒரு வீட்டில் மாட்டப்பட்டுள்ள படங்களே அந்த வீட்டில் வசிப்பவர்களின் உள்ளத்தைப் பிரதிபலித்துக் 

காட்டும் சின்னங்கள்’ என்று யாரோ எப்போதோ கூறியதாக ஞாபகம். 

“ராஜா!…” 

வீணையின் ரீங்காரம் போல் மூன்றாம் முறையாக ஒலித் தது அக்குரல். 

“ராஜா இல்லை அம்மா!… விடியற்காலை ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு போனவர்தான். இன்னும் வரவில்லை. என்.ஸி.ஸி.போலிருக்கிறது சமையல்காரி ஞானம் குரல் கொடுத்தாள். 

வாசல், ‘போர்ட்டிகோ’வுக்கு முன்னால் துடிப்பாக வளர்ந்து கொண்டிருந்த விசிறி வாழையின் இரண்டொரு இலைகள் அசைவதைத் தவிர, அந்தப் பங்களாவுக்குள் வேறு சலனமே இல்லை. காம்பவுண்ட் கேட்டருகில் தேய்ந்துபோன முக்காலியில் உட்கார்ந்திருந்தான் கூன்முதுகுப் பெருமாள். அவனுக்கு அந்தப் பங்களாவுக்குள்ளே, வெளியே நடக்கிற விவகாரம் எதுவுமே தெரியாது. காரணம், காது கொஞ்சம் மந்தம். முன்னெல்லாம், அதாவது அவனுடைய அறுபதாவது வயதில் இப்படியில்லை. இப்போது ஒரே டமாரச் செவிடு! பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைப் புத்தகம் ஒன்றும், அல்லி அரசாணி மாலையும், வயது முதிர்ந்து காலத்தின் சுழலிலே தாக்குண்டு, பழுப்பேறி, ஏடு நைந்து தொட்டால் துகளாக உதிர்ந்துவிடும் நிலையில் அவன் அறிவுத் தோழர்களாக அவனுடனேயே இருந்துகொண்டிருந்தன. பெருமாள் உட்கார்ந்தபடியே உறங்கிக்கொண் டிருந்தான். அது சர்விஸில் ஏற்பட்ட பழக்கம்! நரம்புகள் தளர்ச்சியுற்று உடல் முழுவதும் சுருக்கங்கள் கண்டு, முதுகில் கூன் விழுந்த பிறகும் அவனை வெளியே அனுப்பிவிடப் பார்வதியின் இளகிய மனம் இடம் தரவில்லை. 

கல்லூரியின் சேவகனாக ஐம்பது ஆண்டுக்காலம் தொண் டாற்றிய அந்தத் தொண்டுக்கிழவனை அநாதரவாக விட்டு விட மனமின்றித் தன்னுடைய பங்களாக் காவலனாக அமர்த்திக் கொண்டாள். 

சாப்பாட்டு ஹாலில் ராஜாவுக்கும் பார்வதிக்கும் மணை போட்டுத் தயாராக வைத்திருந்தாள் ஞானம். மணி ஒன்பதரை ஆயிற்று. தினமும் இதற்குள் சாப்பிட்டு முடிந் திருக்கும். இன்று கொஞ்சம் லேட். ராஜா வந்தால் சாப்பிட உட்காரவேண்டியதுதான். அது ஏனோ, பார்வதிக்கு ராஜா இல்லாமல் தனித்துச் சாப்பிடத் தோன்றவில்லை. பழக்கமும் இல்லை. ஸ்கூட்டர் வரும் ஓசை கேட்கிறது; பெருமாளுக்கு அல்ல. வேப்பமரத்து நிழல் அவனை நல்ல உறக்கத்தில் ஆழ்த்தி விட்டிருந்தது. ராஜா அவனை ஏக வசனத்தில் திட்டிக்கொண்டே ஸ்கூட்டரை நிறுத்திக் கீழே இறங்கிக் கதவைத் தானே திறந்துகொண்டு உள்ளே சென்றான். காலையில் செய்த ‘கசரத்’தில் அவனுக்கு உடல் களைத்துப் போயிருந்தது. நல்ல பசி வேறு. சமையலறையில் கொதித் துக் கொண்டிருந்த தக்காளி ரசத்தின் வாசனை, சாம்பி ராணிப் புகையுடன் கலந்து வந்தபோது அவனுடைய பசியை மேலும் தூண்டியது. 

வீட்டுக்குள் நுழையும் போதே “அத்தை! பசி! பசி!… வா அத்தை!” என்று எக்காளமிட்டுக் கொண்டே சமைய லறையை நோக்கி விரைந்தான். நொடிப் பொழுதில் காக்கி உடையைக் களைந்து, வேறு உடை மாற்றிக்கொண்டு மணையில் போய் உட்கார்ந்துவிட்டான். 

“தக்காளி ரசம் வாசனை மூக்கைத் துளைக்கிறதே! என்ன சமையல் இன்றைக்கு ! அப்பளம் பொரித்திருந்தால் முதலில் கொண்டு வந்து போடு. அத்தை வருகிறவரை அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். பசி தாங்கவில்லை. உஸ்ஸ்!… இடியட்! பெருமாள்! நெற்றி முழுதும் நாமத்தைப் பட்டையாகத் தீட்டிக்கொண்டு……. உட்கார்ந்தபடியே எப்படித்தான் நாள் முழுவதும் தூங்க முடிகிறதோ அவனால்!..” வார்த்தைகளைப் பொரித்துக் கொட்டிக் கொண்டிருந்தான் ராஜா. 

சமையலறையில் பச்சைப் பட்டாணியும் முட்டைக் கோஸும் எவர்ஸில்வர் வாணலியில் இளம் பதமாக வதங்கிப் பக்குவமாகிக் கொண்டிருப்பது அவன் கண்ணில் பட்டது. 

“அந்தக் கறியில் கொஞ்சம் கொண்டுவந்து போடு பசி தாங்கவில்லை. அத்தையைக் காணோமே…அத்தே!அத்தே! நீ வரப் போகிறாயா… நான் சாப்பிடட்டுமா?” 

ஞானம் புகையப் புகைய கோஸ் கறியைக் கொண்டு வந்து பறிமாறினாள். அவசரமாக அதைச் சட்டென்று எடுத்து வாயில் போட்டுக்கொண்ட ராஜா, நாக்கைச் சுட்டுக் கொண்டு சூடு பொறுக்காமல் திணறிப் போய் “பூ! பூ என்று வாய்க்குள்ளாகவே ஊதிச் சுவைத்துக் கொண் டிருந்த இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே வந்த பார்வதி, சிரிப்பை அடக்கிக்கொண்டவளாய், “ஏண்டா! ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லையா? உனக்காக நான் இத்தனை நேரம் காத்திருந்தேனே, நான் வருவதற்குள் என்ன அவசரம் வந்து விட்டது உனக்கு?” 

ராஜா பதில் கூறவில்லை. பதில் கூறும் நிலையில் இல்லையே அவன்! 

துல்லியமாக, எளிமையாகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் பார்வதி. ஒரு கல்லூரியின் பிரின்ஸிபால் என்று கூறுவதற்குரிய வயதோ, தோற்றமோ, ஆடம்பரமோ அவளிடம் காணப்படவில்லை. அவளுடைய ஆழ்ந்த படிப்பும், விசாலமான அறிவும் அவளுடைய எளிமையான அடக்கமான தோற்றத்தில் அமுங்கிப் போயிருந்தன. நாகரிகம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகள் தங்களை அலங்காரம் செய்துகொண்டு வரும் அவலட்சணங்களைக் காணும்போதெல்லாம், அந்த அநாகரிகமான பண்பற்ற கோலங்களைக் கண்டிக்கத் தவறியதில்லை அவள். 

“ஏண்டா கறியைச் சுடச் சுட விழுங்கி விட்டாயா? அவசரக் குடுக்கை! ஆத்திரப்பட்டால் இப்படித்தான் ஆகும்…” பார்வதி தன் செல்ல மருமகன் ராஜாவை நாசூக் காகக் கண்டித்தபடியே மணைமீது அமர்ந்தாள். 

“அதற்காக ஆறிப் போகும்படியும் விடக்கூடாது அத்தை! அப்போது ருசியை இழந்து விடுவோம்” என்றான் ராஜா. 

பார்வதிக்குச் சுருக்கென்றது. 

‘அளவுக்கு மீறிக் காலம் கடத்துவதும் கூடாதுதான்.. ராஜா எதை மனத்தில் எண்ணிக்கொண்டு இப்படிச் சொல் கிறான்? இவனுக்குத் திருமணம் செய்யும் காலத்தைக் கடத்தி விடக் கூடாது என்று எச்சரிக்கிறானா? அல்லது…’ 

காலையில் மேஜைமீது ஆறிக்கிடந்த காப்பியை அருந்தும் போதுகூட அவளுக்கு இந்த எண்ணம் உண்டாயிற்று. சிந்தனையில் லயித்துக் காப்பியின் ருசியை இழந்து விட்டது கால தாமதத்தினால் நேர்ந்த இழப்புத்தானே? 

‘ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றின் சுகத்தைப் பெற முடியும். எதை அடைய விரும்புகிறோமோ, எந்த மாபெரும் காரியத்தைச் சாதிக்க விரும்புகிறோமோ, அந்தக் காரியமே நமது வாழ்க்கையின் குறிக்கோளாகி விடும்போது மற்ற இன்பங்களெல்லாம் அற்பமாகி விடுகின்றன. உலகத் தில் அரும் பெரும் காரியங்களைச் சாதித்தவர்கள், சாதிப்பவர்களின் வாழ்க்கையைத் துருவினால், அவர்களின் சரித்திரத்தை ஆராய்ந்தால் இந்த உண்மை நமக்குப் புலனாகாமற் போகாது. சிற்சில சமயங்களில் என்னை நான் மறந்து விடு கிறேன் என்பது உண்மைதான். ஆனால், அதனால் என் வாழ்க்கையில் நான் பெறவேண்டிய இன்பத்தைப் பெறத் தவறி விட்டேனா? காலம் கடந்துபோய் விட்டதா?” 

பார்வதியின் சிந்தனையைக் கலைத்தான் ராஜா. 

“அத்தை! இந்தச் செவிட்டுப் பெருமாளை எதற்காகத் தான் கேட்டில் உட்கார வைத்திருக்கிறாயோ? காதுதான் கேட்கவில்லை யென்றால் கண்களையும் மூடிக்கொண்டு நிம்மதி யாகத் தூங்கி விடுகிறானே!” 

“பாவம்! அநாதைக் கிழவன். இந்த உலகத்தில் அவனுக்கு யாருமே இல்லை… அத்தோடு காது வேறு செவிடு. தன் வாழ்நாள் முழுவதும் நமது கல்லூரியிலேயே கழித்தவனைக் காப்பாற்றுவது நம் பொறுப்பு இல்லையா?…” 

“கல்லூரி ஆண்டு விழா என்றைக்கு அத்தை?”

“நாளைக்குத்தான். விழாவைச் சிறப்பாக நடத்தும் பொருட்டு எங்கள் கல்லூரிக்கு மூன்று நாள் விடுமுறை விட்டிருக்கிறேன் ராஜா! உனக்கு இன்றும் நாளையும் லீவு தானே ! நீயும் இப்போது என்னுடன் கல்லூரிக்கு வரலாம். நீ பெரிய என்ஜினீயர் படிப்பு படிப்பவனாயிற்றே! புதிய ஹாஸ்டல் கட்டடத்தை வந்து பார். அத்துடன் கல்லூரியில் ‘டெகரேஷன்’ வேலை நடந்து கொண்டிருக்கிறது. உனக்கு இதிலெல்லாம் ஒரு ‘டேஸ்ட்’ உண்டே!…” 

“பெண்கள் கல்லூரிக்குள் நான் வரலாமா, அத்தை?’ “தாராளமாக வரலாம்; அங்கே இப்போது கலை நிகழ்ச் சிக்காக ஒத்திகை நடந்து கொண்டிருக்கும். பாரதியும் இன்னும் சில பெண்களும் மட்டுமே வந்திருப்பார்கள். அவர்களைக் கண்டால் நீதான் வெட்கப்படுவாய்! ரொம்ப வாயாடிப் பெண்கள்!” என்றாள் பார்வதி. 

”பாரதியா? யார் அத்தை அது. ? எஸ்.பாரதி, பி.எஸ்ஸி. ஸெகண்ட் இயர் ஸ்டூடன்ட்தானே! ‘ஸ்லிம்’ மாக சினிமா ஸ்டார் நூடன் மாதிரி இருப்பாளே, அந்தப் பெண்ணா?” 

”அவளை உனக்கு எப்படித் தெரியும், ராஜா?” அத்தையின் விழிகள் வியப்பால் மலர்ந்தன. 

“ரேடியோ க்விஸ் புரோக்ராமுக்கு அடிக்கடி வருகிற பெண்தானே? நானும் அவளும் க்விஸ் மாஸ்டரின் கேள்வி ஒன்றுக்கு ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் பதில் கூறினோம்.மாஸ்டர் அத்தப் பெண்ணுக்குத்தான் ‘பாயின்ட்’ கொடுத்தார்.பிறகு என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே “லேடீஸ் ஃபஸ்ட்’ என்று சொல்லிக் கண் சிமிட்டினார்.” 

“அதென்னடா அப்படிப்பட்ட கேள்வி?” அத்தை கேட்டாள். 

“ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்வமிந்த நாட்டிலே…’இந்தக் கவிதையைப் புனைந்த கவிஞன் யார்?’ என்பது கேள்வி. பாரதி என்று நாங்கள் இருவரும் பதில் கூறினோம். ‘சபாஷ்’ என்று கூறிய மாஸ்டர், ‘உன் பெயர் என்னம்மா?’ என்று அந்தப் பெண்ணைக் கேட்டார் ‘பாரதி’ என்று நாணத்துடன் பதில் கூறினாள் அவள். அப்போதுதான் எனக்கு அந்தப் பெண்ணின் பெயர் தெரியும்” என்று கூறினான் ராஜா. 

“வெரி ஷ்ரூட் கர்ல்! இவ்வாண்டு சாரதாமணிக் கல்லூரி நடத்திய அழகுப் போட்டியிலும்கூட அவளுக்கே முதல் பரிசு கிடைத்திருக்கிறது.இதற்காக ஆண்டுவிழாவின் போது பரிசாகக் கொடுப்பதற்கென்று ஒரு பெரிய வெள்ளிக் கோப்பைகூட வாங்கி வைத்திருக்கிறோம். அது மட்டுமல்ல. கலைநிகழ்ச்சியில் குறத்தி டான்ஸ் ஆடப்போகிறாள் அவள்..” என்று கூறினாள் பார்வதி. 

குறத்தி வடிவத்தில், குதூகலத்தின் எல்லையில், வாலிபத்தின் எக்களிப்போடு, ராஜாவின் மனக் கண் முன் தோன்றினாள் பாரதி. 

ராஜா பால் பாயசத்தை உறிஞ்சிக்கொண்டே பாரதியின் அழகை அசை போடலானான். 

“உங்கள் இருவருக்கும் இன்னும் கொஞ்சம் பாயசம் போடுகிறேன்’ என்றாள் ஞானம். 

“என்ன ஞானம்? இன்றைக்கு என்ன விசேஷம்? பால் பாயசம் போட்டிருக்கிறாய்?” என்று அப்போதுதான் விசாரித்தாள் பார்வதி. 

“இன்றைக்கு உங்களுக்குப் பிறந்த தினமாயிற்றே! அது உங்களுக்கு எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது, எந்நேரமும் கல்லூரியைப்பற்றிய நினைவுதான்.” ஞானம் கூறினாள். 

“நாற்பத்தாறு வயதா ஆகி விட்டது எனக்கு? காலம் விளையாட்டாக ஓடிவிட்டது. கல்லூரிக்கும் எனக்கும் மூன்று வயது வித்தியாசம்தான். கல்லூரிக்கு நாளை ஐம்பதாவது ஆண்டு விழா. எனக்கு நாற்பத்தேழாவது பிறந்த நாள்.” 

தான் வேறு, கல்லூரி வேறு என்ற உணர்வே அவளிடம் கிடையாது. 

“இந்தக் கல்லூரியிலேயே படித்து, அங்கேயே லெக்சர ராக வேலை பார்த்து, இப்போது அதன் தலைவியாகவும் ஆகி விட்டேன். ஹ்ம்ம்.” பெருமுச்சு ஒன்றை வெளியிட்டு மனத்தில் தோன்றிய எண்ணத்தை மறைக்க முயன்றாள். 

“அத்தை உனக்கு அடிக்கடி பிறந்தநாள் வர வேண்டும்” என்று வாழ்த்திக் கொண்டே எழுந்தான் ராஜா. 

“ஏண்டா நான் சீக்கிரத்திலேயே கிழவியாகிவிட வேண்டும் என்று வாழ்த்துகிறாயா?” என்று கேட்டாள் பார்வதி. 

“பாயசத்துடன் எழுந்து விடடாயே, மோர் சாப்பிட வில்லையா ராஜா?” என்று கேட்டாள் ஞானம். 

“ஹவுஸ் புல்!” என்று கூறிக்கொண்டே திருப்தியுடன் ஓர் எப்பம் விட்டான் ராஜா. 

“உனக்கு எப்போதும் இந்த சினிமாப் பேச்சுதான்… சரி; போய் காரை எடு; காலேஜுக்குப் புறப்படலாம், என்று அத்தை கூறி முடிக்குமுன்பே, “ஓ.கே!” என்று வாசலுக்குப் பாய்ந்து ஓடினான் ராஜா. 

பார்வதி வாசல் ஹாலுக்கு வந்து நின்று பகவானையும், தேவியையும் அண்ணாந்து பார்த்து வணங்கிவிட்டுக் காரில் ஏறிக்கொண்டாள். கார் ‘போர்ட்டிகோ’வை விட்டு நகர்ந்ததுதான் தாமதம், செவிட்டுப் பெருமாள் மரியாதையாக முக்காலியை விட்டு எழுந்து நின்றான். 

“அத்தை! இந்தச் செவிடனுக்கு நீ வெளியே போகிற நேரம் மட்டும் எப்படியோ மூக்கிலே வியர்த்து விடுகிறது. மற்ற நேரங்களில் காதும் கேட்பதில்லை, கண்ணும் தெரிவ தில்லை. பெரிய வேஷக்காரன் அத்தை இவன்!…கையில் அல்லி அரசாணி மாலையைப் பாரு!” என்றான் ராஜா. 

“உன் மாதிரி ‘ஹிட்ச்காக்’ படம் பார்க்கச் சொல் கிறாயா, அவனை?” 

ஹாரன் செய்தபடியே காரைக் கலாசாலைக் காம் பவுண்டுக்குள் செலுத்திப் பிரின்ஸிபால் அறைக்கு முன்னால் கொண்டு நிறுத்தினான் ராஜா. அந்த ஹாரன் சத்தம் கலா சாலையின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று ஒலித்த போது, ஆங்காங்கே அதுவரை ‘கசமுசா’ வென்று பேசிக் கொண்டிருந்தவர்கள் ‘கப்சிப்’பென்றாகிப் ‘பிரின்ஸிபால் வந்து விட்டார்’ என்ற எச்சரிக்கை உணர்வுடன் வேலை செய்யத் தொடங்கினர். 

“ராஜா! புதிய ஹாஸ்டல் கட்டடத்தில்தான் மீட்டிங்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறப் போகின்றன. எலெக்ட்ரீ ஷியனை வரச்சொல்லி யிருக்கிறேன். அதற்கு முன்னால், காகிதப் பூத் தோரணங்களால் ஹாலை அழகுபடுத்த வேண்டும். ஹாஸ்டல் மாணவிகள் கலர் காகிதங்களில் விதம் விதமான தோரணங்கள் தொடுத்து வைத்திருக்கிறார்கள். நீ போய் அவற்றை யெல்லாம் அழகாகக் கட்டிவிடு. பாரதியும் ரிஹர்ஸலிலிருந்து வருகிற நேரமாயிற்று” என் றாள் பார்வதி. 

ராஜாவின் இதயம் உற்சாகத்தில் சீட்டியடித்தது. அடுத்த கணமே அவன் புதிய ஹாஸ்டல் கட்டடத்தில் இருந் தான். ஹாலுக்குள் நுழையும்போதே அந்த வாயாடிப் பெண்களுக்கு முன்னால் சங்கோசமின்றிப் பழகவேண்டும். என்று தானாகவே எண்ணிக்கொண்டு, செயற்கையான அதட்டல் குரலில் மெள்ளப் பேசவேண்டிய விஷயத்தைக் கூட இரைந்து கத்தினான். 

“எங்கே தோரணமெல்லாம்? எலெக்ட்ரீஷியன் வந்தாச்சா? ஆணி இல்லையா? சுத்தியல்….. இப்படிப் பொதுவாக அதட்டல் போட்டுக் கொண்டே சுற்று முற்றும் யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று ஒரு முறை கடைக்கண்ணால் கவனித்துக் கொண்டான். அங்கே யாருமே இல்லை: ஒரு மூலையில் குவிந்து கிடந்த காகிதத்தோரணங் களையும், இன்னொரு பக்கம் குத்திட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மடக்கு நாற்காலிகளையும் தவிர…

ராஜா அந்த நாற்காலிகளில் ஒன்றை நடு ஹாலில் இழுத்துப் போட்டுக்கொண்டு, ‘செட்டில்’ நட்சத்திரங்களின் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு சினிமா டைரக்டரைப் போல் உட்கார்ந்துகொண்டான். அப்படி ஒரு நினைப்பு அவனுக்கு! 

அடுத்த நிமிடம் ‘கூடை முறம் கட்டுவோம், குறி சொல்லுவோம்’ என்று ஊமை ராகத்தில் பாடியபடியே மறு நாள் ஆடப் போகும் குறத்தி நடனத்தை ஒத்திகை பார்த்துக் கொண்டவளாய்த் தன் தோழிகளுடன் ஹாலுக்குள் குதித்து வந்தாள் பாரதி. அங்கே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த ராஜாவைக் கண்டதும் அவள் முகம் வெட்கத்தால் சிவந்து போயிற்று! 

“ஹல்லோ! எஸ் பாரதி, பி.எஸ்ஸி, ஸெகண்ட் இயர், சாரதாமணி காலேஜ். டான்ஸ் ரொம்ப பிரமாதம்! கூடை முறம் அப்புறம் கட்டிக் கொள்ளலாம். இப்போது இந்தத் தோரணங்களை முதலில் கட்டி முடிக்கலாமா?” ராஜா ரொம்பப் பழகியவன் போல் பேசினான். 

“இதோ நாங்கள் தோரணம் தொடுத்து ரெடியாக வைத்திருக்கிறோம்” என்றாள் பாரதி. 

“இவற்றை எப்படிக் கட்டுவதாம்? இங்கே யாருக்காவது ஏதாவது ‘ஐடியா’ இருக்கா?” என்று கேட்டான் ராஜா. 

“என்ஜினீயர் படிக்கிறவர்களுக்கு இல்லாத ஐடியாவா?” பாரதி வேடிக்கையாகக் கூறினாள். 

“என்ஜினீயர் என்றால் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? ஒரு துறையில் புத்திசாலிகளாயிருந்தால் அவர்களுக்கு உலகத்திலுள்ள அத்தனை விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை. அப்படியானால் சர்ச்சிலுக்கு வேஷ்டி கட்டத் தெரியாது. குருஷ்சாவுக்கு ஹரிகாம்போதி பாடத் தெரியாது” என்றான் ராஜா. 

இந்த ஹாஸ்யத்துக்கு பலமாகச் சிரித்தார்கள் பாரதியின் சிநேகிதிகள்! அந்தப் பெண்கள் சிரித்ததும் ராஜாவுக்குத் தலை கிறுகிறுத்தது. 

சுவர் ஓரமாக ஒரு பெஞ்சை இழுத்துப் போட்டு, அதன் மீது ஒரு ஸ்டூலை எடுத்து வைத்து அதன்மீது ஏறி நின்று கொண்ட அவன், “ஆணி எங்கே, சுத்தியல் எங்கே?” என்று அதிகாரம் செய்தான். 

ஆணிகளையும் சுத்தியலையும் கொண்டு வந்தாள் பாரதி. ராஜா அவளிடமிருந்து ஆணி ஒன்றை வாங்கிச் சுவரிலே வைத்துச் சுத்தியால் ஓங்கி ஓர் அடி அடித்தான். ஆணி வளைத்துக் கொண்டது! 

வளைந்த ஆணியை எரிச்சலோடு கீழே எறிந்துவிட்டு, “பரவாயில்லையே! கட்டடம் ரொம்ப ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறது. உங்க அப்பா கட்டிக் கொடுத்த கட்டடம் அல்லவா?”

“இது எங்கப்பா கட்டியதில்லை.கொத்தனார்” என்றாள் பாரதி. 

ஏதோ அபூர்வ ஹாஸ்யத்தைக் கேட்டு விட்டது போல் அந்தக் கட்டடமே இடிந்து விழுகிற மாதிரி சிரித்தார்கள் அந்தப் பெண்கள். 

“சரி, இன்னொரு ஆணியைக் கொடுங்கள்'” என்று பாரதியைப் பார்த்துக் கேட்டான் ராஜா. 

பாரதி கொஞ்சம் வலுவான ஆணியாகவே எடுத்துக் கொடுத்தாள். 

அதைக் கையில் வாங்கியபடியே, முதல் முதல் ஆணியைக் கண்டு பிடித்தவர் யார்?” என்று ஒரு குவிஸ் கேள்வி போட்டான் ராஜா. 

“முதல் முதல் சுத்தியலைக் கண்டு பிடித்த மேதாவி யார்?” என்று பதிலுக்கு இன்னொரு ‘குவிஸ்’ கேள்வி போட்டாள் பாரதி! 

“யார் கண்டு பிடித்திருந்த போதிலும், அவ்விரண்டு பேரும் ஒருவருக்கொருவர் பெரிய எதிரிகள்” என்றான் ராஜா. 

“அதெப்படி?” என்று கேட்டாள் பாரதி. 

“ஆணியைக்கண்டால் அதன் மண்டையில் அடிக்கிறது இந்தச் சுத்தியல். சுத்தியலைக் கண்டால் எதிர்த்து நிற்கிறது இந்த ஆணி. ஆகவே இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிகள்!” இப்படியே நீங்கள் சுவர் முழுவதும் ஆணி அடித்துக் கொண்டிருந்தால் அப்புறம் இன்னொரு புதிய ஹாஸ்டலே கட்ட வேண்டியதுதான்…தரையில் பாருங்கள்; எத்தனை ஆணிகளை வளைத்துப் போட்டிருக்கிறீர்கள்?” 

இன்னொரு ஆணியை வாங்கிப் பலமாக அடித்த ராஜா, “ஐயோ!” என்று அலறியபடியே கீழே குதித்து இடது கையை உதறிக் கொண்டான். சுத்தியல் அவன் இடது கைக் கட்டை விரலை நசுக்கிவிடவே இரத்தம் பெருகிவந்தது. 

கையிலிருந்து பெருகி வழிந்த ரத்தத்தைக் கண்டதும் பாரதி பயந்து போய்விட்டாள். 

அவன் கட்டை விரலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவள், சிநேகிதிகள் பக்கமாகத் திரும்பி “ஃபஸ்ட் எய்ட் பாக்ஸ் ப்ளீஸ்” என்று பரபரத்தாள். 

‘பாணிக்கிரகணம் செய்து கொடுக்கப் போவதாகப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு…’ என்று அந்தப் பொல்லாத பெண்கள் கண் சிமிட்டியபடியே முதல் உதவிப் பெட்டியைக் கொண்டுவர ஓடினார்கள். 

பிரின்ஸிபால் பார்வதி தமது அறைக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்தபோது டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தது. ரிஸீவரை எடுத்துப் பேசி முடித்ததும் மேஜை மீதிருந்த கல்லூரியின் பொன் விழா அழைப்பிதழ் அவள் கவனத்தைக் கவர்ந்தது. வழவழப்பான காகிதத்தில் ‘சேதுபதி’ என்ற பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருந்தன. பார்வதி ஒருமுறை அப் பெயரை நெஞ்சம் நிறையச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். “இந்தப் பெயரில் என்ன மாய சக்தி இருக்கிறது? இதைக் காணும் போது எனக்கு ஏன் வியர்க்கவேண்டும்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். அவள் சிந்தனை அவரையே சுற்றி வட்டமிட்டது. 

“நாளை விழாவில் இவரை எவ்வாறு அறிமுகப்படுத்திப் பேசுவது? சுருக்கமாக அழகாகப் பேசவேண்டும். வளவள வென்று பேசினால் அவருக்குப் பிடிக்காது. பேசும்போது குரலில் தடுமாற்றம் இருக்கக்கூடாது. நடுக்கம் தொனிக்கக் கூடாது.” 

பார்வதிக்குக் கூட்டமோ சொற்பொழிவோ புதிதல்ல. இதற்குமுன் எத்தனையோ கூட்டங்களில் எவ்வளவோ முறை பேசியிருக்கிறாள். அறிவாளிகளின் பாராட்டுதல்களை யும் கரகோஷத்தையும்கூடப் பெற்றிருக்கிறாள். ஆனால் நாளைக்குப் பேசப் போவதைக் குறித்து எண்ணும்போதே அவளுக்குச் சற்று யோசனையாக இருந்தது. 

வெண்மையான மல்லிகை மலர்களால் சுமக்க முடியாத அளவுக்குப் பெரிய மாலையாகக் கம்பீரமான அவர் உருவத் துக்கு ஏற்றமுறையில் அழகாகத்தொடுத்துக் கொண்டுவரச் சொல்லி, அறிமுகப் பேச்சு முடிந்ததும்… 

…’முடிந்ததும்” என்று பயங்கரமாக ஓர் எதிரொலி எழுந்தது. பார்வதி பயந்து போய்ச் சுற்றுமுற்றும் பார்த் தாள். வேறு ஒருவருமில்லை. அவள் உள் மனமேதான்! 

அறிமுகம் முடிந்ததும் அவர் கழுத்தில் மாலையைச் சூட்டவேண்டும். யார் சூட்டுவது? தன் உள்ளத்தின் அடி வாரத்தில், ஏதோ ஓர் அற்ப ஆசை நிழலாடுவதைப்போல் உணர்ந்தாள். அதுவரை தன் வாழ்நாட்களில் அனுபவித் தறியாத புதுமையான உணர்வு அது. 

யாரைக் கொண்டு அவருக்கு மாலை சூட்டுவது என்ற கேள்விக்குப் பதிலே கிடைக்கவில்லை அவளுக்கு. 

திடீரென்று கள்ளத்தனமாகத் தன்னுள் புகுந்து குருத்து விடத் தொடங்கியிருக்கும் அந்த ஆசையை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடத் துணிந்தாள்; முடியவில்லை. 

அந்தத் தங்க எழுத்துக்கள் மீண்டும் அவள் கவனத்தை ஈர்த்தன. அதைக் கண்ணுற்றபோது, ஆறு மாதங்களுக்கு முன் அவரைக் காணச் சென்றபோது நிகழ்ந்த விவரங்க ளெல்லாம் மறுபடியும் நினைவுக்கு வந்தன. 

அதற்குமுன் அவள் அவரைப் பார்த்ததே இல்லை. நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள். ‘மிகவும் கண்டிப்பான வர்; அதிகம் பேசமாட்டார். யாருக்கும் அவருடைய பேட்டி எளிதில் கிட்டிவிடாது’ என்பதே அவரைப்பற்றி அவள் அறிந்திருந்த விஷயம். 

தான் அவரைக் காண வந்திருப்பதாகச் சொல்லி அனுப்பினால் நன்கொடை விஷயமாகத்தான் வந்திருக்கிறேன் என்பதை எளிதில் யூகித்து விடுவார். 

“இப்போது அவசர ஜோலியிருக்கிறது. அப்புறம் வந்து பார்க்கச்சொல்” என்று பதில் கூறி அனுப்பிவிடுவார் என்ற எண்ணத்துடனேதான் அன்று புறப்பட்டுச் சென்றாள். அங்கே போனபோது முற்றிலும் நேர்மாறாகவே நடந்தது. 

தன் பெயரை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி அனுப்பி விட்டு, உள்ளம் படபடக்க உட்கார்ந்திருந்தாள் பார்வதி. ஒரு கண நேரம் கூட ஆகவில்லை. ‘தங்களை வரச்சொல் கிறார்’ என்று பியூன் வந்து அழைத்தபோது வியப்புத் தாங்கவில்லை அவளுக்கு. 

பார்வதி உள்ளே செல்லும்போதே அவர், “வாருங்கள், உட்காருங்கள். தங்களைப்பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். கல்லூரியை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்” என்று பெருமிதத்தோடு சிரித்தார். 

“தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆசியும்தான் முக்கியம். இப்போது கூடக் கல்லூரி விஷயமாகத்தான் தங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். தங்கள் நேரத்தை வீணாக்க மனமில்லை. சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். ஹாஸ்டல் ஒன்று கட்டுவதற்கு நிதி திரட்டிக் கொண்டிருக் கிறோம். அதற்குத் தங்களுடைய உதவியை எதிர்பார்க்கிறோம்,” என்று மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த் தைகளை அப்படியே கூறிமுடித்தாள் பார்வதி. 

“எனக்கு அதைப்பற்றியெல்லாம் இப்போது சிந்திக்க அவகாசம் இல்லை. நேரம் கிடைக்கும்போது நானே தங்க ளுக்குச் சொல்லி அனுப்புகிறேன்” சேதுபதி நாலே வார்த் தைகளில் ‘டக்’கென்று பேட்டியை முடித்து விட்டார். பார்வதிக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நன் கொடை இல்லையே என்பதல்ல; பேட்டி இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்றுதான். 

அவரிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போலி ருந்தது. ஆயினும் வணக்கம் என்று கூறி விடைபெற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 

அந்தத் தங்க எழுத்துக்களை உற்றுப் பார்த்தபடியே யோசிக்கலானாள் பார்வதி. அன்று அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு விடைபெற்றுக் கொள்ளும்போது அவரைப் பிரிந்து செல்லவே அவளுக்கு மனமில்லை. இதுவரை அவள் யார் யாரையோ, எத்தனை எத்தனையோ அறிவாளிகளை, பிரமுகர்களை, தனவந்தர்களைச் சந்தித்து உரையாடியிருக் கிறாள். அப்போதெல்லாம், ஏற்படாத வருத்தம் இவரைப் பிரியும்போது மட்டும் ஏன் ஏற்படவேண்டும்?’ இந்தக் கேள்விக்கு அன்று அவளுக்கு விடை கிடைக்கவில்லை.ஏன் இன்றும் இன்னமும் கிடைக்கவில்லை. 

குருத்து இரண்டு 

முதல் உதவிப் பெட்டியை எடுத்து வர ஓடிய பெண்கள் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் திரும்பி வராமற் போகவே, ராஜாவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த பாரதியை வெட்கம் சூழ்ந்து கொண்டது. அதுவரை அவளுக்கு அந்த இக்கட்டான சூழ்நிலையில் நின்று கொண் டிருப்பதின் விபரீதம் புரியவில்லை. நேரமாக ஆகத்தான் அவள் அதை உணர்ந்தாள். நெஞ்சு படபடக்க, அவர்கள் வருகிறார்களா என்று கவலையோடு திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ராஜாவும்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வந்துவிடப் போகிறார்களே என்ற கவலையோடு! 

அப்போது அந்த ஹாலில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாருமே இல்லை. 

ராஜா பாரதியிடம் ஏதாவது பேச வேண்டுமெனத் துடித்தான். ஆனால் என்ன பேசுவதென்று புரியவில்லை. 

சினிமாக்களில் வரும் காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் நேரங்களில் என்ன பேசிக் கொள் வார்கள் என்று யோசித்துப் பார்த்தான். தமிழ்ப் படங் களாயிருந்தால், தத்துப் பித்தென்று ஏதோ பேசிக் கொண் டிருப்பார்கள்; அல்லது ‘டூயட்’ பாடியபடியே ஒருவரை யொருவர் துரத்திப் பிடிப்பார்கள். அவர்கள் தங்கள் இரட்டை நாடிச் சரீரத்தைச் சுமந்துகொண்டு அந்தப் பாட்டு முடியும்வரை காடு மேடெல்லாம் ஓடிக் களைத்து வியர்த்துப் போகும் நேரத்தில் (இன்டர்வல்’ விட்டுவிடுவார்கள். ஹிந்தி நடிகர்களாயிருந்தால், அவர்கள் பேசுகிற பாஷையே நமக்குப் புரியாது. ஆங்கிலப் படமாயிருந்தாலோ காதலன் காதலியின் முகத்தருகே தன்னு டைய முகத்தைக் கொண்டுபோய் ரகசியக் குரலில், ‘ஐ லவ் யூ’ என்பான். அவளும் அவனது இரு தோள் களைப் பற்றிக்கொண்டு அதே வார்த்தையைத் திருப்பிக் கூறுவாள். இதற்குள் அவர்கள் ஒரு டஜன் முத்தங்களைப் பறிமாறிக் கொண்டிருப்பார்கள். இவ்வளவுக்கும் பிறகு “ஐ லவ் யூ” என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் கூறித் தங்களுடைய காதலைப் பிரகடனப்படுத்துவார்கள். 

இந்த முறைகள் எதுவுமே ராஜாவுக்குப் பிடிக்கவில்லை. பேச்சே வேண்டாம். பாரதியின் மாந்துளிர் போன்ற விரல்கள் தன்கையைப்பற்றிக் கொண்டிருப்பதே அவனுக்குச் சுகமாயிருந்தது. பாரதியும் தானும் அதே நிலையில், அதே போஸில், சிலையாக மாறிக் காலமெல்லாம் அப்படியே நின்று கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால், அடுத்த கணமே ‘ஊஹூம்; கூடாது; சிலையாக மாறி விட்டால் உணர்ச்சியில்லாமல் அல்லவா போய்விடும்?’ என்று எண்ணினான். 

பாரதிக்கு ராஜாவிடம் அந்தரங்கத்தில் அன்பு இருந்த போதிலும், அவனுக்கு உதவிசெய்வதில் மகிழ்ச்சி அடைந்த போதிலும், தனிமையில் அவனுடன் இருப்பது தன் பெண்மைக்கு இழுக்கு, நாலு பேர் கண்டால் கேலிக்கு இடம் என்பதை அவள் மனம் குத்திக் காட்டிற்று. 

அந்த நிலையில் ராஜாவின் கையை அப்படியே விட்டுச் செல்லத் துணிவின்றித் தவித்தபோது, சட்டென உதித்த யோசனையைச் செயல்படுத்துவதுபோல் தன் இடுப்பில் செருகியிருந்த மெல்லிய கைக்குட்டையை எடுத்து, ‘ஃபயர் பக்கெட் டிலிருந்த தண்ணீரில் நனைத்துப் பரபரவென்று அவன் கட்டை விரலைச் சுற்றிக் கட்டிவிட்டு, “இதோ இங்கேயே இருங்கள். நான் போய் முதல் உதவிப் பெட்டியை எடுத்து வருகிறேன்” என்று கூறிக்கொண்டு ஓட்டமாக ஓடிவிட்டாள். 

ராஜாவின் கையில் பட்டது கையில் பட்டது இலேசான அடிதான். ஆயினும் அவன் கத்திக் கூச்சலிட்டுப் பாரதியுடன் நெருங்கிப் பேசுவதற்கும் பழகுவதற்கும் அதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டான். 

பாரதி அந்த இடத்தை விட்டு நகர்ந்ததுதான் தாமதம், அடுத்த கணமே அவன் அந்தக் கைக்குட்டையை எடுத்து மடித்துத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான். 


கல்லூரியின் பொன் விழாவுக்குத் தலைமை தாங்கப் போகும் பிரதம நீதிபதி அவர்களையும், ஹாஸ்டலைத் திறந்து வைக்க அன்புடன் இசைந்துள்ள திருவாளர் சேதுபதி அவர் களையும் சிறந்த முறையில் வரவேற்பதற்கான திட்டங்களை மானசீகமாக வகுத்துக்கொண்டிருந்தாள் பார்வதி. 

வாசலில் அவர் காரில் வந்து இறங்கும்போது இரண்டு மாணவிகள் விரைந்து சென்று காரின் கதவைத் திறந்து வரவேற்கவேண்டும். அவர் கீழே இறங்கி வரும்போதே இன்னொரு மாணவி பன்னீர் தெளித்துச் சந்தனமும் கற்கண்டும் வழங்கவேண்டும். வேறொருத்தி ஒற்றை ரோஜா மலரை எடுத்து அவரிடம் தரவேண்டும். அப்போது டேப் ரிக்கார்ட ரிலிருந்து ஒலிப்பரப்பாகும் ராஜரத்தினம் பிள்ளை யின் தோடி ஆலாபனை இலேசாகக் காற்றில் மிதந்து வர வேண்டும். வாசலில் வாழை மரங்களுடன் கூடிய வரவேற்பு வளைவுகளும், மாவிலைத் தோரணங்களும், காகிதப்பூக்கொடிகளும் கட்டிவைக்கவேண்டும். மரங்களில் சின்னஞ்சிறு மின்சார விளக்குகள் பழுத்துக் குலுங்குவது போல் ஒளி வீச வேண்டும். 

வாசல் கேட்டிலிருந்து விழா நடைபெறப் போகும் புதிய ஹாஸ்டல் கட்டடம்வரை வழிநெடுகத் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டு வைக்க வேண்டும். பாதைக்கு இரண்டு பக்கங்களிலும் மாணவிகள் மஞ்சள் நிற யூனிபாரத்தில் வரிசையாக அணிவகுத்து நிற்கவேண்டும். 

விழா ஆறரை மணிக்குத் தொடங்கப் போவதால், அவர் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து விடுவார். ஏறக்குறைய நீதிபதியும் அதே நேரத்துக்குள் வந்து விடலாம். 

திருவாளர் சேதுபதி அவர்கள் வந்ததும் புன்சிரிப்போடு என்னைப் பார்த்துக் கைகூப்புவார். நானும் கார் அருகில் சென்று அவரை வணங்கி வரவேற்று உள்ளே அழைத்துச் செல்வேன். மேடையில் போய் அமர்ந்ததும் ஜட்ஜுக்கும் அவருக்கும் ராஜாவைக் கொண்டு மாலை சூட்டுவேன். சமயத்தில் மாலையைக் காணாமல் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. விழா முடிந்ததும் அவர்களிருவடைய மாலைகளை யும் ஞாபகமாகக் கொண்டுபோய்க் காரில் வைக்கவேண்டும். இந்த ஏற்பாடுகளை யெல்லாம் பார்த்துவிட்டு அவர் ‘அரேஞ்ச்மென்ட் ரொம்ப கிராண்ட்’ என்று எண்ணிக் கொள்ள வேண்டும். 

பார்வதியின் சிந்தனையை டெலிபோன் மணி கலைத்த போது ‘யாராயிருக்கும்? ஒருவேளை…’ என்று யோசித்த வளாய் ரிஸீவரைக் கையில் எடுத்தாள். 

“நாளை இரவு பத்தரை மணிக்குப் புறப்படும் விமானத் தில் அவசரமாகப் பம்பாய் செல்ல வேண்டியிருப்பதால், நாளை விழாவின் இடையிலேயே தங்களிடம் விடைபெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. கலை நிகழ்ச்சியில் கடைசி வரை உட்கார்ந்திருக்க முடியாமலிருப்பதற்காக மன்னிக்க வேண்டும்.” இப்படிப் பேசியது திருவாளர் சேதுபதி அல்ல; அவருடைய அந்தரங்கக் காரியதரிசி. 

பார்வதிக்கு இந்தச் செய்தி பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அவள் என்னென்னவோ கோட்டைகள் கட்டி வைத்திருந்தாள். விழா முடிந்த பிறகு அவரை ஆபீஸ் அறைக்குள் அழைத்துச் சென்று கொஞ்ச நேரமாவது அவருடன் உரையாடிக் கொண்டிருக்க வேண்டும். அந்தக் குறைந்த அவகாசத்தில் எதைப்பற்றி யெல்லாம் பேசுவது என்பதுபற்றி முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தானே அதிகமாகப் பேசி விடாமல் அவரைப் பேசத் தூண்டி, அவர் பேசுவதைக் கேட்கவேண்டும் 

முதலாவது, அவருக்கு எந்த ‘சப்ஜெக்’டில் நாட்டமிருக் கிறது என்பதை அறிந்து கொள்வது முக்கியம். பிறகு அந்த சப்ஜெக்டிலேயே பேச்சைத் தொடரவேண்டும். அவரைத் திருப்திப் படுத்துவதற்காக, அதில் நமக்குள்ள எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அவர் சொல்வதற்கெல்லாம் ‘ஆமாம்’ போட்டுவிடக் கூடாது. அரசியலாயிருந்தால் ‘பிளாட்டோ விலிருந்து சில ‘கொடேஷன்’களையும், ‘பிலாஸபி யாயிருந் தால் விவேகானந்தரின் ‘சிகாகோ ஸ்பீச்சிலி’ருந்து சில பகுதிகளையும் எடுத்துச் சொல்லவேண்டும். 

டெலிபோனில் வந்த செய்தி இவ்வளவையும் தகர்த்து விட்டது. 

கண்களை மூடிய வண்ணம் சிந்தனையில் மூழ்கியிருந்த பார்வதியை “அத்தை! அத்தை!” என்று அழைத்துக் கொண்டு வந்த ராஜாவின் குரல் விழிப்படையச் செய்தது. 

“என்ன ராஜா! தோரணங்களைக் கட்டி முடித்து விட்டாயா?” 

“ஆணியெல்லாம் ரொம்ப ‘வீக்’ அத்தை! கார்ப் பென்ட்டரை எதிரில் பார்த்தேன். தோரணம் கட்டும் வேலையை அவனிடமே ஒப்படைத்து விட்டேன். மூன்று மணிக்கு எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கிறது. நான் போய் வீட்டு ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுகிறேன்” என்றான். 

அந்த முக்கிய வேலை என்னவென்று எனக்குத் தெரியும். மாடினி சினிமாதானே?” என்று கேட்டாள் அத்தை. 


திருவிழாக் கோலம் பூண்டு துலங்கிய அந்தக் கல்லூரி யெங்கிலும் மிதந்து கொண்டிருந்த நாதஸ்வர இசை காற்றிலே கரைந்து கொண்டிருந்தது. 

புதிய ஹாஸ்டல் மண்டபத்துக்கு எதிரே வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் நகரத்தின் முக்கிய பிரமுகர்களும் சீமாட்டிகளும் கல்லூரியைச் சேர்ந்த புரொபஸர்களும், லெக்சரர்களும் அமர்ந்திருந்தனர். இடை வெளியில், கல்லூரி மாணவிகள் அணி அணியாகவும் அலங் காரமாகவும் உட்கார்ந்திருந்தனர். 

கனம் நீதிபதியும், திருவாளர் சேதுபதியும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். மேடையின் பின்னணியில் பரமஹம்சரும் தேவியாரும் காட்சி அளித்துக்கொண்டிருந் தனர். அடர்ந்த ஊதுவத்தியின் நறுமணம் ஹாலைப் புனித மாக்கிக் கொண்டிருந்தது. ராஜா, மேடையின் ஓரத்தில் அடக்கமாக நின்றுகொண்டிருந்தான். 

சபையிலுள்ளவர்கள் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தபோது சங்கோசமும் கூச்சமும் அவனைச் சூழ்ந்துகொள்ளவே, திரைக்குப் பின்னால் மறைந்துகொண்டான். 

முதலில், டாக்டர் குமாரி பார்வதி – சாரதாமணிக் கல்லூரியின் தலைவிதான் மேடைமீது பிரசன்னமானாள். பின்னோடு நீதிபதியும் சேதுபதியும் தொடர்ந்து வந்து நாற் காலியில் அமர்ந்தார்கள். 

‘இறை வணக்கம்’ என்று பார்வதி நிகழ்ச்சி நிரலை எடுத்துப் படித்ததும், பாரதியும் இன்னொரு மாணவியும் மேடைமீது வந்து பாடத் தொடங்கியதும் எல்லோரும் எழுந்து நின்றார்கள். 

அடுத்தாற்போல் தலைவர்களுக்கு மாலை போடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒரு சின்னக் காரியத்துக்காக ராஜா, தன்னைக் காலையிலிருந்தே தயார்ப்படுத்திக் கொண்டிருந் தான். கடைசியில் பிரின்ஸிபால் பார்வதி பேசுவதற்காக எழுந்து நின்றபோது, சபையில் எழுந்த கரகோஷ ஆரவாரம் அடங்க ஐந்து நிமிஷ நேரம் ஆயிற்று. 

“இவ்விழாவுக்குத் தலைமை தாங்க இசைந்துள்ள நீதிபதி அவர்களே! ஹாஸ்டலைத் திறந்து வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள திருவாளர். சேதுபதி அவர்களே!” என்று பேசத் தொடங்கியபோது மாணவிகள் மீண்டும் கை தட்டி மகிழ்ந்தனர். 

முதலில் தலைவரைப்பற்றி நாலே வார்த்தைகளில் சுருக்கமாகப் பேசி அறிமுகப்படுத்தி முடிந்ததும், சேதுபதி யைப்பற்றி ஆரம்பித்தாள். அவருடைய பெயரை உச்சரிக் கும்போதே பார்வதியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. 

“திருவாளர் சேதுபதியைப் பற்றி நான் அதிகம் கூறத் தேவையில்லை. இந்த அழகான ஹாஸ்டலைக் கட்டிக் கொடுத்த பெருமை அவரையே சேரும். முதன்முதலில் நன் கொடை விஷயமாக நான் அவரைக் காணச் சென்றபோது அவர், “இப்போது எனக்கு நேரமில்லை. பின்னால் அவகாசம் கிடைக்கும்போது கூப்பிட்டு அனுப்புகிறேன்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். பெரிய மனிதர்கள் வழக்க மாகக் கூறும் பதில் இதுதான் என்பது என்னைப்போல் நன்கொடை வசூலிக்கச் செல்பவர்களுக்கு நன்கு தெரியு மாகையால், அவர் கூறிய பதிலில் நம்பிக்கை இழந்தவளாய்த் திரும்பி வந்துவிட்டேன். அப்புறம் அவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பவே இல்லை. அதைப்பற்றி நான் ஆச்சரியப்படவும் இல்லை. நாளை என்பதும் அப்புறம் என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம் என்று எண்ணிக்கொண் டேன். உண்மையாகச் சொல்கிறேன்; இவரும் அந்தப் பழமொழிக்கு விலக்கல்ல என்றே எண்ணியிருந்தேன். 

ஆனால், நான் சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்த வாரமே எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு செக்கும் இணைக்கப்பட்டிருந்ததைக் கண்டபோது எனக்கு வியப்புத் தாங்கவில்லை. 

“தங்கள் கல்லூரியில் கட்டப்போகும் ஹாஸ்டலுக்காக இத்துடன் ஒரு சிறு தொகைக்குச் செக் அனுப்பியுள்ளேன். இதைக் கொண்டு ஹாஸ்டல் கட்டட வேலையைத் தொடங்க வும். மேற்கொண்டு ஹாஸ்டலை முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு ஆகும் செலவு எதுவானாலும், அது என்னுடைய தாகவே இருக்கட்டும்’ என்று அதில் எழுதியிருந்தது. ‘அன்று அவர் அனுப்பியிருந்த அந்தச் சறுதொகை எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் ரூபாய்தான்!” 

எவ்வளவோ கூட்டங்களில் பேசிப் பழக்கப்பட்ட பார்வதி, இந்த இடத்தில் மாணவிகள் பலமான கரகோஷம் செய்வார்கள் என்பதை எதிர்பார்த்து, தன் பேச்சைச் சற்று நேரம் நிறுத்திக் கொண்டாள். அவள் எதிர்பார்த்தபடியே கைதட்டல் ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று. அவள் மீண்டும் பேசத் தொடங்கினாள். 

“திருவாளர் சேதுபதியைப்பற்றி நான் புகழப் போவதில்லை. காரணம், ஏற்கெனவே அவரைப்பற்றி அறிந்து கொண்டுள்ள நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகத் தோன்றாது. அத்துடன் இப்போது அவரைப் புகழ்ந்தால், அவர் கொடுத்த நன்கொடைக்காகப் புகழ்வதாகத்தான் என்று எண்ணத் தோன்றும். ஒருவன் தன் தாயாரை தன்னைப் பெற்றவள் என்பதற்காக மதிப்புக் கொடுக்காமல், அவள் லேடீஸ் கிளப் பிரஸிடென்டானவுடன் புகழ்வதைப் போலாகும்!” 

பார்வதி அதற்குமேல் அதிகம் பேசாமல் சேதுபதி அவர் களை அழைத்துக் கட்டடத்தைத் திறந்து வைக்கும்படி கேட்டுக்கொண்டாள். 

திருவாளர் சேதுபதி, காலஞ்சென்ற தமது மனைவி சரஸ்வதி அம்மாளின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துத் தமது கடந்த கால வாழ்க்கையில் நேர்ந்த அனு பவங்களை உருக்கமாகவும் சுருக்கமாகவும் கூறி முடித்து- “என்னுடைய துன்பகரமான நாட்களை யெல்லாம் பகிர்ந்து கொண்டு எனக்காகவே தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த உத்தமியின் பெயரால் அமைந்துள்ள இந்த ஹாஸ் டலைத் திறந்து வைப்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன். இது அவளுடைய இரண்டாவது ஞாபகச் சின்னம். முதலாவது சின்னம் சற்று முன் இங்குவந்து இறை வணக்கம் பாடிய என் ஒரே மகளான பாரதி. 

இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளாகிய உங்களுக்கு நான் அதிகம் எதுவும் கூறப்போவதில்லை. 

கல்வி என்பது தலைமீது பெரிய அறிவு மூட்டையாகச் சுமப்பது அல்ல. அப்படியானால் பெரிய துணி மூட்டையைச் சுமக்கின்ற கழுதையை நல்ல உடை அணிந்திருப்பதாகக் கூற முடியுமா? இல்லை. ஒழுக்கத்தோடும் பண்போடும் வாழ்வதுதான் உண்மையான கல்வி. அத்தகைய கல்வியைத் தான் இக் கல்லூரி அளித்து வருகிறது. மற்றக் கல்லூரிகளுக்கு இது ஒரு வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது. நீங்கள் எல்லோரும் ஒளவையைப் போல் கல்வி அறிவு பெற்ற வர்களாகி, உயர்ந்த பண்புடையவர்களாய்த் திகழவேண்டும் என்பது என் அவா. ஆனால், ஔவையைப்போல் திருமண வாழ்க்கையே வேண்டாமென்று கூறிவிடக்கூடாது! (சிரிப்பு – கரகோஷம் – ஆரவாரம்.) 

குடும்பக் கலைபற்றி எனக்குத் தெரியாது. நான் பழைய தலைமுறையைச் சேர்ந்தவன். நமது நாகரிகம் எல்லாத் துறைகளிலும் நாலடி உயர்ந்திருக்கிறது. முன்னெல்லாம் பாயில் படுத்து உறங்கினோம். இப்போது நாலடி உயரமான கட்டிலில் படுத்து உறங்குகிறோம். முன்னெல்லாம் மணையில் உட்கார்ந்து சாப்பிட்டோம். இப்போதோ மேஜைக்கு முன்னால் நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிடுகிறோம். நாற்காலியும் மேஜையும் போட்டுப் பிரசங்கங்கள் செய்கிறோம். இவ்விதம் எல்லாக் காரியங்களையுமே உயர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவையெல்லாம் உண்மையான உயர் வாகா. முக்கியமாக நமது பாரதநாட்டின் பண்பு உயர வேண்டும். அந்தப் பண்பை வளர்ப்பது குடும்பத்தின் தலைவி களாகப் போகிற பெண்கள் கையில்தான் இருக்கிறது” என்று கூறி முடித்தார். 

சொற்பொழிவு நிகழ்ச்சி முடிந்து, கலை விழா ஆரம்ப மாவதற்குள் மணி எட்டரை ஆகிவிட்டது. பிரின்ஸிபால் பார்வதி முன்வரிசையில் போடப்பட்டிருந்த சோபாக்களில், தலைவர்களை அமரச் சொல்லித் தானும் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். 

கலை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சேதுபதி அடிக்கடி தம் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்வதி கவனிக்கத் தவறவில்லை. மணி ஒன்பதுக்கு சேதுபதி இருக்கையை விட்டு எழுந்து வெளியே புறப்பட்டபோது, குழுமியிருந்தவர்கள் அத்தனை பேருடைய பார்வையும் அவர் மீதே பதிந்தது. 

பின்னோடு எழுந்த பார்வதி எழுந்த பார்வதி அவரை வழி அனுப்பிவிட்டு வந்தாள். 

வாசல்வரை வாசல்வரை சென்று அவர் போன பிறகு விழாவே சாரமற்ற ஒரு சடங்காகப் போய்விட்டது அவளுக்கு. திரும்பி வந்து பழையபடியே தன் இருக்கையில் அமர்ந்தாள். நிலைகொள்ளவில்லை. பாரதியின் குறத்தி நடனம் நடந்துகொண்டுதானிருந்தது. ஆயினும் பார்வதியின் நினைவெல்லாம் அவரைப்பற்றியே சுழன்று கொண்டிருந்தது. அவர் சொற்பொழிவில் குறிப்பிட்ட கருத் துக்களை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தாள். ‘எவ்வளவு உயர்வான பேச்சு! எத்தகைய பெருந்தன்மை யான நோக்கம்! அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும்போது நாமே இமாலயம் போல் உயர்ந்து விட்டதாக அல்லவா எண்ணுகிறோம். அவர் எழுந்து சென்றதும், எவ்வளவு சிறியவர்களாகி விட்டோம்?’ 

அவர் அமர்ந்திருந்த, இப்போது காலியாக வெறிச் சோடிக் கிடந்த அந்த நாற்காலியைப் பார்த்தாள் பார்வதி. சட்டென அவள் முகத்தில் வியப்புக்குறி தோன்றியது. அடுத்த கணம் அவள் இதழ்களில் தவழ்ந்த புன்முறுவல் மாயமாய் மறைந்தது. அவள் உள்ளம் உடனே விமான நிலை யத்தை அடைந்தது. 

அரை மணி நேரத்திற்கெல்லாம் விழா முடிவு பெற்றது. தலைமை தாங்கிய கனம் நீதிபதியும் விடைபெற்றுக்கொண்டு விட்டார். கூட்டத்தினர் ஒவ்வொருவராக வந்து பார்வதியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்கள். 

அமைதியற்ற நிலையில், பரபரக்கும் உணர்ச்சியுடன், தவித்துக்கொண்டிருந்த பார்வதி, அவர்களுக்கெல்லாம் இயந்திரம்போல் பதில் கூறி அனுப்பிவிட்டு, அவசரம் அவசரமாகத் தானே காரை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி வேகமாகச் செலுத்தினாள். போகும் போது அவள் மனம் எண்ணமிட்டது. 

“இப்போது நான் விமானக்கூடத்தில் அவரைச் சந்திப் பேன் என்று அவர் எதிர்பார்க்கவே மாட்டார். என்னைக் கண்டதும் என்ன நினைத்துக் கொள்வார்! நானும் எங்காவது வெளியூருக்குப் போவதாக எண்ணிக் கொள்வாரோ? அல்லது, என்னைக் கண்டதும் வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாக இருந்து விடுவாரோ? நானே அவரை அணுகி விஷயத்தைக் கூறிய பிறகு நிச்சயம் அவர் முகம் மகிழ்ச்சியால் மலரும். ‘ரொம்ப தாங்ஸ்’ என்று குறைந்தது நாலைந்து முறையாவது கூறாமல் இருக்க மாட்டார். 

அவள் விமானக் கூடத்தை அடைந்த சமயம் மணி பத்தேகால்தான். விமானம் புறப்படுவதற்கு இன்னும் பதினைந்து நிமிஷநேரம் இருந்தது. 

பார்வதி உள்ளே போய் அவரைத்தேடியபோது, அவர் லௌஞ்சின் ஒரு மூலையிலிருந்த சோபாவில் அமர்ந்து தமது காரியதரிசியுடன் பேசிக்கொண்டிருந்தார். 

பார்வதி அவர் எதிரில் போய் நின்றபோது அவர் வியப்பை வெளிக் காட்டாமல் லேசாகப் புன்முறுவல் பூத்த படி “வாருங்கள்! நீங்களும் எங்காவது வெளியூர்…” என்று விசாரித்தார். 

“தங்களைப் பார்க்கத்தான்…” என்று கூறினாள் பார்வதி. 

‘அப்படி என்ன முக்கிய விஷயம்? இத்தனை நேரம் கல்லூரியில் தானே இருந்தேன்? அங்கேயே பேசியிருக்கலாமே?’ என்று மனத்திற்குள் யோசித்து எண்ணிக்கொண்டாலும், “என்னைப் பார்க்கவா? அப்படி என்ன முக்கிய விஷயம்?” என்றவர், “அடேடே, நிற்கிறீர்களே! இப்படி உட்காருங்கள்” என்று சோபாவைத் தன் கையினால் தட்டிப் பார்வதியை அமரச்சொன்னார். 

மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்ட பார்வதி, தன் பையிலிருந்த அவர் மூக்குக் கண்ணாடியை எடுத்து, “இதோ இதை மறந்து வந்து விட்டீர்கள்! இது ரொம்ப அவசியமல்லலா? வெளியூருக்குப் போகுமிடத்தில் இது இல்லையென்றால் முக்கிய காரியமே தடைப்பட்டுப் போகும். வேறு எதை மறந்தாலும் பரவா யில்லை. வேறொன்று வாங்கிக் கொள்ளலாம். மூக்குக் கண்ணாடியை நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாதே! அதற்காகத்தான் நானே எடுத்துக்கொண்டு அவசரமாக வந்து சேர்ந்தேன்!” என்றாள். 

மூக்குக் கண்ணாடியை மறந்து வந்து விட்ட விஷயம் சேதுபதிக்கு அப்போதுதான் புரிந்தது. 

“அடாடா! மிக்க நன்றி! நாளைக்கு முக்கியமான டாகு மென்ட்டுகளையெல்லாம் படித்துக் கையெழுத்துப் போட வேண்டும். அந்த நேரத்தில் இது இல்லையென்றால் ரொம்பத் தடுமாற்றமாய்ப் போயிருக்கும். இதன் முக்கியத்தை உணர்ந்து தாங்கள் இவ்வளவு அக்கறையோடு இதைக் கொண்டு வந்து கொடுத்ததற்குத் தங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை” என்றவர், “…ம்…விழா ரொம்பச் சிறப்பாக நடந்தது. ஏற்பாடு அதைக் காட்டிலும் சிறப்பாயிருந்தது” என்றார். 

“தங்கள் பேச்சு விழாவுக்கே சிகரம் வைத்தது போல் அமைந்து விட்டது” என்று பார்வதி பதில் கூறினாள். 

அவர்களிடைய சம்பாஷணை இரண்டு அல்லது மூன்று நிமிடமே நீடித்தது. இதற்குள் “பம்பாய் செல்லும் பிரயாணிகள் விமானத்துக்குச் செல்லவும்” என்ற அசரீறி அறிவிப்பு ஒலித்தது.. 

“நான் வரட்டுமா?” என்று எழுந்து நின்று கைகூப்பி வணங்கி விட்டு விமானத்தை நோக்கி நடக்கலானார் சேதுபதி, பார்வதியின் முகம் ஏன் ஒளியிழந்து உற்சாகமிழந்து போயிற்று? 

“விமானத்தில் போய் அமர்ந்து கொண்ட சேதுபதி, கண்ணாடிப் பலகணியின் வழியாகப் பார்வதியையே பார்த்துக் கொண்டிருந்தார். உறுதி உறைந்த அந்த உள்ளத்தை ஏதோ ஒன்று அசைத்தது. பார்வதியுடன் சிறிது நேரம்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆயினும் அவளை விட்டுப் பிரியும்போது வெகு நாள் பழகிவிட்ட ஒருவரைப் பிரிந்து செல்வதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது அவருக்கு. ஆறுமாதங்களுக்கு முன் முதல் தடவையாக அவள் தன்னைப் பேட்டி காண வந்தது, தன்னிடம் சுற்றி வளைக்காமல் விஷயத்தைச் சட்டென்று தொடங்கிச் சுருக்கமாகப் பேசியது, இன்று மேடையில் தன்னை அறிமுகப்படுத்தியது, முன் யோசனையுடன் மூக்குக் கண்ணாடியை எடுத்து வந்து கொடுத்தது எல்லாமே அவர் உள்ளத்தில் இனிமையான, பசுமையான நினைவுகளாகப் பதிந்து விட்டன. தன்னை அறியாமலே அவளிடம் தன் மனம் லயித்திருப்பதை உணர்ந்தார். ‘அது ஏன்?’ என்று தன்னையே கேட்டுக் கொண்டார். அது அவருக்கே புரியவில்லை. 

விமானம் வெகு உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. தன்னை மறந்த நிலையில் அந்த விமானத்தையே பார்த்துக் கொண்டு சிலையாக நின்றாள் பார்வதி.

குருத்து மூன்று 

மாடிப் படிகளின்மீது வேகமாக வந்து விழும் காலைப் பத்திரிகையின் சலசலப்பு, பக்கத்து வீட்டுப் பசுமாட்டின் கனிந்த குரல், பால் டிப்போ சைக்கிள் மணி ஓசை, பார்வதி வீட்டுக் கடிகாரம் மணி ஆறடிக்கும் சுநாதம் – இவை யாவும் ஒரே சமயத்தில், சற்று முன்பின்னாக நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகள். 

அந்தப் பிரெஞ்சு நாட்டுக் கடிகாரத்தின் ஒலி பார்வதிக் குப் புதிதல்ல. ஆனால் இன்று மட்டும் அதன் ஒலி அவள் செவிகளுக்கு இனிமையாகவும், இதயத்துக்கு இதமாகவும் இருப்பானேன்? 

அந்தக் கடிகாரத்தைக் காணும் போதெல்லாம் பார்வதிக்குத் தன் கல்லூரியில் நீண்ட காலமாகப் பிரெஞ்சு மொழி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் மிஸஸ் அகாதாவின் உருவம் நினைவில் தோன்றும். உடனே, அவள் குடை யைப் பிரித்துக் கொண்டு இடது காலை விந்தி விந்தி நடக்கும் காட்சிதான் கண்ணெதிரில் நிற்கும். 

இந்தக் கடிகாரத்தைப் போலவே தன் கடமையைத் தவறாமல் செய்து வரும் அகாதாவினிடத்தில் பார்வதிக்குத் தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் உண்டு. 

பார்வதி ஏதோ ஓர் உணர்ச்சிக்கு வசமாகி, அமைதி இழந்த நிலையில் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்தாள். 

…முதல் நாள் இரவு விமானக் கூடந்துக்கு விரைந்து சென்று மூக்குக் கண்ணாடியைச் சேதுபதியிடம் கொடுத்த போது “அடாடா, மிக்க நன்றி’ என்று மலர்ந்த முகத் துடன் அவர் வாங்கிக் கொண்டதும், ‘தங்கள் பேச்சு விழாவுக்கே சிகரம் வைத்தது போல் அமைந்து விட்டது’ என்று அவள் கூறியதும். அவர் (தங்கள் ஏற்பாடு மிக மிகச் சிறப்பாயிருந்தது’ என்று அவளைப் புகழ்ந்ததும்… பார்வதியின் உள்ளத்தில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கியிருந்தது. 

உள்ளத்தில் புகுந்துவிட்ட அந்தப் புதுமையான உணர்வை,நெஞ்சத்தை அலைக்கும் சஞ்சலத்தை ஆரம்பத்தி லேயே அழித்துவிட முயன்றாள். ஆனால் முடியவில்லை, சோடா புட்டியின் நெஞ்சுக்குள்ளே புகுந்து ஊசலாடும் கண்ணாடிக் கோலியைப்போல் அந்த உணர்வு’ – அவளையறியாமல் அவள் இதயத்தில் புகுந்து அலைத்துக் கொண்டிருந்தது. அதை அவள் விழுங்கி ஜீரணம் செய்து கொள்ளவோ, வெளியே துப்பி விடவோ முடியாமல் தவித்தாள். 

கண்ணாடியின் முன் சென்று அதில் பிரதிபலித்த தன் உருவத்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந் தாள். தன் பிம்பத்தை அதில் கண்டபோது பார்வதியின் வேதனை அதிகரித்தது, உண்மையாகவே தனக்கு வயதாகி விட்டதா? அதோ இடது காதின் ஓரமாக இரண்டொரு நரைகூடத் தெரிகின்றனவே! மெதுவாகத் தன் இடது காதுப் பக்கமாகத் தடவிப் பார்த்துக்கொண்டாள். ‘ஓ! கண்ணாடியில் இடது புறம் என்றால், தனக்கு அது வலதுபுறம் அல்லவா?’ – மெத்தப் படித்த பார்வதிக்கு, டாக்டர் குமாரி பார்வதிக்கு B.A., B.Ed. PhD (Lonodon)Dip in Anthropology போன்ற நீண்ட பட்டங்களைப் பெற்றிருந்த அறிவாளி பார்வதிக்கு அப்போதிருந்த மனநிலையில் இந்தச் சின்ன விஷயம்கூடத் தெரியாமற் போயிற்று! தனக்குத் தானே அனுதாபத்துடன் ஒரு முறை சிரித்துக்கொண்டவளாய், மேஜை மீதிருந்த காலைப் பத்திரிகையை எடுத்துப் புரட்டி னாள். அதிலிருந்த எழுத்துகள் நீரிலே கரைந்தவை போல் தெளிவின்றித் தெரிந்தன. 

‘ஓ! கண்ணாடி அணிந்து கொள்ளாமல் அல்லவா படிக்கிறேன்?’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு கண்ணா டியை எடுத்துப் போட்டுப் பார்த்தபோது எழுத்துகள் மணி மணியாய்ப் பளிச்சிட்டன. 

‘நிஜமாகவே எனக்கு வயதாகி விட்டதா? இல்லை; இல்லவே இல்லை. வயது, வாலிபம் வயோதிகம் என்பதெல்லாம் நாமாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒரு வரம்புதானே?’ 

மேஜைமீது கிடந்த ஸ்கேல் ஒன்று அவள் கண்ணில் படவே, அதைக் கையில் எடுத்துத் தன் இடது உள்ளங் கையை அதனால் தட்டியபடியே, ‘இதோ இந்த அங்குலம் காட்டு மரச் சட்டத்தில் நாமாகவே கோடுகளைப் போட்டு இதை ஸ்கேல் என்று கூறுகிறோம். இந்தக் கோடுகள் நாம் போட்டவை, இவை இல்லையென்றால் இது வெறும் மரச் சட்டம்தானே?’ 

‘”‘அதைப் போலவே நாமாகவே நம் ஆயுளை வயதுகளால் வகுத்து வரம்பு கட்டிக் கொண்டிருக்கிறோம். அந்த வரம்புகள் இல்லையென்றால். நாம் நாமாகவே தான் இருப் போம் வயதாகி விட்டது என்பதை நாம் எப்போது உணர் கிறோம். நம் வயதைப்பற்றிச் சிந்திக்கும்படியான காரியங் கள் குறுக்கிடும்போதுதான். இப்போது ஏதோ ஓர் உணர்வு என் உள்ளத்தில் புகுந்திருக்கிறது. அந்த உணர்வே என் வயதைப்பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது. இத்தனை காலமும் அந்த உணர்வு என்னிடம் இல்லாததால் என் வயதுபற்றிய எண்ணமே எனக்குத் தோன்றவில்லை. கோலி விளையாடும் ஏழு வயதுச் சிறுவனைக் காணும்போது தெருவில் நடந்து செல்லும் வாலிபன் தனக்கு வயதாகி விட்டதாக எண்ணுகிறான். கல்லூரியில் படிக்கும் மாணவனைப் பார்க்கும்போது காரியாலயத்தில் வேலை செய்யும் குமாஸ்தா தனக்கு வயதாகி விட்டதென்று கருதுகிறான். ஆகவே, ஏதோ ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் வயது பற்றிய சிந்தனை நமக்கு ஏற்படுகிறது. 

புத்தகப் படிப்பிலேயே இதுகாறும் இரண்டறக் கலந்து கிடந்த பார்வதிக்குத் தன் வயதுபற்றிச் சிந்திக்கும் சந்தர்ப் பமே ஏற்படவில்லை. படிப்புக்கும், ஆராய்ச்சிக்கும் வயது இடையூறாக இருப்பதில்லை. உண்மையில் வயது ஆக ஆகத் தான் அறிவு விசாலமடைகிறது. அறிவின் விசாலம் ஆராய்ச் சிக்கு உதவுகிறது. எனவே வயதாகிறதே என்ற எண்ணமே தோன்றுவதில்லை. 

சுருதி சுத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பார்வதியின் வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறுக்கிடவே இப்போது அவள் விழிப்படைந்து வயதைப்பற்றி எண்ணுகிறாள். 

பார்வதி மீண்டும் யோசிக்கத் தொடங்கினாள்.”நீங்கள் ஒளவையைப் போல் அறிவாளிகளாக விளங்க ஆசைப்பட வேண்டும். ஆனால் ஒளவை மாதிரி கலியாணமே வேண்டாம் என்று சொல்லி விடக்கூடாது.” 

இந்த வார்த்தையை அவர் மாணவிகளுக்கு மட்டும்தான் கூறினாரா? அல்லது என்னையும் மனத்தில் வைத்துக்கொண்டு மறைமுகமாகக் கூறினாரா? அப்படியானால் அதன் உட் கருத்து?… பார்வதிக்கு விளங்கவில்லை. 

கீழே, லதா மங்கேஷ்கரின் பாட்டு ஒன்றை ராஜா சீட்டிக் குரலில் இனிமையாகப் பாடிக் கொண்டிருப்பது பார்வதியின் காதில் விழுந்தது. அதிலிருந்தே அவன் பாத் ரூமில் குளித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பார்வதி ஊகித்துக் கொண்டாள். குளிக்கும்போதுதான் அவனுக்குக் குஷியாகப் பாட வரும். ராஜாவின் சீட்டி அன்று அவளுக்குப் பிடித்திருந்தது. 

ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிப்பதன்மூலம் அமைதியைப் பெற எண்ணிய பார்வதி புத்தக அலமாரியைத் திறந்து கைக்கு வந்த ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்தாள். 

சீனப் பேரறிஞர் லின்யுடாங் எழுதிய ‘புயலில் ஓர் இலை’ என்னும் புத்தகம் வந்தது. அதைக் கண்ட பார்வதி, ‘ஏறக்குறைய என் உள்ளமும் இப்போது புயலில் சிக்கிய இலை யாகத்தான் இருக்கிறது’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள். 

புத்தகத்தைப் பிரித்தாள். அது எந்த இடத்தில் பிரிந்ததோ அந்தப் பக்கத்திலிருந்த வரிகளைப் படிக்கத் தொடங்கினாள். 

“மனிதனுடைய முதல் நாற்பது ஆண்டுக்கால வாழ்க்கையில் சோதனைகள் நடக்கின்றன. அடுத்த நாற்பது ஆண்டு வாழ்க்கை அவற்றைப் பரிசீலித்து மார்க்குப் போடுகிறது!” 

பார்வதி சிரித்துக் கொண்டாள். ‘எனக்குப் பரீட்சையே இப்போதுதானே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பரிசீலித்து மார்க்குப் போட நான் மறு பிறவிதான் எடுத்தாக வேண்டும்’. 

அவள் பலகணியின் வழியாக வாசலை எட்டிப் பார்த்த போது விசிறி வாழை குளுகுளு வென்று அழகாக ஓங்கி வளர்ந்து காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருந்தது. ராஜா பெரிய கத்தரிக்கோல் ஒன்றால் அதன் இலைகளைத் துண்டித்துக்கொண்டிருந்தான். 

“ராஜா! ஏன் அந்த இலைகளை வெட்டுகிறாய்?” பார்வதி கேட்டாள். 

“இதில் இரண்டு இலைகள் மட்டும் பழுத்து மரத்தின் அழகையே கெடுக்கிறது, அத்தை!…” என்றான் ராஜா. 

பார்வதி துணுக்குற்றவளாய் நரைத்துப் போன தன் கூந்தல் இழைகளைத் தடவிப் பார்த்துக்கொண்டாள். 

அடுத்த கணமே அவருடைய கௌரவமான தோற்றம், முகத்தில் நிலவிய அமைதி, உள்ளத்தில் உறைந்த உறுதி, கல கலவென்ற குழந்தைச் சிரிப்பு எல்லாம் நினைவில் தோன்றி நெஞ்சத்தை நிறைத்தன. 

கீழேயிருந்து வந்த சாம்பிராணிப் புகையின் தெய்விக மணம், மணி ஒன்பதரை ஆகி விட்டது என்பதை உணர்த்தியது. 

பார்வதி கீழே இறங்கிச் சென்று அவசரம் அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, பகவான் பரம ஹம்சரை யும் தேவியையும் வணங்கிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கலாசாலைக்குப் புறப்பட்டாள். கார் கேட்டைத் தாண்டும் போது அங்கு உட்கார்ந்திருந்த செவிட்டுப் பெருமாள் வழக்கம்போல் எழுந்து நின்று மரியாதை செலுத்தினான். அவளுடைய கார் கலாசாலையின் காம்பவுண்ட் கேட்டை நெருங்குவதற்கும் பிரெஞ்சு மொழி ஆசிரியை மிஸஸ் அகாதா ஒற்றைக் காலை ‘விந்தி விந்தி’ நடந்து கேட்டுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை யாரேனும் காண நேரிட்டால் தங்கள் கைக் கடியாரத்தில் மணி பத்து அடிக்க ஐந்து நிமிஷமா என்று பார்ப்பார்கள். இல்லையேல் திருத்திக் கொள்வார்கள். 

பார்வதியைக் கண்டதும் சற்று உடலைச் சாய்த்து “ஹல்லோ குட்மார்னிங்” என்று கையை ஆட்டியபடியே கூறினாள் மிஸஸ் அகாதா. பார்வதியும் பழக்கப்படி “வெரி குட்மார்னிங்” என்று பதில் வணக்கம் தெரிவித்து விட்டுக் காரைக் கொண்டுபோய்த் தன் அறைக்கு நேராக நிறுத்தினாள். அப்போது அங்கே தயாராக நின்று கொண்டிருந்த அட்டெண்டர் ரங்கசாமி வழக்கம் போல் காரின் கதவைத் திறக்க ஓடிவந்தான். கடந்த பத்தாண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சி இது. 

கல்லூரி எங்கிலும் நிரம்பியிருந்த மாணவிகளின் பேரிரைச்சல், காரின் குழல் ஒலி கேட்டதும், மந்திர சக்தி போல் அப்படியே அடங்கியது. 

ஆபீஸ் அறையில் பார்வதியின் வரவை எதிர்பார்த்துப் பல வேலைகள் காத்துக் கிடந்தன. அவ்வளவையும் செய்து முடிக்க அவளுக்கு ஒரு நாள் போதவில்லை. அடுத்த நான்கு நாட்கள் வரை அவள் ஓய்வு ஒழிவு இல்லாமல் உழைத்தாள். தான் செய்ய வேண்டிய பணிகளை அவள் எப்போதுமே தள்ளிப் போட்டதில்லை. கடமையினின்று வழுவுவதைப் பெரும் குற்றமாகக் கருதுபவள் ஆயிற்றே அவள். 

இடையில் ஒரு மாத காலமாக விழா சம்பந்தமான வேலைகள் குறுக்கிட்டு விட்டதால், அவளால் வழக்கமான கல்லூரி அலுவல்களைச் சரிவரக் கவனிக்க முடியாமற் போய் விட்டது. இதற்கு ஓரளவு அவளுடைய மன நிலையும் காரணமாயிருந்திருக்குமோ என்னவோ? 

தன்னைப் போலவே தன் கல்லூரி மாணவிகளும் நல் லொழுக்கங்களையும் நற்பண்புகளையும் கடைப் பிடித்து நடக்க வேண்டுமென அவள் விரும்பினாள். அந்த உன்னத லட்சியத்துக்காக அவள் கல்லூரி மாணவிகளிடையே மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டாள். மாணவிகள் நேரம் கழித்து கலாசாலைக்கு வருவது, கலாசாலைக்குள் இங்குமங்கும் நின்று பேசிக்கொண்டிருப்பது, படிக்க வேண்டிய நேரத்தில் அரட்டை அடிப்பது, வகுப்புக்கு வராமல் மட்டம் போடுவது போன்ற நேர்மையற்ற காரியங்களைக் காண நேரிடும் போதெல்லாம் அத்தகைய மாணவிகளை அழைத்துக் கடுமை யாக எச்சரித்து அனுப்புவாள். ‘சாரதாமணிக் கல்லூரி மாணவிகள் படிப்பிலே திறமையில்லாதவர்கள் என்று பெயர் எடுப்பதை அவள் பொறுத்துக் கொள்ளத் தயாராயிருந்தாள். ஆனால் அவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று பெயரெடுப்பதை அவள் ஒருபோதும் அனுமதித்ததில்லை. 

பார்வதி வெளிப் பார்வைக்கு எவ்வளவு கடுமையாகத் தோன்றிய போதிலும் அவ்வளவுக்கு அவளுடைய இதயம் மிகவம் இளகியதாயிருந்தது. ஏழை மாணவிகளிடம் அன்பும் ஆதரவும் காட்டி சிற்சில சமயங்களில் அவர்கள் கல்லூரிச் சம்பளம் கட்ட முடியாமல் தவிக்கும்போது அவர்களுக்குப் பொருளுதவி செய்யவும் அவள் தயங்கியதில்லை. 

அன்று வெள்ளிக்கிழமை. வழக்கத்தைக் காட்டிலும் சீக்கிரமே எழுந்து விட்ட பார்வதி, காலைப் பத்திரிகையின் வரவுக்காகக் காத்திருந்தாள். அப்புறம்தான் பக்கத்து வீட்டுப் பசுமாடு கத்தியது. பால் டிப்போ சைகிள் மணி ஓசை கேட்டது. பின்னோடு காலைப் பத்திரிகையும் வந்தது. முதல் காரியமாக அதைப் பிரித்துக் குறிப்பாக ஒரு பகுதி யைத் தேடினாள். அவள் எதிர்பார்த்த அந்தச் செய்தி அந்தப் பகுதியில் இருந்தது. ‘சேதுபதி பம்பாயிலிருந்து திரும்பி விட்டார்’ என்னும் அச் சேதியைப் படித்தபோது பார்வதியின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. தினப் பத்திரிகைகளில் எத்தனையோ காலமாகத்தான் அந்தப் பகுதி வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி ஒரு பகுதி அந்தப் பத்திரிகையில் வந்து கொண்டிருப் பதை அவள் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. 

இப்போது மட்டும் அந்தப் பகுதியில் என்ன கவர்ச்சி வந்து விட்டது! அவர் வந்து விட்டார் என்பதில் தனக்கு ஏன் அத்தனை மகிழ்ச்சி? 

அன்று காலை கல்லூரிக்குச் சென்றதும் பூகோளப் பாடம் நடத்தவேண்டிய ஆசிரியைக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தது.எனவே, அன்று அந்த ஆசிரியை நடத்த வேண்டிய வகுப்புக்குத் தானே போவதென்று முடிவுசெய்து கொண்டாள். சரியாக மூன்று மணிக்கு, குறிப்பிட்ட நேரத்தில் பி.எஸ்ஸி, வகுப்புக்குள் நுழைந்தாள் பார்வதி. நாற்காலியில் அமர்ந்தவள் யாரையோ தேடுவது போல் ஒரு முறை கண்ணோட்டமிட்டாள். அந்த ஒரு பார்வையிலேயே ‘பாரதி வகுப்புக்குள் இல்லை’ என்பதை அறிந்து கொண்டாள். ஆனால் அவள் ஏன் வரவில்லை என்று மாணவிகளை விசாரிக்க வில்லை. அதற்குப் பதிலாக ரிஜிஸ்தரை எடுத்து அதற்கு முந்திய வகுப்பில் பாரதி ஆஜராகியிருக்கிறாளா என்று பார்த்துக் கொண்டாள். அவள் பூகோள வகுப்புக்கு மட்டுமே மட்டம் போட்டுவிட்டுப் போயிருக்கிறாள் என்பதை அறிந்த போது பார்வதிக்கு உள்ளூறக் குமுறியது. 

“பாரதியை எங்கே காணோம்?” மிடுக்குடன் ஒலித்தது பார்வதியின் குரல். 

“தலைவலி” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள் மேடம்” என்றாள் ஒரு மாணவி. 

“ஓகோ, ஜாக்ரபி பிரொபஸர் வர மாட்டாள் என்று தெரிந்ததும் தலைவலி வந்து விட்டதோ? இன்று வெள்ளிக் கிழமையல்லவா? புதுப் படம் பார்க்கப் போயிருப்பாள்.சரி சரி, நாளைக்கு அவள் வரட்டும்; சரியான முறையில் பாடம் கற்பிக்கிறேன்” என்று மனத்திற்குள்ளாகவே கறுவிக் கொண்டாள் பார்வதி.

– தொடரும்…

– விசிறி வாழை, 12வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *