பச்சை மிளகாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 2,607 
 

எவரும் என்னை இலகுவில் கவர்வதில்லை, ஆனால், உங்களுடைய அமைதியான சுபாவமும், அன்பான வார்த்தைகளும் என்னை மிகவும் வசப்படுத்தியிருந்தன. அதனால், எனது எழுத்தைப் பாராட்டி, அதை மெருகுபடுத்துவதற்குச் சில புத்தகங்களைக் கொடுத்து உதவ விரும்புவதாக நீங்கள் சொன்னபோது, நான் மெய்சிலிர்த்துப் போனேன்.

கோடை காலத்தின் ஒரு மாலை நேரம் அது. அன்றுதான் உங்களுடைய வீட்டுக்கு நான் வருகின்றேன். ரெலிபோனிலும் ஈ-மெயிலிலும், இரண்டு வாரங்கள் மட்டுமே நாங்கள் பேசிப் பழகியிருந்தாலும்கூட, ஏதோ நீண்ட காலமாக உங்களை நான் அறிந்திருப்பது போல் என் மனதில் ஒரு பிரமை. நீங்கள் தேடிக்கொண்டிருந்த இரக்கத்தையும் பாசத்தையும் அக்கறையையும் என்னில் பார்த்தது, உங்களுக்கு ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிப்பதாக நீங்கள் சொன்னபோது, இவ்வளவு இனிமையான உங்களை, இரண்டு வருடங்களுக்கு முன்பு, அதுவும் புற்று நோயுடன் நீங்கள் போராடிக் கொண்டிருந்தபோது, உங்களுடைய மனைவியால் எப்படி விட்டுவிட்டுச் செல்ல முடிந்தது என்பது எனக்குப் புரியவேயில்லை.

எங்களைப் பற்றி, எங்களுடைய குடும்பங்களைப் பற்றி, எங்களுடைய சவால்கள் பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். உங்களுடைய குரல் மிகவும் இனிமையாகவிருந்தது. மேலும் எவ்வளவு நேரம் தங்கமுடியும் என்று ஆர்வத்துடன் நீங்கள் என்னைக் கேட்ட போது, உடனே போவதற்கு எனக்கும் மனசு இருக்காததால், இன்னும் ஒரு மணி நேரம் இருக்கலாம் என்றேன், நான். உடனே, நீங்கள் எழுந்துசென்று உங்களுடைய அல்பங்களை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் தந்துவிட்டு, எனக்காகச் சமையல் செய்யப்போவதாகவும் அதுவரை அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும்படியும் எனக்குக் கூறினீர்கள். உங்களுடைய கட்டுரைகளும், விமர்சன மதிப்புரைகளும் கால வரிசைப்படி அழகாக ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்த விதத்தைப் பார்த்து நான் வியந்து போனேன். அதற்கும் மேலாக, நீங்கள் ஒரு ஆண் சமைக்க, நான், ஒரு பெண் அமர்ந்து கதைத்துக் கொண்டிருப்பது, எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அனைவரையும் கவர்வதாக, நீங்கள் நினைக்கும் உங்களுடைய 6 அடி உயரத்தையும், அழகாக நறுக்கி விடப்பட்டிருந்த உங்களுடைய அந்தக் குறும்தாடியையும்விட உங்களுடைய அந்த அன்பான நடத்தை எனக்கு மிக அழகாகத் தெரிந்தது.

எங்களுக்காக நீங்கள் சமைத்திருந்த அந்த நூடில்ஸ், அதிகளவில் பச்சை மிளகாய்களைக் கொண்ருந்தது. அந்த மாதிரியான உறைப்பை என்னால் சாப்பிட முடியாதென்பதால், அந்த மிளகாய்களை நான் விலக்கிக்கொண்டிருந்த போது, சாப்பாடு எனக்குப் பிடிக்கவில்லையோ என நீங்கள் விசனப்பட்டுப் போனீர்கள். சாப்பிடுவதை விட, உங்களுடனான இருப்பே எனக்குப் பிடித்திருந்தது. உங்களுடன் இயல்பாகக் கதைக்கக் கூடியதாக இருந்தது. முடிவில், உங்களுடைய வீட்டை விட்டு வெளியேறுவதற்கு நான் தயாரான போது, ஒரு ஹுக் தர முடியுமா என என்னைக் கேட்டீர்கள். அதை நான் எதிர்பார்க்கவேயில்லை. அந்த ஹுக்கின் போது, என்னை அறியாமலேயே உங்களுடைய கன்னத்தில் எனது முத்தம் ஒன்றும் மெதுவாகப் பதிந்து கொள்கின்றது.

மீண்டும் மீண்டும் பல தடவைகள் நாங்கள் சந்திக்கின்றோம். நேரத்தை ஒதுக்கி, நல்ல சினிமாப் பாடல்களை எனக்காகத் தேர்ந்தெடுத்துப் பதிவுசெய்ததாகக் கூறி, அந்தக் கசட்டை, கசட் பிளேயர் ஒன்றுடன் எனக்கு அன்பளிப்பாகத் தருகிறீர்கள். பின்னர், நானும் உங்களுக்கு சில அன்பளிப்புக்களைக் கொடுக்கின்றேன். ஆனால், அவை, மசாஸ் பண்ணும் அல்லது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் அல்லது தூக்கத்துக்கு உதவும் தைலம் போன்ற நடைமுறை வாழ்க்கைக்குப் பயனளிக்கும் பொருட்களாக இருந்தன.

பின்னர் ஒரு நாள், உங்களுடைய கன்னத்தில் நான் முத்தமிட்டதை ஞாபகப்படுத்தி, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனரீதியாக மட்டுமன்றி, உடல்ரீதியாகவும் வசீகரிக்கப்பட்டிருக்கின்றோம் எனச் சொன்ன நீங்கள், என் முகத்தை உங்கள் கைகளில் ஏந்தி, என் கன்னத்தில் முத்தமிட்டீர்கள். அது எனக்கு கொஞ்சம் அசெளகரியத்தைக் கொடுத்தது. தயக்கத்துடன் அதை நான் உங்களிடம் கூறினேன். அதைக்கேட்ட நீங்கள், சரி, இனி நான் முத்தமிட மாட்டேன் என அமைதியாக கூறிப் பின் நகர்ந்தீர்கள்.

திடீரென எனக்குள் என்ன நடந்ததோ எனக்குத் தெரியாது, நான், இன்னொருவருடைய மனைவி என்பதையும் மறந்து, உங்களை முத்தமிடுகின்றேன், நான். அந்தப் பொழுதில் உங்களுக்குள் என்னை நான் தொலைத்து விட்டேன்… நான் இருந்த இடத்திலிருந்தும், நான் யார் என்பதிலிருந்தும் வெகு தூரம் சென்றிருந்தேன்.

***

மழை பலமாகப் பொழிகின்றது. கண்ணீர் மல்க எழுந்தமர்கின்றேன். என்னுடைய கனவில், உங்களுடைய நண்பர்களுடன் உங்களைக் கண்டேன். என்னை அசட்டை செய்தபடி நீங்கள் போய்க்கொண்டிருந்தீர்கள். நீங்கள் செய்த செயலால் என்னாலும் உங்களுடன் எதுவும் பேச முடியவில்லை.

எட்டு மாதங்களின் முன்பு என்னுடைய முழு உலகமே, சரிந்து தரைமட்டமானது.

அதிர்ச்சியும் வலியும் கொண்ட அந்தத் தருணங்கள் என்னுடைய நினைவில் மீளவும் மீளவும் சுழல்கின்றன. ‘உரு மாற்றம்’ பற்றி என் மாணவர்களுக்குக் கற்பித்து விட்டு, வருகைப் பதிவேட்டை நிரப்புவதற்காக என் மேஜைக்கு வந்த எனக்கு, இனம் தெரியாத ஒரு இலக்கத்திலிருந்து வந்த ஐந்து அழைப்புக்களைத் தவறவிடப்பட்டிருக்கும் செய்தியைச் சத்தமில்லாமல் வைக்கப்பட்டிருந்த என்னுடைய தொலைபேசி காட்டியது. யாராகவிருக்கும் என்ற சிந்தனையைக் குழப்பியது, மீண்டும் வந்த அந்த அழைப்பு.

தன்னை ஒரு பொலிஸ் என அடையாளம் காட்டிய, அந்த நபர், உங்களை எனக்குத் தெரியுமா எனக் கேட்கின்றார். பின்னர், உங்களுடைய மனைவியுடன் உறவைச் சரி செய்வதற்கு நீங்கள் விரும்புவதாகவும், உங்களையோ அல்லது உங்கள் குடும்பத்தையோ, நானோ அல்லது எனது குடும்பமோ, நேராகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் நீங்கள் என்னிடம் சொல்லும்படி கூறியிருப்பதாகக் கூறியவர், நான் தொந்தரவு செய்ததாக நீங்கள் புகார் கொடுத்திருக்கின்றீர்களாம் என்கிறார். என்னுடைய காதுகளை என்னால் நம்பவே முடியவில்லை. நீங்களா அப்படிப் புகார் செய்தது என்று திரும்பத் திரும்ப நான் அவரைக் கேட்கின்றேன். என் கண்கள் குளமாகின்றன, என் குரல் பிசிறுகின்றது. அந்தத் தருணத்தில் என்னை நீங்கள் கொன்றே விட்டீர்கள். நல்லவேளை, அந்தநேரம் நான் கார் ஓடிக்கொண்டிருக்கவில்லை. அப்படி ஓடியிருந்திருந்தால், என்னுடைய பிள்ளைகள் தங்களுடைய தாயை இழந்திருப்பார்கள்.

இங்கே நான் உங்களை நினைத்து வருந்திக் கொண்டிருக்கின்றேன். ஆனால், நீங்கள், அங்கே, உங்களுடைய பேரர்களுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கலாம். அல்லது மனைவியின் மடியில் படுத்திருந்தபடி, உங்களுக்கு மிகவும் பிடித்ததை, உங்களுடைய தலையும் உடலும் வருடப்படுவதை அனுபவித்துக் கொண்டிருக்கலாம்.

வீட்டுக்கு வந்ததும் முதலில் செய்வது நீங்கள் அதைத்தானே! மடியில் படுத்திருந்தபடி, என் கையைத் தூக்கி உங்கள் தலையில் வைத்து உங்கள் தலையை வருடச்சொல்வீர்கள். பின்னர் உங்களுடைய கைகள் என்னை இதமாக வருடிக்கொடுக்கும். அது என் இதயத்தை நிரப்பும். அப்படியான மகிழ்வான கணங்களை, இப்போது உங்களுடைய மனைவியிடமிருந்து அனுபவிக்கிறீர்களா, அல்லது எனக்குச் செய்தவற்றை நினைத்து மனம் நொந்துபோயிருக்கிறீர்களா?

என்னுடைய ஒவ்வொரு சுவாசத்தையும் நீங்கள் புரிந்துகொண்டதாகச் சொன்னது உண்மையாயின், இவ்வளவுதூரம் என்னை வேதனைப்படுத்த உங்களால் முடிந்திருக்குமா? கேள்விகள்தான் நிறைந்திருக்கின்றனவே தவிர, எதற்கும் பதிலில்லை.

உங்களுடைய பல்திறமைகளைப் பார்த்துப் பிரமித்தேன், மிகவும் பெருமைப்பட்டேன். உங்களுடைய படைப்புகளை உலகம் முழுவதும் பரப்ப ஆசைப்பட்டேன். ஆனால், சென்ற முறை இதழில் வெளிவந்த உங்களுடைய கதையைப் பார்த்தபோது, என் கைகள் அதைக் கிழித்தெடுத்தன. இருந்தாலும், வீசியெறிய முடியவில்லை. ஆகவே, என் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதற்காக, அலமாரியின் அடியில் தூரமாக வீசினேன்.

***

ஒரு நாள், “நீ என்னுடன் முதல் முதல் கதைத்த வசனம் என்ன என்பது உனக்கு நினைவிருக்கா?” என நீங்கள் என்னிடம் கேட்டீர்கள். எனக்கோ அது பற்றி எந்தவித துப்பும் இருக்கவில்லை. என்னுடைய முதலாவது நூல் வெளியீட்டு விழாவுக்கு நீங்கள் வந்தபோது, “நான் அழைக்காமலேயே நீங்கள் வந்திருக்கிறீர்கள்!” என்று சொல்லி நான் உங்களை வரவேற்றதாக, எனக்கு நினைவூட்டிய, நீங்கள், “சில வேளைகளில் எங்களை அறியாமல் நாங்கள் சொல்வதற்கு அர்த்தம் வந்துவிடுகின்றது,” என்றீர்கள். இரண்டு வருடங்களின் பின்பும் நான் சொன்னதை அப்படியே நீங்கள் நினைவில் வைத்திருந்ததை பார்த்து நான் அதிசயத்துப் போகின்றேன்.

இன்னொரு நாள், பல்வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த உங்களுக்குக்காக, கோழி சூப் செய்து, அதைக் குழந்தைக்குப் பருக்குவது போல பருக்கிய போது, நான் செலுத்தும் அன்பும் கவனிப்பும் போல உங்களுக்கு எங்கும் கிடைக்கவில்லை, உங்களுடைய ஆவி கூட என்னைத்தான் தேடிக்கொண்டிருக்கும், என்றீர்கள். உங்களுடைய கண்ணில் கசிந்த நீரைப் பார்த்து நான் உருகிப் போகின்றேன். ஒவ்வொரு சின்ன விடயத்தையும் ரசிக்கும் உங்களுடன் கதைப்பது, உங்களைக் கவனித்துக்கொள்வது, உங்களுக்கு மசாஜ் செய்வது, உங்களுக்காகச் சமைப்பது யாவுமே எனக்கு மிகவும் பிடித்துப்போகின்றன.

நடுத்தர வயதுவரை, வெறுமன ஒரு மகளாக, ஒரு சகோதரியாக, ஒரு மனைவியாக, ஒரு தாயாக மட்டுமே இருந்த எனக்கு, ஒரு காதலியாக இருக்கும் சுகம் எப்படியிருக்கும் என்பதை உங்களிடமிருந்தே அறிந்தேன். மொத்தத்தில் உங்களின் காதல் என்னை ஒரு பதின்ம வயதுப் பெண்ணாகவே மாற்றியிருந்தது. வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒருவர் இவ்வளவு ஆழமான காதல் உறவில் விழலாம் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

ஒரு நாள், என் வேலையில் உதவுவதற்காக, வீட்டு வாசலில் பீசாவுடன் வந்து நின்று என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தீர்கள். மறுநாள் எனக்காகச் சாப்பாடு சமைத்து, அன்புடன் எனக்கு ஊட்டிவிட்டீர்கள். எந்த நிறம் எனக்கு அழகாக இருக்கும் எனப் பார்த்து, பார்த்து நீங்கள் வாங்கித்தந்த சீலைகளை நான் உடுத்தும்பொழுது எனக்கு எப்பொழுதும் பாராட்டுக்களே கிடைத்தன. இப்படிப் பல விஷயங்களால் என் வாழ்க்கையை ரம்மியமாக்கினீர்கள்.

சமுதாயத்தில் உங்களுக்கு இருக்கும் அந்தஸ்து உங்களுக்கு முக்கியமானதால், என்னுடன் சேர்ந்து வாழேலாது என நீங்கள் கூறியது, என் மனதை ரணமாக்கியிருந்தாலும் கூட அதைப்பற்றி உங்களுடன் நான் வாதாடவில்லை, ஏனெனில், நீங்கள்தான் எனக்கு மிக முக்கியமாக இருந்தீர்கள், அத்துடன் உங்களை நான் நம்பினேன். பின்னர், காசுக் கஷ்டத்துக்காகவும் கடமைக்காகவும் உங்கள் மனைவியுடன் திரும்பி வாழச்செல்வதாகக் கூறியபோதுகூட என்னால் உங்களை விட்டுவிலக முடியவில்லை. அதற்காக நீங்கள் சொன்னது போல, உங்களிடமிருந்து கிடைக்கும் இன்பத்துடனும் சுகத்துடனும் சந்தோஷமாக இருக்கவும் என்னால் முடியவில்லை. எங்களைப்பற்றி அவவுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே என் இலட்சியமாகவிருந்தது.

அதனால், நீங்கள் மீண்டும் உங்கள் மனைவியுடன் வாழச் செல்ல முன், என்னுடைய சந்தேகங்கள் பற்றித் திரும்பவும் கேட்டேன். பசியாயிருக்கும் பொழுது நான்தான் உங்களுக்குச் சாப்பாடு தந்ததாகவும், மனந்தளர்ந்திருந்த போது, நான்தான் உங்களுக்கு உறுதுணையாக இருந்ததாகவும் சொல்லி, என்னை விட்டுவிட மாட்டீர்கள் என எனக்கு உறுதியளித்தீர்கள். அதுமட்டுமின்றி, உங்கள் மனைவியுடன் இருந்த காலங்களில்கூட, பல வருடங்களாக தனி வாழ்க்கைதான் வாழ்ந்ததாகவும், அவவில் காதலே இல்லை என்றும், என்னைத்தான் ஆழமாக காதலிப்பதாகவும் கூறினீர்கள். இந்த நான்கு வருட வாழ்க்கையையும் எப்படி உங்களால் பொய்யின் மேல் கட்டியெழுப்ப முடிந்தது?

சிலர் உங்களை ஒரு நடிகன் என்றும், வேறு சிலர் உங்களைச் சுயநலவாதி எனவும் சொல்கின்றனர். உங்களுடன் இருந்த அந்த நான்கு வருடங்களில் உங்களைப்பற்றிக் கணிக்க எனக்குத் தெரியவில்லையா என்றுகூட அதிசயிக்கின்றனர். நான் ஒரு வடிகட்டின முட்டாளா, அல்லது நீங்கள், ஒரு சாலச்சிறந்த நடிகரா என்பது எனக்குத் தெரியவில்லை.

உங்களுடைய மனைவியிடம், எங்கள் உறவைத் தெரிவிக்க விரும்பிய என்னை, சரியான நேரம் வரும் பொழுது சொல்வதாகத் தடுத்த நீங்கள், காதலை மறைக்கேலாது என்றும் என்னைச் சமாதானப்படுத்தினீர்கள். இலவங்காத்த கிளி போல் நானும் காத்திருந்தேன். முடிவில் என்னுடைய தோழி மூலம் அவ அதை அறிந்த போது, வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை உங்களைச் சாக வேண்டும் போலத் தூண்டுவதாகச் சொன்னீர்கள். அதனால் நான் உங்களை அடிக்கடி போனிலும் ஈமெயிலிலும் தொடர்புகொண்டபடி இருந்தேன், எனக்கு மிகுந்த பதட்டமாகவும், கவலையாகவும், பயமாகவும் இருந்தது.

எனது அந்தச் செய்கை நான் தொந்தரவு கொடுப்பதாக நீங்கள் பொலிசில் புகார் செய்வதற்கு உங்களுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கின்றது. ஒரு கோணத்திலிருந்து பார்த்தால், எனக்கான குழியை நானே தோண்டி இருக்கின்றேன்.

***

உங்களுடைய மனைவிக்கு எங்களைப்பற்றி தெரிந்தால் என்னவாகும் என நான் கேட்ட பொழுதுகளிலெல்லாம், நீங்கள் குடும்பமாக வாழப்போகவில்லை என்றும், உங்களுடைய வாழ்க்கையில் நான் முக்கியமானவள் என்பதை அவவுக்கு தெரியபடுத்துவீர்கள் என்றும் உங்களுக்கு அவவில் இன்னும் கோபமே இருக்கின்றது என்றும் சொன்னீர்கள்.

பின்னர், நீங்கள் வாழும் விதம் பற்றிக் கேள்விகள் கேட்ட பொழுது, சில விடயங்களைச் செய்யவேண்டி நிர்பந்தப்படுத்தப்படுவதாக சொன்னது என்னை மேலும் விசாரிக்கத் தூண்டியது. அதனால் சந்திக்கும் பொழுதுகள் எல்லாம் சண்டைதான் மிஞ்சியது. அப்படிக் கேட்பதே எத்தனை வலியைத் தந்திருக்கும் என்பது உங்களுக்குப் புரிந்ததா?

கடைசியில், என்னை உதறி விடுவது தான் உங்களுடைய இன்பகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என தீர்மானித்தீர்களா? உங்களுக்கும் உங்களுடைய அந்தஸ்துக்கும் முன்னுரிமை கொடுத்தீர்களேயன்றி, எனக்கும் என் உணர்வுகளுக்கும் ஏற்படும் தாக்கம் பற்றி எந்தக் கரிசனையாவது எடுத்தீர்களா? உங்களுடைய அன்பான சைகள் யாவும் வெறும் வேஷம் தானா?

என் எழுத்துக்களில் கள்ளம் கபடம் இல்லை என பாராட்டினீர்கள் அதுதான் நான். அதைத்தான் நான் உங்களிடமும் எதிர்பார்த்தேன்.

நியாயமற்ற சட்டங்களால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்க நாங்கள் இங்கே வந்தோம். இப்ப, அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்காக இருக்கும் கனடாச் சட்டத்தை நீங்கள் தவறாகப் பயன்படுத்தி, நியாயமற்ற முறையில் என் கைகளைக் கட்டியிருக்கிறீர்கள்.

சில நாட்களில் உங்களை இழந்த வேதனையுடன் எழும்புகின்றேன். மறு நாட்களில் மனம் உடைந்தவளாக, பழி வாங்கவேணும் போலத் துடிக்கின்றேன். நீண்ட நாட்களாக நீங்கள் என்னிடம் திரும்பி வந்து, ஏன் அப்படிச்செய்தீர்கள் என விளக்குவீர்கள் என ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால், இப்போது உங்களுடைய சுயரூபம் அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது. சாகும்வரை என்னிடம் நீங்கள் என்னிடம் வருவீர்கள் எனச் சொன்னதுடன் திருப்திப்பட்டுக்கொண்டு, வைப்பாட்டியாக மட்டும் இருக்க நான் சம்மதித்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது எனப் புரிகின்றது.

***

கண்ணுக்குத் தெரியாத பனித்திட்டுகளுடன் வீதி மிகவும் வழுக்கலாக இருக்கின்றது.

என் கண்கள் மீண்டும் கலங்குகின்றன. இது என்ன காதலா? உண்மையான காதல் இப்படித் துரோகம் செய்யுமா? என்ற ஆய்வெல்லாம் போய், உங்களுடைய மயக்கும் ஆற்றலை, அந்தப் பாண்டித்தியத்தைப் பாவித்து பெண்களை, அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், உங்கள் வலையில் விழுத்த முயற்சிப்பது உங்களுடைய தொடர் முயற்சி என்பதும் அது தான் உங்கள் வேலை என்பதும் நிரூபணமான பின்னர், மிகவும் நம்பிக்கையான ஒரு சினேகிதியிடமும் நீங்கள் வாலாட்டியதை அவளின் வாக்குமூலமாக அறிந்த பின்ன்ர், சுகம் தருவதற்காக ஒரு உடலுக்கும், அக்கறையும் பாசமும் கொண்ட கவனிப்பைத் தர ஒரு உயிருக்கும் திட்டமிட்டு நீங்கள் வலை வீசியிருக்கின்றீர்கள் என்ற என் கணிப்புக் கூடத் தப்பாகிவிட்டது.

இத்தனை கேவலமான ஒரு மனிதனையா, இருந்த அத்தனையையும் இழந்து என் உயிருக்கும் மேலாக நான் காதலித்தேன் என்ற அருவருப்பே இப்போ எல்லாவற்றையும் மேவி நிற்கின்றது! காதலிக்கவில்லை எனத் தெரிந்திருந்தால் நானே என்னை உங்களிடமிருந்து தூர வைத்திருந்திருப்பேன், ஏமாற்றப்பட்டதை எண்ணி நோகவா அல்லது இப்படியாவது தப்பிவிட்டேனே என ஆறவா என எனக்குப் புரியவில்லை.

நன்றி: “எதுவரை” – ஜனவரி 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *