மனசுக்குத் தெரியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 9,615 
 

மல்லிகையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மல்லிகா நினைவுதான் வரும். ஓராண்டு ஈராண்டு அல்ல இருபத்திமூன்று வருடத்திற்கு முன்பு அவள் எனக்குப் பழக்கம். எட்டாம் வகுப்பில்.

எங்கள் பள்ளிக்கு அவள் அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தாள். என் அளவுக்கு கருப்பு. சுருள் சுருளான முடி.. நேர்கோடு போல மூக்கு. பளீர் என்ற சிரிப்பு. மெல்லிய உடல். என் தோளுக்கு மேலே வளர்ந்தவள். அன்பு.. அதன் மறுபெயர்தான் மல்லிகா..

மல்லிகா தூரத்தில் உள்ள ஓர் குக்கிராமத்திலிருந்து பள்ளிக்கு வந்துகொண்டிருந்தாள். எங்கள் பள்ளியில் கல்விச் சுற்றுலா சென்றபோது அவள் பெற்றோரை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக என்னை அனுப்பிவைத்தார்கள்.

கணுக்கால் மண்ணில் பொதியும் பாதையில் சைக்கிளை உருட்டிக்கொண்டு அவள் வீட்டுக்குப் போய் சேர்ந்தேன். அது வீடா…? மண் சுவற்றின் மீது நொறுங்கிப்போன பனை ஓலைகள் அமர்ந்திருந்தன. வீட்டை ஒட்டி ஓர் ஒற்றைப் பனைமரம். அவர்கள் ஊரில் பத்து பதினைந்து வீடுகளுக்கு மேல் இல்லை. ஊரைச் சுற்றி வயல்வெளி.

அப்பா இறந்துபோயிருந்தது தெரியவந்தது. அவளின் அம்மா இவளின் வயதான பிரதி போல இருந்தார். கை கணு முட்டிகள் தோலை துருத்திக்கொண்டிருந்தன. எதற்கு நிறைய எழுதிக்கொண்டு .. அவர்கள் பயங்கர வறுமையில் வாழ்பவர்கள். அன்றைய விவசாயக் கூலி நாளொன்றுக்கு 10 ரூபாய்.. எப்படி அவர்களை ஒப்புக்கொள்ள வைப்பது..? பேருந்து கட்டணத்தைச் செலுத்துங்கள் என்று சொல்ல எனக்கு மனமில்லை.

‘அனுப்பி விடுங்கம்மா.. நா பார்த்துக்கறேன்’ என்றேன்.

‘தம்பி நீங்க எந்த ஊரு’ என்று கேட்டார் அவள் அம்மா. நம்பிக்கையை வரவழைக்க வேண்டும். பணம் பெரிதில்லை. பெண் பத்திரமாக வந்து சேர்வது பெரிது என்று நினைக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.

‘நா குத்தாலத்தாரு மகம்மா’ என்று சொன்னேன். என் அப்பா குத்தாலத்தில் இருந்து பிழைக்க வந்து கொடி நாட்டியவர்.

அந்த அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ‘சரிப்பா.. பணந்தா..’ என்று இழுத்தார். நான் ‘கவலைப்படாதிங்க’ என்று சொன்னேன்.

‘இல்லப்பா.. நடவு வரட்டும்.. நா உங்காச கொடுத்துடுவே’ என்றார் அந்த அம்மா.

இப்படித்தான் நானும் மல்லிகாவும் நெருக்கம் ஆனோம். எனக்கும் மல்லிகாவுக்கும் கடும் போட்டி.. படிப்பில். அவள் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பாள். நான் அதற்கு நேர் எதிர்.

‘எப்புடி உன்னால இப்புடி படிக்க முடியுது?’ என்று ஆச்சரியப்படுவாள்.

எங்கள் பள்ளியில் அப்போதெல்லாம் நீலத்தாவணியும் பாவாடையும் வெள்ளை ஜாக்கெட்டும் பெண்களுக்கு யூனிபார்ம். தேவதை போலிருப்பாள்.

எங்கள் பள்ளி இறுதியாண்டு வந்தபோது குரூப் போட்டோ எடுக்க வேலன் ஸ்டுடியோவிலிருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் ‘பவுடர் போட்டுட்டு வர வேண்டும், நல்ல அழகாக வர வேண்டும்’ என்பது வாத்தியார் உத்திரவு. நான் எப்போதும் போல போய் நின்றேன்.

மல்லிகாவுக்குக் கடுப்பு வந்துவிட்டது. ‘ஆயுசு முழுக்கல்ல இந்தப் போட்டோவை வைச்சிருப்போம்.. போய் மூஞ்ச கழுவிகிட்டு வா’ என்றாள். எனக்குக் கட்டளையிட சிலரால் முடியும். அந்த பட்டியலில் முதலில் நுழைந்தவள் அவள்.

செய்தேன். பேப்பரில் மடித்த பவுடர் கொடுத்தாள். பூசிக்கொண்டேன்.

‘அய்ய.. செவுத்துக்கு வெள்ளையடிச்ச மாதிரி திட்டு திட்டாவா போடுவாங்க’ என்று பவுடர் பேப்பரைப் பிடுங்கி என் முகத்தில் பவுடர் பூசினாள். தனது கர்சிப்பால் முகத்தைத் அழுத்தித் துடைத்துவிட்டாள். என்னைக் கூச்சம் பிடுங்கித் தின்றது. எட்டாம் வகுப்பு கட்டிடத்திற்கும் வாட்டர் டான்கிற்கும் இடையில் நின்றிருந்தோம். ஆனாலும் யாராவது பார்த்துவிடப் போகிறார்கள் என்று அச்சப்பட்டேன்.

‘என்னது.. வெறுங்கையோட..?’ என்றாள்.

‘ம்ம்.. எனக்கு என்னிக்குமே வெறுங்கைதானே’ என்ற என் கண் முன்னே ஒரு வாட்சை நீட்டினாள்.

‘ஏது வாட்ச்?, என்று கேட்டேன்.

‘எனக்கு படமெடுக்க வேணும்னு கேட்டு மாமா கிட்ட வாங்கியாந்தேன். ஆனா எனக்கில்ல.. ஒனக்கு.. கட்டிக்க’ என்றாள். நான் தயங்கினேன்.

என் கையைப் பிடித்து அவளே கட்டிவிட்டாள். பள்ளியில்லாத நாட்களில் வயல் வேலைக்குச் செல்லும் அவள் கைகள் காய்த்துக் கிடந்தன. அதனால் என்ன? அந்த ஸ்பரிசம் சொல்லும் செய்தியை அவள் விரல்களின் காய்ப்பு குறைத்து விடவில்லை.

பொம்மை மிட்டாய்காரன் என் கையில் கட்டிவிட்ட மிட்டாய் வாட்ச்சுக்கு அப்புறம், மல்லி கட்டிவிட்ட வாட்ச்தான் நான் கட்டிய முதல் வாட்ச்.

படமெடுப்பதற்கு நான் மூன்றாவது வரிசையில் நிற்கும்படி ஆனது. மல்லி அவள் உயரத்தின் காரணமாக தரையில் அமர்ந்துகொள்ளும்படி ஆனது. என் உயரத்தை நான் வெறுத்தது அப்போதுதான். கையை முன்புறம் இருந்தவன் தோளில் வைத்து வாட்ச் தெரியும்டி பார்த்துக்கொண்டேன். வாட்ச்சா அது? இல்லை என் மல்லியின் அன்பு..

நாங்கள் பள்ளியைத் தாண்டியபோது மல்லி ஆசிரியர் படிப்புக்குப் போய்விட்டாள். நான் கல்லூரிக்குப் போனேன். அவள் ஆசிரியர் படிப்பு படித்தது பாண்டிச்சேரியில்.. ஊருக்கு வரும்போது என்னைப் பார்க்க வருவாள்.

என் அம்மாவுக்கு நான் ஒரே பிள்ளை. அப்பா தவறிவிட்டார். நிறைய பிரச்சனைகள். படிப்பு முடித்த பின்னர் நான் சிங்கப்பூர் சென்று விட்டேன். ஆட்டோ கேட் இடையே படித்துவைத்தது பிரயோஜனமாக இருந்தது. சிங்கப்பூர் வாழ்க்கையின் தனிமைக்கு எனக்குக் கிடைத்த மருந்தாக மல்லியிருந்தாள். அவளோடு பேசியது, வேளாங்கண்ணி சென்றிருந்தபோது கடற்கரையில் வளைந்து கிடந்த ஆற்றின் கரையில் பஞ்சு மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டது, நானும் அவளுமாக ஒரே வாளியைப் பிடித்துக்கொண்டு பள்ளி தோட்டத்திற்கு நீர் ஊற்றியது என்றெல்லாம் நினைவுகளை ஓட்டிக்கொள்வேன்.

சிங்கப்பூர் போய் சேர்ந்த முதல் இரண்டு ஆண்டுகளில் பொங்கல் வாழ்த்து அனுப்பியிருந்தேன். அவளிடமிருந்து பதில் வரவில்லை.. ஏன் என்றும் தெரியாது. என்ன நிகழ்ந்திருக்கும் மல்லிக்கு..?

பத்தாண்டு முடிந்து ஊருக்குத் திரும்பிய பின்பு முதல் வேலையாக அவள் ஊருக்குச் சென்றேன்.

இரண்டு அதிர்ச்சிகள் கிடைத்தன. ஒன்று அவள்வீடு இருந்த இடமே இப்போது இல்லை. அவள் வீடிருந்த இடத்தை யாரோ வாங்கி வீடு கட்டியிருந்தார்கள். வயல்வெளியெல்லாம் மண் பரப்பு ஆகியிருந்தது. எங்களுடைய ஊர் காவிரியின் கடைமடை.. அப்புறம்… மற்ற அதிர்ச்சியான செய்தி…. அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதாம்.

உண்மையில் நான் பைத்தியம் பிடித்தவன் போல ஆகிப்போனேன். எதிர்பார்த்தேன் என்றாலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. மல்லி காட்டிய அன்பெல்லாம் பொய்யா? அவள் கண்களில் தெரிந்த அந்த ஒளி எனக்கே எனக்கான ஒளியில்லையா? வாட்சைக் கையில் கட்டியபோது கிடைத்த ஸ்பரிசம் பொய்யா சொல்லியிருக்கும்..?

இது என்ன பைத்தியக்காரத்தனம்? அவள் அன்பைச் சொன்னாள்.. ஆனால் காதலைச் சொன்னாளா? அல்லது நான்தான் சொன்னேனா? யாரை நொந்துகொள்ள? எங்கெங்கோ சுற்றிவிட்டு வந்து சேர்ந்தால் அவள் காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று என்ன தலைவிதி?

இல்லை. அவள் அன்பைச் சொல்லவில்லை. அந்த செயலுக்கு, அந்தப் ஸ்பரிசத்திற்கு காதல் என்று பொருள்.. ஆனால், சாதிச் சமூகத்தில் வாழும்போது அவள் எப்படி என்னிடம் காதலைச் சொல்ல முடிந்திருக்கும்? அல்லது அப்படி சொல்லியிருந்தால், அதனை நான் ஏற்றுக்கொண்டிருந்தால்.. அது எப்படி நிறைவேறியிருக்கும்?

நான் சாதாரண குடும்பத்து ஆள்தான். ஆனால், என் மாமன் எம்எல்ஏ. கூலிப்போராட்டம் நடந்தபோது, துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு மிரட்டியவன். என்னிடம் காதலைச் சொல்ல அவளுக்கு எப்படித் துணிச்சல் வரும்?

வெகுநாட்கள் கழிந்த பின்னர் ஜானகியைச் சந்தித்தேன். ஜானகி என்பது ஜானகிராமனை. நானும் அவனும் ஒன்றாக NSS-சில் இருந்திருக்கிறோம். NSS பணிக்குக் கிடைக்கும் சிற்றுண்டி டோக்கன் 10 ரூபாயோடு 4 ரூபாய் சேர்த்துக்கொடுத்து விஜயா பாரில் பீர் குடித்திருக்கிறோம். அவன் காதலித்த என் வகுப்புப் பெண்ணுக்கு நான் தூது சென்றிருக்கிறேன்.

ஜானகி ஹோம் கார்டில் பணியாற்றினான். தெருவின் நிற்பதுதான் வேலை. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவான். அங்கேதான் நான் அவனை மறுபடியும் சந்தித்தேன். அவன்தான் மல்லியைப் பற்றி சொன்னான். சில மாதங்களுக்கு முன்பு அவள் காரைக்கால் வந்திருந்தாளாம். என்னைப் பற்றிக் கேட்டாளாம். முகவரியைக் கொடுத்துவிட்டு சென்றிருந்தாள். லாசுப்பேட்டையில் இருந்த அரசு ஊழியர்கள் குடியிருப்பில் அவளது வீடு என்று முகவரி சொன்னது.

மல்லியைப் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து பாண்டிச்சேரி புறப்பட்டேன். அவள் வீட்டைக் கண்டுபிடிப்பது பெரிய சிரமமாக இல்லை. மூன்றாவது தளத்தில் இருந்தது அவள் வீடு. வெளியே மல்லிகா ஆசிரியர் என்று போர்டிருந்தது. அதற்கு மேலே இருந்த போர்டில் அவளது கணவனின் பெயர் அப்போதிருந்த ஒரு கட்சியின் நிறத்தில் எழுதியிருந்தது.

அழைப்பு மணியை அழுத்திவிட்டு படபடப்புடன் காத்திருந்தேன். எப்படியிருப்பாள் மல்லி? பிள்ளைகள் இருக்குமோ? ஒருவேளை அவள் கணவனும் வீட்டில் இருப்பானோ? போர்டை பார்த்தாள் அவன் வேலைக்குச் செல்பவனாகத் தோன்றவில்லை. எதிரே மேற்குத் திசையில் சூரியன் மறைந்து கொண்டிருந்தான். சில்லென்று காற்று வீசிக்கொண்டிருந்தது. கதவு திறக்க நேரமானதால் மறுபடியும் அழைப்பு மணியை அழுத்தினேன். மூன்றாவது தளம் வரை வளர்ந்திருந்த செங்கொன்றை மரத்தின் இலையொன்றைக் கிள்ளி உருவிக்கொண்டே கதவைப் பார்த்தபடி நின்றேன்.

‘யாரு?’ என்று உள்ளிருந்து மல்லியின் இனிய குரல் கேட்டது.

‘மல்லி… நான்தான்’, என்றேன்.

சற்று நேர மௌனம்.. பின் மறுபடியும் ‘யாரு ரவியா?’ என்றாள்.

நான் மகிழ்ந்துபோனேன் என்று சொல்வது போதுமானதில்லை. ஆனால் எனக்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்தும் என் குரல் நினைவிருக்கிறது!

கதவைத் திறந்தாள். சற்றே திறந்த கதவின் வழியே அவள் உருவம் தெரிந்தது. மாலைச் சூரியனின் மஞ்சள் ஒளியில் அவள் முகம் தெரிந்தது. அவளின் கண்கள் என்னைப் பார்த்தபடியேயிருந்தன. ஓர் அசைவில்லை. சற்றே திறந்த இதழ்கள் மென்மையாக, ஒலியில்லாமல் என் பெயரை உச்சரிப்பதாகப் பட்டது. பாலைவனத்தில் தவித்தவள் தண்ணீரைக் கண்டதுபோல என்னைப் பருகிக்கொண்டிருந்தாள்.

நானும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நடுவகிடு எடுத்து சீவியிருந்தாள். வழக்கம்போல இடதுபுற‌ முடிக்கற்றை மட்டும் விலகி அவள் முகத்தில் விழுந்துகொண்டிருந்தது. கன்ன‌ங்கள் ஒட்டிப்போயிருந்ததால் அவளின் எடுப்பான நாசி இன்னும் எடுப்பாகத் தெரிந்தது. சாதாரண காட்டன் புடவை. ஜாக்கெட்டின் கைகள் தொளதொள‌ப்பாக இருந்தன. சமீபத்தில் இளைத்திருக்கிறாள் என்று பட்டது. என்னவாக இருந்தாலும், என் மல்லி என்றும் தேவலோகக் கன்னிதான்.

‘வாசல்லேயே நின்னு பேசி அனுப்பிட யோசனையா?’, என்றேன்.

‘அய்யோ.. ஒன்னையா.. நீ வரமாட்டியான்னு எத்தனை நாள் அழுதிருக்கிறேன்’ என்று கதவைத் திறந்தவள், ‘வா’ என்று அதே பழைய வாஞ்சையுடன் கையைப் பிடித்து உள்ளிழுத்தாள்.

பிரம்பு நாற்காலியொன்றை இழுத்துப் போட்டாள். ‘எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியல’, என்று நடந்தவள், ஹாலின் கண்ணாடியைக் கடக்கும்போது சற்றே நின்று தலையை பரபரவென்று வாரிக்கொண்டு, ரிப்பன் ஒன்றையெடுத்து குதிரைவால் போலக் கட்டிக்கொண்டாள். உள்ளே சென்றவள் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டுடன் திரும்பினாள். டீப்பாயில் வைத்துவிட்டு அதன் அருகே தரையில் அமர்ந்துகொண்டு ‘சாப்பிடு’, என்றாள்.

‘என்ன ஒரே பரபரபன்னு இருக்கே?’, என்று ஆரம்பித்தேன்.

‘எத்தனை வருஷம் கழிச்சி பார்க்கிறேன்.. நீ எப்பிடி இருப்பேன்னு எத்தன தடவ யோசிச்சிருப்பேன்.. ஆளு அதே வளத்தியோட, கொஞ்சம் வெயிட்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி வந்து நிக்கிற..’

நான் பள்ளியில் படிக்கும்போதே மல்லி சொல்லியிருக்கிறாள். ’போலீஸ் வேலைக்குப் போ.. ஒன்னோட ஒயரத்துக்கு கம்பீரமா இருக்கும்’.

ஆனால், எனக்கு போலீஸ் வேலையின் மீது என்றும் மரியாதையிருந்ததில்லை. பொதுவாக நான் அரசு வேலை எதையும் விரும்பவில்லை. சலாம் போடுவது, குழைவது போன்றவையெல்லாம் எனக்குச் சரிபட்டு வராது.

‘நீ ஏன் மல்லி எளைச்சிட்ட..?’ மல்லி கருப்பு நிற கோவில் சிற்பம்போல இருப்பாள். ஒருவேளை அவளின் கூர்மையான நாசியும் உயரமும் எனக்கு அந்த பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

மல்லியிடமிருந்து பதிலில்லை. வெகு நேரம் ஜன்னல் வழியே தெரிந்த செங்கொன்றை மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் அலை பாய்ந்தன. நெற்றி சுருங்கி விரிந்து சுருங்கியது.

‘என்னாச்சு மல்லி?’

பெருமூச்சு விட்டாள். சற்றே நகர்ந்து சுவற்றில் சாய்ந்துகொண்டாள். சுவர் சுத்தமாக இருந்தது. வழக்கமாக இதுபோன்ற வீடுகளில் சிறு பிள்ளைகளின் சுவர் கிறுக்கல்கள் இருக்கும். நிமிர்ந்து மாட்டியிருந்த போட்டோக்களைப் பார்த்தேன். இவளும் கணவனும் இருக்கும் படம் மட்டும் இருந்தது. இவளின் தாயின் புகைப்படம் மாலையிடப்பட்டிருந்தது.

‘அம்மா எப்ப எறந்ததாங்க?’ என்று உரையாடலைத் துவக்க முயற்சிசெய்தேன்.

‘எனக்கு வாத்தி வேலை கெடச்ச மாசம்’, என்றாள். கண்கள் நிலைகுத்தியிருந்தன. கண்களில் நீர் முட்டியது. மறுபடியும் மௌனம்.

எனக்குப் புரியவில்லை. ஏன் பேச மறுக்கிறாள். எதை எப்படி சொல்வது என்ற தயக்கமா? கேட்டுவிட்டேன்.

‘சரி.. மல்லி.. ஒனக்கு சிரமன்னா நா அதெல்லாம் கேட்கல’ என்றேன்.

‘இல்லடா..ரவி… ஒங்கிட்ட சொல்லனுந்தான் இத்தனை நாள் காத்திருந்தேன். வேறு யார்கிட்டயும் பேச முடியாது.. ஆனா.. எங்க ஆரம்பிச்சு எப்படி சொல்றது..? கொஞ்ச நாளா..? வருஷக் கணக்குல ஆவுதுல்ல… இரு. ஒனக்கு ஒரு காப்பி கொண்டாரேன்’ என்று உள்ளே போனாள். அவள் முகம் கழுவுவது அசைந்தாடிய திரைச் சீலையின் வழியே தெரிந்தது. கண்களில் நீரை அள்ளியள்ளி கொட்டிக்கொண்டாள்.. அப்புறம் பாலைக் கொதிக்கவைத்துவிட்டு அதனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

யோசிக்கிறாள் என்று புரிந்ததால் அவள் வீட்டைப் பார்வையிட்டேன். டீவி ஒன்று இருந்தது. பிரிட்ஜ் இருந்தது. சுற்றில் தொங்கிய படங்களில் இவளின் கல்யாணப் படம் இருந்தது. அப்புறம், இவளது கணவன் மந்திரியொருவன் பக்கத்தில் ஏதோ ஒரு வகையில் இருக்கும் படங்கள் இருந்தன. படுக்கையறைக் கதவு திறந்துகிடந்தது. கட்டிலில் குவியலாகத் துவைத்து காயவைத்த துணிகள் கிடந்தன.

பள்ளியிறுதியாண்டில் கணக்குப் பாடத்தைச் சொல்லித்தர அவள் வீட்டுக்குப் போயிருந்தேன். பனை மர நிழல்தான் நாங்கள் படிக்கும் இடம். சூரியனின் பயணத்திற்கு ஏற்ப நாங்கள் இடம் மாற்றி அமர்ந்துகொள்வோம். மல்லியின் பிறந்த வீடு குடிசை என்றாலும், அவள் வீட்டின் அருகே சின்ன குட்டையிருக்கும். கோடையிலும் கூட அதில் நீர் இருக்கும், தாமரை பூத்திருக்கும். இவள் குட்டையில் நீரோரத்தில் அமர்ந்து பாத்திரம் துலக்குவாள். அப்போதுதான் அவளின் மாமாவை நான் முதலில் பார்த்தேன். எங்கே அவர் படத்தைக் காணோம் என்று தேடினேன். என் தலைக்கு மேல் மாலையிடப்பட்ட அவரின் படமிருந்தது அப்புறம்தான் தெரிந்தது.

அன்று அவர் என்னிடம் கேட்டார், ‘தம்பி.. கோச்சிக்காதீங்க… நீங்க எங்க வூட்டுக்கு வந்தா… ஊரு தப்பா பேசாதா?’

எனக்குப் புரியவில்லை. ‘சொல்லி கொடுக்கத்தானே வந்திருக்கேன்’, என்றேன்.

‘தெரியும் தம்பி.. நீங்க தங்கமான பையன். ஆனா, எங்க சாதி.. பறச்சாதி.. ஊரு ஒன்னு சொல்லிடுச்சின்னா எங்க பொண்ணு வாழ்க்கை கெட்டுடுமில்ல’, என்று தயங்கித் தயங்கிச் சொன்னார்.

அதுதான் நான் கடைசியாக மல்லி வீட்டுக்குச் சென்றது. அப்புறம் இப்போதுதான் இந்த அடுக்குமாடி வீட்டுக்கு வருகிறேன். காலம் எத்தனை மாறுதலைக் கொண்டு வந்துவிடுகிறது!

மல்லி காப்பியுடன் வந்தாள். டீப்பாயில் வைத்துவிட்டு, ‘சாப்புடு ரவி.. வந்திடறேன்’, என்று படுக்கையறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டாள்.

என் அம்மா இறந்தபோது ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வந்திருந்தேன். ஒரு வாரம்தான் தங்க முடிந்தது. அப்போது நான் மல்லியைப் பற்றி விசாரிக்கும் மனநிலையில் இல்லை. அம்மா இறந்தது தெரியாமல் போகாது.. நிச்சயம் வருவாள் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை.

படுக்கையறைக் கதவைத் திறந்துகொண்டு மல்லி வந்தாள். துடைத்தெடுத்த குத்துவிளக்குப் போலிருந்தாள். புதிய புடவைக்கு மாறியிருந்தாள். நெற்றியில் சின்னதாக குங்குமம் வைத்திருந்தாள்.

மறுபடியும் தரையில் அமர்ந்துகொண்டாள். ‘என்னது..? இத்தனை நாற்காலி கெடக்குது..?’ என்றேன்.

‘ஊகூம்’ என்று சிறுபெண் போல தலையாட்டினாள். அவளின் குதிரை வால் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று தாவியது. ‘தரையில உட்காந்துதானே ஒங்கிட்ட படிச்சேன்.. அப்புறம், இங்கிருந்து நீ பேசுறத பார்க்குறது அழகாயிருக்கும்’, என்றாள்..

வயது ஏறுவதும் இறங்குவதும் நிமிடத்தில் நடக்கிறது என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். மனசு குதியாட்டம் போடும்போது வயது குறைகிறது. ஆனால், பெண்கள் அதனை எளிதில் வெளிக்காட்டி விடுகிறார்கள்.

‘சொல்லு.. நீ ஏனின்னும் கல்யாணம் செஞ்சிகில்ல?’, என்று முந்திக்கொண்டாள்.

‘எனக்கு கல்யாணம் ஆகலன்னு எப்படி தெரியும்?’

‘ஒம் பிரண்டு ஜானகி சொன்னார். சரி.. நேரா பதில சொல்லு’. அவள் கண்கள் என் முகத்தைப் பார்த்தபடியிருந்தன.

‘எனக்குப் பிடிச்ச பொண்ணு கெடக்கில..’

‘ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?’

எனக்குப் பேச முடியவில்லை. ‘உன்ன மாதிரி’ என்று சொல்லலாமா? எப்படி எடுத்துக்கொள்வாள்?

‘வாயில கொழுக்கட்டையா இருக்கு?’

கொழுக்கட்டையில்லை. உண்மையிருந்தது. சொல்லிவிடலாம். ஆனால்…

‘சரி… தனியாவே இருந்திட்டியா இத்தனை நாளும்?’

என்ன கேட்கிறாள்? கல்யாணம் ஆகவில்லை என்றால் தனியாகத்தானே இருந்தாக வேண்டும்?

அவள் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். இமைகள் அசையவில்லை. என் முகத்தின் ஒவ்வொரு அசைவும் பதிவாகின்றன என்று என் புத்தி சொன்னது.

தொண்டையச் செருமிக்கொண்டேன். ‘மல்லி.. நான் இன்னிக்கு வரைக்கும் கன்னி கழியாம இருக்கேன்.. ஏன்னா…’

‘ஏன்?’

‘நானெச்ச பொண்ணு கெடக்கில.. பணத்தை வெரட்டிகிட்டு சிங்கப்பூர் போனேன். பணம் வந்துடிச்சி ஆனா.. பணத்தை தேடும்போதுதான் எனக்கு யாரைப் பிடிக்குதுன்னு தெரிஞ்சிது… அதுக்குல்ல அந்தப் பொண்ணு போயிட்டா..’

‘யாரு அந்தப் பொண்ணு?’

என்ன இது? அவளைக் கேள்விக்கேட்டு குடையலாம் என்று வந்தால் அவளல்லவா என்னைக் குடைகிறாள்.

‘சொன்னா கோச்சிக்க மாட்டியே…’

‘சொல்லு இரவி… சொல்லு..’

‘நீதான்.’

அவளிடம் எந்த அதிர்ச்சியும் இல்லை.. அசையாது இருந்தாள்… கண்களில் கண்ணீர் பெருகியது. அப்படியே நகர்ந்து என் அருகே வந்தாள். என் தொடையில் தலை சாய்த்துக்கொண்டாள்.. ‘தெரியும்’ என்றாள்.

கண்ணீரின் வெப்பம் என் தொடையில் தெரிந்தது. அவள் தலையைக் கோதிவிட கைகள் துடித்தன. ஆனாலும் பேசாது அமர்ந்திருந்தேன்.

எப்படி இவளைத் தீண்ட முடியும்? எனது மல்லி என்று தெரிந்தாலும்.. எப்படித் தீண்ட முடியும்?

வாழ்க்கையின் விசித்திரத்தை என்னவென்று சொல்வது… நான் ஏன் சிங்கப்பூர் செல்ல முடிவெடுத்தேன்? அதற்கு முன்பு ஏன் இவளைச் சந்திக்க முடியாது போனது? எந்த இழை எங்களை இத்தனை நாள் பிணைத்து வைத்திருந்தது? எந்தத் தடைகள் இத்தனை நாள் எங்களை விலக்கி வைத்திருந்தன?

நான் நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்துகொண்டு கைகளைக் கட்டிக்கொண்டேன். பரபரவென்று நீளும் என் கைகளைக் கட்டுப்படுத்த எனக்கு வேறு வழிதெரியவில்லை.

எவ்வளவு நேரம் போனதென்று தெரியவில்லை. மல்லி அழுது முடித்திருந்தாள்.

‘நீ வருவேன்னு காத்திருந்தேன்… உன்னோட அம்மா செத்தது தெரியும். ஊருல உனக்கு யாரும் இல்லன்னும் தெரியும். ஆனா, எப்படியும் வருவேன்னுதான்… ஒன்னோட பிரண்ட்ஸ்கிட்ட என்னோட அட்ரஸ் கொடுத்தேன்’.

‘நான் வருவேன்னு எப்படித் தெரியும்?’ என் குரல் நடுங்கிக்கொண்டிருந்தது.

‘தெரியும்.. என்னோட மனசுக்குத் தெரிஞ்சது’

மனம் விசித்திரமான ஒன்று. தன்னுடைய தேவைகள் நிறைவேறும் என்று தனக்குத்தானே உத்திரவாதம் கொடுத்துக்கொள்ளும். சில சமயம் அது பலிக்கலாம்.. பலிக்காமலும் போகலாம். ஆனால், நேசத்தைப் பொறுத்தவரை மனது சொன்னது பலிக்கும். ஏனென்றால் மனதுக்கு உலகத்தின் நடப்பு விதிகள் புரியாது. அன்பின் விதிகள் மட்டுமே புரியும். அன்பின் விதிகள் இயங்கத் துவங்கும்போது உலக விதிகள் செயலற்றுப் போகும்.

‘என்னோட மனசுக்கும் தெரிஞ்சுது.. ஆனா.. உனக்கு என்ன நடந்திச்சுன்னு தெரியல’, என்னுடைய குரல் எனக்கே கேட்காத அளவுக்கு மென்மையாகியிருந்தது.

அவள் அருகே இருந்தாலும் தூரத்தில் இருப்பது போலத் தோன்றியது. அதேசமயம் வெகு தூரத்தில் இருக்கும் அவள் வெகு அருகில் இருப்பதாகப் பட்டது.

மல்லி நிமிர்ந்தாள். எழுந்து சென்று ஹாலின் மூலையில் இருந்த கதவொன்றைத் திறந்தாள். சின்னதாக சாமியறை இருந்தது. அவளுக்கும் பிடித்த அம்பகரத்தூர் பத்ரகாளியின் படமொன்று மட்டுமிருந்தது.

‘இந்த அறையை நான் எப்போதாவது திறப்பேன். ரொம்பவும் சகிக்க முடியாதப்ப திறப்பேன். நீ சொன்ன மாதிரி சாமியில்லன்னு ஆயிடுச்சி.. இதெல்லாம் நடந்தப்ப நீ சொன்ன மாதிரி சாமியில்லன்னு முடிவுக்கு வந்துட்டேன்… ஆனா.. வலி தாங்காதப்ப யாருகிட்ட சொல்ல முடியும்?’

‘என்ன ஆச்சி மல்லி.. ஏன் ஊரைவிட்டு வந்த? அம்மாவுக்கு ஒன்னோட மாமாவுக்கு என்ன ஆச்சி?’, எனக்கு அதற்குமேல் அவளின் துன்பம் சூழ்ந்த முகத்தைப் பார்க்க முடியவில்லை.

காளி படத்தின் முன்னிருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசியபடி வந்து என் காலடியில் அமர்ந்தாள். அப்புறம் தடையின்றி பேச ஆரம்பித்தாள். உன்மத்தம் பிடித்தவள் போல தன் கதையைச் சொன்னாள்.

நான் அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தேன். இப்படியெல்லாமா என் மல்லிக்கு நிகழ்ந்தது? இப்படியெல்லாமா அதிகாரம் படைத்த மனிதர்கள் என் மான் குட்டியை வேட்டையாடினார்கள்…? எப்படித் துடித்திருப்பாள் என் கண்மணி…

கதையைக் கேட்ட என்னால் வெகு நேரம் பேச முடியவில்லை. ஆனால், சில கேள்விகள் இருந்தன. ‘என்னோட பொங்கல் வாழ்த்து கெடைக்கவேயில்லையா?’

‘கெடச்சுது.. பத்திரமா வைச்சிருக்கேன்.. என்றும் உன்னுடையன்னு எழுதி, அத அடிக்கோடு போட்டு வச்சிருந்த..’ என்றபடி எழுந்து சென்று படுக்கையறையில் ஏதோ ஒரு பெட்டியைத் திறந்து கொண்டுவந்து காட்டினாள். இரண்டு கருப்புப் பட்டாம் பூச்சிகள் சேர்ந்து பறக்கும் படம் கொண்ட அட்டையது. சற்றே மங்கியிருந்தாலும் பளிச்சென்றிருந்தது.

‘இந்த வாழ்த்து வரும்போதுதான் பிரச்சனையில மாட்டிக்கிட்டிருந்தேன். அழுக்காகியிருந்தேன்… ஒனக்கு நான் என்ன பதில் போடறதுன்னு யோசிச்சு யோசிச்சு… அழுது… அழுது.. அப்புறம் விட்டுட்டேன்’.

அவள் என் முகத்தைப் பார்க்காது அந்தப் பட்டாம்பூச்சிகளைப் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தாள்.

இரவு மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கு மேல் அங்கேயிருக்க முடியாது. ‘போறேன் மல்லி.. உன் வீட்டுக்காரன் எப்போ வருவான்?’.

‘வரும், சமயத்தில அவ, எஞ்சக்களத்தி.. வீட்டுக்குப் போயிடும்’, என்றாள்.

‘அதுசரி, ஒனக்கு ஏன் பிள்ளைங்க இல்ல?’ என்று என் அடுத்த சந்தேகத்தைக் கேட்டேன்.

‘எதுக்கு? மிருகத்துக்குப் போயி புள்ள பெத்தா மிருகம்தான் வரும். வேணான்னு தடுத்துட்டன்’ என்றாள் இறுக்கமாக.

என்ன வாழ்க்கை இது? வனத்துக்குள்ளிருந்து வெளியே வந்த மான் குட்டியைச் சின்னாபின்னமாக்கிய நாய்கள்போல மனிதர்கள் திரியும் சமூகம் என்று தோன்றியது.

அவளிடம் விடைபெற்று புறப்பட்டேன். மாடிப்படியில் கால் வைத்தபோது அவள் கேட்டாள், ‘மறுபடியும் வருவியா ரவி?’

‘நிச்சயம்… அதுவும் சீக்கிரம்’ என்று சொல்லிவிட்டு இறங்கினேன். நான் தெருவின் நடந்தபோது மூன்றாவது மாடியில் அவள் நின்று பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது.

லாசுப்பேட்டை குடியிருப்பு வீதி சரிவாக இருக்கும். வேகமாக நடந்த என்னை ஓட்டத்திற்கு மாற்றியது அந்த சரிவு. என் மனதுக்குள் ஓராயிரம் கேள்விகள் இருந்தன. நிதானமாக யோசிக்க வேண்டும். சரியான முடிவுக்கு வர வேண்டும். வர முடியுமா?

முதலில் தென்பட்ட பாரில் நுழைந்து அமர்ந்தேன். பாண்டிச்சேரியின் பார்கள் குப்பைக் கிடங்காக நாற்றமெடுக்காதிருக்கும். மெல்ல மது அருந்திகொண்டே யோசித்தேன். மல்லி சொன்ன சோகக் கதையின் அத்தியாயங்களை அசைபோட்டேன்.

இந்தத் துயருக்கு நானும் காரணம் என்று பட்டது. நான் பணம் சம்பாதிக்கவென்று சிங்கப்பூர் போயிருக்கக் கூடாதோ..? அந்த முதல் இரண்டு ஆண்டுகளில்தான் மல்லி தொலைந்து போயிருக்கிறாள். ஒருவேளை நானிருந்தேன் என்றால்… வேறு மாதிரி நடந்திருக்குமோ..?

தலை கனத்தபடி ஊருக்கு வந்து சேர்ந்தேன். நான் ஆரம்பித்திருந்த ஸ்டேஷனரி கடை வேலைகளில் மூழ்கினேன். இரண்டு நாட்களில் மல்லியிடமிருந்து கடைக்குப் போன் வந்தது.

‘நலமா?’, என்று கேட்டாள். நான் வந்து போனது தெரிந்து அவள் கணவன் அடி பின்னிவிட்டானாம். எதிர் வீட்டுக்காரர்கள் அவனிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘சாயங்காலம் ஆறு மணியிலேந்து ஒம்பது மணி வரைக்கும் ஒர் ஆணும் பெண்ணும் பூட்டிய வீட்டிற்குள் என்ன செய்திருப்பார்கள்?’, என்று கேட்டிருக்கிறான்.

மல்லி அழுதாள்… எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘கூப்பிடுகிறேன் மல்லி’, என்று வைத்துவிட்டேன். மறுபடியும் என் மனது வலித்தது. இத்தனை சின்னபுத்திக்காரனிடம் என் மல்லியை எப்படி விட்டுவைப்பது?

சிங்கப்பூரில் இருந்தபோது என்னை என் நண்பர்கள் வற்புறுத்தி பாலியல் விடுதிக்கு இட்டுச்சென்றார்கள். அந்த உலகம் எனக்கு வெறுப்பேற்றியது. ஆண் பெண் உறவென்ன உடல் உறவா? நான் வெறுமனே திரும்பிவந்து நண்பர்களின் கிண்டலுக்கு ஆளானேன்.

எப்படி அவனால் அப்படி பேசமுடிந்தது? மனைவி தாயாகவும் இருக்கிறாள் என்பது எப்படி மறந்துபோனது?

யோசிக்க யோசிக்க மல்லிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று தோன்றியது.. என்ன செய்யலாம்? மல்லியை மனைவி ஆக்கிக்கொள்ளலாம் என்று சட்டென்று தோன்றியது.. அது சரிதானா? மல்லி ஒப்புக்கொள்வாளா? அவளின் கணவனாக இருக்கும் நாய் என்ன செய்யும்?

நாட்கள் செல்லச் செல்ல என் எண்ணம் உறுதிபெறலாயிற்று. ஒருநாள் மல்லியை அழைத்துச் சொன்னேன். தொலைபேசி வெகு நேரம் மௌனமாக இருந்தது.

‘மல்லி.. மல்லி’ என்ற நான் அழைத்துக்கொண்டேயிருந்தேன்.

‘நான் அழுக்கு.. என்னோட இரவிக்கு அழுக்க எப்புடி கொடுக்கிறது?’. அந்தப் பக்கம் அவள் கதறி அழுதுகொண்டிருந்தாள். என் மனக்கரத்தை நீட்டி அவள் தலையைத் தடவி விட்டேன். என் மார்பில் அவள் கண்ணீரை வாங்கினேன்.

‘மல்லி, மனசுலதான் அழுக்குப் பிடிக்கும்… ஒடம்புல பிடிக்காது.. இத்தனை நாளிலயும் என்ன நெனச்சிக்கிட்டி இருந்த ஒன் மனசுல அழுக்கில்ல’, என்றேன்.

‘நடக்குமா ரவி?’ என்ற அவளின் வார்த்தைக் காதில் விழுந்து நிம்மதியானேன். ‘நடக்கும் நடக்க வைப்பேன்’, என்று அழைப்பை முடித்தேன்.

அப்புறம் பதினைந்து நாட்களுக்கு மேலானது அனைத்து வேலைகளையும் முடிக்க.

அவளுடைய வேலையை காரைக்காலுக்கு மாற்றுவது.. அவள் தங்க ஒரு விடுதி… விவாகரத்துக்கு ஒரு வக்கீல்… அனைத்தையும் செய்து முடித்துவிட்டு பேருந்து ஏறினேன்.

பாண்டி பேருந்து நிலையத்தில் விழுப்புரம் பேருந்து நிறுத்தும் இடத்தில் அவளைக் காத்திருக்கச் சொல்லியிருந்தேன். இருந்தாள்.

எனக்குப் பிடித்த வெளிர் நீல புடவையில் வெள்ளைப் பூக்களோடு தேவதையாகக் காத்திருந்தாள். நெருங்கியவுடன், ‘இரவி போயிடலாம்… என் வூட்டுக்காரன் பெரிய ரவுடி’ என்றாள். அவள் முகத்தில் பயம் உட்கார்ந்திருந்தது.

‘சரி வா.. அதுக்கு முன்னடி ஒரு டீ சாப்பிடலாமா?’

‘இல்லடா.. ஓடிடலாம்’ என்று கெஞ்சலாகப் பார்த்தாள். ஓடிப்போகும் வயதா இது? 31 வயதில் ஓடிப்போகும் முதல் காதல் ஜோடி நாங்களாகத்தான் இருக்க வேண்டும்.

சென்னையிலிருந்து நாகை செல்லும் விரைவுப் பேருந்து வந்தது. ஏறி அமர்ந்து கொண்டோம். மல்லி ஜன்னலை மூடிக்கொண்டாள். அவள் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

’என்ன மல்லி?’

‘அவன் பெரிய ரவுடிடா.. அந்த நாயி கௌரவத்துக்காக எதையும் செய்யும்..’, என்றாள்.

அவள் வலது கரத்தை என் இடது கரத்துக்குள் பொதித்துக்கொண்டேன்.

‘அவன் ஊருக்கு நம்மள தேடிவந்தா என்ன செய்வ?’ என்று என் முகத்தைப் பார்த்தாள்.

சிரித்தேன். ‘அப்பாவின் பாளை சீவும் அறுவாவும் மட்டை அறுவாவும் வீட்ல இருக்கு.. ரவுடி உயிருக்குப் பயந்தவன். வரமாட்டான்’, என்றேன்.

அவளுக்குப் பயம் போகவில்லை. ஒரு வேளை எனது கொலை வெறியை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை போலும். குனிந்து தலையைத் தன் மடிக்குள் வைத்துக்கொண்டாள்.

பேருந்து புறப்பட்டது. நகரத்திலிருந்து வெளியேறியது. முன் சீட்டில் அமர்ந்திருந்ததால் டிக்கெட் உடனே எடுத்தாயிற்று. அரியாங்குப்பம் பாலத்தைத் தாண்டியபோது தென்னை மரங்களின் இடையே தெரிந்த நீர்ப்பரப்பில் முழு நிலவு உதயமானது..

இருள் சூழ்ந்த சூழலில் மல்லியின் முகம் சீதையின் முகம் போல நிலவொளியில் அடிக்கோடிடப்பட்டிருந்தது. என் கைகளை இறுக்கிக்கொண்டாள்..‘இரவி நான் தூங்கனும்’, என்றாள்.

‘நைட்டு தூங்கலியா?’ என்றேன்,

‘நேத்தி மட்டும் இல்ல… பல நாளா… பல வருஷமா தூங்கல’ என்றபடி அவளின் வலது கையை என் மார்பின் குறுக்கே போட்டு இடது கையை என் முதுகின் பின்னே செலுத்தியபடி மார்பில் சாய்ந்தாள். பேருந்தின் அசைவுக்கு ஏற்ப அவள் தூங்கிப் போனாள். அவளின் தலையைக் கோதி விட்டேன். உச்சந்தலையில் முத்தமிட்டேன்.

காரைக்கால் வந்து சேரும் வரை அவள் என்னை விட்டு விலகவில்லை. நானும்தான். ஒருவரின் வசதிக்கேற்ப மற்றவர் சரி செய்துகொண்டு இறுக்கமான அணைப்பில் இருந்தோம்.

ஆண்டுகள் கடந்துவிட்டன. இறுக்கமும் இணக்கமும் இப்போதும் தளரவில்லை…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *