நல்லதோர் வீணை செய்து

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 7, 2023
பார்வையிட்டோர்: 2,967 
 

காலையில் பிடித்த மழை, கொஞ்சமாவது நிற்க வேண்டுமே? இல்லை. கொட்டித் தீர்த்துவிடுவேன் என்பது போல் விடாமல் பெய்து கொண்டிருந்தது. தார் பூசிய சுவர் போல் வானம் மேகங்களால் இருண்டு கிடந்தது. மலைக்குளிர் வேறு சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்?

“ஏன் இங்கு வந்து மாட்டிக் கொண்டோம்?” என்று ஆகிவிட்டது எனக்கு. தேயிலை எஸ்டேட்டின் நடுவில் இடிந்த அந்தச் சின்னஞ்சிறிய தகரக் கொட்டகை இருந்தது. அதில் ஒழுகிய இடம் போக மிஞ்சிய ஒரே ஒரு மூலையில் நானும் டிரைவரும் ஒண்டிக் கொண்டு நின்றோம்.

உடுமலைப் பேட்டையிலிருந்து தீர்த்தங்கரர் பாறையையும் திருமூர்த்தி மலையையும் பார்த்துப் போகலாமென்று ஜீப்பில் புறப்பட்டிருந்தோம். நானும் டிரைவருமாக இரண்டே இரண்டு பேர்தான். திருமூர்த்தி மலையைப் பார்த்து முடிந்ததும் மலையில் தேயிலைத் தோட்டங்கள் இருக்கும் பகுதிகளை சென்று பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை உண்டாயிற்று. என் விருப்பத்தை டிரைவரிடம் கூறினேன்.

“மூணாறு போகிற ரோட்டிலே அதிக தூரம் போனால்தான் எஸ்டேட்டுகளைப் பார்க்க முடியும்! இப்பொழுதே மழை தூறுகிறது. பெரிசாகப் பிடித்துவிட்டால் அங்கே போய்த் திரும்புவது கஷ்டமாச்சே?” என்று பதில் சொன்னான் அவன்.

“பரவாயில்லை அப்பா! போய்விட்டுத்தான் வருவோமே. இதற்கென்று தனியாக இன்னொரு நாளா புறப்பட்டு வரப் போகிறோம்? மழை இலேசாகத்தான் தூறுகிறது” என்றேன் பிடிவாதமாக.

“சரி, நீங்கள் ரொம்பச் சொல்றீங்க. எப்படி மாட்டேன்கிறது?” என்று அரைகுறை மனத்தோடு புறப்பட்டான் அவன்.

அந்த டிரைவருக்கு ஜோசியம் தெரியுமோ என்னவோ? இப்போது அவன் சொன்னது உண்மையாகிவிட்டது. எங்கள் ஜீப் எஸ்டேட்டுகள் இருக்கும் மலைப்பகுதியை அடைந்தபோதே மழை பலமாகப் பிடித்துக் கொண்டுவிட்டது. அப்போது காலை பதினொரு மணிக்குமேல் இருக்கும். ஜீப்பை நிறுத்திவிட்டு அந்தத் தகரக் கொட்டகையில் ஒண்டினோம். மழை நிற்கவே இல்லை மாலை ஆறேகால் மணி ஆகிவிட்டது. என் மணிக்கட்டில் கடிகாரமும், காலடியில் ஒழுகின மழைத் தண்ணீ ரும் வஞ்சகமின்றி ஓடிக் கொண்டிருந்தன.

டிரைவர் என்னை விழித்து விழித்துப் பார்த்தான். வாயால் சொல்லிக் காட்ட முடியாததைக் கண்களால் நிறைவேற்றிக் கொண்டிருந்தான் அவன். யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட மாதிரி ஆகிவிட்டது என் நிலை.

“இது என்னாப்பா சனியன் பிடித்த மழை? பிரளயத்துக்கு வர்ஷிக்கிறது போலப் பொழிந்து தள்ளுகிறதே! என்ன வந்தாலும் சரியென்று இப்படியே ஜீப்பை ஓட்டிக் கொண்டு கிளம்பிவிட்டால் என்ன?”

“நடக்கிற காரியமாப் பேசுங்க. இந்த மழையிலே ஜீப் நின்ற இடத்திலேயிருந்து ஒரு அங்குலம்கூட நகராது. மலை ஓடைகளிலே தண்ணீர் கரை நிமிர ஓடிக் கொண்டிருக்கும். ரோடு தண்ணீர் அரித்து மேடும் பள்ளமும், சேறும் சகதியுமாக இருக்கும். இந்த நிலையிலே இனிமேல் ஒன்றும் செய்வதற்கில்லை.”

“என்னப்பா! பெரிய குண்டாகத் தூக்கிப் போடுகிறாயே, பசியும் பட்டினியுமாக இரவு முழுவதும் இந்த நட்ட நடுக்காட்டில் ஓட்டைத் தகரக் கொட்டகையிலா தங்கியிருக்க வேண்டும்? இது துஷ்ட மிருகங்கள் பழகுகிற இடமாயிற்றே?”

“நான் சொன்னேனே, நீங்கள் கேட்டீர்களா? போய்த்தான் ஆகவேண்டுமென்று ஒன்றைக் காலிலே நின்றீர்கள். புறப்பட்டு வந்தாயிற்று. இனிமேல் வருவதை அனுபவிக்க வேண்டியதுதான்…”

அவன் தன் ஆத்திரத்தைப் பேசித் தீர்த்துக் கொண்டான். நான் தகரக் கொட்டகை வாசலில் வந்து பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே இருளின் ஆட்சி. தங்களுக்கும் இருளுக்கும் அதிக வேறுபாடின்றித் தொலைவில் கருநீல மலைச்சிகரங்கள் இருளோடு இருளாக ஐக்கியப்பட்டிருந்தன. மலைப்பகுதியில் சாதாரணமாகவே ஐந்து ஐந்தரை மணிக்கே இருண்டுவிடும். மழை மூட்டத்தினால் அப்போது மணி ஏழுகூட ஆகாமலிருந்தும் இருள் கனத்துப் போயிருந்தது. ஜீப்பின் அருகே நெருங்கிப் பார்த்தேன். உட்காருகிறஸீட்டுகள் உட்பட எல்லாம் சொட்ட நனைந்து போயிருந்தன.

ஜீப்பின் முன்புறத்து ஸீட்டை உற்றுப் பார்த்தவன் சட்டென்று திடுக்கிட்டுப் போய், நாலடி பின்னுக்கு நகர்ந்தேன். பயம் மனத்தைக் கவ்வியது. மயிர்க்கால்கள் மேலே எழும்பிக் குத்திட்டன.

“ஏய் டிரைவர் ! இங்கே வா, அந்த டார்ச் லைட்டை இப்படிக் கொண்டா, இது என்னவென்று பார்ப்போம் !” என் குரல் நடுக்கத்தினால் மிரண்டு குழறிப் போயிற்று.

“என்னது? என்ன, அங்கே? இதோ வந்துவிட்டேன்!” டிரைவர் ஓடிவந்தான். நடுங்கும் கைகளால் அவனிடமிருந்த டார்ச்சை வாங்கினேன்.

ஸ்விட்சை அமுக்கக் கைவிரல் தயங்கியது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அமுக்கினேன். ‘டார்ச’ ஒளி வட்ட வடிவமாக முன் சீட்டில் விழுந்து பரவியது.

அப்பாடா நல்லவேளை! நான் நினைத்துப் பயந்தது போல எந்தத் துஷ்ட மிருகமும் வண்டிக்குள் ஏறிப் படுத்திருக்கவில்லை. மனித உருவம்தான் முகம் தெரியாமல் இழுத்துப் போர்த்து வெள்ளைப் போர்வையால் மூடிக் கொண்டு மழைக்கு அடக்கமாக ஜீப்பின் முன் வீட்டில் சுருண்டு முடங்கியிருந்தது. அதைப் பார்த்த பிறகுதான் எனக்கு நிதானமாக மூச்சு வந்தது. படுத்துக்கிடந்த விதத்தைப் பார்த்தால் கைகளில் வேறு எதோ ஒரு பையையோ, மூட்டையையோ, அணைத்துக் கொண்டிருந்த மாதிரியும் இருந்தது.

“இந்தா ஐயா! எழுந்திரு. ரோட்டிலே ஏதாவது வண்டி நின்று கொண்டிருந்தால் யாருடையதென்று கேட்காமல் நீ பாட்டுக்கு ஏறிப் படுக்கலாமா? எழுந்திரு ஐயா, எழுந்திரு!” வெள்ளைப் போர்வையின்மேல் ஓங்கி ஒரு தட்டுத் தட்டினார் டிரைவர்.

குபீரென்று வாரிச் சுருட்டிக் கொண்டு ஒரு இளம் பெண் எழுந்திருந்தாள். அவள் கையில் ஒரு குழந்தை. எங்கள் இருவருக்குமே ஆச்சரியம் நிலை கொள்ளவில்லை. எவனாவது ஒரு எஸ்டேட் கூலி குளிருக்கு அடக்கமாக முடங்கியிருப்பான் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்தோம்.

அந்த நேரத்தில் அந்த மலைக்காட்டில் இப்படி ஒரு நிகழ்ச்சியை யார்தான் எதிர்பார்க்க முடியும்? பதறி நடுங்கிக் கொண்டே குழந்தையும் கையுமாகக் கீழே இறங்கி நின்றாள் அவள். குளிரில் உதறும் மணிப்புறாவின் அழகிய மென்மையான சிறகுகளைப் போல அவள் பூவுடல் நடுங்கியது.

மழை குறைந்து மெல்லிய சாரலாக விழுந்து கொண்டிருந்தது. கல்யாண வீட்டில் பன்னீர் தெளிக்கிறமாதிரி, எதிர்பாராத நிகழ்ச்சியால் எதைப் பேசுவது, முதலில் யார் பேசுவது, எப்படிப் பேசுவது என்று எதுவும் தோன்றாமல் மூன்று பேரும் நனைந்து கொண்டே சில விநாடிகளாவது நின்றிருப்போம்.

திடீரென்று வெளிக்காற்றும் மழைத் துளியும் பட்டு உறைக்கவே குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்துவிட்டது. டிரைவர் குனிந்த தலை நிமிரவேயில்லை. நான் சமாளித்துக் கொண்டேன். குழந்தையின் அழுகை எனக்கு நிதானத்தைக் கொடுத்துவிட்டது.

டார்ச் ஒளியை அவள் முகத்துக்கு நேரே பாய்ச்சினேன். அழகிய முகம். கோவிலிலுள்ள அம்மன் சிலைபோல் அவள் அழகு ஒருவிதமான பயத்தையும் உண்டாக்கியது. மஞ்சள் கொன்றை நிறம். மிரண்டு பாயும் விழிகள். தந்தத்தில் செதுக்கினாற் போன்ற நாசி. வட்ட முகத்தில் சுருள் சுருளாகக் கேசம் புரளும் நெற்றி. இயற்கையாகவே சிவந்த ரோஜா இதழ்கள். விளக்கொளியில் நான் அவளையே பார்ப்பதைக் கண்டு அவள் தலையைச் சாய்த்தாள். விழிகள் தரையை நோக்கின. குழந்தையும் அழகாகத்தான் இருந்தது. கழுத்துவரை போர்த்தியிருந்தாள். இருட்டில் ‘டார்ச்சின்’ சிறிய ஒளியில் முகத்தோற்றத்தை மட்டுமே கொண்டு அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று அனுமானிக்க இயலவில்லை.

“மழையில் நனைந்து கொண்டே நிற்கிறாயே, குழந்தைக்கு மழைத் தண்ணீர் ஆகாது. இதோ இப்படி இந்தத் தகரக் கொட்டகைக்கு வா…” நான் தயங்கித் தயங்கித்தான் வார்த்தைகளை வெளியிட்டேன்.

“இல்லை, ஐயா! உங்கள் காரில் படுத்துக் கொண்டதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். நான் மட்டுமானால் எப்படியாவது நனைந்து கொண்டே போயிருப்பேன். குழந்தைக்காகத்தான் காரில் ஏறி முடங்கினேன். இப்போது மழை குறைந்து விட்டது. நான் போய்விடுகிறேன்.” குரல் அழகுக்கேற்ற இனிமை நிறைந்துதான் இருந்தது.

“இரு அம்மா இரு! நீ யார்? எங்கிருந்து வந்தாய்? எங்கே போகிறாய்? இந்த மலைக்காட்டில் மழை இருட்டில் எப்படிப் போவாய்? தனி ஆளாகச் சின்னஞ்சிறு குழந்தையையும் எடுத்துக் கொண்டு இந்த மழை நேரத்தில் கிளம்பியதே தவறு. யானையும், புலியும் சர்வசாதாரணமாக நடமாடுகிற இந்தப் பிரதேசத்தில், ஒரு சிறு வயசுப் பெண் பச்சைக் குழந்தையோடு தனியே போவதற்குத் துணிந்தால் என் மனம் அதை ஒப்புக்கொள்ள மாட்டேனென்கிறதே?”

“ஐயா! நீங்கள் கேட்பதையேதான் நானும் என் மனதைக் கேட்கிறேன். ‘எங்கிருந்து வந்தேன்? எங்கே போகிறேன்? எதற்காகப் போகிறேன்? ஏன் தனியாகப் போகிறேன்?’ பதில் தான் தெரியவில்லை.”

“அம்மா! உன்னைக் கண்டால் ஏதோ மனக் கஷ்டமடைந்து வீட்டுக்காரரோடு மனஸ்தாபப்பட்டுக் கொண்டு வந்ததுபோல் தோன்றுகிறது என்னையும் இந்த டிரைவரையும் உன்னுடைய சகோதரர்களாக நினைத்துக் கொண்டு உன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்… எங்களால் உனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமானால் மகிழ்ச்சியோடு செய்ய சித்தமாயிருக்கிறோம். வா அம்மா… மழையில் நனைந்து கொண்டு நிற்காதே. உள்ளே போய்ப் பேசுவோம். தகரக் கொட்டகையில் மழை ஜலம் ஒழுகினாலும் உள்ளே மூன்று பேர்கள் உட்காரலாம்.”

அந்தப் பெண் ஒரு கணம் எங்கள் இருவரையும் உற்றுப் பார்த்தாள் பார்வையா அது? மனத்தின் ஆழத்தை முகத்திலிருந்து ஊடுருவித் தெரிந்து கொள்ள முயலும் தூண்டில்! எங்கள் நாணயத்தைக் கண்களாலேயே பரிசோதிக்கிறாள் போலிருந்தது.

“ஐயா! உங்கள் இருவருக்கும் மிக நன்றி. என்னிடம் உங்களுக்குச் சொல்லுகிறாற்போல பெரிய விஷயம் ஒன்றுமில்லையே? உங்கள் கருணைக்கும் அநுதாபத்துக்கும் நானும் இந்தக் குழந்தையும் தகுதியற்றவர்கள் தயவுசெய்து என்னை நான் போக வேண்டிய வழியில் போவதற்கு அனுமதியுங்கள்.”

தொலைவில் யானைகள் பிளிறும் ஒலி பயங்கரமான இருளில் எதிரொலித்தது. காற்றில் மரங்கள் பேய் பிடித்து ஆடுபவை போல் ஆடிக் கொண்டிருந்தன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த சாரலும் நின்றுவிட்டது. மழையின் பங்கையும் சேர்த்துக்கொண்டு காற்று விசுவரூபம் எடுத்திருந்தது. மரக்கிளைகள் உரசும் ‘மர்மர’ சத்தமும், காட்டுமிருகங்களின் ஓலமுமாகச் செவிகள் அதிர்ந்தன. குழந்தையும்

அழுகையை நிறுத்தவில்லை. அந்தப் பெண்ணும் இடத்தை விட்டு நகரவில்லை.

“சொன்னால் கேள், அம்மா! நீ அவசரமாகப் போக வேண்டுமானால் ஜீப்பிலே கொண்டு போய் விடுகிறோம். தனியாக இந்த மலைப்பாதையில் இப்படிப்பட்ட வேளையில் குழந்தையோடு நடந்து போகக்கூடாது. வழியில் எவ்வளவோ அபாயங்கள் நிறைந்திருக்கின்றன.”

அந்தப் பெண் இரைந்து சிரித்தாள். கலகலவென்று வெளிப்பட்டது சிரிப்பு. ஆனால் அதில் ஏதோ உட்பொருளும் கலந்திருந்தது.

“போக வேண்டிய இடம்…? நான் இனிமேல் போக வேண்டிய இடம்தானே? அதை…. அதை நீங்களா கேட்கிறீர்கள்? அது உங்களுக்குத் தெரியத்தான் வேண்டுமா? வீணாக என்னை ஏன் இப்படி இங்கே நிறுத்தி வைத்துக்கொண்டு கஷ்டப்படுத்துகிறீர்கள்?”

“ஜீப்பிலேயே கொண்டுபோய் விட்டுவிடலாமே என்றுதான் கேட்டோம். வேறு ஒன்றுமில்லை!”

“ஐயா! நான் போகிற இடத்துக்கு ஜீப்பில் தான் போகவேண்டும் என்ற அவசியமில்லையே! நடந்தும் போகலாம்; நடக்காமலும் போகலாம். ஓடியும் போகலாம், ஓடாமலும் போகலாம், இருந்த இடத்திலிருந்தே கூடப் போக முடியுமே அந்த இடத்துக்கு?”

“அம்மா நீ ஏதோ மனவியாகூலத்தில் பேசுகிறாய். உள்ளதை உள்ளபடி எங்களிடம் சொன்னால் தேவலை.”

“நான் எங்கேயோ எப்படியோ தொலைந்து போகிறேன்; நீங்கள் யார் அதைக் கேட்க?” என்றாள் வெறிபிடித்தவள் போல.

“முடியாது! இப்போது உன்னை விட்டுவிட்டால் நீ ஏதாவது ஏடாகூடமாகச் செய்து கொள்வாய். எனக்குத் தெரிந்து இரண்டு உயிர்கள் போவதை நான் சிறிதும் விரும்பவில்லை”.

” ”

அவள் பதில் சொல்லவில்லை. பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள். டிரைவர் ஜீப் அருகில் போய் அதைச் சரி பார்த்துக்கொண்டிருந்தான். கார் இயந்திரங்கள் மழையால் கெட்டுவிட்டதா, இல்லையா? அப்போதே அதில் புறப்பட முடியுமா? என்று அவனுக்குக் கவலை!

இந்த நிலையில் திடீரென்று பாதையின் தென் பகுதியிலிருந்து ஒரு பெரிய லாரி வேகமாக வருவது தெரிந்தது. அதன் ‘ஹெட்லைட்’ வெளிச்சம் எங்களைக் கவர்ந்தது. மூன்று பேர்களுமே அதனால் கவரப்பட்டுத் தெற்குப் பக்கம் திரும்பினோம்.

“ஐயோ! அவர்தான் போலிருக்கிறது. அடபாவிகளா நானாகச் சாவது பொறுக்காமல் நீங்கள் வேறு துரத்திக் கொண்டு வந்துவிட்டீர்களா?” அந்தப் பெண் அலறினாள். நானும் டிரைவரும் அவள் கூறியவற்றைக் கேட்டுத் திடுக்கிட்டு அவள் பக்கம் திரும்பினோம்.

“ஐயா! காப்பாற்றுங்கள் ஐயா! என்னையும் என் குழந்தையையும் கொல்ல வருகிறார்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். முன் போலவே நானும் குழந்தையும் துணியால் போர்த்திக் கொண்டு உங்கள் ஜீப்பின் முன்பக்கத்து ஸீட்டில் முடங்கிக் கொள்கிறோம்” என்றாள்.

எனக்கு அவளுடைய பயத்துக்கும் பதற்றத்துக்கும் அர்த்தமே தெரியவில்லை. வியப்புத்தான் வளர்ந்தது – இரக்கமாகவும் இருந்தது.

“சரி! ஏறிக்கொள். நன்றாகப் போர்த்திக் கொள். குழந்தை அழுது காட்டிக் கொடுத்துவிடப் போகிறது. ஜாக்கிரதை!” என்று எச்சரித்தேன்.

அவள் அவசரம் அவசரமாக ஜீப்பில் ஏறி முன் போலவே துணியால் போர்த்தி விட்டு முடங்கிக்கொண்டாள். ஜீப்புக்குள் டிரைவர் கொண்டு வந்திருந்த கித்தான்’ ஒன்று இருந்தது. வருகிறவர்கள் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகத் துணிக்கு மேல் அந்தக் கித்தானையும் போட்டு மூடி வைத்தேன். மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதுபோல் குழந்தையும் அழுகையை நிறுத்தி அடங்கிவிட்டது. எப்படித்தான் அதன் அழுகையை அவள் நிறுத்தினாளோ, தெரியவில்லை!

அசுர வேகத்தில் மலை ரஸ்தாவே அதிரும்படி பாய்ந்து வந்தது அந்த லாரி இருளில் வரும் இரண்டு பெரிய கொள்ளிவாய்ப் பிசாசுகளைப்போல லாரியின் முன் விளக்குகளின் வெளிச்சம் விநாடிக்கு விநாடி நாங்கள் இருந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

லாரிக்குள்ளிருந்து வந்த ஆட்களின் பேச்சுக் குரலிலிருந்து குறைந்தது ஏழெட்டுப் பேர்வழிகளாவது அதில் இருக்கலாம் என்று தோன்றியது.

சொல்லி வைத்தாற் போல எங்கள் ஜீப்புக்கு அருகில் வந்ததும் லொடலொடத்து ஓடும் தன் புலன்களை அடக்கிக் கொண்டு டக்கென்று நின்றது அந்த லாரி டிரைவர் உட்பட ஏழெட்டு முரட்டு ஆட்கள் அதிலிருந்து கீழே குதித்து எங்களை நோக்கித் திடுதிடுமென்று ஓட்டமும் நடையுமாக வந்தனர். வந்தவர்களில் இரண்டு பேர்கள் துப்பாக்கி வைத்திருந்தார்கள். வேட்டையாடுகிறவர்கள் உபயோகிக்கிற பெரிய துப்பாக்கிகள் அவை.

“இந்தப் பக்கமாகக் குழந்தையோடு ஒரு பெண் வந்தாளே! நீங்கள் பார்த்தீர்களா? வெள்ளைப் புடவை கட்டிக் கொண்டிருப்பாள். இருபது இருபத்தெட்டு வயசிருக்கும்.”

அந்த லாரி டிரைவர் என்னிடம் கேட்டான்.

“இல்லையே! நாங்கள் சும்மா எஸ்டேட்டுகளைச் சுற்றிப் பார்க்க வந்தோம். எப்போதோ திரும்பிப் போயிருக்க வேண்டியவர்கள். மழை பலமாய்ப் பிடித்துக் கொண்டுவிட்டதனால் ஜீப்பை இப்படி நிறுத்திவிட்டு இந்தத் தகரக் கொட்டகையில் நின்று கொண்டிருந்தோம். இப்போதுதான் மழை நின்றதும் வெளியே வந்தோம்.” நான் மனத்தைச் சமாளித்துக் கொண்டு பதறாமல் நிதானமாக இப்படி ஒரு பொய்யைச் சொன்னேன்.

ஆனால் அடுத்த கணமே என் பொய் வெளுக்கும்படியாக ஒரு துரதிர்ஷ்டம் அங்கே நடந்துவிட்டது. கித்தானையும் வெள்ளைத் துணிப் போர்வையையும் மீறிக் கொண்டு குழந்தை முனகி அழுகின்ற சத்தம் மெல்லக் கிளம்பிற்று. உடனே எனக்குப் பகீரென்றது.

“அங்கென்ன? ஜீப்புக்கள் குழந்தை முனகுகிற சப்தம் கேட்கிறதே?” என்று கேட்டுக் கொண்டே அந்தலாரிடிரைவரும் அவனோடு வந்த முரட்டு ஆட்களும் பின் ஸீட்டை நோக்கிப் பாய்ந்தனர்.

எனக்குச் சர்வநாடியும் ஒடுங்கிவிட்டது. இந்த நெருக்கடியான சமயத்தில் என்னைக் காப்பாற்ற முன் வந்தான் டிரைவர். அவர்களுக்கு முன்னாலே பாய்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்தி, “ஐயா சம்சாரம் படுத்திருக்கிறாங்க. சுற்றிப் பார்க்க வந்த இடத்திலே குழந்தைக்குக் குளிர் ஜுரம், கூதலடிக்காமலிருக்கக்கித்தானைப் போர்த்திப் படுத்திருக்காங்க. குழந்தை ஜுரத்தைப் பொறுக்கமாட்டாமல் முனகுது” என்று என்னைச் சுட்டிக் காட்டினான். எனக்கும் தன் தந்திரத்தைக் கண் ஜாடையினாலே தெரிவித்தான்.

“சரி, நீங்க சொன்னால் போதும். எங்க ஆத்திரம் நாங்கள் தேடி அலையறோம். பாவிப் பெண், ஒரு தோட்ட முதலாளியைக் கத்தியாலே குத்தி விட்டு ஓடி வந்துவிட்டாள். அதுதான் அப்போதிலிருந்து லாரியை எடுத்துக் கொண்டு தேடி அலைகிறோம்” என்று கூறிவிட்டு அவர்கள் திரும்பிப் போய் லாரியில் ஏறிக் கொண்டனர். லாரி புறப்பட்டது. அந்த லாரிடிரைவர் போகிற போக்கில் கூறிவிட்டுப் போன செய்தியைக் கேட்டவுடன் எங்கள் இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

அப்படியே உச்சந்தலை படீரென்று வெடித்துவிடும் போலிருந்தது.

அதற்குள் போர்வையைப் பற்றிக் கொண்டு குழந்தையோடு இறங்கிய அவளிடம், “என்னம்மா, இது? அவங்க சொல்லிவிட்டுப் போகிறது நிஜம்தானா?…” என்று திகைப்புடன் கேட்டேன்.

“நிஜம்தான்… சந்தர்ப்பம் என்னை அப்படிச் செய்ய வைத்துவிட்டது!”

“என்ன? ஒரு ஆளைக் குத்திக் கொலை செய்துவிட்டா ஓடி வருகிறாய்?”

“ஐயா! நீங்கள் சகோதரிகளோடு பிறந்த மனிதர் என்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் சற்றுமுன் நீங்கள் கூறியது போல் உங்கள் சகோதரியாக நினைத்துக் கொண்டு நான் சொல்லப் போவதை நம்பிக்கையோடு கேளுங்கள். கேட்ட பின்பாவது நான் என் நிலையில் அப்படிச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் !” என்றாள் அவள்.

“டிரைவர்! சீக்கிரமாகரிப்பேரை முடி ஊரார் வம்பெல்லாம் நமக்கு எதற்கு? யார் கதையையும் நாம் கேட்க வேண்டாம். நீ வண்டியைக் கிளப்புவதற்கு வழி செய்! ஊருக்குப் போகலாம்…” அந்தப் பெண்ணிடம் ஒருவிதமான வெறுப்பும் அருவருப்பும் திடீரென்று எனக்கு ஏற்பட்டன.

என்னுடைய இந்தத் திடீர் மாற்றத்தை அவள் புரிந்து கொண்டாளோ, இல்லையோ? பேசுவதை நிறுத்திவிட்டாள், டிரைவர் வண்டிக்கு அடியில் படுத்து டார்ச் விளக்கின் உதவி கொண்டு ரிப்பேர் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டான். நான் கீழே உட்கார்ந்து கொண்டே அவனுக்கு ரிப்பேரில் ஒத்தாசை செய்து கொண்டிருந்தேன்.

குழந்தையின் அழுகை ஒலி கேட்கவில்லை. அழுது அழுது அவள் தோளில் சாய்ந்தபடி தூங்கிவிட்டது போலிருக்கிறது.

கால்மணி நேரம் வெகு மும்முரமாக ரிப்பேர் வேலையில் ஈடுபட்டிருந்தோம். கீழேயிருந்து எழுந்து தலை நிமிர்ந்தேன். அப்போது அவள் நின்று கொண்டிருந்த இடம் சூனியமாக இருந்தது. ‘சரிதான்! எங்கோ புறப்பட்டுப் போய்விட்டாள் போலிருக்கிறது. சனி விட்டது; நிம்மதியாக ஊருக்குப் போகலாம்’ என்று எண்ணி மனத்தைத் திருப்திப்படுத்திக்கொள்ள முயன்றேன் நான்.

டிரைவர் வண்டிக்கு அடியிலிருந்து டார்ச் லைட்டும் கையுமாக எழுந்திருந்தான். “நீ வண்டியைக் கிளப்புகிற வழியைப் பாரு” என்று அவனிடம் கூறிவிட்டு, சாயந்து கொள்ள வசதியாக இருக்குமே என்று பின் வீட்டுப்பக்கம் போனேன். ஸீட்டில் ஏறுவதற்குக் காலை எடுத்து வைத்தவன் பதறிப் போய்க் கீழே இறங்கினேன்.

“அந்த டார்ச்சை இப்படிக் கொடு!” என்று கேட்டு வாங்கிய நான் பின் வீட்டில் ‘டார்ச்’ ஒளியைப் பரவவிட்டேன். அங்கே வெள்ளைத் துணியில் போர்த்தி முகம் மட்டும் தெரியும் படியாக அந்தக் குழந்தை விடப்பட்டிருந்தது. குழந்தை நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

“அடாடா! குழந்தையை நம் தலையிலே கட்டிவிட்டுப் போய்விட்டாள் போலிருக்கே?”

“தலை எழுத்து அப்பா! தலையெழுத்து. இன்றைக்கு திருமூர்த்தி மலைக்குப் புறப்பட்டு வந்ததை ஏழேழு ஜன்மத்துக்கும் மறக்கமாட்டேன்…”

டார்ச் ஒளியில் அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தேன். மலர்ந்து விகசித்த தாமரைப் புஷ்பம் போல் தங்க நிறத்தில் அந்தப் பச்சிளம் சிசு நிர்மலமானதாகக் காட்சியளித்தது. துணியை இலேசாக விலக்கிப் பார்த்தேன். அது பெண் குழந்தை. ஒரு வயதுக்கு மேலிருக்கும். குழந்தை என்றால் வெறும் குழந்தையா? அந்த மாதிரி அழகு நிறைந்த குழந்தையை ஆயிரத்தில் ஒன்று, பத்தாயிரத்தில் ஒன்றாகத்தான் காண முடியும்.

குழந்தையை மறுபடியும் போர்த்திவிட்டேன். அது தூக்கத்தில் புரண்டு படுத்தது. சிரிப்புக் கொஞ்சும் அந்தப் பிஞ்சு இதழ்கள் எந்தக் கல் மனத்தையும் இளக்கிவிடும்.

“டிரைவர்! உட்காரு….. கொஞ்ச நேரம் காத்திருந்து பார்ப்போம். வரவில்லையானால் பின்பு குழந்தையையும் கொண்டு போக வேண்டியதுதான்.”

நேரம் கடந்து கொண்டே இருந்தது. மணி பத்தேகால். இரண்டு பேருக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. “இனிமேல் பார்ப்பதில் பயனில்லை. புறப்பட வேண்டியதுதான். அவசியமானால் ஊருக்குப் போய் குழந்தையைப் புகைப்படம் பிடித்துப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து கொள்ளலாம்” என்ற தீர்மானத்துடன் இருவரும் கிளம்பினோம்.

யார் செய்த புண்ணியமோ? அந்த இருளில், அவ்வளவு பயங்கர மழை பெய்து முடிந்த பிறகு, குறுகிய மேடுபள்ளம் நிறைந்த மலை ரஸ்தாக்களில் ஒரு துன்பமுமின்றி ஜீப் மலை அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தது. குழந்தை தூக்கம் கலைந்து அழுதால் சமாதானப்படுத்த முடியாதே’ என்று கவலைப்பட்டோம். நல்லவேளையாக ஊர் வருவதற்குள் குழந்தை தூக்கத்திலிருந்து ஒருதடவைகூட விழித்துக் கொள்ளவே இல்லை.

ஊர் வந்து சேர்ந்தபோது இரவு ஒன்றரை மணி. இரண்டாவது ஆட்டம் சினிமா விடுகிற நேரம். டிரைவர் காலையில் வருவதாகக் கூறிவிட்டுத் தன் வீட்டுக்குப் போனான். நான் என் மனைவியை அழைத்துச் சுருக்கமாக அந்தக் குழந்தையின் வரலாற்றை அவளுக்குச் சொல்லி அதை அவளிடம் கொடுத்தேன்.

அவள் குழந்தையைத் தோளில் சாத்திக்கொண்டு சமயலறைக்குள் போனாள். நான் வருகிற வழியிலேயே ஒரு சினிமாக்கொட்டகை வாசலில் இருந்த ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்திருந்தேன்.

“குளுகோஸைப் போட்டுக் குழந்தையை அழாமல் தூங்கப் பண்ணு” என்று அவளை எச்சரித்துவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டேன் நான். அலைச்சலும் மனக்குழப்பமும் மிகுந்து ஓய்ந்திருந்த உடல் விரைவில் தூக்கத்தின் வசப்பட்டது.

மறுநாள் காலை எழுந்திருக்கும்போது ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. ”குழந்தை ரொம்பச் சமர்த்தாக இருக்கே? அழுகை, முரண்டு ஒண்ணும் கிடையாது! காலையிலே எழுப்பிப் பால் காய்ச்சிப் புகட்டினேன். புது முகம்னு கொஞ்சமாவது சிணுங்கணுமே? பெற்ற குழந்தை மாதிரி ஒட்டிக் கொண்டுவிட்டது!” இடுப்பில் அந்தக் குழந்தையும் கையில் காப்பி தம்ளரும் காட்சியளிக்க என் மனைவி என்னை நோக்கி வந்தாள்.

“எப்படியானால் என்ன? திருமூர்த்தி மலைக்குப் போய் விட்டு இப்படி ஒரு குழந்தையோடு வருவேன் என்று நீ கனவில் கூட நினைத்திருக்கமாட்டாய்!”

“எல்லாம் நாம் நினைக்கிறபடி நடக்கிறதா என்ன?” குழந்தையை ஆசைதீரக் கொஞ்சிக்கொண்டே காப்பித் தம்ளருடன் திரும்பிப் போனாள் அவள்.

நான் அன்றைக்கு ஆபீஸ் போகவில்லை. லீவு போட்டு விட்டேன். பதினொன்றரை மணி சுமாருக்கு டிரைவர் வந்து சேர்ந்தான்.

“வாப்பா! வா… குழந்தை அம்மாவிடம் எவ்வளவோ நாள் பழகினாப்போல இருக்கிறது. அழவே இல்லை. ‘போட்டோ ‘ பிடித்து எல்லாப் பத்திரிகையிலும் விளம்பரம் போட்டு விடுவோமா? அவளுக்குத் தெரிந்தவர்கள் யாராவது பத்திரிகை பார்த்துச் சொன்னால் அதைக் கேட்டு இங்கே வரமாட்டாளா? வந்தால் குழந்தையைக் கொடுத்து அனுப்பிவிடுவோம்.”

“எதற்கும் நாளை ஒருநாள் பார்த்துவிட்டுச் செய்யலாமுங்க! எனக்கென்னவோ அவள் உயிரோடு இருப்பாள் என்கிற நம்பிக்கையே இல்லீங்க”

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான் அவன்.

மறுநாள் பத்திரிகையில் அந்தச் செய்தியைப் படித்தபோது திடுக்கிட்டேன். வியப்பும் வேதனையும் ஒருங்கே அடைந்தேன்.

“மூணாறில் சோத்துப் பாறை எஸ்டேட் அருகே இளம்பெண் தற்கொலை. ஏற்கனவே அவள் போலீஸாரால் தேடப்பட்டுக் கொண்டிருந்தவளாம். அவளுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உண்டென்றும், அவள் வேலை பார்த்து வந்த எஸ்டேட் முதலாளி அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதனால் அவரைக் குத்திக் கொலை செய்துவிட்டுத் தன் குழந்தையோடு ஓடிய அவள் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டுவிட்டாள் அவள் குழந்தை என்ன ஆயிற்றென்று தெரியவில்லை, போலீஸார் புலன் விசாரித்து வருகின்றனர்.”

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் உட்கார்ந்தேன். “பத்திரிகையைப் படித்தீர்களா? விளம்பரத்துக்கு அவசியமே இல்லை! குழந்தை இங்கேயே வளரட்டும்” என்று கூறிக் கொண்டே வந்தான் டிரைவர்.

“இதோ பாருங்கள். குழந்தை என்ன அழகாகச் சிரிக்கிறது? ‘அம்மா’ என்றே என்னைக் கூப்பிடுகிறது!” என் மனைவி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள். குழந்தை உலகத்தையெல்லாம் விலையாகக் கொடுத்தாலும் ஈடு காணாத அழகுச் சிரிப்பு ஒன்றைத் தன் சின்னஞ்சிறு மாதுள இதழ்களில் சிந்திக் கொண்டிருந்தது. டிரைவர் அதையே பார்த்துக்கொண்டு இருந்தான். நான் எதிரே சுவரில் மாட்டி இருந்த சர்வேசுவரனின் படத்தைப் பார்த்தேன்.

‘இறைவா! நீ நல்ல வீணைகளைப் படைக்கிறாய். மண்ணுலகம் தாங்காத அழகையெல்லாம் உருவாக்கி அனுப்புகிறாய்! சேற்றில் செந்தாமரை! குப்பையிலே குருக்கத்தி! ஆனாலும் என்ன பயன்? அந்த நல்ல வீணைகளைச் சில சமயம் நலங்கெடப் புழுதியிலும் எறிந்துவிடுகிறாயே!’ என்று என் மனம் இறைவனை இறைஞ்சிக் கேட்டது.

(கல்கி, 10.3.1957)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *