பூந்தளிர்க் காலம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: January 11, 2014
பார்வையிட்டோர்: 24,302 
 
 

அலாரம் அடிக்கும் ஓசை நன்றாகவே கேட்கிறது. ஆனால் கண்களை திறந்து கொள்ள துளியும் விருப்பமில்லை. வழக்கமாக 5 மணிக்கு அலாரம் வைத்து விட்டு நான்கு மணிக்கே எழுந்து கொள்வது வழக்கம் தான். ஆனால் இன்று மிக களைப்பாக இருக்கிறது. இத்தனை அதிகாலையில் எழுந்து உலகை புரட்டிப் போடப் போகிறானா என்ற சலிப்பும் படுக்கையை விட்டு எழவிடாமல் தடுத்தது. விசுவை திரும்பி பார்த்தேன். நேற்றிரவு நான் கண்ட விசுவா இது ? சலனமில்லாமல் ஒரு குழந்தையைப் போல உறங்கிக் கொண்டிருந்தான். அவன்தானா இவன் ? அல்லது நேற்று இரவு எனக்கு நேர்ந்தது ஒரு துர் கனவா ? லேசான தலைவலி ஒரு கப் காபிக்கு தூண்டியது. கையில் கிடைத்த புத்தகத்தையும், காபியையும் எடுத்துக்கொண்டு பால்கனி ஊஞ்சலுக்குள் அடை புகுந்தேன். காபியின் கசப்பு மிக இனிமையாக இருந்தது. காபி ஒரு துளியும், புத்தகம் ஒரு வரியுமாக உள்ளுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது. இத்தனை நாட்களாக இல்லாமல் விசு ஏன் அப்படி நடந்து கொண்டான் ? அல்லது இதுதான் அவனது சுயரூபமா? இனி எல்லா இரவும் இப்படிதான் இருக்க போகிறதா ?

ஃபிரிட்ஜை திறந்து ஆராயத் தொடங்கினேன். இன்றைய சமையலுக்கு திட்டமிட வேண்டும். அவனுக்கு பிடித்த உருளை வருவலும், முருங்கை சாம்பாரும் செய்து விடலாம். அதோடு மாங்காய் பச்சடியும் செய்துவிட்டால், அவ்வளவுதான் மகிழ்ந்து போவான். அவனுக்கு பிடித்ததை நான் ஏன் சமைக்க வேண்டும் ? எனக்கு பிடித்ததை இன்று நான் சமைக்க போகிறேன்.

இல்லை… இல்லை …. இன்று சமையலே செய்யப் போவதில்லை. பட்டினி கிடக்கட்டும். அல்லது வெளியே சென்று சாப்பிடட்டும். …ம்… நல்ல பழிவாங்கல் தான். என்னை நானே கேலி

-2-

செய்துக் கொண்டேன்.

ஹீட்டர் சுவிட்சை போட்டுவிட்டு கப்போர்டை துழாவ ஆரம்பித்தேன். என்ன உடை அணியலாம் ? பல நேர யோசனைக்குப் பிறகு பரணில் இருக்கும் சிவப்பு நிற சல்வாரின் ஞாபகம் வந்தது. திருமணத்திற்கு முன் பாலாஜி அண்ணா வாங்கித் தந்தது. எனக்காக பம்பாயிலிருந்து பிரத்தேயகமாக வரவழைத்தார். அந்த ஆடையை அணிந்து கொண்டால், நான் ஒரு இளவரசியைப் போல் இருப்பதாக அண்ணா சொல்வார். விசுவிற்கு அந்த ஆடை ஏனோ சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் அதை மிகுந்த காதலுடன் சொன்னான். தண்ணீர் சூடாகியிருக்கும் குளியலறைக்குள் புகுந்தேன். உடலைக் கலுயும் தண்ணீரைப் போல் மனதை கழுவ ஒரு திரவம் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் ?

“ குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா…..” “குறை ஒன்றுமில்லை கண்ணா” என்று எம்.எஸ். அம்மாவின் குரல் குளியலறை வரை ஒலித்தது. மாடி வீட்டிலிருந்துதான் ஒலிக்கிறது. வாசல் திறந்திருந்தால் அனுமதி கோராமல் தயக்கமில்லாமல் வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் சிறுமியைப் போல ஆக்ரமிக்கத் தொடங்கிவிட்டார் எம்.எஸ். இனி செய்வதற்கொன்றுமில்லை. சரணடைய வேண்டியதுதான். என்ன குரல் இது ? இப்படி மாய்மாலம் செய்கிறது. கேட்பவரின் குறையெல்லாம் நீக்க முயலும்படியாக தன் உயிரையே உருக்கி வடிக்கும் குரல். மிகச் சிலர்தான் இப்படியான வரம் வாங்கி வருகிறார்கள். இவர்களெல்லாம் கடவுளின் தூதுவர்கள் போலும். எனது படைப்பில் உயிர்களுக்கு நான் சில வதைகளை விதித்திருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் உன் குரலால் நீ மருந்திடு என்று எம்.எஸ்.அம்மாவிடம் படைத்தவன்

-3-

சொல்லியிருக்கவேண்டும். அஹமத்தின் ரசனை வியக்க வைக்கிறது. மாடி வீட்டில் மூன்று பேச்சுலர்கள் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். அஹ்மத், கார்த்திக் பிறகு வினோத். அவர்கள் வீட்டில் இருந்தால் இசை வெல்லம் தான். இந்த மொழி, இந்த இசை என்றில்லை. ஆனால் மிகவும் ரசனையான பாடல்கள். “விசு, அஹ்மத் கிட்ட இருக்கிற கலெக்ஷன்ஸ் வாங்கி அப்லோட் செய்யணும். கொஞ்சம் கூட வாங்களேன் “. வித்யா பேச்சுலர் பசங்கள நம்பாதே. பாம்பின் கால் பாம்பறியும் “ என்று சிரித்து விட்டு கன்னம் தட்டி நெற்றியில் முத்தமிட்டான்.

அன்று நானும் விசுவும் பாண்டி பஜார்வரை சென்றிருந்தோம். மிக மும்முரமாக நான் ஆடைகளை தேர்வு செய்து கொண்டிருந்தேன். எனது பின்பக்கத்திலிருந்து ஒரு பார்வை என் முதுகை துளைப்பது போன்ற உள்ளுணர்வு. திரும்பி பார்த்தால் ஒருவரையும் காணோம். திடுமென மிக அருகில் ஒரு முகம், முதலில் திடுக்கிட்டு, பின் குழம்பி வியந்து உற்சாகமானேன். ராம் – ராம் எனும் பைத்தியக்காரன். “க்ரேஸி ராம்” என்று தான் நான் அவனை அழைப்பது வழக்கம். ராம் இந்த உலகைச் செர்ந்தவன்தானா ? என்ற சந்தேகம் எனக்கு அவ்வப்போது எழுவதுண்டு. அவனது கவிதைகள் எனக்கு புரிந்ததேயில்லை. அவன் மேகத்தில் சஞ்சரிப்பவன். அவன் கோணம் வேறு. எண்ணங்கள் வேறு. அவன் ஜிப்ரான் ஜாதிக்காரன். தாஸ்தாவெய்ஸ்கியின் பக்தன். நீ ஒரு பைத்தியக்காரன் என்று சொன்னால் சிரிப்பான். “ வித்யா உனக்கு தெரியுமா சிறைக்கைதியின் பார்வை வழியே நீயும் ஒரு கைதிதான் “ என்று தத்துவம் பேசுவான். “ முட்டாள் கொஞ்சமாவது ப்ராக்டிக்கலா இரேன்” என்று சொன்னால், “உன் கண்கள் அகல விரிந்து நீ நீ என்னை ரசிக்கிறாய் என்று சொல்கிறது ஒத்துக்கொள்ளேன்”

-4-

என்பான்.

ராம் பற்றி உங்களிடம் நான் பெரிதாக எதுவும் சிலாகிக்கவில்லையே விசு. அவன்தான் தன் அன்பை தெரிவித்ததும், அதை ஏற்க முடியாத நிலையில் நான் இருப்பதை தெளிவாக சொல்லி விட்டு நான் விலகியதையும் உங்களிடம் பகிர்ந்து கொண்டது எத்தனை பெரிய முட்டாள்தனம் ? தன் மனைவி தனக்காகவே பிறந்தவள், அவனது இரண்டாது, மூன்றாவது மனைவியாகவே இருந்தாலும். பெண் அவளது திருமணத்தன்று தான் பிறக்கிறாளா ? அவளுக்கு அதற்க்கு முன்னர் இருபது வருட வாழ்வு இருக்கிறதே / அதில் மனிதர்கள் இருந்தார்கள் தானே ? அதில் காதலும் இருந்திருக்கும் தானே ? நான் மறுத்ததை ராம் கண்ணியமாக ஏற்றுக்கொண்டான். கண்ணீர் சிந்தவில்லை, கதறி புலம்பவில்லை, மிரட்டி பணியவைக்க முயலவும் இல்லை. “ஆல் தி பெஸ்ட்“ என்று முறுவலித்தான்.

“வித்யா உன்னை நன் இங்கே எதிர்பார்க்கவே இல்லை. இதே ஊர்ல தான் இருக்கியா ? எத்தன பசங்க? உன் போன் நம்பர் குடு” என்று அடுக்கடுக்கான கேள்விகளால் என்னை திணறடித்தான்.

“ஹே வெயிட்…. நீ என்னும் மாறவே இல்லையா ? அவசர குடுக்கை….” எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அவனை சற்றும் நான் அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை. ராம் ஒரு ஆண், என்னை நேசித்தவன் என்பது எதுவும் என் நினைவில் இல்லை. அவன் என் கல்லூரி கால தோழன். அவனது குதூகலம் என்னையும் தொற்றிக்கொண்டது என்னையும் அறியாமல் அவன் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு உங்களை தான் தேடினேன் விசு.

“விசு இங்க வாங்களேன். இது ராம். என் காலேஜ் மேட். ராம் இது விசு. மை ஹஸ்பண்ட்”.

-5-

“ஹே, ஹி இஸ் ஹேண்ட்சம் யார்…. யூ போத் லுக் ஃபார் ஈச்அதர்” என்றான் ராம்.

“இவள எப்படி சார் சமாளிக்கிறீங்க ? ரொம்ப அதிபுத்திசாலி. அடங்காபிடாரி வேற”

“அத என் சார் கேட்குறீங்க ? என்னை பிடிச்சு பாழுங் கிணத்துல தள்ளிவிட்டுட்டாங்க. எல்லாம் விதி”

“ ஹலோ கமான் என்ன நடக்குது இங்க”

அரட்டையில் நேரம் போனதே தெரியவில்லை.நீங்களும் சகஜமாக இருந்தீர்கள் விசு.

“ஒகே ஸீ யூ தென் கைஸ். கால் பண்ணு வித்யா. நிறைய பேசலாம்” என்று விடைபெற்று சென்றுவிட்டான் ராம்.

காரில் ஏறியதும் உங்கள் சிரிப்பு மறைந்து உங்கள் முகம் ஏன் மிக கடுமையாக இருந்தது விசு ? எனக்கு பயமாக இருந்தது. நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ராமின் உயரம் உங்களை தொந்தரவு செய்ததா ? அவனது தலைமுடியா ? சிரிப்பா ? எது உங்களை கோபப்படுத்தியது விசு ? ராமை நான் நிராகரித்ததை நீங்கள் நம்பவில்லையா ? என்ன தவறு செய்தேன் நான் ? நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். நானும் ராமும் ஒருவரையொருவர் தொட்டுக் கொண்டதில்லை. முத்தமிட்டும் கொண்டதில்லை. எத்தனை கீழ்த்தரமாக என்னை நிரூபிக்க முயல்கிறேன் ? அது என் இறந்த காலம் விசு. அதில் இன்று நான் இல்லை. நான் உனக்காகவே படைக்கப்பட்டவள், என்னை ஏற்றுக்கொள் என்று உங்களிடம் என்னை அர்ப்பணிக்க வேண்டுமா ?

எத்தனை பெரிய ஏமாற்று வார்த்தை அது. ஒருவேளை நான் வேறு யாரையேனும் திருமணம் செய்திருந்தால் இதே வார்த்தைகளை நான் அவனிடமும் சொல்லியிருக்க வேண்டும் தானே ?

-6-

ஒரு வேளை இப்படி ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதில் தான் தாம்பத்யத்தின் ரகசியம் அடங்கியிருக்கிறதா ?

நேற்று இரவு ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள் விசு ? அதன் மூலம் நீங்கள் இதை உறுதி செய்து கொண்டீர்கள் ? உங்களுக்கு என்ன நிரூபணமானது ? எனக்கு வலித்தது விசு. தொண்டை அடைத்துக் கொண்டது. அடி வயிற்றில் இனம் புரியாதவொரு வலி , எனது பெண்மை கூனி குறுகி நின்றதை என்னால் சகிக்க முடியவில்லை. நீங்கள் என்னை வழங்கவுமில்லை. என்னை பறித்துக் கொண்டீர்கள், வலுக்கட்டாயமாக. மிக மூர்க்கமாக. என் உடலெங்கும் பூசப்பட்ட கழிவை எந்நீரால் கழுவுவேன் ? இந்த அசூசை எப்பொழுது நீங்கும் ?

“டூ யூ லவ் மீ ? டூ யூ லவ் மீ ?” என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தீர்கள். “ ஐ டோன்ட்” என்று எனக்கு கத்த வேண்டும் போல இருந்தது.
நீங்கள் என் கண்களை இனி எப்படி சந்திக்கப் போகிறீர்கள் விசு ? நம் உறவு சகஜமாகிப் போகுமா ? அடுத்த முறை என்னால் நெகிழ முடியுமா ?

சிவப்பு நிற சல்வாரை எடுத்து உடுத்திக் கொண்டேன். பிளாஸ்க்கில் அவனுக்கு சூடாக காபி ஊற்றி வைத்து விட்டு வீட்டிற்க்கு பொருட்கள் வாங்க கிளம்பினேன். வரும் வழியில் தாஸ்தாவெய்ஸ்கியின் வெண்ணிற இரவுகளை வாங்கி வர வேண்டும். உலகையே உணர்ச்சி வசப்பட வைத்த காதல் காவியத்தில் கரைந்து போக வேண்டும். உதடுகள் எம்.எஸ்.அம்மாவை முணுமுணுக்க துவங்கியது. ராமின் நினைவு கடந்து செல்வதை நான் வியப்புடன் தரிசித்துக் கொண்டிருந்தேன்.

– 2013 சாரு நிவேதிதா விமர்சகர் வட்ட சிறுகதை போட்டியில் இரண்டாவது பரிசு வென்ற கதை.

Print Friendly, PDF & Email

1 thought on “பூந்தளிர்க் காலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *